(1) 21.3. மறுமை நாளில் தமது செயல்களுக்காக விசாரணை நடைபெறுவது மக்களை நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ உலகில் ஈடுபாடுகொண்டதனால் மறுமையைப் புறக்கணித்தவர்களாக அலட்சியத்தில் உள்ளார்கள்.
(2) 21.2. தமது இறைவனிடமிருந்து புதிதாக எந்தவொரு குர்ஆன் வசனம் வந்தாலும் அதனை அவர்கள் பயனற்ற முறையிலேயே செவியேற்கிறார்கள். மாறாக அவர்கள் விளையாட்டாகவும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்தாதவர்களாகவுமே செவியேற்கிறார்கள்.
(3) 21.3. அவர்களின் உள்ளங்கள் அதனைவிட்டும் அலட்சியமாக இருக்கும் நிலையிலேயே செவியேற்கிறார்கள். நிராகரித்து அநியாயக்காரர்களான இவர்கள் தங்களிடையே இரகசியமாக, “தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர் நிச்சயமாக உங்களைப்போன்ற மனிதர்தானே. உங்களைவிட அவருக்கு எந்த சிறப்பும் இல்லையே. அவர் கொண்டுவந்தது சூனியமாகும். நிச்சயமாக அவர் உங்களைப்போன்ற மனிதர்தான், அவர் கொண்டுவந்தது சூனியம்தான் என்பதை அறிந்துகொண்டே அவரைப் பின்பற்றுகிறீர்களா?” என்று கூறிக்கொள்கிறார்கள்.
(4) 21.4. நபியவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இரகசியமாகக் கூறுவதை என் இறைவன் அறிவான். வானங்களிலும் பூமியிலும் பேசக்கூடியவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்தையும் அவன் அறிவான். அவன் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(5) 21.5. மாறாக முஹம்மது கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் தடுமாற்றத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் கூறினார்கள்: “இவை குழப்பமான கனவுகள். இவற்றிற்கு எந்த விளக்கமும் கூறமுடியாது, என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இல்லை, இதற்கு ஒரு அடிப்படையே இல்லாமல் இதனைப் புனைந்து கூறியுள்ளார், என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இவர் ஒரு கவிஞர், என்று. அவர் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் முந்தைய தூதர்கள் கொண்டு வந்ததைப்போல ஒரு அற்புதத்தைக் கொண்டு வரட்டும். முந்தைய தூதர்கள் அற்புதங்களைக் கொண்டுவந்தார்கள். உதாரணமாக மூஸாவின் கைத்தடி, ஸாலிஹின் பெண் ஒட்டகம்.
(6) 21.6. இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களுக்கு முன்னால் இவர்களைப்போன்று சான்றுகள் இறக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை கூறி, அவை வழங்கப்பட்ட எந்த ஊர்வாசிகளும் நம்பிக்கைகொள்ளவில்லை. மாறாக அவர்கள் அவற்றை பொய்பித்துவிட்டார்கள் அதனால் அவர்களை நாம் அழித்தோம். இவர்கள் மட்டும் நம்பிக்கைகொள்ளவா போகிறார்கள்?
(7) 21.7. -தூதரே!- நாம் உமக்கு முன்னர் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக அனுப்பி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். நாம் வானவர்களைத் தூதர்களாக அனுப்பவில்லை. நீங்கள் அதனை அறியாதவர்களாக இருந்தால் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
(8) 21.8. நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்ணாத சடலமாக ஆக்கவில்லை. மாறாக மற்றவர்களைப் போல அவர்களும் உணவு உண்டார்கள். அவர்கள் உலகில் மரணிக்காமல் நிலைத்திருப்பவர்களுமல்லர்.
(9) 21.9. பின்னர் நாம் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். அவர்களையும் நாம் நாடிய நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றி அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
(10) 21.10. நாம் உங்களுக்கு குர்ஆனை இறக்கியுள்ளோம். நீங்கள் அதனை உண்மைப்படுத்தி அதன்படி செயல்பட்டால் அதில் உங்களுக்கு கண்ணியமும் பெருமையும் உள்ளது. அதனை நீங்கள் புரியமாட்டீர்களா? எனவே அதனை நம்பிக்கைகொண்டு, அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதன் பால் விரையுங்கள்.
(11) 21.11. நிராகரித்து, அநீதியிழைத்ததனால் எவ்வளவோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களுக்குப் பின்னர் வேறொரு சமூகத்தை உருவாக்கினோம்.
(12) 21.12. அழிக்கப்படுவோர் அடியோடு அழிக்கும் நம்முடைய வேதனையைக் கண்டபோது அழிவிலிருந்து தப்ப, தமது ஊரைவிட்டு விரைந்து ஓடினார்கள்.
(13) 21.13. பரிகாசமாக அவர்கள் அழைக்கப்பட்டார்கள்: “ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த உல்லாச வாழ்வின் பக்கம், உங்கள் வசிப்பிடங்களின் பக்கம் திரும்புங்கள். உங்கள் உலகிலிருந்து நீங்கள் எதையேனும் கேட்கப்படலாம்.”
(14) 21.14. இந்த அநியாயக்காரர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொண்டவர்களாகக் கூறினார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அநியாயக்காரர்களாகத்தான் இருந்தோம்.”
(15) 21.15. அவர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொள்வதும் தங்களுக்கு எதிராக அழிவை வேண்டுவதுமே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் பிரார்த்தனையாக இருந்தது. நாம் அவர்களை அறுவடை செய்யப்பட்ட பயிரைப்போன்று, உயிரற்ற ஜடங்களாக ஆக்கிவிடும் வரை அவ்வாறே கூறிக்கொண்டிருந்தார்கள்.
(16) 21.16. வானத்தையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக நம்முடைய வல்லமையை அறிவிப்பதற்காகவே நாம் அவற்றைப் படைத்துள்ளோம்.
(17) 21.17. நாம் மனைவியையோ மகனையோ ஏற்படுத்த நாடியிருந்தால் நம்மிடம் இருப்பவற்றிலிருந்து எடுத்திருப்போம். அதனை விட்டும் நாம் தூய்மையானவர்கள் என்பதனால் நாம் அதனைச் செய்பவர்களல்ல.
(18) 21.18. மாறாக நாம் நம் தூதருக்கு அறிவிக்கும் சத்தியத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் அசத்தியத்தைத் தாக்குகின்றோம். அது அசத்தியத்தை அடித்து நொறுக்கி விடுகிறது. அசத்தியம் அழிந்துவிடுகிறது. -அல்லாஹ்வுக்கு மனைவியோ மகனோ உண்டு என்று கூறக்கூடியவர்களே!- அவனுக்குத் தகுதியில்லாததைக்கொண்டு நீங்கள் வர்ணிப்பதால் உங்களுக்கு அழிவுதான் உண்டாகும்.
(19) 21.19. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனிடம் உள்ள வானவர்கள் அவனை கர்வத்தினால் வணங்காமலிருக்கவும் மாட்டார்கள். வணங்கியதால் களைப்படைந்துவிடவும் மாட்டார்கள்.
(20) 21.20. எப்பொழுதும் அவனைப் புகழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் சோர்வடைவதில்லை.
(21) 21.21. மாறாக இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வாறு செய்ய இயலாத தெய்வங்களை எவ்வாறு அவர்கள் வணங்குகிறார்கள்?!
(22) 21.22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அல்லாத பல தெய்வங்கள் இருந்தால் அவைகளின் ஆட்சிக்கான போராட்டத்தினால் அவ்விரண்டும் சீர்கெட்டுப் போயிருக்கும். ஆனால் நடைமுறை அதற்கு மாற்றமாகவே உள்ளது. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என இணைவைப்பாளர்கள் பொய்யாக கூறும் வர்ணனைகளை விட்டும் அர்ஷின்அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன்.
(23) 21.23. ஆட்சியதிகாரத்திலும் விதியை நிர்ணயிப்பதிலும் அல்லாஹ் தனித்தவன். அவன் ஏற்படுத்திய விதியை, தீர்ப்பைக் குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அவன் தன் அடியார்களின் செயல்களைக்குறித்து கேள்வி கேட்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(24) 21.24. மாறாக அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். என்மீது இறக்கப்பட்ட இந்த வேதத்திலும் முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக பெரும்பான்மையான இணைவைப்பாளர்கள் அறியாமையையும், குருட்டுத்தனமாக பின்பற்றுவதையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் புறக்கணிக்கிறார்கள்.
(25) 21.25. -தூதரே!- உமக்கு முன்னால் அனுப்பிய தூதர்கள் அனைவருக்கும், “நிச்சயமாக என்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள்” என்றுதான் வஹி அறிவித்தோம்.
(26) 21.26. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் வானவர்களை மகள்களாக ஆக்கிக் கொண்டான், என்று.” அவர்கள் கூறும் பொய்களைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மாறாக வானவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான, கண்ணியமான அடியார்களாவர்.
(27) 21.27. அவர்கள் தங்கள் இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். அவன் கட்டளையிடும்வரை எதுவும் பேச மாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைப்படியே செயல்படுகிறார்கள். அவனது கட்டளைக்கு மாறுசெய்யமாட்டார்கள்.
(28) 21.28. அவன் அவர்களின் முந்தைய மற்றும் பிந்தைய செயல்கள் அனைத்தையும் அறிவான். யாருக்குப் பரிந்துரை கிடைக்க வேண்டுமென விரும்புகிறானோ அவனுக்கு அவனுடைய அனுமதியின்றி அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். அவர்கள் அவன் மீதுள்ள அச்சத்தால் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் அவனுடைய கட்டளைக்கும், விலக்கல்களுக்கும் மாறாகச் செயல்படுவதில்லை.
(29) 21.29. வானவர்களில் யாரேனும், “அல்லாஹ்வை விடுத்து நான்தான் இறைவனாவேன்” என்று கூறியதாக வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் அதற்குத் தண்டனையாக மறுமை நாளில் நிரந்தரமான நரக வேதனையை அளிப்போம். இவ்வாறே நாம் அல்லாஹ்வை நிராகரித்து இணைவைக்கும் அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.
(30) 21.30. நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. மழை இறங்குவதற்கு அவற்றிற்கிடையே எந்த இடைவெளியும் இருக்கவில்லை. எனவே நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் நாம் விலங்கு அல்லது தாவரம் ஆகிய ஒவ்வொரு பொருளையும் வானத்திலிருந்து இறங்கும் நீரால் படைத்துள்ளோம் என்பதையும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அறியவில்லையா? அவற்றைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கைகொள்ளமாட்டார்களா?
(31) 21.31. பூமி அதிலுள்ளவர்களினால் ஆட்டம் காணாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை உருவாக்கியுள்ளோம். அவர்கள் தமது பயணங்களில் தாங்கள் விரும்பும் இடங்களுக்கான வழிகாட்டலைப் பெறும் பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.
(32) 21.32. தூண்களின்றி விழுந்துவிடுவதிலிருந்தும், திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட கூரையாக நாம் வானத்தை அமைத்துள்ளோம். இணைவைப்பாளர்கள் வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் போன்ற சான்றுகளைப் புறக்கணித்து படிப்பினை பெறாமல் இருக்கிறார்கள்.
(33) 21.33. அல்லாஹ்தான் இரவை ஓய்வெடுப்பதற்காகவும் பகலை சம்பாதிப்பதற்காகவும் அமைத்துள்ளான். அவன் சூரியனை பகலுக்கு ஆதாரமாகவும் சந்திரனை இரவுக்கு ஆதாரமாகவும் அமைத்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, சாய்ந்துவிடுவதுமில்லை.
(34) 21.34. -தூதரே!- உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் இந்த வாழ்க்கையில் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வாழ்க்கையில் உமக்கு வழங்கப்பட்ட தவணை நிறைவடைந்து நீர் மரணித்துவிட்டால் அவர்கள் மட்டும் உமக்குப் பிறகு நிரந்தரமாக நிலைத்திருப்பார்களா என்ன? ஒருபோதும் இல்லை.
(35) 21.35. நம்பிக்கைகொண்ட ஆன்மா, நிராகரித்த ஆன்மா என ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் மரணித்தை சுவைத்தே தீர வேண்டும். -மனிதர்களே!- இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு கடமைகளையும் அருட்கொடைகளையும் வேதனைகளையும் அளித்து சோதிக்கின்றோம். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு நம்மிடமே திரும்பிவர வேண்டும். ஏனையவர்களிடம் அல்ல. நாம் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவோம்.
(36) 21.36. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் உம்மைப் பார்த்தால் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இவர்தான் நீங்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டக்கூடியவரா?” என்று கூறி தங்களைப் பின்பற்றுபவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் உம்மைப் பரிகாசம் செய்வதுடன் அவர்களுக்காக இறக்கப்பட்ட குர்ஆனையும் மறுத்து, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளையும் மறுக்கிறார்கள். எனவே அனைத்துத் தீமைகளும் ஒன்றுசேர இருப்பதால் அவர்களே குறை கூறப்பட மிகத் தகுதியானவர்கள்.
(37) 21.37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவன் விஷயம் நிகழ்வதற்கு முன்னரே அதை விரைவாக வேண்டுகிறான். அதனால்தான் இணைவைப்பாளர்கள் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். -என் வேதனைக்காக அவசரப்படக்கூடியவர்களே!- நான் உங்களுக்கு நீங்கள் அவசரப்படும் வேதனையைக் காட்டுவேன். எனவே அதனை அவசரமாக வேண்டாதீர்கள்.
(38) 21.38. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் அவசரப்பட்டு கேட்கிறார்கள்: -“முஸ்லிம்களே!- இறந்தபின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழும் என்று எங்களுக்கு வாக்களித்த உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது எப்போது நிகழும்? என்பதைக் கூறுங்கள்.”
(39) 21.39. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் அப்போது தங்கள் முகங்களையும் முதுகுகளையும் விட்டு நரக நெருப்பைத் தடுக்க முடியாது என்பதையும் அந்நாளில் அவர்களுக்கு வேதனையை தடுத்து யாரும் உதவிசெய்ய முடியாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமே!. இதை அவர்கள் உறுதியாக அறிந்தால் வேதனையை விரைவாக வேண்ட மாட்டார்கள்.
(40) 21.40. நெருப்பைக்கொண்டு செய்யப்படும் இந்த வேதனை அவர்கள் அறிந்த நிலையில் அவர்களிடம் வராது. மாறாக திடீரென அவர்களிடம் வரும். அவர்கள் அதனைத் தடுக்க சக்திபெறமாட்டார்கள். பாவமன்னிப்புக் கோரி அருளைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
(41) 21.41. -தூதரே!- உம் சமூகம் உம்மை பரிகாசம் செய்தால் நீர் ஒன்றும் அதற்குப் புதுமையானவர் அல்ல. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்களை வேதனை சூழ்ந்துகொண்டது. அதனைக் கொண்டு அவர்களது தூதர்கள் அவர்களை அச்சுறுத்திய போது அதனை அவர்கள் இவ்வுலகில் பரிகாசம் செய்துகொண்டிருந்தனர்.
(42) 21.42. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “அளவிலாக் கருணையாளன் உங்கள் மீது வேதனையை இறக்கி உங்களை அழிக்க நாடினால் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? மாறாக அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரைகளை நினைவுபடுத்துவதையும் அவனின் ஆதாரங்களையும் புறக்கணிக்கிறார்கள். அறியாமையினால் அவர்கள் அவற்றைக்குறித்து எதையும் சிந்திப்பதில்லை.
(43) 21.43. அல்லது நம்முடைய வேதனையிலிருந்து அவர்களை தடுக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவை தங்களுக்குக்கூட நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற மாட்டா. தமக்குக்கூட உதவிசெய்ய முடியாதவை எவ்வாறு மற்றவர்களுக்கு உதவிசெய்யும்? அவர்கள் நம்முடைய வேதனையை விட்டும் பாதுகாக்கப்படவும் மாட்டார்கள்.
(44) 21.44. மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.
(45) 21.45. -தூதரே!- நீர் கூறுவீராக: “-மக்களே!- என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து நான் உங்களை எச்சரிக்கிறேன். ஆயினும் சத்தியத்தை செவியேற்காத செவிடர்களுக்கு, அல்லாஹ்வின் வேதனையைக்கொண்டு எச்சரிக்கப்பட்டால், அவர்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க மாட்டார்கள்.
(46) 21.46. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களை உம் இறைவனுடைய வேதனையின் ஒரு பகுதி தீண்டிவிட்டால், “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி, முஹம்மது நபி கொண்டுவந்ததை பொய்ப்பித்து அக்கிரமக்காரர்களாக இருந்தோமே” என்று அந்த நேரத்தில் கூறுவார்கள்.
(47) 21.47. நாம் மறுமையில் மனிதர்களின் செயல்களை எடைபோடுவதற்காக நியாயமான தராசுகளை நிறுவுவோம். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ எவர் மீதும் அநீதி இழைக்கப்படாது. ஒருவரின் எடை மிகவும் குறைவானதாக கடுகளவு செயல் போன்று இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். எங்களது அடியார்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நாமே போதுமானவர்களாவோம்.
(48) 21.48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் அதனை நம்பிக்கைகொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும் தங்கள் இறைவனை அஞ்சியவர்களுக்கு நினைவூட்டலாகவும் இருந்தது.
(49) 21.49. காணாமலேயே தாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவனின் வேதனையை அஞ்சியவர்கள் மறுமையைக்குறித்து அச்சத்தோடு உள்ளனர்.
(50) 21.50. முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அறிவுரை பெற விரும்பக்கூடியவர்களுக்கு உபதேசமாகவம் அறிவுரையாகவும் அதிக பலன்களையும் நன்மைகளையும் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இருந்தும் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அதன்படி செயல்படாமல் மறுக்கிறீர்களா?
(51) 21.51. நாம் இப்ராஹீமுக்கு சிறு வயதிலேயே அவருடைய சமூகத்திற்கு எதிராக ஆதாரத்தை வழங்கினோம். நாம் அவரைக்குறித்து நன்கறிந்தவர்களாக இருந்தோம். எனவேதான் நமது அறிவின் பிரகாரம் அவரது சமூகத்துக்கு எதிராக அவருக்குத் தகுதியான சான்றை வழங்கினோம்.
(52) 21.52. இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “உங்கள் கைகளால் செய்துகொண்டு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள்தான் என்ன?”
(53) 21.53. அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களை இவற்றை வணங்குபவர்களாகவே கண்டோம். அவர்களைப் பின்பற்றி நாங்களும் இவற்றை வணங்குகிறோம்.”
(54) 21.54. இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறினார்: -“பின்பற்றுபவர்களான- நீங்களும் பின்பற்றப்படும் உங்கள் முன்னோர்களும் தெளிவான சத்தியத்தை விட்டுவிட்டு தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”
(55) 21.55. அவருடைய சமூகத்தார் கேட்டார்கள்: “நீர் எங்களிடம் கூறும் போது உண்மையாகத்தான் கூறுகிறீரா? அல்லது நீர் நகைச் சுவையாகக் கூறுகிறீரா?”
(56) 21.56. இப்ராஹீம் கூறினார்: “நான் கூறுவது வேடிக்கையல்ல உண்மையே. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன். வானங்களையும் பூமியையும் படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன் என்று நிச்சயமாக நான் சாட்சி கூறுகின்றேன். உங்களின் சிலைகளுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.
(57) 21.57. அவருடைய சமூகத்தினருக்குக் கேட்டுவிடாமல் இப்ராஹீம் கூறினார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் உங்களின் சிலைகளை விட்டு விட்டு உங்கள் பண்டிகைக்குச் சென்ற பிறகு நீங்கள் விரும்பாததை (உங்களின் சிலைகளுக்கு நான் திட்டம் தீட்டுவேன்).”
(58) 21.58. இப்ராஹீம் அவர்களது சிலைகளை சிறிய துண்டுகளாக ஆகுமளவு உடைத்துவிட்டார், பெரிய சிலையை மாத்திரம் விட்டுவிட்டார். அவர்கள் அதனிடம் திரும்பி வந்து அவற்றை உடைத்தவனைக் குறித்து கேட்க வேண்டும் என்பதற்காக.
(59) 21.59. அவர்கள் திரும்பி வந்து, தங்களின் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களில் சிலர் சிலரிடம் கேட்டார்கள்: “நம்முடைய தெய்வங்களை உடைத்தது யார்? நிச்சயமாக நம்முடைய சிலைகளை உடைத்தவன் அநியாயக்காரனாகத்தான் இருப்பான். அவன் கண்ணியம், புனிதம் என்பவற்றுக்குத் தகுதியானதை இழிவுபடுத்திவிட்டான்.
(60) 21.60. அவர்களில் சிலர் கூறினார்கள்: “ஒரு இளைஞரைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம், அவர் இந்த சிலைகளைக் குறைகூறிக் கொண்டிருந்தார். அவருக்கு இப்ராஹீம் என்று சொல்லப்படும். அவர்தான் இந்த சிலைகளை உடைத்திருக்கலாம்.”
(61) 21.61. அவர்களின் தலைவர்கள் கூறினார்கள்: “தான் செய்ததை இப்ராஹீம் ஒத்துக்கொள்வதை அனைவரும் பார்ப்பதற்காக அவரை மக்கள் முன்னிலையில் அழைத்து வாருங்கள். அவ்வாறு அவரே ஏற்றுக்கொள்வது அவருக்கெதிரான, உங்களுக்குச் சார்பான ஆதாரமாகிவிடலாம்.”
(62) 21.62. அவர்கள் இப்ராஹீமை அழைத்து வந்து, அவரிடம் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீயா எங்களுடைய சிலைகளுக்கு இந்த மோசமான செயலைச் செய்தாய்?”
(63) 21.63. இப்ராஹீம் அந்த சிலைகளின் இயலாமையை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களைப் பரிகாசம் செய்தவராகக் கூறினார்: “நான் இவ்வாறு செய்யவில்லை. மாறாக அவற்றில் பெரிய சிலைதான் இவ்வாறு செய்தது. உங்கள் சிலைகள் பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப் பாருங்கள்.”
(64) 21.64. அவர்கள் தமக்குள் திரும்பி சிந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்றவை, அல்லாஹ்வை விடுத்து அந்த சிலைகளை வணங்கிய அவர்கள் அநியாயக்காரர்களே என்பதை அறிந்துகொண்டார்கள்.
(65) 21.65. பின்னர் மீண்டும் மறுப்பு, பிடிவாதமாகக் கூறினார்கள்: “-இப்ராஹீமே!- நிச்சயமாக இந்த சிலைகள் பேசாது என்பதை நீ உறுதியாக அறிவாய். பிறகு எப்படி அவற்றிடம் கேட்கும்படி எங்களை ஏவுகிறாய்.” அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக மாற்ற நாடினார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகிவிட்டது.
(66) 21.66. இப்ராஹீம் அவர்களைக் கண்டித்துக் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து உங்களுக்குப் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளையா வணங்குகிறீர்கள். அவை தம்மை விட்டும் தீங்கைத் தடுக்கவோ, தமக்குப் பயனளிக்கவோ சக்தியற்றவை.
(67) 21.67. உங்களுக்கும் அல்லாஹ்வை விடுத்து பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற நீங்கள் வணங்கும் இந்த சிலைகளுக்கும் கேடுதான் உண்டாகும். இதை நீங்கள் விளங்கிக்கொண்டு, அவற்றை வணங்குவதை விட்டுவிட மாட்டீர்களா?
(68) 21.68. ஆதாரத்தைக்கொண்டு அவரை எதிர்கொள்ள முடியாததால் அதிகாரத்தின்பால் அவர்கள் அடைக்கலம் தேடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அவருக்கு கடுமையாக தண்டனை வழங்குவோராக இருந்தால் அவர் உடைத்த உங்கள் சிலைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு இப்ராஹீமை நெருப்பால் எரித்துவிடுங்கள்.”
(69) 21.69. நெருப்பை மூட்டி அதில் அவரைப் போட்டார்கள். நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” அது அவ்வாறே ஆகியது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.”
(70) 21.70. அவரை நெருப்பில் போட்டு பொசுக்கிவிட இப்ராஹீமின் சமூகம் சூழ்ச்சி செய்தார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அவர்களை அடக்கி, அழித்துவிட்டோம்.
(71) 21.71. நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றினோம். நாம் தூதர்களை அனுப்பி, படைப்பினங்களுக்கு பல நலவுகளை வழங்கி, அருள்செய்த ஷாம் தேசத்தின்பால் அவர்கள் இருவரையும் கொண்டு சேர்த்தோம்.
(72) 21.72. இப்ராஹீம் தம் இறைவனிடம் தனக்கு ஒரு மகனை அளிக்கும்படி பிரார்த்தனை செய்தபோது நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இப்ராஹீம், அவரது இரு மகன்கள் இஸ்ஹாக், யஃகூபு என ஒவ்வொருவரையும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த நல்லவர்களாக ஆக்கினோம்.
(73) 21.73. நாம் அவர்களை தலைவர்களாக ஆக்கினோம். மக்கள் அவர்கள் மூலம் நலவில் வழிகாட்டலைப் பெறுகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறு அவனுடைய அனுமதியுடன் மக்களை அழைக்கின்றனர். நாம் அவர்களுக்கு, “நற்செயல்களைச் செய்யுங்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை வழங்குங்கள் என்று வஹி அறிவித்தோம். அவர்கள் நமக்கு அடிபணிந்தவர்களாக இருந்தார்கள்.
(74) 21.74. நாம் லூத்திற்கு பிரச்சினைகளுக்குரியவர்களிடையே தீர்ப்பு வழங்கும் திறமையையும் மார்க்க அறிவையும் வழங்கினோம். மானக்கேடான காரியத்தை செய்துவந்த சதூம் என்ற அந்த ஊர்மக்களின் மீது இறங்கிய வேதனையிலிருந்து நாம் அவரைப் பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியாமல் குழப்பம் செய்யும் மக்களாக இருந்தார்கள்.
(75) 21.75. அவருடைய சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவரைக் காப்பாற்றி நம் அருளில் அவரைப் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர் நம் கட்டளையைச் செயல்படுத்தும், நாம் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும் நல்லவர்களில் ஒருவராக இருந்தார்.
(76) 21.76. -தூதரே!- நூஹின் சம்பவத்தை நினைவு கூர்வீராக. இப்ராஹீமுக்கும் லூத்திற்கும் முன்னர் அவர் அல்லாஹ்வை அழைத்தார். நாம் அவர் வேண்டியதை அளித்து அவருக்குப் பதிலளித்தோம். அவரையும் நம்பிக்கைகொண்ட அவருடைய குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
(77) 21.77. நாம் அவரை வலுப்படுத்தும் விதமாக வழங்கிய அவருடைய நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளை நிராகரித்த அவரது சமூகத்தின் சூழ்ச்சியிலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவர்கள் குழப்பம் விளைக்கும் தீய மக்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
(78) 21.78. -தூதரே!- தாவூதையும் அவருடைய மகன் சுலைமானையும் நினைவு கூர்வீராக. அவர்கள் தங்களிடம் வந்த இரு வழக்காளிகளின் விஷயத்தில் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்காளிகளில் ஒருவருடைய ஆடுகள் இரவில் மற்றவரின்பயிரில் புகுந்து அதனை நாசமாக்கிவிட்டன. தாவூதும் சுலைமானும் தீர்ப்பளிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களின் தீர்ப்பில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை.
(79) 21.79. நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம்.
(80) 21.80. உங்கள் உடலை ஆயுதம் பதம்பார்க்காமல் இருக்க நாம் சுலைமானை விடுத்து தாவூதுக்கு போர்க்கவசங்கள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தோம். -மனிதர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைக்கு நீங்கள் நன்றிசெலுத்துவீர்களா?
(81) 21.81. நாம் சுலைமானுக்கு வேகமாக வீசக்கூடிய காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது கட்டளைப்படி நாம் அருள்செய்திருந்த ஷாம் தேசத்திற்குச் செல்லும். அங்கு நபிமார்களை அனுப்பி பல நலவுகளை ஏற்படுத்தி அதில் அபிவிருத்தி செய்திருந்தோம். நாம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.
(82) 21.82. கடலில் மூழ்கி முத்து போன்றனவற்றை கண்டெடுக்கும், கட்டட நிர்மாணம் போன்ற ஏனைய வேலைகளில் ஈடுபடும் ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். நாம் அவர்களின் எண்ணிக்கையையும், செயல்பாடுகளையும் கண்காணிப்போராக இருந்தோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு தப்பிவிடாது.
(83) 21.83. -தூதரே!- அய்யூபின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. துன்பம் அவரைத் தாக்கியபோது அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நான் நோயால் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தையும் இழந்து விட்டேன். நீ அனைவருக்கும் மிகச் சிறந்த கருணையாளனாக இருக்கின்றாய். எனவே எனக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக.”
(84) 21.84. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவர் இழந்த அவருடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் அவருக்கு வழங்கினோம். அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இவையனைத்தையும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும், அய்யூபைப் போன்று பொறுமையாக இருப்பதற்காக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வணங்கும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டலாகவும் நாம் செய்தோம்.
(85) 21.85. -தூதரே!- இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்களில் ஒவ்வொருவரும் துன்பங்களிலும் அல்லாஹ் அவர்கள் மீது சுமத்திய கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள்.
(86) 21.86. நாம் அவர்களை நம் அருளில் பிரவேசிக்கச் செய்து நபிமார்களாக ஆக்கினோம். அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு வழிப்பட்டு நற்செயல் புரிந்த, அந்தரங்கத்திலும், வெளிப்படையிலும் தங்களை சீர்படுத்திக் கொண்ட அல்லாஹ்வின் நல்லடியார்களாக இருந்தார்கள்.
(87) 21.87. -தூதரே!- மீனுடையவரான யூனுஸையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் அனுமதி பெறாமல் தம் சமூகம் பாவத்தில் பிடிவாதமாக இருந்ததனால் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டதற்காக நாம் அவரைத் தண்டித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தமாட்டோம் என்று நிச்சயமாக அவர் எண்ணிக் கொண்டார். மீன் அவரை விழுங்கிய போது கடும் நெருக்கடியாலும், சிறையாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் தம் பாவத்தை ஒத்துக்கொண்டவராக, மன்னிப்புக்கோரி, மீனின் வயிறு, கடல், இரவு ஆகிய இருள்களில் இருந்தவாறு பிரார்த்தனை செய்தார். அவர் கூறினார்: “உன்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.”
(88) 21.88. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து இருள்களிலிருந்தும், மீன் வயிற்றிலிருந்தும் அவரை வெளியேற்றி கடும் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். நாம் யூனுஸை துன்பத்திலிருந்து காப்பாற்றியது போன்றே துன்பத்தில் அகப்பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுகின்றோம்.
(89) 21.89. -தூதரே!- ஸகரிய்யாவையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “இறைவா எனக்கு வாரிசின்றி என்னைத் தனியாக விட்டுவிடாதே. நீயே நிலைத்திருப்பவர்களில் மிகச் சிறந்தவன். எனவே எனக்குப் பிறகு நிலைத்து இருக்கக்கூடிய ஒரு பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.”
(90) 21.90. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவருக்கு யஹ்யா என்னும் மகனை வழங்கினோம். அவருடைய மனைவியையும் சரிப்படுத்தினோம். குழந்தைப்பேறு அற்ற அவருடைய மனைவி அதிகம் குழந்தைகள் பெறக்கூடியவளாக ஆகிவிட்டாள். நிச்சயமாக ஸகரிய்யா, அவருடைய மனைவி, மகன் அனைவரும் நற்செயல்களின்பால் விரையக்கூடியவர்களாக, நம்மிடம் கூலியை எதிர்பார்த்தும், நம்மிடம் உள்ள தண்டனையை அஞ்சியும் நம்மை அழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நமக்குப் பணிந்து நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
(91) 21.91. -தூதரே!- விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பி அவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத் தந்தையின்றிப் படைத்ததனால் அவளும் அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின் வல்லமைக்கும் அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்கு சான்றாக இருந்தார்கள்.
(92) 21.92. -மனிதர்களே!- உங்களின் இந்த மார்க்கம் ஒரே மார்க்கம்தான். ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் என்னும் மார்க்கமே அது. நானே உங்களின் இறைவன். எனவே வணக்க வழிபாட்டை எனக்கு மட்டுமே நிறைவேற்றுங்கள்.
(93) 21.93. மக்கள் பலவாறாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் சிலர் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் சிலர் அவனை நிராகரிப்பவர்களாகவும் சிலர் நம்பிக்கையாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.
(94) 21.94. அவர்களில் யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல் ஒருபோதும் நிராகரிக்கப்படாது. மாறாக அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்தி அவனுடைய நன்மைகளை பன்மடங்காக்கிக் கொடுப்பான். மறுமை நாளில் தம் செயல்பதிவேட்டை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைவார்.
(95) 21.95. நிராகரிப்பின் காரணமாக நாம் அழித்த ஊர்மக்கள் பாவமன்னிப்புக் கோரி அது ஏற்றுக்கொள்ளப்பட இவ்வுலகிற்குத் திரும்பிவருவது சாத்தியமற்றதாகும்.
(96) 21.96. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு திறக்கப்படும்வரை ஒருபோதும் திரும்பிவர மாட்டார்கள். அப்போது அவர்கள் பூமியின் உயரமான ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விரைவாக வெளிப்படுவார்கள்.
(97) 21.97. அவர்கள் வெளிப்படுவதன்மூலம் மறுமை நாள் நெருங்கிவிடும். அதன் பயங்கரங்களும் துன்பங்களும் வெளிப்பட்டுவிடும். அதன் பயங்கரத்தால் நிராகரிப்பாளர்களின் பார்வைகள் அப்படியே திறந்த நிலையில் இருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! நாங்கள் மாபெரும் இந்த நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாமல் உலகில் வீணாக, அலட்சியமாக இருந்தோமே! அது மாத்தரமின்றி நாங்கள் நிராகரித்தும் பாவங்களில் ஈடுபட்டும் அநியாயக்காரர்களாகவல்வா இருந்தோம்!”
(98) 21.98. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கிய சிலைகளும் தம்மை வணங்கியதை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் மற்றும் ஜின்களும் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பீர்கள். நீங்களும் உங்களின் தெய்வங்களும் அந்த நரகத்தில் நுழைவீர்கள்.
(99) 21.99. வணங்கப்படுகின்ற இவை உண்மையான தெய்வங்களாக இருந்திருந்தால் தம்மை வணங்கியவர்களுடன் நரகத்தில் நுழைந்திருக்காது. வணங்கியவர்கள், வணங்கப்பட்டவை என அனைவரும் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
(100) 21.100. அங்கு அவர்கள் -அனுபவிக்கும் துன்பங்களால்- பெரும் மூச்சு உண்டு. அவர்களுக்கு நிகழ்ந்திருக்கும் பயங்கரத்தின் கடுமையினால் எந்த சப்தத்தையும் நரகில் செவியுற மாட்டார்கள்.
(101) 21.101. (நிச்சயமாக வணங்கப்பட்ட வானவர்களும் ஈஸாவும் நரகத்தில் நுழைவார்கள் என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக ஈஸாவைப்போன்று அல்லாஹ் யாரை நற்பேறு பெற்றவர்கள் என்று முன்னரே அவனுடைய அறிவில் முடிவு செய்யப்பட்டவர்கள் நரகத்திலிருந்து தூரமாக்கப்படுவார்கள்.”
(102) 21.102. அவர்கள் நரகத்தின் சத்தத்தை செவியுற மாட்டார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களின் இன்பம் ஒரு போதும் முடிவடையாது.
(103) 21.103. நரகவாசிகளை நெருப்பு மூடிக்கொள்ளும் போதுள்ள பெரும் பயங்கரம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. “இதுதான் நீங்கள் உலகில் வாக்களிக்கப்பட்ட நாள். நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வானவர்கள் அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்பார்கள்.
(104) 21.104. நாம் பதிவேடுகளை சுருட்டுவதுபோன்று வானத்தை அதிலுள்ளவற்றுடன் சுருட்டும் நாளில் படைப்புகள் அனைத்தையும் அவை ஆரம்பத்தில் படைக்கப்பட்டவாறே ஒன்றுதிரட்டுவோம். இது நாம் அளித்த வாக்குறுதியாகும். நாம் ஒருபோதும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நிச்சயமாக நாம் அளித்த வாக்குறுதிய நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கின்றோம்.
(105) 21.105. நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே எழுதிய பிறகு தூதர்களுக்கு இறக்கிய வேதங்களிலும் பின்வருமாறு எழுதினோம்: “நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அவனுடைய நல்லடியார்கள்தாம் பூமிக்கு சொந்தக்காரர்களாவர். அவர்கள்தாம் முஹம்மதின் சமூகத்தார்கள்.”
(106) 21.106. நிச்சயமாக நாம் இறக்கிய அறிவுரையில் தங்கள் இறைவனை அவன் விதித்ததன் படி வணங்கக்கூடிய மக்களுக்கு நலவும், போதுமானளவு வழிகாட்டலும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதனைக்கொண்டு பயனடையக்கூடியவர்களாவர்.
(107) 21.107. -முஹம்மதே!- படைப்புகள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அةதனால்தான் நீர் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்கும் அவர்களை இறைவேதனையிலிருந்து காப்பதற்கும் பேராசை கொண்டவராக காணப்படுகின்றீர்.
(108) 21.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் எனக்குப் பின்வருமாறுதான் வஹி அறிவித்துள்ளான்: “நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். எனவே அவனை நம்பிக்கைகொள்வதற்கும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவதற்கும் கட்டுப்படுங்கள்.”
(109) 21.109. -தூதரே!- நீர் கொண்டுவந்ததை அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் நீர் கூறிவிடுவீராக: “நிச்சயமாக எனக்கும் உங்களுக்கும் இடைப்பட்ட சமனான விஷயத்தை நான் தெளிவாக எனக்கும் உங்களுக்கும் அறிவித்துவிட்டேன். அல்லாஹ் எச்சரித்த வேதனை உங்கள் மீது எப்போது இறங்கும்? என்பதை நான் அறியமாட்டேன்.
(110) 21.110. நிச்சயமாக நீங்கள் வெளிப்படையாகக் கூறுவதையும் இரகசியமாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிவான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(111) 21.111. உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவது உங்களுக்குச் சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் நீங்கள் உங்களின் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் பிடிவாதமாக இருப்பதற்காக அவனுடைய அறிவின்படி குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அனுபவிப்பதற்காகவும் இருக்கலாம் என்பதை நான் அறிய மாட்டேன்.
(112) 21.112. அல்லாஹ்வின் தூதுர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! எங்களுக்கும் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் எங்கள் சமூகத்திற்குமிடையே உண்மையான முறையில் தீர்ப்பு வழங்குவாயாக. நீங்கள் கூறும் பொய்யான, நிராகரிப்பான வார்த்தைகளுக்காக அருளாளனான எங்கள் இறைவனிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.