18 - ஸூரா அல்கஹ்ப் ()

|

(1) 18.1. கண்ணியம் மற்றும் பரிபூரண பண்புகளைக்கொண்டும் வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடைகளைக் கொண்டும் புகழ்தல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனே தன் அடியார், தன் தூதர் முஹம்மது மீது குர்ஆனை இறக்கினான். இந்தக் குர்ஆனில் அவன் எந்தக் கோணலையும் சத்தியத்தை விட்டும் சாய்வதனையும் ஏற்படுத்தவில்லை.

(2) 18.2. மாறாக முரண்பாடுகளோ, கருத்துவேறுபாடுகளோ அற்ற முற்றிலும் நேர்த்தியான வேதமாக அதனை ஆக்கியுள்ளான். நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை காத்திருக்கின்றது என்று எச்சரிக்கை செய்வதற்காகவும் நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக இணையற்ற அழகிய கூலி இருக்கின்றது என்று நற்செய்தி கூறுவதற்காகவும்தான் அவ்வாறு அருளியுள்ளான்.

(3) 18.3. அவர்கள் அந்த வெகுமதியில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அது அவர்களை விட்டு என்றும் முடிவுறாதது.

(4) 18.4. அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறும் யூதர்களையும் கிருஸ்தவர்களையும் சில இணைவைப்பாளர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அவ்வாறு இறக்கியுள்ளான்.

(5) 18.5. அல்லாஹ்வுக்குப் பிள்ளை உள்ளதாக இட்டுக்கட்டும் இவர்களிடம் அவர்களின் வாதத்திற்கு, இவர்களிடமோ இவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் இவர்களின் முன்னோர்களிடமோ எந்த ஆதாரமோ, அறிவோ இல்லை. சிந்திக்காமல் அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் அந்த வார்த்தை மிகவும் மோசமானது. அவர்கள் எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ அற்ற பொய்யான வார்த்தையையே கூறுகிறார்கள்.

(6) 18.6. -தூதரே!- அவர்கள் இந்தக் குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளவில்லை என்றால் கவலையால் உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!. அவ்வாறு செய்யாதீர். அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவருவது உம்மீதுள்ள கடமையல்ல. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும்.

(7) 18.7. நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் அதற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம். அவர்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்களைச் செய்பவர் யார்? தீய செயல்களைச் செய்பவர் யார்? என்று நாம் அவர்களைச் சோதித்து, ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை நாம் வழங்குவதற்கே அவ்வாறு செய்துள்ளோம்.

(8) 18.8. நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் தாவரங்களோ செடிகொடிகளோ அற்ற மண்ணாக ஆக்கிடுவோம். இது படைப்புகளுக்குரிய வாழ்க்கை முடிந்தபிறகேயாகும். அவர்கள் அதன் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.

(9) 18.9. -தூதரே!- நிச்சயமாக குகைவாசிகளின் சம்பவமும் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஏடுகளும் நம்முடைய வியக்கத்தக்க சான்றுகளில் உள்ளவை என்று எண்ணாதீர். மாறாக அதுவல்லாத வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது போன்றவை அதனை விட வியக்கத்தக்கதாகும்.

(10) 18.10. -தூதரே!- நம்பிக்கைகொண்ட இளைஞர்கள் தங்களின் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சமடைந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து, எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றி உன் புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நிராகரிப்பாளர்களைவிட்டு புலம்பெயர்ந்ததையும் நம்பிக்கைகொண்டதையும் சத்திய வழியை அடைந்ததாகவும் சரியான நிலைப்பாடாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக.

(11) 18.11. அவர்கள் புறப்பட்டு குகையில் தஞ்சமடைந்த பிறகு சப்தங்களை செவியுறமுடியாதவாறு அவர்களில் செவிகளில் ஒரு திரையை ஏற்படுத்திவிட்டோம். பல்லாண்டுகள் அவர்களை தூங்கச் செய்தோம்.

(12) 18.12. பின்னர் அவர்களின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்களின் விஷயத்தில் கருத்துவேறுபாடுகொண்ட இரு கூட்டங்களில் யார் அவர்கள் குகையிலே தங்கியிருந்த கால அளவை சரியாக அறிகிறார்கள் என்பதை நாம் -மற்றவர்களுக்குப் புலப்படும் விதத்தில்- அறிவதற்காகவே அவ்வாறு செய்தோம்.

(13) 18.13. -தூதரே!- அவர்களின் செய்தியை சந்தேகமற்ற உண்மையான விதத்தில் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். தங்கள் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்கள் புரிந்த இளைஞர்களே அவர்கள். நாம் அவர்களுக்கு மென்மேலும் நேர்வழியையும், சத்தியத்தின் மீது உறுதியையும் வழங்கினோம்.

(14) 18.14. நம்பிக்கை மற்றும் அதில் உறுதியைக் கடைபிடித்தல் மூலம் அவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தினோம். மேலும் நிராகரிக்கும் அரசனுக்கு முன்னிலையில் எழுந்து அல்லாஹ்வை மாத்திரமே நம்புவோம் என தமது நம்பிக்கையை அறிவித்து நாட்டைத் துறப்பதற்கான பொறுமையின் மூலமும் அவர்களின் உள்ளங்களை பலப்படுத்தினோம். அவர்கள் அரசனிடம் கூறினார்கள்: “எங்கள் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவனையே நாங்கள் வணங்கினோம். அவன்தான் வானங்கள் மற்றும் பூமியை படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத் தவிர பொய்யாக கருதப்படக்கூடிய கடவுள்கள் யாரையும் நாங்கள் ஒருபோதும் வணங்க மாட்டோம். -அவனைத் தவிர மற்றவர்களை நாம் வணங்கினால்-, சத்தியத்தை விட்டு தூரமான, அநீதியான வார்த்தையை நாம் கூறியதாகிவிடும்.”

(15) 18.15. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கி கூறினார்கள்: “நம்முடைய இந்த சமூகத்தினர் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்கப்படும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களின் வணக்க வழிபாட்டிற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவருவதற்கு சக்திபெற மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை.

(16) 18.16. நீங்கள் உங்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கி, அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் தெய்வங்களை விட்டு விட்டு அவனை மட்டுமே வணங்கிய போது உங்கள் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த குகையில் சென்று தஞ்சமடையுங்கள். உங்கள் இறைவன் தன் அருளினால் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வான். உங்களின் சமூகத்தினரிடையே வாழ்ந்த வாழ்க்கைக்குப் பகரமாக உங்களுக்குப் பயனுள்ளவாறு உங்கள் காரியங்களை எளிதாக்கித் தருவான்.

(17) 18.17. அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செயல்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களை தூங்க வைத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். -அவர்களை பார்க்கக்கூடியவரே!- சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அது அவர்களின் குகையைவிட்டு அதிலே நுழைபவருக்கு வலப்பக்கமாகச் சாய்வதையும் அது மறையும்போது அவர்கள் மீது விழாமல் இடப்பக்கமாகச் சாய்வதையும் காண்பீர். அவர்கள் நிரந்தர நிழலில் இருந்தார்கள். சூரிய வெப்பம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் குகையில் அவர்களுக்குத் தேவையான காற்றுக் கிடைக்குமளவு விசாலமான இடத்தில் இருந்தார்கள். குகையில் அவர்கள் தஞ்சமடைந்தது, அங்கு அவர்கள் மீது தூக்கம் சாட்டப்பட்டது, சூரியன் அவர்கள் மீது விழாமல் இருந்தது, விசாலமான இடத்தைப் பெற்றது, தங்கள் சமூகத்தவரிடமிருந்து தப்பித்தது ஆகியவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆச்சரியமான சான்றுகளாகும். அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவராவார். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேரான வழியைக்காட்டும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். ஏனெனில் நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது வேறு எவரிடத்திலும் இல்லை.

(18) 18.18. -அவர்களைப் பார்க்கக்கூடியவரே!- அவர்களின் கண்கள் திறந்திருப்பதால் நீர் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்றே எண்ணுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மண் அவர்களின் உடலைத் தின்றுவிடாமல் இருக்க நாம் அவர்களை வலதுபுறமும் இடதுபுறமும் புரட்டிக்கொண்டே இருக்கின்றோம். அவர்களின் நாய் குகையின் நுழைவாயிலில் தன் முன்னங்கால்களை நீட்டியவாறு உள்ளது. நீர் அவர்களை எட்டிப் பார்த்தால் பயந்து அவர்களை விட்டு பின்வாங்கி ஓடிவிடுவீர். உம் உள்ளம் அவர்களை கண்டு பயத்தால் நிரம்பி விடும்.

(19) 18.19. நாம் குறிப்பிட்ட வியக்கத்தக்க நம்முடைய வல்லமைகளை அவர்கள் விடயத்தில் நிகழ்த்தியது போன்று நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்கள் ஒருவருக்கொருவர் தூக்கத்தில் கழித்த காலத்தைப் பற்றி விசாரிப்பதற்காக. அவர்களில் சிலர் கூறினார்கள்: “நாம் ஒரு நாளோ அதற்கு குறைவான நாளோ தூங்கியவாறு கழித்திருப்போம்.” அவர்கள் தங்கியிருந்த காலத்தை சரியாக கணிக்க முடியாத சிலர் கூறினார்கள்: “நீங்கள் தூங்கியவாறு தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவனே நன்கறிந்தவன். எனவே இதுகுறித்த விஷயத்தை அவனிடமே ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குச் சம்பந்தமுள்ளவற்றில் ஈடுபடுங்கள். இந்த வெள்ளி நாணயங்களைக்கொண்டு நம்முடைய நமது நகரத்திற்கு உங்களில் ஒருவரை அனுப்புங்கள். அவர், தூய்மையான, நல்ல உழைப்புடையவரிடமுள்ள உணவைப் பார்த்து வாங்கிவரட்டும். அவர் அங்கு செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளட்டும். விவேகமாக நடந்து கொள்ளட்டும். எவரும் உங்களின் இடத்தை அறியவிடவேண்டாம். ஏனெனில் அதனால் பாரிய தீங்குகள் ஏற்படும்.

(20) 18.20. உங்களின் சமூகத்தினர் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து உங்களைக் கண்டுபிடித்தால் கல்லால் எறிந்து உங்களைக் கொன்றுவிடுவார்கள் அல்லது உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்து சத்திய மார்க்கத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு முன்னர் இருந்த அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் உங்களைத் திருப்பி விடுவார்கள். நீங்கள் அதனை மீண்டும் ஏற்றுக்கொண்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாறாக அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய சத்தியத்தை விட்டுவிட்டு அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் திரும்பியதனால் ஈருலகிலும் பெரும் இழப்பிற்குள்ளாகி விடுவீர்கள்.

(21) 18.21. அவர்களைப் பல வருடங்கள் தூங்க வைத்து பின்னர் எழுப்பி எங்களுடைய வல்லமையை அறிவிக்கக்கூடிய நாம் செய்த வியக்கத்தக்க செயல்களைப்போல அந்த நகர மக்களுக்கும் அவர்களைக் குறித்து அறிவித்தோம். அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்வதாகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதாகவும் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதி உண்மையே என்பதையும் சந்தேகமின்றி மறுமை நாள் வந்தே தீரும் எனவும் அவர்கள் அறிந்துகொள்வதற்காகவேயாகும். குகைவாசிகளின் விஷயம் வெளிப்பட்டு, அவர்கள் இறந்துவிட்ட பின் அவர்களுடைய விடயத்தையறிந்த மக்கள் அவர்களின் விஷயத்தில் என்ன செய்வது என கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் கூறினார்கள்: “அவர்கள் தங்கியிருந்த குகை வாயிலில் அவர்களைக் காக்கும் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள். இறைவனே அவர்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவர்களின் நிலை அவனிடத்தில் அவர்களுக்கு சிறப்பு இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. அவர்களில் அறிவும் சரியான பிரச்சாரமும் அற்ற செல்வாக்கு உடையவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவர்கள் தங்கியிருந்த இடத்தை நினைவுபடுத்தும் பொருட்டு அதன் மீது ஒரு வணக்கஸ்தலத்தை அமைப்போம்.”

(22) 18.22. அவர்களின் சம்பவத்தில் அவர்களின் எண்ணிக்கையைக்குறித்து யூகம் செய்து கூறுபவர்களில் சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் மூன்று பேர். நான்காவது அவர்களின் நாய் என்று.” சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் ஐந்து பேர். ஆறாவது அவர்களின் நாய் என்று.” இரு பிரிவினரும் ஆதாரமின்றி அனுமானத்தின் படியே கூறுகிறார்கள். அவர்களில் சிலர், “அவர்கள் ஏழு பேர். எட்டாவது அவர்களின் நாய்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவனே அவர்களின் எண்ணிக்கையை நன்கறிந்தவன். அல்லாஹ் கற்றுக்கொடுத்த சிலரைத் தவிர வேறு யாரும் அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள். அவர்களின் எண்ணிக்கையைக் குறித்தோ, அவர்களது நிலைமைகளில் மற்ற விஷயங்களைக்குறித்தோ வேதக்காரர்களிடமோ அவர்களைத் தவிர மற்றவர்களிடமோ வெளிப்படையாக அன்றி ஆழமாக விவாதம் செய்யாதீர். அவர்கள் குறித்து அல்லாஹ் உமக்கு இறக்கிய வஹியை போதுமாக்கிக் கொள்வீராக. அவர்களைக் குறித்த விபரங்களை வேறு யாரிடமும் நீர் கேட்காதீர். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அதனை அறியமாட்டார்கள்.

(23) 18.23. நபியே! நீர் நாளை செய்ய விரும்பும் எதைக் குறித்தும், “நான் இதனை நாளை செய்து விடுவேன்” என்று கூறாதீர். ஏனெனில் நீர் அதைச் செய்வீரா? அல்லது உமக்கும் அந்த விஷயத்திற்கும் மத்தியில் ஏதேனும் குறுக்கிட்டு விடுமா? என்பதைக் குறித்து நீர் அறியமாட்டீர். இது ஒவ்வொரு முஸ்லிமுக்குமான வழிகாட்டலாகும்.

(24) 18.24. ஆயினும் . “அல்லாஹ் நாடினால் நாளை செய்வேன்” என்று கூறுவதன் மூலம் உம்முடைய செயலை இறைநாட்டத்தோடு இணைத்தாலே தவிர. நீர் -அவ்வாறு கூற மறந்துவிட்டால்- (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் நாடினால் என்று கூறி உம் இறைவனை நினைவுபடுத்திக் கொள்வீராக. இன்னும் “என் இறைவன் எனக்கு இதைவிட நேர்வழிக்கு அண்மையான விஷயத்தின்பால் வழிகாட்டக்கூடும்” என்று கூறுவீராக.

(25) 18.25. குகைவாசிகள் குகையில் முந்நூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.

(26) 18.26. தூதரே! நீர் கூறுவீராக: “அவர்கள் குகையில் தங்கியிருந்ததை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்கள் தங்கியிருந்த காலத்தை நாம் அறிவித்துவிட்டோம். அதற்குப் பிறகு எவருடைய கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படாது. வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவன் எவ்வளவு நன்றாக பார்க்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எவ்வளவு நன்றாக கேட்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் செவியேற்கிறான். அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பொறுப்பாளன் இல்லை. தனது சட்டத்தில் யாரையும் அவன் சேர்த்துக்கொள்ளமாட்டான். அவன் தனித்து சட்டம் கூறுபவன்.

(27) 18.27. தூதரே! அல்லாஹ் உமக்கு வஹியாக அளித்த குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவீராக. அதனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. ஏனெனில் நிச்சயமாக அவை முழுக்க முழுக்க உண்மையானதாகவும் நீதியானதாகவும் இருக்கின்றது. அவனைத் தவிர உமக்கு ஒதுங்குவதற்கு அடைக்கலத்தையோ பாதுகாத்து அபயமளிப்பரையோ நீர் காணமாட்டீர்.

(28) 18.28. தங்கள் இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் வணக்கம் மற்றும் பிரார்தனையின் மூலம் அவனை அழைத்துக் கொண்டிருப்போரின் சகவாசத்தைக் கடைபிடிப்பீராக. செல்வமும் பதவியும் உடையவர்களின் சகவாசத்தை நாடி உம் பார்வையை அவர்களை விட்டும் திருப்பிவிடாதீர். உள்ளத்தில் முத்திரையிடுவதன் மூலம் எவருடைய உள்ளத்தை நம்முடைய நினைவை விட்டும் அலட்சியம் செய்யக்கூடியதாக நாம் மாற்றிவிட்டவர்களுக்கு நீர் கட்டுப்படாதீர். அவர்கள் உம் சபையைவிட்டு ஏழைகளை விரட்டுமாறு உம்மை ஏவுகிறார்கள். தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவதைக்காட்டிலும் தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் வீணானவையாக ஆகிவிட்டன.

(29) 18.29. -தூதரே!- தமது உள்ளங்களிலுள்ள மறதியினால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்ததே சத்தியமாகும். அது நான் என் புறத்திலிருந்து கொண்டு வந்ததல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததாகும். நம்பிக்கையாளர்களை நான் விரட்டவேண்டும் என்ற உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. உங்களில் யார் இந்த சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ள விரும்புகிறாரோ அவர் நம்பிக்கைகொள்ளட்டும். அவர் அதற்கான கூலியைப் பெற்று மகிழ்ச்சியடைவார். உங்களில் யார் இதனை நிராகரிக்க விரும்புகிறாரோ அவர் நிராகரித்துக் கொள்ளட்டும். அவர் தனக்காகக் காத்திருக்கும் வேதனையை அனுபவிப்பார். நிராகரிப்பை தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்களுக்கு நாம் மிகப் பெரும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் அங்கிருந்து தப்பமுடியாது. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான தாகத்தினால் அவர்கள் தண்ணீர் வேண்டினால் கடுமையான வெப்பத்தினால் முகங்களை பொசுக்கக்கூடிய கொதிக்கும் எண்ணெய்யைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் நீர் மிகவும் மோசமான நீராகும். அது தாகத்தை தீர்க்காது. மாறாக அதிகப்படுத்தும். அவர்களின் தோல்களைப் பொசுக்கும் நெருப்பையும் அணைக்காது. அவர்கள் தங்கும் நரகம் மிகவும் மோசமானதாகும்.

(30) 18.30. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து அமல்களை சீர்செய்தவர்களுக்கு பெரும் கூலி இருக்கின்றது. நிச்சயமாக நற்செயல் புரிந்தோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டோம். மாறாக அவர்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.

(31) 18.31. ஈமான் மற்றும் நற்செயல் செய்து தங்களை அலங்கரித்தவர்களுக்கு சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றின் தங்குமிடங்களுக்குக் கீழே சுவையான நீரினையுடைய ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்க வலையல்களால் அலங்கரிக்கப்படுவார்கள். மெல்லிய, கனமான பச்சைநிற பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அழகிய விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்திருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி எத்துணை அழகானது! அவர்கள் தங்கியிருக்கும் சுவனம் எத்துணை அழகானது!

(32) 18.32. -தூதரே!- அவர்களுக்கு இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துக் கூறுவீராக: ஒருவர் நம்பிக்கையாளராகவும் மற்றொருவர் நிராகரிப்பாளராகவும் இருந்தார். நாம் நிராகரிப்பாளனுக்கு இரு திராட்சை தோட்டங்களை ஏற்படுத்தியிருந்தோம். இரு தோட்டங்களையும் சுற்றி பேரீச்சை மரங்கள் காணப்பட்டது. அவ்விரண்டிலும் காலியாக உள்ள பகுதிகளில் பயிர்களையும் முளைக்கச் செய்திருந்தோம்.

(33) 18.33. ஒவ்வொரு தோட்டமும் பேரீச்சை, திராட்சை, பயிர்கள் என எவ்வித குறையும் வைக்காமல் தன் விளைச்சல்களை நிறைவாகத் தந்துகொண்டிந்தன. அவையிரண்டிற்குமிடையில் இலகுவாக நீர் பாய்ச்சுவதற்காக நாம் ஒரு நதியையும் ஓடச் செய்தோம்.

(34) 18.34. இரு தோட்டங்களின் உரிமையானுக்கு வேறு சொத்துக்களும், பழங்களும் இருந்தன. அவன் நம்பிக்கைகொண்ட தன் தோழனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவரிலே பாதிப்பை ஏற்படுத்து முகமாக பெருமையுடன் கூறினான்: “நான் உன்னைவிட பெரும் செல்வம் படைத்தவன், கண்ணியமானவன், ஆள்பலம் மிக்கவன்.”

(35) 18.35. அந்த நிராகரிப்பாளன் நம்பிக்கைகொண்ட தன் தோழனுடன் தோட்டத்திற்கு அதனைக் காண்பிப்பதற்காக வந்தான். அப்போது அவன் நிராகரிப்பால், தற்பெருமையால் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக இருந்தான். அந்த நிராகரிப்பாளன் கூறினான்: “நீ காணும் இந்த தோட்டம் அழிந்துவிடும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் அது நிலைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.

(36) 18.36. மறுமை ஏற்படும் என நான் எண்ணவில்லை. நிலையான வாழ்வு மாத்திரமே உண்டு. ஒருவேளை மறுமை நாள் நிகழ்ந்து மீண்டும் நான் உயிர்பெற்று எழுந்து என் இறைவனிடம் கொண்டுசெல்லப்பட்டாலும் அங்கு இதைவிட சிறந்த தோட்டத்தையே நான் பெறுவேன். ஏனெனில் இந்த உலகில் நான் செல்வந்தனாக இருப்பதால் (மறுமையில்) மீண்டும் உயிர்பெற்று எழுந்த பிறகு செல்வந்தனாகவே இருப்பேன்.”

(37) 18.37. நம்பிக்கை கொண்ட அவனுடைய தோழன் பேச்சை தொடர்ந்தவனாக அவனிடம் கூறினான்: “உன் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்து பின்னர் உன்னை விந்திலிருந்து படைத்து, பின்பு உன்னை ஆணாக மாற்றி, உன் உறுப்புகளைச் சீராக்கி, உன்னை முழுமையானவனாக ஆக்கியவனையா நீ நிராகரிக்கிறாய்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆற்றலுள்ளவன் உனக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்குஆற்றலுள்ளவன்.

(38) 18.38. ஆனால் நான் நீ கூறுவதுபோல் நான் கூறமாட்டேன். என்னைப் பொருத்தவரை அல்லாஹ்தான் எனது இறைவன். அவனே நமக்கு அருட்கொடைகளை வழங்கி சிறப்பித்துள்ளான். அப்படிப்பட்ட இறைவனுக்கு வணக்கத்தில் நான் யாரையும் இணையாக்க மாட்டேன். என்று கூறுவேன்.

(39) 18.39. நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, “எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே. அவனைத் தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் இல்லை” என்று கூறியிருக்கக் கூடாதா! அவனே தான் நாடியதைச் செய்கிறான். அவன் வல்லமை மிக்கவன். நான் உன்னைவிட வசதி குறைந்தவன், பிள்ளைகள் குறைந்தவன், என நீ கருதினாலும் கூட.

(40) 18.40. அல்லாஹ் உன் தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எனக்கு வழங்குவதையும், உன் தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை அனுப்பி, அது கால்கள் வழுக்கும், எதுவும் முளையாத வெட்ட வெளியாகுவதையும் நான் எதிர்பார்த்துள்ளேன்.

(41) 18.41. அல்லது அதன் நீர் பூமியில் வற்றிவிடலாம். அதனால் எவ்வித சாதனத்தின் மூலமும் உன்னால் அதனை அடையமுடியாது போய்விடும். அதன் நீர் வற்றிவிட்டால் அது நிலைத்திருக்காது.

(42) 18.42. விசுவாசியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நிராகரிப்பாளனின் தோட்டத்தின் பழங்களை அழிவு சூழ்ந்துகொண்டது. அதனைக் கண்ட அவன் அதனைப் பராமரிப்பதற்காக செலவிட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கைபிசைந்து நின்றான். திராட்சை மரத்தின் கிளைகள் அழிந்து அத்தோட்டம் அடியோடு வீழ்ந்து கிடந்தது. அவன் கூறினான்: “நான் என் இறைவனை மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்க வேண்டுமே! வணக்கத்தில் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!

(43) 18.43. அந்த நிராகரிப்பாளனுக்கு அவன் மீது இறங்கிய வேதனையைத் தடுக்கக்கூடிய எந்தக் கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன்தான் தன் கூட்டத்தினரைக்கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தான். அவனாலும் அவனது தோட்டத்தை அல்லாஹ் அழிப்பதைத் தடுக்க முடியவில்லை.

(44) 18.44. இந்த இடத்தில் உதவி அல்லாஹ் ஒருவன் மட்டுமே செய்ய முடியும். அவன் நம்பிக்கைகொண்ட தன் நேசர்களுக்கு நன்மையளிப்பதில் சிறந்தவன். அவன் அவர்களுக்குப் பலமடங்கு நன்மைகளை வழங்குகிறான். சிறப்பான முடிவை வழங்குவதிலும் அவனே சிறந்தவன்.

(45) 18.45. -தூதரே!- உலக இன்பங்களைக் கண்டு ஏமாறுபவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுவீராக: அது அழிந்துவிடுவதிலும் விரைவாக தீர்ந்துவிடுவதிலும் மழை நீருக்கு ஒப்பானதாகும். நாம் அதனை வானத்திலிருந்து இறக்குகின்றோம். அந்த நீரின் மூலம் பூமியில் தாவரம் செழித்து வளர்கின்றது. பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகி விடுகின்றன. அந்தப் பூமி பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். அவனுக்கு இயலாதது எதுவும் கிடையாது. அவன் தான் நாடியவற்றை உயிருடன் விட்டுவைக்கிறான். தான் நாடியவற்றை அழித்து விடுகிறான்.

(46) 18.46. செல்வமும் பிள்ளைகளும் உலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவழித்தாலே அன்றி மறுமையில் செல்வத்தால் எந்தப் பயனும் இல்லை. நல்ல வார்த்தைகளும், செயல்களுமே அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தருவதில் இந்த உலகிலுள்ள அனைத்து அலங்காரங்களையும் விடச் சிறந்ததாகும். அதுவே மனிதன் எதிர்பார்ப்பவற்றில் மிகச் சிறந்ததாகும். ஏனெனில் உலக அலங்காரங்கள் அழிந்துவிடக்கூடியவையே. அல்லாஹ்வுக்குப் பிடித்தமான சொற்கள் மற்றும் செயல்களின் கூலியே நிலைத்திருக்கக்கூடியவை.

(47) 18.47. நாம் மலைகளை அதன் இடங்களிலிருந்து அகற்றிவிடும் நாளை நினைவு கூறுவீராக! பூமியிலுள்ள மலைகள், மரங்கள், கட்டிடங்கள் அனைத்தும் அழிந்துவிடுவதனால் அதனை வெட்ட வெளியாக நீர் காண்பீர். நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டுவோம். அவர்களில் எவரையும் எழுப்பாமல் விட்டுவிட மாட்டோம்.

(48) 18.48. மனிதர்கள் விசாரணைக்காக உம் இறைவனுக்கு முன்னால் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “நாம் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே தனித்தனியாக செருப்புகளின்றி, நிர்வாணமாக விருத்தசேதனம் செய்யப்படாதோராக நம்மிடம் வந்துவிட்டீர்கள். மாறாக நாம் உங்களை மீண்டும் எழுப்ப மாட்டோம் என்றும் நாம் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக ஒரு இடத்தையும் காலத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்றும் நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.

(49) 18.49. அவர்களுக்கு முன்னால் செயல்பதிவேடு வைக்கப்படும். அவர்களில் சிலர் தம் வலது கையால் அதனை எடுப்பார்கள்; சிலர் தம் இடது கையால் அதனை எடுப்பார்கள். -மனிதனே!- நிராகரிப்பாளர்கள் தங்களைக்குறித்து அஞ்சியவர்களாக இருப்பதைக் காண்பாய். ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தி வைத்த நிராகரிப்பையும் பாவங்களையும் அறிந்துவைத்துள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே, சோதனையே! இந்த பதிவேட்டிற்கு என்னவாயிற்று? எங்களின் சிறிய, பெரிய செயல்கள் எதையும் இது பதிவுசெய்யாமல் விட்டுவைக்கவில்லையே!” அவர்கள் உலக வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் எழுதி பதியப்பட்டிருப்பதைக் காண்பார்கள். -தூதரே!- உம் இறைவன் யார்மீதும் அநீதி இழைக்க மாட்டான். பாவம் செய்யாமல் யாரையும் அவன் தண்டிக்க மாட்டான். அவன் தனக்குக் கட்டுப்பட்டவர்களின் கூலியை சிறிதும் குறைத்துவிட மாட்டான்.

(50) 18.50. -தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் வானவர்களைச் சாராத ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த இப்லீஸ் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்துவிட்டான். அவன் தன் இறைவனுக்குக் கட்டுப்படாமல் நடந்தான். -மனிதர்களே!- என்னை விட்டுவிட்டு உங்களுக்குப் பகைவர்களாக இருக்கின்ற அவனையும் அவனுடைய சந்ததியையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? எவ்வாறு உங்களின் பகைவர்களை உங்களுக்குப் பாதுகாவர்களாக ஆக்கினீர்கள்? அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஷைத்தானை பாதுகாவலனாக ஏற்படுத்திக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிகவும் கெட்டதாகும்.

(51) 18.51. என்னை விடுத்து நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்ட இவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள்தாம். வானங்களையும் பூமியையும் படைத்தபோது நான் அவர்களை சாட்சியாக வைக்கவில்லை. மாறாக அப்போது அவர்கள் இருக்கவேயில்லை. அவர்களில் சிலரைப் படைத்தபோது சிலரை நான் சாட்சியாக வைக்கவில்லை. படைப்பதிலும் நிர்வகிப்பதிலும் நான் தனித்தவன். நான் வழிகெடுக்கும் மனித, ஜின் இனத்திலுள்ள ஷைத்தான்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொள்பவன் அல்ல. நான் உதவியாளர்களை விட்டும் தேவையற்றவன்.

(52) 18.52. -தூதரே!- அவர்களிடம் மறுமை நாளை நினைவு கூர்வீராக. அப்போது அல்லாஹ் இவ்வுலகில் தனக்கு இணை கற்பித்தவர்களிடம் கூறுவான்: “உங்களுக்கு உதவிசெய்வதற்காக எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்களை அழையுங்கள் என்று.” அவர்கள் தங்களின் இணைத்தெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களுக்குப் பதிலளிக்க மாட்டா. உதவியும் செய்யமாட்டா. வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே நாம் அவர்கள் ஒன்று சேரும் அழிவிடத்தை ஏற்படுத்திவிடுவோம். அதுதான் நரக நெருப்பாகும்.

(53) 18.53. இணைவைப்பாளர்கள் நரகத்தைக் காண்பார்கள். எனவே தாங்கள் அதில் விழுபவர்களே என்பது அவர்களுக்கு உறுதியாகிவிடும். அவர்கள் அதனை விட்டும் திரும்பிச் செல்லும் இடத்தை பெற மாட்டார்கள்.

(54) 18.54. நாம் அவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ளும்பொருட்டு முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆனில் பல்வேறு வகையான உதாரணங்களை விளக்கியுள்ளோம். ஆயினும் மனிதன் -குறிப்பாக நிராகரிப்பவன்- அதிகமாக தவறான முறையில் தர்க்கம் செய்பவனாகவே உள்ளான்.

(55) 18.55. பிடிவாதம்கொண்ட நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்விடம் இருந்து முஹம்மது நபி கொண்டவந்ததன் மீது நம்பிக்கைகொள்வதற்கும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதற்கும் தடையாக இருப்பது விளக்கப்படுத்துவதில் உள்ள குறையல்ல. அவர்களுக்கு அல்குர்ஆனில் பல்வேறு உதாரணங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் தெளிவான ஆதாரங்களும் அவர்களிடம் வந்துள்ளன. முந்தைய சமூகங்களைப்போல தாங்களும் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட தண்டனையை நேரடியாகக் கண்டுவிட வேண்டும் என்று அவர்கள் பிடிவாதத்தின் காரணமாக கோறுவதே அவர்களைத் தடுத்தது.

(56) 18.56. நாம் தூதர்களை நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவர்களாவும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாவுமே அனுப்பி வைக்கின்றோம். உள்ளங்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரம் இருந்த போதிலும் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட சத்தியத்தை தங்களின் அசத்தியத்தால் முறியடித்துவிட வாதம் செய்கிறார்கள். அவர்கள் குர்ஆனையும் எச்சரிக்கைகளையும் நகைப்புக்குரியதாகவும் பரிகாசமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.

(57) 18.57. தன் இறைவனின் வசனங்களைக்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டபோது அதிலுள்ள தண்டனை பற்றிய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் படிப்பினை பெறாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவன் இவ்வுலக வாழ்வில் சேர்த்துவைத்த பாவங்களையும் நிராகரிப்பையும் மறந்துவிட்டான். அவற்றிலிருந்து அவன் மீளவில்லை. இத்தகைய பண்புடையவர்களின் உள்ளங்களில், குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு ஒரு திரையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளில் அதனைக் கேட்க முடியாமல் ஒரு அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள். நீர் அவர்களை ஈமானின் பக்கம் அழைத்தாலும் அவர்களின் உள்ளங்களில் திரையும் செவிகளில் அடைப்பும் இருப்பதால் ஒருபோதும் உமது அழைப்பிற்குப் பதிலளிக்க மாட்டார்கள்.

(58) 18.58. பொய்பிப்பவர்களுக்கு விரைவாக வேதனையளிக்கப்பட வேண்டும் என்று தூதர் எதிர்பார்க்காமலிருப்பதற்காக அவருக்கு அல்லாஹ் கூறுகிறான்: “-தூதரே!- உமது இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அனைத்தையும் வியாபித்த கருணை உடையனாகவும் இருக்கின்றான். பாவிகள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களுக்கு அவகாசம் அளிப்பதும் அவனது அருளே. அவன் இந்த புறக்கணிப்பாளர்களை தண்டிக்க விரும்பினால் இவ்வுலகிலேயே உடனுக்குடன் அவர்களைத் தண்டித்திருப்பான். ஆயினும் அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களை விட்டும் தண்டனையைத் தாமதப்படுத்துகிறான். மாறாக அவர்கள் மீளாவிட்டால் அவர்களது நிராகரிப்பு, புறக்கணிப்பு என்பவற்றுக்கு அவர்களுக்கு கூலி வழங்கப்படுவதற்கு குறிக்கப்பட்ட இடமும் காலமும் உண்டு. அவனைத் தவிர ஒதுங்குவதற்கு எந்தப் புகலிடத்தையும் அவர்கள் பெறவே முடியாது.

(59) 18.59. ஹூத், ஸாலிஹ், ஷுஜப் ஆகியோரின் சமூகங்கள் வாழ்ந்த ஊர்களைப் போன்ற உங்களுக்கு நெருக்கமான நிராகரித்த அந்த ஊர்களில் உள்ளோரை, பாவங்கள் மற்றும் நிராகரிப்பின் மூலம் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது அழித்துவிட்டோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் வைத்திருந்தோம்.

(60) 18.60. -தூதரே!- மூஸா தம் பணியாளர் யூஷா இப்னு நூனிடம் கூறிய நேரத்தை நினைவு கூர்வீராக: “இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அடையும்வரை நான் சென்றுகொண்டே இருப்பேன். அல்லது அந்த நல்லடியாரை சந்தித்து அவரிடமிருந்து கல்வி கற்பதற்காக நீண்ட காலம் சென்றுகொண்டே இருப்பேன்".

(61) 18.61. இருவரும் நடந்து சென்றார்கள். இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அவர்கள் அடைந்தபோது இருவரும் கட்டுச்சாதனமாகக் கொண்டுவந்த மீனை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் அந்த மீனுக்கு உயிரளித்தான். அது கடலில் சுரங்கம் போன்ற ஒரு வழியை அமைத்துக் கொண்டது. அதில் நீர் ஒட்டவில்லை.

(62) 18.62. அவர்கள் இருவரும் அந்த இடத்தைக் கடந்த போது மூஸா தம் பணியாளரிடம், “நம்முடைய மதிய உணவைக் கொண்டு வாரும். நம்முடைய இந்த பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம்” என்று கூறினார்.

(63) 18.63. பணியாளர் கூறினார்: “நாம் பாறையின்பால் ஒதுங்கியபோது நடந்தது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக நான் மீனைக்குறித்து உங்களிடம் நினைவுகூர மறந்துவிட்டேன். நான் நினைவுகூர்வதைவிட்டும் ஷைத்தான்தான் என்னை மறக்கடிக்கச் செய்தான். அந்த மீன் உயிர்பெற்று கடலில் ஆச்சரியமான முறையில் தன் வழியை அமைத்துக் கொண்டது.”

(64) 18.64. மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நாம் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதுதான் அந்த நல்லடியார் வசிக்கும் இடத்தின் அடையாளம். அவர்கள் வழிதவறிவிடாமல் இருக்க தங்களின் கால் பாத அடையாளங்களை பின்பற்றி திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்த பாறையை அடைந்தார்கள். அங்கிருந்து மீனின் நுழைவாயிலை நோக்கிச் சென்றார்கள்.

(65) 18.65. மீனை இழந்த இடத்தை அவர்கள் அடைந்த போது அந்த இடத்தில் நம்முடைய நல்லடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். (அவருடைய பெயர் களிர் ஆகும்) நாம் அவருக்கு நம் புறத்திலிருந்து அருளை வழங்கி மக்களில் யாரும் அறியாத ஞானத்தை கற்றுக் கொடுத்திருந்தோம். அதனையே இச்சம்பவம் உள்ளடக்கியுள்ளது.

(66) 18.66. மூஸா மிகவும் பணிவாக, மென்மையாக அவரிடம் கூறினார்: “அல்லாஹ் உமக்குக் கற்றுக்கொடுத்த சத்தியத்திற்கு வழிகாட்டும் அறிவை நீர் எனக்குக் கற்றுத்தரும்பொருட்டு நான் உம்மைப் பின்தொடரலாமா?”

(67) 18.67. அதற்கு களிர் கூறினார்: “என்னிடம் நீர் காணும் ஞானத்தைப் பார்த்துக்கொண்டு உம்மால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயமாக அது உம்முடன் இருக்கும் ஞானத்தோடு ஒத்துப்போவதில்லை.

(68) 18.68. உமக்குச் சரியென்று புரியாத செயல்களைப் பார்த்துக்கொண்டு உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? ஏனெனில் நிச்சயமாக அவற்றில் நீர் உமக்கு வழங்கப்பட்ட அறிவின்படியே தீர்ப்பளிப்பீர்.

(69) 18.69. மூஸா கூறினார்: “அல்லாஹ் நாடினால் நான் காணும் உமது செயல்களில் நான் பொறுமையாளராகவும் உமக்குக் கட்டுப்பட்டு உறுதியாக இருப்பதை நீர் காண்பீர். நீர் கட்டளையிட்ட எந்தவொரு ஏவலுக்கும் உமக்கு நான் மாறு செய்யமாட்டேன்.”

(70) 18.70. களிர் மூஸாவிடம் கூறினார்: “நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாக இருந்தால் நீர் காணும் என் செயல்களைக்குறித்து நானாக உம்மிடம் தெளிவுபடுத்தும் வரை எதுவும் என்னிடம் கேட்கக்கூடாது.

(71) 18.71. அவர்கள் இருவரும் அதில் ஒன்றுபட்டபோது கடற்கரைக்குச் சென்று ஒரு கப்பலைக் கண்டார்கள். களிருக்கு இருந்த மரியாதையால் இருவரும் எந்தக் கூலியும் அளிக்காமல் அதில் ஏறிக் கொண்டார்கள். அப்போது களிர் கப்பலின் ஒரு பலகையை கழற்றி அதில் துளையிட்டுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “நம்மிடம் எந்தக் கூலியும் வாங்காமல் நம்மை ஏற்றிய இவர்களின் கப்பலை அதிலுள்ளவர்களை மூழ்கடித்துவிட துளையிடுகின்றீரா? நீர் ஆச்சரியமான காரியத்தை செய்துவிட்டீர்.”

(72) 18.72. களிர் கூறினார்: “நான்தான் கூறினேனே, என்னிடம் நீர் காணுவதில் நிச்சயமாக உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று.”

(73) 18.73. மூஸா களிரிடம் கூறினார்: “நான் உமக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டதற்காக என்னை குற்றம் பிடிக்காதீர். உமது சகவாசத்தைச் சிரமப்படுத்தி எனக்கு நெருக்கடி ஏற்படுத்தாதீர்.”

(74) 18.74. இருவரும் கப்பலில் இருந்து இறங்கி கடற்கரையோரமாக நடந்துசென்றார்கள். அப்போது பருவமடையாத ஒரு சிறுவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். களிர் அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “ஒரு பாவமும் அறியாத பருவமடையாத தூய்மையான சிறுவனைக் கொன்று விட்டீரே? நீர் தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்.

(75) 18.75. களிர் மூஸாவிடம் கூறினார்: “நான் செய்யும் செயல்களைப் பார்த்துக் கொண்டு நிச்சயமாக உம்மால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உம்மிடம் கூறியே உள்ளேன்”

(76) 18.76. மூஸா கூறினார்: “இதற்குப் பிறகும் நான் உம்மிடம் ஏதேனும் விஷயத்தைக்குறித்துக் கேட்டால் என்னைப் பிரிந்துவிடவும். ஏனெனில் நான் உமது கட்டளைக்கு இரு முறைகள் மாற்றம் செய்துள்ளதனால் நீர் என்னுடனான தொடர்பை விட்டுவிடுவதற்கு தக்க காரணத்தைப் பெற்றுள்ளீர்.”

(77) 18.77. அவர்களிருவரும் நடந்துசென்றனர். ஓர் ஊரை அடைந்ததும் அவ்வூர்வாசிகளிடம் உணவு கேட்டார்கள். அவர்கள், இருவருக்கும் உணவளித்து, விருந்தினர் உரிமையை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். அங்கு இடிந்துவிழுவதற்குத் தயாராக இருந்த ஒரு சரிந்த சுவரைக் கண்டார்கள். களிர் அந்த சுவரைச் சரிசெய்து நிறுத்தினார். அப்போது மூஸா, “அவர்கள் நமக்கு விருந்தளிக்க மறுத்த பிறகு, நமது உணவுத் தேவைக்காக, அதனை சீர்செய்வதற்கு ஏதாவது கூலியைப் பெற நீர் விரும்பியிருந்தால் அதனை நீர் எடுத்திருக்கலாமே!” என்றார்.

(78) 18.78. அதற்கு களிர் மூஸாவிடம் கூறினார்: “இச்சுவரை சரிசெய்ததற்கு நான் கூலி பெறாததற்கு நீர் செய்த இந்த ஆட்சேபனையே உமக்கும் எனக்குமுள்ள பிரிவாகும். உம்மால் பார்த்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள முடியாத என் செயல்களுக்கான விளக்கத்தை நான் உமக்கு தற்போது வழங்குகின்றேன்.

(79) 18.79. நான் துளையிட்டுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த கப்பலின் விவகாரம் என்னவென்றால், அது கடலில் வேலைசெய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. அவர்களால் அதனை பாதுகாக்க முடியாது. நான் அதிலே ஏதேனும் செய்து அதனைக் குறையுடைய கப்பலாக ஆக்க நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னால் குறையுடைய கப்பல்களை விட்டுவிட்டு நல்ல கப்பல்களை அவர்களிடம் இருந்து நிர்பந்தமாக அபகரித்துக் கொள்ளும் ஓர் அரசன் உள்ளான்.

(80) 18.80. நான் கொன்றுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த சிறுவனின் விவகாரம் என்னவென்றால், அந்த சிறுவனின் தாய், தந்தையர் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். அவனோ பின்னாளில் நிராகரிப்பாளனாக வருவான் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தான். அவர்களுக்கு அவன் மீதுள்ள அதீத அன்பின் காரணமாகவோ, தேவையின் காரணமாகவோ அவர்களை அவன் நிராகரிப்பில் தள்ளிவிடுவானோ என்று நாம் அஞ்சினோம்.

(81) 18.81. ஆகவே அல்லாஹ் அவர்களுக்கு அவனைவிட சிறந்த மார்க்க பக்தியுள்ள, நல்ல, பாவங்களிலிருந்து தூய்மையான, அவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய பிள்ளையை மாற்றாக அளிக்க வேண்டும் என்று நாம் நாடினோம்.

(82) 18.82. நான் சரிசெய்ததற்காக ஆட்சேபனை செய்த சுவரின் விவகாரம் என்னவென்றால், அது நாம் சென்ற ஊரில் தந்தையை இழந்த இரு அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அவர்களின் தந்தை அந்த சுவருக்குக் கீழே அவர்களுக்காக செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளார். அவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். -மூஸாவே!- அவர்கள் பக்குவ வயதை அடைந்து பெரியவர்களானதும் புதைக்கப்பட்ட செல்வத்தை அதற்குக் கீழிருந்து எடுக்க வேண்டும் என்று உம் இறைவன் நாடினான். தற்போது அந்த சுவர் விழுந்துவிட்டால் அந்த செல்வம் வெளிப்பட்டு வீணாகிவிடும். அவர்கள் மீதுள்ள கருணையால் உம் இறைவன் செய்த ஏற்பாடே இதுவாகும். நான் சுயமாக எதையும் செய்யவில்லை. இதுதான் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களுக்கான விளக்கமாகும்.

(83) 18.83. -தூதரே!- உம்மை சோதிக்கும்பொருட்டு இணைவைப்பாளர்களும், யூதர்களும் துல்கர்னைனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவருடைய வரலாற்றில் நீங்கள் படிப்பினை பெறத்தக்க ஒரு பகுதியை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

(84) 18.84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் அதிகாரம் வழங்கினோம். அவர் தம் நோக்கத்தை அடைவதற்கான அனைத்து வழிகளையும் அவருக்கு வழங்கினோம்.

(85) 18.85. நாம் அவருக்கு வழங்கிய சாதனங்களையும் வழிமுறைகளையும் பெற்றுக் கொண்டு தம் நோக்கத்தை அடைவதற்காக மேற்கு நோக்கிச் சென்றார்.

(86) 18.86. அவர் பூமியில் சென்றார். கண் பார்வைக்கு சூரியன் மறையும் திசையில் பூமியின் இறுதிப் பகுதியை அடைந்தபோது களிமண்ணாலான சூடான ஊற்றில் சூரியன் மறைவதைப்போல் கண்டார். சூரியன் மறையும் திசையில் நிராகரிக்கும் ஒரு சமூகத்தைக் கண்டார். நாம் அவருக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி கூறினோம்: “துல்கர்னைனே! நீர் விரும்பினால் கொலை செய்தோ வேறு வழியிலோ இவர்களைத் தண்டிக்கலாம். அல்லது விரும்பினால் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளலாம்.”

(87) 18.87. துல்கர்னைன் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அல்லாஹ்வை வணங்குமாறு நாம் அவரை அழைத்த பின்பும் அதில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நாம் இவ்வுலகில் கொலைசெய்து தண்டிப்போம். பின்னர் அவர்கள் மறுமை நாளில் தம் இறைவனிடம் வருவார்கள். அவன் அவர்களை மிகவும் மோசமாக தண்டிப்பான்.

(88) 18.88. அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு சுவனம் இருக்கின்றது. இது அவருடைய நம்பிக்கைக்கும் நற்செயலுக்கும் இறைவன் வழங்கும் கூலியாகும். நாம் நம் கட்டளையில் மென்மையான, இலகுவானதையே அவருக்குக் கூறுவோம்.

(89) 18.89. பின்னர் அவர் வேறொரு வழியைப் பின்பற்றி சூரியன் உதிக்கும் திசையை நோக்கிச் சென்றார்.

(90) 18.90. அவர் சூரியன் உதிக்கும் இடம் கண்ணுக்கு தெரியும் வரை சென்றுகொண்டேயிருந்தார். அங்கு சூரியன் சில சமூகங்களின் மீது உதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நாம் சூரியனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக வீடுகளையோ மர நிழல்களையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.

(91) 18.91. அவ்வாறுதான் துல்கர்னைனின் விடயமாகும். அவரிடம் இருக்கும் பலம், அதிகாரம் ஆகியவற்றைக் குறித்த விளக்கமான தகவல்களையும் நாம் முழுமையாக அறிந்துள்ளோம்.

(92) 18.92. பின்னர், முன்னர் சென்ற இரு பாதைகளையும் தவிர்த்து கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட வேறொரு பாதையில் சென்றார்.

(93) 18.93. இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியை அடைந்தார். அங்கு மற்றவர்களின் பேச்சை புரிந்துகொள்ளாத ஒரு சமூகத்தைக் கண்டார்.

(94) 18.94. அவர்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜ், மஃஜுஜ் என்னும் கூட்டத்தினர் (இவர்கள் ஆதமுடைய சந்ததியில் தோன்றிய மிகப் பெரும் இரு கூட்டத்தினர்) கொலை செய்தல் மற்றும் பல்வேறு வகையில் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களாக இருக்கின்றார்கள். உம்மால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் உமக்கு ஒரு தொகையை வழங்கட்டுமா?

(95) 18.95. துல்கர்னைன் கூறினார்: “என் இறைவன் எனக்கு அளித்த ஆட்சியும், அதிகாரமும் நீங்கள் எனக்கு வழங்கும் செல்வத்தைவிட சிறந்தது. மனிதர்களையும் கருவிகளையும் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துகிறேன்.

(96) 18.96. இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள். அவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர் அவற்றை இரு மலைகளுக்கிடையே வைத்து கட்டிக்கொண்டேயிருந்தார். இரு மலைகளுக்கு நேராக அக்கட்டிடம் வந்தபோது பணியாளர்களிடம் கூறினார்: “இந்தப் இரும்புப் பாளங்களில் நெருப்பை மூட்டுங்கள். இரும்பு சிவப்பு நிறத்தை அடைந்ததும் “செம்பைக்கொண்டு வாருங்கள். அதனை இதன்மீது ஊற்றுகிறேன்” என்றார்.

(97) 18.97. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரால் அதன் உயரத்தின் காரணமாக அதன்மீது ஏறவும் முடியவில்லை. அதன் உறுதியின் காரணமாக கீழிருந்து அதனைத் துளையிடவும் முடியவில்லை.

(98) 18.98. துல்கர்னைன் கூறினார்: “இந்தத் தடுப்பு என் இறைவனின் கருணையாகும். இது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கும் அவர்கள் பூமியில் குழப்பம் விழைவிப்பதற்கும் மத்தியில் தடையாக இருக்கின்றது. அதிலிருந்து அவர்களை தடுக்கிறது. மறுமை நாளுக்கு முன்னர் அவர்கள் வெளியாவதற்கு என் இறைவன் குறித்த நேரம் வந்துவிட்டால் அது பூமியோடு தரைமட்டமாகிவிடும். (அந்த மதில்) தரைமட்டமாகி யஃஜுஜ், மஃஜுஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். இதில் எந்த மாறுபாடும் இல்லை.

(99) 18.99. இறுதிக் காலத்தில் சில படைப்பினங்களை இன்னும் சிலருடன் கலந்ததாக நாம் ஆக்கிவிடுவோம். சூர் ஊதப்படும். விசாரிப்பதற்காகவும், கூலி வழங்கவும் நாம் படைப்பினங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.

(100) 18.100. நிராகரிப்பாளர்கள் நரகை களங்கம் இல்லாமல் நேரடியாகப் காண்பதற்காக நரகத்தை அவர்களுக்கு நாம் தெளிவாக வெளிப்படுத்துவோம்.

(101) 18.101. உலகில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் குருடர்களாக இருந்த நிராகரிப்பாளர்களுக்காக அதனை வெளிப்படுத்துவோம். அதனை விட்டும் தடுக்கும் திரை அவர்களது கண்களில் காணப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க சக்திபெற்றவர்களாக இருக்கவில்லை.

(102) 18.102. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் என்னைவிடுத்து, என் அடியார்களான தூதர்களையும், வானவர்களையும், ஷைத்தான்களையும் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? நாம் நிராகரிப்பாளர்களுக்காக நரகத்தை தங்குமிடமாக தயார்படுத்தியுள்ளோம்.

(103) 18.103. -தூதரே!- நீர் கேட்பீராக: -மக்களே- “தனது செயல்களினால் மக்களில் அதிக இழப்பிற்குரியவர் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”

(104) 18.104. அவர்கள் மறுமை நாளில் இவ்வுலகில் செய்த தங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுவதைக் காண்பார்கள். தமது நடவடிக்கையில் அவர்கள் நல்லவர்களே எனவும் தமது செயல்களினால் பயன்பெறலாம் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையோ அதற்கு மாற்றமாகும்.

(105) 18.105. அவர்கள்தாம் தங்களின் இறைவன் ஒருவனே என்று அறிவிக்கக்கூடிய அவனுடைய சான்றுகளையும் மறுமையில் அவனை சந்திப்பதையும் நிராகரித்தார்கள். அவர்கள் அவற்றை நிராகரித்ததனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது.

(106) 18.106. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நான் இறக்கிய வசனங்களையும் எனது தூதர்களையும் பரிகாசமாக எடுத்துக் கொண்டதனால் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டுள்ள கூலி நரகமே.

(107) 18.107. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களைக் கௌரவிக்கும் விதமாக உயர்ந்த சுவனங்களை தங்குமிடமாகப் பெறுவார்கள்.

(108) 18.108. அவர்கள் என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள். அவர்கள் அங்கிருந்து மாறுவதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் நிச்சயமாக அதற்கு ஈடான கூலியே கிடையாது.

(109) 18.109. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவனின் வார்த்தைகள் ஏராளமானவை. அவனுடைய வார்த்தைகளை எழுதுவதற்கு கடலிலுள்ள நீர் அனைத்தும் மையாக இருந்தாலும் அவனுடைய வார்த்தைகள் முடிவடைவதற்கு முன்னரே கடலில் நீர் தீர்ந்துவிடும், அதனுடன் வேறு கடல்களையும் சேர்த்துக் கொண்டால் அவையும் தீரந்துவிடும்.”

(110) 18.110. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக “உண்மையாக வணக்கத்திற்குரிய உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை” என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது. எனவே தம் இறைவனின் சந்திப்பைக் குறித்து அஞ்சுபவர் அவனுடைய மார்க்கத்தின்படி அமல் புரியட்டும், அதிலே தனது இறைவனின் மீது உளத்தூய்மையோடு இருக்கட்டும். வணக்க வழிபாட்டில் தன் இறைவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிட வேண்டாம்.