(1) 17.1. அல்லாஹ் தூய்மையானவன் மகத்தானவன். ஏனெனில் வேறு யாராலும் செய்வதற்கு ஆற்றலில்லாததை செய்வதற்கு அவன் ஆற்றலுள்ளவன். அவனே தன் அடியார் முஹம்மதை உடலோடும் ஆன்மாவோடும் விழித்த நிலையில் இரவின் ஒரு பகுதியில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பழங்களினாலும் பயிர்களினாலும் நபிமார்களின் இல்லங்களினாலும் நாம் அருள்செய்த பைத்துல் முகத்தஸை நோக்கி தன் வல்லமையை அறிவிக்கக்கூடிய சில சான்றுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான். நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். செவியேற்கப்படும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் பார்க்கக்கூடியவன். பார்க்கப்படக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(2) 17.2. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாக ஆக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “என்னைத் தவிர யாரையும் உங்கள் விவகாரங்களை ஒப்படைக்கும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக என்னையே சார்ந்திருங்கள்.”
(3) 17.3. நூஹுடன் வெள்ளத்திலிருந்து தப்புவதற்கு நாம் அருள்புரிந்தவர்களின் சந்ததியிலுள்ளவர்களே நீங்கள். எனவே இந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனை வழிப்பட்டு அவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த விஷயத்தில் நூஹைப் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றிசெலுத்தக்கூடியவராக இருந்தார்.
(4) 17.4. நிச்சயமாக அவர்கள் பூமியில் பாவங்கள் மற்றும் கர்வத்தினால் இருமுறை குழப்பம் விளைவிப்பார்கள்; மக்களின் மீது ஆதிக்கம்கொண்டு எல்லை கடந்து அநீதி, அட்டூழியம் செய்வார்கள் என்று நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தில் அறிவித்தோம்.
(5) 17.5. அவர்கள் மூலம் முதல் குழப்பம் நிகழ்ந்து விட்டால் நாம் பெரும் வலிமையான சில நம் அடியார்களை அவர்கள் மீது சாட்டிவிடுவோம். அவர்கள் இவர்களை கொன்று குவிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். நகரத்தின் மத்தியில் புகுந்து காண்பவற்றையெல்லாம் நாசம் செய்து அலைவார்கள். அவ்வாறு சந்தேகம் இல்லாமல் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
(6) 17.6. பின்னர் -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பிய போது உங்கள் மீது சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்கினோம். உங்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு பிள்ளைகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னரும் உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் வழங்கி உதவி செய்தோம். உங்களின் எதிரிகளைவிட உங்களைப் பெரும் எண்ணிக்கையினராக ஆக்கினோம்.
(7) 17.7. -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் நன்மையான செயல்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றினால் அவற்றால் ஏற்படும் பலன் உங்களுக்குத்தான். உங்களின் செயல்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். நீங்கள் தீய செயல்களைச் செய்தால் அவற்றால் ஏற்படும் விளைவு உங்களைத்தான் பாதிக்கும். உங்களின் நற்செயல்கள் அவனுக்குப் பயனளிப்பதுமில்லை; உங்களின் தீய செயல்கள் அவனைப் பாதிப்பதுமில்லை. இரண்டாவது குழப்பம் நிகழ்ந்தால் உங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பல்வேறு இழிவுகளை அவர்கள் உங்களை அனுபவிக்கச் செய்து அவமானத்தை உங்கள் முகங்களில் வெளிப்படையாகத் தெரியச் செய்யவும் அவர்கள் முதன் முதலில் பைத்துல் முகத்தஸில் நுழைந்தவாறு மீண்டும் நுழைந்து அதனை நாசம் செய்யவும் அவர்களால் தாம் வெற்றிகொண்ட இடங்களையெல்லாம் அடியோடு அழித்துவிடவும் உங்களின் எதிரிகளை உங்கள் மீது சாட்டிவிடுவோம்.
(8) 17.8. -இஸ்ராயீலின் மக்களே!- இவ்வளவு கடுமையான தண்டனைக்குப் பிறகும் நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பி உங்களின் செயல்களைச் சீர்படுத்திக் கொண்டால் அவன் உங்கள் மீது கருணை காட்டலாம். நீங்கள் மூன்றாவது முறையும் அல்லது அதற்குப் பிறகும் குழப்பத்தில் ஈடுபட்டால் நாம் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக (தங்கும் இடமாக) ஆக்கியுள்ளோம். அவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.
(9) 17.9. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆன் இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டுகிறது. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களுக்கு அவர்கள் சந்தோசப்படுமளவு அல்லாஹ்விடம் நிச்சயமாக மகத்தான கூலி உண்டு என்றும் கூறுகிறது.
(10) 17.10. நிச்சயமாக மறுமையில் நாம் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்ற அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும் செய்தியையும் மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களுக்கு அது கூறுகிறது.
(11) 17.11. மனிதன் நன்மையைத் தேடி பிரார்த்தனை செய்வதுபோல அறியாமையினால் கோபத்தில் தனக்கெதிராக, தன் பிள்ளைகளுக்கும் செல்வங்களுக்கும் எதிராக கெடுதியைக்கொண்டு பிரார்த்தனை செய்கிறான். நாம் அவனுடைய பிரார்த்தனைக்கு பதிலளித்தால் அவன் அழிந்து விடுவான்; அவனுடைய பிள்ளைகளும் செல்வங்களும் அழிந்து விடும். மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். நிச்சயமாக தனக்கு தீங்கு தரக்கூடியதற்கு அவசரப்படுகிறான்.
(12) 17.12. நாம் இரவையும் பகலையும், அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய இரு சான்றுகளாகப் படைத்துள்ளோம். ஏனெனில் அவற்றில் நீளமும் சுருக்கமும் வெப்பமும் குளிரும் மாறிமாறி வருகின்றன. மக்கள் ஓய்வெடுப்பதற்காகவும் உறங்குவதற்காகவும் இரவை இருட்டாகவும் அவர்கள் பார்ப்பதற்காக, தனது அருளினால் உங்களுக்காக நிர்ணயம் செய்த வாழ்வாதாரத்தை நீங்கள் தேடிப்பெற்றுக்கொள்வதற்காக பகலைப் பிரகாசமானதாகவும் அமைத்துள்ளோம். இன்னும் அந்த இரண்டும் மாறிமாறி வருவதைக்கொண்டு நீங்கள் வருடங்களின் எண்ணிக்கையையும் உங்களுக்கு தேவையான மாதங்கள், நாட்கள் மற்றும் நேரங்களை கணக்கிட்டு அறிந்துகொள்வதற்காகத்தான். விடயங்களைப் பிரிந்து விளங்கவும் அசத்தியவாதி யார் சத்தியவாதி யார் என்பது தெளிவாகவும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து விட்டோம்.
(13) 17.13. ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்களை கழுத்தில் மாலை ஒட்டியிருப்பது போன்று அவனுடனேயே சேர்த்து வைத்துள்ளோம். அவனிடம் விசாரணை செய்யப்படும் வரை அது அவனை விட்டு பிரியாது. நாம் மறுமை நாளில் அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட ஒரு புத்தகத்தை அவனிடம் காட்டுவோம். அவன் தனக்கு முன்னால் அது விரிக்கப்பட்டிருப்பதைக் காண்பான்.
(14) 17.14. நாம் அப்போது அவனுக்கு கூறுவோம்: -மனிதனே!- உன் புத்தகத்தைப் படித்துப் பார். உன் செயல்களைக் கணக்கிடும் பொறுப்பை நீயே ஏற்றுக்கொள். மறுமை நாளில் உன் செயல்களைக் கணக்கிடுவதற்கு நீயே போதுமானவன்.
(15) 17.15. நம்பிக்கை கொள்ள நேர்வழி பெற்றவரது நேர்வழிக்கான கூலி அவருக்கே கிடைக்கும். வழிதவறியவரின் வழிகேட்டின் தண்டனையை அவரே பெறுவார். ஒருவரின் பாவங்களை மற்றவர் சுமக்க முடியாது. நாம் தூதர்களை அனுப்பி ஒரு சமூகத்தின் மீது ஆதாரத்தை நிலைநாட்டாதவரை அந்த மக்களைத் தண்டிக்க மாட்டோம்.
(16) 17.16. நாம் ஒரு ஊரை அங்குள்ளவர்கள் செய்த அநியாயத்தினால் அழிக்க விரும்பினால் அருட்கொடைகள் யாரை கர்வத்தில் ஆழ்த்திவிட்டதோ அவர்களைக் கீழ்ப்படியுமாறு கட்டளையிடுவோம். அவர்கள் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் மாறாகச் செயற்படுவார்கள். அப்போது அவர்கள்மீது அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்ற வாக்கு உறுதியாகிவிடும். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்து விடுவோம்.
(17) 17.17. நூஹுக்குப் பின் நாம் அழித்த ஆத், ஸமூத் போன்ற எத்தனையோ பொய்பித்த சமூகங்கள் உள்ளன! -தூதரே!- தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்கும் பார்ப்பதற்கும் உம் இறைவன் போதுமானவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.
(18) 17.18. யார் மறுமையின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதனைப் பொருட்படுத்தாமல் நற்செயல்களின் மூலம் இவ்வுலகத்தை விரும்புகிறாரோ நாம் நாடிய இன்பங்களையே விரைவாக அவருக்கு வழங்கிடுவோம் அவர் விரும்பியதையல்ல. அதுவும் நாம் நாடியவர்களுக்கே வழங்குவோம். பின்னர் அவருக்காக நரகத்தை தயார்படுத்தியுள்ளோம். அவன் மறுமையை நிராகரித்து இவ்வுலகை தேர்ந்தெடுத்துக் கொண்டதைக் கண்டிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டு அதில் நுழைந்து, அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.
(19) 17.19. அல்லாஹ் நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிட்டவற்றை நம்பிக்கைகொண்டவராக நற்செயல்களின் மூலம் மறுமையின் நன்மையை யார் விரும்புவாரோ, அதற்காக முகஸ்துதியற்ற முயற்சி செய்வாரோ, அவ்வாறான பண்புகளைக்கொண்டு வர்ணிக்கப்பட்டவர்களின் முயற்சி அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றிற்கேற்ப அவர்களுக்கு அவன் கூலி வழங்குவான்.
(20) 17.20. -தூதரே!- நல்லவர், பாவி ஆகிய இந்த இரு பிரிவினருக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் துண்டிக்காமல் அதிகமாக வழங்குவோம். இவ்வுலகில் உம் இறைவனின் கொடை நல்லவர், பாவி என எவருக்கும் தடைசெய்யப்பட்டதாக இல்லை.
(21) 17.21. -தூதரே!- நாம் இவ்வுலகில் அவர்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்திலும் அந்தஸ்திலும் எவ்வாறு சிறப்பித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. உலக வாழ்வை விட மறுமை, இன்பங்களின் படித்தரங்களின் ஏற்றத்தாழ்விலும், சிறப்பிலும் சிறந்ததாகும். எனவே நம்பிக்கையாளன் அதற்காக ஆசை கொள்ளட்டும்.
(22) 17.22. -அடியானே!- அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுளை ஏற்படுத்தி விடாதே. அவ்வாறு செய்தால் நீ அல்லாஹ்விடத்திலும் அவனுடைய நல்லடியார்களிடத்திலும் இழிவடைந்து உன்னை புகழக்கூடியவர் யாரும் இல்லாது அவனது உதவியை இழந்து எவ்வித உதவியாளரும் அற்றவனாகி விடுவாய்.
(23) 17.23. அடியானே! உன் இறைவன் உனக்குப் பின்வரும் விஷயங்களைக் கட்டளையிட்டுள்ளான்: “நீங்கள் அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக அவர்கள் முதுமையை அடைந்த பின்னர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடத்தில் இருக்கும் நிலையில் முதுமையை அடைந்துவிட்டால் “சீ” என்று அவர்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளைக் கூறிவிடக் கூடாது; அவர்களை விரட்டவோ வார்த்தைகளால் கடிந்து கொள்ளவோ கூடாது; அவர்களிடம் மென்மைகலந்த கண்ணியமான வார்த்தைகளைக் கூறு.
(24) 17.24. அவர்களுடன் கருணையோடு பணிவாக நடந்துகொள். “என் இறைவா! அவர்கள் சிறுவயதில் என்னைப் பராமரித்ததற்காக அவர்கள் மீது கருணைகாட்டு” என்று பிரார்த்தனை செய்.
(25) 17.25. -மனிதர்களே!- வணக்கத்திலும் நற்காரியங்களிலும் பெற்றோர் நலன் பேணுவதிலும் உங்களின் உள்ளங்களிலுள்ள மனத்தூய்மையை உங்களின் இறைவன் நன்கறிந்தவன். இவற்றில் உங்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவன் தன் பக்கம் திரும்பி பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். தனது இறைவனுக்குக் கட்டுப்படுவதில், தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக யார் பாவமன்னிப்புத் தேடுவாறோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
(26) 17.26. -நம்பிக்கையாளனே!- உன் உறவினருக்கு செய்ய வேண்டிய சேர்ந்து வாழும் உரிமையை வழங்குவாயாக! தேவையுடைய ஏழைக்கும் பிரயாணத்தில் இடையில் சிக்கிக்கொண்டவனுக்கும் கொடுப்பாயாக. பாவமான காரியத்திலோ வீண்விரயமாகவோ உன் செல்வத்தை செலவழித்து விடாதே.
(27) 17.27. நிச்சயமாக தமது செல்வங்களை பாவமான காரியங்களிலோ, வீண்விரயமாகவோ செலவு செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர். வீண்விரயம் செய்யுமாறு அவனிடும் கட்டளையில் அவர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். பாவமான காரியத்தைத் தவிர வேறு எதையும் அவன் செய்ய மாட்டான். தன் இறைவன் வெறுக்கும் செயலைத் தவிர வேறு எதையும் அவன் ஏவமாட்டான்.
(28) 17.28. உன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நீ அல்லாஹ்வின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குக் கொடுக்காமல் நீ தவிர்ந்துகொண்டால் அவர்களிடம் இதமான வார்த்தையைக் கூறு. உதாரணமாக, அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்வது அல்லது அல்லாஹ் தனக்கு செல்வத்தை வழங்கினால் தருவேன் என்று வாக்களிப்பது.
(29) 17.29. செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து விடாதே. வீண்விரயமும் செய்துவிடாதே. ஏனெனில் செலவளிக்காவிட்டால் உனது கஞ்சத்தனத்தினால் மக்களின் பழிப்புக்கு ஆளாவாய். உனது வீண்விரயத்தினால் செலவளிப்பதற்கு எதுவும் அற்றவனாக ஆகிவிடுவாய்.
(30) 17.30. நிச்சயமாக உன் இறைவன் உயர்ந்த ஒரு நோக்கத்தின்படி தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான்; தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அவர்களிடம் இருந்து எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் நாடியவாறு அவர்களிடம் தன் கட்டளைகளைச் திருப்பி விடுகிறான்.
(31) 17.31. உங்கள் பிள்ளைகளுக்கு செலவளிப்பதனால் எதிர்காலத்தில் வறுமை ஏற்படுமோ என அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குவதற்கு நாமே பொறுப்பேற்றுள்ளோம். ஒரு பாவமும் செய்யாத, கொல்வதற்குரிய காரணம் எதுவும் இல்லாத அவர்களைக் கொல்வது பெரும் பாவமாக இருக்கின்றது.
(32) 17.32. விபச்சாரத்தை விட்டும் அதனைத் தூண்டும் காரணிகளை விட்டும் விலகியிருங்கள். நிச்சயமாக அது மிகவும்அருவருப்பான காரியமாகவும் குடும்ப வம்சத்தை சிதைத்து இறைவேதனையைப் பெற்றுத்தரும் தீய வழியாகவும் இருக்கின்றது.
(33) 17.33. நம்பிக்கை அல்லது அபயமளித்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பாதுகாத்த எந்த உயிரையும் கொன்றுவிடாதீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல், மணமான பிறகு விபச்சாரம் செய்தல், கொலைக் குற்றம் ஆகியவற்றினால் கொல்லப்படத் தகுதியானவர்களைத் தவிர. எவர் காரணமின்றி அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டாரோ அவருடைய வாரிசுகளுக்கு நாம் கொலையாளி மீது அதிகாரம் அளித்துள்ளோம். அவர்களுக்குப் பழிவாங்கும் உரிமையும், ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அல்லது எதனையும் பெறாமலும் மன்னிக்கும் உரிமையும் உண்டு. கொலையாளியைச் சித்திரவதை செய்தல் அல்லது அவர் கொல்லாத ஒரு ஆயுதத்தால் கொலை செய்வது அல்லது கொலை செய்யாதவனைக் கொல்லுதல் போன்றவற்றைச் செய்து அல்லாஹ் அனுமதித்த எல்லையை மீறிவிட வேண்டாம். நிச்சயமாக அவர் உதவிசெய்யப்படுவார்.
(34) 17.34. தந்தையை இழந்த குழந்தைகளின் சிந்தனையாற்றலும் பக்குவமும் முழுமையடையும் வரை அவர்களின் செல்வத்தை அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அதனை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வழிகளிலே அன்றி பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையும் உங்களுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையை முறிக்காமல், குறைவின்றி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி வழங்கியவரிடம் அதனை நிறைவேற்றினாயா அல்லது நிறைவேற்றவில்லையா ? என மறுமை நாளில் விசாரிப்பான். அவற்றை நிறைவேற்றியவர்களுக்கு அவன் நற்கூலி வழங்குவான். அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனை வழங்குவான்.
(35) 17.35. நீங்கள் மற்றவர்களுக்கு அளந்துகொடுத்தால் முழுமையாக அளந்துகொடுங்கள். அதனைக் குறைத்துவிடாதீர்கள். எதையும் குறைத்துவிடாத சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள். அளவையையும், நிறுவையையும் பரிபூரணமாக நிறைவேற்றுவது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை தரக்கூடியதுடன் அளவை நிறுவையில் குறை செய்து, மோசடி செய்வதை விட சிறந்த விளைவைத் தருவதுமாகும்.
(36) 17.36. -ஆதமின் மகனே!- உனக்கு அறிவில்லாத விஷயங்களைப் பின்பற்றாதே; யூகங்களையும் அனுமானங்களையும் பின்பற்றாதே. நிச்சயமாக மனிதனின் செவிப்புலன், பார்வை, உள்ளம் என ஒவ்வொரு உறுப்பையும் நன்மையிலா தீமையிலா பயன்படுத்தினான் என்று மனிதன் விசாரிக்கப்படுவான். அவன் அவற்றை நன்மையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காக அவன் கூலி வழங்கப்படுவான். தீமையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காகத் தண்டிக்கப்படுவான்.
(37) 17.37. பூமியில் ஆணவம்கொண்டு நடக்காதே. நிச்சயமாக நீ ஆணவம்கொண்டு நடந்தால் நீ நினைத்தவாறு பூமியைப் பிளந்துவிடவும் முடியாது, நீளத்திலும் உயரத்திலும் மலைகளிள் அளவுக்கு உன்னால் உயர்ந்து விடவும் முடியாது. பின் எதற்கு ஆணவம் கொள்கிறாய்?
(38) 17.38. -மனிதனே!- மேற்குறிப்பிட்ட அனைத்திலுமுள்ள தீயவை உம் இறைவனிடம் தடுக்கப்பட்டவைகளாகும். அவற்றில் ஈடுபடுவோரை அவன் நேசிப்பதில்லை. மாறாக அவன் அவர்களை வெறுக்கிறான்.
(39) 17.39. நாம் தெளிவுபடுத்திய மேற்கூறிய கட்டளைகளும், விலக்கல்களும், சட்டங்களும் உன் இறைவன் வஹியாக உமக்கு அறிவித்த ஞானத்தில் உள்ளதாகும். -மனிதனே!- அல்லாஹ்வுடன் வேறு ஒரு இறைவனை ஏற்படுத்திவிடாதே. அவ்வாறு செய்தால் மக்களாலும் உன் மனதாலும் பழிக்கப்பட்டவானாக, எல்லாவகையான நன்மைகளை விட்டும் தூரமாக்கப்பட்டவானாக மறுமை நாளில் நரகத்தில் எறியப்பட்டு விடுவாய்.
(40) 17.40. வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று அழைப்பவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை அளித்துவிட்டு வானவர்களை தனக்கு பெண்மக்களாக ஏற்படுத்திக் கொண்டானா? நீங்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறியது மாத்திரமின்றி நிராகரிப்பில் அதிகரித்துச் சென்று அவனுக்கு பெண்பிள்ளைகளே உண்டு என வாதிட்டு அவன் மீது மிகவும் மோசமான அவதூறைக் கூறியுள்ளீர்கள்.
(41) 17.41. மக்கள் படிப்பினை பெற்று, தங்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களில் ஈடுபட்டு தீங்கிழைக்கும் விஷயங்களை விட்டுவிடுவதற்காக நாம் இந்தக் குர்ஆனிலே சட்டங்களையும் அறிவுரைகளையும் உதாரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்நிலையிலும் இயல்பு சிதைந்துவிட்ட அவர்களில் சிலர் அதன் மூலம் சத்தியத்தை விட்டு இன்னுமின்னும் தூரமாகியும், வெறுப்புற்றும் செல்கின்றனர்.
(42) 17.42. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் இட்டுக்கட்டிக் பொய் கூறுவதுபோல அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களும் இருந்திருந்தால் அவனது ஆட்சியில் அவனை மிகைத்து, சண்டைபிடிக்க அவை அர்ஷ் உடைய அல்லாஹ்வை நோக்கிச் செல்லக்கூடிய வழியை தேடியிருக்கும்.
(43) 17.43. இணைவைப்பாளர்களின் வர்ணனைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவர்கள் கூறுவதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
(44) 17.44. வானங்களும் பூமியும் அவையிரண்டிலுமுள்ள படைப்புகளும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவற்றிலுள்ள அனைத்தும் அவனது தூய்மையைப் பறைசாற்றுவதுடன் அவனைப் புகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் அவை எவ்வாறு அவனது தூய்மையைப் பறைசாற்றுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். உங்களின் மொழியில் அவனைப் புகழ்பவர்களைத்தான் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான். உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
(45) 17.45. -தூதரே!- நீர் குர்ஆனைப் படித்து, அதிலுள்ள எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் செவியுற்றால், உமக்கும் மறுமை நாளை நம்பாதவர்களுக்குமிடையே அல்குர்ஆனைப் புரிந்துகொள்ளத் தடையாக நாம் ஒரு திரையை ஏற்படுத்திவிடுகின்றோம். இது அவர்களது புறக்கணிப்புக்கான தண்டனையாகும்.
(46) 17.46. குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் நாம் திரைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளிலும் ஒரு அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் அதிலிருந்து பயனடையும் வகையில் செவியுற முடியாது. நீர் குர்ஆனில் அவர்களால் தெய்வமாகக் கருதப்படுபவற்றை குறிப்பிடாமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே குறிப்பிட்டால் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஏகத்துவத்தை வழங்க மறுத்து ஒதுங்கித் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.
(47) 17.47. அவர்களது தலைவர்கள் எவ்வாறு குர்ஆனை காதுகொடுத்துக் கேட்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இதன் மூலம் நேர்வழியில் செல்வதை விரும்பவில்லை. மாறாக அவர்கள் நீர் குர்ஆன் ஓதும் போது பரிகாசத்திலும் வீணானவற்றிலும் ஈடுபடவே முனைகின்றனர். -“மக்களே!- நீங்கள் சூனியம் செய்யப்பட்ட, அறிவு குழம்பிய ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்று நிராகரிப்பினால் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டவர்கள் கூறி ஒருவருக்கொருவர் இரகசியமாக பேசி அல்குர்ஆனைப் பொய்ப்பிப்பதிலும் அதனை விட்டும் தடுப்பதிலும் ஈடுபடுவதை நாம் நன்கறிந்துள்ளோம்.
(48) 17.48. -தூதரே!- அவர்கள் உம்மை எவ்வாறெல்லாம் பல்வேறுபட்ட இழிவான பண்புகளால் சித்தரிக்கிறார்கள்? என்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு, சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்கள் சத்தியத்திலிருந்து விலகி தடுமாறிவிட்டனர். எனவே நேரான வழியை அவர்கள் பெறவில்லை.
(49) 17.49. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்தவாறு இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து எலும்புகளாக, எமது உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? நிச்சயமாக இது சாத்தியமற்றது.
(50) 17.50. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்களால் இயன்றால் கடினமான கல்லாக அல்லது பலமான இரும்பாக ஆகிவிடுங்கள். உங்களால் ஒருபோதும் அவ்வாறு ஆகமுடியாது.
(51) 17.51. அல்லது அவையிரண்டையும்விட நீங்கள் உங்கள் உள்ளங்களில் பெரிதாகக் கருதும் வேறொரு படைப்பாக ஆகிவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே, நீங்கள் இருந்தவாறே மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான். பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “நாம் இறந்த பின் எங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களை முன்மாதிரியின்றி முதன் முறையாகப் படைத்தானே அவன்தான் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். உன்னுடைய பதிலில் இருந்து அவர்கள் தூரமானவர்களாக பரிகாசமாக தம் தலையை அசைத்தவாறு கூறுவார்கள்: “எப்போது இந்த மீண்டும் எழுப்பும் நிகழ்வு நடைபெறும் என்று.” நீர் அவர்களுக்கு கூறுவீராக: “அது அண்மையில் இருக்கலாம் என்று.” ஏனெனில் வர இருப்பவை அனைத்தும் அண்மையிலே உள்ளன.
(52) 17.52. மஹ்ஷர் பெருவெளியில் அவன் உங்களை அழைக்கும் நாளில் அவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். நீங்கள் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்தவாறே அவனுக்குப் பதிலளிப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் பூமியில் குறைந்த காலமே தங்கியிருந்ததாக உங்களுக்குத் தோன்றும்.
(53) 17.53. -தூதரே!- என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “அவர்கள் உரையாடும் போது நல்ல வார்த்தையையே பேசட்டும். வெறுப்பூட்டும் தீய வார்த்தையை விட்டும் தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் அதனைப் பயன்படுத்தி அவர்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையை நாசப்படுத்தி விடுவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாக இருக்கின்றான். எனவே அவன் விஷயத்தில் மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
(54) 17.54. -மனிதர்களே!- உங்களின் இறைவன் உங்களைக்குறித்து நன்கறிந்தவன். உங்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் நாடினால் உங்கள் மீது அருள் புரிந்து நம்பிக்கையின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் உங்களுக்கு வழிகாட்டுவான். அவன் நாடினால் உங்களைக் கைவிட்டு, நிராகரித்த நிலையிலேயே உங்களை மரணிக்கச் செய்து உங்களை தண்டிப்பான். -தூதரே!- அவர்களை நம்பிக்கைகொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடியவராக, நிராகரிப்பை விட்டும் தடுக்கக்கூடியவராக, அவர்களின் செயல்களைக் கணக்கிடக்கூடியவராக நாம் உம்மை அனுப்பவில்லை. நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்குமாறு இட்ட கட்டளைகளை எடுத்துரைக்கக்கூடியவர் மட்டுமே ஆவீர்.
(55) 17.55. -தூதரே!- வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரையும் அவர்களின் நிலைகளையும் அவர்களுக்குத் தகுந்தவைகளையும் அவன் நன்கறிந்தவன். அதிகமாக பின்பற்றுபவர்களை ஏற்படுத்துவதன் மூலமும் வேதங்களை இறக்குவதன் மூலமும் நாம் தூதர்களில் சிலரை சிலரைவிட சிறப்பித்துள்ளோம். நாம் தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.
(56) 17.56. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்கள் மீது தீங்கு இறங்கினால் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் கடவுள்களாக எண்ணுகின்ற தெய்வங்களை அழையுங்கள். அவை தமது இயலாமையினால் உங்களை விட்டும் தீங்கை அகற்றவோ அதனை மற்றவர்களுக்கு இடம்பெயரச் செய்யவோ சக்திபெற மாட்டா. இயலாதவர்கள் இறைவனாக இருக்க முடியாது.
(57) 17.57. இவர்கள் அழைக்கும் வானவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களும் கூட தம்மை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயல்களைத் தேடுகிறார்கள். அவனுக்குக் கட்டுப்படுவதில் யார் நெருக்கமானவர் என ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். அவனது அருளை எதிர்பார்த்து அவனுடைய தண்டனையைக் குறித்து அஞ்சுகிறார்கள். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை எச்சரிக்கையாக இருக்கவேண்டியவற்றில் உள்ளதாகும்.
(58) 17.58. நிராகரிப்பில் ஈடுபடும் மக்களைக்கொண்ட எந்த ஒரு ஊராக நகராக இருந்தாலும் நிராகரிப்பின் காரணமாக அவ்வூருக்கு இவ்வுலகில் தண்டனையை இறக்கியே தீருவோம் அல்லது கொலை அல்லது வேறு விதமான கடுமையான தண்டனையினால் சோதிப்போம். இவ்வாறு அவர்களை தண்டித்து அவர்களை அழிப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் எழுதப்பட்டுள்ள இறை நியதியாகும்.
(59) 17.59. தூதரை உண்மைப்படுத்த இணைவைப்பாளர்கள் கோரும் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் போன்ற பௌதீக சான்றுகளை நாம் இறக்காமல் இருப்பது, நாம் முந்தைய சமூகங்களின் மீது அவற்றை இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரித்து விட்டார்கள் என்பதானால்தான். நாம் ஸமூத் சமூகத்திற்கு பெண் ஒட்டகம் என்னும் மிகப் பெரும், தெளிவான சான்றை இறக்கினோம். அவர்கள் அதனை நிராகரித்தார்கள். நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்தோம். நாம் தூதர்களுக்கு சான்றுகளைக் கொடுத்து அனுப்புவது அவர்களது சமூகத்தை அச்சுறுத்துவதற்கே. அவர்கள் அதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாமல்லவா.
(60) 17.60. -தூதரே!- நாம் உம்மிடம் கூறியதை நினைவு கூர்வீராக: “உம் இறைவன் தன் வல்லமையால் மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளான். அவர்கள் அவனுடைய பிடியில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான். எனவே உமக்குக் கட்டளையிடப்பட்டதை எடுத்துரைத்து விடுவீராக. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது நிராகரிக்கிறார்களா? என்பதைச் சோதிப்பதற்கே இராப்பயணத்தில் நீர் கண்டவற்றை உமக்குக் காட்டினோம். நிச்சயமாக நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் என்று நாம் குர்ஆனில் கூறிய ஸக்கூம் என்னும் மரத்தையும் அவர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். அவர்கள் இந்த இரண்டு அத்தாட்சிகளையும் நம்பவில்லையெனில் மற்றவற்றை நம்ப மாட்டார்கள். நாம் சான்றுகளை இறக்கி அவர்களை அச்சமூட்டுகின்றோம். ஆனால் அத்தாட்சிகளை இறக்கி அச்சுறுத்தினாலும் அவர்கள் மென்மேலும் நிராகரிப்பிலும் வழிகேட்டில் பிடிவாதமாகவுமே உள்ளனர்.
(61) 17.61. -தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக (வணங்கும் விதமாக அல்லாமல்) அவருக்கு சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் கர்வத்தினால் சிரம்பணிய மறுத்துவிட்டான். “நீ மண்ணால் படைத்த மனிதனுக்கு நான் சிரம்பணிவதா? என்னை நீ நெருப்பால் படைத்துள்ளாய். நான் அவனைவிட சிறந்தவன்” என்று கூறினான்.
(62) 17.62. இப்லீஸ் தன் இறைவனிடம் கூறினான்: “நீ எனக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டு கௌரவித்த இந்தப் படைப்பை நீ பார்த்தாயா? இந்த உலக வாழ்வின் இறுதிவரை உயிருடன் என்னை வாழவைத்தால், அவரது சந்ததியினரை கவர்ந்திழுத்து நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்வேன். அவர்களில் நீ பாதுகாத்த சிலரைத் தவிர. அவர்களே உனது தூய்மையான அடியார்கள்.”
(63) 17.63. அவனது இறைவன் அவனிடம் கூறினான்: “நீயும் அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களும் சென்றுவிடவும். நரகமே உனக்கும் அவர்களுக்குமுரிய கூலியாகும். அது உங்களது செயல்களுக்குரிய பரிபூரணமான கூலியாகும்.
(64) 17.64. பாவத்துக்கு அழைக்கும் உன் குரலால் அவர்களில் உன்னால் ஏமாற்ற முடிந்தவர்களை ஏமாற்றிக்கொள். உனக்குக் கட்டுப்படுமாறு அழைப்பு விடுக்கும் உன் குதிரைப்படைகளையும் காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவி உன்பக்கம் அவர்களை ஈர்த்துக்கொள். மார்க்கத்திற்கு முரணான கொடுக்கல் வாங்கல்களை அவர்களுக்கு அலங்கரித்து அவர்களுடைய செல்வங்களில் கூட்டுச்சேர்ந்து கொள். தம்முடைய பிள்ளையல்லாதவர்களைப் பொய்யாக தமது பிள்ளையெ வாதிட வைத்தும், விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெறச் செய்வதன் மூலமும் அல்லாஹ் அல்லாதவருக்கு அவர்களை அடிமைப்படுத்தி பெயர் வைப்பதன் மூலமும் அவர்களின் பிள்ளைகளிலும் பங்கெடுத்துக் கொள். பொய்யான வாக்குறுதிகளையும் தவறான ஆசைகளையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டு. ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதி அவர்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளே அன்றி வேறில்லை.
(65) 17.65. -இப்லீஸே!- என் மீது நம்பிக்கைகொண்டு எனக்குக் கட்டுப்பட்ட, அமல் செய்த அடியார்கள் மீது உன் ஆதிக்கம் செல்லுபடியாகாது.” ஏனெனில் அல்லாஹ் அவர்களை விட்டும் உனது தீங்கை தடுத்து விடுகிறான். தம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
(66) 17.66. -மனிதர்களே!- நீங்கள் வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் மற்றும் இன்னபிற விஷயங்களின் மூலம் இறைவனின் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அவனே கடலில் உங்களுக்காக கப்பல்களைச் ஓடச்செய்கிறான். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகுந்த கருணையாளனாக இருப்பதனால்தான் இந்த சாதனங்களையெல்லாம் உங்களுக்கு இலகுபடுத்தித் தந்துள்ளான்.
(67) 17.67. -இணைவைப்பாளர்களே!- கடலில் உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு, அதனால் அழிந்து விடுவீர்கள் என்று நீங்கள் அஞ்சும் போது அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எல்லாம் உங்களின் சிந்தனையை விட்டு அகன்று விடுகின்றன. நீங்கள் அப்போது அல்லாஹ்விடம் மட்டுமே நினைத்து அவனிடம் உதவி கோருகிறீர்கள். அவன் உங்களுக்கு உதவி செய்து, நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கரைசேர்த்து விட்டால் நீங்கள் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை மாத்திரமே அழைத்துப் பிரார்த்திப்பதையும் புறக்கணித்து, உங்களின் சிலைகளின்பால் திரும்பி விடுகிறீர்கள். மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மிகவும் அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
(68) 17.68. -இணைவைப்பாளர்களே!- அவன் உங்களைக் காப்பாற்றி கரைசேர்த்த போது எங்களை அதில் புதையச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? அல்லது லூத்துடைய சமூகத்தனரின் மீது கல்மழையைப் பொழியச் செய்தது போன்று உங்கள் மீதும் கல்மழையைப் பொழியச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களைப் பாதுகாக்கக் கூடிய பாதுகாவலரையோ அழிவிலிருந்து உங்களை தடுத்து உதவி செய்யக் கூடியவரையோ நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
(69) 17.69. அல்லது முதலில் உங்களைப் பாதுகாத்த அல்லாஹ்வின் அருளை நீங்கள் நிராகரித்து நடந்துகொண்டதனால் உங்களை அவன் மீண்டும் கடலுக்கு திரும்பச்செய்து கடும் காற்றை அனுப்பி உங்களை மூழ்கடித்துவிடலாம் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நாம் உங்களுக்குச் செய்ததைக் குறித்து நம்மிடம் உங்களுக்குச் சார்பாக கேள்விகேட்பவர் எவரையும் நீங்கள் பெறமாட்டீர்கள்.
(70) 17.70. நாம் ஆதமின் மக்களை பகுத்தறிவின் மூலமும், வானவர்களை அவர்களின் தந்தைக்கு சிரம்பணிய வைத்தது போன்ற ஏனையவற்றைக்கொண்டும் சிறப்பித்துள்ளோம். தரைமார்க்கமாக அவர்களை ஏந்திச் செல்லும் விலங்குகளையும், வாகனங்களையும் கடலில் அவர்களைச் சுமந்து செல்லும் கப்பல்களையும் அவர்களுக்காக நாம் வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். தூய்மையான உணவு, பானம், திருமணஉறவு போன்றனவற்றை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களுடைய படைப்பினங்களில் அதிகமானவற்றை விடவும் நாம் அவர்களை அதிகமாகச் சிறப்பித்துள்ளோம். எனவே அவர்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளுக்கு அவர்கள் நன்றிசெலுத்த வேண்டும்.
(71) 17.71. -தூதரே!- நாம் ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்கள் உலகில் பின்பற்றிய அதனது தலைவருடன் அழைக்கும் நாளை நினைவுகூர்வீராக. யாருடைய செயல்பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தங்களின் செயல்பதிவேடுகளை மகிழ்ச்சியாகப் படிப்பார்கள். அவர்கள் செய்த நன்மைகளில் எதையும் அவர்கள் குறைவாகப் பெற மாட்டார்கள். அது பேரீச்சம் பழத்தின் கொட்டையின் மீதுள்ள தோலின் அளவு சிறிதாக இருந்தாலும் சரியே.
(72) 17.72. இந்த உலகத்தில் சத்தியத்தை ஏற்காமல், அதற்குக் கட்டுப்படாமல் குருட்டு இதயத்தோடு வாழ்ந்தவர் மறுமை நாளில் அதைவிடக் கடும் குருடராக இருப்பார். அவரால் சுவனத்தின் வழியைப் பெறமுடியாது. நேர்வழியை விட்டும் அவர் மிகவும் வழிகெட்டவராக இருப்பார். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
(73) 17.73. -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களின் மனஇச்சைக்கேற்ப நம்மீது வேறொன்றை புனைந்து கூற வேண்டும் என்பதற்காக நாம் உமக்கு வஹியாக அறிவித்த குர்ஆனைவிட்டும் உம்மை திசைதிருப்ப முயன்றார்கள். அவர்கள் விரும்பியதை நீர் செய்திருந்தால் உம்மை பிரியத்திற்குரியவராக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
(74) 17.74. நாம் உம்மை சத்தியத்தில் உறுதிப்படுத்தி உம்மீது அருள் செய்திருக்காவிட்டால், அவர்களின் பலமான தந்திரத்தினாலும் அவர்கள் நம்பிக்கை கொள்வதில் உமக்கிருந்த அதீத ஆர்வத்தினாலும் அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனைகளில் நீர் அவர்களை சரிகண்டு அவர்களின்பால் சிறிதளவேனும் சாய்ந்திருப்பீர். ஆயினும் நாம் உம்மை அவர்களின் பக்கம் ஈர்க்கப்படுவதிலிருந்து காப்பாற்றினோம்.
(75) 17.75. அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனையின்படி நீர் அவர்களின்பால் சாய்ந்திருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இருமடங்கு வேதனையால் நாம் உம்மைத் தண்டித்திருப்போம். பின்னர் எங்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்யக்கூடிய உதவியாளரையோ வேதனையிலிருந்து உம்மைக் காப்பாற்றக்கூடியவரையோ நீர் பெற்றுக்கொள்ள மாட்டீர்.
(76) 17.76. நிராகரிப்பாளர்கள் உம்மை மக்காவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக தங்களின் பகைமையால் உம்மைத் துன்புறுத்த முயன்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் நீர் புலம்பெயரும் வரை உம்மை அவர்கள் வெளியேற்றாமல் அவர்களை அவன் தடுத்தான். அவர்கள் உம்மை வெளியேற்றியிருந்தால் உமக்குப் பின்னர் சிறிது காலமே அன்றி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.
(77) 17.77. உமக்குப் பின்னர் அவர்கள் சிறிது காலமே தங்கியிருப்பார்கள் என்ற தீர்ப்பு உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள் விஷயத்திலும் நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அது, ஒரு சமூகம் தம் தூதரை வெளியேற்றினால் அவர்களிடையே அல்லாஹ் வேதனையை இறக்குவான் என்பதாகும். -தூதரே!- நம்முடைய வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். மாறாக அதனை நிலையானதாகக் காண்பீர்.
(78) 17.78. சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்ததிலிருந்து ளுஹ்ர், அஸ்ர் இரவின் இருள் வரை இதில் மஃரிப், இஷா தொழுகையை பரிபூரணமான முறையில் அதற்குரிய நேரங்களில் நிலைநாட்டுவீராக. ஃபஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகையையும் நிறைவேற்றுவீராக. அதில் (குர்ஆன்) ஓதுவதை அதிகப்படுத்துவீராக. ஃபஜ்ர் தொழுகையில் இரவின் வானவர்களும் பகலின் வானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
(79) 17.79. -தூதரே!- மறுமை நாளின் மக்களுக்கு ஏற்படும் அமளிதுமளிகளிலிருந்து விடுதலைக்காக அவர்களுக்கு பரிந்துரை செய்பவராக உம்மை உமது இறைவன் எழுப்புவதை எதிர்ப்பார்த்தவராக இரவின் ஒரு பகுதியில் எழுந்து தொழுவீராக. அதனால் உமது அந்தஸ்துகள் அதிகம் உயரும். முன்னோர்களும் பின்னோர்களும் புகழக்கூடிய மகத்தான பரிந்துரை செய்யும் பெரும் பாக்கியம் உமக்குக் கிடைக்கும்.
(80) 17.80. -தூதரே!- நீர் கூறுவீராக: இறைவா “நான் நுழையுமிடம், வெளியேறுமிடம் அனைத்தையும் உனக்கு வழிபடுவதிலும், உன் திருப்பொருத்தத்திலும் ஆக்கிவிடுவாயாக. என் எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்யும் தெளிவான ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு வழங்குவாயாக.
(81) 17.81. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இஸ்லாம் வந்துவிட்டது. தான் உதவுவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறி விட்டது. நிராகரிப்பும் இணைவைப்பும் அழிந்து விட்டன. நிச்சயம் அசத்தியம் சத்தியத்திற்கு முன்னால் நிற்க முடியாமல் அழிந்துவிடக் கூடியதே.”
(82) 17.82. அறியாமை, நிராகரிப்பு, சந்தேகம் ஆகியவற்றிலிருந்து உள்ளங்களுக்கு நிவாரணியை நாம் குர்ஆனில் இறக்குகின்றோம். அதனைக் கொண்டு ஒதிப்பார்த்தால் உடல் ரீதியான நோய்களுக்கும் அதில் நிவாரணி உண்டு. அது நம்பிக்கைகொண்டு, அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு அதில் அருளும் உண்டு. இந்தக் குர்ஆன் நிராகரிப்பாளர்களுக்கு அழிவைத்தான் அதிகப்படுத்தும். ஏனெனில் நிச்சயமாக அதனைச் செவியுறுவதே அவர்களுக்குக் கோபமூட்டுகிறது. அது அவர்கள் பொய்பிப்பதையும் புறக்கணிப்பதையும் அதிகப்படுத்துகிறது.
(83) 17.83. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடை வழங்கினால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தாமல், அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறான். கர்வத்தினால் தூரவிலகிச் செல்கிறான். அவனுக்கு நோயோ, வறுமையோ அல்லது வேறு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரேயடியாக நம்பிக்கையிழந்து விடுகிறான்.
(84) 17.84. -தூதரே!- நீர் கூறுவீராக: “ஒவ்வொருவரும் நேர்வழி மற்றும் வழிகேட்டில் தம் நிலையை ஒத்த வழிமுறைப்படியே செயல்படுகிறார்கள். சத்தியத்தின்பால் நேரான வழியை அடைந்தவர்கள் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான்.
(85) 17.85. -தூதரே!- வேதக்காரர்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் ஆன்மாவின் உண்மை நிலையைக்குறித்து உம்மிடம் வினவுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “ஆன்மாவின் உண்மை நிலை குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடுகையில் உங்களுக்கும் படைப்புகள் அனைத்திற்கும் சிறிதளவேதான் அறிவு வழங்கப்பட்டுள்ளது.
(86) 17.86. -தூதரே!- நாம் உமக்கு இறக்கிய வஹியை உள்ளங்களிலிருந்தும் ஏடுகளிலிருந்தும் அழித்து நாம் நீக்க விரும்பினால் அதனை நீக்கிவிடுவோம். பின்னர் உமக்கு உதவிசெய்யக்கூடிய, அதனைத் திரும்பப் பெற்றுத் தரும் யாரையும் நீர் பெற்றுக்கொள்ளமாட்டீர்.
(87) 17.87. ஆயினும் உம் இறைவனின் அருளால் நாம் அதனை நீக்கவில்லை. நாம் அதனைப் பாதுகாப்பாக விட்டுவிட்டோம். நிச்சயமாக உம் இறைவன் உம்மை இறுதித் தூதராக ஆக்கி, உம்மீது குர்ஆனை இறக்கி பேரருள் புரிந்துள்ளான்.
(88) 17.88. -தூதரே!- நீர் கூறுவீராக: “உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைப் போன்று அதன் இலக்கிய நயத்தில், அழகிய அமைப்பில், தரத்தில் ஒன்றைக் கொண்டுவருவதற்கு மனிதர்கள், ஜின்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்தாலும் அவர்களால் ஒருபோதும் கொண்டுவர முடியாது.
(89) 17.89. அவர்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக ஏவல்களையும், விலக்கல்களையும், சம்பவங்களையும், படிப்பினைக்குரிய அறிவுரைகளையும் விதம்விதமாக நாம் மக்களுக்கு இந்த குர்ஆனில் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்தக் குர்ஆனை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள்.
(90) 17.90. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காக மக்காவின் பூமியிலிருந்து வற்றாத ஓடும் நீருற்றை வெளிப்படுத்தும்வரை நாங்கள் உம்மை நம்ப மாட்டோம்.
(91) 17.91. அல்லது பேரீத்தம்பழம், திராட்சை தோட்டம் உமக்கு இருக்க வேண்டும். அவற்றில் ஆறுகள் நன்றாக ஓட வேண்டும்.
(92) 17.92. -அல்லது நீர் கூறுவதுபோல- வானத்தை வேதனையின் ஒரு பகுதியாக எங்கள்மீது விழச் செய்ய வேண்டும். அல்லது நீர் கூறுவது உண்மையே என உமக்காக சாட்சி கூற அல்லாஹ்வையும் வானவர்களையும் எங்கள் கண்முன்னால் கொண்டுவர வேண்டும்.
(93) 17.93. அல்லது உமக்கு தங்கத்தால் அல்லது அது போன்ற வேறொன்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது நீர் வானத்தில் ஏற வேண்டும். நீர் வானத்தில் ஏறினால் மட்டும் போதாது. அங்கு சென்று அல்லாஹ்விடமிருந்து ஒரு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அதில் நீர் அவனுடைய தூதர் என்று எழுதப்பட்டிருப்பதை நாங்கள் படிக்க வேண்டும். அதுவரை நிச்சயமாக உம்மை ஒருபோதும் தூதர் என நம்ப மாட்டோம். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் பரிசுத்தமானவன். மற்ற தூதர்களைப்போல நானும் ஒரு மனித தூதரே. எதையும் கொண்டுவர நான் சக்திபெற மாட்டேன். பிறகு எப்படி நீங்கள் கூறியதையெல்லாம் என்னால் கொண்டுவர முடியும்?
(94) 17.94. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு தூதர் கொண்டுவந்ததன்படி செயல்படுவதைவிட்டும் நிராகரிப்பாளர்களைத் தடுப்பது தூதர் மனித இனத்திலிருந்து வந்துள்ளார் என்பதே. “அல்லாஹ் ஒரு மனிதரையா எங்களுக்குத் தூதராக அனுப்பினான்?” என்று அவர்கள் மறுத்தவாறு கூறினார்கள்.
(95) 17.95. -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்புக் கூறுவீராக: “பூமியில் வானவர்கள் வாழ்ந்து உங்களைப்போன்று நிம்மதியாக அதில் நடந்து செல்பவர்களாக இருந்தால் நாம் அவர்களின்பால் வானவர்களைத் தூதர்களாக அனுப்பியிருப்போம். நிச்சயமாக அப்போதுதான் அவரால் தன் தூதை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் அவர்களின்பால் மனித இனத்தைச் சார்ந்த ஒருவரை தூதராக அனுப்புவது அறிவுபூர்வமானதல்ல. அதுபோன்றுதான் உங்களின் நிலைமையும்.
(96) 17.96. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கும் உங்களுக்கு எத்திவைக்குமாறு கூறப்பட்ட தூதை நான் எடுத்துரைத்துவிட்டேன் என்பற்கு, எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை சூழ்ந்தவனாக இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் அனைத்தையும் அவன் பார்க்கக்கூடியவன்.
(97) 17.97. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவர். -தூதரே!- யாரை அல்லாஹ் கைவிட்டு, வழிகெடுத்துவிடுவானோ அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டும், அவர்களை விட்டும் தீங்கினை அகற்றும், அவர்களுக்கு நன்மையளிக்கும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். நாம் மறுமை நாளில் அவர்களை ஒன்றுதிரட்டுவோம். அவர்கள் முகங்குப்புற இழுத்து வரப்படுவார்கள். அவர்களால் பார்க்கவோ பேசவோ கேட்கவோ முடியாது. அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதன் நெருப்பு தணியும் போதெல்லாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வோம்.
(98) 17.98. அவர்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, நம்முடைய தூதர் மீது இறக்கப்பட்ட வசனங்களை நிராகரித்ததனாலும் “நாம் இறந்து எலும்புகளாக, மண்ணோடு மண்ணாக துண்டு துண்டாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக உயிர்கொடுத்து எழுப்பப்டுவோமோ?” என்று கூறியதனாலும் நாம் அவர்களுக்கு வழங்கும் தண்டனையாகும்.
(99) 17.99. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள், பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் இவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அறியவில்லையா? மிகப் பெரும் படைப்புகளைப் படைக்க சக்திபெற்றவன் அவற்றைவிட சிறிய படைப்புகளைப் படைப்பதற்கு சக்தியுள்ளவனே. அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தியுள்ளான். அந்த தவணை வந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்துவிடும். அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஒரு தவணையை ஏற்படுத்தியுள்ளான். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. மீண்டும் எழுப்பப்படுவதற்குரிய தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இணைவைப்பாளர்கள் மறுக்கிறார்கள்.
(100) 17.100. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீங்கள் என்றும் முடிவடையாத என் இறைவனின் அருட்களஞ்சியங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தால் அது காலியாகிவிடும் என்ற பயத்தால் நீங்கள் ஏழைகளாகிவிடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வீர்கள். நிச்சயமாக மனிதன் கஞ்சத்தனம் செய்பவனாகவே இருக்கின்றான். நம்பிக்கையாளனைத் தவிர. ஏனெனில் அவன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து செலவு செய்கின்றான்.
(101) 17.101. நாம் மூஸாவுக்கு அவருக்காக சாட்சி கூறக்கூடிய ஒன்பது தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவை: கைத்தடி, கை, பஞ்சம், விளைச்சல்களில் குறைபாடு, வெள்ளம், வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் (என்பவையாகும்). -தூதரே!- யூதர்களிடம், அவர்களின் முன்னோர்களிடம் மூஸா கொண்டுவந்த அச்சான்றுகளைக் குறித்து கேட்பீராக. ஃபிர்அவ்ன் அவரிடம் கூறினான்: “-மூசாவே!- நீர் அபூர்வமான விஷயங்களைக் கொண்டு வருவதனால் நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று எண்ணுகிறேன்.”
(102) 17.102. மூஸா அவனிடம் பதிலளித்தவராக கூறினார்: “-ஃபிர்அவ்னே!- இந்த சான்றுகளை எல்லாம் வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே தன் வல்லமையையும் தன் தூதரின் நம்பகத்தன்மையையும் அறிவிப்பதற்காக இறக்கியுள்ளான் என்பதை நீ உறுதியாக அறிவாய். ஆயினும் நீ மறுக்கிறாய். -ஃபிர்அவ்னே!- நிச்சயமாக நீ அழியக்கூடியவன் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்.
(103) 17.103. ஃபிர்அவ்ன் மூஸாவையும் அவருடைய சமூகத்தினரையும் எகிப்தைவிட்டு வெளியேற்றி தண்டிக்க நாடினான். நாம் அவனையும் அவனுடனிருந்த அவனது படையினர் அனைவரையும் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
(104) 17.104. ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் நாம் அழித்த பிறகு இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்: “ஷாம் தேசத்தில் குடியிருங்கள். மறுமை நாள் வந்துவிட்டால் உங்கள் அனைவரையும் விசாரணைக்காக நாம் மஹ்ஷர் பெருவெளியில் கொண்டுவருவோம்.
(105) 17.105. சத்தியத்தைக்கொண்டே நாம் இந்தக் குர்ஆனை முஹம்மதின் மீது இறக்கியுள்ளோம். அது எவ்வித திரிபு, மாற்றமுமின்றி சத்தியத்தைக்கொண்டே இறங்கியது. -தூதரே!- நாம் உம்மை இறையச்சமுடையோருக்கு சுவனத்தைக்கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தை விட்டும் எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
(106) 17.106. நீர் மக்களுக்கு குர்ஆனை சிறிது சிறிதாக ஓதி எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நாம் அதனை பகுதி பகுதியாக இறக்கி தெளிவாக்கியுள்ளோம். ஏனெனில் அதுதான் புரிந்துகொள்வதற்கு ஏற்றது. நாம் அதனை சந்தர்ப்பங்கள், சூழ்நிலைக்கேற்ப பகுதிபகுதியாக இறக்கியுள்ளோம்.
(107) 17.107. -தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் அவனை நம்பிக்கைகொள்ளுங்கள். உங்களின் நம்பிக்கையினால் அவனுக்கு எதுவும் அதிகமாகிவிடப்போவதில்லை. அல்லது நம்பிக்கைகொள்ளாமல் இருங்கள். உங்கள் நிராகரிப்பினால் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. முந்தைய இறைவேதங்களைப் படித்தவர்களும் வஹியையும் தூதுத்துவத்தையும் அறிந்தவர்களும் அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் நன்றிசெலுத்தும் விதமாக அல்லாஹ்வுக்கு சிரம்பணிகிறார்கள்.
(108) 17.108. தங்களின் சிரம்பணிதலில், “எங்கள் இறைவன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதைவிட்டும் தூய்மையானவன். முஹம்மதை தூதராக அனுப்புவேன் என்று அவன் வாக்களித்தது நிறைவேறி விட்டது. நிச்சயமாக எங்கள் இறைவனின் இந்த வாக்குறுதியும் ஏனைய வாக்குறுதிகளும் சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்” என்று கூறுகிறார்கள்.
(109) 17.109. அவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவாறு முகங்குப்புற அவனுக்கு சிரம்பணிகிறார்கள். குர்ஆனை அவர்கள் செவியேற்பதால், அதிலுள்ளவற்றை அவர்கள் சிந்திப்பதால் அல்லாஹ்வின் மீதுள்ள அவர்களின் அச்சமும், பணிவும் அதிகரிக்கின்றன.
(110) 17.110. -தூதரே!- “அல்லாஹ்வே, ரஹ்மானே” என்று நீர் பிரார்த்தனை செய்வதை எதிர்ப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ், ரஹ்மான் இரண்டும் அவனுடைய பெயர்கள்தாம். அவையிரண்டில் எதைக்கொண்டும் அல்லது அவனுடைய மற்ற பெயர்களைக் கொண்டும் அவனை அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் அவனுடைய பெயர்களில் உள்ளவைதாம். நீங்கள் அவற்றைக் கொண்டோ மற்ற அவனுடைய அழகிய பெயர்களைக்கொண்டோ அவனை அழையுங்கள். நீர் இணைவைப்பாளர்கள் கேட்குமளவுக்கு தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர். நம்பிக்கையாளர்கள் செவியுறாதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக.
(111) 17.111. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். புகழின் அனைத்து வகைகளுக்கும் அவன் தகுதியானவன். அவன் மகனையோ, இணையையோ விட்டும் தூய்மையானவன். அவனது ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. அவனுக்கு இழிவு ஏற்படாது. யாருடைய உதவியும் அவனுக்குத் தேவைப்படாது. அவனை அதிகமாக மகத்துவப்படுத்துங்கள். அவனுக்கு மகனையோ ஆட்சியில் பங்காளியையோ உதவியாளனையோ ஏற்படுத்தி விடாதீர்கள்.