(1) 20.1. (طه) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 20.2. -தூதரே!- உம் சமூகம் உம்மை நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணிப்பதனால் நீர் வருத்தப்பட்டு துன்பப்படுவதற்காக நாம் உம்மீது இந்தக் குர்ஆனை இறக்கவில்லை.
(3) 20.3. தன்னை அஞ்சுவதற்கு அல்லாஹ் அனுகூலம் புரிந்தோருக்கு இது நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை இறக்கியுள்ளோம்.
(4) 20.4. பூமியையும் உயரமான வானங்களையும் படைத்த அல்லாஹ்வே இதனை இறக்கினான். இது மகத்தான குர்ஆனாகும். ஏனெனில் நிச்சயமாக இது மகத்தானவனிடமிருந்து இறங்கியதாகும்.
(5) 20.5. அளவிலாக் கருணையாளன் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.
(6) 20.6. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், மண்ணிற்கு அடியிலுள்ள படைப்பினங்களும் படைப்பால், உரிமையால், நிர்வாகத்தால் அவனுக்கே உரியன.
(7) 20.7. -தூதரே!- நீர் வெளிப்படையாகக் கூறினாலும் அல்லது மறைவாகக் கூறினாலும் நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிவான். அவன் இரகசியங்களையும் உள்ளத்தின் ஊசலாட்டங்கள் போன்ற அதைவிட மறைவானதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(8) 20.8. வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மிகப் பரிபூரண அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன.
(9) 20.9. -தூதரே!- மூஸா இப்னு இம்ரானின் செய்தி உமக்கு வந்துள்ளது.
(10) 20.10. அவர் தம் பயணத்தில் நெருப்பைக் கண்டபோது தம் குடும்பத்தாரிடம் கூறினார்: “உங்களின் இந்த இடத்திலேயே இருங்கள். நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஏதேனும் தீப்பிழம்பை உங்களிடம் எடுத்து வருகிறேன். அல்லது எனக்கு பாதையின்பால் வழிகாட்டக்கூடிய யாரையாவது அங்கு பெறலாம்.
(11) 20.11. அவர் நெருப்பின் பக்கம் வந்தபோது அல்லாஹ் அவரை, “மூஸாவே!” என்று அழைத்தான்.
(12) 20.12. நிச்சயமாக நான் உம் இறைவன். எனவே என்னுடன் இரகசியமாகப் பேசுவதற்காக உம் காலணியைக் கழட்டுவீராக. நிச்சயமாக நீர் (துவா) என்னும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.
(13) 20.13. -மூஸாவே!- என் தூதுப் பணியை எடுத்துரைப்பதற்காக நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். நான் உனக்கு வஹியாக அறிவிப்பதை செவிதாழ்த்திக் கேட்பீராக.
(14) 20.14. நிச்சயமாக நானே அல்லாஹ் ஆவேன். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. எனவே என்னை மட்டுமே வணங்குவீராக. தொழுகையை, என்னை அதில் நினைவுகூர்வதற்காக பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவீராக.
(15) 20.15. நிச்சயமாக மறுமை நாள் சந்தேகம் இல்லாமல் வந்தே தீரும், அது நிகழ்ந்தே தீரும். நான் அதனை மறைத்துவைக்க விரும்புகிறேன். அது வரும் சமயத்தை எந்தவொரு படைப்பும் அறிய முடியாது. ஆனால் தூதரின் அறிவிப்பின் மூலம் அதன் அடையாளங்களை அவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மை அல்லது தீமையான செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வாறு மறைத்து வைத்துள்ளான்.
(16) 20.16. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல் தன் மனம் நேசிக்கும் பாவங்களை பின்பற்றும் நிராகரிப்பாளன் அதனை நம்பிக்கைகொண்டு, அதற்காக நற்செயல் புரிவதை விட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறு நீர் செய்தால் அழிந்துவிடுவீர்.
(17) 20.17. மூஸாவே! உம்முடைய வலது கையில் உள்ளது என்ன?
(18) 20.18. மூசா கூறினார்: “அது என் கைத்தடி. நடக்கும்போது அதனை ஊன்றிக் கொள்வேன். அதனைக் கொண்டு மரத்திலிருந்து என் ஆடுகளுக்காக இலை பறிப்பேன். நான் குறிப்பிட்டதைத்தவிர அதில் இன்னும் வேறு சில பயன்களும் எனக்கு இருக்கின்றன.”
(19) 20.19. அல்லாஹ் கூறினான்: “மூஸாவே! அதனைப் போடுவீராக.”
(20) 20.20. மூஸா அதனைப் போட்டார். அது விரைவாக, ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பாகி விட்டது.
(21) 20.21. அல்லாஹ் மூசாவிடம் கூறினான்: “கைத்தடியை எடுப்பீராக. அது பாம்பாக மாறியதைக் கண்டு பயந்துவிடாதீர். நீர் அதனை எடுத்ததும் நாம் அதனை மீண்டும் முந்தைய நிலைக்கே திருப்புவோம்.”
(22) 20.22. உம் கையை உம் விலாப்புறத்தில் வைப்பீராக. அது வெண்குஷ்டமற்ற வெண்மையாக வெளிப்படும். இது உமக்கு இரண்டாவது சான்றாகும்.
(23) 20.23. -மூஸாவே!- நம்முடைய மகத்தான வல்லமையையும் நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்பதையும் அறிவிக்கும் நமது அத்தாட்சிகளை நாம் உமக்கு காட்டுவதற்காகவே இந்த இரு சான்றுகளையும் உமக்கு காட்டியுள்ளோம்.
(24) 20.24. மூஸாவே! ஃபிர்அவ்னிடம் செல்வீராக. நிச்சயமாக அவன் நிராகரித்து அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் வரம்புமீறி விட்டான்.
(25) 20.25. மூஸா பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்காக என் நெஞ்சை விசாலமாக்கித் தருவாயாக.
(26) 20.26. என் காரியத்தை எனக்கு எளிதாக்கு.
(27) 20.27. தெளிவாகப் பேசுவதற்குரிய ஆற்றலை எனக்குத் தருவாயாக!
(28) 20.28. அப்போதுதான் உன் தூதை எடுத்துரைக்கும்போது அவர்கள் என் பேச்சை புரிந்துகொள்வார்கள்.
(29) 20.29. என் குடும்பத்திலிருந்து என் விஷயங்களுக்கு உதவிசெய்யக்கூடிய ஒருவரை ஏற்படுத்துவாயாக.
(30) 20.30. அவர் என் சகோதரர் ஹாரூன் இப்னு இம்ரானாக இருக்கட்டும்.
(31) 20.31. அவரைக்கொண்டு என் முதுகை வலுப்படுத்து.
(32) 20.32. தூதுப்பணியில் என்னுடன் அவரையும் கூட்டாக்கு.
(33) 20.33. அதனால் நாங்கள் உன் தூய்மையை அதிகமதிகம் பறைசாற்ற வேண்டும்;
(34) 20.34. உன்னை நாங்கள் அதிகமதிகம் புகழ வேண்டும்.
(35) 20.35. நிச்சயமாக நீ எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எங்களின் எந்தவொரு விடயமும் உனக்கு மறைவாக இல்லை.”
(36) 20.36. அல்லாஹ் கூறினான்: “மூஸாவே! நீர் வேண்டியதை நாம் உமக்கு வழங்கிவிட்டோம்.”
(37) 20.37. நாம் உம்மீது மீண்டும் ஒருமுறை அருள்புரிந்துள்ளோம்.
(38) 20.38. ஃபிர்அவ்னின் சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாக்கும் விதத்தில் ஒர் உதிப்பை நாம் உம் தாய்க்கு ஏற்படுத்தினோம்.
(39) 20.39. நாம் அவளுக்கு உள்ளுதிப்பின் மூலம் பின்வருமாறு கட்டளையிட்டோம்: “குழந்தை பிறந்த பிறகு அதனை ஒரு பெட்டியில் வைத்து கடலில் எறிந்து விடுவீராக. நம் கட்டளையின்படி கடல் அதனைக் கரை ஒதுக்கி விடும். அக்குழந்தையை எனக்கும் அக்குழந்தைக்கும் எதிரியாக இருக்கின்ற ஃபிர்அவ்ன் எடுப்பான்.” நான் உம்மீது என் அன்பைப் பொழிந்துள்ளேன். அதனால் மக்களும் உம்மை நேசித்தனர். நீர் என் கண்காணிப்பில், பாதுகாப்பில் பராமரிப்பில் வளர வேண்டும் என்பதற்காக.
(40) 20.40. பெட்டியை பின்தொடர்ந்துகொண்டே உம் சகோதரி சென்றாள். அக்குழந்தையை எடுத்தவர்களிடம் உம் சகோதரி கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தையை பாதுகாத்து பாலூட்டி, வளர்க்கும் ஒருவரைக் குறித்து அறிவிக்கட்டுமா?” உம் தாய் மகிழ்ச்சியடைவதற்காக, உம்மைக் குறித்து கவலையடையாமல் இருப்பதற்காக உம்மை அவளிடம் திரும்பச் செய்து உம்மீது அருள்புரிந்தோம். நீர் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றுவிட்டீர். அதனால் கிடைக்கும் தண்டனையிலிருந்து நாம் உம்மைக் காப்பாற்றி உம்மீது அருள்புரிந்தோம். உமக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட ஒவ்வொரு சோதனையிலிருந்தும் உம்மை விடுவித்தோம். நீர் மத்யன்வாசிகளிடம் நீண்ட காலம் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே உரையாடுவதற்கு உமக்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் வந்தீர்.
(41) 20.41. நான் உமக்கு வஹியாக அறிவிப்பவற்றை நீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நான் உம்மை என் புறத்திலிருந்து தூதராக தேர்ந்தெடுத்தேன்.
(42) 20.42. -மூஸாவே!- நீரும் உம் சகோதரர் ஹாரூனும் அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது ஏகத்துவத்தையும் அறிவிக்கக்கூடிய நம்முடைய சான்றுகளுடன் செல்லுங்கள். என் பக்கம் அழைப்பதைவிட்டும் என்னை நினைவுகூர்வதைவிட்டும் சோர்ந்துவிடாதீர்கள்.
(43) 20.43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் அல்லாஹ்வை நிராகரிப்பதில் பிடிவாதமாக இருந்து வரம்பு மீறிவிட்டான்.
(44) 20.44. அவன் அறிவுரையை ஏற்று அல்லாஹ்வை அஞ்சி பாவமன்னிப்பு கோரும் பொருட்டு கடினமற்ற மென்மையான வார்த்தைகளை அவனுக்குக் கூறுங்கள்.
(45) 20.45. மூஸாவும் ஹாரூனும் கூறினார்கள்: “எங்களின் அழைப்பை நிறைவுசெய்வதற்கு முன்பே அவன் எங்களைத் தண்டித்துவிடுவான் அல்லது வரம்புமீறி அநியாயமாக எங்களைக் கொலை அல்லது வேறு ஏதும் செய்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் அஞ்சுகிறோம்.”
(46) 20.46. அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் கூறினான்: “நீங்கள் அஞ்சாதீர்கள். நான் உதவி செய்வதன் மூலம் உங்களுடன் இருக்கின்றேன். உங்களுக்கும் அவனுக்கும் இடையில் நடப்பதை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.
(47) 20.47. நீங்கள் இருவரும் அவனிடம் சென்று அவனிடம் கூறுங்கள்: “-ஃபிர்அவ்னே!- நாங்கள் இருவரும் உம் இறைவனின் தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பிவிடும். அவர்களின் ஆண்மக்களைக் கொலைசெய்து பெண்மக்களை உயிருடன் விட்டுவிட்டு அவர்களை வேதனைக்குள்ளாக்காதீர். நாங்கள் உண்மையாளர்கள் என்பதைக் காட்டுவதற்காக உம் இறைவனிடமிருந்து சான்றினைக் கொண்டு வந்துள்ளோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியவருக்கு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு உண்டு.
(48) 20.48. அல்லாஹ்வின் சான்றுகளை பொய்ப்பித்து, தூதர்கள் கொண்டு வந்ததைப் புறக்கணித்தவர்களுக்கே, இவ்வுலகிலும், மறுவுலகிலும் வேதனை உண்டு என்று நிச்சயமாக எங்கள் இறைவன் எங்களுக்கு அறிவித்துள்ளான்.
(49) 20.49. ஃபிர்அவ்ன் அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தவாறு கேட்டான்: “மூஸாவே! என் பக்கம் உங்கள் இருவரையும் அனுப்பியதாக நீங்கள் எண்ணும் உங்கள் இறைவன் யார்?”
(50) 20.50. மூஸா கூறினார்: “ஒவ்வொரு படைப்புக்கும் உருவத்தையும் அதற்குப் பொருத்தமான வடிவத்தையும் வழங்கி, பின்பு படைக்கப்பட்டதன் நோக்கத்தின்பால் படைப்பினங்களை வழிகாட்டியவனே எங்கள் இறைவன்.”
(51) 20.51. ஃபிர்அவ்ன் கேட்டான்: “நிராகரிப்பில் இருந்த முந்தைய சமூகங்களின் நிலை என்ன?”
(52) 20.52. மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “அந்த சமூகங்களைக் குறித்த அறிவு என் இறைவனிடமே உள்ளது. அது லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனை அறிவதில் என் இறைவன் தவறிழைப்பதுமில்லை; அவற்றில் அறிந்ததை மறந்து விடுவதுமில்லை.
(53) 20.53. அவனே பூமியை நீங்கள் வாழ்வதற்கேற்ப வசதியாக அமைத்து அதில் நீங்கள் செல்வதற்கான பொருத்தமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளான். அவன் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன்மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்துகிறான்.
(54) 20.54. மனிதர்களே! நாம் உங்களுக்கு வெளிப்படுத்திய தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். நிச்சயமாக அவ்வாறு கூறப்பட்டுள்ளவைகளில் அறிவுடையோருக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.
(55) 20.55. பூமியின் மண்ணிலிருந்தே உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். நீங்கள் இறந்த பிறகு அதில்தான் அடக்கம் செய்யப்படுவீர்கள். மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும்போது அதிலிருந்தே மீண்டும் உங்களை வெளிப்படுத்துவோம்.
(56) 20.56. நாம் ஃபிர்அவ்னுக்கு நம்முடைய ஒன்பது சான்றுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அவன் அவற்றைக் கண்டு பொய்ப்பித்தான். அவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு விடையளிப்பதை தவிர்த்துக்கொண்டான்.
(57) 20.57. ஃபிர்அவ்ன் கூறினான்: “-மூஸாவே!- நீர் கொண்டுவந்துள்ள சூனியத்தைக் கொண்டு உம் ஆட்சியை நிலைநாட்டி எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றவா வந்துள்ளீர்?
(58) 20.58. -மூஸாவே!- உனது சூனியத்தைபோல் நாங்களும் சூனியத்தைக் கொண்டு வருவோம். எங்களுக்கும் உமக்கும் இடையில் குறிப்பிட்ட நேரத்தையும், இடத்தையும் நிர்ணயித்துக் கொள்வீராக. நாங்களும் அதனை மீற மாட்டோம். நீரும் அதனை மீறக்கூடாது. அது இரு பிரிவினருக்கும் நடுநிலையான இடமாக இருக்க வேண்டும்.
(59) 20.59. மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “மக்கள் தங்களின் பண்டிகையைக் கொண்டாடியவாறு நண்பகல் வேளையில் ஒன்றுகூடும் பண்டிகை நாளே எங்களுக்கும் உங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாக இருக்கட்டும்.”
(60) 20.60. ஃபிர்அவ்ன் திரும்பிச்சென்று தன் சூழ்ச்சிகள், தந்திரங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டினான். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு குறித்த நேரத்தில் வெற்றி பெற வேண்டுமென வந்து சேர்ந்தான்.
(61) 20.61. மூஸா ஃபிர்அவ்னின் சூனியக்காரர்களுக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மக்களை ஏமாற்றும் சூனியத்தைக்கொண்டு அல்லாஹ்வின்மீது பொய்யாக இட்டுக்கட்டாதீர்கள். அவன் தன் வேதனையால் உங்கள் அனைவரையும் அழித்துவிடுவான். அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டியவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
(62) 20.62. மூஸாவின் பேச்சைக் கேட்ட சூனியக்காரர்கள் தங்களுக்குள் இரகசியமாக விவாதித்துக் கொண்டார்கள்.
(63) 20.63. சூனியக்காரர்கள் சிலர் சிலரிடம் இரகசியமாகக் கூறினார்கள்: “நிச்சயமாக மூஸாவும் ஹாரூனும் சூனியக்காரர்களாவார். தாங்கள் கொண்டுவந்த சூனியத்தைக்கொண்டு உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றவும் உங்களின் உயர்ந்த வாழ்க்கை வழிமுறைகளை, உங்களின் உயர்ந்த கொள்கைகளை போக்கவும் நாடுகிறார்கள்.
(64) 20.64. எனவே நீங்கள் உங்களின் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். பின்னர் ஒன்றுதிரண்டு வாருங்கள். உங்களிடம் உள்ளதை ஒரே தடவையில் எறிந்து விடுங்கள். தனது எதிரியை இன்று யார் மிகைப்பாரோ அவர்தாம் வெற்றியாளராவார்.
(65) 20.65. சூனியக்காரர்கள் மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! உம்மிடம் உள்ள சூனியத்தைச் செய்து நீர் ஆரம்பம் செய்வதா அல்லது அதனை நாம் ஆரம்பிப்பதா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வீராக.
(66) 20.66. மூஸா கூறினார்: “இல்லை, உங்களிடமுள்ளதை நீங்களே முதலில் எறியுங்கள். அவர்கள் தங்களிடம் உள்ளதை எறிந்தார்கள். நிச்சயமாக அவர்கள் எறிந்த கயிறுகளும், கைத்தடிகளும் சூனியத்தினால் மூஸாவுக்கு விரைவாக நகரும் பாம்புகளாகத் தோற்றமளித்தன.
(67) 20.67. அவர்கள் செய்தவற்றால் ஏற்பட்ட அச்சத்தை மூஸா தனது மனதில் மறைத்துக்கொண்டார்.
(68) 20.68. அல்லாஹ் மூஸாவிடம் அவரை அமைதிப்படுத்தியவாறு கூறினான்: “அவர்கள் ஏற்படுத்திய மாயத்தோற்றத்தைக் கண்டு பயந்துவிடாதீர். மூஸாவே! நிச்சயமாக நீர்தான் அவர்களை வென்று மேலோங்குபவர்.
(69) 20.69. உம்முடைய வலது கையிலுள்ள கைத்தடியை எறிவீராக. அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியது சூனியச் சூழ்ச்சியே. சூனியக்காரன் எங்கிருந்தாலும் தனது நோக்கத்தில் வெற்றிபெற மாட்டான்.
(70) 20.70. மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டது. நிச்சயமாக மூஸா கொண்டு வந்தது சூனியமல்ல, நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதுதான் என்பதை அறிந்துகொண்ட சூனியக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “நாங்கள், படைப்புகள் அனைத்திற்கும் இறைவனாவனான, மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம்.”
(71) 20.71. சூனியக்காரர்கள் நம்பிக்கைகொண்டதை ஃபிர்அவ்ன் மறுத்தவனாக, அவர்களை எச்சரித்தவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவின் மீது நம்பிக்கைகொண்டு விட்டீர்களா? -சூனியக்காரர்களே- நிச்சயமாக மூஸாதான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் குரு. உங்களில் ஒவ்வொருவரின் மறுகால் மறுகையை வெட்டிவிடுவேன். பேரீச்சை மரத்தின் தண்டுகளில் நீங்கள் சாகும்வரை உங்களின் உடல்களை கட்டிவிடுவேன். மற்றவர்களுக்கு படிப்பினையாக நீங்கள் இருப்பீர்கள். நம்மில் யார் வேதனையளிப்பதில் கடுமையானவர்? யாருடைய வேதனை நிலையானது? என்பதில் நானா? அல்லது மூஸாவின் இறைவனா? என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
(72) 20.72. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: -“ஃபிர்அவ்னே!- எம்மிடம் வந்த தெளிவான சான்றுகளைப் பின்பற்றுவதை விட உன்னைப் பின்பற்றுவதற்கு முன்னுரிமை வழங்க மாட்டோம். மேலும் நாங்கள் எங்களைப் படைத்த அல்லாஹ்வை விட உனக்கு முன்னுரிமை வழங்கமாட்டோம். உன்னால் செய்ய முடிந்ததைச் செய். அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் அன்றி எங்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உன்னுடைய அதிகாரம் விரைவில் அழிந்துவிடும்.
(73) 20.73. எங்களின் இறைவன் எங்களின் முந்தைய நிராகரிப்பு மற்றும் ஏனைய பாவங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி கற்கவும், ஈடுபடவும், மூஸாவுடன் போட்டியிடவும் செய்த சூனியத்தினால் ஏற்பட்ட பாவத்தையும் மன்னித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவன் மீது நம்பிக்கைகொண்டு விட்டோம். நீ எங்களுக்கு வாக்களித்ததைவிட கூலி வழங்குவதில் அல்லாஹ்வே சிறந்தவன். நீ எங்களை அச்சுறுத்திய வேதனையை விட அவனே நிலையான வேதனையளிக்கக்கூடியவன்.
(74) 20.74. நிச்சயமாக யார் மறுமை நாளில் தன் இறைவனை நிராகரித்தவராக வருவாரோ அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர் அதில் நுழைந்து, என்றென்றும் அதில் வீழ்ந்துகிடப்பார். அங்கு வேதனையிலிருந்து ஆறுதலடைய அவரால் சாகவும் முடியாது; நன்றாக உயிர்வாழவும் முடியாது.
(75) 20.75. யார் தன் இறைவனை நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல்கள் புரிந்தவராக மறுமை நாளில் வருவார்களோ அப்படிப்பட்ட மகத்தான பண்புகளைப் பெற்றவர்களுக்கே உயர்ந்த பதவிகளும், அந்தஸ்துகளும் இருக்கின்றன.
(76) 20.76. அவர்கள் தங்கும் நிலையான சுவனங்களே அந்த உயர்ந்த அந்தஸ்துகளாகும். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மேற்கூறப்பட்ட கூலிகள் நிராகரிப்பு மற்றும் பாவங்களிலிருந்து தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்ட ஒவ்வொருவருக்குமான கூலியாகும்.
(77) 20.77. நாம் மூஸாவிற்கு வஹி அறிவித்தோம்: “எகிப்திலிருந்து என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் யாரும் அறியாதவண்ணம் சென்றுவிடுவீராக. கைத்தடியால் கடலை அடித்த பிறகு அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைத்துக் கொள்வீராக. ஃபிர்அவ்ன் உங்களைப் பிடித்துவிடுவான் என்றோ கடலில் மூழ்கிவிடுவோம் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.”
(78) 20.78. ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலிலிருந்து மூட வேண்டிய ஏதோ ஒன்று- அதன் உண்மை நிலையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்- அவனது படையை மூடிவிட்டது. அவர்கள் அனைவரும் மூழ்கி அழிந்தார்கள். மூஸாவும் அவருடன் இருந்தவர்களும் தப்பித்தார்கள்.
(79) 20.79. ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினருக்கு நிராகரிப்பை அழகுபடுத்தியும், அசத்தியத்தைக் கொண்டு அவர்களை ஏமாற்றியும் அவர்களை வழிகெடுத்துவிட்டான். அவர்களுக்கு நேரான வழியை அவன் காட்டவில்லை.
(80) 20.80. ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும் விட்டு இஸ்ராயீலின் மக்களை பாதுகாத்த பிறகு நாம் அவர்களிடம் கூறினோம்: “இஸ்ராயீலின் மக்களே! நாம் உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றியுள்ளோம். தூர் மலைக்கு பக்கத்தில் இருக்கின்ற பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து நாம் மூஸாவுடன் உரையாடுவோம் என்று உங்களுக்கு வாக்களித்துள்ளோம். நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது (மன்னு எனும்) தேன் போன்ற இனிப்புப் பானத்தையும் காடை போன்ற (சல்வா எனும்) நல்ல மாமிசமுடைய சிறு பறவையையும் உங்களுக்கு எங்களின் அருளாக இறக்கினோம்.
(81) 20.81. நாம் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட சுவையான உணவுகளை உண்ணுங்கள். உங்களுக்கு அனுமதித்தவற்றில் எல்லை மீறி தடைசெய்யப்பட்டவற்றின்பால் சென்று விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் என் கோபத்திற்குள்ளாகி விடுவீர்கள். எவர் என் கோபத்திற்கு உள்ளானாரோ அவர் ஈருலகிலும் அழிந்து துர்பாக்கியசாலியாகி விட்டார்.
(82) 20.82. நிச்சயமாக என் பக்கம் மீண்டு, நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, பின்பு சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நிச்சயமாக நான் அதிகம் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றேன்.
(83) 20.83. -மூஸாவே!- உம் சமூகத்தினரை பின்னால் விட்டுவிட்டு என் பக்கம் விரைவாக உம்மை வரவைத்தது எது?
(84) 20.84. மூஸா கூறினார்: “அவர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். விரைவில் என்னை அடைந்துவிடுவார்கள். நீ என் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்பதற்காகவே எனது சமூகத்தை முந்தி நான் உன் பக்கம் விரைந்து வந்துள்ளேன்.
(85) 20.85. அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நாம் நீர் உமக்குப் பின் விட்டுவிட்டு வந்த உம் சமூகத்தினரை காளைக்கன்றை வணங்குவதைக் கொண்டு சோதித்துள்ளோம். அதனை வணங்குமாறு சாமிரி அவர்களை அழைத்துள்ளான். அவன் அதன் மூலம் அவர்களை வழிகெடுத்துவிட்டான்.
(86) 20.86. தம் சமூகம் காளைக்கன்றை வணங்கியதனால் அவர்கள் மீது கவலைகொண்டு மூஸா கோபமாக அவர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்: “என் சமூகமே! அல்லாஹ் உங்களுக்குத் தவ்ராத்தை இறக்கி, சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வேன் என்று உங்களுக்கு அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? நீங்கள் மறந்துவிடுமளவுக்கு உங்கள் மீது காலம் நீண்டுவிட்டதா என்ன? அல்லது உங்களின் இந்த செயலின் மூலம் இறைவனின் கோபம் ஏற்பட்டு அவனது வேதனை உங்கள் மீது இறங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நான் உங்களின் பக்கம் திரும்பி வரும் வரைக்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து உறுதியாக இருப்போம் என்று எனக்கு அளித்த வாக்குறுதிக்கு அதனால்தான் மாறுசெய்துவிட்டீர்களா?
(87) 20.87. மூஸாவின் சமூகத்தார் கூறினார்கள்: “-மூஸாவே!- நாங்கள் உமக்கு அளித்த வாக்குறுதிக்கு விரும்பி மாறாகச் செயல்படவில்லை. மாறாக நாங்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடமிருந்து ஆபரணங்களையும், சுமைகளையும் சுமந்து வந்தோம். அவற்றிலிருந்து நாங்கள் விடுபடுவதற்காக அவற்றை ஒரு குழியில் எறிந்துவிட்டோம். நாங்கள் அவற்றை குழியில் எறிந்தவாறே சாமிரியும் தன்னிடமிருந்த ஜிப்ரீலின் குதிரையின் பாதத்தின் மண்ணை எறிந்தான்.
(88) 20.88. அந்த ஆபரணங்களிலிருந்து சாமிரி இஸ்ராயீலின் மக்களுக்காக உயிரற்ற ஒரு காளைக்கன்றின் உடலை உருவாக்கினான். அது பசு மாட்டைப் போல் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. சாமிரியின் செயலால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “இதுதான் உங்களின் கடவுள், மூஸாவின் கடவுள். அவர் இதனை மறந்து இங்கே விட்டுச் சென்று விட்டார்.
(89) 20.89. காளைக் கன்றால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதனை வணங்கியவர்கள் அது அவர்களுடன் பேசவுமில்லை, அவர்களின் பேச்சுக்குப் பதிலளிக்கவுமில்லை, அவர்களையும் ஏனையவர்களையும் விட்டுத் தீங்கினை அகற்றவோ அவர்களுக்கோ ஏனையவர்களுக்கோ நன்மையை கொண்டுவரவோ சக்திபெறவுமில்லை என்பதைப் பார்க்கவில்லையா?
(90) 20.90. மூஸா திரும்பி வருவதற்கு முன்னால் ஹாரூன் அவர்களிடம் கூறினார்: “ஆபரணங்களிலிருந்து காளைக் கன்று உருவாக்கப்பட்டதும் அது எழுப்பும் சப்தமும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார்? நிராகரிப்பாளர்கள் யார்? என்று சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை. -என் சமூகமே!- நிச்சயமாக கருணைக்குச் சொந்தக்காரனே உங்களின் இறைவனாவான். உங்களுக்கு கருணை காட்டுவதற்கு முன் உங்களுக்கு எவ்வித தீங்கிழைக்கவோ நன்மை பயக்கவோ கூட ஆற்றலற்றவனல்ல உங்கள் இறைவன். எனவே அவனை மட்டுமே வணங்குவதில் என்னைப் பின்பற்றுங்கள். அவனைத் தவிர மற்றவற்றை வணங்குவதை விட்டுவிட்டு எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.”
(91) 20.91. காளைக் கன்றை வணங்குவதனால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “மூஸா நம்மிடம் திரும்பி வரும் வரை நாங்கள் காளைக் கன்று வணக்கத்தில் இருந்துகொண்டே இருப்போம்.”
(92) 20.92. மூஸா தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கி வழிதவறியதை நீர் பார்த்த போது ஏன் தடுக்கவில்லை?”
(93) 20.93. அவர்களை விட்டு விட்டு என்னுடன் சேர்ந்துகொள்வதை விட்டும் எது உம்மைத் தடுத்தது?” நான் உம்மை அவர்களிடம் என் பிரதிநிதியாக நியமித்த போது என் கட்டளைக்கு மாறுசெய்து விட்டீரா?
(94) 20.94. மூஸா ஹாரூனின் செயலைக் கண்டிக்கும் விதமாக அவரது தலை முடியையும், தாடியையும் பிடித்து இழுத்தபோது ஹாரூன் அவரிடம் அன்பாக கூறினார்: “என் தாடியையோ, தலை முடியையோ பிடித்து இழுக்காதீர். நிச்சயமாக நான் அவர்களிடம் இருந்ததற்கு தக்க காரணம் உள்ளது. ஏனெனில் நான் அவர்களை தனியே விட்டுவிட்டால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். அப்பொழுது “நீர் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர். அவர்கள் விஷயத்தில் என் அறிவுரையை பேணி நடக்கவில்லை” என்று நீர் என்னைப் பார்த்து கூறுவீர் என்று அஞ்சினேன்.
(95) 20.95. மூஸா சாமிரியிடம் கூறினார்: “சாமிரியே! உனது விடயம் என்ன? எது உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது?”
(96) 20.96. சாமிரி மூஸாவிடம் கூறினான்: “அவர்கள் காணாததை நான் கண்டேன். ஜிப்ரீலை ஒரு குதிரையின்மீது கண்டேன். அவருடைய குதிரையின் கால்தடத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து அதனை காளைக் கன்றின் வடிவத்தில் உருக்கப்பட்ட ஆபரணத்தில் எறிந்தேன். அதிலிருந்து சப்தம் எழுப்பக்கூடிய காளைக் கன்றின் உடல் தோன்றியது. இவ்வாறு என் மனம் நான் செய்தவற்றை எனக்கு அழகுபடுத்திக் காட்டியது.
(97) 20.97. மூஸா சாமிரியிடம் கூறினார்: “நீ சென்றுவிடு. இனி உயிருடன் இருக்கும்வரை “நிச்சயமாக நான் தீண்டவும் மாட்டேன். தீண்டப்படவும் மாட்டேன்” என்றுதான் கூற வேண்டும். நீ ஒதுக்கப்பட்டவனாகத்தான் வாழ்வாய். உனக்கு மறுமை நாளில் ஒருகுறிப்பிட்ட நேரம் உண்டு. அங்கு நீ விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாய். அல்லாஹ் ஒருபோதும் இந்த வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். உனது கடவுளாக நீ ஆக்கி, அல்லாஹ்வை விடுத்து எதனை வணங்கினாயோ அந்த காளைக் கன்றைப் பார். நாம் அது உருகும் வரை நெருப்பால் எரித்து அதன் எந்த அடையாளமும் எஞ்சியிருக்காதவாறு கடலில் வீசி விடுவோம்.
(98) 20.98. -மனிதர்களே!- நிச்சயமாக வணக்கத்திற்குரிய உங்களின் உண்மையான இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வேறு உண்மையான இறைவன் இல்லை. அவன் எல்லாவற்றையும் அறிவால் சூழ்ந்தவன். எதனைப் பற்றிய அறிவும் அவனை விட்டு தப்பிவிடாது.
(99) 20.99. -தூதரே!- மூஸா, ஃபிர்அவ்ன் மற்றும் அவ்விருவருடைய சமூகங்களை பற்றிய சம்பவங்களை நாம் உமக்குக் கூறியதுபோல உமக்கு ஆறுதலாக அமையும்பொருட்டு முந்தைய தூதர்கள் மற்றும் சமூகங்களின் செய்திகளையும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். நாம் உமக்கு நம்மிடமிருந்து அறிவுரை பெற்றுக்கொள்பவர்கள் அறிவுரை பெறக்கூடிய குர்ஆனை வழங்கியுள்ளோம்.
(100) 20.100. உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதிலுள்ளதன்படி செயல்படாமல் யார் புறக்கணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் பெரும் பாவங்களைச் சுமந்தவராகவும் வேதனைமிக்க தண்டனைக்கு உரியவராகவும் வருவார்.
(101) 20.101. அந்த வேதனையில் அவர் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார். அவர்கள் மறுமை நாளில் சுமக்கும் சுமை மிகவும் மோசமானது.
(102) 20.102. மீண்டும் எழுப்பப்படுவதற்காக வானவர் இரண்டாது முறையாக சூர் ஊதும் நாளில் நாம் நிராகரிப்பாளர்களை ஒன்றுதிரட்டுவோம். அப்போது அங்கு அவர்கள் சந்திக்கும் மறுமையின் பயங்கரத்தின் கடுமையினால் அவர்களின் நிறங்கள் மாறி கண்கள் நீலம் பூத்திருக்கும்.
(103) 20.103. அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பின்வருமாறு பேசிக் கொள்வார்கள்: “நாம் மரணத்தின் பின் பத்து இரவுகள்தான் மண்ணறை வாழ்வில் தங்கியிருப்போம்.”
(104) 20.104. அவர்கள் தங்களிடையே இரகசியமாகப் பேசுவதை நாம் அறிவோம். அதில் எதுவும் நம்மை விட்டு தப்பி விடாது. அப்போது அவர்களில் அறிவில் சிறந்தவர் கூறுவார்: “நீங்கள் ஒருநாள்தான் மண்ணறையில் தங்கியிருந்தீர்கள். அதைவிட அதிகமாக அல்ல.”
(105) 20.105. -தூதரே!- மறுமை நாளில் மலைகளின் நிலை என்னவாகும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் மலைகளைத் அதன் வேர்களிலிருந்து பிடுங்கி விடுவான். அவை புழுதியாகி விடும்.
(106) 20.106. அவற்றைச் சுமந்திருக்கும் பூமியை கட்டடங்களோ, தாவரங்களோ அற்ற வெட்ட வெளியாக்கி விடுவான்.
(107) 20.107. -அதனைப் பார்க்கக் கூடியவரே!- பூமி நன்கு வெட்ட வெளியாக இருப்பதனால் நீர் அதில் எவ்வித வளைவையோ, மேடு, பள்ளத்தையோ காண மாட்டீர்.
(108) 20.108. அந்த நாளில் மனிதர்கள் அழைப்பாளரின் சப்தத்தைப் பின்தொடர்ந்து மஹ்ஷர் பெருவெளியை நோக்கிச் செல்வார்கள். அவரைப் பின்பற்றாமல் யாரும் இருந்துவிட முடியாது. அளவிலாக் கருணையாளனின் மீதுள்ள பயத்தால் சப்தங்களெல்லாம் அமைதியாகி விடும். அந்த நாளில் சிறுமுணுமுணுப்பைத்தவிர வேறு எந்த சப்தத்தையும் நீர் கேட்க முடியாது.
(109) 20.109. அந்த மாபெரும் நாளில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்து அவர்களின் வார்த்தையை விரும்புவானோ அவர்களின் பரிந்துரையைத்தவிர வேறு யாருடைய பரிந்துரையும் பயனளிக்காது.
(110) 20.110. மக்கள் எதிர்நோக்கவிருக்கும் மறுமையைப் பற்றியும் உலகில் அவர்கள் பின்னால் விட்டு வந்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிவான். அடியார்கள் அனைவரும் அல்லாஹ்வின் உள்ளமையையோ, பண்புகளையோ, சூழ்ந்தறிய முடியாது.
(111) 20.111. அடியார்களின் முகங்கள் தாழ்ந்துவிடும். என்றும் மரணிக்காத நிலையானவனுக்காக அவைகள் பணிந்துவிடும். அவன் அடியார்களின் அனைத்து விவகாரங்களையும் நிர்வகித்து நடைமுறைப்படுத்துபவன். தம்மைத் தாமே அழிவில் ஆழ்த்தி, பாவங்களைச் சுமந்தோர் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
(112) 20.112. எவர் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிவாரோ அவர் அதற்கான கூலியை நிறைவாகப் பெறுவார். தான் செய்யாத பாவத்திற்காக தண்டிக்கப்பட்டோ, தன் நற்செயல்களுக்கான கூலி குறைக்கப்பட்டோ அநீதி இழைக்கப்படுவேன் என அவர் அஞ்ச மாட்டார்.
(113) 20.113. முந்தைய சமூகங்களின் சம்பவங்களை நாம் இறக்கியது போன்றே இந்த குர்ஆனையும் தெளிவான அரபி மொழியில் இறக்கியுள்ளோம். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லது குர்ஆன் அவர்களுக்கு அறிவுரையையும் படிப்பினையையும் வழங்க வேண்டும் என்பதற்காக எல்லா வகையான எச்சரிக்கைகளையும் பயமுறுத்தல்களையும் நாம் அதில் தெளிவுபடுத்தி விட்டோம்.
(114) 20.114. அல்லாஹ் மிக உயர்ந்தவன். புனிதமானவன், மகத்துவமானவன். அனைத்துக்கும் உரிமையாளனான ஆட்சியாளன். அவன் உண்மையானவன். அவனுடைய வார்த்தையே உண்மையானது. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பண்புகளைவிட்டும் அவன் மிக உயர்ந்தவன். -தூதரே!- ஜிப்ரீல் உமக்குக் குர்ஆனை எடுத்துரைத்து முடிப்பதற்கு முன்னரே அவருடன் சேர்ந்து விரைவாக ஓதுவதற்கு முயற்சி செய்யாதீர். “இறைவா! நீ எனக்குக் கற்றுக் கொடுத்த கல்வியுடன் இன்னும் கல்வியை அதிகப்படுத்துவாயாக” என்று கூறுவீராக.
(115) 20.115. நாம் ஏற்கனவே, குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து உண்ணக்கூடாது என்று ஆதமுக்கு வஸிய்யத் செய்து இருந்தோம். அதனைவிட்டும் தடுத்து அதன் விளைவையும் தெளிவுபடுத்தினோம். ஆதம் பொறுமையை மேற்கொள்ளாமல் வஸிய்யத்தை மறந்து அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார். அவரிடம் நாம் நம் வஸிய்யத்தை பேணி நடக்கும் பலமான உறுதியைக் காணவில்லை.
(116) 20.116. -தூதரே!- ஆதமுக்கு முகமன் கூறும்பொருட்டு அவருக்குச் சிரம்பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். ஆனால் -அவர்களுடன் இருந்த அவர்கள் இனத்தைச் சாராத- இப்லீஸ் சிரம்பணியவில்லை. அவன் கர்வத்தினால் சிரம்பணிவதிலிருந்து தவிர்ந்துகொண்டான்.
(117) 20.117. நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக ஷைத்தான் உமக்கும் உம் மனைவிக்கும் எதிரியாக இருக்கின்றான். எனவே அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தில் அவனுக்கு வழிப்படுவதன் மூலம் உம்மையும் உமது மனைவியையும் சுவனத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டாம். அப்போது நீர்தான் கஷ்டங்களையும் சிரமங்களையும் சுமக்க நேரிடும்.
(118) 20.118. நிச்சயமாக சுவனத்தில் உங்களுக்கு பசி ஏற்படாது உணவளிக்க வேண்டியதும் நிர்வாணமாகாமல் இருக்க ஆடையணிவிப்பதும் அல்லாஹ்வின் மீதுள்ள விடயமாகும்.
(119) 20.119. தாகம் ஏற்படாமலிருக்க அவன் உங்களுக்கு நீர் புகட்டுவதும், உங்களை சூரிய வெப்பம் தாக்காது உங்களுக்கு நிழலளிப்பதும் அவனது பொறுப்பே.
(120) 20.120. ஷைத்தான் ஆதமுக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். அவரிடம் கூறினான்: “நான் உமக்கு ஒரு மரத்தைக் குறித்துக் கூறட்டுமா? அதிலிருந்து உண்பவர் மரணிக்கவே மாட்டார். என்றென்றும் உயிருடன் நிரந்தரமாக நிலைத்திருப்பார். என்றும் முடிவடையாத, துண்டிக்கப்படாத நிலையான உரிமையைப் பெறுவார்”
(121) 20.121. ஆதமும் ஹவ்வாவும் உண்பதற்குத் தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார்கள். எனவே மறைக்கப்பட்டிருந்த அவர்களின் மறைவிடங்கள் அவர்களுக்கு வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைப் பறித்து அவற்றால் தனது மறைவிடங்களை மறைக்க ஆரம்பித்தார்கள். ஆதம் தம் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்தார். ஏனெனில் அந்த மரத்திலிருந்து உண்பதைத் தவிர்க்குமாறு அவன் இட்ட கட்டளையை அவர் எடுத்து நடக்காமல் அவர் தனக்கு ஆகுமாகாததை செய்துவிட்டார்.
(122) 20.122. பின்னர் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டான். அவருக்கு நேரான வழியைக் காட்டினான்.
(123) 20.123. அல்லாஹ் ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் இப்லீசும் சுவனத்திலிருந்து இறங்கிவிடுங்கள். அவன் உங்களுக்கும் நீங்கள் அவனுக்கும் எதிரியாவீர்கள். என் புறத்திலிருந்து என் பாதையை தெளிவுபடுத்தக்கூடிய வழிகாட்டல் உங்களிடம் வந்தால் உங்களில் யார் அதனைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டு, அதனை விட்டும் நெறிபிறழமாட்டாரோ அவர் சத்தியத்தைவிட்டு வழிதவறவும் மாட்டார்; மறுமை நாளில் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியசாலியாகவும் ஆகமாட்டார். மாறாக அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
(124) 20.124. யார் என் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு விடையளிக்காமல் புறக்கணித்தாரோ நிச்சயமாக அவருக்கு இவ்வுலகிலும் மண்ணறையிலும் நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. மறுமை நாளில் அவரை பார்வையையும் ஆதாரத்தையும் இழந்தவராக மஹ்ஷர் பெருவெளியை நோக்கி நாம் இழுத்துச் செல்வோம்.
(125) 20.125. உபதேசத்தை புறக்கணித்தவன் கேட்பான்: “என் இறைவா! இன்று என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? நான் உலகில் பார்வையுடையவனாகத்தானே இருந்தேன்!
(126) 20.126. அல்லாஹ் அவனுக்கு மறுப்புக் கூறுவான்: “நீ இவ்வாறே உலகில் செயற்பட்டாய். நம்முடைய சான்றுகள் உன்னிடத்தில் வந்தன. நீ அவற்றைப் புறக்கணித்து விட்டுவிட்டாய். எனவே நிச்சயமாக இன்றைய தினம் நீ வேதனையில் விட்டுவிடப்படுவாய்.
(127) 20.127. தம் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றுகளை நம்பாமல் புறக்கணித்து தடுக்கப்பட்டுள்ள இச்சைகளில் மூழ்கியிருப்போருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். அல்லாஹ் மறுமையில் வழங்கும் வேதனையோ இவ்வுலகிலும் மண்ணறையிலும் அவர்கள் அனுபவிக்கும் நெருக்கடி வாழ்வைவிட கடுமையானது, சக்தி வாய்ந்தது, நிலையானது.
(128) 20.128. நாம் இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னரே பல சமூகங்கள் அழிக்கப்பட்ட செய்தி இவர்களுக்கு தெரியாதா? அழிக்கப்பட்ட அந்த சமூகங்களின் வசிப்பிடங்களின் வழியேதான் இவர்கள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையின் அடையாளங்களைக் காண்கிறார்கள். நிச்சயமாக அந்த அதிகமான சமூகங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினைகள் இருக்கின்றன.
(129) 20.129. -தூதரே!- ஆதாரம் நிலைநாட்டப்படுவதற்கு முன்னரே உம் இறைவன் எவரையும் வேதனை செய்ய மாட்டான் என்ற உம் இறைவனின் வாக்கு முந்தியிராவிட்டால், அவன் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அவன் அவர்களை விரைவாகத் தண்டித்திருப்பான். ஏனெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களே.
(130) 20.130. -தூதரே!- உம்மைப் பற்றி நிராகரிப்பவர்கள் கூறும் பொய்யான வர்ணனைகளைத் தாங்கிக்கொண்டு பெறுமையைக் கடைபிடிப்பீராக. அல்லாஹ்விடமிருந்து உமக்குத் திருப்தியளிக்கும் கூலியைப் பெறுவதற்காக சூரியன் உதிப்பதற்கு முன்னால் அதிகாலைத் தொழுகையிலும் அது மறைவதற்கு முன்னால் உள்ள அஸர் தொழுகையிலும் இரவுநேரத்தில் தொழும் தொழுகைகளான மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளிலும் ஒரு நாளின் முதற் பகுதியான சூரியன் உச்சியிலிருந்து சாயும் லுஹர் தொழுகையிலும் அதன் இரண்டாம் பகுதியின் முடிவின் பின்னரான மஃரிப் தொழுகையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.
(131) 20.131. பொய்ப்பிப்பவர்களை சோதிப்பதற்காக நாம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உலகியல் வசதிகளின் வகைகளை ஏறெடுத்தும் பார்க்காதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்கு வழங்கியவை அனைத்தும் அழிந்து விடக்கூடியவையே. உம் இறைவன் உமக்கு வாக்களித்த நீர் பொருந்திக் கொள்ளும் நன்மையே அவன் அவர்களுக்கு உலகில் வழங்கியிருக்கும் அழியக்கூடிய வசதிகளைவிட சிறந்ததும் நிலையானதுமாகும். ஏனெனில் நிச்சயமாக அதுதான் என்றும் துண்டிக்கப்படாதது.
(132) 20.132. -தூதரே!- உம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றுமாறு ஏவுவீராக. அதனை நிறைவேற்றுவதில் பொறுமையாக நிலைத்திருப்பீராக. நாம் உமக்காகவோ மற்றவர்களுக்காகவோ உம்மிடம் வாழ்வாதாரம் கேட்கவில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளிக்க பொறுப்பேற்றுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்படக்கூடிய முடிவு கிடைக்கும்.
(133) 20.133. தூதரைப் பார்த்து இந்த நிராகரிப்பாளர்கள், பொய்பிப்பவர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மது நிச்சயமாக அவர் தூதர் என்று நிரூபிக்கக்கூடிய ஏதேனும் சான்றினை அவரின் இறைவனிடம் இருந்து நம்மிடம் கொண்டுவர வேண்டாமா?” இதற்கு முன்னர் இறங்கிய இறைவேதங்களை உண்மைப்படுத்தக்கூடிய குர்ஆன் இந்த பொய்பிக்கக்கூடியவர்களிடம் வரவில்லையா என்ன?
(134) 20.134. நிச்சயமாக நாம் தூதரை அனுப்புவதற்கும் வேதத்தை இறக்குவதற்கும் முன்னரே தூதரை பொய்பிக்கும் இவர்களை இவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் ஏதேனும் வேதனையை இறக்கி அழித்து விட்டால் மறுமை நாளில் இவர்கள் இறைவனிடம் தங்களின் நிராகரிப்பிற்குச் சாக்குப்போக்காக, “-எங்களின் இறைவன்- உலகில் எங்களிடம் ஒரு தூதரை அனுப்பியிருக்கக்கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால், உன் வேதனையால் கிடைக்கும் இந்த இழிவு ஏற்படமுன், அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவர் கொண்டுவந்த அத்தாட்சிகளைப் பின்பற்றியிருப்போமே!” என்று கூறுவார்கள்.
(135) 20.135. -தூதரே!- இந்த பொய்பிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “எங்களிலும் உங்களிலும் உள்ள ஒவ்வொருவரும் அல்லாஹ் என்ன நிகழ்த்தப் போகின்றான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கினர். எனவே நீங்கள் எதிர்பாருங்கள். நேரான வழியைப் பின்பற்றுபவர்கள், நேர்வழியை அடைந்தவர்கள் நீங்களா? அல்லது நாங்களா? என்பதை விரைவில் நீங்கள் -சந்தேகம் இல்லாது- அறிந்துகொள்வீர்கள்.