(1) 22.1,2. மனிதர்களே! உங்கள் இறைவன் ஏவிய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நெருங்கும்போது ஏற்படும் பூமியதிர்ச்சி மற்றும் ஏனைய பயங்கரங்கள் ஒரு மகத்தான நிகழ்வாகும். அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அந்த நாளுக்காக உங்களை தயாராக்குவது அவசியமாகும்.
(2) 22.2. அந்நாளை நீங்கள் காணும்போது பாலூட்டக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவாள். கர்ப்பமான ஒவ்வொரு பெண்ணும் அந்த நாளில் ஏற்படும் பயத்தால் தன் வயிற்றிலுள்ளதை ஈன்றுவிடுவாள். அந்த நாளின் பயங்கரத்தால் மக்கள் புத்தியிழந்து மயங்கியவர்களைப்போல் தோன்றுவார்கள். அவர்கள் மதுவின் போதையால் மயங்கியவர்களாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. அதுதான் அவர்களின் அறிவைப் போக்கிவிட்டது.
(3) 22.3. மறுமை நாளில் மரணித்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்படுவதைக்குறித்து எவ்வித அறிவுமின்றி அல்லாஹ்வின் வல்லமையில் வாதம் புரிபவர்களும் மனிதர்களில் உண்டு. தனது இறைவனை மீறிய ஷைத்தான்களையும் வழிகேடான தலைவர்களையுமே அவன் தனது நம்பிக்கையிலும் வார்த்தையிலும் பின்பற்றுகிறான்.
(4) 22.4. வரம்புமீறிய இந்த மனித மற்றும் ஜின் இனத்திலுள்ள ஷைத்தானை யார் பின்பற்றி அவனை உண்மைப்படுத்துவார்களோ அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டுத் திருப்பி நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்கு வழிகாட்டி, நரக நெருப்பின் பக்கம் இழுத்துச் சென்றுவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது.
(5) 22.5. மனிதர்களே! மரணித்த பிறகு மீண்டும் உங்களை நாம் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்ற எங்கள் வல்லமையில் நீங்கள் சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் படைக்கப்பட்ட விதத்தைக் கவனித்துப் பாருங்கள். உங்களின் தந்தை ஆதமை நாம் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் அவருடைய சந்ததியினரை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஆண் செலுத்தும் விந்திலிருந்து படைத்தோம். பின்னர் விந்து இரத்தக்கட்டியாக மாற்றமடைகிறது. பின்னர் இரத்தக்கட்டி சதைப்பிண்டமாக மாற்றமடைகிறது. பின்னர் சதைப்பிண்டம் முழுமையான படைப்பாக மாறி கருவறையில் தங்கியிருந்து உயிருள்ள குழந்தையாக வெளிப்படுகிறது. அல்லது முழுமையடையாத படைப்பாக கற்பப்பையிலிருந்து வெளிப்பட்டுவிடுகிறது. உங்களைப் படிப்படியாக படைக்கும் நம்முடைய வல்லமையை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இவற்றை எடுத்துரைக்கின்றோம். நாம் நாடிய சிசுக்களை குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் வரை ஒன்பது மாதங்கள் கருவறையில் தங்கச் செய்கின்றோம். பின்னர் உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து உங்களைக் குழந்தைகளாக வெளிப்படுத்துகின்றோம். பின்னர் நீங்கள் முழுமையான உடல் பலத்தையும் அறிவாற்றலையும் அடைகிறீர்கள். உங்களில் சிலர் இதற்கு முன்னரே மரணிப்போரும் இருக்கிறார்கள். சிலர் உடலும் அறிவும் பலவீனமடையும் முதுமை வரை வாழ்கிறார்கள். எந்த அளவுக்கெனில் குழந்தையைவிட மோசமானவர்களாக, தான் அறிந்தவற்றை அறியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். நீர் பூமியை தாவரங்களற்ற வறண்ட பூமியாக காண்கிறீர். நாம் அதன்மீது மழை பொழியச் செய்தவுடன் வித்துக்கள் வெடித்து செடிகொடிகள் செழித்து வளர்கின்றன. பார்ப்பதற்கு அழகான பலவகையான தாவரங்களை அது முளைக்கச் செய்கிறது.
(6) 22.6. -உங்களைப் படைத்தல், அதன் கட்டங்கள், உங்களில் பிறப்பவர்களின் நிலமைகள் ஆகிய- நாம் உங்களுக்குக் குறிப்பிட்டவை, உங்களைப் படைத்த அல்லாஹ்வே சந்தேகமற்ற உண்மையாளன், நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளல்ல என்பதை நம்பிக்கைகொள்வதற்கும், அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியன், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன், எதுவும் அவனுக்கு இயலாததல்ல என்பதை நம்பிக்கை கொள்வதற்குமேயாகும்.
(7) 22.7. மறுமை நாள் நிச்சயமாக வந்தே தீரும், அது வந்துவிடுவதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவன் மரணித்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக நிச்சயமாக அவர்களை அவர்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுப்பியே தீருவான் என்பதையும் நீங்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
(8) 2.8. நிராகரிப்பாளர்களில் சிலர், அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் புரிகின்றனர். ஆனால் அவர்களிடம் சத்தியத்தை அடைந்துகொள்ளும் அறிவும் இல்லை. அதனை அவர்களுக்கு அறிவிக்கும் ஒரு வழிகாட்டியையும் அவர்கள் பின்பற்றவுமில்லை. அதற்கு வழிகாட்டும், அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட ஒளிவீசும் வேதமும் அவர்களிடமில்லை.
(9) 22.9. அவன் மக்களை நம்பிக்கைகொள்வதை விட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை விட்டும் தடுப்பதற்காக கர்வத்தினால் தன் கழுத்தை திருப்பிக்கொள்கிறான். இத்தகைய பண்புகளை உடையவனுக்கு இவ்வுலகில் அடையப்போகும் வேதனையால் இழிவுதான் உண்டு. மறுமையில் சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
(10) 22.10. அவனிடம் கூறப்படும்: “நீ அனுபவிக்கும் இந்த வேதனை உன்னுடைய நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் நீ சம்பாதித்ததாகும். எந்தப் பாவமுமின்றி அல்லாஹ் தன் படைப்புகளில் யாரையும் வேதனை செய்யமாட்டான்.”
(11) 22.11. மக்களில் சிலர் தடுமாற்றமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தேகத்துடனே அல்லாஹ்வை வணங்குகிறார்கள். ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் நன்மை அவர்களுக்கு ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையிலும் அவனை வணங்குவதிலும் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் வறுமை, நோய் போன்ற சோதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டால் தங்களின் மார்க்கத்தை துர்ச்சகுனமாகக் கருதி, மதம்மாறி விடுகிறார்கள். அவர்கள் இவ்வுலகையும் இழந்துவிட்டார்கள். ஏனெனில் அவனது நிராகரிப்பு அவனுக்கு உலகில் எழுதப்படாத எவ்வித பாக்கியத்தையும் அதிகரிக்காது. அல்லாஹ்வின் வேதனையைப் பெறுவதன் மூலம் மறுவுலகையும் இழந்துவிட்டார்கள். இதுதான் தெளிவான இழப்பாகும்.
(12) 22.12. அவர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவைகளுக்கு மாறுசெய்தால் அவைகளால் அவனுக்கு பாதிப்பையோ அவற்றுக்கு அவன் கட்டுப்பட்டால் அவனுக்குப் பலனையோ அவற்றால் ஏற்படுத்தமுடியாது. எவ்வித பலனையும் தீங்கையும் அளிக்க இயலாத சிலைகளை அழைப்பது சத்தியத்தை விட்டு தூரமாக வழிகெட்டுச் செல்வதாகும்.
(13) 22.13. சிலைகளை வணங்கும் இந்த நிராகரிப்பாளன், பலனை விட அதிக உறுதியான பாதிப்பை ஏற்படுத்துவோரையே அழைக்கின்றான். பலனை விட அதிக பாதிப்பையே ஏற்படுத்தும் அந்த தெய்வங்கள் மோசமானவையாகும்! அவற்றிடம் உதவி தேடுவோருக்கு அது மோசமான உதவியாளனாகும். அதனுடன் சகவாசம் கொள்வோருக்கு அது மோசமான தோழனாகும்!
(14) 22.14. தன்னை நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். தான் நாடியவர்களுக்குக் கருணை காட்டுவான். தான் நாடியவர்களைத் தண்டிப்பான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
(15) 22.15. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உதவிசெய்ய மாட்டான் என்று எண்ணுபவர் தன் வீட்டின் கூரையில் ஒரு கயிற்றை நீட்டட்டும். பின்னர் அவர் அதைக்கொண்டு பூமியை விட்டும் தொங்கி அதை தன்னை மாய்த்துக்கொள்ளட்டும். பின்னர் தன் மனதில் தேங்கியிருந்த கோபம் தணிந்துவிடுகிறதா என்று பார்க்கட்டும். பிடிவாதமுடையவன் விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் அல்லாஹ் தன் தூதருக்கு உதவி செய்யக்கூடியவன்.
(16) 22.16. மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான தெளிவான ஆதாரங்களை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே முஹம்மதின் மீது குர்ஆனை தெளிவான சான்றுகளாக இறக்கியுள்ளோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அருளால் தான் நாடியவர்களுக்கு நேர் வழியை அடைவதற்கு உதவுகிறான்.
(17) 22.17. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தில் உள்ளவர்கள், யூதர்கள், சாபியீன்கள் - சில இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள்- கிருஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள் ஆகியோரிடையே மறுமை நாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். மற்றவர்களை நரகத்தில் புகுத்திவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் சொல், செயல் என அனைத்திற்கும் சாட்சியாளனாக இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(18) 22.18. -தூதரே!- நிச்சயமாக வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள நம்பிக்கைகொண்ட மனித, ஜின் இனத்தாரும் அல்லாஹ்வை வழிப்படுவதற்காக சிரம்பணிகின்றார்கள். மேலும் சூரியனும், சந்திரனும், வானிலுள்ள நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியிலுள்ள உயிரினங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன. இன்னும் ஏராளமான மக்களும் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிகிறார்கள் என்பதை நீர் அறியவில்லையா? அதிகமானோர் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிவதற்கு மறுக்கின்றனர். அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை உறுதியாகி விட்டது. யாருக்கு அல்லாஹ் அவருடைய நிராகரிப்பின் காரணமாக இழிவை விதித்துவிட்டானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
(19) 22.19. தமது இறைவனுடைய விடயத்தில் தம்மில் யார் சத்தியவாதிகள் என முரண்பட்டுக்கொள்ளும் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் நம்பிக்கையாளர்கள், மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்கள். ஆடை உடலை சூழ்ந்துகொள்வது போல நிராகரிப்பாளர்களை நரகம் சூழ்ந்துகொள்ளும். அவர்களின் தலைக்கு மேலிருந்து கொதிக்கும் நீர் கொட்டப்படும்.
(20) 22.20. அதன் அதிக வெப்பத்தினால் அவர்களின் வயிற்றிலுள்ள குடல்கள் உருக்கிவிடுவதோடு அவர்களின் தோல்களையும் தாக்கி அதனையும் உருக்கிவிடும்.
(21) 22.21. நரகத்தில் வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் தலைகளில் அடிப்பார்கள்.
(22) 22.22. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனை தாங்காமல் நரகிலிருந்து வெளியேற முயற்சி செய்யும்போதெல்லாம் அதிலேயே அவர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வேதனை அனுபவியுங்கள்.”
(23) 22.23. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு தங்கம் மற்றும் முத்துகளிலான காப்புகளை அணிவித்து அல்லாஹ் அலங்கரிப்பான். அங்கு அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.
(24) 22.24. லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுதல், அல்லாஹ்வைப் புகழ்தல், அவனுடைய பெருமையை எடுத்துரைத்தல் போன்ற நல்ல வார்த்தைகளின் பக்கமும் சிறப்பான இஸ்லாத்தின் பாதையின் பக்கமும் அல்லாஹ் அவர்களுக்கு உலக வாழ்வில் வழிகாட்டினான்.
(25) 22.25. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் இஸ்லாத்தில் நுழைவதை விட்டும் தடுப்பவர்கள், இணைவைப்பாளர்கள் ஹுதைபிய்யாவின் போது நடந்துகொண்டதைப் போல மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் மக்களைத் தடுப்பவர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். மக்கள் தங்களின் தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாகவும் ஹஜ் மற்றும் உம்ராவின் கிரிகைகளில் ஒன்றாகவும் ஆக்கிய அந்தப் பள்ளிவாயிலில் மக்காவில் வசிப்போரும் அதற்கு வெளியிலிருந்து வருவோரும் சமமானவர்களே. அங்கு வேண்டுமென்றே யார் பாவமான காரியத்தை செய்து சத்தியத்தை விட்டும் நெறிபிறழ நாடுகிறாரோ நாம் அவருக்கு வேதனை மிக்க தண்டனையை அனுபவிக்கச் செய்வோம்.
(26) 22.26. -தூதரே!- நாம் இப்ராஹீமுக்கு அறியப்படாமல் இருந்த கஃபாவின் இடத்தையும் அதன் எல்லையையும் தெளிவுபடுத்தியதை நினைவு கூர்வீராக. நாம் அவருக்கு வஹி அறிவித்தோம்: “நீர் வணக்க வழிபாட்டில் என்னுடன் எதையும் இணையாக்கி விடாதீர். மாறாக என்னை மட்டுமே வணங்குவீராக. என்னுடைய வீட்டை -தவாஃப் செய்து- சுற்றி வரக்கூடியவர்களுக்காகவும் தொழக்கூடியவர்களுக்காகவும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து வகையான அழுக்குகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவீராக.
(27) 22.27. நாம் உமக்குக் கட்டுமாறு கட்டளையிட்ட இந்த இல்லத்தை ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்வீராக. அவர்கள் நடந்தவாறும் பயணம் செய்து களைப்பை உணர்ந்தவாறு பலவீனமான ஒவ்வொரு ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள். தூரமான ஒவ்வொரு இடங்களிலிருந்தும் ஒட்டகம் அவர்களைக் சுமந்து வரும்.
(28) 22.28. அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு, நன்மையைப் பெறல், ஒற்றுமை இன்னும் பல அவர்களுக்குப் பயனளிப்பவற்றைப் பெறுவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் - துல்ஹஜ் பத்து மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் அதனை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அவன் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பலிப்பிராணிகளை அவன் பெயர்கூறி அறுத்து அவனை நினைவுகூர்வதற்காகவும் அங்கு வருவார்கள். அறுக்கப்பட்ட அந்த பிராணிகளிலிருந்து உண்ணுங்கள். கடும் வறிய ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
(29) 22.29. பின்னர் அவர்கள் மீதமிருக்கும் ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, தலைமுடியை மழித்து, நகங்களை வெட்டி, இஹ்ராமின் காரணமாக தேங்கியிருக்கும் அழுக்குகளைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியேறட்டும். ஹஜ் அல்லது உம்ரா அல்லது பலிப்பிராணி ஆகியவற்றில் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டதை நிறைவேற்றிவிடட்டும். அநியாக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த இந்த வீட்டையும் அவர்கள் தவாஃப் இபாளா மூலம் சுற்றி வரட்டும்.
(30) 22.30. உங்களுக்குக் கட்டளையிப்பட்ட -தலைமுடியை மழித்தல், நகங்களை வெட்டுதல், அழுக்குகளைக் களைதல், நேர்ச்சைகளை நிறைவேற்றுதல், இறை இல்லத்தைத் தவாஃப் செய்தல் ஆகியவை- அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியவைகளாகும். அவன் உங்கள் மீது கடமையாக்கியதை கண்ணியப்படுத்துங்கள். யார் இஹ்ராம் அணிந்த நிலையில் அல்லாஹ் விதித்த வரம்புகளில் வீழ்ந்து விடக்கூடாது, தடுத்தவற்றை ஆகுமாக்கக் கூடாது என்ற கண்ணியத்தினால் அவன் தவிர்ந்து கொள்ளுமாறு ஏவிய விடயங்களை விட்டும் தவிர்ந்து இருக்கின்றாரோ அது அவரது இறைவனிடத்தில் அவருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்ததாகும். -மனிதர்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹாமியா, பஹீரா, வஸீலா ஆகிய எந்த ஒன்றையும் அவன் தடை செய்யவில்லை. அவற்றில் குர்ஆனில் காணப்படும் இறந்தவை, இரத்தம், அது போன்றவற்றை மாத்திரமே தடைசெய்துள்ளான். சிலைகள் என்னும் அசுத்தத்தை விட்டும், அல்லாஹ்வின் மீதும் அவனது படைப்புகள் மீதும் அசத்தியமாக பொய் கூறுவதை விட்டும் விலகியிருங்கள்.
(31) 22.31. அல்லாஹ் அங்கீகரித்த மார்க்கத்தைத் தவிர மற்ற அனைத்து மார்க்கங்களையும் விட்டுவிட்டு வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவற்றைத் தவிர்ந்திருங்கள். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவர் வானத்திலிருந்து விழுந்துவிட்டவரைப் போலாவார். பறவைகள் அவரது சதையையும், எலும்பையும் வாரிச் சென்றுவிடுகின்றன அல்லது காற்று அவரை தூரமாக எறிந்துவிடுகிறது.
(32) 22.32. அதுவே அல்லாஹ் கட்டளையிடும் ஏகத்துவமும் மனத் தூய்மையும், சிலைகளையும் பொய்ச் சாட்சியையும் தவிர்ந்துகொள்வதுமாகும். யார் பலிப்பிராணி ஹஜ் கிரியைகள் உட்பட மார்க்கத்தின் அடையாளங்களைக் கண்ணியப்படுத்துவாரோ அது உள்ளங்களில் தனது இரட்சகனைப் பற்றிய அச்சத்தின் வெளிப்பாடாகும்.
(33) 22.33. அநியாயக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த அந்த இல்லத்திற்கு நெருக்கமாக நீங்கள் பலிப்பிராணிகளை அறுப்பதற்கான குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் கஅபாவில் அறுக்கக்கூடிய பலிப்பிராணிகளை பயணம் செய்தல், மயிர், இனப்பெருக்கம், பால் என்பவற்றிற்காக உங்களுக்குப் பயன்படுத்தலாம்.
(34) 22.34. கடந்துபோன ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளுக்காக நன்றி செலுத்தும் பொருட்டு அவனுடைய பெயர்கூறி அறுத்துப் பலியிடும் குர்பான் எனும் வணக்கத்தை நாம் ஏற்படுத்தியிருந்தோம். -மனிதர்களே!- உங்களின் உண்மையான வணங்கப்படுபவன் ஒருவன்தான். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே நீங்கள் வழிப்பட்டு அடிபணியுங்கள். -தூதரே!- அவனை உளத்தூய்மையாக பயப்படக்கூடியவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
(35) 22.35. அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் நினைவுகூறப்பட்டால் அவனுடைய தண்டனையிலிருந்து அஞ்சுவார்கள்; அதனால் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதைவிட்டும் விலகியிருப்பார்கள். தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்பவர்களாகவும் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுபவர்களாவும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவும் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
(36) 22.36. இறையில்லத்திற்காக பலியிடப்படும் ஒட்டகங்களை, மாடுகளை நாம் மார்க்கத்தின் அடையாளங்களாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு உலக மற்றும் மார்க்கரீதியான நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே அதனை நிற்கவைத்து அது மிரண்டுவிடாமல் இருக்க இரு முன்னங்கால்களையும் கட்டியவாறு அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். -பலிகொடுப்பவர்களே!- அறுக்கப்பட்ட பின் அது விலாப்புறமாக விழுந்துவிட்டால் அதிலிருந்து உண்ணுங்கள்; அதிலிருந்து வழங்கப்பட வேண்டும் என தன்னை வெளிப்படுத்தும் ஏழைக்கும், கேட்காமல் பத்தினியாக இருக்கும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் அவற்றின்மீது ஏறி பயணம் செய்வதற்காக அவன் உங்களுக்கு அவற்றை வசப்படுத்தித் தந்தவாறே அல்லாஹ்வை நெருங்குவதற்காக அவற்றை அறுக்கும் போதும் உங்களுக்கும் பணியும் வகையில் வசப்படுத்தியுள்ளான். அவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தி அருள்புரிந்தமைக்கு நீங்கள் நன்றிசெலுத்தும்பொருட்டு அவ்வாறு செய்துள்ளான்.
(37) 22.37. நீங்கள் பலிகொடுக்கும் பிராணிகளின் மாமிசமோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை, அவனிடத்தில் கொண்டு செல்லப்படுவதுமில்லை. மாறாக பலிப்பிராணிகளின் மூலம் அவனை நெருங்கி வழிப்படுவதில் உளத்தூய்மையோடு நடந்து அவற்றில் நீங்கள் கடைபிடிக்கும் இறையச்சமே அவனிடம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டியதற்காக அவனைப் பெருமைப்படுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு அவன் உங்களுக்கு அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளான். -தூதரே!- தங்கள் இறைவனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்களுக்கு, அவனது படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்துகொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
(38) 22.38. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய எதிரிகளின் மூலம் ஏற்படும் தீங்குகளை தடுக்கிறான். நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடி செய்யக்கூடிய, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் அதனை மறுக்கக்கூடிய ஒவ்வொருவரையும் அவன் நேசிப்பதில்லை. மாறாக அவனை வெறுக்கின்றான்.
(39) 22.39. தமது எதிரிகளினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனால் தம்முடன் போர்தொடுக்கும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதியளித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் போரில்லாமல் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்ய ஆற்றலுடையவன்தான். ஆயினும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதைக்கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதிப்பதற்கு அவனது ஞானம் தீர்மானித்துள்ளது.
(40) 22.40. “எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறியதற்காகவே அவர்கள் நிராகரிப்பாளர்களால் தங்களின் வீடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் தூதர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதைக் கடமையாக்காவிட்டால் அந்த எதிரிகள் வணக்கஸ்தலங்களின் மீது வரம்புமீறியிருப்பார்கள். துறவிகளின் மடங்களையும் கிருஸ்தவர்களின் தேவாலயங்களையும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் தொழுகைக்காக தயார் செய்யப்பட்ட அவர்களின் பள்ளிவாயில்களையும் தகர்த்திருப்பார்கள். தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவிபுரிபவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவிபுரிவான். நிச்சயமாக தன் மார்க்கத்திற்கு உதவிபுரிபவர்களுக்கு உதவிபுரிய அல்லாஹ் சக்தியுடையவன். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது.
(41) 22.41. உதவிசெய்வதாக எம்மால் வாக்களிக்கபட்ட இவர்கள்தான் அவர்களின் எதிரிகளுக்கெதிராக நாம் வெற்றியை வழங்கி பூமியில் ஆட்சியதிகாரம் வழங்கினால் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவார்கள்; தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குவார்கள்; மார்க்கம் ஏவிய விஷயங்களை ஏவுவார்கள்; தடுத்த தீமையான விஷயங்களைத் தடுப்பார்கள். நன்மையளிப்பது, தண்டனையளிப்பது என எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது.
(42) 22.42. -தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் நீர் பொறுமையாக இருப்பீராக. நீர் ஒன்றும் தனது சமூகத்தால் பொய்ப்பிக்கப்படும் முதலாவது தூதர் அல்ல. உம் சமூகத்திற்கு முன்னர் நூஹின் சமூகம் அவரையும், ஆத் சமூகம் ஹூதை, ஸமூத் சமூகம் சாலிஹை பொய்ப்பித்தனர்.
(43) 22.43. இப்ராஹீமின் சமூகம், லூத்தின் சமூகத்தினர் தங்களின் தூதர்களை நிராகரித்துள்ளார்கள்.
(44) 22.44. மத்யன்வாசிகள் ஷுஐபை பொய்பித்தார்கள். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தவரும் மூஸாவை பொய்பித்தார்கள். நாம் அவர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டுப் பிடிப்பதற்காக அவர்களை விட்டு தண்டனையைத் தாமதப்படுத்தினோம். பின்னர் அவர்களை வேதனையால் பிடித்தேன். அவர்களுக்கு எதிராக எனது மறுப்பு எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்களின் நிராகரிப்பினால் அவர்களை நான் அழித்துவிட்டேன்.
(45) 22.45. -நிராகரிப்பினால் அநியாயம் செய்துகொண்டிருந்த நிலையில்- நாம் பூண்டோடு அழித்த எத்தனையோ ஊர்கள் உள்ளன. அவற்றின் வீடுகள் வசிக்க யாருமின்றி வெற்றிடமாக இடிந்து கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் அதனைப் பயன்படுத்துவோர் அழிக்கப்பட்டதனால் பாழடைந்து இருக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ உயரமான மாளிகைகள்! அவற்றினால் அங்கு வசித்தவர்களை வேதனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
(46) 22.46. அந்த அழிக்கப்பட்ட ஊர்களின் அடையாளங்களைக் காண்பதற்காக, தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிக்கும் இவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? அவ்வாறு செய்தால் தங்களின் அறிவால் சிந்தித்து படிப்பினை பெறலாம். அறிவுரைபெற வேண்டி அவர்களின் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க வேண்டாமா? நிச்சயமாக பார்வை குருடாகிப்போவது குருடல்ல. மாறாக அகப்பார்வை குருடாவதே அழிவை ஏற்படுத்தும் குருடாகும். அகப்பார்வையை இழந்தவரால் படிப்பினை பெறவோ, அறிவுரை பெறவோ முடியாது.
(47) 22.47. -தூதரே!- நிராகரிக்கும் உம் சமூகத்தினர் வேதனையைகொண்டு எச்சரிக்கப்படும் போது இவ்வுலக வேதனையை விரைவாகவும் மறுவுலக வேதனையை பிற்படுத்தியும் வேண்டுகிறார்கள். அல்லாஹ் தண்டிப்பதாகக் கூறிய வாக்குறுதிக்கு ஒருபோதும் மாறு செய்யமாட்டான். அவர்களுக்கு இறக்கப்பட்ட விரைவான வேதனையே பத்ர் உடைய நாளில் இறங்கியதாகும். மறுமையில் இடம்பெறும் வேதனையினால் அங்கு வேதனைக்குரிய ஒரு நாள் நீங்கள் உலகில் கணக்கிடும் ஆயிரம் வருடங்களைப் போன்றதாகும்.
(48) 22.48. நிராகரிப்பினால் அநியாயம் இழைத்துக்கொண்டிருந்த போது தண்டிக்காமல் அவகாசம் வழங்கிய எத்தனையோ ஊர்கள் உள்ளன. அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக உடனடியாகத் தண்டிக்கவில்லை. பின்னர் அடியோடு அழிக்கும் வேதனையால் அவர்களைத் தண்டித்தேன். மறுமை நாளில் அவர்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டும். அவர்களின் நிராகரிப்பினால் அவர்களுக்கு நிரந்தரமான தண்டனையை அளிப்பேன்.
(49) 22.49. மக்களே! எதைக் கொடுத்து நான் அனுப்பப்பட்டேனோ நிச்சயமாக அதை எடுத்துரைத்து தெளிவாக எச்சரிக்கை செய்பவனே” எனக் கூறுவீராக!
(50) 22.50. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த பாவங்களுக்கான மன்னிப்பும் சுவனத்தில் என்றும் முடிவடையாத கண்ணியமான வாழ்வாதாரமும் உண்டு.
(51) 22.51.நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வேதனையில்லாமல் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் நம் சான்றுகளை பொய்ப்பிக்க முனைபவர்கள்தாம் நரகத்தின் தோழர்களாவர். ஒரு நண்பன் நண்பனுடன் சேர்ந்திருப்பதைப் போல் நரகத்துடன் சேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
(52) 22.52. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும், நபியானாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதும்போது நிச்சயமாக ஷைத்தான் அவர் ஓதுவதில் வஹியென்று மக்களைக் குழுப்பும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். அவன் ஏற்படுத்திய சந்தேகத்தை அல்லாஹ் நீக்கி தன் வசனங்களை அவன் உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் படைத்த படைப்புகளில், ஏற்படுத்திய விதிகளில் தனது திட்டமிடலில் அவன் ஞானம் மிக்கவன்.
(53) 22.53. அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கும், இறுகிப்போன இதயம்கொண்ட இணைவைப்பாளர்களுக்கும் சோதனையாக மாற்றவே தூதர் ஓதும்போது ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக நயவஞ்சகர்களிலும் இணைவைப்பாளர்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் அல்லாஹ், அவனுடைய தூதர் மீது விரோதத்தில் உள்ளார்கள். சத்தியம் மற்றும் நேர்வழியை விட்டும் தூரத்தில் உள்ளார்கள்.
(54) 22.54. -தூதரே!- அல்லாஹ் யாருக்கு கல்வியை வழங்கியுள்ளானோ அவர்கள், முஹம்மதின் மீது இறக்கப்பட்ட குர்ஆன் சத்தியமாகும், அது அல்லாஹ் அவர் மீது வஹியாக அறிவித்ததாகும் என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்காகவேயாகும். அவர்கள் அவனை மென்மேலும் நம்பிக்கை கொண்டு, அவர்களின் உள்ளங்கள் அவனுக்கு அடிபணிந்து, அஞ்சுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் அவனை நம்பிக்கைகொண்டவர்களை அவர்களின் அடிபணிதலின் காரணமாக எவ்வித கோணலுமற்ற நேரான சத்தியப் பாதையைக் காட்டுகிறான்.
(55) 22.55. அல்லாஹ்வை நிராகரித்து தூதரைப் பொய்யெரெனக் கூறியவர்கள், மறுமை நாள் தங்களிடம் திடீரென வரும் வரை அல்லது நன்மையோ, கருணையோ அற்ற வேதனையுடைய நாள் வரும்வரை உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் மீது சந்தேகத்திலேயே தொடர்ந்து நிலைத்திருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அது கியாமத் நாளாகும்.
(56) 22.56. -அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களை வந்தடையும் அந்த மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அங்கு அதில் அவனோடு சர்ச்சைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவன் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அளிப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான பாக்கிய மிக்க சுவனங்கள் எனும் மகத்தான கூலி உண்டு.
(57) 22.57. அல்லாஹ்வை நிராகரித்து தூதர் மீது இறக்கப்பட்ட அவனுடைய வசனங்களை பொய் எனக் கூறுபவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு. நரகத்தில் அந்த வேதனையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்.
(58) 22.58. அல்லாஹ்வின் திருப்தியையும் மார்க்கத்தின் கண்ணியத்தையும் நாடி தங்களின் நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து பின்னர் அவனுடைய பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் என்றும் முடிவுறாத அழகிய வாழ்வாதாரத்தை அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்போரில் அவனே மிகச் சிறந்தவன்.
(59) 22.59. அவர்கள் திருப்தியடையும் சுவனம் என்னும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் அவர்களின் விஷயத்தில் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களின் தவறுக்காக அவன் அவர்களை உடனுக்குடன் தண்டிக்கவில்லை.
(60) 22.60. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வது, அநியாயம் இழைத்தவர்களை அவர்கள் அநியாயம் இழைத்த அளவுக்கு பழிவாங்குவதற்கு அனுமதியளித்தது, அவ்வாறு செய்வது குற்றமாகாது ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அநியாயம் இழைத்தவன் மீண்டும் வரம்புமீறினால் நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாவங்களை விட்டுவிடக்கூடியவனாகவும் அவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
(61) 22.61. அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு அல்லாஹ் இவ்வாறு உதவிசெய்வது ஏனெனில் நிச்சயமாக அவன் தான் நாடியதைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் என்பதனாலாகும். அவனுடைய ஆற்றலில் உள்ளதே, இரவையும் பகலையும் ஒன்றைக் கூட்டியும் ஒன்றைக் குறைத்தும் ஒன்றில் ஒன்றை நுழையச் செய்வதாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(62) 22.62. அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்வதும் பகலை இரவில் நுழையச் செய்வதும் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், அவனுடைய மார்க்கமும், அவன் அளித்த வாக்குறுதியும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதும் உண்மையானது, அல்லாஹ்வை தவிர இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியமாகும் என்பதினாலேயாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளை விட உள்ளமையாலும் மதிப்பாலும் ஆதிக்கத்தாலும் மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன். பெருமையும் கண்ணியமும் மகத்துவமும் அவனுக்கே உரியது.
(63) 22.63. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மழை பெய்த பிறகு பூமி அதில் முளைக்கும் தாவரங்களால் பசுமையாகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுடன் மென்மையாளனாக உள்ளான். அதனால் தான் அவர்களுக்கு மழையைப் பொழிந்து பூமியைப் பசுமையாக்கினான். அவர்களின் நலன்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(64) 22.64. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அவனுக்கே உரியது. நிச்சயமாக அவன் எல்லா விதமான படைப்புகளை விட்டும் தேவையற்றவனாகவும் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
(65) 22.65. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் உமக்கும் மனிதர்களுக்கும் பயன்பாட்டிற்காகவும் தேவைக்காகவும் பூமியிலுள்ள உயிரினங்கள், திண்மங்கள், ஆகியவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா? அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால், வசப்படுத்தலால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை அவனுடைய அனுமதியுடன் தவிர பூமியின்மீது விழுந்து விடாமல் தடுத்து வைத்துள்ளான். அவன் அனுமதியளித்திருந்தால் அது பூமியின் மீது விழுந்திருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் அநீதி இழைத்தபோதிலும் அவர்களுக்கு அவன் இவற்றையெல்லாம் வசப்படுத்தித் தந்துள்ளான்.
(66) 22.66. அல்லாஹ்வே ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை உருவாக்கி உயிர்ப்பித்தான். பின்னர் உங்களின் வாழ்நாள் நிறைவடைந்துவிட்டால் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் நீங்கள் செய்த செயல்களை விசாரித்து அவற்றுக்கு கணக்குத் தீர்த்து கூலி வழங்கும் பொருட்டு நீங்கள் மரணித்தபிறகு உங்களை உயிர்கொடுத்து எழச்செய்வான். நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை -நிச்சயமாக அவை வெளிரங்கமாக இருந்தும் கூட- அவனுடன் மற்றவர்களை வணங்கி அதிகம் மறுப்பவனாக இருக்கின்றான்.
(67) 22.67. ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் ஒரு ஷரீஅத்தை (வழிமுறையை) ஏற்படுத்தியுள்ளோம். தங்களின் ஷரீஅத்திற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். -தூதரே!- இணைவைப்பாளர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உமக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தைக்குறித்து உம்முடன் முரண்பட வேண்டாம். ஏனெனில் நீர்தான் அவர்களைவிட சத்தியத்தில் முதன்மையானவர். நிச்சயமாக அவர்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தனித்துவமாக்குவதன் பக்கம் நீர் மக்களை அழைப்பீராக. நிச்சயமாக நீர் எவ்வித கோணலுமற்ற நேரான வழியில் இருக்கின்றீர்.
(68) 22.68. ஆதாரம் தெளிவான பின்னரும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால், தவிர்ந்து கொண்டால் அவர்களிடம் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்து அவர்களின் விவகாரங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவீராக: “நீங்கள் செய்யக்கூடிய செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(69) 22.69. அல்லாஹ் தன் அடியார்களான நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே மறுமை நாளில் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த மார்க்க விஷயங்களைக்குறித்து தீர்ப்பளிப்பான்.
(70) 22.70. -தூதரே!- வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான் என்பது உமக்குத் தெரியாதா? அவையிரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நிச்சயமாக அவற்றைக்குறித்த அறிவு லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அவை ஒவ்வொன்றையும் அறிவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
(71) 22.71. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவ்வாறு வணங்க அல்லாஹ் தன் வேதங்களில் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அதற்கு அறிவுப்பூர்வமான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. தங்களின் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதே அவர்களுக்கிருக்கும் ஒரே ஆதாரம். அநியாயக்காரர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும் எந்த உதவியாளரும் இல்லை.
(72) 22.72. குர்ஆனில் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அவற்றை செவியேற்கும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்களில் நீர் வெறுப்பைக் காண்பீர். கடும் கோபத்தினால் நம்முடைய வசனங்களை எடுத்துரைப்பவர்களை அவர்கள் தாக்கிவிட முனைகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களின் கோபத்தை, வெறுப்பைவிட மோசமான ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அது நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள நரகமாகும். அவர்கள் செல்லும் அந்த இடம் மிகவும் தீயதாகும்.
(73) 22.73. மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதை செவிசாய்த்துக் கேளுங்கள். அதைக்கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கக்கூடிய சிலைகளும் மற்றவைகளும் ஒரு சிறிய ஈயைக்கூட ஒருபோதும் படைக்க முடியாது. அந்த ஈயைப் படைப்பதற்கு அவையனைத்தும் ஒன்றுதிரண்டாலும் அவற்றால் அதனைப் படைக்க முடியாது. அந்த சிலைகளின் மீதிருக்கும் வாசனை திரவியம், அல்லது அது போன்ற ஏதேனும் ஒன்றை ஒரு ஈ பறித்துக் கொண்டாலும் அதனைக்கூட அவற்றால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கவும் அது எடுத்துச் செல்பவற்றைப் பாதுகாக்கவும் இயலாமல் இருக்கும் போது அதனை விட பெரிய விடயங்களை அவற்றால் செய்ய முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அல்லாஹ்வை விடுத்து இந்த அளவு இயலாமையில் இருக்கின்ற அவற்றை ஏன் வணங்குகிறீர்கள்? ஈ எடுத்துச் செல்பவற்றைக் காத்துக்கொள்ள முடியாத தேடக்கூடிய வணங்கப்படும் இந்தச் சிலையும் பலவீனமானது. தேடப்படும் இந்த ஈயும் பலவீனமானது.
(74) 22.74. அவர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. எனவேதான் அவனுடன் இணைத்து அவனுடைய சில படைப்புகளையும் வணங்கினார்கள். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையவன். அவனுடைய சக்தி, வல்லமையின் மூலமே, அவன் வானங்களையும் பூமியையும் அவற்றிலுள்ளதையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. இணைவைப்பாளர்கள் வணங்கும் சிலைகளோ பலவீனமானவையாக எதையும் படைக்காத இழிவானவையாக இருக்கின்றன.
(75) 22.75. அல்லாஹ் வானவர்களிலிருந்தும் அவ்வாறே மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜிப்ரீல் போன்ற சில வானவர்களை மனித இனத்திலுள்ள நபிமார்கள், இறைத்தூதர்களிடம் தூதர்களாக அனுப்புகிறான். மனித இனத்திலுள்ள இறைத்தூதர்களை மனிதர்களுக்குத் தூதர்களாக அனுப்புகிறான். நிச்சயமாக இணைவைப்பாளர்கள் தன் தூதர்களைக்குறித்துக் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். தன் தூதுப்பணிக்காக தேர்ந்தெடுக்கக்கூடியவர்களை அவன் பார்க்கக்கூடியவன்.
(76) 22.76. அவன் வானவர்களிலும் மனிதர்களிலும் உள்ள தன் தூதர்களை அவர்களைப் படைப்பதற்கு முன்னரும் அவர்கள் இறந்தபின்னரும் அறியக்கூடியவன். மறுமைநாளில் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அந்நாளில் அவன் தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(77) 22.77. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனது மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ் ஒருவனுக்காக உங்களின் தொழுகையில் ருகூவு செய்து சிரம்பணியுங்கள், தர்மம், உறவுகளைப் பேணுதல் போன்ற இன்னோரன்ன நன்மையான செயல்களைச் செய்யுங்கள். அதனால் நீங்கள் வெறுப்பதில் (நரகம்) இருந்து பாதுகாப்பு பெற்று, வேண்டியதை (சுவனம்) பெற்று வெற்றியடைவீர்கள்.
(78) 22.78. அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய திருப்தியை நாடி ஜிஹாது செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களின் மார்க்கத்தை சிரமங்களோ, கடினங்களோ அற்ற இலகுவான மார்க்கமாக ஆக்கியுள்ளான். இந்த இலகுவான மார்க்கமே உங்களின் தந்தை இப்ராஹீமின் மார்க்கமாகும். அல்லாஹ் முந்தைய வேதங்களிலும் குர்ஆனிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டுள்ளான். நிச்சயமாக தூதர் தனக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் முந்தைய சமூகங்களின் மீது அவர்களின் தூதர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே நீங்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி, அல்லாஹ்வின் பக்கம் தஞ்சமடைந்து உங்களின் விவகாரங்களில் அவனையே சார்ந்திருங்கள். அவனை நேசிக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அவனே மிகச் சிறந்த பாதுகாவலனாகவும் தன்னிடம் உதவிதேடக்கூடியவர்களுக்கு மிகச்சிறந்த உதவியாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனையே பாதுகாவலனாக ஆக்கிக்கொள்ளுங்கள் அவன் உங்களை பாதுகாப்பான். அவனிடமே உதவிதேடுங்கள் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.