(1) 12.1.( الٓر ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் இறக்கப்பட்ட இந்த வசனங்கள் தெளிவான உள்ளடக்கத்தைக் கொண்ட குர்ஆனின் வசனங்களாகும்.
(2) 12.2. -அரபுக்களே!- நீங்கள் குர்ஆனை, அதனை புரிந்துகொள்ளும் பொருட்டு நாம் அதனை அரபு மொழியில் இறக்கியுள்ளோம்.
(3) 12.3. -தூதரே!- நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்குவதன் மூலம் மிகச் சிறந்த சம்பவத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். ஏனெனில் அவை உண்மையானவை, அதனது வார்த்தைகளும் சொல்லணியும் தவறுகளற்றவை. நிச்சயமாக இதனை இறக்குவதற்கு முன்னர் இந்த சம்பவங்களைக் குறித்து அறியாதவராக நீர் இருந்தீர்.
(4) 12.4. -தூதரே!- யூஸுஃப் தம் தந்தை யஃகூபிடம் கூறியதை நாம் உமக்கு அறிவிக்கின்றோம்: “என் தந்தையே! நான் கனவில் பதினொன்று நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் கண்டேன். அவையனைத்தும் எனக்கு சிரம்பணிவதைக் கண்டேன்.” இந்த கனவு யூசுப் (அலை) அவர்களுக்கு விரைவாக கிடைக்கக்கூடிய நற்செய்தியாக இருந்தது.
(5) 12.5. யஃகூப் தம் மகன் யூஸுஃபிடம் கூறினார்: “நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் சொல்லி விடாதே. அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு உன் மீது பொறாமை கொள்வார்கள். பொறாமையினால் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கின்றான்.
(6) 12.6. -யூஸுஃபே!- நீ அக்கனவைக் கண்டது போல உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக் கொடுப்பான். உன்னுடைய முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோருக்கு தனது அருட்கொடைகளைப் பூரணப்படுத்தியது போல் உனக்கு தூதுத்துவத்தையும் ஆட்சியதிகாரத்தையும் வழங்கி உன்மீது பொழிந்த தன் அருளை நிறைவுபடுத்துவான். நிச்சயமாக உன் இறைவன் தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவன்; தன் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவன்.
(7) 12.7. நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களின் சம்பவத்தில் அவர்களது தகவல்களைப் பற்றிக் கேட்போருக்கு படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன.
(8) 12.8. சகோதரர்கள் தங்களிடையே பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்குப் பிரியனமாவர்களாக இருக்கிறார்கள். நாம்தாம் அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினர். எவ்வாறு நம்மைவிட அவர்கள் இருவருக்கும் அவர் முக்கியத்துவம் வழங்கலாம்? எமக்குத் தோன்றும் விதமான எவ்வித காரணமுமின்றி நம்மைவிட அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கியதனால் அவர் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.”
(9) 12.9. யூஸுஃபைக் கொன்று விடுங்கள் அல்லது தூர தேசத்தில் தொலைத்து விடுங்கள். உங்கள் தந்தையின் அன்பு உங்களுக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடும். அவர் உங்களை முழுமையாக நேசிக்க ஆரம்பித்து விடுவார். நீங்கள் அவரைக் கொன்ற பிறகு அல்லது தொலைத்த பிறகு அல்லாஹ்விடம் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி நல்ல கூட்டமாக ஆகிவிடலாம்.
(10) 12.10. சகோதரர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்று விடாதீர்கள். மாறாக பாழுங்கிணற்றின் ஆழத்தில் அவரைப் போட்டு விடுங்கள். அந்த வழியாக கடந்து செல்லும் பயணிகள் அவரை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர் விடயத்தில் நீங்கள் கூறியவற்றில் உறுதியானவர்களாக இருந்தால் அவரைக் கொல்வதைக்காட்டிலும் இதுதான் குறைவான தீங்குடையது.
(11) 12.11. அவரை அகற்றும் விஷயத்தில் அவர்கள் உடன்பட்ட போது தங்களின் தந்தை யஃகூபிடம் வந்து கூறினார்கள்: “எங்களின் தந்தையே! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் யூஸுஃபின் விஷயத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை? நாங்கள் அவர்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள்; அவரை தீங்கிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்கள்; நிச்சயமாக அவர் உங்களிடம் பாதுகாப்பாக திரும்பி வரும் வரை நாம் அவரைக் காத்து கவனித்து அவருக்கு விசுவாசமாக இருப்போம். எனவே எங்களுடன் அவரை அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது?
(12) 12.12. நாளை அவரை எங்களுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதி அளியுங்கள். அவர் எங்களுடன் உண்டு மகிழட்டும், விளையாடட்டும். அவருக்கு எந்தவொரு தீங்கு நிகழ்வதை விட்டும் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்களாகவே உள்ளோம்.
(13) 12.13. யஃகூப் தம் பிள்ளைகளிடம் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. ஏனெனில் என்னால் அவரைப் பிரிந்து இருக்க முடியாது. நீங்கள் மெய்மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.”
(14) 12.14. அவர்கள் தம் தந்தையிடம் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருந்தும் ஓநாய் அவரைத் தின்றுவிட்டால் எங்களிடையே எந்த நன்மையும் இல்லை. அவரை ஓநாயிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்.”
(15) 12.15. யஃகூப் யூஸுஃபை அவர்களுடன் அனுப்பினார்: “அவர்கள் அவரை தூரமாக அழைத்துச் சென்ற போது அவரை ஒரு பாழுங்கிணற்றில் போட்டுவிட உறுதிகொண்டார்கள். நாம் அந்த நிலையில் யூஸுஃபிற்கு வஹி அறிவித்தோம்: “அவர்களின் இந்த செயலை நீர் அவர்களுக்கு அறிவிப்பீர். அப்போது அவர்கள் உம்மைப்பற்றி உணர்ந்திருக்க மாட்டார்கள்.
(16) 12.16. யூஸுஃபின் சகோதரர்கள் தமது சூழ்ச்சியை மறைக்க தம்தந்தையிடம் இரவு வேளையில் அழுதவாறு நடித்தவர்களாக வந்தார்கள்.
(17) 12.17. அவர்கள் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! நாம் அம்பெய்தும் ஓடியும் விளையாடிக் கொண்டிருந்தோம். எங்களின் ஆடைகள் மற்றும் பொருள்களைப் பாதுகாப்பதற்காக யூஸுஃபை அவற்றிற்கு அருகில் விட்டு விட்டோம். ஓநாய் அவரைத் தின்று விட்டது. நாங்கள் இப்போது உங்களிடத்தில் உண்மையைக் கூறினாலும் நீங்கள் எங்களை நம்பப்போவதில்லை.”
(18) 12.18. தந்திரம் செய்து தங்களின் செய்தியை உறுதிப்படுத்தினார்கள். ஓநாய் தின்றதன் அடையாளம் என்று வேறு இரத்தத்தில் தேய்த்து எடுக்கப்பட்ட யூஸுஃபின் சட்டையைக் கொண்டு வந்தார்கள். கிழியாத சட்டையைக் கண்ட யஃகூப் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக உங்களின் மனம் நீங்கள் செய்த தீய காரியத்தை உங்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளது. நான் பதற மாட்டேன். அழகிய பொறுமையை மேற்கொள்வேன். யூஸுஃபைக்குறித்து நீங்கள் கூறும் விஷயத்திற்கு நான் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன்.
(19) 12.19. கடந்து செல்லக்கூடிய ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீரைத் தேடி ஒருவரை அனுப்பினார்கள். அவர் தம் வாளியைக் கிணற்றில் போட்டார். யூஸுஃப் அந்த கயிற்றைப் பிடித்துத் தொங்கினார். வாளியைப் போட்டவர் யூஸுஃபைக் கண்ட போது மகிழ்ச்சியில் கூறினார்: “நற்செய்தி! இதோ ஒரு சிறுவன்.” தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் அவரை தங்களின் வியாபாரப் பொருளாகக் கருதி மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டார்கள். அவர்கள் யூஸுஃபை அற்பமாகக் கருதி விற்றுவிடுவார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(20) 12.20. தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் எகிப்தில் யூஸுஃபை அற்ப விலைக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள் விரைவாக அவரை விட்டு விடுபட வேண்டும் என்ற எண்ணத்தினால் அவரின் விஷயத்தில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். அவரைப் பார்த்தால் அடிமை போன்று இல்லை என்பதை புரிந்துகொண்டு, அவருடைய குடும்பத்தினர் வந்துவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். இதனால்தான் அவர் அவர்களுடன் நீண்ட காலம் தங்கியிருக்கவில்லை.
(21) 12.21. எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தம் மனைவியிடம் கூறினார்: “இவருடன் நல்ல முறையில் நடந்துகொள். நம்முடன் தங்கவைத்து இவரைக் கண்ணியப்படுத்து. இவர் நமக்குத் தேவையுள்ளவராக இருக்கலாம் அல்லது நாம் இவரை நம் மகனாக தத்தெடுத்துக் கொள்ளலாம். நாம் யூஸுஃபைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றி, கிணற்றிலிருந்து வெளியாக்கியது போல எகிப்தின் அரசனை அவர் மீது அன்பு செலுத்த வைத்து எகிப்தில் அவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினோம். நாம் அவருக்கு கனவின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தோம். அல்லாஹ் தன் விஷயத்தில் மேலோங்கியவனாக இருக்கின்றான். அவனுடைய கட்டளை நிறைவேறியே தீரும். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் -நிராகரிப்பாளர்கள- இதனை அறியமாட்டார்கள்.
(22) 12.22. யூஸுஃப் உடல் ரீதியான பலத்தைப் பெற்று பக்குவமடைந்த போது நாம் அவருக்கு புரிதலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் அல்லாஹ்வின் வணக்கத்தில் நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.
(23) 12.23. அரசனின் மனைவி இதமாகவும் தந்திரமாகவும் யூஸுஃபை தவறான நடத்தைக்காக அழைத்தாள். தனிமையை உறுதிப்படுத்த கதவுகள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டு, “என் பக்கம் நெருங்கி வா” என்றாள். யூஸுஃப் கூறினார்: “நீ அழைக்கும் விஷயத்திலிருந்து நான் அல்லாஹ்வின் மூலம் பாதுகாவல் தேடுகிறேன். என் எஜமான் என்னை நல்ல முறையில் அவரிடம் தங்க வைத்துள்ளார். நான் அவருக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். நான் அவருக்கு துரோகமிழைத்தால் அநியாயக்காரனாக ஆகிவிடுவேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
(24) 12.24. அவள் மானக்கேடான காரியம் செய்வதற்கு ஆசைகொண்டாள். அவரை அதைவிட்டுத் தடுக்கக்கூடிய, தூரப்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர் கண்டிருக்காவிட்டால் அவரது உள்ளத்திலும் அது ஏற்பட்டிருக்கும். அவரை விட்டும் தீங்கை அகற்றி விபச்சாரம் மோசடி என்பவற்றை விட்டு அவரை அப்புறப்படுத்தவே நாம் அவருக்கு அவற்றைக் காட்டினோம். நிச்சயமாக யூஸுஃப் நபித்துவம், தூதுப்பணிக்காக நாம் தேர்ந்தெடுத்த அடியார்களில் உள்ளவராவார்.
(25) 12.25. இருவரும் கதவின்பால் விரைந்தனர். யூஸுஃப் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினார். அவள் அவரை வெளியேற விடாமல் தடுப்பதற்காக ஓடினாள். வெளியேறுவதைத் தடுக்க அவரது சட்டையைப் பிடித்து அவருடைய ஆடையின் பின் பகுதியை அவள் கிழித்து விட்டாள். கதவுக்கு அருகில் அவளுடைய கணவனை இருவரும் கண்டார்கள். அரசனின் மனைவி தந்திரமாக அரசனிடம் கூறினாள்: “மன்னரே! உங்களின் மனைவியுடன் மானக்கேடான காரியம் செய்ய நாடியவருக்கான தண்டனை, சிறையிலடைத்தல் அல்லது நோவினை தரும் வேதனையைத் தவிர வேறெதுவும் இல்லை.”
(26) 12.26. யூஸுஃப் கூறினார்: “அவள்தான் என்னை மானக்கேடான காரியம் செய்ய அழைத்தாள். நான் அவ்வாறு செய்ய நாடவில்லை. அவளுடைய வீட்டில் இருந்த ஒரு குழந்தையை தொட்டிலில் இருந்தவாறு அல்லாஹ் பேசச் செய்தான். அது சாட்சி கூறியது: “யூஸுஃபின் சட்டை முன்புறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள் என்பதற்கான ஆதாரமாகும். அவர் பொய்யராவார். ஏனெனில் அவள் தன்னை விட்டும் அவரைத் தடுத்திருப்பாள்.
(27) 12.27. அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அது அவர் உண்மை கூறுகிறார் என்பதற்கு ஆதாரமாகும். அவள் பொய் கூறுபவளாவாள். ஏனெனில் அவர் அவளை விட்டும் தப்பி ஓடும் போது அவள் அவரை நாடியிருக்கலாம்.
(28) 12.28. யூஸுஃபின் சட்டை பின் புறமாக கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்ட மன்னர் யூஸுஃப் உண்மையாளர் என்பதை அறிந்துகொண்டார். அவர் கூறினார்: “இது -பெண்களாகிய நீங்கள்- செய்த சூழ்ச்சிதான். நிச்சயமாக உங்களின் சூழ்ச்சி கடுமையானதாகும்.”
(29) 12.29. அவர் யூஸுஃபிடம் கூறினார்: “யூஸுஃபே இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடும். இதனை யாரிடம் கூறிவிடாதீர். பெண்ணே! நீ உன் பாவத்திற்கு மன்னிப்பு தேடிக்கொள். யூஸுஃபை அவரது விருப்பமின்றி கவர்ந்திழுக்க முயற்சி செய்து நீதான் பாவியாகி விட்டாய்.
(30) 12.30. அந்தச் செய்தி நகரெங்கும் பரவியது. இதைக் கண்டிக்கும்விதமாக பெண்களில் சிலர் கூறினார்கள்: “அரசனின் மனைவி தன் அடிமையை தன்பக்கம் கவர்ந்திழுக்க முயற்சி செய்தாள். அவள் தன்அடிமையின் மீது காதலில் விழுந்து விட்டாள். -தனது அடிமையில்- அவள் மதிமயங்கி அவர் மீது கொண்ட அன்பினால் அவள் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.
(31) 12.31. அந்தப் பெண்கள் தன்னை மறைமுகமாக பழித்துப் பேசுவதை கேள்விப்பட்ட அரசனின் மனைவி அவர்களுக்கு அழைப்பு விடுத்து அனுப்பினாள். அவர்கள் யூஸுஃபைக் கண்டு விட்டு அவளை நியாயப்படுத்தலாம் என்பதற்கே அவ்வாறு செய்தாள். அவர்களுக்கு விரிப்பும் தலையணையும் உள்ள ஓர் இடத்தைத் தயார்படுத்தி அழைக்கப்பட்ட ஒவ்வொருத்திக்கும் உணவினை (பழங்களை) அறுப்பதற்கான கத்தியை வழங்கினாள். அவர்களை நோக்கி வரும்படி யூஸுஃபிடம் கூறினாள். அந்த பெண்கள் அவரைக் கண்ட போது அப்படியே பிரமித்துவிட்டார்கள். வியப்பில் உணவை (பழங்களை) அறுப்பதற்காக வழங்கப்பட்ட கத்தியைக் கொண்டு தங்களின் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “அல்லாஹ் தூய்மையானவன், இந்தப் பையன் மனிதரே அல்ல. இத்தனை அழகும் ஒரு மனிதனிடம் கொட்டிக் கிடக்காது. இவர் கண்ணியமான வானவரேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
(32) 12.32. அந்த பெண்களுக்கு நேர்ந்ததைக் கண்ட அரசனின் மனைவி கூறினாள்: “யாரை நேசித்ததனால்தான் நீங்கள் என்னைக் குறை கூறினீர்களோ அந்த இளைஞனே இவர். நான் அவரை அடைய முயன்றேன். அவரைத் தவறில் ஈடுபட வைக்க நான் தந்திரம் செய்தும், அவர் மறுத்துவிட்டார். அவர் என் ஆசைக்கு இணங்கவில்லையெனில் அவரை நிச்சயம் சிறையில் அடைத்திடுவேன். அவர் இழிவடைந்தவர்களில் ஒருவராகி விடுவார்.
(33) 12.33. யூஸுஃப் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “அவர்கள் என்னை அழைக்கும் தவறான நடத்தையில் ஈடுபடுவதை விட அவள் என்னை அச்சுறுத்தும் சிறையே எனக்குப் பிரியமானது. நீ அவர்களின் சூழ்ச்சியை என்னை விட்டும் அகற்றவில்லையெனில் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். அவர்களின் பக்கம் சாய்ந்து அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதற்கு நான் உடன்பட்டால் அறிவற்றவர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்.
(34) 12.34. அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். மன்னனின் மனைவி மற்றும் நகரத்துப் பெண்களின் சூழ்ச்சியை அவரை விட்டும் நீக்கினான். யூஸுஃபுடையவும் ஒவ்வொரு பிரார்த்தனை புரிவோரின் பிரார்த்தனையையும் நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். அவரதும் ஏனையோரதும் நிலமைகளை அவன் நன்கறிந்தவன்.
(35) 12.35. மன்னரும் அவரது கூட்டமும் அவர் தூய்மையானவர் என்பதற்கான ஆதாரத்தைக் கண்ட போது -தவறு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக- அவரை நிர்ணயிக்கப்படாத காலம் வரை சிறையில் அடைக்க நாடினார்கள்.
(36) 12.36. அவர்கள் அவரை சிறையில் அடைத்தார்கள். அவருடன் இரு இளைஞர்களும் சிறைபுகுந்தார்கள். அவர்களில் ஒருவர் யூஸுஃபிடம் கூறினார்: “நான் கனவிலே மதுபானம் தயாரிப்பதற்கான திராட்சை ரசம் பிழிவதாகக் கண்டேன்.” மற்றொருவர் கூறினார்: “நான் என் தலையிலே ரொட்டியை சுமந்து செல்வதாக, அதனைப் பறவைகள் கொத்தித் தின்பதாகக் கண்டேன்.” -யூஸுஃபே!- நாங்கள் கண்டதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக. நாங்கள் உம்மை உபகாரம் செய்வோரில் ஒருவராகக் காண்கிறோம்.
(37) 12.37. யூஸுஃப் கூறினார்: “அரசரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ உங்களுக்கு வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரே அதன் உண்மை நிலையையும் முறையையும் நான் உங்கள் இருவருக்கும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த விளக்கம் எனக்கு என் இறைவன் கற்றுத் தந்தவையாகும். இது ஜோதிடமோ வானவியல் சாஸ்திரமோ அல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையை ஏற்க மறுக்கிறார்கள்.
(38) 12.38. நான் என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றினேன். அது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் மார்க்கமாகும். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவனாக இருக்கும் போது அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவது எங்களுக்கு உகந்ததல்ல. நானும் எனது மூதாதையர்களும் ஏற்றுள்ள தவ்ஹீதும் நம்பிக்கையும் அவன் எங்கள் மீது பொழிந்த அருளாகும். அவன் மனிதர்கள் அனைவரின்பாலும் தூதர்களை ஏகத்துவத்தைக் கொடுத்து அனுப்பி அவர்கள் மீது அருள் புரிந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை. மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
(39) 12.39. பின்னர் யூசுஃப் சிறையில் இருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கூறினார்: “பல கடவுள்களை வணங்குவது சிறந்ததா? அல்லது தன்னை யாரும் அடக்கி ஆளாமல் மற்றவர்களை அடக்கியாளும், எவ்வித இணையுமற்ற அல்லாஹ் ஒருவனையே வணங்குவது சிறந்ததா?”
(40) 12.40. நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக தாமாகவே பெயர் சூட்டிக்கொண்டவைகளையே நீங்கள் வணங்குகிறீர்கள். வணக்கத்தில் அவைகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. அந்த பெயர்கள் சரியானவை என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. எல்லா படைப்புகளின் விஷயத்திலும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துமாறு ஏவியுள்ளான். அவனுக்கு யாரையும் இணையாக்குவதை தடைசெய்துள்ளான். இந்த ஓரிறைக்கொள்கையே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிவதில்லை. எனவேதான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அவனுடைய படைப்புகளில் சிலவற்றை வணங்குகிறார்கள்.
(41) 12.41. சிறையில் இருக்கும் எனது இரு தோழர்களே! மதுபானம் தயாரிக்க திராட்சை ரசம் பிழிவதாக கனவு கண்டவர் சிறையிலிருந்து விடுபட்டு தம் பணிக்குத் திரும்பி, அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். தம் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு, அதை பறவைகள் கொத்தித் தின்பதாக கனவு கண்டவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவார். அவர் தலை மாமிசத்தை பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் தீர்ப்புக் கூறுமாறு கேட்ட விடயம் தீர்மானிக்கப்பட்டு முடிந்து விட்டது. சந்தேகமின்றி இது நிகழ்ந்தே தீரும்.
(42) 12.42. இருவரில் விடுதலையடைவார் என்று எண்ணியவரிடம் -அரசனுக்கு மது ஊற்றிக்கொடுப்பவர்- யூஸுஃப் கூறினார்: “அரசனிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூறுவீராக. அதனால் அவர் சிறையிலிருந்து என்னை விடுவிக்கலாம். அரசனிடம் யூஸுஃபைக் குறித்துக் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். எனவே அதன் பின்னர் யூஸுஃப் பல வருடங்கள் சிறையில் கழித்தார்.
(43) 12.43. அரசன் கூறினான்: “நான் கனவில் ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்றுகொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கண்டேன். தலைவர்களே, கண்ணியவான்களே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்களாக இருந்தால் நான் கண்ட இந்த கனவிற்கு விளக்கம் அளியுங்கள்.”
(44) 12.44. அவர்கள் கூறினார்கள்: “நீர் கண்ட கனவு குழப்பமான கனவாகும். இவ்வகையான கனவுகளுக்கு எந்த விளக்கமும் இல்லை. நாங்கள் குழப்பமான கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்கள் அல்ல.”
(45) 12.45. சிறையில் இருந்த இருவரில் விடுதலையடைந்த மது ஊற்றிக் கொடுப்பவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு யூஸுஃபை, கனவுக்கு விளக்கம் கூறும் அவரது அறிவையும் நினைவு கூர்ந்தவராக கூறினார்: “அரசர் கண்ட கனவின் விளக்கத்தை அதனை அறிந்தவரிடம் கேட்டு நான் உங்களுக்கு அறிவிப்பேன். -அரசரே!- நீங்கள் கண்ட கனவின் விளக்கத்தைக் கூற என்னை யூஸுஃபிடம் அனுப்புங்கள்.”
(46) 12.46. சிறையிலிருந்து வெளியேறிய அவர் யூஸுஃபிடம் வந்த பிறகு அவரிடம் கேட்டார்: “யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்று கொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கனவில் கண்டவருக்கான விளக்கத்தை எமக்குக் கூறுங்கள். நான் அரசரிடமும் அவரோடு இருப்போரிடமும் திரும்பிச் செல்வேன். அரசனின் கனவின் விளக்கத்தை அவர்கள் புரிந்து உமது சிறப்பையும் மகிமையையும் அறிந்துகொள்வார்கள்.”
(47) 12.47. யூஸுஃப் அந்த கனவிற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்: “நீங்கள் தொடர்ந்து ஏழு வருடங்கள் நன்கு பயிரிடுவீர்கள். இந்த ஏழு வருடங்களில் நீங்கள் அறுவடை செய்யும் போது நீங்கள் உண்பதற்குத் தேவையான தானியங்களைத் தவிர மீதமுள்ள தானியங்களை கெட்டுப் போவதைத் தடுக்குமுகமாக அதன் கதிர்களிலேயே விட்டு விடுங்கள்.
(48) 12.48. செழிப்பான இந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். விதைக்காக வேண்டி அவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ள குறைவானவற்றைத் தவிர செழிப்பான வருடங்களில் அறுவடை செய்தவற்றை மக்கள் இந்த வருடங்களில் உண்பார்கள்.
(49) 12.49. பின்னர் இந்த பஞ்ச காலத்திற்குப் பிறகு வரக்கூடிய ஆண்டில் நல்ல மழை பொழியும். அப்போது விளைச்சல்கள் அதிகரிக்கும். மக்கள் திராட்சை, ஸைதூன், கரும்பு போன்ற பழரசம் பிழிவதற்கு தேவையானவற்றை கொண்டு பழரசம் பிழிவார்கள்.”
(50) 12.50. தனது கனவுக்கான யூஸுஃபின் விளக்கம் அரசரை அடைந்த போது அவர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை சிறையிலிருந்து விடுதலை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள். அரசரின் தூதர் யூஸுஃபிடம் வந்தபோது யூஸுஃப் அவரிடம் கூறினார்: “உம் எஜமானிடம் திரும்பிச் சென்று தங்களின் கைகளை அறுத்துக் கொண்ட அந்தப் பெண்களைக் குறித்துக் கேட்பீராக. விடுதலையடைவதற்கு முன்னர் அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினார். நிச்சயமாக என் இறைவன் அவர்கள் எனக்குச் செய்த ஏமாற்று வேலையை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.”
(51) அரசன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கூறினார் "தந்திரமாக உங்களுடன் தவறான முறையில் நடப்பதற்குத் தந்திரமாக நீங்கள் யூஸுபை அழைத்த விவகாரம் என்ன?' அதற்கு அப்பெண்கள் பதிலளித்தனர்; யூஸுப் சந்தேகத்திற்குள்ளாவதை விட்டும் தூய்மையானவர். அவர்மீது எக்குற்றமும் இல்லை''. அப்போது உடனே தான் செய்ததை ஏற்றுக்கொண்டு அஸீஸின் மனைவி கூறினாள்: இப்போது உண்மை வெளிவந்துவிட்டது நான்தான் அவரை தவறுசெய்யத் தூண்டினேன் அவரல்ல. அவரின் மீது நான் சுமத்திய அவதூறை விட்டும் தான் தூய்மையானவர் என்ற தனது வாதத்தில் அவர் உண்மையானவர்தான்.
(52) 12.52. மன்னனின் மனைவி கூறினாள்: “நான்தான் யூஸுஃபை வழிகெடுக்க முயன்றேன் அவர் உண்மையாளரே என்பதை நான் ஒத்துக்கொண்டது, அவர் இல்லாத போது எதையும் நான் அவர் மீது இட்டுக்கட்டிக் கூறவில்லையென அவர் அறிந்துகொள்வதற்கேயாகும். அல்லாஹ் பொய் கூறுபவர்களுக்கு, சூழ்ச்சி செய்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான் என்பது நடந்தவற்றிலிருந்து எனக்குப் புரிந்துவிட்டது.”
(53) 12.53. அரசரின் மனைவி தொடர்ந்து கூறினாள்: “நான் என் மனதில் தீய எண்ணம் கொள்ளவில்லை என்று கூறமாட்டேன். இதன் மூலம் என்னைப் பரிசுத்தப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் மனித மனம் தான் விரும்புவற்றின் பால் சாய்வதனாலும் அதனைத் தடுத்துக் கொள்வது சிரமம் என்பதாலும் தீயவற்றை அதிகமாக ஏவுதல் அதன் இயல்பாகும். தீயவற்றை ஏவுவதை விட்டும் அதனைப் பாதுகாத்து அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(54) 12.54. யூஸுஃப் நிரபராதி, அறிவாளி என்பது தெளிவாகி அதனை அறிந்துகொண்ட பின்னர் அரசர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை அழைத்து வாருங்கள். அவரை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்.” அவர் அழைத்து வரப்பட்டார். அரசர் அவரிடம் பேசிய போது அவருடைய அறிவையும் ஞானத்தையும் அறிந்து கொண்டார். அவரிடம் கூறினார்: -“யூஸுஃபே!- நிச்சயமாக இன்றைய தினம் நீர் எங்களிடம் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் பதவியுடையவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”
(55) 12.55. யூஸுஃப் அரசரிடம் கூறினார்: “எகிப்து நாட்டிலுள்ள பொக்கிஷங்களுக்கும் உணவுகளுக்கும் என்னைப் பொறுப்பாளராக நியமியுங்கள். நிச்சயமாக நான் நம்பிக்கையான பாதுகாப்பாளன். பொறுப்பேற்றுள்ள விஷயத்தைப் பற்றி நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன்.
(56) 12.56. நாம் யூஸுஃபை குற்றமற்றவர் என நிரூபித்து அவரை சிறையிலிருந்து விடுவித்து அவர் மீது அருள்புரிந்ததைப் போன்று எகிப்தில் அவருக்கு இடமளித்தும் அவர் மீது அருள்புரிந்தோம். அவர் தாம் நாடிய இடத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்த உலகில் நாம் விரும்பும் அடியார்களுக்கு நம் அருளை வழங்குகின்றோம். நன்மை செய்வோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்குரிய கூலியை குறைவின்றி நிறைவாக நாம் அவர்களுக்கு வழங்கி விடுவோம்.
(57) 12.57. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் மறுமையில் தயார்படுத்தி வைத்துள்ள நன்மையானது இவ்வுலக நன்மைகளைவிடச் சிறந்ததாகும்.
(58) 12.58. யூஸுஃபின் சகோதரர்கள் தங்களின் பொருள்களுடன் எகிப்து நாட்டிற்கு வந்து அவரிடம் வந்தார்கள். அவர்கள் தமது சகோதரர்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கடந்து விட்டதனாலும் அவருடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் அவர் தமது சகோதரர் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவரைக் கிணற்றில் அவர்கள் போட்ட போது அவர் சிறுவராக இருந்தார்.
(59) 12.59. யூஸுஃப், அவர்கள் வேண்டிய உணவுப் பொருளையும் கட்டுச்சாதனத்தையும் அவர்களுக்கு அளித்த போது, தங்களுக்கு தந்தை வழிச்சகோதரன் ஒருவர் உண்டு, அவரைத் தமது தந்தையிடம் விட்டு வந்தள்ளதாக அவர்கள் அவரிடம் தெரிவித்ததும் அவர் அவர்களிடம் கூறினார்: “உங்களின் தந்தைவழிச் சகோதரனையும் என்னிடம் அழைத்து வாருங்கள். ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பொருள்களை அதிகப்படுத்தி தருகின்றேன். நான் உங்களுக்கு அளவைக் குறைக்காமல் அதிகப்படுத்தி தருகின்றேன், நான் மிகச் சிறந்த முறையில் விருந்தளிப்பவன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?.
(60) 12.60. நீங்கள் அவரை அழைத்து வரவில்லையென்றால் உங்களுக்கு தந்தைவழிச் சகோதரன் இருப்பதாக நீங்கள் கூறியது பொய்யாகி விடும். எனவே உங்களுக்கு ஒருபோதும் உணவுதர மாட்டேன். நீங்கள் எனது ஊரை நெருங்கவும் வேண்டாம்.
(61) 12.61. அவருடைய சகோதரர்கள் கூறினார்கள்: “நாங்கள் எங்கள் தந்தையிடம் வேண்டுவோம். அவரை அழைத்து வருவதற்கு முழு முயற்சி செய்வோம். நீங்கள் இட்ட கட்டளையை நிச்சயம் நாங்கள் எவ்வித குறையுமின்றி செய்பவர்களே.”
(62) 12.62. யூஸுஃப் தம் பணியாளர்களிடம் கூறினார்: “அவர்கள் வீடு திரும்பியவுடன் நாம் அவர்களிடம் எதையும் வாங்கவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களின் பொருட்களை அவர்களிடமே திருப்பியளித்து விடுங்கள். இவ்வாறு செய்வது, அவர்கள் தமது நம்பகத் தன்மையை யூஸுஃபிடம் நிரூபிப்பதற்கும் அவர்களது பொருட்களை அவர் ஏற்றுக்கொள்வதற்காகவும் அவர்களது சகோதரரை அழைத்துக் கொண்டு மீண்டும் வருவதற்கு அவர்களை நிர்ப்பந்திக்கும்.
(63) 12.63. அவர்கள் தம் தந்தையிடம் வந்து, யூஸுஃப் அவர்களைக் கண்ணியப்படுத்தியது முதற்கொண்டு நடந்த எல்லாவற்றையும் எடுத்துரைத்து விட்டு கூறினார்கள். “எங்களின் தந்தையே! நாங்கள் எங்கள் சகோதரனை அழைத்துச் செல்லவில்லையென்றால் எங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. எனவே அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். நீங்கள் அவரை எங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தானியத்தைப் பெறுவோம். அவர் உங்களிடம் பாதுகாப்பாக வந்து சேரும் வரை அவரைப் பாதுகாப்போம் என நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியளிக்கின்றோம்.
(64) 12.64. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “இதற்கு முன்னால் இவரது சகோதரர் யூஸுஃபின் விஷயத்தில் உங்களை நம்பியதைப் போன்றல்லாது இவர் விஷயத்தில் உங்களை நான் நம்ப வேண்டுமா? அவர் விடயத்தில் உங்களை நான் நம்பினேன். நீங்கள் அவரைப் பாதுகாப்பதாக எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் உங்களின் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றவில்லை. எனவே இவரைப் பாதுகாப்பதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுயில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் அல்லாஹ்வையே நம்புகிறேன். அவனே தான் பாதுகாக்க நாடியவர்களை சிறந்த முறையில் பாதுகாக்கக் கூடியவன்; தான் நாடியவர்களுக்கு கருணை காட்டுவதில் மிகச் சிறந்தவன்.
(65) 12.65. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த தங்களின் உணவுப் பையை திறந்த போது அதற்கான விலைப் பொருட்கள் தங்களிடமே திருப்பி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: “இந்த அளவு கண்ணியம் அளித்த பிறகு இந்த அரசரிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்? உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக நாம் அளித்த விலையை அரசர் நம்மீது கொண்ட அருளினால் நமக்குத் திருப்பித் தந்துள்ளார். நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கும் உணவு கொண்டு வருவோம். நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து எங்களின் சகோதரரையும் பாதுகாப்போம். அவர் எங்களுடன் வருவதால் ஓர் ஓட்டகம் அளவு தானியத்தையும் அதிகமாகப் பெறுவோம். ஓர் ஒட்டகம் அளவு அதிகமாக தானியம் வழங்குவது அரசருக்கு மிகவும் இலகுவானதுதான்.”
(66) 12.66. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களால் தவிர்க்க முடியாதளவு ஆபத்து ஏற்பட்டு உங்களில் எவரையும் விட்டுவைக்காமல் நீங்கள் அழிந்தாலே தவிர நீங்கள் அவரை என்னிடம் திரும்ப அழைத்து வருவீர்கள் என்பதற்கு அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி வழங்காதவரை நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன். அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி அளித்த போது அவர் கூறினார்: “நாங்கள் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளனாவான். அவனுடைய சாட்சியமே எங்களுக்குப் போதுமானது.”
(67) 12.67. அவர்களுக்கு அறிவுரை வழங்கியவாறு அவர்களின் தந்தை கூறினார்: “எகிப்தில் நீங்கள் அனைவரும் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். ஆனால் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். இதுதான் யாரேனும் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் நீங்கள் அனைவரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உகந்ததாகும். அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் உங்களை விட்டும் அதனைத் தடுப்பதற்காகவோ அல்லது அவன் உங்களுக்கு நன்மையளிக்க விரும்பவில்லையெனில் நான் உங்களுக்கு நன்மையளிப்பதற்காகவோ இவ்வாறு கூறவில்லை. அல்லாஹ் விதித்ததே நடக்கும். அவனது நாட்டமே நிறைவேறும். நான் என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருக்க வேண்டும்.
(68) 12.68. அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் அவர்களின் சகோதரரும் இருந்தார். அவர்களின் தந்தை கட்டளையிட்டவாறு அவர்கள் பல்வேறு வாயில்கள் வழியாக நுழைந்த போது அது அல்லாஹ் விதித்ததில் எதையும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. அது யஃகூப் தம் பிள்ளைகளின் மீது காட்டிய பாசமும் அதனால் வழங்கிய அறிவுரையுமே அது. அல்லாஹ் விதித்ததே நிறைவேறும் என்பதை அவர் அறிந்தேயிருந்தார். விதியின் மீது நம்பிக்கை மற்றும் காரண காரியங்களைக் கடைப்பிடித்தல் தொடர்பாக நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றை அவர் அறிந்தவராவார். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.
(69) 12.69. யூஸுஃபின் சகோதரர்கள் அவரது உடன் பிறந்த சகோதரனுடன் அவரிடம் நுழைந்த போது. யூஸுஃப் அவரைத் தம்மோடு சேர்த்துக் கொண்டார். அவரிடம் இரகசியமாகக் கூறினார்: “நான்தான் உம்முடைய உடன் பிறந்த சகோதரன் யூஸுஃப். எனவே உம் சகோதரர்கள் செய்த நோவினை, காட்டிய குரோதம், என்னை கிணற்றில் எறிந்தது ஆகிவற்றை எண்ணி கவலைப்படாதீர்.
(70) 12.70. யூஸுஃப் தம் பணியாளர்களுக்கு தம் சகோதரர்களுக்கான பொருள்களை ஒட்டகத்தில் ஏற்றிவைக்குமாறு கட்டளையிட்ட போது உணவுப் பொருட்களைப் பெற வருவோருக்கு உணவளிக்கும் அரசனின் அளவுக் குவளையை தம் பிரியமான சகோதரனின் பொதியில் அவர்களுக்குத் தெரியாமல் - அவரைத் தம்மிடம் தங்க வைத்துக்கொள்ளும் பொருட்டு - வைத்துவிட்டார். அவர்கள் தங்களின் குடும்பத்தினரின் பால் திரும்ப புறப்பட்ட போது அவர்களைப் பின்தொடர்ந்த ஒரு அறிவிப்பாளர் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்: “உணவுப் பொருள்களை சுமந்து செல்லும் ஒட்டகக்காரர்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்.”
(71) 12.71. யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்த அறிவிப்பாளரையும் அவருடன் இருந்தவர்களையும் முன்னோக்கிக் கேட்டார்கள்: “எம்மைத் திருடியதாகச் சந்தேகிப்பதற்கு உங்களிடமிருந்து என்ன தொலைந்தது?”
(72) 12.72. அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் யூஸுஃபின் சகோதரர்களிடம் கூறினார்கள்: “எங்களிடமிருந்து அரசரின் அளவுக் குவளை தொலைந்து விட்டது. பரிசோதனை செய்வதற்கு முன்னரே அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்குத் தானியம் பரிசாக வழங்கப்படும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
(73) 12.73. யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களிடம் கூறினார்கள்: “எங்களின் நிலைகளை நீங்கள் பார்த்தது போன்று எமது நேர்மையையும் தூய்மையையும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். நாங்கள் குழப்பம் விளைவிப்பதற்காக எகிப்து நாட்டிற்கு வரவில்லை. நாங்கள் எமது வாழ்வில் திருடர்களாகவும் இருந்ததில்லை.”
(74) 12.74. அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் கேட்டார்கள்: “திருட்டுக் குற்றத்திலிருந்து நீங்கள் நிரபராதிகள் என்ற உங்கள் கூற்றில் நீங்கள் பொய்யர்களாக இருந்தால் அதனைத் திருடியவருக்கு உங்களிடத்தில் என்ன தண்டனை?”
(75) 12.75. யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களிடம் கூறினார்கள்: “யாருடைய பொதியில் திருடப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்படுகிறதோ அவர் அதற்குப் பகரமாக அடிமையாக்கப்படுவார் என்பதே எங்களிடமுள்ள திருடனுக்கான தண்டனையாகும். இவ்வாறு அடிமையாக்குவதன் மூலமே நாங்கள் திருடர்களைத் தண்டிக்கிறோம்.
(76) 12.76. அவர்களின் பொதிகளை சோதனையிட யூஸுஃபிடம் அவர்களை திருப்பி அழைத்துச் சென்றனர். தந்திரத்தை மறைப்பதற்காக அவர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை விட்டு விட்டு தனது மற்ற சகோதரர்களின் பொதிகளைச் சோதனையிட ஆரம்பித்தார். பின்னர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை சோதனையிட்டு அதிலிருந்து அரசனின் அளவுக் குவளையை கண்டெடுத்தார். இவ்வாறு யூஸுஃபிற்காக தந்திரம் செய்து அவருடைய சகோதரனின் பொதியில் அளவுக் குவளையை வைத்ததைப் போல, திருடியவரை அடிமையாக்கும் அவர்கள் நாட்டுத் தண்டனை மூலம் தனது சகோதரர்களைத் தண்டிக்க அவருக்கு நாம் மேலும் ஒரு திட்டம் தீட்டினோம். அடித்து அபராதம் விதித்து திருடனைத் தண்டிக்கும் அரசரின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த விடயம் கைக்கூடியிருக்காது. அல்லாஹ் வேறொரு திட்டத்தை நாடினாலே தவிர. அதற்கு அவன் பேராற்றலுடையவன். நாம் யூஸுஃபின் அந்தஸ்தை உயர்த்தியதைப் போன்று நம் அடியார்களில் நாம் நாடியவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கும் மேல் அவரை விட அறிந்தவர் உண்டு. எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் அறிவு அனைவரின் அறிவையும் விட மேலானதாகும்.
(77) 12.77. யூஸுஃபின் சகோதரர்கள் கூறினார்கள்: “இவர் திருடியிருந்தால், எந்த ஆச்சரியமும் இல்லை. இவருக்கு முன்னால் இவருடைய சொந்த சகோதரரும் திருடியிருக்கத்தான் செய்கிறார்.” இவ்வாறு அவர்கள் யூஸுஃபைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவர்களின் இந்த வார்த்தையால் ஏற்பட்ட வலியை யூஸுஃப் மறைத்துக் கொண்டார். அதை அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. தம் மனதுக்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார்: “உங்களிடமுள்ள பொறாமையும் இதற்கு முன் நீங்கள் செய்த தீய செயலுமே இந்த இடத்தில் கெட்டதாகும். உங்களிடம் இருந்து வெளியாகும் இந்த அவதூறை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(78) 12.78. யூஸுஃபின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறினார்கள்: “அரசரே! அவருக்கு அவரை மிகவும் நேசிக்கும் தள்ளாத வயதிலுள்ள தந்தை இருக்கிறார். அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை பிடித்துக் கொள்ளுங்கள். எங்களுடனும், மற்றவர்களுடனும் நீர் சிறந்த முறையிலேயே நடந்து கொள்பவராகவே நிச்சயமாக நாம் காண்கிறோம். எனவே அவ்வாறு செய்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள்.”
(79) 12.79. யூஸுஃப் கூறினார்: “அநியாயக்காரன் செய்த குற்றத்திற்காக குற்றமற்றவரைத் தண்டிக்கும் வகையில் தனது பொதியிலே அரசனின் அளவுக் குவளையை திருடாத ஒருவரை நாம் பிடித்து வைத்துக்கொள்வதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாங்கள் அவ்வாறு செய்தால் குற்றவாளியை விட்டு விட்டு நிரபராதியைத் தண்டித்த அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.
(80) 12.80. தமது வேண்டுகோளுக்கு யூஸுஃப் அளித்த பதிலால் அவர்கள் நம்பிக்கையிழந்த போது ஆலோசனை செய்வதற்காக மக்களை விட்டும் தனியே கூடினார்கள். அவர்களில் மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தை உங்களால் தவிரக்க முடியாத ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர தம் மகனை திரும்ப அழைத்து வரும்படி உங்களிடம் பெற்ற உறுதியான வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதற்கு முன்னர் யூஸுஃபின் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு திரும்புமாறு அனுமதியளிக்கும் வரை அல்லது என் சகோதரனை விடுவிக்க அல்லாஹ் முடிவு செய்யும் வரை நான் எகிப்தை விட்டுச் செல்லமாட்டேன். அல்லாஹ் மிகச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்கக்கூடியவன். அவன் உண்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்கின்றான்.
(81) 12.81. மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்: “உங்களின் மகன் திருடிவிட்டான். அதற்குத் தண்டனையாக எகிப்தின் அரசன் அவரை அடிமையாக்கி விட்டான். அவரது பொதியில் இருந்து எடுப்பதை நாங்கள் கண்ணால் கண்டு அறிந்ததைத்தான் கூறுகிறோம். அவர் திருடுவார் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை, அவ்வாறு அறிந்திருந்தால் அவரைத் திரும்ப அழைத்து வருவோம் என்று உங்களிடம் வாக்குறுதி அளித்திருக்க மாட்டோம்.”
(82) 12.82. -எங்களின் தந்தையே!- நாங்கள் உண்மைதான் கூறுகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக நாம் இருந்த எகிப்து மக்களிடம் கேளுங்கள். எங்களுடன் வந்த பயணக் கூட்டத்தினரிடமும் கேளுங்கள். நாங்கள் கூறியதையே அவர்களும் கூறுவார்கள். அவர் திருடியதாக நாங்கள் கூறுவதில் நாங்கள் உண்மையாளர்களே.
(83) 12.83. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “அவர் திருடிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உண்மையல்ல. யூஸுஃபின் விஷயத்தில் சூழ்ச்சி செய்ததைப் போலவே இவரின் விஷயத்திலும் சூழ்ச்சி செய்வதை உங்களின் மனம் உங்களுக்கு அழகாக்கிக் காட்டி விட்டது. நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேன். அல்லாஹ்விடமே என் கவலைகளை முறையிடுவேன். யூஸுஃப், அவருடைய சகோதரன் மற்றும் மூத்த சகோதரன் என அவர்கள் அனைவரையும் அவன் என்னிடம் கொண்டுவரக்கூடும். அவன் என் நிலையை நன்கறிந்தவன். எனது விடயத்தில் அவன் செய்யும் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.
(84) 12.84. அவர் அவர்களைப் புறக்கணித்து தூரமாகிச் சென்று, கூறினார்: “அந்தோ! யூஸுபின் மீது எனது கவலை எவ்வளவு கடுமையானது. அவர் அதிகமாக அழுததனால் அவர் கண்களின் கருவிழி வெண்மையாகி விட்டது. அவர் துக்கத்தாலும் கவலையாலும் நிரம்பியிருந்தார். மக்களை விட்டும் தம் கவலையை மறைத்துக் கொண்டிருந்தார்.
(85) 12.85. யூஸுஃபின் சகோதரர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: -“எங்கள் தந்தையே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களின் நோய் கடினமாகும் வரை அல்லது உண்மையாக நீர் அழிந்து விடும் வரை நீங்கள் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.
(86) 12.86. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் கவலையையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகின்றேன். நீங்கள் அறியாத அல்லாஹ்வின் அருளையும் உபகாரத்தையும் நிர்ப்பந்தத்தில் உள்ளவனுக்கு பதிலளிப்பதையும் துன்பத்தில் அகப்பட்டவருக்கு கூலி வழங்குவதையும் நான் அறிவேன்.
(87) 12.87. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிராகரித்த மக்கள் மட்டுமே அல்லாஹ் துன்பங்களைப் போக்கி விடுதலையளிப்பான் என்பதில் நம்பிக்கை இழப்பார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை, அவன் தன் அடியார்களுக்கு வழங்கும் மறைவான அருட்கொடைகளை அறிய மாட்டார்கள்.
(88) 12.88. தமது தந்தையின் கட்டளையின் படி அவர்கள் செயற்பட்டு, யூஸுஃபையும் அவரது சகோதரரரையும் தேடிச் சென்றனர். அவர்கள் யூஸுஃபிடம் வந்த போது கூறினார்கள்: “வறுமையும் கஷ்டமும் எங்களைப் பாதித்துள்ளது. நாங்கள் அற்ப பொருளையே கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்னர் எங்களுக்கு நிறைவாக தானியங்கள் தந்தவாறு இப்பொழுதும் நிறைவாக தானியங்கள் தாருங்கள். அதிகப்படியாக தர்மமும் செய்யுங்கள். அல்லது எங்களின் அற்ப பொருள்களைக் கண்டுகொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கு அழகிய முறையில் கூலி வழங்குகின்றான்.
(89) 12.89. அவர்களின் பேச்சைக் கேட்ட யூஸுஃபின் உள்ளம் அவர்கள் மீது கொண்ட கருணையால் உருகிவிட்டது. தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் கேட்டார்: “யூஸுஃபுடனும் அவருடைய சகோதரருடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள் என்பதை அறிந்தேயுள்ளீர்கள். அப்போது நீங்கள் செய்த செயலின் விளைவைக் குறித்து அறியாதவர்களாக இருந்தீர்கள்.”
(90) 12.90. அவர்கள் திடுக்கிட்டார்கள். “நீர்தான் யூஸுஃபா” என்று கேட்டார்கள். யூஸுஃப் அவர்களிடம் கூறினார்: “ஆம். நான்தான் யூஸுஃப். என்னுடன் இருக்கும் இவர் என் சொந்த சகோதரர். நாங்கள் இருந்த நிலையிலிருந்து எங்களை விடுவித்து, எங்களின் அந்தஸ்தை உயர்த்தி அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக அவருடைய செயல் நன்மையான செயலாகும். நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்காக அதனைப் பாதுகாக்கிறான்.
(91) 12.91. அவருடைய சகோதரர்கள் தாங்கள் அவருடன் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உமக்குப் பரிபூரணமான பண்புகளை வழங்கி உம்மை சிறப்பித்துள்ளான். நாங்கள் உம்முடன் நடந்து கொண்ட விதத்தில் தவறிழைத்த அநியாயக்காரர்களாக இருந்தோம்.”
(92) 12.92. யூஸுஃப் அவர்கள் கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்டார். அவர் கூறினார்: “இன்றைய தினம் உங்களைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அவன் கருணையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
(93) 12.93. தம் தந்தையின் பார்வைக்கு ஏற்பட்ட நிலமையை அவர்கள் அவரிடம் கூறிய போது அவர் அவர்களிடம் தன் சட்டையைக் கொடுத்துக் கூறினார்: “எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் போடுங்கள். அவருடைய பார்வை திரும்பி விடும். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”
(94) 12.94. பயணக் குழு எகிப்திலிருந்து புறப்பட்டு ஊர் எல்லையைத் தாண்டியதும் தன் பிள்ளைகளிடமும் ஊரில் தன் அருகில் இருந்தோரிடமும் யஃகூப் கூறினார்: “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை உணர்கிறேன். “தான் அறியாததைக் கூறும் புத்தியையிழந்த கிழவர்” என்று கூறி நீங்கள் என்னை மடையனாக்கி புத்தியிழந்தவர் என்பீர்கள்.
(95) 12.95. அவரைச் சுற்றியிருந்த அவரது பிள்ளைகள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களிடம் யூஸுஃபுக்குள்ள மதிப்பினாலும் மீண்டும் அவரைக் காணமுடியும் என்ற எண்ணத்தாலும் உங்களின் முன்னைய மாயையிலேயே இருக்கின்றீர்கள்.”
(96) 12.96. யஃகூபுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலைக் கூறுபவர் வந்த போது யூஸுஃபின் சட்டையை யஃகூபின் முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வையுடையவராகி விட்டார். அப்போது அவர் தன் பிள்ளைகளிடம் கூறினார்: “நான் அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் குறித்து நீங்கள் அறியாததையெல்லாம் நன்கு அறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”
(97) 12.97. அவருடைய மகன்கள் அவரிடம் யூஸுஃபின் விஷயத்திலும் அவருடைய சகோதரரின் விஷயத்திலும் தாங்கள் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! எங்களின் முந்தைய பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நாங்கள் யூஸுஃப் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரரின் விஷயத்தில் தவறிழைத்த குற்றவாளிகளாக இருந்தோம்.”
(98) 12.98. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(99) 12.99. யஃகூபும் அவருடைய குடும்பத்தினரும் தங்களின் நாட்டிலிருந்து எகிப்திலிருக்கும் யூஸுஃபை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் அவரிடம் நுழைந்த போது தன் தாய் தந்தையரை தன் பக்கம் அணைத்துக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கூறினார்: “அல்லாஹ் நாட்டத்தால் எகிப்தில் பாதுகாப்புப் பெற்றவர்களாக நுழையுங்கள். இங்கு உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
(100) 12.100. தன் பெற்றோரை தான் அமரும் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டார். அவருடைய பெற்றோரும் பதினொரு சகோதரர்களும் அவருக்கு சிரம்பணிந்து வாழ்த்துக் கூறினார்கள். அது வணக்கத்திற்கான ஸுஜூத் அல்ல கௌரவிப்புக்கான ஸுஜூத். கனவில் நிகழ்ந்தது போன்று அல்லாஹ்வின் கட்டளை நிகழும் பொருட்டே இவ்வாறு நடந்தது. இதனால்தான் யூஸுஃப் தன் தந்தையிடம் கூறினார்: “நீங்கள் எனக்கு சிரம்பணிந்து தெரிவிக்கும் இந்த வாழ்த்துதான் நான் இதற்கு முன்னால் கண்டு உங்களிடம் கூறிய கனவின் விளக்கம். அதனை நிகழச் செய்து என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். என் இறைவன் என்னை சிறையிலிருந்து வெளியேற்றிய போதும் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் குறுக்கிட்ட பின்னரும் உங்களைக் கிராமத்திலிருந்து இங்கு கொண்டுவந்தன் மூலம் அல்லாஹ் என்மீது உபகாரம் புரிந்துள்ளான். என் இறைவன் தான் நாடுவதை நிகழ்த்துவதில் நுட்பமானவன். அவன் தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்; தன் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.
(101) 12.101. பின்னர் யூஸுஃப் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நீ எனக்கு எகிப்தின் அரசாட்சியை வழங்கினாய். கனவுகளின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தாய். வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்னுடைய எல்லா விவகாரங்களுக்கும் நீயே பொறுப்பாளியாவாய். எனது தவணை நிறைவடைந்து என் உயிரைக் கைப்பற்றும் போது என்னை முஸ்லிமாகவே உனக்குக் கட்டுப்பட்டவனாகவே கைப்பற்றுவாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் இருக்கும் எனது மூதாதையர்களிலும் ஏனையோர்களிலும் உள்ள நல்லோர்களான தூதர்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக.”
(102) 12.102. -தூதரே!- மேற்கூறப்பட்ட யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாற்றை நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். அது குறித்து நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். ஏனெனில் யூஸுஃபின் சகோதரர்கள் அவரைக் கிணற்றில் போட நாடிய போதும் அவர்கள் தந்திரத்தைத் திட்டமிட்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ஆயினும் நாம் அதனை உமக்கு வஹி மூலம் அறிவித்தோம்.
(103) 12.103. -தூதரே!- நீர் உம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தாலும் மக்களில் பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அதற்காக நீர் வருத்தப்படாதீர்.
(104) 12.104. -தூதரே!- அவர்கள் விளங்கியிருந்தால் உம்மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஏனெனில் நீர் குர்ஆனுக்கோ அவர்களை அழைக்கும் விஷயத்திற்கோ அவர்களிடம் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும்.
(105) 12.105. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றைக் குறித்து கவனம் செலுத்தாமலும் சிந்திக்காமலும் அவற்றைப் புறக்கணித்தவாறு அவர்கள் கடந்து சென்று விடுகிறார்கள். அவற்றை பற்றி அவர்கள் திரும்பி பார்ப்பதும் கிடையாது.
(106) 12.106. அல்லாஹ்தான் படைப்பாளன், வாழ்வாதாரம் அளிப்பவன், உயிர்பிப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதை மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொண்டாலும் அவர்கள் அல்லாஹ்வுடன் இணைத்து வேறு சிலைகளை வணங்குகின்றனர். அவனுக்கு பிள்ளை உண்டு என வாதிடுகின்றனர்.
(107) 12.107. இந்த இணைவைப்பாளர்கள் தம்மால் தடுக்க முடியாத தம்மை வியாபிக்கும் அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகில் தங்களைத் தாக்கிவிடக் கூடும் என்பது குறித்து அச்சமற்று இருக்கிறார்களா? அல்லது மறுமை வருவதை உணர்ந்து அதற்குத் தயாராகுவதற்குக் கூட வாய்ப்புக் கிடைக்காமல், மறுமை நாள் அவர்களிடம் திடீரென வந்து விடுவதை அச்சமற்று இருக்கிறார்களா?. அதனால் தானா அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை?!
(108) 12.108. -தூதரே!- நீர் அழைக்கக் கூடியவரிடம் கூறுவீராக: “இது எனது வழி. இதன் பக்கம் தெளிவான ஆதாரத்துடன் நானும் என் வழிகாட்டுதலையும், வழிமுறையையும் பின்பற்றியவர்களும் மக்களை அழைக்கின்றோம். அவனது கண்ணியத்துக்குப் பொருத்தமற்ற அல்லது அவனது பூரணத்தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் அவனோடு இணைக்கப்பட்ட அனைத்தை விட்டும் நான் பரிசுத்தப்படுத்துகின்றேன். நான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவன் அல்ல. மாறாக நான் அவனை மட்டுமே ஒருமைப்படுத்தி வணங்கக்கூடியவன் ஆவேன்.
(109) 12.109. -தூதரே!- உமக்கு முன் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். வானவர்களை அல்ல. உமக்கு வஹி அறிவித்தவாறே அவர்களுக்கு வஹி அறிவித்தோம். அவர்கள் நகரவாசிகளாக இருந்தார்கள். நாட்டுப்புறத்தவர்களாக அல்ல. அவர்களின் சமூகங்கள் அவர்களை நிராகரித்ததனால் நாம் அந்த சமூகங்களை அழித்து விட்டோம். உம்மை நிராகரிப்பவர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் படிப்பினை பெறவில்லையா? இவ்வுலகில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் இன்பங்களே சிறந்ததாகும். இதுதான் சிறந்தது என்பதை புரிந்து கொள்ளவில்லையா? எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி -அவற்றில் மிகப் பெரியது ஈமான் கொள்வது- அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவற்றில் மிகப் பெரியது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது, இறைவனை அஞ்சுங்கள்.
(110) 12.110. நாம் அனுப்பிய தூதர்களின் எதிரிகளுக்கு நாம் அவகாசம் அளிக்கின்றோம். அவர்களை விட்டுப்பிடிப்பதற்காக தண்டனையை அவர்களுக்கு நாம் துரிதப்படுத்துவதில்லை. அவர்களை அழிப்பது தாமதமாகி விட்டால் அவர்களின் அழிவில் தூதர்கள் நம்பிக்கையிழந்து மறுத்தவர்களுக்கு தண்டனையும் முஃமின்களுக்கு பாதுகாப்பும் உண்டு என தூதர்கள் பொய்தான் கூறியுள்ளார்கள் என்று நிராகரிப்பாளர்கள் எண்ணும் போது நம் உதவி நம் தூதர்களை வந்தடைகிறது. நிராகரிப்பாளர்களைத் தாக்கும் வேதனையிலிருந்து நாம் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நாம் வேதனையை இறக்கும் போது குற்றம் செய்த சமூகத்தை விட்டும் அதனை தடுக்க முடியாது.
(111) 12.111. தூதர்கள் மற்றும் முந்தைய சமூகங்களின் சம்பவங்களிலும் யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் சம்பவங்களிலும் நல்ல அறிவுடைய மக்களுக்கு உபதேசம் இருக்கின்றது. அதனை உள்ளடக்கிய குர்ஆன் அல்லாஹ்வின் மீது பொய்யாக புனைந்து கூறப்பட்ட வாக்கல்ல. ஆனால் அது தனக்கு முன்னர் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவசியமான ஒவ்வொரு சட்டத்தையும் வழிமுறையையும் விவரிக்கக் கூடியதாகவும் நன்மையான விஷயங்களின் பக்கம் வழிகாட்டக் கூடியதாகவும் நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதிலிருந்து பயனடைவார்கள்.