2 - ஸூரா அல்பகரா ()

|

(1) 2.1. الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது. ஆனால், குர்ஆனில் எதுவும் நோக்கமின்றிக் கூறப்பட்டிருக்காது என்பதால் இவ்வாறான எழுத்துகள் இடம்பெறுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அறபிகள் பேசுவதற்குப் பயன்படுத்துகிற அவர்களுக்குத் தெரிந்த அதே எழுத்துகளின் மூலம் அமைந்த குர்ஆனைக் கொண்டு சவால் விடுவதே அந்த நோக்கமாகும். அதனால்தான் பெரும்பாலும் இந்த எழுத்துகளைக் குறிப்பிட்ட பின்னர் குர்ஆனைப் பற்றியே பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்திலும் அவ்வாறே வந்துள்ளது.

(2) 2.2. மகத்துவமிக்க இந்தக் குர்ஆன் இது இறங்கிய மூலத்தின் அடிப்படையிலும், உச்சரிப்பு மற்றும் பொருளின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தனக்குப் பயப்படக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் வரக்கூடிய வழியைக் காட்டுகிறான்.

(3) 2.3. அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

(4) 2.3. அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

(5) 2.5. இந்தப் பண்புகளால் தங்களை அலங்கரித்தவர்கள்தாம் நேர்வழியின் பாதையில் இருப்பவர்கள். தாங்கள் ஆதரவு வைத்ததை அடைந்து, அச்சப்பட்டவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற்று இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெறக்கூடியவர்கள் இவர்களே.

(6) விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் முடிவு விதியானவர்கள் அவர்களின் வழிகேட்டிலும், பிடிவாதத்திலும் தொடர்ந்திருப்பார்கள். எனவே நீர் அவர்களை எச்சரிப்பதும் எச்சரிகாதிருப்பதும் சமமே.

(7) 2.7. ஏனெனில் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு அதிலிருக்கும் அசத்தியத்தோடு அதனைப் பூட்டிவிட்டான். அவர்களுடைய செவிகளின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். எனவே, அவர்களால் சத்தியத்தைச் செவியுற்று அதற்குக் கீழ்ப்படிய முடியாது. அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையைப் போட்டுவிட்டான். ஆகவே, சத்தியம் தெளிவாக இருந்தும் அதனை அவர்களால் காணமுடியாது. மறுமையில் அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

(8) 2.8. தங்களைத் தாங்களே நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் மக்களில் உள்ளனர். தங்களின் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆபத்து வருவதைப் பயந்து தங்களை விசுவாசிகள் என்று நாவால் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் உள்ளத்தால் நிராகரிப்பாளர்கள்.

(9) 2.9. விசுவாசம் கொண்டிருப்பதாக வெளியே காட்டிவிட்டு, நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வையும், நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றிவிடலாம் என்று தமது அறியாமையின் காரணமாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆயினும், அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அல்லாஹ் இரகசியத்தையும் அதனை விட மறைவானதையும் அறிகிறான். அவர்களின் பண்புகளையும், நிலமைகளையும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்தும் விட்டான்.

(10) 2.10. காரணம், அவர்களின் உள்ளங்களில் சந்தேகம் இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்திவிட்டான். செயலின் தன்மைக்கேற்பத்தான் கூலியும் வழங்கப்படும். அல்லாஹ்விடமும் மக்களிடமும் அவர்கள் பொய் கூறியதாலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த தூதை நிராகரித்ததாலும் நரகத்தின் அடித்தளத்தில் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

(11) 2.11. அல்லாஹ்வை நிராகரிப்பது, பாவங்கள் புரிவது மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்து உலகில் குழப்பம் விளைவிப்பதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டால் அதனை ஏற்க மறுத்து, நாங்கள்தாம் நல்லவர்கள், சீர்திருத்தம் செய்பவர்கள் என்று கூறுகிறார்கள்.

(12) 2.12. உண்மையில் இவர்கள்தாம் குழப்பம் ஏற்படுத்துகிறவர்கள். ஆயினும், அவர்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. அவர்களது செயலே குழப்பம்தான் என்பதைப் புரியாமல் உள்ளனர்.

(13) 2.13. நபியின் தோழர்கள் நம்பிக்கைகொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால்,மூடர்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும்,இதனை அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

(14) 2.14. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்தித்தால் அவர்களுக்குப் பயந்து, நீங்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்று தங்களின் தலைவர்களுடன் தனித்திருக்கும்போதோ, நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்வதற்காகத்தான் வெளிப்படையில் அவர்களுடன் ஒத்துப்போகின்றோம் எனக் கூறி தங்களின் விசுவாசத்தை அவர்களிடம் உறுதிப்படுத்துகிறார்கள்.

(15) 2.15. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களை இவர்கள் பரிகாசம் செய்ததற்குப் பகரமாக அல்லாஹ்வும் இவர்களைப் பரிகாசம் செய்கிறான். இவர்களின் செயல்களுக்கு ஏற்ற கூலியைத்தான் இவ்வாறு கொடுக்கிறான். இதனால் இவர்களின் விஷயத்தில் முஸ்லிம்களுக்குரிய சட்டத்தையே இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறான். மறுமையிலோ இவர்களின் நிராகரிப்புக்கும் நயவஞ்சகத்திற்குமான கூலியைக் கொடுத்துவிடுவான். இவர்களுக்கு அவன் அவகாசம் கொடுத்திருப்பதின் நோக்கமே, இவர்கள் வழிகேட்டில் முன்னேறிக்கொண்டே சென்று தடுமாறியவர்களாக நிலைத்திருக்கட்டும் என்பதற்குத்தான்.

(16) 2.16. இப்பண்புகளுக்குரிய அந்த நயவஞ்கர்கள்தான் ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வதை இழந்துவிட்டதனால் இவர்களின் இந்த வியாபாரம் பலனளிக்கவில்லை; சத்தியத்தின் பக்கம் செல்கின்ற நேரான வழியையும் இவர்கள் பெற்றுக்கொள்வதாக இல்லை.

(17) 2.17. இந்த நயவஞ்சகர்களுக்கு நெருப்பைக் கொண்டும் நீரைக் கொண்டும் அல்லாஹ் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறான். நெருப்பைக் கொண்டு கூறப்படும் உதாரணம், அவர்கள் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பை மூட்டினார்கள். அது ஒளி வீசி அதிலிருந்து அவர்கள் பயனடைய எண்ணியபோது அந்த ஒளி அணைந்து வெப்பம் மட்டுமே எஞ்சிவிட்டது. இதன் விளைவாக, அவர்கள் எதையும் பார்க்கவோ, எந்த வழியையும் அறியவோ முடியாத இருட்டில் மூழ்கிவிட்டார்கள்.

(18) 2.18. அவர்கள், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் செவிமடுக்காத செவிடர்கள்; அதனைப் பேசாத ஊமையர்கள். அதனைப் பார்க்காத குருடர்கள். எனவே, தமது வழிகேட்டிலிருந்து அவர்கள் திரும்பமாட்டார்கள்.

(19) 2.19. தண்ணீரைக் கொண்டு கூறப்படும் உதாரணம், மேகம் கறுத்து இருள் சூழ இடியும் மின்னலுமாகப் பெய்யும் பேய்மழையில் சிக்கிவிட்ட ஒரு கூட்டத்தின் நிலைமைக்கு ஒப்பாகும். அதனால் அவர்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். கடுமையான இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள். நிராகரிப்பாளர்களை அல்லாஹ் சூழ்நதுள்ளான். அவனிடமிருந்து அவர்கள் தப்பவே முடியாது.

(20) 2.20. பளீரென்று ஒளிரும் வெளிச்சத்தாலும் பளபளப்பாலும் அந்த மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது வெளிச்சம் தரும்போதெல்லாம் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். அது வெளிச்சம் தராதபோது அசையாமல் இருளில் அப்படியே நின்றுவிடுகிறார்கள். சத்தியத்தை அவர்கள் புறக்கணித்தனால் அல்லாஹ் நாடினால் அனைத்தையும் வியாபித்த தனது ஆற்றலினால் அவர்களின் செவிப்புலனையும் பார்வையையும் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காத வகையில் பறித்துவிடுவான். இங்கு மழை என்பது குர்ஆனையும் இடிமுழக்கம் என்பது அதிலுள்ள எச்சரிக்கைகளையும் மின்னல் வெளிச்சம் என்பது சிலவேளை அவர்களுக்குத் தோன்றும் சத்தியத்தையும், இடிமுழக்கங்களால் காதுகளை அடைத்துக்கொள்ளுதல் என்பது சத்தியத்தை அவர்கள் புறக்கணித்து அதற்குப் பதிலளிக்காதிருப்பதையும் குறிக்கிறது. இந்த இரண்டு உதாரணங்களில் கூறப்பட்டோருக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமை, பயனடையாமை ஆகும். நெருப்பு உதாரணத்தில் அதனை மூட்டியவன் இருளையும் வெப்பத்தையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. நீரைக் கொண்டு சொல்லப்பட்ட உதாரணத்தில் மழையைப் பெற்றவர்கள் தங்களைப் பயமுறுத்திச் சிரமப்படுத்துகிற இடியையும் மின்னலையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. இவ்வாறே நயவஞ்சகர்களும் இஸ்லாமில் கடுமையையும் சிரமத்தையும் தவிர வேறொன்றையும் காணமாட்டார்கள்.

(21) 2.21. மனிதர்களே! உங்கள் இறைவனை மட்டுமே வணங்குங்கள். ஏனெனில், அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்த சமூகங்களையும் படைத்தான். இதனால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

(22) 2.22. அவன்தான் உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், அதற்கு மேலே வானத்தை நன்கு கட்டமைக்கப்பட்ட முகடாகவும் ஆக்கினான். அவனே மழையைப் பொழிய வைத்து அருட்கொடைகளை அளிப்பவன். அதன் மூலம் பல வகையான தாவரங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன். எனவே, அவனைத்தவிர வேறு படைப்பாளி எவனுமில்லை என்பதை அறிந்துகொண்டே அவனுக்கு இணைகளையோ பங்காளிகளையோ ஏற்படுத்திவிடாதீர்கள்.

(23) 2.23. மனிதர்களே! நம்முடைய அடியார் முஹம்மது மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால் நாம் உங்களுக்குச் சவால் விடுகிறோம். உங்கள் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். அது மிகச்சிறிய அத்தியாயமாக இருந்தாலும் சரியே. முடியுமான உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.

(24) 2.24. நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாதுதான். தண்டனைக்குரிய மனிதர்களையும் மற்றும் அவர்கள் வணங்கிவந்த, வணங்காத பலவகை கற்களையும் எரிபொருளாகக்கொண்டு எரிக்கப்படுகின்ற நரக நெருப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். தன்னை நிராகரிப்பவர்களுக்காகவே அல்லாஹ் இந்த நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளான்.

(25) 2.25. முன்னர் கூறப்பட்ட எச்சரிக்கை நிராகரிப்பாளர்களுக்குரியதாகும். தூதரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வூட்டும் சொர்க்கச் சோலைகள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றின் தூய்மையான பழங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்படும்போதெல்லாம் அவை உலகிலுள்ள பழங்களை ஓத்திருப்பதைப்பார்த்து, இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வடிவத்திலும் பெயரிலும் ஒத்த, சுவையில் வேறுபட்ட பழங்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். மனித மனமும் இயல்பும் வெறுக்கும் இவ்வுலகில் உள்ளோரிடம் காணப்படும் அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கிய தூய்மையான துணைகளும் சொர்க்கத்தில் அவர்களுக்கு உண்டு. முடிந்துவிடும் உலக இன்பத்திற்கு மாற்றமாக என்றும் முடிவடையாத நிரந்தரமான இன்பத்தில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.

(26) 2.26. தான் விரும்பும் உதாரணங்களைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அவன் கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ, பெரியதையோ உதாரணங்களாகக் கூறுகிறான். இவ்விஷயத்தில் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், அவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்கள், அவனை நிராகரிப்பவர்கள். இந்த இருவரில் அவன்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அவன் கூறியதை உண்மைப்படுத்தி, இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆனால், அவனை நிராகரிப்பவர்களோ, கொசு, ஈ, சிலந்தி போன்ற அற்பமான படைப்பினங்களையா உதாரணம் கூறுவது? என்று பரிகாசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான பதிலை அல்லாஹ்வே கூறுகிறான்: இந்த உதாரணங்களில் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் மக்களுக்குச் சோதனையும் இருக்கின்றன. இவற்றைச் சிந்திக்காத காரணத்தால் அவர்களில் அதிகமானவர்களை அவன் வழிதவறச் செய்கிறான். அவர்களில் இவற்றின் மூலம் படிப்பினை பெற்ற அதிகமானோருக்கு அவன் வழிகாட்டவும் செய்கிறான். வழிகேட்டிற்குத் தகுதியானவர்களைத்தான் வழிகேட்டில் ஆழ்த்துகிறான். நயவஞ்சகர்களைப் போல அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களே அவர்கள்.

(27) 2.27. தன்னை மட்டுமே வணங்குமாறும், முன் சென்ற தூதர்கள் அறிவித்துவிட்டுச் சென்ற தனது தூதரைப் பின்பற்றுமாறும் அல்லாஹ் அவர்களிடம் செய்த உடன்படிக்கையை அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிக்கும் இவர்கள் அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த சொந்தங்களையும் துண்டித்துவிடுகிறார்கள். பாவங்களின் மூலம் பூமியில் குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்கள்.

(28) 2.28. நிராகரிப்பாளர்களே! உங்களின் விஷயம் ஆச்சரியமானது. அல்லாஹ்வை எப்படித்தான் மறுக்கிறீர்கள்!? அவனுடைய வல்லமைக்குரிய சான்றுகளை உங்களுக்குள்ளும் நீங்கள் காண்கிறீர்களே!? ஒன்றும் இல்லாத நிலையில் நீங்கள் இருந்தீர்கள். அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு உயிரளித்தான். பின்னர் மீண்டும் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். நீங்கள் செய்த செயல்களுக்கு அவன் உங்களிடம் விசாரணை செய்வதற்காக அவனிடமே நீங்கள் திரும்ப வேண்டும்.

(29) 2.29. பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள் மற்றும் எண்ண முடியாத எத்தனையோ படைப்பினங்களை அல்லாஹ் ஒருவனே உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்ததை அனுபவித்து அவற்றின் மூலம் பயனடைகிறீர்கள். பின்னர் வானத்தைப் படைக்க விரும்பி, அதனை சமமான ஏழு வானங்களாகப் படைத்தான். அவனது அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது.

(30) 2.30. வானவர்களிடம் பின்வருமாறு உரையாடியதை அல்லாஹ் அறிவிக்கிறான்: நான் பூமியில் மனிதர்களை ஏற்படுத்தப் போகின்றேன். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பூமியை வாளப்படுத்துவதற்கு அவர்கள் தங்களுக்குள் தொன்றுதொட்டு உருவாகும் தலைமுறைகளாக இருப்பார்கள்.வானவர்கள் தங்கள் இறைவனிடம், பூமியில் ஆதமுடைய மக்களை வழித்தோன்றல்களாக ஆக்குவதின் காரணம் என்ன? அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து அநியாயமாக இரத்தம் சிந்துவார்களே? என்று அறியாதவர்களாக, தெளிவடைய வேண்டி கேட்ட அவர்கள், நாங்கள் உனக்குக் கீழ்ப்படிகின்றோம்; உனது தூய்மையைப் பறைசாற்றி உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்; உனது கண்ணியத்தையும், பரிபூரணத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்கள். அதற்கு அல்லாஹ், அவர்களைப் படைப்பதன், வழித்தோன்றல்களாக ஆக்குவதன் நோக்கங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று கூறினான்.

(31) 2.31. ஆதமின் அந்தஸ்தை தெளிவுபடுத்துவதற்காக அவருக்கு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்தின் பெயா்களையும், வார்த்தைகளையும், விளக்கங்களையும் அல்லாஹ் கற்றுக்கொடுத்தான். பின்னர் வானவர்களிடம் அப்பெயர்குறிக்கப்பட்ட பொருட்களை முன்வைத்து, இந்த படைப்பைவிட நீங்கள்தாம் கண்ணியமானவா்கள் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான்.

(32) 2.32. அவர்கள் தங்களின் தவறை ஒத்துக்கொண்டவர்களாகவும் அருளுக்குரியவன் அல்லாஹ் என்பதை ஏற்றவர்களாகவும், எங்கள் இறைவா, உன்னுடைய கட்டளைகளில் ஆட்சேபனை எழுப்புவதை விட்டுவிட்டு உன் தூய்மையை நாங்கள் பறைசாற்றுகின்றோம். நீ எங்களுக்குக் கற்றுத்தந்ததைத்தவிர நாங்கள் எதையும் அறியமாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவன். எதுவுமே உன்னை விட்டு மறைவாக இல்லை. நீ ஏற்படுத்தும் விதிகளிலும் கட்டளைகளிலும் ஞானம்மிக்கவன் என்று கூறினார்கள்.

(33) 2.33. அப்போது அல்லாஹ் ஆதமிடம், இப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக என்று கூறினான். தம் இறைவன் கற்றுத் தந்தவாறு அவர் அறிவித்தபோது, அல்லாஹ் வானவர்களிடம் கூறினான்,நான் உங்களிடம் கூறவில்லையா? வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று.

(34) 2.34. ஆதமுக்கும் கண்ணியமளிக்கும் விதமாக சிரம்பணியுங்கள் என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டதை தெளிவுபடுத்துகின்றான். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து நிறைவேற்றினார்கள். ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸைத் தவிர. கர்வத்தினால் ஆதமுக்கு சிரம்பணிய வேண்டுமென்ற அல்லாஹ்வின் கட்டளையை ஆட்சேபித்து அவன் சிரம்பணிய மறுத்தான். அதனால் அவன் அல்லாஹ்வை நிராகரித்தவர்களில் ஒருவனாகிவிட்டான்.

(35) 2.35. நாம் கூறினோம்: ஆதமே, நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கிருந்து நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் நான் தடுத்த இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். என்னுடைய கட்டளையை மீறி நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.

(36) 2.36. ஷைத்தான் அவ்விருவருக்கும் தொடர்ந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட அந்த விஷயத்தை அலங்கரித்துக் காட்டினான். எந்த அளவுக்கெனில், அல்லாஹ் அவர்களுக்குத் தடைசெய்த மரத்திலிருந்து உண்டு பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாக அவ்விருவரும் இருந்த சொர்க்கத்திலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அப்போது அவர்களிடமும் ஷைத்தானிடமும் பின்வருமாறு கூறினான்: பூமியில் இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து மறுமை நிகழ முன் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கையும் உண்டு. அதிலுள்ள வளங்களை அனுபவித்துக்கொள்ளவும் முடியும்.

(37) 2.37. உள்ளுதிப்பின் மூலம் அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனையைக் கொண்டு ஆதம் அவனிடம் பிரார்த்தனை செய்தார். அதுதான் பின்வரும் பிரார்த்தனையாகும். எங்கள் இறைவா, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எங்கள்மீது கருணை காட்டவில்லையெனில் நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (7:23) அல்லாஹ் அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தான். அல்லாஹ், தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக, அவர்களின் விஷயத்தில் கருணைமிக்கவனாக இருக்கின்றான்.

(38) 2.38. நாம் அவர்களிடம் கூறினோம்: நீங்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். என் தூதர்களின் மூலமாக உங்களிடம் வழிகாட்டுதல் வரும்போது, யார் என் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்கள் மறுமையில் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்த விஷயங்களை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள்.

(39) 2.39. நிராகரித்து நம்முடைய வசனங்களை பொய் எனக்கூறி மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.

(40) 2.40. அல்லாஹ்வின் தூதர் யஅகூபின் மக்களே! அல்லாஹ் தொடர்ந்து உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றிற்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை பேணிக்கொள்ளுங்கள். அது என்மீதும் என்னுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு என்னுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதாகும். நீங்கள் உங்களின் வாக்குறுதியை நிறைவேற்றினால் இவ்வுலகில் நிம்மதியான வாழ்வையும் மறுவுலகில் சிறந்த கூலியையும் தருவேன் என்று நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். எனக்கு மட்டுமே அஞ்சுங்கள். என்னிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விடாதீர்கள்.

(41) 2.41. முஹம்மது மீது நான் இறக்கிய குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அது தவ்ராத் திரிக்கப்படுவதற்கு முன்னர் அதிலிருந்த அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் முஹம்மதின் தூதுத்துவம் குறித்து கூறப்பட்ட விஷயங்களை உண்மைப்படுத்துகிறது. அதனை நிராகரிக்கும் முதல் கூட்டமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். நான் இறக்கிய வசனங்களை பதவி, பட்டம் போன்ற அற்ப ஆதாயத்திற்காக விற்றுவிடாதீர்கள். என் கோபத்தையும், தண்டனையையும் அஞ்சிக் கொள்ளுங்கள்.

(42) 2.42. என் தூதர்களுக்கு நான் இறக்கிய சத்தியத்தை உங்களின் புனைந்துகூறும் பொய்களோடு கலந்துவிடாதீர்கள். உங்களின் வேதங்களில் முஹம்மதின் பண்புகளைக் குறித்து வந்துள்ள விஷயங்களை உறுதியாக அறிந்துகொண்டே அவற்றை மறைத்துவிடாதீர்கள்.

(43) 2.43. தொழுகையை அதன் ருகுன்களோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஜகாத்தை அளியுங்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த முஹம்மதுடைய சமூகத்தினரோடு சேர்ந்து நீங்களும் அவனுக்குக் கீழ்ப்படியுங்கள்.

(44) 2.44. உங்களை நீங்கள் மறந்துவிட்டு மற்றவர்களை ஈமான் கொள்ளும்படியும், நற்செயல் புரியும்படியும் ஏவுவது எவ்வளவு மோசமானது! நீங்கள் தவ்ராத்தை படித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அதில்தானே கூறப்பட்டுள்ளது!? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா என்ன?

(45) 2.45. மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைத்து அவனுடன் இணைக்கும் தொழுகையைக் கொண்டும் உதவிதேடுங்கள். அவன் உங்களுக்கு உதவிசெய்வான்; உங்களைப் பாதுகாப்பான்; உங்களைப் பீடித்திருக்கும் துன்பத்தையும் போக்குவான். நிச்சயமாக தொழுகை, தங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் பாரமானது.

(46) 2.46. ஏனெனில் அவர்கள்தாம், மறுமைநாளில் தங்கள் இறைவனை சந்தித்தே தீர வேண்டும், தங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிந்தவர்கள்.

(47) 2.47. இஸ்ராயீலின் மக்களே! நான் உங்கள்மீது பொழிந்த மார்க்க மற்றும் உலகியல்ரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் மற்ற எல்லா மக்களைவிடவும் தூதுத்துவம் மற்றும் அரசாட்சியைக் கொண்டு உங்களை சிறப்பித்ததை நினைத்துப் பாருங்கள்.

(48) 2.48. நான் கட்டளையிட்டவற்றை செயல்படுத்தி, தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் எவரும் மற்றவருக்கு எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. எவரிடமிருந்து தீங்கை அகற்றுதல் அல்லது நன்மையைக் பெற்றுக்கொள்வதற்கான எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஆயினும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தவிர. ஒருவர் பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொண்டு வந்தாலும் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. அந்நாளில் அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரும் கிடையாது. பரிந்துரையாளரோ ஈட்டுத்தொகையோ உதவியாளரோ பயனளிக்காத போது எங்கே ஓடமுடியும்?

(49) 2.49. இஸ்ராயீலின் மக்களே! ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களை பல்வேறு வேதனைகளில் ஆழ்த்தியிருந்தார்கள். உங்கள் ஆண்மக்கள் எவரையும் விட்டுவைக்கமால் கொன்று கொண்டிருந்தார்கள். உங்களை மென்மேலும் இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக தமக்குச் சேவை புரிய உங்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவந்தார்கள். ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனைப் பின்பற்றியவர்களிடமிருந்தும் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியமை, நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா என்பதற்கான உங்கள் இறைவனின் பெரும் பரீட்சையாகும்.

(50) 2.50. நாம் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காக கடலைப் பிளந்து அதில் நீங்கள் செல்லும் காய்ந்த பாதையை உருவாக்கினோம். உங்களைக் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களின் கண்முன்னால் ஃபிர்அவ்னையும் அவனைப் பின்பற்றியவர்களையும் மூழ்கடித்தோம்.

(51) 2.51. நாம் மூசாவுக்கு, ஒளி மற்றும் நேர்வழியை உள்ளடக்கிய தவ்ராத்தை அருளுவதற்காக நாற்பது இரவுகளை வாக்களித்ததையும் நினைத்துப் பாருங்கள். இருந்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளேயே நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டீர்கள். இந்த செயலின் மூலம் நீங்கள் அக்கிரமக்காரர்களாக இருந்தீர்கள்.

(52) 2.52. பிறகு நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் அல்லாஹ்வை நல்லமுறையில் வழிபட்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து நன்றிசெலுத்துவதற்காக நாம் உங்களைத் தண்டிக்கவில்லை.

(53) 2.53. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், நீங்கள் நேர்வழியை அடையும் பொருட்டு நாம் மூசாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடியதாகவும், நேர்வழியையும் வழிகேட்டையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது.

(54) 2.54. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், காலைக் கன்று வணக்கதிலிருந்து பாவமன்னிப்புக் கோருவதற்கு அல்லாஹ் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினான், உங்களைப் பார்த்து மூஸா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார் நீங்கள் காளைக்கன்றை வணங்கி உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொண்டதனால், உங்களில் சிலர் சிலரைக் கொன்று உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பக்கமே திரும்புங்கள். இவ்வாறு பாவமன்னிப்புக் கோருவது நிரந்தர நரகில் இட்டுச்செல்லும் நிராகரிப்பைத் தொடர்வதை விடச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் அவ்வாறு செய்தீர்கள். அவன் உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் அடியார்கள் விஷயத்தில் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

(55) 2.55,56. பின்வரும் சம்பவத்தையும் நினைத்துப் பாருங்கள், உங்களின் முன்னோர்கள் மூசாவிடம், நாங்கள் அல்லாஹ்வை கண்ணால் காணும்வரை நம்ப மாட்டோம் என்று துணிந்து கூறியபோது நெருப்பு உங்களைத் தாக்கியது. உங்களில் சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உங்களைப் பொசுக்கிவிட்டது.

(56) 2.56.பிறகு அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்த பின்னரும் நாம் உங்களுக்கு உயிர் கொடுத்தோம்.

(57) 2.57. நாம் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, பூமியில் நீங்கள் தடுமாறித் திரிந்தபோது சூரிய வெப்பத்திலிருந்து உங்களைக்காக்க மேகத்தை உங்கள்மீது நிழலிடச் செய்தோம். உங்கள்மீது தேனைப்போன்று இனிப்பான பானமான "மன்னு" வையும் காடையை ஒத்த தூய்மையான இறைச்சியைக்கொண்ட "சல்வா" என்னும் பறவையையும் இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள் என்று நாம் உங்களிடம் கூறினோம். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் நமக்கு எந்தக் குறையையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக தமக்குக் கிடைக்கவிருந்த கூலியை இழந்து தம்மை தண்டனைக்குற்படுத்திக் கொண்டதன் மூலம் தமக்குத்தாமே அநியாயம் இழைத்துக்கொண்டனர்.

(58) 2.58. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப்பாருங்கள்: நாம் உங்களிடம் கூறினோம், பைத்துல் முகத்திஸில் நுழைந்துவிடுங்கள். அங்கு நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தூய்மையான உணவுகளை தாராளமாக உண்ணுங்கள். அங்கு நுழையும்போது அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக, எங்கள் இறைவனே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக என்று கூறியவாறு நுழையுங்கள். நாம் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வோம். நன்மைகள் புரிந்தவர்களுக்கு மேலதிகமாக நன்மைகளையும் வழங்குவோம்.

(59) 2.59. அவர்களில் அக்கிரமக்காரர்கள் செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் மாற்றிவிட்டார்கள். தங்களின் பிட்டத்தால் தவழ்ந்தவாறு, முடியில் ஒரு தானியம் என்று பரிகாசமாக திரித்துக்கூறியவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் மார்க்கத்தின் வரம்பை மீறி கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டதால் அநியாயக்காரர்களான அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை அவன் இறக்கினான்.

(60) 2.60. நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். கடுமையான தாகத்தால் பாதிக்கப்பட்டீர்கள். மூசா தன் இறைவனிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். நாம் அவரது கைத்தடியால் ஒரு பாறையில் அடிக்கும்படி கட்டளையிட்டோம். அவர் அடித்தபோது உங்களுடைய குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி எழுந்தன. உங்களிடையே பிரச்சனை மூண்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களுக்குரிய அருந்தும் பகுதியைத் தெளிவுபடுத்தினோம். உங்களிடம் கூறினோம், உங்களுடைய எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் உணவுகளை உண்ணுங்கள், பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்.

(61) 2.61. மேலும் உங்கள் இறைவனது அருட்கொடைக்கு நன்றிகெட்டமுறையில் நடந்துகொண்ட சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய மன்னு, சல்வா என்னும் உணவுகள் உங்களுக்கு சலித்துப்போய், மாறாத ஒரே வகையான உணவுகளை எங்களால் சகிக்க முடியாது என்று கூறினீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளியாக்கித் தருமாறு மூஸாவிடம் வேண்டினீர்கள். அதற்கு மூஸா உங்களைக் கண்டித்தவாறு, எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைக்கின்ற மன்னு, சல்வா என்னும் சிறந்த உணவுகளுக்குப் பதிலாக அற்பப் பொருளையா வேண்டுகிறீர்கள்? இந்த பூமியிலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லுங்கள். அதன் வயல்களிலும், கடைவீதிகளிலும் நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தேர்ந்தேடுத்ததை புறக்கணித்துவிட்டு தங்களுடைய மன இச்சைகளை அவர்கள் பின்பற்றியதனால் இழிவும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்து அவனுடைய சான்றுகளை நிராகரித்து அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். இவையனைத்தும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அவன் விதித்த வரம்புகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.

(62) 2.62. இந்த சமூகத்தில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், அது போன்று முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னுள்ள சமூகத்தில் நம்பிக்கை கொண்ட யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபீயீன்கள் (அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட ஒரு நபியின் சமூகம்) ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. மறுமையில் அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உலகில் இழந்துவிட்ட விஷயங்களுக்காகவும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

(63) 2.63. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று உறுதியான வாக்குறுதியை நாம் உங்களிடம் வாங்கியதை நினைவுகூருங்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் மீறாமல் இருப்பதற்காக, உங்களை எச்சரிக்கும் பொருட்டு உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் உங்களுக்கு இறக்கிய தவ்ராத்தை அலட்சியமின்றி, முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வேதனையை விட்டு தப்பித்துக்கொள்ளும் பொருட்டு அதனைப் பேணிக்கொள்ளுங்கள், அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பாருங்கள், அவற்றை செய்வதன் மூலமாக அல்லாஹ்வின் வேதனையை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு கட்டளையிட்டோம்.

(64) 2.64. உறுதியான வாக்குறுதி அளித்த பின்னரும் நீங்கள் புறக்கணித்து, அதற்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ், உங்கள்மீது கருணைகாட்டி உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உங்களை மன்னித்து அருள்புரியவில்லையெனில் நீங்கள் புறக்கணித்து மாறுசெய்ததனால் நஷ்டமடைந்தவர்களாகி இருப்பீர்கள்.

(65) 2.65. உங்களின் முன்னோர்களைப்பற்றி நீங்கள் நன்கறிந்துள்ளீர்கள். அவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தும் வரம்புமீறினார்கள். தந்திரமாக சனிக்கிழமைக்கு முன்னரே வலையை விரித்து ஞாயிற்றுக்கிழமை வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் இந்தத் தந்திரத்திற்குத் தண்டனையாக அவர்களை இழிவுற்ற குரங்குகளாக உருமாற்றினான்.

(66) 2.66. இவர்களைப் போன்று செயற்பட்டு அது போன்ற தண்டனையைப் பெறாமலிருப்பதற்காக இந்த ஊரை அருகிலுள்ள ஊர்வாசிகளுக்கும் பின்னால் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாக ஆக்கினோம். அல்லாஹ்வின் தண்டனையையும் தனது வரம்புகளை மீறுவோரைப் பழி தீர்ப்பதையும் அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகவும் நாம் இதனை ஆக்கினோம்.

(67) 2.67. மூசாவுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் ஒரு பசுவை அறுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று மூசா அவர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து செயல்படுத்தாமல், எங்களை நீர் கேலி செய்கிறீரா என்று வீம்பாகக் கேட்டார்கள். அதற்கு மூசா, அல்லாஹ்வின் மீது பொய் கூறி மக்களைப் பரிகாசம் செய்பவனாக நான் ஆவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.

(68) 2.68. அல்லாஹ் அறுக்குமாறு கட்டளையிட்ட அந்தப் பசு எப்படிப்பட்டது? என்று கேட்டு உம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு மூசா,அது கிழடாகவோ, கன்றாகவோ அல்லாமல் நடுத்தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் இறைவனின் கட்டளையை விரைந்து செயல்படுத்துங்கள் என்று கூறினார்.

(69) 2.69. அவர்கள் தங்களின் தர்க்கத்தைத் தொடர்ந்தார்கள். மூசாவிடம், அதன் உண்மையான நிறத்தை எங்களுக்குத் தெளிவுபடுத்துமாறு உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். அதற்கு மூசா, அது பார்ப்பவர்கள் பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய கெட்டியான மஞ்சள்நிற பசுவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறினார்.

(70) 2.70. பிறகு அவர்கள் மீண்டும் வீம்பாகக் கேள்வி கேட்டார்கள், அதன் பண்புகளை இன்னும் தெளிவாக விளக்கும்படி உம் இறைவனிம் பிரார்த்தனை செய்வீராக. நீர் குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஏராளமான பசுக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியில் நீர் குறிப்பிட்டதை எங்களால் நிர்ணயிக்க முடியவில்லை. அல்லாஹ் நாடினால் அறுக்க வேண்டிய பசுவை நாங்கள் பெறுவோம்.

(71) 2.71. மூசா கூறினார், அது விவசாய வேலைகளுக்கோ, நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, எவ்வித குறைகளுமற்ற ஆரோக்கியமான பசுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தைத் தவிரந்த வேறு எந்த நிறமும் அதில் இருக்கக்கூடாது. அப்போது அவர்கள் கூறினார்கள், இப்போதுதான் நிர்ணயிக்கத்தக்க சரியான பண்பை கூறியுள்ளீர். வீணான விவாதத்தினால் அறுக்காது போய்விடுவார்களோ என்றான பிறகு அதனை அறுத்தார்கள்.

(72) 2.72. உங்களில் ஒருவரைக் கொன்றுவிட்டு நீங்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு ஒருவருக்கொருவர் பழிசுமத்தியதை நினைத்துப் பாருங்கள். அந்த அப்பாவியைக் கொன்றுவிட்டு நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

(73) 2.73. அறுக்குமாறு உத்தரவிடப்பட்ட பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடியுங்கள். அல்லாஹ் அவருக்கு உயிர்கொடுத்து, அவர் தன்னைக் கொன்றவரை அறிவிப்பார் என்று நாம் கூறினோம். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர் கொன்றவரை அறிவித்தார். இந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் அறிந்துகொண்டு அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஆற்றலுக்கான சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகின்றான்.

(74) 2.74. இந்த பேரற்புதத்தை கண்ணால் கண்டபின்னரும் உங்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப்போன்று, மாறாக அவற்றைவிடவும் கடினமாகிவிட்டன. ஒரு போதும் அவை தனது நிலையிலிருந்து மாறவேமாட்டாது. பாறைகள்கூட மாற்றம் அடைகின்றன. அவற்றிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. அவற்றுள் சில பிளந்து அவற்றிலிருந்து ஊற்று நீர் பீறிட்டு பூமியில் வழிந்தோடுகின்றது. அதன் மூலம் மனிதர்களும் விலங்குகளும் பயனடைகிறார்கள். அவற்றுள் சில அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் உயரமான மலையிலிருந்து உருண்டுவிடுகின்றன. உங்களின் உள்ளங்களோ இவ்வாறுகூட இல்லை. நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. மாறாக அவன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.

(75) 2.75. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் யூதர்களைப் பற்றியும் அவர்களின் பிடிவாதத்தைப் பற்றியும் அறிந்தபிறகும் அவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நம்பிக்கைகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா?. அவர்களிலுள்ள அறிஞர்களில் ஒரு பிரிவினர், தவ்ராத்தில் இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியேற்கிறார்கள். பிறகு அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் அறிந்துகொண்டே மாற்றுகிறார்கள். தமது குற்றத்தின் பாரதூரத்தையம் அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்.

(76) 2.76. அவர்களின் முரண்பாடுகள் மற்றும் சூழ்ச்சிகளில் ஒன்று, அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் முஹம்மது நபியைக் குறித்தும் அவருடைய தூதுத்துவம் குறித்தும் தவ்ராத்தில் கூறப்பட்ட விஷயங்களை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக் கொண்டால் இந்த உண்மையை ஒத்துக்கொண்டதற்காக ஒருவரையொருவர் பழித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் இவ்வாறு அவர்கள் உண்மையை ஒத்துக்கொள்வதை முஸ்லிம்கள் யூதர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைப்பார்கள்.

(77) 2.77. அவர்கள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் சொல்வதையும், செய்வதையும் அல்லாஹ் அறிவான். மேலும் அவற்றை தன் அடியார்களுக்கு வெளிப்படுத்தி தம்மை இழிவுபடுத்தியே தீருவான் என்பதை இந்த யூதா்கள் அறியாததைப் போன்று இந்தளவு கேடுகெட்ட விதமாக நடந்துகொள்கின்றனர்.

(78) 2.78. தவ்ராத்தை வாசிக்க மாத்திரமே தெரிந்த ஒரு பிரிவினரும் யூதா்களில் உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களின் பெரியோர்களிடமிருந்து பெற்ற பொய்களைத்தான் அல்லாஹ் இறக்கிய தவ்ராத் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

(79) 2.79. தங்களின் கைகளால் ஒரு நூலை எழுதிக்கொண்டு, பிறகு அபாண்டமாக, இது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமாகும் என்று கூறும் இவர்களுக்கு கடுமையான வேதனையும், அழிவும் காத்திருக்கிறது. சத்தியம் மற்றும் நேர்வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இவ்வுலகில் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயம் பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கின்றனர். தங்களின் கைகளால் எழுதிய நூலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வேதம் என்று அல்லாஹ்வின் மீதே பொய் கூறியதற்கும், அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணம், பதவிகளின் காரணமாகவும் அவர்களுக்கு அழிவும் கடுமையான வேதனையும் உண்டு.

(80) 2.80. சில நாட்கள் மாத்திரமே நரகில் நாம் நுழைந்து நரக நெருப்பு எம்மைத் தீண்டும் என அவர்கள் அபாண்டமாகவும் ஆணவத்துடனும் கூறினார்கள், தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: இவ்வாறு நீங்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி பெற்றுள்ளீர்களா? அப்படியென்றால் அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறாக செயல்பட மாட்டான். அல்லது அல்லாஹ்வின்மீது நீங்கள் அறியாத விஷயத்தை அபாண்டமாகவும் பொய்யாகவும் இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?.

(81) 2.81. இவர்கள் நினைப்பது போலல்ல. யார் நிராகரித்து பாவங்கள் அவரை நாலாபுறத்தாலும் சூழ்ந்துகொள்கிறதோ அல்லாஹ் அவரை தண்டித்தே ஆகுவான். அவன் அவர்களை நரகத்தில் நிரந்தரமாகக் கிடத்தி தண்டனை அளித்திடுவான்.

(82) 2.82 அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி சுவனத்தில் நுழைந்து அதில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகும்.

(83) 2.83. இஸ்ராயீலின் மக்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; நான் ஏவியமுறைப்படி தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை உரியவர்களுக்கு முழு மனதுடன் அளித்துவிடுங்கள் என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆனால் அதன் பின்னரும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள். உங்களில் யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள்.

(84) 2.84. நீங்கள் ஒருவரையெருவர் கொல்லக்கூடாது; உங்களில் சிலர் சிலரை தங்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இது குறித்து நாம் உங்களிடம் வாங்கிய வாக்குறுதிக்கு நீங்களே சாட்சிகளாக இருந்து ஒத்துக் கொண்டீர்கள்.

(85) 2.85. பிறகு நீங்களே இந்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தீர்கள். உங்களில் சிலர் சிலரைக் கொலைசெய்தீர்கள். எதிரிகளின் உதவியுடன் உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிப்பட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே? கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா? வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவையும் கேவலத்தையும் தவிர வேறொன்றும் கிடைக்காது. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்ப உங்களுக்கு கூலியும் வழங்குவான்.

(86) 2.86. இவர்கள்தாம் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகை வாங்கிக் கொண்டார்கள்; நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மறுமையில் இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனை குறைக்கப்படாது. அந்நாளில் இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாரும் இருக்க மாட்டார்கள்.

(87) 2.87. நாம் மூஸாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்குப் பின்னால் பல தூதர்களை தொடர்ந்து வரச்செய்தோம். ஈசாவுக்கு, அவருடைய நம்பகத்தன்மையைத் தெளிவுபடுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும், தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக அவரை பலப்படுத்தினோம். இஸ்ராயீலின் மக்களே! உங்கள் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டுவந்த போதெல்லாம் சத்தியத்தையும் அல்லாஹ்வின் தூதர்களையும் எதிர்த்து ஆணவம் கொள்கிறீர்களா? அவர்களில் ஒருபிரிவினரை நிராகரித்து விட்டீர்கள்; ஒரு பிரிவினரை கொன்று விட்டீர்கள்?!

(88) 2.88. எங்களுடைய உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் நீர் கூறும் எந்த விஷயமும் புரியப்போவதில்லை என்ற யூதர்களின் கூற்றே அவர்கள் முஹம்மதைப் பின்பற்றாமல் இருப்பதற்கான சான்றாகக் காணப்பட்டது. ஆனால் உண்மை நிலை அவர்கள் கூறும் காரணமல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அவன் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சிலவற்றைத் தவிர வேறு எதனையும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(89) 2.89. தவ்ராத்திலும் இன்ஜீலிலும் உள்ள சரியான, அடிப்படையான விஷயங்களை உண்மைப்படுத்தியதாக அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் அவர்களிடம் வந்தது, அவர்கள் அது இறக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நபி வரக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. அவர் வந்தவுடன் அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பின்பற்றி நாங்கள் இணைவைப்பாளர்களை வென்றிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறிக்கொண்டிருந்த முஹம்மது நபியும் குர்ஆனும் அவர்களிடம் வந்தபோது, தாங்கள் எதிர்பார்த்தவர்தான் இவர் என்பதை தெளிவாக அறிந்தபின்னரும் அவரை மறுத்தார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.

(90) 2.90. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதற்குப் பதிலாக அவர்கள் பெற்றுக்கொண்டது மோசமானது!. நபித்துவமும், குர்ஆனும் முஹம்மதுக்கு வழங்கப்பட்டது என்ற பொறாமையினாலும், அநியாயமாகவும் அல்லாஹ் இறக்கியவற்றையும், அவனது தூதர்களையும் நிராகரித்தார்கள். முஹம்மதை அவர்கள் நிராகரித்ததனாலும் அதற்கு முன் தவ்ராத்தை திரித்ததனாலும் அல்லாஹ்வின் இரட்டிப்பான கோபத்திற்கு உரியவர்களாகிவிட்டார்கள். முஹம்மதுடைய தூதுத்துவத்தை நிராகரிப்பவர்களுக்கு மறுமைநாளில் இழிவுதரும் வேதனை உண்டு.

(91) 2.91. தன்னுடைய தூதரின்மீது அல்லாஹ் இறக்கிய சத்தியத்தையும் நேர்வழியையும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று யூதர்களிடம் கூறப்பட்டால், எங்களுடைய தூதர்களின்மீது இறக்கப்பட்டவற்றைத்தான் நம்பிக்கைகொள்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமுள்ள தவ்ராத்தை குர்ஆன் உண்மைப்படுத்திய பிறகும் அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் தம்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் குர்ஆனின்மீதும் நம்பிக்கைகொண்டிருப்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கேளும், உங்களிடம் அல்லாஹ்வின் தூதர்கள் இதற்கு முன் கொண்டுவந்த சத்தியத்தை நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கைகொண்டிருந்தால் பிறகு ஏன் அவர்களை கொலைசெய்தீர்கள்?.

(92) 2.92. உங்களிடம் வந்த தூதர் மூசா தான் உண்மையாளரே என நிரூபிக்கும் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவ்வாறிருந்தும் அவர் தனது இறைவனைச் சந்திப்பதற்காக சென்ற சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.

(93) 2.93. மூசாவைப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள். அவ்வாறு இல்லையெனில் நாம் உங்களின் மீது மலையை விழச்செய்துவிடுவோம்.எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம் என்று கூறினீர்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்று வழிபாடு அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடும் நிராகரிப்பு மோசமானது! ஏனெனில் உண்மையான ஈமானுடன் நிராகரிப்பு ஒருபோதும் கலந்திருக்காது.

(94) 2.94. தூதரே! நீர் கூறும்: யூதர்களே, மறுமையில் சுவனம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது, மற்ற மக்கள் யாரும் அதில் நுழைய முடியாது என்ற உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த அந்தஸ்தை விரைவாகப் பெறுவதற்காக மரணத்தை விரும்பித் தேடிச்செல்லுங்கள்; கஷ்டம்நிறைந்த இவ்வுலகின் சுமைகளிலிருந்து விடுபட்டுவிடுங்கள்.

(95) 2.95. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, அவனுடைய வேதங்களை திரித்து தங்களின் வாழ்க்கையில் சேர்த்துவைத்த பாவங்களினால் அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்ப மாட்டார்கள். அவர்களிலும் ஏனையோரிலுமுள்ள அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.

(96) 2.96. தூதரே! மனிதர்களிலே வாழ்வின் மீது அதிக பேராசையுடையவர்களாக யூதர்களைக் காண்பீர், அது மிகவும் இழிவானதாக இருந்தாலும் சரியே. மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொண்ட வேதக்காரர்களாக அவர்கள் இருந்தும், மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களைக் காட்டிலும் அவர்கள் அதிக பேராசையுடையவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.எவ்வளவு நீண்ட ஆயுளாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைத் தூரமாக்காது. அவன் அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.

(97) 2.97. தூதரே! வானவர்களில் ஜிப்ரீல் எங்களின் எதிரியாவார் என்று கூறுபவர்களிடம் நீர் கூறுவீராக, அவர்தான் உமது உள்ளத்தில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு குர்ஆனை இறக்கினார். அது தவ்ராத், இன்ஜீல் போன்ற முன்னுள்ள இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது; நன்மையின் பக்கம் வழிகாட்டுகிறது; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் அருட்கொடைகளை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுகிறது. இத்தகைய பண்புடைய ஜிப்ரீலை எதிரிகளாகக் கருதுபவர்கள் வழிகெட்டவர்களாவர்.

(98) 2.98. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய வானவர்களுக்கும், தூதர்களுக்கும் ஜிப்ரீல், மீக்காயில் என்னும் நெருங்கிய இரு வானவர்களுக்கும் எதிரிகளாக இருக்கின்றார்களோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் ஏனையவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் எதிரியாவான். யாருக்கு அல்லாஹ் எதிரியாக இருக்கின்றானோ அவர் வெளிப்படையான நஷ்டத்தில் வீழ்ந்துவிட்டார்.

(99) 2.99. தூதரே! உமது தூதுத்துவத்தையும் வஹியையும் உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை உம்மீது இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்தாம் அவை தெளிவாக இருந்தும் மறுப்பார்கள்.

(100) 2.100. யூதர்களின் தீய குணங்களில் ஒன்று, அவர்கள் ஏதேனும் உடன்படிக்கை செய்யும்போதேல்லாம் அவர்களில் ஒருபிரிவினர் அதனை முறித்துவிடுகின்றனர். இந்த யூதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் இறக்கியதை உண்மையாகவே நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையான ஈமான் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றத் தூண்டுகிறது.

(101) 2.101. தவ்ராத்தில் கூறப்பட்டபடி முஹம்மது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு தூதராக அவர்களிடம் வந்தபோது அவர்களில் ஒரு பிரிவினர் தவ்ராத்தில் கூறப்பட்டதை புறக்கணித்துவிட்டார்கள். அதனை அலட்சியமாக தம் முதுகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்தார்கள். சத்தியத்திலிருந்து பயனடையாத, அதனைப் பொருட்படுத்தாத மூடர்களைப் போன்றவர்கள் இவர்கள்.

(102) 2.102. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டுவிட்ட அவர்கள் அதற்குப் பதிலாக, இறைத்தூதர் சுலைமானுக்கு எதிராக ஷைத்தான்கள் இட்டுக்கட்டியவற்றைப் பின்பற்றினார்கள். அந்த ஷைத்தான்கள், சுலைமான் சூனியத்தின் மூலம் ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று புனைந்து கூறினார்கள். யூதர்கள் கூறுவதுபோல சூனியம் செய்து சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆனால் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். அவர்கள் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதர்களைப் பரிசோதிக்கும் நோக்கில் ஈராக்கிலுள்ள பாபில் நகரத்தில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் ஷைத்தான்கள்தான் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த இரு வானவர்களும் யாருக்காவது சூனியத்தைக் கற்றுக்கொடுக்க நேர்ந்தால், நாங்கள் மக்களுக்கு சோதனையாகவே இருக்கின்றோம். எனவே சூனியத்தைக் கற்பதின்மூலம் நிராகரித்து விடாதீர்கள் என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிடுவார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்காதவர்கள் அவர்களிடமிருந்து சூனியத்தைக் கற்றுக்கொண்டார்கள். கணவனுக்கும் மனைவிக்குமிடையே வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்தும் சூனியத்தின் ஒரு வகையே. அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பயனளிக்காத, தீங்கிழைக்கும் விஷயத்தையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதத்திற்குப் பகரமாக சூனியத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை யூதர்கள் நன்கறிந்திருந்தார்கள். அல்லாஹ்வின் வஹிக்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட சூனியம் எவ்வளவு மோசமானது! தங்களுக்குப் பயனளிக்கக்கூடியதை இவர்கள் அறிந்திருந்தால் இழிவான இந்த வழிகெட்ட செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

(103) 2.103. யூதர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுக்கு வழிப்பட்டு, தடுத்தவற்றை விட்டும் விலகி அவனை அஞ்சியிருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கும் நன்மை அவர்கள் இப்போது இருப்பதைவிடச் சிறந்ததாக இருந்திருக்கும். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விஷயத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!.

(104) 2.104. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும்படி அறிவுரை வழங்குகிறான்: நம்பிக்கையாளர்களே,எங்களைக் கவனியுங்கள் என்று பொருளுடைய "ராயினா "என்ற வார்த்தையைக் கூறாதீர்கள். ஏனெனில் யூதர்கள் இந்த வார்த்தையைத் திரித்து, முட்டாள் என்ற தவறான பொருளை மனதில் வைத்து நபியவர்களை அழைக்கின்றனர். எனவே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறான். அதற்குப் பதிலாக "உன்ளுர்னா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு தன் அடியார்களுக்குக் கட்டளையிடுகிறான். இது எங்களைக் கவனியுங்கள் என்ற ஒரே பொருளையே தருவதுடன் ராஇனா என்பதைப் போன்று தவறான பொருளில் இதனைப் பயன்படுத்தவும் முடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.

(105) 2.105. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய இவர்கள் - வேதக்காரர்களாக இருந்தாலும் சரி, இணைவைப்பாளர்களாக இருந்தாலும் சரியே - உங்களுக்கு இறைவனிடமிருந்து சிறியதோ பெரியதோ எவ்வித நன்மையும் இறங்குவதை விரும்பமாட்டார்கள். தூதுத்துவம், வஹி, ஈமான் ஆகிய அருட்கொடைகளை தான் நாடிய அடியார்களுக்கே அல்லாஹ் வழங்குகிறான். அவன்தான் மாபெரும் அருளாளன். படைப்புகள் அவனிடமிருந்தே நன்மைகளைப் பெற முடியும். தூதர்களை அனுப்புவதும் வேதங்களை இறக்குவதும் அவனுடைய அருளில் உள்ளவையே.

(106) 2.106. அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்: குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தின் சட்டத்தை அல்லாஹ் நீக்கினால் அல்லது அதன் வார்த்தையை நீக்கி மக்கள் அதனை மறந்தால் அதைவிட பயனுள்ள ஒன்றை அல்லது அதைப்போன்ற ஒன்றை உடனடியாகவோ தாமதமாகவோ அவன் கொண்டுவருவான். இது அல்லாஹ்வின் அறிவு, ஞானத்தைக் கொண்டே நடைபெறக்கூடியதாகும். தூதரே! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவன் தான் நாடியதைச் செய்கிறான் என்பதை நீர் நன்கறிவீர்.

(107) 2.107. அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியின் அரசன். அவன் தான் நாடியதை தன் அடியார்களுக்கு கட்டளையாக இடுகின்றான்; தான் நாடியவற்றை விட்டும் அவர்களைத் தடுக்கிறான்; மார்க்கத்தின் தான் நாடியதை நிலைத்திருக்கச் செய்கிறான்; தான் நாடியதை நீக்கிவிடுகிறான். அல்லாஹ்வைத்தவிர உங்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்பக்கூடியவர் வேறு யாரும் இல்லை. அவனைத்தவிர உங்களுக்கு தீங்கைத் தடுக்கும் வேறு உதவியாளனும் இல்லை. அவனே அவை எல்லாவற்றிற்கும் பொறுப்பாளன், அவற்றின் மீது ஆற்றல்மிக்கவன் என்பதையும் தூதரே நீர் அறிவீர்.

(108) 2.108. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உங்கள் தூதரிடம் இதற்கு முன்னர் மூசாவின் சமூகம் கேட்டதுபோன்று ஆட்சேபிக்கும் தொனியில் கேள்வி கேட்காதீர்கள். “அவர்கள் தங்கள் தூதரிடம் ‘அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டு’ என்று கேட்டார்கள். (4:153) எவர் ஈமானை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார்.

(109) 2.109. வேதக்காரர்களில் பெரும்பாலோர் அவர்களுக்குள் இருக்கும் பொறாமையினால், நீங்கள் முன்னர் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததுபோன்று ஈமான் கொண்டபிறகும் நிராகரிப்பாளர்களாகி விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தத் தூதர் கொண்டு வந்தது அல்லாஹ்விடமிருந்துள்ள உண்மையாகும் என்பதை அறிந்தபிறகே அவர்கள் இவ்வாறு ஆசைகொள்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே, அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கும்வரை, அவர்களின் செற்பாடுகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் அறியாமை தீய எண்ணம் என்பவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவர்களால் அவனை வெல்லமுடியாது. அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது, எனவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஜிஸ்யாவை அளித்துவிட வேண்டும் அல்லது போரிட வேண்டும்.

(110) 2.110. தொழுகையை அதன் நிபந்தனைகளோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து தகுதியானவர்களுக்கு ஸகாத்தை வழங்குங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் நற்செயல்கள் செய்து இறப்பதற்கு முன்னால் உங்களின் சேமிப்புக்காக முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளுக்கான கூலியை மறுமையில் உங்கள் இறைவனிடம் பெறுவீர்கள். அதனடிப்படையில் அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொருவருக்கும் அவரது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.

(111) 2.111. யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும், சொர்க்கம் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறுகிறார்கள். யூதர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று யூதர்கள் கூறுகிறார்கள். கிருஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவை அவர்களின் தவறான ஆசைகளும் ஊகங்களே. தூதரே, நீர் அவர்களிடம் “உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” எனக் கேட்பீராக.

(112) 2.112. அல்லாஹ்வுக்காக வேண்டி என்ற உளத்தூய்மையுடன் அவனுடைய தூதர் கொண்டு வந்துள்ளதைப் பின்பற்றி தனது வணக்கத்தை சீரான முறையில் செய்பவர்கள்தாம் சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய மக்கள் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. அவர்களின் இறைவன் அவர்களுக்கான கூலியை வழங்கிடுவான். மறுமையில் அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றிற்காகவும் கவலைகொள்ள மாட்டார்கள். இத்தகைய பண்புகள் முஹம்மது நபியின் வருகைக்குப்பின் முஸ்லிம்களிடம் மாத்திரமே காணப்படும்.

(113) 2.113. ‘கிருஸ்தவர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘யூதர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தாம் நிராகரித்தவை உண்மையானவையே என்பதையும், தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதையும் தமது வேதத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயல், தூதர்கள் அனைவரையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் நிராகரித்த, எதுவும் அறியாத இணைவைப்பாளர்களின் செயலை ஒத்திருக்கிறது. கருத்துவேறுபட்ட இவர்கள் அனைவரிடையே மறுமைநாளில் தன் அடியார்களுக்கு அறிவித்த நீதியைக்கொண்டு அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அல்லாஹ் இறக்கிய அனைத்தின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் எந்த வெற்றியும் இல்லை என்பதே அந்த நீதியாகும்.

(114) 2.114. பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுப்பவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யாருமில்லை. அவன் அங்கு தொழுவதை, அல்லாஹ்வை நினைவுகூருவதை, குர்ஆன் ஓதுவதைத் தடுக்கிறான். அவற்றை இடிப்பதன் மூலமோ அவற்றில் நடைபெறும் வணக்க வழிபாட்டைத் தடுப்பதன் மூலமோ அவற்றைப் பாழாக்க முயல்கிறான். பாழாக்க முயலும் இவர்களுக்கு அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் மக்களை அவனுடைய பள்ளிவாயில்களை விட்டுத் தடுத்ததனாலும் பயந்தவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்குத் தகுதி இல்லை. இவ்வுலகில் இவர்கள் நம்பிக்கையாளர்களால் இழிவுபடுத்தப்படுவார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயில்களை விட்டு மக்களைத் தடுத்ததனால் மறுமையில் பெரும் வேதனையும் உண்டு.

(115) 2.115. கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் தான் நாடியவற்றைக் கொண்டு அடியார்களை ஏவுகிறான். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வையே நோக்குகிறீர்கள். அவன் உங்களை பைத்துல் முகத்தஸை நோக்கும்படியோ கஅபாவை நோக்கும்படியோ ஏவினால், அல்லது நீங்கள் முன்னோக்கும் திசையில் தவறிறைத்தால் அல்லது அதனை முன்னோக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் அதனால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். தன் அருளாலும் இலகுபடுத்தலாலும் படைப்புகளுடன் விசாலத்தன்மையுடன் நடப்பவன். அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன்.

(116) 2.116. யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொண்டான் என்று.” இதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் படைப்புகளை விட்டும் தேவையற்றவன். தேவையுடையவர்கள்தாம் மகனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாறாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அவனது அடிமைகளே, அவனுக்குக் கட்டுப்பட்டவைகள்தாம். தான் நாடியவாறு அவற்றை நடத்துகிறான்.

(117) 2.117. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ளவற்றையும் முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தவன். அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். அது அவன் நாடியவாறு ஆகிவிடுகிறது. அவனுடைய கட்டளையைத் தடுப்பவர் யாருமில்லை.

(118) 2.118. வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் அறியாதவர்கள் சத்தியத்தை எதிர்த்தவர்களாகக் கூறுகிறார்கள், “அல்லாஹ் ஏன் எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை? அல்லது எமக்கென பிரத்யேகமானதொரு புலன் ரீதியான அற்புதத்தை ஏன் எங்களுக்குத் தரவில்லை?.” இதற்கு முன்னர் தம் தூதர்களை நிராகரித்த சமூகமும் இவ்வாறே கூறியது. அவர்களின் காலங்களும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் உள்ளங்களும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்து முரண்பட்டோரின் உள்ளங்களும் நிராகரிப்பு, பிடிவாதம், அத்துமீறல் போன்றவற்றில் ஒன்றுபட்டுவிட்டன. தமக்குச் சத்தியம் தெரியும்போது அதன் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோருக்கு சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். எந்தச் சந்தேகமும் அவர்களை அண்டவில்லை; பிடிவாதம் அவர்களைத் தடுக்கவில்லை.

(119) 2.119. தூதரே! அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு சுவனம் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு நரகம் உண்டு என்று எச்சரிப்பதற்காகவும் சந்தேகமற்ற இந்த மார்க்கத்தைக் கொண்டு நாம் உம்மை அனுப்பியுள்ளோம். தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதுள்ள கடமையாகும். உம்மீது நம்பிக்கைகொள்ளாத நரகவாசிகளைக் குறித்து அல்லாஹ் உம்மிடம் கேட்க மாட்டான்.

(120) 2.120. அல்லாஹ் தன் தூதரை விளித்து அவருக்குப் பின்வருமாறு எச்சரிக்கிறான்: நீர் இஸ்லாத்தை விட்டுவிட்டு அவர்களது கொள்கையை பின்பற்றும் வரை யூதர்களோ, கிருஸ்தவர்களோ உம்மைக் குறித்து திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வேதமும் அவனது தெளிவும்தான் உண்மையான நேர்வழியாகும். மாறாக அவர்களிருக்கும் அசத்தியமல்ல. தெளிவான சத்தியம் உம்மிடம் வந்தபிறகு உம்மிடமிருந்தோ, உம்மைப் பின்பற்றியவர்களிடமிருந்தோ இவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியையும் நீர் பெறமாட்டீர். இது சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியவாதிகளோடு சேர்ந்துவிடுவதால் ஏற்படும் ஆபத்தை தெளிவுபடுத்துகிறது.

(121) 2.121. வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் தங்களிடமுள்ள வேதத்தின்படி உண்மையாகவே செயல்பட்டு வருவதாக குர்ஆன் கூறுகிறது. அவர்கள் முஹம்மது நபி உண்மையனவர் எனக் குறிப்பிடும் அடையாளங்களை தங்கள் வேதங்களில் காண்கிறார்கள். எனவேதான் விரைந்து அவரை நம்பிக்கை கொள்கிறார்கள். மற்றொரு பிரிவினர் அவற்றை நிராகரிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

(122) 2.122. இஸ்ராயீலின் மக்களே, நான் உங்கள்மீது பொழிந்த உலக மற்றும் மார்க்கரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியதிகாரம் மற்றும் தூதுத்துவத்தைக் கொண்டு உங்களை சிறப்பித்தோம்.

(123) 2.123. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் பிற உயிருக்கு எதுவும் பயனளிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிணைத்தொகையும் எந்த மதிப்புமிக்கவரின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வைத்தவிர உதவிசெய்யக்கூடிய வேறு உதவியாளனும் அங்கு இருக்கமாட்டார்கள்.

(124) 2.124. அல்லாஹ் இப்ராஹீமுக்கு பல சட்ட திட்டங்களைக் கட்டளையிட்டு சோதித்ததையும் நினைவுகூருங்கள். அவர் அவற்றை சிறந்தமுறையில் நிறைவேற்றிக்காட்டினார். அல்லாஹ் தன்னுடைய தூதர் இப்ராஹீமிடம், நான் உம்மை செயல்களிலும், நற்குணங்களிலும், மக்கள் பின்பற்றத்தகுந்த முன்மாதிரியாக ஆக்கப்போகின்றேன் என்று கூறியபோது, என் சந்ததிகளிலிருந்தும் மக்கள் பின்பற்றத்தகுந்த வழிகாட்டிகளை ஆக்கு என்று வேண்டினார். அதற்கு அல்லாஹ், மார்க்கத் தலைமைத்துவத்திற்கு நான் உமக்களித்த உறுதிமொழி உமது சந்ததிகளில் அநியாயக்காரர்களுக்குக் கிடைக்காது என்று கூறினான்.

(125) 2.125. அல்லாஹ், புனிதமான கஅபாவை மக்கள் திரும்பத் திரும்ப வரும் இடமாகவும் ஆக்கியதையும் நினைவுகூருங்கள். அவர்களது உள்ளங்கள் எப்பொழுதும் அதனுடன் தொடர்புடையதாகவே உள்ளன. அவர்கள் அதை விட்டுச் சென்றாலும் அதன்பக்கம் திரும்புவார்கள். அதை அமைதிக்குரிய இடமாகவும் ஆக்கினோம். அங்கு அவர்கள் தாக்கப்படமாட்டார்கள். நாம் மக்களிடம் கூறினோம், கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் நின்ற கல்லை தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். கஅபாவை சிலைகள் மற்றும் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தி அங்கு தவாப், இஃதிகாப், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடுவோருக்கு அதனை தயார்படுத்துமாறு இப்ராஹீமிடமும் அவருடைய மகன் இஸ்மாயீலிடமும் நாம் அறிவுறுத்தினோம்.

(126) 2.126. தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது கூறியதை நினைவுகூருவீராக: என் இறைவனே, மக்காவை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. அங்கு யாருக்கும் தீங்கிழைக்கப்படக்கூடாது. அங்கு வசிப்பவர்களுக்கு பலவகையான பழங்களிலிருந்து உணவு வழங்குவாயாக. உன்மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மாத்திரம் உணவுகளை அளிப்பாயாக. அதற்கு அல்லாஹ் கூறினான்,அவர்களில் நிராகரிப்பவர்களுக்கும் உலகில் சிறிது அனுபவிக்கச்செய்வேன். பின்னர் மறுமைநாளில் அவர்களை நரக வேதனையின் பக்கம் தள்ளுவேன். மறுமைநாளில் அவர்கள் திரும்பக்கூடிய இடம் மிகவும் கெட்டதாகும்.

(127) 2.127. தூதரே! இப்ராஹீமும் இஸ்மாயீலும் கஅபாவின் அத்திவாரங்களை எழுப்பிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் மிகுந்த பணிவோடு, எங்கள் இறைவனே, எங்களிடமிருந்து இந்த கஃபாவை நிர்மாணித்தல் உட்பட எங்கள் செயல்களை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும், எங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்தார்கள்.

(128) 2.128. எங்கள் இறைவனே, உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக எங்களை ஆக்குவாயாக. நாங்கள் உனக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம். எங்களின் சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவாயாக. உன்னை வணங்கும் முறையை எமக்கு கற்றுத்தருவாயாக!. எங்களின் பாவங்களையும், வணக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளையும், மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றாய். அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.

(129) 2.129. எங்கள் இறைவனே, இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அவர்களிடையே அனுப்புவாயாக. அவர் நீ இறக்கிய வசனங்களை எடுத்துரைக்க வேண்டும்; குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அவர்களை ஷிர்க்கிலிருந்தும் இழிவான விஷயங்களிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும். நிச்சயமாக நீ யாவற்றிலும் வலிமைமிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் உன்னுடைய கட்டளைகளில், செயல்களில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்.

(130) 2.130. மடமையினாலும் சத்தியத்தை விட்டு அசத்தியத்தை எடுத்து தவறான திட்டமிடலினாலும் தனக்குத்தானே அநியாயம் இழைத்துக்கொண்டவனையும் இழிவை ஏற்றுக்கொண்டவனையும் தவிர வேறு எவரும் இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்லமாட்டான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், இறைவன் விதித்த கடமைகளை நிறைவேற்றி, உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் அவர் இருப்பார்.

(131) 2.131. அவர் அல்லாஹ்வுக்கு விரைந்து அடிபணிந்ததால் அவன் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவன் அவரிடம் வணக்க வழிபாட்டை எனக்காக மாத்திரம் நிறைவேற்று. கட்டுப்பட்டு எனக்கு அடிபணி என்று கூறியபோது அடியார்களைப் படைத்து, வாழ்வாதாரம் வழங்குகின்ற, அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்துவிட்டேன்என்று பதிலளித்தார்.

(132) 2.132. அகிலங்களின் இறைவனுக்க நான் அடிபணிந்துவிட்டேன் என்ற இந்த வார்த்தையைத்தான் இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இந்த வார்த்தையைத்தான் யஃகூபும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூறினார்கள்,அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். எனவே மரணிக்கும்வரை இதனைப் பற்றிக் கொள்ளுங்கள். வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக இருங்கள்.

(133) 2.133. யஃகூபுக்கு மரணவேளை நெருங்கியபோது நீங்கள் அங்கே இருந்தீர்களா? அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார்,நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள்? அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு யாரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்.

(134) 2.134. அந்த சமூகம் உங்களுக்கு முன்னால் சென்ற சமூகங்களுடன் கடந்துவிட்டது. அவர்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த நன்மையும் தீமையும் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவரின் பாவத்திற்காக தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். உங்களின் செயல்களை விட்டுவிட்டு உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மற்றவர்களின் செயல்களைக் குறித்து ஆர்வம் காட்டாதீர்கள். அல்லாஹ்வின் கருணைக்குப் பின் ஒருவர் செய்த நற்செயல்தான் அவருக்குப் பயனளிக்கக்கூடியது.

(135) 2.135. யூதர்கள் இந்த சமூகத்தைப் பார்த்துக் கூறுகிறார்கள், யூதர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள், கிருஸ்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று. தூதரே, நீர் அவர்களிடம் கூறும், தவறான மார்க்கங்களை விட்டு நீங்கி சத்தியத்தின் பக்கம் முழுமையாகச் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். அவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவராக இருந்ததில்லை.

(136) 2.136. நம்பிக்கையாளர்களே, தவறான வாதம்புரியும் யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொண்டோம். இப்ராஹீம், அவரது பிள்ளைகளான இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கு இறக்கப்பட்டதன் மீதும் யஅகூபின் சந்ததிகளில் தூதர்களாக வந்தவர்களுக்கு இறக்கப்பட்டதன்மீதும் அல்லாஹ் மூசாவுக்கு வழங்கிய தவ்ராத்தின்மீதும் ஈசாவுக்கு வழங்கிய இன்ஜீலின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அனைத்து இறைத்தூதர்கள் மீதும் இறக்கப்பட்ட வேதங்களின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களில் சிலரை ஏற்று, சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வோம். அவன் ஒருவனுக்கு மாத்திரமே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.

(137) 2.137. நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று யூதர்களும், கிருஸ்தவர்களும் நம்பிக்கைகொண்டால் அவர்கள் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்களை நிராகரித்தால் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தால் அவர்கள் பகைமையிலும் முரண்பாட்டிலும் இருப்பவர்களாவர். தூதரே, நீர் கவலைகொள்ளாதீர். அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவர்களின் தீங்குகளிலிருந்து அவனே உம்மைப் பாதுகாப்பான்; அவர்களுக்கு எதிராக உமக்கு உதவிசெய்வான். அவர்கள் பேசும் விஷயங்களை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்; அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

(138) 2.138. அல்லாஹ் உங்களைப் படைத்த அவனுடைய இயற்கையான மார்க்கத்தில் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நிலைத்திருங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட சிறந்த மார்க்கம் வேறு இல்லை. அது நன்மைகளைக் கொண்டுவரக்கூடிய, தீமைகளைத் தடுக்கக்கூடிய இயற்கை மார்க்கமாகும். நீங்கள் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம் என்று.

(139) 2.139. தூதரே! நீர் கூறுவீராக, வேதக்காரர்களே, உங்களின் மார்க்கமும் வேதமும் எங்களைவிட முந்தியது என்பதால் நீங்கள்தாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எங்களைவிட நெருங்கியவர்கள் என்று கூறுகிறீர்களா? நிச்சயமாக இவை உங்களுக்குப் பயன்தராது. அல்லாஹ்தான் நம் அனைவரின் இறைவன். நீங்கள் மட்டும் அவனை சொந்தம் கொண்டாட முடியாது. எங்களுக்கு எங்களின் செயல்கள். அதைக்குறித்து நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். அதைக்குறித்து நாங்கள் கேட்கப்பட மாட்டோம். ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். நாங்கள் வணக்க வழிபாட்டையும் கீழ்ப்படிதலையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம்.

(140) 2.140. அல்லது வேதக்காரர்களே! இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு மற்றும் யஃகூபின் சந்ததிகளில் வந்த தூதர்கள் அனைவரும் யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? தூதரே! அவர்களிடம் நீர் கேளும், நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று. அந்த தூதர்கள் இவர்கள் மார்க்கத்தில்தான் இருந்தார்கள் என்று இவர்கள் கூறினால் இவர்கள் பொய்கூறியவர்களாவர். ஏனெனில் தவ்ராத், இன்ஜீல் இறக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் வாழ்ந்து மரணித்துவிட்டார்களே!? எனவே இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் பொய் கூறுகிறார்கள் என்பதும் அவர்கள் தங்களுக்கு இறக்கப்பட்ட சத்தியத்தை மறைத்தார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. வேதக்காரர்களைப்போன்று அல்லாஹ்விடமிருந்து அறிந்த சாட்சியத்தை மறைப்பவர்களைவிட அநியாயக்காரர்கள் வேறு யாருமில்லை. நீங்கள் செய்கின்ற செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.

(141) 2.141. அது உங்களுக்கு முன்னர் கடந்துபோன சமூகம். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களின் பக்கம் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த செயல்கள் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவர் செய்த பாவத்தினால் தண்டிக்கப்பட மாட்டார். அவர் செய்த செயல்களே அவருக்குப் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தம்முடைய செயல்களுக்கேற்பத்தான் கூலி வழங்கப்படுவார்கள்.

(142) 2.142. யூதர்களில் அறிவீனர்களும் அவர்களைப் போன்று இருக்கும் நயவஞ்சகர்களும், ஏற்கனவே முஸ்லிம்கள் முன்னோக்கிக்கொண்டிருந்த பைதுல் மக்திஸ் திசையை விட்டுத் திருப்பியது எது? என்று கேட்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக, கிழக்கு, மேற்கு மற்றும் மற்ற திசைகள் அனைத்தின் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களை தான் விரும்பிய திசையின் பக்கம் செலுத்துகிறான். தான் நாடிய அடியார்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.

(143) 2.143. உங்களுக்காக நாம் விரும்பிய முன்னோக்கு திசையை (கிப்லா) ஆக்கியது போலவே உங்களையும் சிறந்த, நீதியுள்ள சமூகமாக, கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பொதுவிவகாரங்கள் ஆகிய விஷயங்களில் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். இது, தமது சமூகங்களுக்கு எடுத்துரைக்குமாறு தனது தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள் என்று மறுமைநாளில் அவர்களுக்காக நீங்கள் சாட்சியாளர்களாய் திகழ வேண்டும் என்பதற்காகவும் முஹம்மது நபி அவருக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று உங்கள்மீது அவர் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். யார் அல்லாஹ் விதித்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதையும் யார் தம் மனஇச்சையைப் பின்பற்றி மார்க்கத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதற்காகத்தான், நீர் முன்னோக்கியிருந்த கிப்லாவான பைதுல் முகத்தஸை நாம் மாற்றினோம். அல்லாஹ்வையும் அவன் தன் அடியார்களுக்கு விதித்த சட்டங்கள் யாவும் உயர்ந்த மதிநுட்பமிக்கவை என்பதையும் நம்பிக்கைக்கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, முதல் கிப்லா மாற்றப்பட்ட சம்பவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னால் நீங்கள் தொழுத தொழுகைகளும் அந்த நம்பிக்கையைச் சார்ந்ததே. நிச்சயமாக அவன் மக்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். அவன் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்த மாட்டான்; அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்க மாட்டான்.

(144) 2.144. தூதரே! நீர் விரும்பும் திசைக்கு கிப்லா மாற்றப்படும் வஹி இறங்குவதை எதிர்பார்த்தவராக உமது முகமும், பார்வையும் வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் இப்போது முன்னோக்கும் பைதுல் மக்திஸ் கிப்லாவிற்குப் பதிலாக நீர் விரும்பும் கிப்லாவான கஅபாவின் பக்கம் உம்மைத் திருப்பியே தீருவோம். எனவே உமது முகத்தை மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் பக்கம் திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் தொழும்போது அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் கிப்லா மாற்றம் அவர்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மையே என்பதை அவர்களின் வேதத்தின் மூலம் நன்கறிவார்கள். சத்தியத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அதற்கு அவர்களுக்கு கூலியும் வழங்குவான்.

(145) 2.145. தூதரே! வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கிப்லா மாற்றம் உண்மையானது என்று கூறும் அனைத்துவிதமான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டுவந்தாலும் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் உமது கிப்லாவை முன்னோக்க மாட்டார்கள். அல்லாஹ் உம்மை அவர்களின் கிப்லாவை விட்டும் திருப்பிய பிறகு நீரும் அதனை முன்னோக்கக்கூடியவர் அல்ல. அவர்களில் சிலர் வேறு சிலரின் கிப்லாவை முன்னோக்கக்கூடியவர்களும் அல்ல. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரை நிராகரிப்பாளர்களாகக் கருதுகின்றார்கள். சந்தேகமற்ற சரியான ஞானம் உம்மிடம் வந்தபிறகு கிப்லாவின் விஷயத்திலும் சட்டதிட்டங்களிலும் நீர் அவர்களின் மனவிருப்பங்களை பின்பற்றினால் - நேர்வழியை விட்டுவிட்டு மனஇச்சையை பின்பற்றியதனால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். நபியவர்களை விளித்து கூறப்பட்ட இந்த விஷயம் அந்த மக்களைப் பின்பற்றுவதன் விபரீதத்தை எடுத்துரைப்பதற்காகத்தான். இல்லாவிட்டால் அல்லாஹ் தன் தூதரை அவ்வாறு பின்பற்றுவதிலிருந்து பாதுகாத்துள்ளான். இது நபியவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தை எச்சரிப்பதற்காகத்தான்.

(146) 2.146. நம்மால் வேதம் வழங்கப்பட்ட யூத, கிருஸ்தவ அறிஞர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவதைப்போல் முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் அடையாளங்களில் ஒன்றான கிப்லா மாற்றத்தைப் பற்றியும் முழுமையாக அறிவார்கள். இருந்தும் அவர்களில் ஒருபிரிவினர், அவர் கொண்டு வந்த சத்தியத்தை பொறாமையினால் மறைக்கிறார்கள். அறிந்துகொண்டே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

(147) 2.147. தூதரே! இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம்கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.

(148) 2.148. ஒவ்வொரு சமூகத்திற்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒரு முன்னோக்கு திசை இருக்கின்றது. எனவே அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சட்டங்களும், கிப்லாவும் வெவ்வெறாக இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக இருக்கும்வரை அவர்களின் வெவ்வேறுதிசைகள் எந்தத் தீங்கையும் அளிக்காது. எனவே நம்பிக்கையாளர்களே, உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட நற்செயல்களை விரைந்து செய்யுங்கள். உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றலுடையவன். உங்களை ஒன்று சேர்ப்பதும் கூலிவழங்குவதும் அவனால் முடியாத காரியமல்ல.

(149) 2.149. தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றுபவர்களும் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், எங்கிருந்தாலும் தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது உம் இறைவன் உமக்கு அறிவித்த உண்மையாகும். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்பவே உங்களுக்கு கூலி வழங்குவான்.

(150) 2.150. தூதரே! நீர் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்வீராக. நம்பிக்கையாளர்களே! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தொழவிரும்பினால் அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது ஏனெனில், அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மக்களிடம் உங்களுக்கு எதிராக வாதம் புரிய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அநியாயக்காரர்கள் தங்களின் பிடிவாதத்தில்தான் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அபத்தமான ஆதாரங்களைக் கொண்டும் உங்களுக்கு எதிராக வாதாடுவார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள். உங்கள் இறைவன் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றிலிருந்து விலகி அவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்ற சமூகங்களிலிருந்து உங்களை வேறுபடுத்தி, உங்கள்மீது அவன் பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும், மனிதர்களுக்கான மிகச் மிகச் சிறந்த கிப்லாவை உங்களுக்கு காட்டித்தருவதற்காகவுமே கஅபாவை முன்னோக்குமாறு அவன் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.

(151) 2.151. அதுபோன்று இன்னுமொரு அருட்கொடையையும் நாம் உங்களுக்கு அளித்துள்ளோம். அது, உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். அவர் நம்முடைய வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்; நன்மையான விஷயங்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டி, தீமையான, இழிவான விஷயங்ளை விட்டும் உங்களைத் தடுத்து உங்களைத் தூய்மைப்படுத்துகின்றார்; குர்ஆனையும், சுன்னாவையும் உங்களுக்கு போதிக்கின்றார்; நீங்கள் அறியாத ஈருலக விஷயங்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.

(152) 2.152. உங்களின் உள்ளத்தாலும் உடலுறுப்புக்களாலும் என்னை நினைவுகூருங்கள். உங்களைப் பாராட்டி, பாதுகாத்து நான் உங்களை நினைவுகூருவேன். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். நான் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். அவற்றை மறுத்து, தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் பயன்படுத்தி நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்.

(153) 2.153. நம்பிக்கைகொண்டவர்களே! எனக்குக் கட்டுப்படுவதற்கும் எனது கட்டளைக்கு அடிபணிவதற்கும் பொறுமையைக் கொண்டும் தொழுகைகையைக் கொண்டும் உதவிதேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அவர்களுக்கு பாக்கியம் அளித்து உதவியும் புரிகின்றான்.

(154) 2.154. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதில் கொல்லப்பட்டவர்களை மற்றவர்களைப்போன்று இறந்தவர்கள் என்று கூறாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் உயிருடன் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் அது வஹியின் மூலமாகவே அன்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாத பிரத்யேகமான வாழ்க்கையாகும்.

(155) 2.155. எதிரிகள் குறித்த பயம், உணவுப்பற்றாக்குறையால் ஏற்படும் பசி, அழிதல் அல்லது பெறுவதற்கு சிரமம் ஆகியவற்றால் செல்வம் குறைதல், பேரழிவுகளினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைதலினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பூமியில் விளையும் பழங்களின் பற்றாக்குறை ஆகிய பல்வேறு துன்பங்களால் நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். தூதரே! இத்தகைய துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்பவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.

(156) 2.156. அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் நாடியவாறு நம்மை ஆட்சிசெய்கின்றான். மறுமையில் அவன் பக்கமே நாம் திரும்பக்கூடியவர்கள். அவன்தான் நம்மைப்படைத்தான்; பல்வேறு அருட்கொடைகளைக்கொண்டு நம்மைச் சிறப்பித்தான். அவன் பக்கமே நாம் திரும்ப வேண்டியுள்ளது” என்று கூறுவார்கள்.

(157) 2.157. இத்தகைய பண்புகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்களை அல்லாஹ் வானவர்களிடத்தில் புகழ்ந்து கூறுகிறான். அவர்கள்மீது அவனுடைய அருள் இறங்குகின்றது. அவர்கள்தாம் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்றவர்கள்.

(158) 2.158. கஅபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஸஃபா,மர்வா என்ற இரு மலைகளும் மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். யார் ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுகிறாரோ அவர் அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதில் (சயீ செய்தல்) எந்தக் குற்றமும் இல்லை. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் மக்கள் அவ்விரண்டிற்குமிடையே "சயீ" செய்துவந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றபிறகு அவ்வாறு செய்வதில் முஸ்லிம்களில் சிலருக்கு ஏற்பட்ட தயக்கத்தை அகற்றுவதற்காகவே அது தவறில்லை, அவையிரண்டும் ஹஜ்ஜின் வணக்கங்களில் உள்ளவைதான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எவர் அல்லாஹ் கடமையாக்காத உபரியான வணக்கங்களில் அவனுக்காக ஈடுபடுவாரோ அவரிடமிருந்து அவற்றை அவன் ஏற்றுக்கொள்வான், அவருக்குத் தகுந்த வெகுமதியும் அளித்திடுவான். நற்செயல் புரிபவர்களையும், கூலி பெறுவதற்கு தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.

(159) 2.159. யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும், அவர் கொண்டுவந்தவற்றையும், உண்மைப்படுத்தக்கூடிய தமது வேதங்களில் நாம் இறக்கிய தெளிவான சான்றுகளை மறைப்பவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். வானவர்கள், தூதர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.

(160) 2.160. ஆயினும் தெளிவான சான்றுகளை மறைத்ததற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, தங்களின் வெளிப்படையான, அந்தரங்கமான செயல்களைச் சீர்படுத்தி, மறைத்த சத்தியத்தையும், நேர்வழியையும் தெளிவுபடுத்தியவர்களைத்தவிர. இவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். நான் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.

(161) 2.161. அல்லாஹ்வை நிராகரித்து, நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமல் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் சபித்து தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுகிறான். வானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.

(162) 2.162. இந்த சாபத்தில் அவர்கள் நிலைத்திருப்பார்கள். மறுமைநாளில் ஒரு நாள்கூட அவர்களை விட்டும் வேதனை குறைக்கப்படாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.

(163) 2.163. மனிதர்களே! வணக்கத்திற்குரிய உங்கள் இறைவன் ஒருவனே. அவன் தன்னிலும் தனது பண்புகளிலும் தனித்தவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் அளவிலாக் கருணையாளன்; தனது அடியார்களுக்கு கருணைகாட்டுபவன். அவன் அவர்களுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை அளித்திருக்கிறான்.

(164) 2.164. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், அவற்றிலுள்ள அபுர்வ படைப்புக்களிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உணவுப்பொருட்கள், வியாபாரப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி, விளையும் பயிா்கள் மூலம் பூமியை உயிர்ப்பிக்கும் நீரிலும், இந்த உலகத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு, அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன.

(165) 2.165. தெளிவான இந்த சான்றுகள் இருந்தும் மனிதர்களில் சிலர் அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வை நேசிப்பதுபோல் அந்த தெய்வங்களையும் நேசிக்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள் தமது தெய்வங்களை நேசிப்பதை விட அல்லாஹ்வை அதிகமாக நேசிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவதில்லை. மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் அவனையே நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களோ மகிழ்ச்சியில் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நேசிக்கிறார்கள்; துன்பத்தில் அல்லாஹ்வையே அழைக்கிறார்கள். இணைவைத்து, தீயகாரியங்கள் செய்து அநியாயக்காரர்களான இவர்கள் மறுமையில் வேதனையைக் காணும்போது வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். அவர்கள் இந்த வேதனையை முன்னரே பார்த்திருந்தால் ஒருபோதும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியிருக்க மாட்டார்கள்.

(166) 2.166. இது மறுமைநாளின் பயங்கரத்தையும் கடுமையையும் காணும் பின்பற்றப்பட்ட தலைவர்கள் தம்மைப் பின்பற்றிய பலவீனர்களை விட்டும் விலகிக்கொள்ளும் சந்தர்ப்பத்திலே நிகழும். தப்புவதற்கான அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.

(167) 2.167. பின்பற்றியவர்கள், பலவீனமானவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டும் எமது தலைவர்கள் விலகிக்கொண்டதைப்போல் நாங்களும் அவா்களை விட்டு விலகுவதற்கு உலகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கக்கூடாதா? மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு கடுமையான வேதனையைக் காட்டியதுபோல், அசத்தியத்தில் இருந்த தலைவர்களைப் பின்பற்றியதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவலைகளாக, கைசேதங்களாக அனுபவிக்கச்செய்வான். அவர்கள் நரகத்திலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.

(168) 2.168. மனிதர்களே! பூமியிலுள்ள விலங்குகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட, அசுத்தமற்ற தூய்மையானவைகளை உண்ணுங்கள். உங்களைத் தந்திரமாகத் தன்பக்கம் ஈர்க்கும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். தனக்கு தீங்கிழைக்க, தனக்குத் தீங்கிழைக்கவும் தன்னை வழிகெடுக்கவும் நினைக்கின்ற தன் எதிரியைப் பின்பற்றுவது ஒரு அறிவாளிக்கு உகந்ததல்ல.

(169) 2.169. அவன் மானக்கேடான, பெரும் பாவங்களைச் செய்யுமாறும் அல்லாஹ்விடமிருந்தோ அவனது தூதர்களிடமிருந்தோ கிடைத்த அறிவின்றி கொள்கையிலும், சட்டங்களிலும் அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுமாறும் உங்களைத் தூண்டுகிறான்.

(170) 2.170. இந்த நிராகரிப்பாளர்களிடம்:அல்லாஹ் இறக்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால், "எங்கள் முன்னோர்களின் கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும்தான் பின்பற்றுவோம்" என்று பிடிவாதத்துடன் கூறுகிறார்கள். அந்த முன்னோர்கள் நேர்வழியைக் குறித்து எதுவும் அறியாதவர்களாகவும், அல்லாஹ் விரும்பும் சத்தியத்தை அடைய முடியாதவர்களாகவும் இருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவார்களா என்ன?

(171) 2.171. நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவதற்கான உதாரணம், தனது கால்நடையைக் கத்திக்கத்தி அழைக்கும் இடையனைப் போன்றது. அவை அவனுடைய சப்தத்தை செவியுறுகின்றன. ஆனால் அவனுடைய பேச்சை புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சத்தியத்தை செவியுற்று அதைக்கொண்டு பயனடைய முடியாத செவிடர்கள். உண்மையைப் பேச முடியாத ஊமைகள். அதனைக் காணமுடியாத குருடர்கள். எனவே நீர் அழைக்கும் நேர்வழியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

(172) 2.172. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, ஆகுமாக்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நன்றி செலுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் இருந்தால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றை விட்டு விலகியிருப்பதும் அவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ளவைதாம்.

(173) 2.173. அல்லாஹ் உங்கள்மீது பின்வரும் உணவுப்பொருட்களைத் தடைசெய்துள்ளான்: "இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கூறி அறுக்கப்பட்டது."யாரேனும் நிர்பந்தத்தினால் - விரும்பாமலும், தேவையான அளவைத் தாண்டாமலும் - இவ்வகையான பொருள்களை உண்டுவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நிர்ப்பந்தமான சமயங்களில் தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை மன்னித்துவிடுவதும் அவனுடைய கருணையின் வெளிப்பாடுதான்.

(174) 2.174. யூதர்களும் கிருஸ்தவர்களும் செய்வது போன்று அல்லாஹ் இறக்கிய வேதங்களையும் அவற்றில் உள்ள சத்தியம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து உள்ளவற்றையும் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயங்களுக்காக மறைப்போர் உண்மையில் அவர்கள் நரக வேதனைக்கு காரணமாக அமையக்கூடியவற்றைத்தான் தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் அவர்கள் விரும்பும் விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; மாறாக கவலையூட்டும் விதமாகவே பேசுவான். அவர்களைத் தூய்மைப்படுத்தவோ பாராட்டவோ மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனைதான் உண்டு.

(175) 2.175. மக்களுக்குத் தேவையான கல்வியை மறைக்கக்கூடிய இவர்கள் உண்மையான கல்வியை மறைத்தபோது, நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் அல்லாஹ்வின் மன்னிப்பிற்குப் பதிலாக அவனுடைய தண்டனையையும் வாங்கிக் கொண்டார்கள். அவர்களை நரகத்தில் தள்ளுவதற்கு காரணமான விஷயங்களில் ஈடுபடுவதை எவ்வளவு அருமையாக சகித்துக் கொள்கிறார்கள்!? தம்மால் சகித்துக்கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் வேதனையை அவர்கள் பொருட்படுத்தவில்லைபோலும்.

(176) 2.176. இந்த வேதனை நேர்வழியையும் கல்வியையும் மறைத்தனால் ஏற்பட்ட விளைவாகும். ஏனெனில் மறைக்கப்படாமல் தெளிவுபடுத்தப்படுவதற்காகவே வேதங்களை உண்மையாகவே அல்லாஹ் இறக்கியருளியுள்ளான். இறைவேதங்களில் கருத்துவேறுபாடு கொண்டு, அவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு சிலவற்றை மறைத்தவர்கள் சத்தியத்தை விட்டு தூரமாகச் சென்றுவிட்டார்கள்.

(177) 2.177. கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ வெறுமனே முன்னோக்குவதும் அதில் முரண்பட்டுக்கொள்வதும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான நன்மை அல்ல. உண்மையில் நன்மை என்பது, ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் வானவர்கள் அனைவரின் மீதும் இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தின்மீதும், பாகுபாடின்றி தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும், செல்வத்தின்மீது மோகம் இருந்தும் அதை உறவினர்களுக்காக, அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, குடும்பத்தையும் நாட்டையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக, மக்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறியவர்களுக்காக, அடிமைகளையும் கைதிகளையும் விடுதலை செய்வதற்காக செலவு செய்வதும், அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகையை முழுமையாகக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்குவதும், வாக்குறுதி அளித்தால் அதை முழுமையாக நிறைவேற்றுவதும், வறுமை, நோய் போன்றவற்றை சகித்துக்கொள்வதும், போர் உக்கிரமடையும் போது விரண்டோடாமல் பொறுமையாக இருப்பதும் ஆகும். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள்தாம் தங்களுடைய ஈமானிலும் செயல்பாடுகளிலும் அல்லாஹ்வுக்கு உண்மையாக இருப்பவர்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள்.

(178) 2.178. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! வேண்டுமென்றே, அநியாயமாக மற்றவர்களை கொலை செய்யக்கூடியவர்கள் விஷயத்தில் கொலையாளியின் குற்றத்திற்குப் பகரமாக அவனும் கொல்லப்பட வேண்டும் என்று உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவன் சுதந்திரமானவனுக்குப் பகரமாக கொல்லப்படுவான், அடிமை அடிமைக்குப் பகரமாக கொல்லப்படுவான், பெண் பெண்ணுக்குப் பகரமாக கொல்லப்படுவாள். கொலைசெய்யப்பட்டவர் இறப்பதற்கு முன்னால் கொன்றவனை மன்னித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டவரின் பொறுப்பாளர் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு அவனை மன்னித்துவிட்டால் - மன்னிப்பவர் ஈட்டுத் தொகையைப் பெறுவதில் சொல்லிக்காட்டாது நோவினை செய்யாது நல்லமுறையில் நடந்துகொள்ளட்டும். கொன்றவனும் தாமதமின்றி சிறந்தமுறையில் ஈட்டுத்தொகையை அளித்துவிடட்டும். இந்த மன்னிப்பும், ஈட்டுத்தொகையும் இறைவன் உங்களுக்கு அளித்த சலுகையும் இந்த சமூகத்தின்மீது பொழிந்து கருணையுமாகும். மன்னித்து, ஈட்டுத்தொகையும் பெற்றுவிட்டு கொன்றவன்மீது யாரேனும் வரம்புமீறினால் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வேதனைமிக்க தண்டனை உண்டு.

(179) 2.179. அல்லாஹ் உங்களுக்கு விதித்த இந்த பழிவாங்குதலில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது. அதனால் உங்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கு மத்தியில் நிகழும் அநியாயங்கள் தடுக்கப்படும். அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, அவனது கட்டளையின்படி செயல்படும், அவனை அஞ்சும் அறிவாளிகள் இந்த விஷயத்தை உணர்ந்துகொள்வார்கள்.

(180) 2.180. நீங்கள் மரண வேளையை நெருங்கிவிட்டால், நீங்கள் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்பவர்களாக இருந்தால் தாய்தந்தையருக்கும், உறவினருக்கும் - இறைவன் விதித்தபடி - மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமின்றி உயில் எழுதிவிடுங்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள்மீது கட்டாயக் கடமையாகும். இது வாரிசுரிமை தொடர்பாக வசனங்கள் இறங்குவதற்கு முன்னுள்ள சட்டமாகும். வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் இறங்கிய பிறகு யார் எந்தளவு அனந்தரம் பெறுவார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

(181) 2.181. இந்த உயிலை தெளிவாக அறிந்தபின்னர் கூட்டிக் குறைப்பதன் மூலமோ தடுப்பதன் மூலமோ யாராவது மாற்றிவிட்டால் அந்த பாவம் மாற்றியவரையே சாரும். உயில் உரிமையாளர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ், அடியார்கள் பேசுவதை செவியேற்பவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவர்களது எந்தவோரு விடயமும் அவனை விட்டும் தப்பமுடியாது.

(182) 2.182. உயில் எழுதுபவர் அநியாயமாக அல்லது பக்கச்சார்போடு எழுதிவிடுவார் என அஞ்சுபவர் உயில் எழுதுபவருக்கு அவர் அறிவுரை வழங்கி சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. உயில் விடயத்தில்; கருத்துவேறுபட்டுள்ளவர்களுக்கு மத்தியில் அவர் சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. அவர் செய்த சமாதான முயற்சிக்காக அவர் கூலிகொடுக்கப்படுவார். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிப்பவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(183) 2.183. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப்போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்குமிடையே நற்செயல்களால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த நற்செயல்களில் மிகச் சிறந்தது நோன்பாகும்.

(184) 2.184. வருடத்தில் சில நாட்களே உங்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ, பயணம் செய்யக்கூடியவராகவோ இருந்தால் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் விட்டவற்றை கணக்கிட்டு நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்க சக்திபெற்றவர் நோன்பு நோற்கவில்லையெனில் அதற்குரிய பரிகாரத்தை அளித்துவிடட்டும். அது நோன்பை விடுகின்ற ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்தலாகும். நீங்கள் நோன்பின் சிறப்புகளை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்காமல் பரிகாரம் வழங்குவதை விட நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இது அல்லாஹ் முதல் கட்டமாக நோன்பை விதியாக்கிய நேரத்தில் இருந்த சட்டமாகும். அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம், விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உணவளிக்கலாம். பின்னர் அல்லாஹ் வயதுவந்த சக்தியுள்ள அனைவரின்மீதும் நோன்பு நோற்பதை கடமையாக்கினான்.

(185) 2.185. ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.

(186) 2.186. தூதரே! என் அடியார்கள் என்னை நெருங்குவது குறித்தும், நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது குறித்தும் உம்மிடம் வினவினால் - நான் அவர்களுக்குச் சமீபமாக, அவர்களின் நிலையை நன்கறிந்தவனாக, அவர்களின் பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றேன். அவர்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை; அவர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. அழைப்பவரின் அழைப்புக்கு, அவர் என்னை உளத்தூய்மையுடன் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படட்டும்; தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கட்டும். இதுதான் நான் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை. இதனால் அவர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் நேரான பாதையில் சென்றிடலாம்.

(187) 2.187. ஆரம்பத்தில் ஒருவர் நோன்பு இரவில் தூங்கி, ஃபஜ்ருக்கு முன் விழித்துவிட்டால் அவர் உண்ணவோ உடலுறவு கொள்ளவோ தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் அல்லாஹ் இந்த கட்டளையை ரத்துசெய்தான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நோன்பு இரவுகளில் உங்கள் மனைவியருடன் உறவுகொள்வதை உங்களுக்கு அல்லாஹ் அனுமதித்துவிட்டான். அவர்கள் உங்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒருவர் மற்றவரை விட்டும் தேவையற்றிருக்க முடியாது. அவன் உங்களுக்குத் தடுத்த செயலைக்கொண்டு உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள் என்பதை அவன் அறிந்துகொண்டான். உங்கள்மீது கருணைகாட்டி, உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திவிட்டான். எனவே நீங்கள் உறவுகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்த குழந்தைகளைத் தேடிக்கொள்ளுங்கள். அதிகாலை தெளிவாக வெளிப்படும்வரை இரவில் நீங்கள் உண்ணலாம், பருகலாம். பஜ்ர் உதித்ததிலிருந்து சூரியன் மறையும்வரை நோன்பை முறிக்கக்கூடிய விஷயங்களை விட்டும் தவிர்ந்து நோன்பை நிறைவுபடுத்துங்கள். நீங்கள் பள்ளிவாயில்களில் (இஃதிகாஃபில்) தங்கியிருக்கும்போது மனைவியிருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வது அதனை முறித்துவிடும். மேற்குறிப்பிட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் ஹலால், ஹராம் தொடர்பாக அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். எனவே அவற்றை ஒருபோதும் நெருங்கிவிடாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை நெருங்குபவர் தடைசெய்யப்பட்டவற்றில் விழுந்துவிட நேரிடலாம். மக்கள், அல்லாஹ் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இச்சட்டங்களை நன்கு தெளிவுபடுத்துவதன் மூலம் அவன் தன் வசனங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(188) 2.188. திருட்டு, கொள்ளை, மோசடி போன்ற சட்டத்திற்குப் புறம்பான வழியில் நீங்கள் ஒருவர் மற்றவரின் செல்வத்தைப் பெறாதீர்கள். மக்களின் செல்வத்தை பாவமான முறையில் பிடுங்குவதற்காக அதிகாரிகளிடம் வாதாடாதீர்கள். இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தடைசெய்யப்பட்டது என அறிந்துகொண்டே பாவத்தில் ஈடுபடுவது மிகக் கேவலமானதும் பெரும் தண்டனைக்குரிய செயலுமாகும்.

(189) 2.189. தூதரே! பிறை உருவாகுவதைப் பற்றியும் அதனுடைய நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக, :அது மக்களுக்கு காலங்காட்டியாகும். அதன்மூலம் அவர்கள் நோன்பு, ஹஜ் ஆகியவற்றின் மாதங்கள், ஸகாத்தின் வருடப் பூர்த்தி போன்ற தமது வணக்க வழிபாடுகளின் நேரங்களை அறிந்துகொள்கிறார்கள். மேலும் இழப்பீடு, கடன் தவணைகளை தீர்மானிப்பது போன்ற கொடுக்கல்வாங்கல்களின் நேரங்களையும் அதன் மூலம் அறிந்துகொள்கின்றனர். நீங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலகட்டத்தில் செய்துவந்ததுபோன்று ஹஜ் அல்லது உம்ரா செய்ய இஹ்ராமில் நுழைந்த பின் வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக நுழைவதில் நன்மை இல்லை. மாறாக உள்ரங்கத்திலும் வெளிரங்கத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்வதே உண்மையான நற்செயலாகும். வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே நுழைவதே உங்களுக்கு இலகுவானது. அல்லாஹ் உங்கள்மீது சிரமமான விஷயங்களை விதிக்கவில்லை. நற்செயல்களால் உங்களுக்கும் அல்லாஹ்வின் வேதனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் விரும்பும் விஷயங்களைப் பெற்று, அஞ்சும் விஷயங்களிலிருந்து தப்பித்து வெற்றியடையலாம்.

(190) 2.190. அல்லாஹ்வின் பாதையை விட்டும் உங்களைத் தடுப்பதற்காக உங்களுடன் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிடுங்கள். போர்க்களத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரைக் கொன்றோ இறந்தவர்களைச் சித்திரவதை செய்தோ வரம்புமீறிவிடாதீர்கள். அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.

(191) 2.191. அவர்களை சந்திக்கும் இடங்களில் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியேற்றிய மக்காவிலிருந்து அவர்களையும் வெளியேற்றுங்கள். ஒரு நம்பிக்கையாளனை அவனுடைய மார்க்கத்தை விட்டுத் தடுத்து நிராகரிப்பின் பக்கம் கொண்டு செல்லும் குழப்பம் கொலையை விடக்கொடியது. மஸ்ஜிதுல் ஹராமை கண்ணியப்படுத்தும் பொருட்டு அங்கு அவர்களாகவே போரைத் தொடங்கும்வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள். அவர்கள் போரைத் தொடங்கிவிட்டால் அவர்களைக் கொல்லுங்கள். மஸ்ஜிதுல் ஹராமில் வரம்புமீறியதற்கு கொலையே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.

(192) 2.192. அவர்கள் உங்களுடன் போர் புரிதல், தங்களின் நிராகரிப்பு எக்பவற்றிலிருந்து விலகிவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் முந்தைய பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.

(193) 2.193. நிராகரிப்பவர்கள், இணைவைப்பையும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும் நிராகரிப்பதையும் விட்டுவிடும்வரையும், அல்லாஹ்வுடைய மார்க்கம் மிகைக்கும் வரையும் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும், அவனை நிராகரிப்பதையும் விட்டுவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள்; அவர்களுடன் போரிடாதீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்து அவனை நிராகரிக்கும் அநியாயக்காரர்களைத்தவிர வேறு யாரிடமும் பகைமை இல்லை.

(194) 2.194. அல்லாஹ் உங்களுக்கு ஹரமில் நுழைவதற்கு அனுமதியளித்த ஏழாம் ஆண்டின் புனிதமான மாதம் இணைவைப்பாளர்கள் உங்களைத் தடுத்த ஆறாம் ஆண்டின் புனிதமான மாதத்திற்கு பகரமாகும். புனிதங்களிலும் - புனித மாதம், புனித நகரம், இஹ்ராம் போன்றவை - வரம்பு மீறியவர்களிடமிருந்து பழிவாங்கப்படுகிறது. யாரேனும் இவற்றில் உங்கள்மீது வரம்பு மீறினால் அவர்கள் உங்களுடன் நடந்துகொண்டவாறே நீங்களும் நடந்துகொள்ளுங்கள். வரம்புமீறி விடாதீர்கள். அல்லாஹ் அவன் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றில் வரம்புமீறுவதில் அவனை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு உதவுபவனாகவும், ஆதரவளிப்பவனாகவும் இருக்கின்றான்.

(195) 2.195. ஜிஹாத் மற்றும் அதுபோன்ற இறைவழிபாட்டில் செல்வங்களை செலவு செய்யுங்கள். ஜிஹாதையும் அவனுடைய பாதையில் செலவழிப்பதையும் விட்டுவிட்டோ உங்களின் அழிவுக்குக் காரணமானவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமோ உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களின் வணக்க வழிபாடு, கொடுக்கல் வாங்கல்கள், பண்புகள் ஆகியவற்றில் சிறந்தமுறையில் செயலாற்றுங்கள். எல்லா விவகாரங்களிலும் சிறந்தமுறையில் செயல்படுபவர்களேயே அல்லாஹ் நேசிக்கின்றான். அவன் அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறான்; நேரான வழியைக் காட்டுகிறான்.

(196) 2.196. அல்லாஹ்வின் திருப்திக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். நோயினாலோ எதிரிகளினாலோ நீங்கள் அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களால் இயன்ற பலிப்பிராணிகளை அறுத்து உங்களின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். பலிப்பிராணி அறுக்கப்படும் இடத்தை அடையும்வரை தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யாதீர்கள். அது ஹரமை விட்டுத் தடுக்கப்பட்டால் தடுக்கப்பட்ட இடத்திலேயே அறுத்துக் கொள்ளுங்கள். அது தடுக்கப்படவில்லையெனில் ஹரமில் அறுக்கப்படும் நாளான துல்ஹஜ் பத்தாம் தினத்திலும் அதற்கு அடுத்த "அய்யாமுத் தஷ்ரீக்" என்னும் மூன்று நாட்களிலும் அறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாக அல்லது தலையில் பேன் போன்ற பூச்சிகளால் பாதிக்கப்பட்டு, உங்களின் தலைமுடியை மழித்துக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அதற்கான பரிகாரத்தை அளித்துவிடுங்கள். அதற்கான பரிகாரம், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஹரமில் உள்ள ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்து ஹரமிலுள்ள ஏழைகளுக்கு அதனைப் பங்கிட வேண்டும். நீங்கள் அச்சமற்றவர்களாக இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவையும் நிறைவேற்றி அதே வருடம் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை இஹ்ராமின் மூலம் தடைசெய்யப்பட்டவற்றை அனுபவிக்க (தமத்துஃ முறையில் நிய்யத் வைக்க) விரும்பினால், ஒரு ஆட்டை அறுத்து அல்லது ஒட்டகத்திலோ, மாட்டிலோ ஏழு பங்கில் ஒருவராக இணைந்து உங்களால் இயன்றதைப் பலியிட்டுவிடுங்கள். உங்களால் பலிப்பிராணியை பெறமுடியவில்லையெனில் அதற்குப் பகரமாக ஹஜ்ஜின் கிரியைகளுக்குரிய காலத்தில் மூன்று நாட்களும், வீடுதிரும்பிய பிறகு ஏழுநாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மொத்தம் முழுமையான பத்து நாட்களாகும். தமத்துஃ முறையில் நிய்யத் வைத்து பலிப்பிராணியை பலியிடுவது, முடியாதபட்சத்தில் நோன்பு நோற்பது என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லை மற்றும் அதன் அருகில் வசிக்காதவர்களுக்காகும். ஹரமிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு தமத்துஃ முறையில் ஹஜ் செய்வதற்கு எவ்விதத் தேவையுமில்லை. அவர்கள் அருகில் வசிப்பதால் வெறும் தவாப் மாத்திரம் போதுமானது. ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் விதித்த கட்டளைகளையும் வரம்புகளையும் பேணி அவனுக்கு அஞ்சுங்கள். தன்னுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

(197) 2.197. ஹஜ்ஜுடைய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அது ஷவ்வால் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ் பத்தில் நிறைவடைகிறது. யார் இந்த மாதங்களில் ஹஜ் செய்வதை தன்மீது கடமையாக்கி, நிய்யத் வைத்து அதில் நுழைந்துவிட்டாரோ அவர்மீது உடலுறவு கொள்வதோ அதற்கு முன்னோட்டமான செயல்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் தடையாகும். ஏனெனில் இது புனிதமான காலமும் புனிதமான இடமுமாகும். கோபத்தையும் வெறுப்பையும் உண்டுபண்ணும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். ஹஜ்ஜின் காலங்களில் உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் அனைத்துக் காரியங்களிலும் நீங்கள் செய்யும் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது "தக்வா" என்னும் இறையச்சம்தான். அறிவுடையோரே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.

(198) 2.198. ஹஜ் செய்யும்போது வியாபாரத்தின் மூலமோ இன்னபிற விஷயங்களின் மூலமோ நீங்கள் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அரஃபாவில் ஒன்றுகூடிய பிறகு பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவை நோக்கி நீங்கள் சென்றால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். முஸ்தலிஃபாவிலுள்ள மஷ்அருல் ஹராமிற்கு பிரதான அடையாளங்கள், ஹஜ் வணக்கவழிபாடுகள் என்பவற்றுக்கு அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் அவனுடைய மார்க்கத்தை அறியாது இருந்தீர்கள்.

(199) 2.199. பின்னர் நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியோர் செய்வதைப்போல அரஃபாவிலிருந்து செல்லுங்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள் செய்ததைப்போன்று அங்கு தரிப்பதை விட்டு விடவேண்டாம். அல்லாஹ் விதித்ததை நிறைவேற்றியபோது உங்களிடம் நிகழ்ந்த குறைகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

(200) 2.200. ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் முன்னோர்களைக் கொண்டு நீங்கள் பெருமை பேசுவதுபோல அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வைப் புகழுங்கள். நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அருட்கொடையும் அவன் அளித்ததுதான். மக்கள் பல்வேறு வகையினராக இருக்கின்றனர். அவர்களில் ஒரு வகையினர் இந்த உலகத்தின்மீது மட்டுமே நம்பிக்கைகொண்ட இணைவைக்கும் நிராகரிப்பாளர்கள். அவர்கள் ஆரோக்கியம், சொத்து, பிள்ளைப்பாக்கியம் ஆகிய இவ்வுலகின் இன்பங்களையும் அலங்காரத்தையுமே தங்கள் இறைவனிடம் கேட்கிறார்கள். அவர்கள் மறுமைநாளைப் புறக்கணித்து இவ்வுலகின்மீது மோகம் கொண்டதனால் மறுமையில் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியவற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

(201) 2.201. மனிதர்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் இவ்வுலக இன்பத்தையும் அதில் நற்செயலையும் அதேபோன்று மறுமையில் நரக வேதனையிலிருந்து பாதுகாக்கப்பட்டு, சுவனத்தைப் பெற்று அடையும் வெற்றியையும் கேட்கிறார்கள்.

(202) 2.202. இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை வேண்டும் இவர்களுக்கு இவ்வுலகில் சம்பாதித்த நற்செயல்களுக்கான பெரும் கூலி உண்டு. செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதில் அவன் விரைவானவன்.

(203) 2.203. துல்ஹஜ் பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று ஆகிய நாட்களில் "அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்" ஆகிய திக்ருகளைக் கொண்டு அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் அவசரப்பட்டு பன்னிரண்டாவது நாளே கல்லெறிந்த பிறகு மினாவிலிருந்து வெளியேறிவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவரைவிட்டும் சட்டத்தை தளர்தியுள்ளான். எவர் பதிமூன்றாம் நாள்வரை தாமதித்துச் சென்றாரோ அவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அவர் பரிபூரணமானதைச் செய்துள்ளதோடு நபி (ஸல்) அவர்களது செயலையும் பின்பற்றியவராவார். இவையனைத்தும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் அல்லாஹ்வை அஞ்சி அவன் கட்டளையிட்டபடி நிறைவேற்றியவர்களுக்குத்தான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும், அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

(204) 2.204. தூதரே! மனிதர்களில் சில நயவஞ்சகர்கள் உள்ளனர். இவ்வுலகில் அவர்களின் பேச்சு உம்மை ஈர்த்துவிடும். அவர்கள் பேசும் தொனியைப் பார்த்து "அவர்கள் உண்மையாளர்கள், விசுவாசமானவர்கள்" என்று நீர் எண்ணலாம். அவர்கள் இதன்மூலம் தங்களையும், தங்கள் செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களின் உள்ளத்தில் ஈமானும் நன்மையும் உள்ளதாகக்கூறி அல்லாஹ்வையே அதற்கு சாட்சியாக்குவார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு கடும் பகைவர்களாவர்.

(205) 2.205. அவர்கள் உம்மை விட்டுச் சென்றுவிட்டால் பாவங்களைக் கொண்டு உலகில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். விளைநிலங்களை நாசப்படுத்தி, கால்நடைகளைக் கொலை செய்கிறார்கள். குழப்பத்தையும் குழப்பவாதிகளையும் அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான்.

(206) 2.206. "அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்"என்று அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், அகந்தையும் ஆணவமும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவிடாமல் அவனைத் தடுக்கின்றன. பாவத்திலே அவன் தொடர்ந்திருக்கிறான். நரகத்தில் நுழைவதே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். அது மிகவும் மோசமான தங்குமிடமாகும்.

(207) 2.207. மனிதர்களில் நம்பிக்கைகொண்ட சிலர் தனது இறைவனுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்தவாறு, அவனுடைய திருப்தியைத் தேடியவாறு தம் உயிரை வழங்குகின்றார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(208) 2.208. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். வேதத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு சில பகுதிகளை நிராகரித்த வேதக்காரர்களைப்போன்று அதில் எதையும் விட்டுவிடாதீர்கள். ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.

(209) 2.209. சந்தேகமற்ற, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்தபிறகும் நீங்கள் சத்தியத்தை விட்டு சறுகிவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தனது ஆற்றலில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன். எனவே அவனையே அஞ்சுங்கள், கண்ணியப்படுத்துங்கள்.

(210) 2.210. சத்தியப் பாதையை விட்டுவிட்டு ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றும் இவர்கள், மறுமைநாளில் அல்லாஹ் தன் கண்ணியத்திற்கேற்றபடி மேகத்தின் நிழல்களில் அவர்களிடையே தீர்ப்பு அளிப்பதற்காக வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்போது வானவர்கள் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்ந்துவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் கட்டளை அவர்களிடையே நிறைவேற்றப்படும். படைப்புகளின் விஷயங்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன.

(211) 2.211. தூதரே! இஸ்ராயீலின் மக்களைக் கண்டிக்கும்விதமாக அவர்களிடம் கேளும், :தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய எத்தனையோ தெளிவான சான்றுகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றானே! நீங்கள் அவற்றை பொய் எனக்கூறி புறக்கணித்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடையை தெளிவாக அறிந்தபின்னரும் அதனை நிராகரிப்பாக மாற்றுபவர்கள் அறிந்துகொள்ளட்டும், ;நிச்சயமாக அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதை.

(212) 2.212. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையும் அதிலுள்ள அழியக்கூடிய இன்பங்களும் அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர்களை பரிகாசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இந்த நிராகரிப்பாளர்களைவிட மறுமையில் உயர்ந்தநிலையில் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை நிலையான சுவனங்களில் தங்கச் செய்வான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

(213) 2.213. மனிதர்கள் தங்களின் தந்தை ஆதமின் மார்க்கத்தில் ஒன்றுபட்டவர்களாக, ஒரு சமூகத்தினராக இருந்தார்கள். ஷைத்தான் அவர்களை வழிகெடுத்தான். அதனால் அல்லாஹ்வை நம்பியவர்கள், நிராகரித்தவர்கள் என பிரிந்துவிட்டனர். இதனால் அல்லாஹ் தூதர்களை நற்செய்தி கூறக்கூடியவர்களாகவும், எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பிவைத்தான். அவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் தயார்படுத்தியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள். அவனை நிராகரித்தவர்களுக்கு அவன் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார்கள். மக்களிடையே தோன்றும் கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்ப்பளிப்பதற்காக தூதர்களுடன் உறுதியான சத்தியத்தை உள்ளடக்கிய வேதங்களையும் இறக்கினான். தவ்ராத்தின் அறிவு வழங்கப்பட்டவர்களே அதில் முரண்பட்டனர். கருத்துவேறுபாடு கொள்ளமுடியாத அளவு அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மைதான் என்பதற்கு ஆதாரங்கள் வந்த பின்பும் யூதர்கள் அநியாயமாகவே தவ்ராத்தில் கருத்துவேறுபட்டார்கள். தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அல்லாஹ், நேர்வழியை அறிந்து அதனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளித்தான். அல்லாஹ் தான் நாடியோருக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியான ஈமானின் வழியைக் காட்டுகிறான்.

(214) 2.214. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் போன்று உங்களுக்கும் ஏற்படாமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா? வறுமையும் நோயும் அவர்களைப் பீடித்தது. அவர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்: அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று அவசரப்படும் அளவுக்கு அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்:அல்லாஹ்வையே நம்பியவர்களுக்கும் அவனையே சார்ந்திருப்பவர்களுக்கும் அவனுடைய உதவி சமீபத்தில் இருக்கிறது.

(215) 2.215. தூதரே! உம்முடைய தோழர்கள், அவர்களின் செல்வங்களில் எதைச் செலவுசெய்ய வேண்டும்? யாருக்கு வழங்க வேண்டும்? என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: நீங்கள் தூய்மையான எந்த செல்வத்தைச் செலவு செய்தாலும் உங்களின் தாய்தந்தையருக்காக, தேவைக்கேற்ப நெருங்கிய உங்களின் உறவினருக்காக, தேவையுடைய அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, நாட்டையும் குடும்பத்தையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக செலவு செய்யுங்கள்.முஃமின்களே! குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(216) 2.216. நம்பிக்கையாளர்களே! போரில் உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதால் மனதிற்கு வெறுப்பாக இருந்தபோதிலும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது போன்ற உங்களுக்குப் பயனுள்ள ஒரு விஷயத்தை நீங்கள் வெறுக்கலாம், அதற்குக் கிடைக்கும் அபரிமிதமான கூலிகளுடன் எதிரிகளை வென்றுவிடுதல், அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்தல் போன்ற நன்மைகளையும் அதில் நீங்கள் பெறலாம். போர் புரியாமல் இருப்பதைப் போன்ற உங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம். ஆனால் அதன் மூலம் இழிவும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்படும். நன்மைகளையும் தீங்குகளையும் அல்லாஹ்வே ஒவ்வொரு விடயத்தின் சாதக பாதகங்களை முழுமையாக அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே அவனது கட்டளைகளுக்கு அடிபணியுங்கள். அதில்தான் நன்மை அடங்கியுள்ளது.

(217) 2.217. தூதரே! புனிதமான மாதங்களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர்புரிவதைப் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: இந்த மாதங்களில் போர்புரிவது அல்லாஹ்விடத்தில் பாவமானதும் கண்டனத்திற்குரியதுமாகும். அதே போன்று அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் இணைவைப்பாளர்களின் செயலும் கெட்டதாகும். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு நம்பிக்கையாளர்களைத் தடுப்பது, அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அல்லாஹ்விடத்தில் புனித மாதத்தில் போரிடுவதை விடப் பெரிய பாவமாகும். அல்லாஹ்விற்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் அவர்களின் செயற்பாடு கொலையைவிடக் கொடியது. நம்பிக்கையாளர்களே! வாய்ப்புக் கிடைத்தால் உங்களை உண்மையான மார்க்கத்திலிருந்து திருப்பி தமதுபொய்யான மார்க்கத்திற்கு கொண்டுவரும்வரை, அநீதியில் இருக்கும் இந்த இணைவைப்பாளர்கள் உங்களுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர் தம் மார்க்கத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நிராகரித்த நிலையில் மரணித்தும் விடுகிறாரோ அவரது நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மறுமையில் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்.

(218) 2.218. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், தங்களின் நாட்டை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கம் புலம்பெயர்ந்தவர்கள், அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிட்டவர்கள் ஆகிய இவர்கள்தாம் அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் விரும்புகிறார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளன்.

(219) 2.219. தூதரே! உம்முடைய தோழர்கள் போதயை உண்டுபன்னும் மதுபானம் அருந்துவது, விற்பது வாங்குவது குறித்தும், சூதாட்டத்தைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக:அவையிரண்டும் மார்க்க மற்றும் உலகியல்ரீதியாக ஏராளமான தீங்குகளை உடையவை. அவை அறிவை மழுங்கடித்துவிடும்; செல்வத்தைப் போக்கிவிடும்; உங்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிடும். அவையிரண்டிலும் பொருளாதார ரீதியான சில பயன்களும் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் பயன்களைவிட தீங்குகளும் பாவங்களுமே அதிகமானது. எதனுடைய தீங்கு பயனைவிட அதிகமாக இருக்கின்றதோ அறிவாளி அதனைவிட்டும் தவிர்ந்திருப்பார். இது போதைப்பொருட்களை தடைசெய்வதற்கான ஆரம்பக்கட்ட அறிவுரையாகும். தூதரே! உம்முடைய தோழர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து உபரியாக எதைச் செலவுசெய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: உங்களின் தேவைபோக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் (இது ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் குறித்த பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளையுடைய ஸகாத்தை கடமையாக்கினான்). நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, இதுபோன்ற சந்தேகமற்ற, தெளிவான போதனைகளைக் கொண்டு அல்லாஹ் மார்க்கத்தின் சட்டங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(220) 2.220. இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடிய விஷயங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இவற்றை விதித்துள்ளான். தூதரே! உம்முடைய தோழர்கள் அநாதைகளை பொறுப்பேற்பது குறித்து, அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? உணவு, வசிப்பிடம் ஆகிய செவினங்களில் அவர்களின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிக்கலாமா? என்றெல்லாம் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு கலக்காமலும், அவற்றிலிருந்து இலாபத்தைப் பெறாமலும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பராமரிப்பது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததும் அதிகக் கூலியை பெற்றுத்தரக்கூடியதுமாகும். அதுவே அவர்களது செல்வத்துக்கும் சிறந்ததும் பாதுகாப்புமாகும். நீங்கள் அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிப்பதும் எவ்விதக் குற்றமுமில்லை. அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களாவர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். ஒருவர் மற்றவரின் விவகாரங்களில் பங்கெடுப்பார்கள். பொறுப்பாளிகளில் யார் அநாதைகளின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து அபகரிக்க நாடுபவர்கள், யார் அவற்றை முறையாக பராமரிக்க நாடுபவர்கள் என்பதையும் அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் அநாதைகளின் விவகாரத்தில் உங்களைச் சிரமத்தில் ஆழ்த்தியிருப்பான். ஆயினும் அவன் அவர்களுடன் நடந்துகொள்ளும் முறையை இலகுவாக்கித்தந்துள்ளான். ஏனெனில் மார்க்கம் இலகுவானது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது படைப்பு, திட்டமிடல், சட்டமியற்றல் ஆகியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.

(221) 2.221. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் பெண்களை -அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை - மணமுடிக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண் சிலைகளை வணங்கும் சுதந்திரமான பெண்ணைவிடச் சிறந்தவளாவாள், அவள் அழகாலும் செல்வத்தாலும் உங்களைக் கவர்ந்தபோதிலும் சரியே. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் ஆண்களுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட ஆண் அடிமை இணைவைக்கும் சுதந்திரமானவனை விடச் சிறந்தவனாவான், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. இந்த இணைவைக்கும் ஆண்களும் பெண்களும் தங்களின் சொல்லாலும் செயலாலும் நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் விஷயங்களின்பால் அழைக்கிறார்கள். அல்லாஹ், சுவனத்தில்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களின் பக்கமும், தனது அருளினால் பாவங்களை மன்னிப்பதன் பக்கமும் அழைக்கிறான். மக்கள் அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து படிப்பினை பெற்று அதன்படி செயல்படுவார்கள் என்பதற்காக அவன் அவர்களுக்கு தன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

(222) 2.222. தூதரே! மாதவிடாய் குறித்து உம்முடைய தோழர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களைக் குறித்து நீர் கூறுவீராக: மாதவிடாய் ஆணுக்கும் பெண்ணுக்கும் தீங்காகும். எனவே அச்சமயங்களில் நீங்கள் பெண்களுடன் உடலுறவுகொள்ளாதீர்கள். இரத்தம் நின்று குளித்துத் தூய்மையாகும்வரை உடலுறவுக்காக அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ளபடி அவர்களது பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளலாம். அல்லாஹ் அதிகமாக பாவமன்னிப்புக் கோருபவர்களையும் அழுக்குகளிலிருந்து மிகத்தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்.

(223) 2.223. விளைச்சல்களைத் தரும் நிலத்தைப் போல் உங்களின் மனைவியர் உங்களுக்குக் குழந்தைகளைப் பெற்றுத்தரும் விளைநிலங்களாவர். எனவே உங்கள் விளைநிலமாகிய பெண்ணுறுப்பில் நீங்கள் எத்திசையிலிருந்தும் விரும்பியவாறு உறவுகொள்ளலாம். நற்செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வையுங்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடி, நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக மனைவியுடன் உடலுறவுகொள்வதும் நற்செயல்களில் உள்ளடங்கியவைதான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனைப் அஞ்சிக்கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் நீங்கள் அவனுக்கு முன்னால் நிற்கக்கூடியவர்கள் என்பதையும் அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தூதரே! தங்கள் இறைவனை சந்திக்கும்போது, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிரந்தர இன்பம் மற்றும் அவனுடைய திருமுகத்தைக் காணுதல் ஆகியவற்றைக் கொண்டு நம்பிக்கைகயாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.

(224) 2.224. அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து; நன்மையான, இறையச்சமுள்ள செயல், மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துதல் ஆகிய செயல்களுக்குத் தடையை எற்படுத்திக்கொள்ளவேண்டாம். நீங்கள் நன்மையான ஒரு செயலை விட்டுவிடுவதற்கு சத்தியம் செய்தால் அதனை விட்டுவிடாமல் செய்துவிடுங்கள். சத்தியத்திற்காக பரிகாரம் செய்துவிடுங்கள். நீங்கள் பேசக்கூடியவற்றை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(225) 2.225. நீங்கள் நோக்கமின்றி வீணாகச் செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்கமாட்டான். உதாரணமாக: "அல்லாஹ்வின்மீது சத்தியமாக"என்று பேச்சோடு பேச்சாக கூறுவது. இதற்காக நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் உங்களைத் தண்டிக்கவும் மாட்டான். ஆனால் நீங்கள் சத்தியம் செய்யும் நோக்குடன் செய்யும் சத்தியங்களுக்கு அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவனாக இருக்கின்றான். உங்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.

(226) 2.226. "மனைவியருடன் உடலுறவு கொள்ள மாட்டேன்" என்று சத்தியம் செய்பவர்களுக்கு அவர்கள் சத்தியம் செய்ததிலிருந்து நான்கு மாதம்வரை அவகாசம் உண்டு. அவர்கள் இந்த காலத்திற்குள் சத்தியத்தை முறித்து உடலுறவு கொண்டுவிட்டால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட தவறுகளை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். அதனால்தான் பரிகாரத்தின் மூலம் அந்த சத்தியத்திலிருந்து வெளியேறும் வழியைக் காட்டியுள்ளான்.

(227) 2.227. உடலுறவுகொண்டு அந்த சத்தியத்தை முறிக்காமல் அவர்கள் விவாகரத்தை நாடிவிட்டால், விவாகரத்து உட்பட அவர்களின் பேச்சுக்களை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நோக்கங்களையும் நிலைகளையும் நன்கறிந்தவன். அதனடிப்படையில்தான் அவன் அவர்களுக்கு கூலி வழங்குகிறான்.

(228) 2.228. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதற்கிடையில் அவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக்கூடாது; தங்கள் வயிற்றில் அல்லாஹ் உருவாக்கிய கருவையும் மறைத்துவிடக்கூடாது. அவர்களை விவாகரத்து செய்த கணவன்மார்கள் இணக்கத்தை நோக்கமாகக்கொண்டு அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள நாடினால் காத்திருக்கும் குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அக்கணவன்மார்களே மிகத்தகுதியானவர்கள். கணவர்களுக்கு இருப்பதைப்போல மனைவியருக்கும் மக்களுக்கு மத்தியில் வழமையில் இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. நிர்வகித்தலிலும் விவாகரத்து விஷயங்களிலும் பெண்களைவிட ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் திட்டமிடலிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன்.

(229) 2.229. கணவன் விவாகரத்து அளித்த பின்னர் காத்திருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீட்டிக்கொள்வதற்கான அனுமதி இருமுறை மாத்திரம்தான். இரண்டாவது விவாகரத்தின் பின்னர் நல்லமுறையில் சேர்ந்து வாழவேண்டும். அல்லது அழகிய முறையில் மனைவியின் உரிமைகளை வழங்கி மூன்றாவது முறையும் விவாகரத்து அளித்துவிட வேண்டும். கணவர்களே! நீங்கள் அவர்களுக்கு அளித்த மணக்கொடையில்(மஹர்) எதையும் திரும்பப் பெறுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் மனைவிக்கு கணவனின் தோற்றமோ குணமோ வெறுப்பை அளித்தாலே தவிர. இந்த வெறுப்பின் காரணமாக இருவரும் தங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றமுடியாது என எண்ணினால் அவர்களின் விஷயங்களை நெருங்கிய உறவினரிடமோ அல்லது மற்றவர்களிடமோ எடுத்துச் செல்லட்டும். அவர்கள் இருவரும் தங்களின் மணவாழ்வை ஒழுங்காக நடத்தமுடியாது என்று பொறுப்பாளர்கள் கருதினால் பெண் தன் கணவனுக்கு வழங்கும் செல்வத்தின் மூலம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. இச்சட்டங்கள் அனுமதிக்கப்பட்டவைக்கும் தடுக்கப்பட்டதற்கும் இடையிலுள்ள வரம்புகளாகும். இவற்றை மீறிவிடாதீர்கள். யார் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வரம்புகளை மீறிவிடுகிறார்களோ அவர்கள்தாம் தங்களுக்குத் தாங்களே அழிவையும் அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் தேடிக்கொண்ட அநியாயக்காரர்கள்.

(230) 2.230. கணவன் மூன்றாவது முறையும் விவாகரத்து செய்துவிட்டால் அவள் வேறொருவரை முறையாகத் திருமணம் செய்து அவருடன் உறவுகொண்ட பின்னர் அவரால் விவாகரத்து செய்யப்படும்வரை அல்லது அவர் இறந்துவிடும்வரை முந்தைய கணவனுக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இரண்டாவது கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் முதல் கணவனும் அவளும் மீண்டும் சேர்ந்துவாழ்ந்து அல்லாஹ்வின் சட்டங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பினால் மீண்டும் புதிதாக ஒப்பந்தம் செய்து மணக்கொடையும் வழங்கி திருமணம் செய்துகொள்வதில் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் சட்டங்களை, வரம்புகளை அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு அவன் தன் சட்டங்களைத் தெளிவுபடுத்துகிறான். ஏனெனில் அவர்களே அதன் மூலம் பயன்பெறுவர்.

(231) 2.231. நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் இத்தா தவணையை அவர்கள் நெருங்கிவிட்டால் நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம் அல்லது அவர்களின் தவணை முடியும்வரை அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளாமல் நல்லமுறையில் அவர்களை விட்டுவிடலாம். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்ததுபோல வரம்புமீறி அவர்களுக்குத் தீங்கிழைப்பதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளாதீர்கள். யார் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்வாரோ அவர் பாவத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றில் மகத்தானது அவன் உங்கள்மீது இறக்கிய குர்ஆனும் சுன்னாவும்தான். உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும் அச்சமூட்டுவதற்காகவும் இவற்றை அவன் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(232) 2.232. கணவர்கள் மனைவியரை மூன்றுமுறைக்கு குறைவாக விவாகரத்து அளித்து, மனைவியர் தங்களின் தவணையை நிறைவுசெய்துவிட்டால் - பொறுப்பாளர்களே! அவர்கள் மீண்டும் தம் கணவர்களோடு புதிதாக மணமுடித்துக் கொள்வதை விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். உங்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவர்களைத் தடுப்பது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இதுதான் உங்களிடையே நன்மைகளை அதிகமாக வளர்த்தெடுக்கும். உங்களின் மானத்தையும் செயல்களையும் அழுக்குகளிலிருந்து பாதுகாத்து தூய்மைப்படுத்தும். விஷயங்களின் உண்மை நிலையையும் பின்விளைவுகளையும் அல்லாஹ் நன்கறிவான். அவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்.

(233) 2.233. தாய்மார்கள் இரண்டு வருடம் முழுமையாக தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். இது பால்குடியை முழுமையாக நிறைவேற்ற விரும்புவர்களுக்கானது. விவாகரத்துச் செய்யப்பட்ட தாய்மார்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளுக்கு ஷரீஅத்திற்கு முரணில்லாத மக்களிடையே இருக்கும் வழக்கத்தின்படி தந்தையரே பொறுப்பெடுக்க வேண்டும். யார்மீதும் அல்லாஹ் அவரது சக்திக்குமீறி பொறுப்பு சாட்ட மாட்டான். தாய்தந்தையரில் யாரும் குழந்தையை மற்றவருக்குத் தீங்கிழைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது. குழந்தையின் தந்தை இறந்து, அதற்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் குழந்தையின் சொத்துக்கு வாரிசாக அமையக்கூடியவர் தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டும். இரண்டுவருடம் நிறைவடைவதற்கு முன்னரே குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் ஆலோசித்து குழந்தைக்குப் பால்குடியை நிறுத்த தாய்தந்தையர் விரும்பினால் அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. உங்கள் குழந்தைக்கு செவிலித்தாய்மார்களை வைத்து பாலூட்ட விரும்பினாலும் - அவர்களுக்கு அளிக்க வேண்டியதை குறைவின்றி, தாமதமின்றி முறையாக அளித்துவிட்டால் - உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள் !உங்களின் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் சேர்த்துவைத்த செயல்களின் அடிப்படையிலேயே அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(234) 2.234. உங்களில் மரணமடைகின்றவர்களின் மனைவியர் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் நான்கு மாதங்களும், பத்துநாட்களும் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ மணமுடித்துக்கொள்ளவோ கூடாது. அந்தத் தவணையை நிறைவுசெய்துவிட்டால், அவர்கள் மீது தடைசெய்யப்பட்டிருந்தவற்றை மார்க்கவரையறைக்குட்பட்டு செய்தால் பொறுப்பாளர்களே! உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். வெளிப்படையான, அந்தரங்கமான உங்களுடைய செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.

(235) 2.235. கணவனை இழந்தோ விவாகரத்து செய்யப்பட்டோ இத்தாவில் காத்திருக்கும் பெண்களிடம் நேரிடையாக அல்லாமல் சாடைமாடையாக உங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதிலோ (உதாரணமாக, உன்னுடைய தவணை முடிந்துவிட்டால் எனக்குத் தகவல் தெரிவி) உங்கள் உள்ளத்தில் அந்தப் பெண்களை மணமுடிக்க வேண்டும் என்று ஆசைகொள்வதிலோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்களின் மீது உங்களுக்குள்ள கடுமையான விருப்பத்தினால் அவர்களை நீங்கள் நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் வெளிப்படையாக இன்றி சாடையாக உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதித்துள்ளான். அவ்வாறின்றி இத்தாவில் காத்திருக்கும்போது அவர்களிடம் இரகசியமாக வாக்களிக்கவும் வேண்டாம்; திருமண ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆசைகளையும் அவன் அறிவான்.எனவே எச்சரிக்கையாக இருங்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடாதீர்கள். அறிந்துகொள்ளுங்கள், தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன்; அவன் சகிப்புத்தன்மைமிக்கவன்; அவசரப்பட்டு தண்டித்துவிட மாட்டான்.

(236) 2.236. நீங்கள் மணமுடித்துக்கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் மணக்கொடையை நிர்ணயிப்பதற்கும் முன்னரே அவர்களை விவாகரத்து செய்வது தவறல்ல. இந்த நிலமையில் அவர்களுக்கு நீங்கள் மணக்கொடை அளிப்பதும் அவசியமற்றது. ஆனால் உங்களின் வசதிக்கேற்ப அவர்கள் பயன்பெற்று மனதை தேற்றிக்கொள்ளும் அளவு பொருளைஅவர்களுக்கு அளித்துவிட வேண்டும். இவ்வாறு வழங்குவது தமது நடவடிக்கைகளில் நல்லோர்கள் மீது அவசியமாகும்.

(237) 2.237. நீங்கள் மணக்கொடையை நிர்ணயித்து மணமுடித்துக் கொண்ட பெண்களுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னரே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் நிர்ணயித்துக்கொண்ட மணக்கொடையில் பாதியை வழங்குவது உங்கள்மீது கடமையாகும். விரும்பினால் அந்தப் பெண்கள் -தெளிவுள்ளவர்களாக இருந்தால்- விட்டுக்கொடுத்துவிடலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட முழுத்தொகையையும் ஆண்கள் வழங்கிவிடலாம். நீங்கள் உங்களிடையே உரிமைகளில் விட்டுக்கொடுத்துக்கொள்வதுதான் இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானது. மக்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதை, உரிமைகளில் விட்டுக்கொடுப்பதை விட்டுவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதற்காக நற்காரியங்களில் முழுமூச்சுடன் செயல்படுங்கள்.

(238) 2.238. அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகைகளை முழுமையாக பேணிக்கொள்ளுங்கள். நடுத்தொழுகையான அசர் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். உங்களுடைய தொழுகையில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக, அவனை அஞ்சியவர்களாக நில்லுங்கள்.

(239) 2.239. எதிரிகள் மற்றும் பிற விஷயங்களால் உங்களுக்கு அச்சமேற்பட்டு உங்களால் தொழுகையை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லையெனில் நடந்தவாறு அல்லது ஒட்டகம், குதிரை போன்றவற்றில் பயணித்தவாறு அல்லது இயலுமான ஏதாவது முறையில் தொழுதுகொள்ளுங்கள். அச்சம் நீங்கிவிட்டால் தொழுகை உட்பட அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவாறு அவனை நினைவுகூருங்கள். நீங்கள் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத்தந்ததற்காகவும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.

(240) 2.240. உங்களில் மனைவியரை விட்டுவிட்டு மரணமடைபவர்கள், ஒருவருடம்வரை முழுமையாக அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற செலவீனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மரணசாசனம் செய்யட்டும். அந்தப் பெண்ணின் துக்கத்தைத் துடைக்குமுகமாகவும் இறந்தவரின் உயிலை நிறைவேற்றுவதற்காகவும் அவரது வாரிசுகள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது. அந்தப் பெண்கள் தாமாகவே வெளியேறி தங்களை அலங்கரித்துக் கொண்டால் அவர்கள்மீதோ உங்கள்மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் ஏற்படுத்திய விதிகளில், திட்டமிடலில், சட்டமியற்றுவதில் ஞானம்மிக்கவன். (குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் இந்த வசனத்தில் கூறப்பட்ட கட்டளை மேற்குறிப்பிட்ட 234வது வசனத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள்)

(241) 2.241. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு அவர்களது துவண்டுபோயிருக்கும் உள்ளங்களை தேற்றும்விதமாக உணவு, உடை போன்ற செலவீனங்கள் கணவர்களின் வசதிக்கேற்ப நல்லமுறையில் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து அவனை அஞ்சுபவர்கள் மீது இது கடமையாகும்.

(242) 2.242. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் விளங்கி அவற்றின் அடிப்படையில் செயல்படும் பொருட்டும், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளைப் பெறும் பொருட்டும் இதுபோன்ற அவனுடைய சட்டங்களையும் வரம்புகளையும் உள்ளடக்கிய தெளிவான வசனங்களைக்கொண்டு அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(243) 2.243. தூதரே! தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களின் செய்தி உமக்குத் தெரியாதா? கொள்ளை நோயினாலோ பிற விஷயங்களினாலோ மரணத்திற்கு அஞ்சிய அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்கள் இஸ்ராயீன் மக்களைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அல்லாஹ் அவர்களிடம்: "மரணமடையுங்கள்" என்று கூறினான். எனவே அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் அதிகாரம் அனைத்தும் தன் கைவசமே உள்ளது என்பதையும் அவர்கள் தங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக அவன் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது பேரருள் புரிபவன். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.

(244) 2.244. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அவனுடைய மார்க்கத்திற்கு உதவிசெய்வதற்காக, அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய எதிரிகளுடன் போரிடுங்கள். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் பேசக்கூடியதை அவன் செவியேற்பவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்; அவற்றிற்கேற்பவே அவன் உங்களுக்குக் கூலி வழங்குகிறான்.

(245) 2.245. தன் செல்வத்தை நல்லெண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து கடனளிப்பவரின் செயலைச் செய்பவர் யார்? அல்லாஹ் அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும், இன்னபிற விஷயங்களிலும் அல்லாஹ்வே நெருக்கடியையும் விசாலத்தையும் ஏற்படுத்துகிறான். மறுமையில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கிடுவான்.

(246) 2.246. தூதரே! இஸ்ராயீலின் மக்களில் மூசாவின் காலத்திற்குப்பின் வாழ்ந்த கண்ணியமானவர்களின் செய்தி உமது அறிவுக்கு எட்டவில்லையா? அவர்கள் தங்களின் தூதரிடம் கூறினார்கள்: எங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்துங்கள். நாங்கள் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம். அதற்கு அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்கள்மீது போரை கடமையாக்கி, நீங்கள் அவனுடைய பாதையில் போரிடாமல் இருக்கலாம் அல்லவா? அவருடைய எண்ணத்தை மறுத்தவர்களாகக் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான காரணிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருந்தும் எது அவனுடைய பாதையில் போரிடுவதை விட்டும் எங்களைத் தடுக்கும்? எங்களின் எதிரிகள் எங்களின் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றியுள்ளார்கள்; எங்களின் பிள்ளைகளைக் கைதிகளாகப் பிடித்துள்ளார்கள். எங்களின் நாட்டையும் பிள்ளைகளையும் மீட்டுவதற்காக நாங்கள் போரிடுவோம். அல்லாஹ் அவர்கள்மீது போரைக் கடமையாக்கியபோது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது புறக்கணித்துவிட்டார்கள். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை முறித்து அவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்த அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கான தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்கிடுவான்.

(247) 2.247. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்களுக்கு தாலூத்தை அரசராக நியமித்துள்ளான். நீங்கள் அவருடைய தலைமையில் போர்புரிய வேண்டும். அவர்களின் தலைவர்கள் இதனை ஆட்சேபித்தவர்களாகக் கூறினார்கள்: அவர் எப்படி எங்களை ஆட்சிசெலுத்த முடியும்? அவரைவிட நாங்கள்தாம் அரசாட்சிக்குத் தகுதியானவர்கள். அவர் அரச வாரிசுகளில் உள்ளவராகவும் இல்லை; ஆட்சிசெய்யும் அளவு பெருஞ்செல்வம் படைத்தவராகவும் இல்லையே!. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களைவிட அவருக்கு விசாலமான கல்வியையும் உடல்பலத்தையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தன் அருளால், அறிவால் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமான அருளாளன். தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். தன் படைப்புகளில் அதற்குத் தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.

(248) 2.248. அவர்களின் தூதர் கூறினார்: அவர்தான் உங்களுக்கு அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம், இஸ்ராயீலின் மக்கள் புனிதமாக கருதிவந்த, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்டியை அல்லாஹ் உங்களுக்குத் திரும்பத் தருவதாகும். அதில் நிம்மதியும் மூசா மற்றும் ஹாரூனின் வழிவந்தவர்கள் விட்டுச் சென்ற தடி, சில ஏடுகள் போன்றவையும் இருக்கும். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் தெளிவான சான்று இருக்கின்றது.

(249) 2.249. தாலூத் படைகளுடன் ஊரைவிட்டுக் புறப்பட்டபோது அவர்களிடம் கூறினார்: அல்லாஹ் ஒரு ஆற்றைக்கொண்டு உங்களைச் சோதிப்பான். அதிலிருந்து நீரை அருந்துபவர் என் வழிமுறையைச் சார்ந்தவர் அல்ல. அவர் என்னுடன் சேர்ந்து போரிடக்கூடாது. அதிலிருந்து யார் நீர் அருந்தவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர்; போரில் என்னுடன் பங்குகொள்வார். ஆயினும் நிர்ப்பந்தத்தில் ஒரு பிடி அளவுக்கு நீர் அருந்திக் கொள்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. கடுமையான தாகம் இருந்தபோதும் அவர்களில் அருந்தாது பொறுமையாக இருந்த சிலரைத்தவிர படையினர் அனைவரும் அதிலிருந்து நீர் அருந்திவிட்டனர். தாலூத்தும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அந்த ஆற்றைக் கடந்தபோது அவர்களில் சிலர் கூறினார்கள்: இன்று ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் போரிட எங்களிடம் சக்தி இல்லை. அப்போது மறுமைநாளில் அல்லாஹ்வை உறுதியாகச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட, குறைந்த எண்ணிக்கையுடைய எத்தனையோ சிறுகூட்டங்கள் அல்லாஹ்வை நிராகரித்த பெரும் எண்ணிக்கையுடைய கூட்டங்களை அவனுடைய அனுமதிகொண்டு அவனுடைய உதவியால் வென்றிருக்கின்றன. அல்லாஹ்வின் உதவி ஈமானைக்கொண்டே கிடைக்குமே அன்றி அதிக எண்ணிக்கையைக் கொண்டு அல்ல. அல்லாஹ் தன் அடியார்களில் பொறுமையாளர்களுக்கு ஆதரவளிப்பவனாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கின்றான்.

(250) 2.250. ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் இவர்கள் வெளிப்பட்டபோது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: எங்கள் இறைவா! எங்கள் உள்ளத்தில் பொறுமையைப் பொழிவாயாக. எதிரியிடம் தோற்று புறங்காட்டி ஓடிவிடாத அளவுக்கு எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. உன் ஆற்றலையும் ஆதரவையும் கொண்டு உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.

(251) 2.251. அல்லாஹ்வின் அனுமதிகொண்டு தாலூத்தின் படைகள் ஜாலூத்தின் படைகளைத் தோற்கடித்தது. தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினான். தான் நாடிய பல்வேறு கலைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தான். இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நன்மைதரக்கூடிய விஷயங்களை அவருக்கு ஒன்றுசேர்த்து வழங்கினான். மக்களில் சிலர் செய்யும் குழப்பத்தை சிலரைக் கொண்டு தடுக்கும் வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையெனில் குழப்பவாதிகளின் ஆதிக்கத்தால் பூமி சீர்குலைந்துபோயிருக்கும். ஆயினும் அல்லாஹ் படைப்புகள் அனைத்தின்மீதும் பேரருள்புரிபவனாக இருக்கின்றான்.

(252) 2.252. தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய நாம் உமக்கு எடுத்துரைக்கும் வசனங்கள் தெளிவான அல்லாஹ்வின் வசனங்களாகும். நிச்சயமாக நீர் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவராவீர்.

(253) 2.253. நாம் உமக்கு எடுத்துக்கூறிய இந்தத் தூதர்களில் சிலரை வஹியிலும் பின்பற்றும் மக்களிலும், அந்தஸ்திலும் சிலரைவிட மேன்மைப்படுத்தியுள்ளோம். அவர்களில் மூசா போன்ற சிலருடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். அவர்களில் சிலருக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளான், உதாரணமாக, முஹம்மது நபிக்கு. அல்லாஹ் அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக அனுப்பினான். அவர்களின் சமூகம் மற்ற எல்லா சமூகங்களைவிடவும் சிறப்பிக்கப்பட்டது. நாம் மர்யமின் மகன் ஈசாவுக்கு அவருடைய தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான அற்புதங்களை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். அவர் அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு ஜிப்ரீலைக்கொண்டு நாம் அவரைப் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால்; தூதர்களுக்குப்பின் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள்; பிளவுபட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டார்கள்; சிலர் அவனை நிராகரித்தார்கள். அவர்கள் சண்டையிடக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் தான் நாடியதைச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் கருணையால் ஈமானின் பக்கம் வழிகாட்டுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியுடன், அறிவுடன் வழிதவறச் செய்கிறான்.

(254) 2.254. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மறுமைநாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கிய ஹலாலான செல்வங்களிலிருந்து செலவுசெய்யுங்கள். அந்நாளில் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சம்பாதிக்கக்கூடிய வியாபாரத்தையோ கடினமான சூழ்நிலைகளில் உதவக்கூடிய நட்பையோ தீங்கிலிருந்து காத்து நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பரிந்துரையையோ பெறமுடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்கள்தாம் தமது நிராகரிப்பின் காரணமாக உண்மையில் அநியாயக்காரர்களாக உள்ளனர்.

(255) 2.255. அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவனாவான். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் யாரும் இல்லை. அவன் மரணமோ குறைகளோ அற்ற, முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன. பரிபூரண வாழ்வுடையவன் என்பதனால் சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ அவனைப் பீடிக்காது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே சொந்தம். அவனுடைய அனுமதி,பொருத்தம் பெற்றே தவிர அவனிடம் யாரும் பரிந்துரை செய்ய முடியாது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும் எதிர்காலத்தில் நிகழப்போகின்ற அனைத்தையும் அவன் அறிவான். அவனுடைய அறிவிலிருந்து யாரும் எதையும் அறிந்துகொள்ள முடியாது. ஆயினும் அவன் தான் நாடியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றைத்தவிர. அவனுடைய குர்ஸீ - அவன் கால்வைக்கும் இடம் -விசாலமும் பிரமாண்டமும் மிக்க வானங்களையும் பூமியையும்விட விசாலமானது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்குக் கடினமானதல்ல. அவன் தன் உள்ளமை, அந்தஸ்து, ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றில் மிக உயர்ந்தவன். தன் ஆட்சியதிகாரத்தில் மிகப்பெரியவன்.

(256) 2.256. இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவதற்கு யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அது தெளிவான சத்தியமாகும். எனவே எவரையும் வற்புறுத்தி அதில் நுழைவிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்வழியிலிருந்து வழிகேடு தெளிவாகிவிட்டது. எவர் அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, அவற்றிலிருந்து முழுமையாக நீங்கி அல்லாஹ் ஒருவன்மீது நம்பிக்கைகொண்டாரோ அவர் மறுமைநாளில் வெற்றியைத் தரக்கூடிய, என்றும் அறுபடாத மார்க்கத்தின் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலிவழங்குவான்.

(257) 2.257. தன்மீது நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கு நன்மை செய்வதற்கான பாக்கியம் அளித்து, உதவியும் புரிகிறான். நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அறிவு மற்றும் ஈமானிய ஒளியின்பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இணையாக்கப்பட்டவர்களும் சிலைகளுமே பொறுப்பாளர்களாவர். அவர்கள் நிராகரிப்பை அலங்கரித்துக் காட்டி இவர்களை அறிவு மற்றும் ஈமானிய ஒளியிலிருந்து வெளியேற்றி அறியாமை மற்றும் நிராகரிப்பின் இருள்களுக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.

(258) 2.258.தூதரே! இப்ராஹீமிடம் இறைவனின் ௐரிறைக்கொள்கை குறித்து திமிராக தர்க்கம் செய்த பாவியை உமக்குத் தெரியுமா? இதற்கான காரணம், அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்து அவன் வரம்புமீறியதே. இப்ராஹீம் அவனிடம் தம் இறைவனின் பண்புகளைக்குறித்து தெளிவுபடுத்தியவராகக் கூறினார்: என் இறைவன்தான் படைப்புகளுக்கு உயிரளிக்கிறான்; மரணமும் அளிக்கின்றான். அதற்கு அவன் திமிராகக் கூறினான்:நானும்தான் உயிர் கொடுக்கின்றேன்; மரணமும் அளிக்கின்றேன். சிலரை மன்னித்து உயிர்வாழ அனுமதிக்கின்றேன். சிலரைக் கொன்று மரணிக்கச் செய்கின்றேன்.அதற்கு இப்ராஹீம் இன்னுமொரு பெரும் வாதத்தை பின்வருமாறு முன்வைத்தார்: நான் வணங்கும் என் இறைவன் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டுவருகிறான். நீ சூரியனை மேற்கிலிருந்து கொண்டுவா பார்ப்போம். திமிர் பிடித்த பாவி திகைப்படைந்துவிட்டான். இந்த வாதத்தின் வலிமையினால் வாயடைத்துப்போனான். அநியாயக்காரர்களின் அநியாயத்தினாலும் வரம்புமீறலினாலும் அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு வழிகாட்டமாட்டான்.

(259) 2.259. அல்லது அழிந்துகிடந்த ஒரு ஊரை கடந்து சென்றவரை உமக்குத் தெரியுமா? அங்குள்ள கட்டிடங்கள் வீழ்ந்து வசிப்பவர்கள் அழிந்து அந்த ஊர் பாழடைந்து வெருச்சோடிக் கிடந்தது. அந்த மனிதர் ஆச்சரியமாகக் கேட்டார்: இந்த ஊரில் உள்ளவர்கள் இறந்தபிறகு அல்லாஹ் அவர்களை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?! அல்லாஹ் அவரை நூறுவருடங்கள்வரை மரணிக்கச் செய்தான். பின்னர் உயிர்கொடுத்து எழுப்பி அவரிடம் கேட்டான்: நீர் எவ்வளவு காலங்கள் இறந்தநிலையில் இருந்தீர்? அதற்கு அவர், ஒருநாள் அல்லது ஒருநாளின் சிலபகுதிவரை இருந்திருப்பேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்: நீர் நூறுஆண்டுகள்வரை இவ்வாறு இருந்தீர். உம்முடன் வைத்திருந்த உணவையும் பானத்தையும் பாரும். அவை மிக விரைவாக மாறும் தன்மையுடையவையாக இருந்தும் மாறாமல் அதே நிலையிலேயே இருக்கின்றன. உம்முடைய இறந்த கழுதையையும் பாரும். உயிர்கொடுத்து எழுப்புவதில் மக்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலைக் காட்டும் ஒரு தெளிவான அத்தாட்சியாக உம்மை நாம் ஆக்கும் பொருட்டு சிதைந்து கிடக்கின்ற எலும்புகளையும் அவற்றை நாம் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்த்து அதன்மீது சதையைப்போர்த்தி அதற்கு உயிரளிக்கின்றோம் என்பதையும் பாரும் என்று கூறினான். அவர் அதனைப் பார்த்தபோது உண்மையைக் கண்டுகொண்டார்; அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொண்டார். அதனை ஒத்துக் கொண்டவராகக் கூறினார்: அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

(260) 2.260.தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம்: என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனது பார்வைக்குக் காட்டு என்று கேட்டதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு அவன், நீர் இந்த விஷயத்தை நம்பவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நம்புகிறேன். ஆயினும் என் மனதிருப்தியை இன்னும் அதிகரிக்கவே இவ்வாறு கேட்கிறேன் என்றார். அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: நான்கு பறவைகளை எடுத்துக் கொள்வீராக. அவற்றை உம்பக்கம் சேர்த்து துண்டுதுண்டாக அறுப்பீராக. பின்னர் உம்மைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு மலையிலும் அவற்றில் ஒரு பகுதியை வைப்பீராக. பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக, அவை உயிர்பெற்று உம்மிடம் விரைந்து வரும். இப்ராஹீமே! அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன் என்பதையும் தான் வழங்கும் கட்டளைகளில் ஞானம்மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்வீராக.

(261) 2.261. தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் நம்பிக்கையாளர்களின் நன்மைக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றதாகும். விவசாயி அதனை நல்ல பூமியில் விதைக்கிறான். அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வொரு கதிரும் நூறு விதைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு நன்மைகளை கணக்கின்றி, பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்தவன்.

(262) 2.262. இறைவழிபாட்டிலும் அவன் விரும்பும் காரியங்களிலும் தமது சொத்துக்களை, செலவுசெய்து, பின்னர் அதன் நன்மையை இழக்கச்செய்யும் வகையில் மக்களிடம் சொல்லிக்காட்டாதவர்களுக்கும் செயற்படாதவர்களுக்கும் அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலம் குறித்து அச்சப்படவும் மாட்டார்கள்; கடந்துபோனவற்றை நினைத்து கவலைகொள்ளவும் மாட்டார்கள்.

(263) 2.263. நம்பிக்கையாளனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கண்ணியமான வார்த்தையும் உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை நீங்கள் மன்னித்தலும்; சொல்லிக்காட்டி தொல்லையளிக்கும் தர்மத்தை விடச் சிறந்ததாகும். அல்லாஹ் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன்; சகிப்புத்தன்மைமிக்கவன். உடனுக்குடன் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான்.

(264) 2.264. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் செய்த தர்மங்களின் நன்மைகளை தர்மம் பெற்றவரிடம் சொல்லிக்காட்டியும், அவருக்கு தொல்லைகொடுத்தும் வீணாக்கிவிடாதீர்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக தன் செல்வங்களைச் செலவு செய்பவனைப்போன்றது. அவன் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளனாவான். அதற்கு உதாரணம் ஒரு வழுக்குப்பாறையில் இருக்கும் மண்ணைப்போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து பாறையில் இருந்த மண்ணை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. இவ்வாறுதான் மக்களிடம் காட்டுவதற்காக செலவுசெய்பவர்களது நன்மைகளும் அடிபட்டுச்சென்றுவிடும். அல்லாஹ்விடம் எதனையும் பெறமாட்டார்கள். அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களுக்கு தான் விரும்பும் விஷயங்களின் பக்கமும் அவர்களுக்கு பயனுள்ளவற்றிற்கும் வழிகாட்ட மாட்டான்.

(265) 2.265. அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் அவனுடைய வாக்குறுதியின் மீது திருப்தியடைந்தவர்களாகவும் வெறுப்பின்றி தங்கள் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் உயரமான வளமுள்ள இடத்தில் இருக்கும் தோட்டத்தைப் போன்றதாகும். அது நல்ல மழையைப் பெற்றதால் பலமடங்கு விளைச்சலைத் தந்தது. அது வளமான நிலம் என்பதால் நல்ல மழையைப் பெறாவிட்டாலும் அங்கு பெய்யக்கூடிய சிறுதூறலே அதற்குப் போதுமானதாகும். இவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செலவு செய்பவர்களின் தர்மங்களை அவன் ஏற்றுக்கொள்கிறான். அது குறைவாக இருந்தாலும் அதற்கு பன்மடங்கு கூலி வழங்குகிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உளத்தூய்மையுடையவர்கள் முகஸ்துதியுடையோர் ஆகிய எவரது நிலமையும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.

(266) 2.266. நீங்கள் பின்வரும் விஷயத்தை விரும்புவீர்களா?: உங்களுக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் அடங்கிய ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் நடுவில் சுவையான நீர் ஓடுகிறது. அதில் எல்லா வகையான நல்ல கனிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களுக்கு வயதாகிவிடுகிறது. நீங்கள் வேலைசெய்ய முடியாத கிழவராகி விடுகிறீர்கள். இந்நிலையில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாத பலவீனமான சிறுகுழந்தைகளும் இருக்கின்றனர். உங்களின் முதுமை, குழந்தைகளின் பலவீனம் ஆகிய காரணங்களினால் அதன்பால் அதிக தேவையுடையவர்களாக நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நெருப்பை உள்ளடக்கிய கடுமையான காற்று அந்தத் தோட்டத்தைத் தாக்கி அனைத்தையும் அழித்துவிடுகிறது. மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக தன் செல்வத்தை செலவுசெய்பவனின் நிலையும் இவ்வாறுதான் அமையும். நன்மையின் பக்கம் மிகவும் தேவையுள்ள மறுமைநாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த நன்மையையும் பெறமாட்டான். இவ்வாறு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடியவற்றை நீங்கள் சிந்திக்கும்பொருட்டு தெளிவுபடுத்துகிறான்.

(267) 2.267. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் சம்பாதித்த தூய்மையான, ஹலாலான செல்வங்களிலிருந்தும், நாம் பூமியின் தாவரங்களிலிருந்து உங்களுக்காக வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் செலவு செய்யுங்கள். மட்டமான பொருள்களை செலவுசெய்ய எண்ணாதீர்கள். உங்களுக்கு அத்தகைய பொருள்கள் வழங்கப்பட்டால் முகம்சுளித்தவர்களாகத்தானே அவற்றை ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு விரும்பாததை எவ்வாறு நீங்கள் அல்லாஹ்வுக்கு விரும்புகிறீர்கள்? அறிந்துகொள்ளுங்கள், உங்களின் செலவீனங்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்; அவன் தன் உள்ளமையிலும் செயல்களிலும் புகழுக்குரியவன்.

(268) 2.268. ஷைத்தான் வறுமையைக்கொண்டு உங்களை அச்சுறுத்துகிறான்; கஞ்சத்தனம் செய்ய உங்களைத் தூண்டுகிறான்; பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட உங்களை அழைக்கிறான். உங்கள் பாவங்களை மன்னிப்பேன் என்றும் தாராளமாக அளிப்பேன் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்.

(269) 2.269. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சீரான சொல்லையும் சரியான செயலையும் வழங்குகிறான். யாருக்கு இது வழங்கப்பட்டதோ அவர் பெரும் நன்மைகளைப் பெற்றவராவார். அல்லாஹ்வின் ஒளியின் மூலம் பயன்பெற்று அவனது நேர்வழியையும் பெற்ற முழுமையான சிந்தனையுடையோரே அவனது வசனங்களைக் கொண்டு அறிவுரை பெற்றுக்கொள்வர்.

(270) 2.270. அல்லாஹ்வின் திருப்தியை நாடி குறைவாகவோ நிறைவாகவோ நீங்கள் செலவுசெய்த செலவீனங்கள் அல்லது உங்கள் மீது கடமையில்லாத ஒரு வணக்கத்தை நீங்களாகவே உங்கள் மீது விதித்து நேர்ச்சை செய்தவைகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் வீணாகிவிடாது. அவன் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவான். தம்மீது கடமையானவற்றை வழங்காத அநியாயக்காரர்களுக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களுக்கும் மறுமைநாளில் வேதனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

(271) 2.271. நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படுத்தினால் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை மறைமுகமாக ஏழைகளுக்கு வழங்கினால் அது வெளிப்படையாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்ததாகும். அதுதான் உளத்தூய்மைக்கு மிகவும் நெருக்கமானது. உளத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மங்கள் பாவங்களுக்குத் திரையாகவும் மன்னிப்பாகவும் அமைந்துவிடுகின்றன. அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(272) 2.272. தூதரே! அவர்களுக்கு நேர்வழிகாட்டி, அதற்கு அவர்களைப் பணிய வைப்பது உம்முடைய கடமையல்ல. சத்தியத்தை எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். பாக்கியம் அளித்து நேர்வழிகாட்டுவது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். நீங்கள் செய்த தர்மங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அல்லாஹ் அதனை விட்டும் தேவையற்றவன். நீங்கள் செய்யும் செலவுகள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்கட்டும். அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் அவனது திருப்திக்காகவே செலவுசெய்வார்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் செய்த தர்மத்திற்கான கூலியை குறைவின்றி நிறைவாகப் பெறுவீர்கள். அல்லாஹ் எவர்மீதும் அநீதி இழைத்துவிட மாட்டான்.

(273) 2.273. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (போர்) செய்வதனால் வாழ்வாதாரம் தேடுவதற்கு பயணம் மேற்கொள்ளமுடியாத ஏழைகளுக்குச் செலவுசெய்யுங்கள். அவர்கள் மக்களிடம் கையேந்தாமல் தன்மானத்தோடு இருப்பதால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிவிடுவான். அவர்களது உடலிலும் உடையிலும் தென்படும் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அவர்களைக் காண்பவர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மற்ற ஏழைகளைப்போல மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். செல்வம் மற்றும் அது அல்லாத எதை நீங்கள் செலவுசெய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவன். அதற்காக அவன் உங்களுக்குப் பெரும் கூலியை வழங்கிடுவான்.

(274) 2.274. இரவிலும் பகலிலும், வெளிப்படையாகவும் மறைவாகவும் வெளிப்பகட்டிற்காக அன்றி அல்லாஹ்வின் திருப்திக்காக செலவு செய்பவர்களுக்கு மறுமைநாளில் அவர்களின் இறைவனிடம் நன்மை இருக்கின்றது. எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி அவர்கள் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளும் கிருபையும் ஆகும்.

(275) 2.275. வட்டி வியாபாரத்தில் ஈடுபடுவோர், அதனை வாங்கியோர் மறுமைநாளில் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் போல் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுவார்கள். வலிப்பு நோய் உள்ளவர் விழுந்து எழுவதற்குத் தடுமாறுவது போல் தடுமாறியவராக தனது மண்ணறையிலிருந்து எழுவார். இதற்குக் காரணம், அவர்கள் வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதினார்கள்; அல்லாஹ் அனுமதித்த வியாபாரத்தின் இலாபத்திற்கும், அவன் தடுத்த வட்டிக்கும் இடையே அவர்கள் வேறுபாடு காட்டவில்லை.வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான். இரண்டும் செல்வத்தைப் பெருக்குவதுதானே என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் இந்த ஒப்பீட்டை அல்லாஹ் மறுத்துரைத்து அவர்களை பொய்ப்பிக்கின்றான். வியாபாரத்தில் அடங்கியுள்ள பொதுவான பிரத்யேக நன்மையின் காரணமாக அவன் அதனை அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியில் அடங்கியுள்ள - மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல், அநியாயம் போன்ற - தீங்குகளின் காரணமாக அதனைத் தடைசெய்யப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். வட்டி தடை என்பதாக தம் இறைவனிடமிருந்து அறிவுரைவந்த பின் அதனை விட்டும் தவிர்ந்து, அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியவர் மீது முன்னர் வாங்கிய வட்டிக்காக எந்தக் குற்றமும் இல்லை. அது அவருக்கு ஆகுமானதே. எதிர்காலத்தில் அவர் செய்யும் செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அல்லாஹ்விடமிருந்து தடைவந்து ஆதாரம் நிரூபனமாகிவிட்ட பிறகும் யாராவது மீண்டும் வட்டி வாங்கினால் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க தகுதியானவராகிவிட்டார். (இங்கு நிரந்தர நரகம் என்பது வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதி அதனை உண்பவர்களுக்குரியதாகும் அல்லது நிரந்தரம் என்பது நீண்ட காலத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் மட்டுமே நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.)

(276) 2.276. வட்டியின் மூலம் உருவான செல்வத்தை அல்லாஹ் அழிக்கிறான். அழித்தல் என்பது வெளிரங்கமான பொருட்சேதத்தைக் கொண்டோ மறைமுகமான பரக்கத்தை நீக்குவது கொண்டோ ஏற்படலாம். தர்மங்களுக்கு பலமடங்கு நன்மைகளை அளிக்கிறான். அவற்றை பத்துமடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை அவன் அதிகரிக்கச் செய்கிறான். தர்மம் சய்வோரின் சொத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய, அவன் தடைசெய்ததை அனுமதிக்கப்பட்டதாகக் கருதக்கூடிய, பாவங்களில் உழலக்கூடிய பிடிவாதக்காரனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(277) 2.277. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ் விதித்தபடி தொழுகையை முழுமையாக நிறைவேற்றி, தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு அளிப்பவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள்.

(278) 2.278. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் வட்டியைத் தடைசெய்திருப்பதையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மக்களிடம் எஞ்சியுள்ள உங்களது வட்டிப்பணத்தை எடுக்காது விட்டுவிடுங்கள்.

(279) 2.279. உங்களுக்குக் கட்டளையிட்டபடி நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போரை எதிர்பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி, வட்டியை விட்டுவிட்டால் நீங்கள் அளித்த கடனின் அசல்மூலதனம் உங்களுக்குத்தான். உங்கள் அசல்மூலதனத்திற்கு அதிகமாகப் பெற்று எவர்மீதும் அநீதி இழைத்துவிடாதீர். வழங்கிய கடனைவிட குறைத்து உங்களுக்கு அநீதி இழைக்கப்படவும் மாட்டாது.

(280) 2.280. உங்களிடம் கடன் வாங்கியவர் கடனை செலுத்த முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருந்தால் வசதி ஏற்படும் வரை அவருக்கு அவகாசம் அளியுங்கள். அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் சிறப்பினை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவருடைய கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து அதை அவருக்குத் தர்மமாக ஆக்கிவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும்.

(281) 2.281. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் திரும்பும் நாளின் வேதனையை அஞ்சுங்கள். அப்போது அவனுக்கு முன்னால் நிற்பீர்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்த நன்மை தீமை என்பவற்றுக்கான கூலி வழங்கப்படும். உங்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமையை விட அதிகமாக தண்டிக்கப்பட்டோ உங்கள்மீது அநீதி இழைக்கப்படாது.

(282) 2.282. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவருக்கு தவணை வழங்கி கடனளித்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவர் மார்க்கத்தின்படி உண்மையாகவும் நியாயமாகவும் எழுதிக் கொள்ளட்டும். எழுதக்கூடியவர் அல்லாஹ் கற்றுத் தந்தவாறு நியாயமாக எழுதுவதை தவிர்ந்துகொள்ள வேண்டாம். கடனாளி சொல்வதை இவர் எழுதட்டும். அப்பொழுதுதான் அவர் அங்கீகரித்ததாக ஆகும். அவரும் தம் இறைவனை அஞ்சி கடனாக அளிக்கப்பட்ட பொருளின் வகையிலோ அளவிலோ அமைப்பிலோ எந்தக் குறைவும் செய்துவிட வேண்டாம். கடனாளி விவகாரங்களை நிர்வகிக்கத் தெரியாதவராகவோ சிறுவயது அல்லது மனப்பிறழ்வின் காரணமாக பலவீனராகவோ ஊமையாகவோ இருந்தால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நியாயமாக வாசகம் சொல்லட்டும். நியாயமாக சாட்சிசொல்லக்கூடிய இரு அறிவுள்ள ஆண் சாட்சிகளை தேடிக்கொள்ளுங்கள். இரு ஆண் சாட்சிகளை நீங்கள் பெறவில்லையெனில் ஒரு ஆண் சாட்சியையும் நம்பகப்பூர்வமான இரு பெண் சாட்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களில் ஒருத்தி மறந்துவிட்டால் இன்னொருத்தி நினைவூட்டுவாள். கடனுக்கு சாட்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டால் சாட்சிகள் மறுக்க வேண்டாம். சாட்சி கூறுமாறு வேண்டப்பட்டால் சாட்சிபகர்வது அவர்கள் மீது கடமையாகும். கடன் சிறியதோ பெரியதோ அதனை குறித்த தவணை வரை எழுதி வைப்பதைவிட்டும் நீங்கள் சடைந்து விடாதீர்கள். கடனை எழுதி வைத்துக் கொள்வதே அல்லாஹ்வின் மார்க்கத்தில் நியாயமானதும் நேர்த்தியான சாட்சியத்துக்கு வழிவகுப்பதுமாகும்; கடனின் வகை, அளவு, காலம் போன்றவற்றைக் குறித்து ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கு மிகவும் ஏற்றது. ஆயினும் உங்களிடையே உடனடியாக நடைபெறும் வியாபாரமாக இருந்தாலே தவிர. அவசியமில்லை என்பதனால் அதனை எழுதிக் கொள்ளாமல் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்து வேறுபாட்டிற்கான காரணிகளை நீக்குவதற்கு அவன் சாட்சிகளை ஏற்படுத்துவதை விதித்துள்ளான். எனவே சாட்சி கூறக்கூடியவர்களோ எழுதக்கூடியவர்களோ ஒருபோதும் துன்புறுத்தப்படக்கூடாது. அவ்வாறு அவர்கள் துன்புறுத்தப்படுவது பாவமாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பலனளிப்பவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருகின்றான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(283) 2.283. நீங்கள் பயணத்தில் இருந்து கடன் பத்திரத்தை உங்களுக்காக எழுதக்கூடியவரைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் கடனாளி கடனளிப்பவருக்கு அடமானமாக எதையாவது கொடுக்கட்டும். கடனை நிறைவேற்றும் வரை அவருக்கு அது உத்தரவாதமாக அமையும். நீங்கள் ஒருவர் மற்றவரை நம்பினால் எழுதவோ சாட்சியோ அடமானமோ தேவையில்லை. அச்சமயத்தில் கடனைப் பெற்றவரின் பொறுப்பில் அமானிதமாக அது இருக்கும். அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவர் மீது கடமையாகிவிடுகிறது. இந்த அமானிதத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதிலிருந்து எதையும் மறுத்துவிட வேண்டாம். அவ்வாறு மறுத்தால் சாட்சியாளர்கள் சாட்சியத்தை மறைக்காது அதனை நிறைவேற்றிவிட வேண்டும். சாட்சியை மறைப்பவரின் உள்ளம் பாவியின் உள்ளமாகும். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(284) 2.284. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மாத்திரமே அவற்றைப் படைத்துப் பரிபாளிக்கிறான். நீங்கள் உங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அதற்கேற்பவே அவன் உங்களிடம் விசாரணை செய்வான். அதன் பிறகு தன் அருளால் தான் நாடியவர்களை மன்னிக்கிறான். தன் நீதியால் தான் நாடியவர்களைத் தண்டிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.

(285) 2.285. தூதர் முஹம்மது தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்ட அனைத்தையும் நம்புகிறார். அவ்வாறே நம்பிக்கையாளர்களும் நம்புகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வின்மீதும் வானவர்கள் அனைவரின்மீதும் தூதர்களுக்கு இறக்கப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீ எங்களுக்குக் கட்டளையிட்டதையும், தடுத்ததையும் நாங்கள் செவியேற்றோம். உனது கட்டளைகளைச் செயல்படுத்தி, நீ தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டோம். அல்லாஹ்வே, எங்களை மன்னித்து விடுவாயாக. நாங்கள் அனைவரும் எங்களின் அனைத்து விவகாரங்களிலும் உன் பக்கமே திரும்ப வேண்டும்.

(286) 2.286. அல்லாஹ் எவருக்கும் அவர் சுமக்க முடியும் அளவே பொறுப்புகளைச் சாட்டுவான். ஏனெனில் அல்லாஹ்வின் மார்க்கம் இலகுவானது. அதில் எந்தக் கடினமும் இல்லை. எவர் நன்மையான செயலைச் செய்வாரோ அவருக்கு அவர் செய்தவற்றுக்கான கூலி எவ்விதக் குறைவுமின்றி உண்டு. எவர் தீமையைச் சம்பாதிப்பாரோ அவர் சம்பாதித்தவற்றுக்கான தண்டனை அவருக்கே நிடைக்கும். அதனை வேறு எவரும் சுமக்க மாட்டார். தூதரும் நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் சொலல்லிலோ செயலிலோ நாங்கள் மறந்துவிட்டாலோ அறியாமல் தவறிழைத்துவிட்டாலோ எங்களைத் தண்டித்துவிடாதே. எங்கள் இறைவா! அநியாயம் செய்ததனால் நீ தண்டித்த எங்களுக்கு முன் வாழ்ந்த யூதர்கள் போன்றோர் மீது நீ சுமத்தியதுபோன்று எங்கள்மீதும் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திவிடாதே. எமக்குச் சிரமமான சுமக்க முடியாத ஏவல்களையும் விலக்கல்களையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாயாக. எங்களை மன்னித்துவிடுவாயாக. எங்கள்மீது கருணை காட்டுவாயாக. நீதான் எங்களின் பொறுப்பாளன், உதவியாளன். உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.