23 - ஸூரா அல்முஃமினூன் ()

|

(1) 23.1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்கள் தாம் விரும்பும் விஷயத்தைப் பெற்று பயப்படும் விஷயத்திலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றியடைந்துவிட்டார்கள்.

(2) 23.2. அவர்கள் தங்களின் தொழுகையில் பணிவானவர்கள். அதில் அவர்களின் உறுப்புகள் அமைதியாகவும்; உள்ளங்கள் வெளிச் சிந்தனைகளை விட்டும் நீங்கியதாகவும் உள்ளன.

(3) 23.3. அவர்கள் அசத்தியம், வீண்விளையாட்டு, பாவமான சொல் மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள்.

(4) 23.4. அவர்கள் தங்களின் ஆன்மாக்களை தீமைகளிலிருந்து தூய்மைப்படுத்தி ஸகாத்தை அளித்து தங்களின் செல்வங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வார்கள்.

(5) 23.5. அவர்கள் விபச்சாரம், ஓரினச் சேர்க்கை ஆகிய அருவருப்பான செயல்களை விட்டும் தங்கள் வெட்கஸ்த்தலங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்கள் பரிசுத்தமுள்ள பக்குவமானவர்கள்.

(6) 23.6. ஆயினும் தங்களின் மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர. உடலுறவு, ஏனையவற்றின் மூலம் அவர்களை அனுபவிப்பதால் அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.

(7) 23.7. தங்களின் மனைவியர் மற்றும் தான் சொந்தமாக்கிய அடிமைப் பெண்களைத் தவிர்த்து யார் மற்ற வழிகளின் மூலம் இன்பத்தை நாடுவார்களோ அவர்கள்தாம் அனுபவிக்க அவன் அனுமதித்ததை மீறி தடைசெய்யப்பட்டதை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்கள்.

(8) 23.8. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற அமானிதங்களையும் அவனுடைய அடியார்களிடமிருந்து பெற்ற அமானிதங்களையும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் பேணுவார்கள். அவற்றை வீணாக்கிவிட மாட்டார்கள். மாறாக முழுமையாக நிறைவேற்றுவார்கள்.

(9) 23.9. அவர்கள் தங்களின் தொழுகைகளை விட்டுவிட்டுத் தொழாமல் தொடர்ந்து தொழுதல், அவற்றின் ருக்ன்கள், கடமைகள், சுன்னத்தான காரியங்கள் ஆகியவற்றோடு நேரத்திற்கு அவற்றை நிறைவேற்றுதல் ஆகியவற்றின் மூலம் தமது தொழுகைகளைப் பேணுதலாகக் கடைபிடிப்பார்கள்.

(10) 23.10. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள்.

(11) 23.11. அவர்கள் உயர்ந்த சுவனத்திற்கு வாரிசாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதன் இன்பம் என்றும் முடிவடையாதது.

(12) 23.12. நாம் மனிதர்களின் தந்தை ஆதமை களி மண்ணிலிருந்து படைத்தோம். அதன் மண் பூமியின் மண்ணோடு கலந்துவிட்ட நீரிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

(13) 23.13. பின்னர் அவரது சந்ததியினரை பிறக்கும் வரை கருவறையில் தங்கும் விந்திலிருந்து படைத்தோம்.

(14) 23.14. பின்னர் கருவறையில் தங்கிய விந்தை சிவப்பு நிற இரத்தக்கட்டியாக ஆக்குகின்றோம். பின்னர் அந்த சிவப்பு நிற இரத்தக்கட்டியை மெல்லும் அளவு சதைத்துண்டாக ஆக்கி அந்த சதைத்துண்டை உறுதியான எலும்புகளாக ஆக்குகின்றோம். அந்த எலும்புகளின்மீது சதையைப் போர்த்துகின்றோம். பின்பு அதில் ஆன்மாவை ஊதி, அதற்கு உயிரளித்து அதனை வேறொரு படைப்பாக படைக்கின்றோம். மிகச்சிறந்த படைப்பாளனான அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவனாவான்.

(15) 23.15. பின்னர் -மனிதர்களே!- அந்த நிலைகளைக் கடந்த பிறகு உங்களின் தவணை நிறைவடைந்தவுடன் நிச்சயமாக நீங்கள் மரணிக்கிறீர்கள்.

(16) 23.16. மரணித்த பிறகு நீங்கள் உலகில் செய்த செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக மறுமை நாளில் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்.

(17) 23.17. -மனிதர்களே!- நாம் உங்களுக்கு மேலே அடுக்கடுக்காக ஏழு வானங்களை படைத்துள்ளோம். நம்முடைய படைப்புகளைவிட்டும் நாம் கவனமற்றவர்களாகவோ, மறந்தவர்களாகவோ இல்லை.

(18) 23.18. நாம் மழையை, அழித்துவிடும் அளவு அதிகமாகவும் இறக்காமல் போதுமாகாத அளவுக்கு குறைத்தும் இறக்காமல் தேவையான அளவோடு வானத்திலிருந்து இறக்குகின்றோம். அதன் மூலம் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பயன்பெறும் விதத்தில் அதனை பூமியில் தேங்கச் செய்கின்றோம். நிச்சயமாக நீங்கள் பயனடைய முடியாதவாறு அவற்றைப் போக்குவதற்கும் நாம் ஆற்றல் பெற்றவர்களாகவும் உள்ளோம்.

(19) 23.19. அந்த நீரைக்கொண்டு நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை தோட்டங்களையும் ஏற்படுத்தினோம். அவற்றில் உங்களுக்கு அத்தி, மாதுளை, அப்பிள் போன்ற பலவிதமான வடிவங்களுடைய, நிறங்களுடைய பழங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.

(20) 23.20. நாம் உங்களுக்காக ஆலிவ் மரத்தையும் ஏற்படுத்தினோம். அது தூர் சினாய் மலைப்பகுதியில் விளைகிறது. அதன் பழங்களிலிருந்து எடுக்கப்படும் தொட்டு சாப்பிடும் எண்ணெய்யையும் அது வெளிப்படுத்துகிறது.

(21) 23.21. நிச்சயமாக மனிதர்களே! (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் உங்கள்மீது பொழிந்த கருணையையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். இந்த கால்நடைகளில் வயிற்றிலிருந்து அருந்துவோருக்குச் சுவையான தூய்மையான பாலை நாம் புகட்டுகின்றோம். அவற்றில் உங்களுக்கு பயணித்தல், மயிர்கள், உரோமங்கள், தோல்கள் போன்ற இன்னும் ஏராளமான பயன்களும் இருக்கின்றன. அவற்றின் மாமிசத்தை நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.

(22) 23.22. நிலத்தில் ஒட்டகம் போன்ற கால்நடைகளும் நீரில் கப்பல்களும் உங்களை சுமந்து செல்கின்றன.

(23) 23.23. நாம் நூஹை அவரது சமூகத்தின் பக்கம் அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்குமாறு அனுப்பினோம். அவர் கூறினார்: என் சமூகமே “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாருமில்லை. நீங்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”

(24) 23.24. அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “தன்னைத் தூதர் என்று கூறும் இவர் நிச்சயமாக உங்களைப் போன்ற மனிதர்தான். தலைமைத்துவத்தையும் உங்களை ஆட்சி செய்வதையுமே அவர் விரும்புகின்றார். அல்லாஹ் நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப நாடியிருந்தால் வானவர்களிலிருந்து தூதரை அனுப்பியிருப்பான். ஒரு மனிதரைத் தூதராக அனுப்ப மாட்டான். நம்முடைய முன்னோர்களிடம் இவர் கூறுவதைப் போன்ற எதனையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

(25) 23.25. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரேயன்றி வேறில்லை. அவர் கூறுவது என்னவென்று அவருக்கே தெரியாது. மக்களுக்கு அவரது விடயம் தெளிவாகும்வரை காத்திருங்கள்.

(26) 23.26. நூஹ் கூறினார்: “என் இறைவா! என்னை அவர்கள் பொய்ப்பித்ததனால் எனக்காக அவர்களைத் தண்டித்து அவர்களுக்கெதிராக எனக்கு உதவிபுரிவாயாக.”

(27) 23.27. நம்முடைய கண்காணிப்பில் நாம் எவ்வாறு கட்ட வேண்டும் என நாம் கூறுவதுபோல் ஒரு கப்பலைக் கட்டுவீராக என்று நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, ரொட்டி சுடப்பயன்படும் அடுப்புகளிலிருந்து தண்ணீர் பலமான ஊற்றாக வெளிப்படும் போது, சந்ததிகள் நிலைப்பதற்காக எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றுவீராக. உமது குடும்பத்தையும் அதில் ஏற்றிக்கொள்வீராக! ஆனால் உமது மனைவி, மகன் போன்ற அழிவுக்குட்படுபவர்கள் என முன்பே அல்லாஹ்விடத்தில் தீர்மானமாகிவிட்டோரைத் தவிர. நிராகரிப்பினால் அநியாயம் இழைத்தவர்களுக்காக, அவர்களை அழிக்காமல் காப்பாற்றும்படி என்னிடம் உரையாடாதீர். நிச்சயமாக அவர்கள் -சந்தேகம் இல்லாமல்- வெள்ளப் பிரளயத்தில் மூழ்கி அழிபவர்களே.

(28) 23.28. நீரும் உம்முடன் உள்ள தப்பித்த நம்பிக்கையாளர்களும் கப்பலில் ஏறிவிட்டால் பின்வருமாறு கூறுவீராக: “நிராகரித்த இந்த சமூகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி அவர்களை அழித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”

(29) 23.29. “என் இறைவா! அருள் வளம் மிக்க இடத்தில் என்னை இறக்குவாயாக. நீயே மிகச்சிறந்த இடத்தை வழங்கக்கூடியவன்” என்றும் கூறுவீராக.

(30) 23.30. நிச்சயமாக நூஹையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றியதிலும் நிராகரிப்பாளர்களை அழித்ததிலும் நமது தூதர்களுக்கு உதவி செய்து அவர்களை மறுத்தவர்களை அழிப்பதற்கான நம்முடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் மேலே கூறியவற்றில் இருக்கின்றன. நிராகரிப்பாளர்கள் யார் நம்பிக்கையாளர் யார்? மாறு செய்பவர் யார் வழிப்படுபவர் யார்? என்பது தெளிவாவதற்காக நாம் நூஹின் சமூகத்தின்பால் அவரை அனுப்பி அவர்களைச் சோதிக்கக்கூடியவர்களாக இருந்தோம்.

(31) 23.31. நாம் நூஹின் சமூகத்தை அழித்த பிறகு வேறொரு தலைமுறையை உருவாக்கினோம்.

(32) 23.32. அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க நாம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?

(33) 23.33. அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த மறுமை நாளையும் அங்குள்ள நற்கூலியையும் தண்டனையையும் பொய்ப்பித்த, நாம் அவர்களுக்கு உலக வாழ்வில் வழங்கிய தாராளமான அருட்கொடைகளினால் வரம்பு மீறிய தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீங்கள் உண்ணுவதையே உண்ணுகிறார். நீங்கள் பருகுவதையே பருகுகிறார். உங்களின்பால் தூதராக அனுப்பப்படுவதற்கு உங்களை விட எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லை.

(34) 23.34. நீங்கள் உங்களைப் போன்ற ஒரு மனிதருக்குக் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே. ஏனெனில் உங்கள் தெய்வங்களை விட்டுவிட்டு, அவருக்கு வழிபடுவதனாலும் உங்களைவிட எந்த சிறப்பையும் பெறாத ஒருவரைப் பின்பற்றுவதனாலும் நீங்கள் பயனடையமுடியாது.

(35) 23.35. தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர், நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னரும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிரோடு வெளியாக்கப்பட்டே ஆவீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறாரா? இது சாத்தியம்தானா?

(36) 23.36. உங்களுக்கு எச்சரிக்கப்படும், மரணித்து, மண்ணாகவும் எலும்புகளாவும் மக்கி மாறிய பின்னர் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து வெளிப்படுத்தப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.

(37) 23.37. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. மறுமை வாழ்க்கையும் இல்லை. நம்மில் உயிரோடு உள்ளவர்கள் மரணிப்பார்கள் மீண்டும் உயிர்பெற மாட்டார்கள். வேறு சிலர் பிறந்து வாழ்வார்கள். நாம் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காக வெளியேற்றப்படமாட்டோம்.

(38) 23.38. ‘நிச்சயமாக நான் உங்களின் பால் அனுப்பப்பட்ட தூதர்’ என்று கூறும் இவர் இக்கூற்றின் மூலம் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறும் ஒருவரே. நாங்கள் அவரை நம்புவோர்களல்ல.

(39) 23.39. அந்த தூதர் கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்ததனால் அவர்களிடமிருந்து எனக்காகப் பழிதீர்த்து அவர்களுக்கு எதிராக எனக்கு உதவி புரிவாயாக.”

(40) 23.40. அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கூறி பதிலளித்தான்: “நீர் கொண்டுவந்ததை மறுக்கும் இவர்கள் விரைவில் தமது நிராகரிப்பை எண்ணி வருத்தப்படத்தான் போகிறார்கள்.”

(41) 23.41. தமது பிடிவாதத்தினால் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாகிவிட்டதால் பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அது வெள்ளத்தின் நுரைகளைப் போல அவர்களை அழிக்கப்பட்டவர்களாக ஆக்கிவிட்டது. அநியாயக்கார மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.

(42) 23.42. அவர்களை அழித்த பிறகு லூத்தின் சமூகம், ஷுஐபின் சமூகம் மற்றும் யூனுஸின் சமூகத்தைப் போன்ற வேறு சமூகங்களை நாம் உருவாக்கினோம்.

(43) 23.43. மறுக்கும் இந்த சமூகங்களில் எந்த சமூகமும் தங்களுக்கு வரும் அழிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முந்தவும் முடியாது, அவர்கள் பலவகையான சாதனங்களைப் பெற்றிருந்தபோதிலும் பிந்தவும் முடியாது.

(44) 23.44. பின்னர் நாம் நம் தூதர்களை ஒவ்வொருவராக தொடர்ந்து அனுப்பினோம். எந்தவொரு சமுதாயத்துக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் பொய்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனவே நாம் அந்த சமூகங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிட்டோம். அவர்களைப் பற்றிய மக்கள் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களின் எந்த ஒன்றும் எஞ்சவில்லை. தூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.

(45) 23.45. பின்னர் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் ஒன்பது சான்றுகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம். (ஒன்பது சான்றுகள்: கைத்தடி, கை, வெட்டுக்கிளி, பேன்கள், தவளைகள், இரத்தம், வெள்ளம், பஞ்சம், விளைச்சல்களின் குறைபாடு என்பனவாகும்)

(46) 23.46. அவர்கள் இருவரையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனின் சமூகத்தின் தலைவர்களின்பால் அனுப்பினோம். அவர்கள் கர்வம் கொண்டார்கள். அவர்கள் இருவரின்மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் மக்களின் மீது ஆதிக்கம், அநீதி என்பவற்றினால் மக்களை அடக்குமுறை செய்வோராக இருந்தார்கள்.

(47) 23.47. அவர்கள் கூறினார்கள்: “எங்களை விட மேலதிகமான எந்தச் சிறப்பையும் பெறாத எங்களைப் போன்ற இரு மனிதர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? அவ்விருவரின் சமூகமான இஸ்ரவேல் மக்களும் நமக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் பணிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.”

(48) 23.48. அவர்கள் இருவரும் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை அவர்கள் பொய்ப்பித்தார்கள். அவர்களின் அந்நிராகரிப்பின் காரணத்தினால் மூழ்கடித்து அழிக்கப்பட்டவர்களாகிவிட்டனர்.

(49) 23.49. மூஸாவின் சமூகத்தார் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்று அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நாம் அவருக்கு தவ்ராத்தை வழங்கினோம்.

(50) 23.50. ஈஸாவையும் அவரது தாய் மர்யமையும் நம்முடைய வல்லமையை அறிவிக்கும் சான்றாக ஆக்கினோம். அவள் தந்தையின்றி ஈஸாவை வயிற்றில் சுமந்தாள். நாம் பூமியின் உயரமான இடத்தில் அவர்கள் இருவரையும் ஒதுங்கவைத்தோம். அது வசிப்பதற்கு உகந்த தரைமட்டமான தொடராக ஓடும் நீருள்ள இடமாக இருந்தது.

(51) 23.51. தூதர்களே! நான் உங்களுக்கு அனுமதித்த தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். மார்க்கம் கூறும் நற்செயல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் நான் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை.

(52) 23.52. -தூதர்களே!- உங்களின் மார்க்கம் இஸ்லாம் என்னும் ஒரே மார்க்கம்தான். நான் உங்களின் இறைவனாவேன். என்னைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. எனவே என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.

(53) 23.53. அவர்களுக்குப் பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்தில் கருத்துவேறுபட்டு தங்களிடையே பல பிரிவினர்களாகி விட்டார்கள். ஒவ்வொரு கூட்டமும் தான் பின்பற்றும் மார்க்கமே அல்லாஹ்வுக்குப் பிடித்தமான மார்க்கம் என்று திருப்திப்பட்டுக்கொள்கிறது. மற்றவர்களிடம் உள்ளவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

(54) 23.54. -தூதரே!- அவர்கள் மீது வேதனை இறங்கும் நேரம் வரை அவர்களை அறியாமையிலும் தடுமாற்றத்திலும் விட்டுவிடுவீராக.

(55) 23.55,56. தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தமக்குக் கிடைக்கவேண்டிய நன்மை விரைவாக வழங்கப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். நாம் அவர்களுக்கு அவகாசம் அளித்து, அவர்களை விட்டுப்பிடிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

(56) 23.55,56. தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தங்களுக்குக் கிடைத்த விரைவான நன்மை என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கும் பொருட்டு, அவர்களைப் படிப்படியாக தண்டிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

(57) 23.57. நிச்சயமாக யார் நம்பிக்கைகொண்டு, நல்லுபகாரம் செய்து கொண்டும் தங்கள் இறைவனை அஞ்சுகிறார்களோ,

(58) 23.58. யார் அவனது வேதத்தின் வசனங்களை நம்புகிறார்களோ,

(59) 23.59. யார் தங்கள் இறைவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குகிறார்களோ,

(60) 23.60. மறுமை நாளில் அவனிடம் திரும்பும் போது தங்களின் தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டானோ என்று அஞ்சிய நிலமையில், யார் நன்மையான காரியங்களில் முயற்சி செய்து, நன்மையான செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குகிறார்களோ,

(61) 23.61. மகத்தான இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நற்செயல்களின்பால் விரைகிறார்கள். அவர்களே அவற்றுக்கு முந்தக்கூடியவர்கள். இதனால்தான் மற்றவர்களை முந்திவிட்டார்கள்.

(62) 23.62. நாம் எந்த ஒரு மனிதனுக்கும் அவனால் செய்ய முடிந்த செயல்களையே பொறுப்பாக சாட்டுகிறோம். நம்மிடம் ஒரு புத்தகம் உள்ளது. அதில் அனைவரின் செயல்களையும் பதிவுசெய்து வைத்துள்ளோம். அது சந்தேகமற்ற சத்தியத்தைக்கொண்டு பேசும். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்படாது.

(63) 23.63. மாறாக நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் சத்தியத்தைக்கொண்டு பேசும் இந்த புத்தகத்தை விட்டும் அவர்கள் மீது இறங்கிய வேதத்தை விட்டும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு அவர்களின் நிராகரிப்புத் தவிர்ந்த வேறு செயல்களும் இருக்கின்றன.

(64) 23.64. இறுதியில் உலகில் சொகுசாக வாழ்ந்தோரை மறுமை நாளில் நாம் வேதனையால் தண்டிக்கும்போது அவர்கள் சத்தமாக அபயக்குரல் எழுப்புவார்கள்.

(65) 23.65. அல்லாஹ்வின் அருளைவிட்டு நிராசையடையச் செய்யும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் சப்தமிடவோ, அபயக்குரல் எழுப்பவோ வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் எந்த உதவியாளரும் உங்களுக்குக் கிடையாது.

(66) 23.66. உலகில் இறைவேத வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. அதனைக் கேட்கும் போது அதன் மீதுள்ள வெறுப்பினால் அவற்றைப் புறக்கணித்து திரும்பிச் செல்வோராக இருந்தீர்கள்.

(67) 23.67. நாங்கள் ஹரமைச் சேர்ந்தவர்கள்’ என்று எண்ணி மக்களிடம் கர்வம்கொண்டுதான் இவ்வாறெல்லாம் செய்தீர்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. ஏனெனில் நிச்சயமாக இறையச்சமுடையவர்கள்தாம் ஹரமைச் சார்ந்தவர்களாவர். அதைச் சுற்றி இருந்துகொண்டு தீய வார்த்தைகளால் இரவில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அதனைப் புனிதப்படுத்துவதில்லை.

(68) 23.68. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் இறக்கிய குர்ஆனை நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படுவதற்காக அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துவிட்டதா? அதனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து பொய்ப்பிக்கிறார்களா?

(69) 23.69. அல்லது அல்லாஹ் அவர்களின்பால் அனுப்பிய முஹம்மதை அறியாததால் அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா? அவர்கள் அவரையும் அவரது நம்பகத்தன்மையையும் அமானிதத்தையும் நன்கறிவார்கள்.

(70) 23.70. மாறாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவர்கள் பொய் கூறுகிறார்கள். மாறாக அவர் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் தங்களிடமுள்ள பொறாமையினாலும், அசத்தியத்திலுள்ள பிடிவாதத்தினாலும் சத்தியத்தை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.

(71) அவர்களின் மனங்கள் விரும்புவதற்கு ஏற்ப அல்லாஹ் காரியங்களை நிகழ்த்தி திட்டமிட்டால் வானங்களும் பூமியும் அதில் உள்ளவைகளும் சீர்குழைந்துவிடும். ஏனெனில் அவர்களுக்கு பின்விளைவுகளைப் பற்றியோ திட்டமிடலில் நல்லது கெட்டதைப் பற்றியோ தெரியாது.எனவே அவர்களுக்கு கண்ணியமும் மதிப்பும் பொதிந்த அல் குரானை வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களோ அதனை புறக்கணித்தவர்களாக உள்ளனர் .

(72) 23.72. -தூதரே!- நீர் அவர்களிடம் கொண்டுவந்த தூதுப்பணிக்காக அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்கள் உமது அழைப்பை நிராகரிக்கிறார்களா? இவ்வாறு நீர் கேட்கவில்லை. உம் இறைவன் உமக்கு வழங்கும் கூலி இவர்கள், இவர்கள் அல்லாத ஏனையவர்களின் கூலியைவிடச் சிறந்ததாகும். அவனே வாழ்வாதாரம் வழங்குவோரில் மிகச்சிறந்தவன்.

(73) 23.73. -தூதரே!- நிச்சயமாக நீர் இவர்களையும், மற்றவர்களையும் கோணலற்ற நேரான வழியின் பக்கம் அழைக்கின்றீர். அது இஸ்லாம் என்னும் வழியாகும்.

(74) 23.74. மறுமை நாளின் மீதும் அங்கு இடம்பெறும் கேள்வி கணக்கு, வழங்கப்படும் நற்கூலி, தண்டனை என்பவற்றின் மீதும் நம்பிக்கைகொள்ளாதவர்கள் இஸ்லாம் என்னும் நேரான வழியை விட்டு நரகத்தின்பால் இட்டுச் செல்லக்கூடிய கோணலான வழிகளின் பக்கம் சாய்ந்துள்ளார்கள்.

(75) 23.75. நாம் அவர்கள் மீது கருணைகாட்டி அவர்களைச் சூழ்ந்திருக்கும் பஞ்சத்தையும் பசியையும் போக்கிவிட்டால் அவர்கள் தடுமாறியவர்களாக சத்தியத்தை விட்டும் தங்களின் வழிகேட்டில் தொடர்கிறார்கள்.

(76) 23.76. நாம் பலவகையான சோதனைகளால் அவர்களைச் சோதித்தோம். ஆயினும் அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியவுமில்லை. துன்பங்கள் நிகழும் போது அவற்றைத் தம்மை விட்டும் நீக்குமாறு பயந்தவர்களாக அவனிடம் பிரார்த்திக்கவுமில்லை.

(77) 23.77. இறுதியில் நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்துவிட்டால் அவர்கள் எல்லா வகையான தீர்வு, நன்மை என்பவற்றை விட்டும் நிராசையடைந்துவிடுகிறார்கள்.

(78) 23.78. -மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்களே!- அல்லாஹ்வே நீங்கள் செவியேற்பதற்காக செவியையும் பார்ப்பதற்காக கண்களையும் விளங்கிக்கொள்வதற்காக உள்ளங்களையும் உங்களுக்காக படைத்துள்ளான். இருந்தும் நீங்கள் இந்த அருட்கொடைகளுக்கு மிகக் குறைவாகவே நன்றிசெலுத்துகிறீர்கள்.

(79) 23.79. -மனிதர்களே!- அவன்தான் உங்களைப் பூமியில் படைத்தான். மறுமை நாளில் விசாரணைக்காக கூலி வழங்குவதற்காக அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.

(80) 23.80. அவனே உயிரளிக்கிறான். அவனைத் தவிர யாராலும் உயிரளிக்க முடியாது. அவனே மரணிக்கச் செய்கிறான். அவனைத் தவிர யாராலும் மரணிக்கச் செய்ய முடியாது. இரவு, பகல் என்பவற்றின் இருள், ஒளி, நீளம், சுருக்கம் என இரவு பகலில் ஏற்படும் மாற்றங்களும் அவனது ஏற்பாடே. அவனுடைய வல்லமையையும் அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?

(81) 23.81. மாறாக நிராகரிக்கும் தங்களின் மூதாதையர்களும், முன்னோர்களும் கூறியவாறே அவர்கள் கூறினார்கள்.

(82) 23.82. நிராகரிக்கும் விதத்தில் அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் மரணித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப் போன பின்னர் விசாரணை செய்யப்படுவதற்காக நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?

(83) 23.83. -மரணத்தின் பின் எழுப்பப்படும்- என்ற இந்த வாக்குறுதி இதற்கு முன்னரும் எமக்கும் எங்களின் முன்னோர்களுக்கும் வழங்கப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறியதை நாம் காணவில்லை. இது முன்னோர்களின் பொய்கள், கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை.

(84) 23.84. -தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த பூமி யாருக்குரியது? அதில் வசிப்பவர்கள் யாருக்குரியவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் கூறுங்கள்.

(85) 23.85. “இந்த பூமியும் இதிலுள்ளவர்களும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக யார் பூமிக்கும் அதிலுள்ளவர்களுக்கும் சொந்தக்காரனோ அவன் நீங்கள் மரணித்த பிறகு உங்களை உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் என்பதை புரிந்து மாட்டீர்களா?”

(86) 23.86. நீர் அவர்களிடம் கேட்பீராக: “ஏழு வானங்களுக்கும் இறைவன் யார்? படைப்புகளில் மிகப் பெரிய மகத்தான அர்ஷின் அதிபதி யார்?”

(87) 23.87. “ஏழு வானங்களுக்கும் மகத்தான அர்ஷுக்கும் அல்லாஹ்வே சொந்தக்காரனாவான்” என்று விரைவில் அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”

(88) 23.88. நீர் அவர்களிடம் கூறுவீராக: “தனது அதிகாரத்தை விட்டும் எதுவும் தவறிவிட முடியாதளவு அனைத்து அதிகாரங்களும் யாருடைய கையில் உள்ளது? அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உதவிசெய்கிறான். அவன் யாருக்கேனும் தீங்கிழைக்க நாடிவிட்டால் அதிலிருந்து யாரும் தப்பி தன்னை விட்டும் அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் கூறுங்கள்.

(89) 23.89. அவர்கள் கூறுவார்கள்: “அனைத்துப் பொருளின் அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது.” நீர் அவர்களிடம் கேட்பீராக: “இதனை ஏற்றுக்கொண்டே அவனைத் தவிர மற்றவர்களை வணங்கும் உங்கள் அறிவு எங்கு போய்விட்டது? !”

(90) 23.90. அவர்கள் வாதாடுவது போலல்ல விடயம். மாறாக நாம் சந்தேகமற்ற சத்தியத்தைக் அவர்களிடம்கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்ற அவர்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்களே. அவர்கள் கூறுவதைவிட்டும் அல்லாஹ் மிக மிக உயர்ந்தவன்.

(91) 23.91. நிராகரிப்பாளர்கள் நினைப்பது போல அல்லாஹ் எந்த மகனையும் ஏற்படுத்தவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய உண்மையான வேறு எந்த ஒன்றும் இல்லை. ஒருவேளை அவனுடன் உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு கடவுளும் இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக்கொண்டு தனியே சென்றிருக்கும். ஒன்றையொன்று மிகைத்திருக்கும். அதனால் பிரபஞ்சத்தின் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கும். உண்மையில் இவற்றில் எதுவும் நிகழவில்லை. நிச்சயமாக இது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே அவன் தான் அல்லாஹ் என்பதைக் கூறுகிறது. அவன் இணைவைப்பாளர்கள் கூறும் பிள்ளை, இணை ஆகிய தனக்குப் பொருத்தமற்ற பண்புகளைவிட்டும் தூய்மையாகி விட்டான்.

(92) 23.92. படைப்புகளைவிட்டும் மறைவான ஒவ்வொன்றையும் புலனுருப்புகளால் அறியக்கூடிய, பார்க்கக்கூடிய அனைத்தையும் அவன் அறியக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனுக்கு இணை இருப்பதைவிட்டும் மிக உயர்ந்தவன்.

(93) 23.93. -தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை எனக்குக் காண்பிப்பதாயின்,

(94) 23.94. என் இறைவா! நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது நீ அவர்களைத் தண்டித்தால் அவர்களுடன் என்னை ஆக்கிவிடாதே. அவ்வாறு செய்தால் அவர்களைத் தாக்கும் அதே வேதனையால் நானும் பாதிக்கப்பட்டு விடுவேன்.”

(95) 23.95. நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையை உமக்குக் காட்டுவதற்கு ஆற்றல் பெற்றவர்களாவோம். அதனை விட்டோ, மற்றவற்றை விட்டோ நாம் இயலாதவர்களல்ல.

(96) 23.96. -தூதரே!- உமக்குத் தீங்கிழைப்போரை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அது அவர்களை மன்னித்து அவர்களின் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வதாகும். இணைவைத்தல், பொய்ப்பித்தல்ஆகிய அவர்களின் வர்ணனைகளையும், உமக்குப் பொருத்தமற்ற சூனியம், பைத்தியம் போன்ற பண்புகளால் உம்மை அவர்கள் வர்ணிப்பதையும் நாம் நன்கு அறிவோம்.

(97) 23.97. நீர் கூறுவீராக: “என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்தும், ஊசலாட்டங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

(98) 23.98. என்னுடைய ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்கள் என்னிடம் வருவதைவிட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.”

(99) 23.99. இறுதியில் இந்த இணைவைப்பாளர்களில் யாருக்கேனும் மரணம் நெருங்கிவிட்டால், தன் மீது இறங்குவதை அவர் கண்ணால் காணும்போது கடந்துபோன தன் வாழ்நாளுக்காகவும் அல்லாஹ்வின் விஷயத்தில் குறைவைத்ததற்காகவும் அவன் வருத்தப்பட்டுக் கூறுவான்: “என் இறைவா! என்னை மீண்டும் உலக வாழ்க்கையின்பால் அனுப்புவாயாக.

(100) 23.100. "நான் அங்கு மீண்டும் அனுப்பப்பட்டால் நற்செயல்களைச் செய்வேன்".நீ வேண்டுவது போலல்ல விடயம். நிச்சயமாக அது அவன் வாயால் கூறும் வெறும் வார்த்தைதான். ஒருவேளை அவன் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டான். இறந்துவிட்ட அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும்வரை உலகத்திற்கும், மறுமைக்கும் மத்தியில் ஒரு தடுப்பில் இருப்பார்கள். தவறியதை அடைவதற்கும், வீணாக்கியதை சீராக்கவும் மீண்டும் உலகத்தின்பால் திரும்ப மாட்டார்கள்.

(101) 23.101. சூர் ஊதுவதற்கு நியமிக்கப்பட்ட வானவர் மறுமை நாளை அறிவிக்கும் இரண்டாவது சூர் ஊதும் போது மறுமையின் பயங்கரங்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதால் பெருமைப்பட்டுக் கொள்ளும் உறவுகள் எதுவும் இருக்காது. தமக்கு அவசியமானவற்றில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

(102) 23.102. யாருடைய நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் பயப்படும் விஷயங்களிலிருந்து பாதுகாவல் பெற்று விரும்பும் விஷயங்களைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

(103) 23.103. யாருடைய தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டை விட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் தீங்கான காரியங்களைச் செய்து, பயனளிக்கக்கூடிய ஈமானையும், நற்செயல்களையும் விட்டுவிட்டு தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக்கொண்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.

(104) 23.104. அவர்களின் முகங்களை நெருப்பு பொசுக்கிவிடும். அதன் கடுகடுப்பின் கடுமையினால் அவர்களின் மேலுதடுகளும் கீழுதடுகளும் பற்களை விட்டும் சுருங்கி (விகாரமானதாக) தோற்றமளிக்கும்.

(105) 23.105. அவர்களைக் கண்டித்துக் கூறப்படும்: “உலகில் குர்ஆனின் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா? நீங்கள் அவற்றை நிராகரித்துக் கொண்டிருந்தீர்களே!”

(106) 23.106. அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ முன்னரே அறிந்த எங்களின் துர்பாக்கியம் எங்களை மிகைத்துவிட்டது. நாங்கள் சத்தியத்தைவிட்டு வழிதவறியவர்களாக இருந்தோம்.

(107) 23.107. எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. நாங்கள் இருந்த நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் மீண்டும் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் மீதே அநீதி இழைத்தவர்களாவோம். எங்களுக்கான காரணமும் அறுபட்டுவிடும்.”

(108) 23.108. அல்லாஹ் கூறுவான்: “இழிவடைந்தவர்களாக நரகத்திலேயே தங்கியிருங்கள். என்னிடம் பேசாதீர்கள்.”

(109) 23.109. நிச்சயமாக என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களில் ஒரு பிரிவினர் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே மிகச் சிறந்த கருணையாளனாவாய்.”

(110) 23.110. தங்கள் இறைவனை அழைக்கும் இந்த நம்பிக்கையாளர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். அவர்களைக் கேலி செய்தீர்கள். எந்த அளவுக்கெனில் அவர்களைக் கேலி செய்வதில் ஈடுபடுவது உங்களை அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் மறக்கடித்துவிட்டது. நீங்கள் அவர்களைப் பரிகாசம் செய்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.

(111) 23.111. நிச்சயமாக நான் மறுமை நாளில் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும், உங்கள் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்திலும், பொறுமையாக இருந்ததனால் சுவனத்தைப் பரிசாக அளித்தேன்.

(112) 23.112. அவன் கேட்பான்: “பூமியில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தீர்கள்? அதில் எவ்வளவு நேரங்களை வீணாக்கினீர்கள்?”

(113) 23.113. அவர்கள் பதிலாக கூறுவார்கள்: “நாங்கள் ஒருநாளோ அல்லது ஒருநாளின் ஒருபகுதியோ தங்கியிருப்போம். நாட்களையும், மாதங்களையும் கணக்கிடுவோரிடம் கேட்பாயாக.”

(114) 23.114. அவன் கூறுவான்: “நீங்கள் உலகில் குறைவான காலமே தங்கியிருந்தீர்கள். தங்கியிருக்கும் காலத்தை நீங்கள் அறிந்திருந்தால் வழிப்படுவதில் பொறுமையாக இருப்பது உங்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்.

(115) 23.115. -மனிதர்களே!- உங்களை நாம் நோக்கமின்றி வீணாகப் படைத்துள்ளோம், கால்நடைகளைப் போல உங்களுக்கும் கூலியோ, தண்டனையோ வழங்கப்படாது என்றும் நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காக, கூலி கொடுக்கப்படுவதற்காக நம்மிடம் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?

(116) 23.116. தான் படைத்தவற்றில் தான் விரும்பியவாறு ஆட்சி செலுத்தும் உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக தூய்மையானவன். அவனுடைய வாக்குறுதியும், வார்த்தையும் உண்மையானது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி. அது படைப்புகளில் மகத்தானது. படைப்புகளில் மிகவும் மகத்தானதிற்கு அதிபதியாக இருப்பவனே படைப்புகள் அனைத்திற்கும் அதிபதியுமாவான்.

(117) 23.117. யார் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குத் தகுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் அற்ற வேறு கடவுளையும் அழைப்பாரோ (அல்லாஹ்வைத் தவிரவுள்ள வணங்கப்படும் அனைத்தின் நிலையும் இதுவே) நிச்சயமாக அவருடைய தீய செயலுக்கான தண்டனை அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அவரை வேதனையால் தண்டிப்பான். பயப்படுவதில் (நரகம்) இருந்து தப்பித்து எதிர்பார்ப்பதை (சுவனத்தை) பெற்று நிராகரிப்பாளர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.

(118) 23.118. -தூதுரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக. என்மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே பாவிகளுக்கு கருணை புரிந்து அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவனாவாய்.”