(1) 19.1. (كٓهيعٓصٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 19.2. இது உம் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவின் மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும். அதன் மூலம் படிப்பினை பெறுவதற்காக உமக்கு நாம் அதனை எடுத்துரைக்கின்றோம்.
(3) 19.3. அவன் தம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்பொருட்டு தம் இறைவனை ரகசியமான முறையில் அழைத்த போது,
(4) 19.4. அவர் கூறினார்: “என் இறைவா! என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. என் தலையில் நரை முடியும் அதிகமாகி விட்டது. உன்னிடம் பிரார்த்தனை செய்து நான் ஏமாற்றம் அடைந்ததில்லை. மாறாக நான் பிரார்த்தனை செய்த போதெல்லாம் நீ எனக்குப் பதிலளித்துள்ளாய்.
(5) 19.5. நான் மரணித்த பிறகு என் உறவினர்கள் அவர்கள் உலக இன்பங்களில் மூழ்கியிருப்பதால் மார்க்கத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்ற மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாக இருக்கிறாள். உன் புறத்திலிருந்து உதவிசெய்யும் பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.
(6) 19.6. அவர் என்னிடமிருந்தும் யஅகூபின் குடும்பத்தினரிடம் இருந்தும் தூதுத்துவத்தை அனந்தரமாகப் பெறுவார். என் -இறைவா!- அவரை மார்க்கத்திலும், குணத்திலும், கல்வியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக ஆக்குவாயாக.
(7) 19.7. அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். “ஸகரிய்யாவே! நாம் உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். உமது பிரார்த்தனைக்கு நாம் விடையளித்து விட்டோம். யஹ்யா என்னும் பெயருடைய ஆண் பிள்ளையை நாம் உமக்கு வழங்குகிறோம். நாம் இதற்கு முன்னர் வேறு யாருக்கும் இந்தப் பெயரை வைத்ததில்லை” என்று அவன் அவரை அழைத்துக் கூறினான்.
(8) 19.8. அவர் அல்லாஹ்வின் வல்லமையை குறித்து வியந்தவராகக் கூறினார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? எனது மனைவியோ பிள்ளை பெற முடியாத மலடியாக இருக்கிறாள். நானோ எலும்புகள் பலவீனமடைந்து வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்துவிட்டேனே!”
(9) 19.9. வானவர் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறுதான். உமது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாகத்தான் இருக்கிறார். நிச்சயமாக நீரோ வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்து எலும்புகளும் பலவீனமடைந்து விட்டன. ஆயினும் உம் இறைவன் கூறினான்: மலடியான தாயிடமிருந்தும், வாழ்வின் இறுதியை அடைந்துவிட்ட தந்தையைக் கொண்டும் யஹ்யாவை உமது இறைவன் படைப்பது எளிதானது. -ஸகரிய்யாவே!- இதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க ஒன்றுமே இல்லாமல் இருந்த உம்மை நான் படைக்கவில்லையா?”
(10) 19.10. ஸகரிய்யா கூறினார்: “என் இறைவா! வானவர்கள் கூறிய நற்செய்தியைக் குறித்து அமைதி பெற்று அதனை அறிவிக்கக்கூடிய அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக.” அவன் கூறினான்: “உமக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி நிகழும் என்பதற்கான அடையாளம், எந்த நோயும் இன்றி மூன்று நாட்கள் வரை உம்மால் மக்களுடன் பேச முடியாதிருப்பதாகும். ஆனால் எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவராகவே இருப்பீர்.
(11) 19.11. ஸகரிய்யா தம் தொழுமிடத்திலிருந்து தம் மக்களிடம் வந்தார். பேசாமல் அவர்களிடம் சைகை மூலம் கூறினார்: “காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.”
(12) 19.12. அவருக்கு யஹ்யா பிறந்தார். யஹ்யா உரையாடும் வயதை அடைந்த போது நாம் அவரிடம் கூறினோம்: “யஹ்யாவே! தவ்ராத்தை உறுதியுடன் பற்றிக் கொள்வீராக.” அவர் சிறுவராக இருந்த போதே நாம் அவருக்குப் புரிதலையும், கல்வியையும், உறுதியையும் வழங்கினோம்.”
(13) 19.13. நாம் நம் புறத்திலிருந்து அவருக்கு அருளை வழங்கினோம். பாவங்களிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினோம். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவராக இருந்தார்.
(14) 19.14. அவர் தம் தாய், தந்தையருக்கு உபகாரம் செய்யக்கூடியவராகவும், மிருதுவாக, அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். அவர் தம் இறைவனுக்கும், அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளக்கூடியவராக இருக்கவில்லை. இறைவனின் கட்டளைக்கோ, தாய், தந்தையரின் கட்டளைக்கோ மாறாகச் செயல்படக்கூடியவராகவும் இருக்கவில்லை.
(15) 19.15. அவர் பிறந்த நாளிலும், மரணித்து வாழ்விலிருந்து வெளியேறும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், பாதுகாப்பும் அவருக்கு உண்டாகட்டும். இந்த மூன்று இடங்களும் மனிதன் மிகவும் அஞ்சக்கூடிய இடங்களாகும். இவற்றில் அவன் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் ஏனைய இடங்களில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.
(16) 19.16. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு தனித்து தூரமாகி கிழக்குத் திசையிலுள்ள ஓரிடத்திற்குச் சென்று விட்டார்.
(17) 19.17. தான் இறைவனை வணங்கும் போது தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலை அனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால் தோன்றினார். தம்முடன் நிச்சயமாக அவர் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணிப் மர்யம் பயந்துவிட்டார்.
(18) 19.18. மர்யம் அவரை குறைகளற்ற மனித உருவில் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது கூறினார்: “-எ மனிதா!- நீ அல்லாஹ்வை பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால் நான் உம்மால் ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”
(19) 19.19. ஜிப்ரீல் கூறினார்: “நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்கு தூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான்.”
(20) 19.20. மர்யம் ஆச்சரியமாகக் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோ என்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும் அல்லவே!?
(21) 19.21. ஜிப்ரீல் அவரிடம் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத் தீண்டியதுமில்லை. விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால் உம் இறைவன் கூறுகிறான், தந்தையின்றி ஒரு குழந்தையை பிறக்கவைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனை மக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும் உமக்கும் அவரை நம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கிறோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும்.
(22) 19.22. வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அதனை எடுத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
(23) 19.23. பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின்பால் கொண்டு சென்றது. மர்யம் கூறினாள்: “நான் இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவுகூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்க வேண்டுமே!
(24) 19.24. மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து மர்யமை ஈஸா அழைத்துக் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர் பருகலாம்”
(25) 19.25. பேரீச்சை தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதிய பேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும்.
(26) 19.26. பேரீச்சம் பழங்களை உண்டு நீரை அருந்துவீராக. உமது குழந்தையைக் கொண்டு மகிழ்ச்சியடைவீராக. கவலைப்படாதீர். மக்களில் யாரையேனும் சந்திக்க நேரிட்டு குழந்தையைக் குறித்து உம்மிடம் கேட்டால், “நான் என் இறைவனுக்காக பேசாமல் மௌன விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்று நான் மக்களில் யாருடனும் பேச மாட்டேன்” என்று கூறுவீராக.
(27) 19.27. மர்யம் தம் மகனை சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவருடைய சமூகத்தார் அவரிடம் வெறுப்போடு கூறினார்கள்: “மர்யமே! நீ பெரும் பாவமான காரியத்தைச் செய்து விட்டாயே! தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துவிட்டாயே!”
(28) 19.28. வணக்க வழிபாட்டில் ஹாரூனைப் போன்றவளே! (அவர் நல்ல மனிதர்) உன் தந்தையும், தாயும் விபச்சாரம் செய்வோராக இருக்கவில்லை! நீ தூய்மையான நற்பெயருள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாயிற்றே! எவ்வாறு தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துள்ளாய்?
(29) 19.29. அவர் தொட்டிலில் இருந்த தம் மகன் ஈஸாவின்பால் சுட்டிக் காட்டினார். அதற்கு அவர்கள் ஆச்சரியமாகக் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறு பேசுவது?”
(30) 19.30. அப்போது ஈஸா கூறினார்: நிச்சயமாக “நான் அல்லாஹ்வின் அடியாராவேன். அவன் எனக்கு இன்ஜீலை வழங்கி என்னை அவனின் நபிமார்களில் ஒருவராகவும் ஆக்கியுள்ளான்.
(31) 19.31. நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராக ஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
(32) 19.32. என் தாய்க்கு நன்மை செய்யக்கூடியவனாக என்னை ஆக்கியுள்ளான். என் இறைவனுக்குக் கட்டுப்படாத கர்வம் கொண்டவனாக, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக அவன் என்னை ஆக்கவில்லை.
(33) 19.33. நான் பிறந்த நாளிலும் மரணிக்கும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமைநாளிலும் ஷைத்தானைவிட்டும் அவனுடைய உதவியாளர்களைவிட்டும் என் இறைவன் என்னைப் பாதுகாத்துள்ளான். இந்த மூன்று கடினமான சூழ்நிலைகளிலும் ஷைத்தான் என்னைத் தீண்டவில்லை.”
(34) 19.34. இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்தான் மர்யமின் மகன் ஈஸா ஆவார். இதுதான் அவருடைய விஷயத்தில் உண்மையான தகவலாகும். அவருடைய விஷயத்தில் சந்தேகம் கொண்டு முரண்பட்டு வழிகெட்டவர்கள் கூறும் விஷயம் உண்மையல்ல.
(35) 19.35. மகனை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு தேவையானது அல்ல. அவன் அதனை விட்டும் தூய்மையானவன். அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் அவன் அவ்விடயத்தில் ‘ஆகு’ என்று கூறி போதுமாக்கிக் கொள்வான். நிச்சயமாக அது ஆகிவிடும். அது அவனுக்கு முடியாதது அல்ல. அவ்வாறானவன் பிள்ளையை விட்டும் பரிசுத்தமானவன்.
(36) 19.36. அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனும் ஆவான். வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குக் கூறிய வழியே அல்லாஹ்வின் திருப்தியின்பால் கொண்டு சேர்க்கும் நேரான வழியாகும்.
(37) 19.37. ஈஸாவின் விஷயத்தில் முரண்படுவோர் முரண்பட்டு, அவரது கூட்டத்துக்கு மத்தியிலேயே பல பிரிவினர்களாக ஆகிவிட்டனர். அவரை நம்பிய சிலர் கூறினார்கள், “அவர் இறைத் தூதர்” என்று. யூதர்களைப் போன்ற இன்னும் சிலர் அவரை மறுத்தனர். பல பிரிவினர்கள் அவருடைய விடயத்தில் எல்லை மீறினர் அவர்களில் சிலர் கூறினர் அவர் இறைவன் என்று, இன்னும் சிலர் கூறினார்கள் “அவர் அல்லாஹ்வின் மகன் என்று.” அதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமாகி விட்டான். நிகழ்வுகள், விசாரணை, தண்டனை போன்ற வரப்போகும் மகத்தான மறுமை நாளில் அவர் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டவர்களுக்கு கேடு உள்ளது.
(38) 19.38. மறுமை நாளில் அவர்கள் எவ்வளவு சிறந்த முறையில் கேட்பார்கள், பார்ப்பார்கள்! கேட்பது பயனளிக்காத போது கேட்பார்கள். பார்ப்பது பயனளிக்காத போது பார்ப்பார்கள். ஆனால் இவ்வுலக வாழ்வில் அநியாயம் இழைத்தவர்கள் நேரான வழியை விட்டு தெளிவான வழிகேட்டில் உள்ளார்கள். மறுமைக்காக அவர்கள் எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. தங்களின் அநியாயத்தில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென அது அவர்களிடம் வந்து விடும்.
(39) 19.39. -தூதரே!- மக்கள் வருத்தப்படும் நாளைக்குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த நாளில் தீய செயல்கள் செய்தவன் தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படுவான். நற்செயல்கள் செய்தவன் தான் இன்னும் அதிகமாக வழிப்பட்டு நற்செயல்கள் செய்யவில்லையே என்று வருத்தப்படுவான். அடியார்களின் பதிவேடுகள் அனைத்தும் சுருட்டப்பட்டுவிடும். அவர்களின் கணக்குகள் முடிக்கப்படும். ஒவ்வொருவரும் தான் முற்படுத்திய செயல்களின்பால் சென்றுவிடுவார்கள். அவர்களோ மறுமையின் மீது அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களின் உலக வாழ்வில் மயங்கியுள்ளார்கள். அவர்கள் மறுமை நாளை நம்புவதில்லை.
(40) 19.40. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகு நிச்சயமாக நாமே நிலைத்திருப்போம். பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் நாமே உரிமையாளர்களாவோம். ஏனெனில் அவர்கள் அழிந்து விடுவார்கள். அவர்களுக்கு பிறகு நாம் எஞ்சியிருப்போம். அவர்களுக்கு நாமே உரிமையாளர்கள். அவர்களுடைய விடயத்தில் நாம் விரும்பியதைச் செயல்படுத்துவோம். விசாரைணைக்கும், கூலி பெறவும் மறுமை நாளில் அவர்கள் நம்மிடம் மட்டுமே திரும்பிவர வேண்டும்.
(41) 19.41. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இப்ராஹீமை பற்றிய செய்தியை நினைவு கூர்வீராக. அவர் உண்மையாளராகவும், அல்லாஹ்வின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும், அல்லாஹ்விடம் இருந்து அனுப்பப்பட்ட நபியாகவும் இருந்தார்.
(42) 19.42. அவர் தம் தந்தை ஆஸரிடம் கூறினார்: “என் தந்தையே! நீங்கள் அழைத்தால் உங்களின் பிரார்த்தனையைச் செவியேற்க முடியாத, நீங்கள் வணங்கினால் உங்கள் வணக்கத்தைப் பார்க்க முடியாத, உங்களுக்கு நன்மையளிக்கவோ உங்களை விட்டு தீங்கினை அகற்றவோ சக்திபெறாத, அல்லாஹ் அல்லாத சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள்?
(43) 19.43. என் தந்தையே! உங்களிடம் வராத அறிவு நிச்சயமாக வஹியின் மூலம் என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறேன்.
(44) 19.44. என் தந்தையே! ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு அவனை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் அளவிலாக் கருணையாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக இருக்கின்றான். ஆதமுக்கு சிரம் பணியுமாறு அவன் அவனுக்கு ஏவிய போது அவன் சிரம்பணியவில்லை.
(45) 19.45. என் தந்தையே! நிச்சயமாக நீங்கள் நிராகரித்த நிலையிலேயே மரணித்து விட்டால் அளவிலாக் கருணையாளனிடமிருந்து ஏதேனும் வேதனை உங்களைத் தாக்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அப்போது நீங்கள் வேதனையில் ஷைத்தானுடன் நட்பு வைத்ததால் அவனுக்கு தோழனாகி விடுவீர்கள்.
(46) 19.46. ஆஸர் தம் மகன் இப்ராஹீமிடம் கூறினார்: “இப்ராஹீமே! நான் வணங்கும் என்னுடைய சிலைகளை நீ புறக்கணிக்கிறாயா? நீ என் சிலைகளைத் திட்டுவதை நிறுத்தவில்லையென்றால் நான் உன்னைக் கல்லால் அடிப்பேன். நீண்ட காலத்திற்கு என்னை விட்டுப் பிரிந்துவிடு. என்னுடன் பேசாதே. என்னுடன் சேரவும் வேண்டாம்”
(47) 19.47. இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறினார்: “என்னிடமிருந்து உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும். நீங்கள் வெறுக்கக்கூடிய எதுவும் என் மூலம் உங்களுக்கு ஏற்படாது. நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்பையும், நேர்வழியையும் வேண்டுவேன். நிச்சயமாக அவன் என்மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.
(48) 19.48. நான் உங்களையும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டு பிரிந்துவிடுகிறேன். நான் என் இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்கின்றேன். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டேன். அப்பொழுதுதான் நான் பிரார்த்தித்தால் அவன் மறுக்க மாட்டான். அவ்வாறு மறுத்தால் அவனைப் பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியசாலியாகி விடுவேன்.
(49) 19.49. அவர் அந்த மக்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டுவிட்ட போது குடும்பத்தை இழந்ததற்கு பகரமாக அவரது மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் நாம் அவருக்கு வழங்கினோம். அவர்கள் இருவரையும் நாம் நபியாக ஆக்கினோம்.
(50) 19.50. நம் அருளால் அவர்களுக்கு தூதுத்துவத்துடன் ஏராளமான நன்மைகளையும் வழங்கினோம். அடியார்களின் நாவுகளில் அவர்களைப் பற்றிய தொடரான நற்புகழையும் ஏற்படுத்தினோம்.
(51) 19.51. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மூஸாவின் செய்தியை குறித்து நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
(52) 19.52. மூஸா (அலை) அவர்கள் இருந்த இடத்திற்கு வலது புறத்தில் இருந்த மலைப் பகுதியிலிருந்து நாம் அவரை அழைத்தோம். அவருடன் இரகசியமாகப் பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம். அங்கு அல்லாஹ் தன் பேச்சை மூசாவுக்கு செவியுறச் செய்தான்.
(53) 19.53. நாம் -அவர் மீது கொண்ட நம் கருணையினாலும் அருளினாலும்-, அவர் தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, அவரது சகோதரர் ஹாரூனையும் நபியாக ஆக்கினோம்.
(54) 19.54. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இஸ்மாயீலின் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றினார். அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
(55) 19.55. அவர் தம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் ஏவக்கூடியவராக இருந்தார். அவர் தம் இறைவனிடத்தில் பிரியத்திற்குரியவராக இருந்தார்.
(56) 19.56. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இத்ரீஸ் அவர்களின் தகவலையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் உண்மையாளராகவும், தம் இறைவனின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும் இருந்தார். அவர் அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகவும் இருந்தார்.
(57) 19.57. நாம் அவருக்கு தூதுத்துவத்தை வழங்கி அவரது புகழை உயர்த்தினோம். எனவே அவர் உயர்ந்த அந்தஸ்துடையவராக இருந்தார்.
(58) 19.58. ஸகரிய்யா முதல் இத்ரீஸ் வரை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் அனைவருக்கும் தூதுப்பணியை அளித்து அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிந்துள்ளான். அவர்கள் ஆதமின் சந்ததியிலும், நூஹுடன் நாம் கப்பலில் சுமந்து சென்றவர்களிலும், இப்ராஹீம் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்களிலும், நாம் இஸ்லாத்தின்பால் நேர்வழி அளித்தவர்களிலும் உள்ளவர்களாவர். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாக ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதைச் செவியுற்றால் அவன் மீதுள்ள பயத்தால் அழுதவர்களாக, அவனுக்குச் சிரம்பணிபவர்களாக இருந்தார்கள்.
(59) 19.59. தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தூதர்களுக்குப் பிறகு தீய வழிகேடர்கள் வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றவில்லை. விபச்சாரம் போன்ற தங்களின் மனம் ஆசை வைக்கும் பாவங்களில் ஈடுபட்டார்கள். விரைவில் அவர்கள் நரகத்தில் தீங்கினையும், ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள்.
(60) 19.60. ஆயினும் தாம் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தவிர. இந்த பண்புகளைப் பெற்றவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த செயல்களின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படாது. அது குறைவாக இருந்தாலும் சரியே.
(61) 19.61. அளவிலாக் கருணையாளன் தன் நல்லடியார்களுக்கு அவர்களை நுழைவிப்பதாக, மறைவாக இருக்கும் போது வாக்களித்த, நிலையான, தங்குமிடமான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அவற்றைக் காணாமலே நம்பிக்கை கொண்டார்கள். சுவனத்தைத் தருவான் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி -மறைவாக இருந்தாலும்- அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
(62) 19.62. அவர்கள் அங்கு மோசமான பேச்சையோ, வீணான வார்த்தையையோ செவியுற மாட்டார்கள். மாறாக ஒருவருக்கொருவர் சலாம் கூறுவதையும் வானவர்கள் அவர்களுக்கு கூறும் சலாமையும்தான் செவியுறுவார்கள். அங்கு அவர்களுக்கு காலையிலும், மாலையிலும் அவர்கள் விரும்புகின்ற உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
(63) 19.63. இப்படிப்பட்ட தன்மைகளையுடைய சுவனத்தைத்தான் நம் கட்டளைகளைச் செயல்படுத்தி, நாம் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்திருக்கக்கூடிய நம் அடியார்களுக்கு நாம் சொந்தமாக்குகின்றோம்.
(64) 19.64. -ஜிப்ரீலே!- முஹம்மதிடம் நீர் கூறும்: “நிச்சயமாக வானவர்கள் தாங்களாவே சுயமாக இறங்குவதில்லை. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இறங்குகிறார்கள். நாங்கள் முன்னோக்கும் மறுமையின் விஷயமும், பின்னால் விட்டுவிடும் உலகத்தின் விஷயமும், உலகம் மற்றும் மறுமைக்கு மத்தியில் இருப்பவையும் அல்லாஹ்வுக்கே உரியன. -தூதரே!- உம் இறைவன் எதையும் மறந்துவிடுபவன் அல்ல.
(65) 19.65. வானங்களையும், பூமியையும், அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றையும் படைத்தவனும், அவற்றின் அதிபதியும், அவற்றை நிர்வகிப்பவனுமாகிய அந்த இறைவனை மட்டுமே வணங்குவீராக. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனை வணங்குவதில் உறுதியாக நிலைத்திருப்பீராக. வணக்கத்திலே அவனுக்கு கூட்டு சேரக்கூடிய ஒப்பான, நிகரானவர் யாரும் இல்லை.
(66) 19.66. மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளன் பரிகாசமாகக் கூறுகிறான்: “நான் இறந்துவிட்டால் என் கப்ரிலிருந்து மீண்டும் இரண்டாவது தடவையாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவேனா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.”
(67) 19.67. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவன், முன்னர் அவன் எதுவாகவும் இல்லாமல் இருந்த நிலையில் நாம் அவனைப் படைத்தோம் என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா? இரண்டாவதாகப் படைக்க முடியும் என்பதற்கு முதலில் படைத்ததை ஆதாரமாகக் கொள்ளமாட்டானா. நிச்சயமாக இரண்டாவதாகப் படைப்பது மிகவும் எளிதானது.
(68) 19.68. -தூதரே!- உம் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்களை கப்ருகளிலிருந்து, அவர்களை வழிகெடுத்த அவர்களின் ஷைத்தான்களோடு அவர்களை மஹ்ஸர் மைதானத்தில் வெளியேற்றி, பின்பு அவர்களை முழங்காளிட வைத்து இழிவுபடுத்தி நரகத்தின் வாயில்களை நோக்கி இழுத்துச் சென்றே தீருவோம்.
(69) 19.69. பின்னர் வழிகெட்ட ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் பாவம் புரிவதில் தீவிரமாக இருந்த அவர்களது தலைவர்களை கடுமையாக இழுத்தெடுப்போம்.
(70) 19.70. பின்பு நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதற்குத் தகுதியானவர்களை நாம் நன்கறிவோம்.
(71) 19.71. -மனிதர்களே!- உங்களிலுள்ள ஒவ்வொருவரும் நரகத்தின் மீதுள்ள அந்த பாதையை கடந்தே தீர வேண்டும். அவ்வாறு கடப்பது அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது.
(72) 19.72. இவ்வாறு பாதையை கடந்த பிறகு தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை நாம் பாதுகாத்திடுவோம். அநியாயக்காரர்களை மண்டியிட்டவர்களாக அப்படியே விட்டு விடுவோம். அவர்களால் அதிலிருந்து தப்ப முடியாது.
(73) 19.73. நம் தூதர் மீது இறக்கப்பட்ட தெளிவான நம் வசனங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்: “இரு பிரிவினரில் யார் நல்ல வசிப்பிடத்தையும், தங்குமிடத்தையும் பெற்றுள்ளார்கள்? யாருடைய சபையும், கூட்டமும் சிறந்தது? எங்களின் கூட்டத்தினரா? அல்லது உங்களின் கூட்டத்தினரா?”
(74) 19.74. தம்மிடமுள்ள சடரீதியான முன்னேற்றத்தைக் கொண்டு பெருமையடிக்கும் இந்த நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் நாம் அழித்த எத்தனையோ சமூகங்கள் உள்ளன! அவர்கள் இவர்களைவிட அதிக செல்வமுடையவர்களாவும் பெறுமதியான ஆடை மற்றும் உடம்பு ஆகியவற்றால் அழகிய தோற்றமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
(75) 19.75. -தூதரே!- நீர் கூறுவீராக: “யார் வழிகேட்டில் தடுமாறித் திரிகிறாரோ அவர் மென்மேலும் வழிகெட வேண்டுமென்பதற்காக அளவிலாக் கருணையாளன் அவருக்கு அவகாசம் வழங்குவான். அவர்கள் இவ்வுலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட விரைவான வேதனையையோ மறுமை நாளில் தாமதமான வேதனையையோ கண்ணால் காணும் போது தீய வசிப்பிடத்தையும் குறைவான உதவியாளர்களையும் பெற்றவர்கள் நம்பிக்கையாளர்களின் கூட்டமா? அல்லது அவர்களின் கூட்டமா? என்பதை அறிந்துகொள்வார்கள்.
(76) 19.76. அவர்கள் மென்மேலும் வழிகெட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு அவன் அவகாசம் அளிப்பதுபோல நேர்வழிபெற்றவர்களின் நம்பிக்கையையும், கீழ்ப்படிதலையும் அவன் அதிகரிக்கச் செய்கிறான். -தூதரே!- நிரந்தர சந்தோசத்தின்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களே உம் இறைவனிடத்தில் பயனுள்ள கூலியையும், சிறந்த முடிவையும் பெற்றுத்தரக்கூடியதாகும்.
(77) 19.77. -தூதரே!- நம்முடைய சான்றுகளையும் மறுத்து, எச்சரிக்கைகளையும் நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகிறான்: “நான் மரணித்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டாலும் ஏராளமான செல்வங்களும், பிள்ளைகளும் வழங்கப்படுவேன்.”
(78) 19.78. அவன் மறைவானவற்றை அறிந்து, அவன் கூறுவதை ஆதாரப்பூர்வமாகத்தான் கூறுகிறானா? அல்லது திடமாக தன்னை சுவனத்தில் நுழைத்துவிட வேண்டும், தனக்கு ஏராளமான செல்வங்களையும், பிள்ளைகளையும் வழங்க வேண்டும் என்று தன் இறைவனிடம் ஏதேனும் வாக்குறுதி பெற்றுள்ளானா?
(79) 19.79. அவன் நினைப்பது போலல்ல விடயம். அவன் கூறுவதையும் செய்வதையும் நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அவன் பொய் கூறுவதால் அவனுக்கு வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்துவோம்.
(80) 19.80. அவனை அழித்த பிறகு அவன் விட்டுச்சென்ற செல்வங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நாமே உரிமையாளர்களாவோம். அவன் அனுபவித்துக் கொண்டிருந்த பணமும், பதவியும் பறிக்கப்பட்டு, மறுமை நாளில் நம்மிடம் தனியாகவே வருவான்.
(81) 19.81. தங்களுக்கு உதவுவார்கள் என்று இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
(82) 19.82. அவர்கள் நினைப்பது போலல்ல விடயம். அல்லாஹ்வைவிடுத்து அவர்கள் வணங்கும் தெய்வங்கள், மறுமை நாளில் இணைவைப்பாளர்கள் தங்களை வணங்கியதையே மறுத்துவிடும். அவர்களை விட்டு நீங்கி அவர்களுக்கு எதிரிகளாகிவிடும்.
(83) 19.83. -தூதரே!- நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை அனுப்பி நிராகரிப்பாளர்களின் மீது அவர்களை ஆதிக்கம் கொள்ளச் செய்கிறோம். அவர்கள் இந்த நிராகரிப்பாளர்களை பாவங்கள் செய்வதன் பக்கமும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுப்பதன் பக்கமும் நன்கு தூண்டுகிறார்கள்.
(84) 19.84. -தூதரே!- அல்லாஹ் அவர்களை விரைவாக அழிக்க வேண்டுமென அவனிடம் அவசரமாக கோரிக்கை வைக்க வேண்டாம். நாம் அவர்களின் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவகாச நேரம் முடிந்தவுடன் நாம் அவர்களுக்குத் தகுந்த விதத்தில் அவர்களை தண்டிப்போம்.
(85) 19.85. -தூதரே!- அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி, விலக்கல்களைத் தவிர்ந்து அவனை அஞ்சியவர்களை கௌரவமாகவும், கண்ணியமாகவும் அவர்களின் இறைவனிடம் குழுவாக நாம் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக.
(86) 19.86. நிராகரிப்பாளர்களை தாகமுள்ளவர்களாக நரகத்தை நோக்கி இழுத்துச் செல்வோம்.
(87) 19.87. இந்த நிராகரிப்பாளர்கள் தங்களில் சிலருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றிருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு இவ்வுலகில் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் பெற்றவர்களைத் தவிர.
(88) 19.88. அல்லாஹ் தனக்கு ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று யூதர்களும் கிருஸ்தவர்களும் சில இணைவைப்பாளர்களும் கூறுகிறார்கள்.
(89) 19.89. -இவ்வாறு கூறுபவர்களே!- நீங்கள் பெரும் ஒரு தவறை இழைத்துவிட்டீர்கள்.
(90) 19.90. இந்த தீய வார்த்தையினால் வானங்கள் வெடித்து விடலாம்; பூமி துண்டு துண்டாகி விடலாம்; மலைகள் இடிந்து விழலாம்.
(91) 19.91. இவையனைத்தும் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு ஒரு மகனை இணைத்துக்கூறினார்கள் என்பதனால்தான். இவ்வாறு ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
(92) 19.92. மகனை ஏற்படுத்திக் கொள்வது அளவிலாக் கருணையாளனுக்கு உகந்த விஷயமல்ல. எனெனில் அவன் அதனை விட்டும் பரிசுத்தமானவன்.
(93) 19.93. நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியில் உள்ள வானவர்கள், மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடம் பணிந்தவர்களாக வந்தே ஆக வேண்டும்.
(94) 19.94. அவன் அவர்கள் அனைவரையும் அறிவால் சூழ்ந்துள்ளான். அவர்களைக் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக முடியாது.
(95) 19.95. எந்த உதவியாளனும், சொத்துக்களும் இன்றி அவர்களில் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்கள்.
(96) 19.96. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டவர்களை தானும் நேசித்து, தனது அடியார்களுக்கும் அவர்களை நேசிக்கச் செய்து அவர்கள் மீது அன்பை ஏற்படுத்துவான்.
(97) 19.97. -தூதரே!- நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம். அது, என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சக்கூடியவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்காகவும் சத்தியத்திற்குக் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளுவதிலும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய கடும் பகையான கூட்டத்தை நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.
(98) 19.98. உம் சமூகத்திற்கு முன்னர் நாம் அழித்த சமூகங்கள் எவ்வளவோ உள்ளன. இன்று அவர்களில் யாரையாவது நீர் உணர்கிறீரா? அல்லது அவர்களின் ஏதேனும் சத்தத்தையேனும் செவியுறுகிறீரா? அல்லாஹ் அனுமதிக்கும் போது அவர்களுக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கும் நேரும்.