26 - ஸூரா அஷ்ஷுஅரா ()

|

(1) 26.1. (طسٓمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 26.2. இவை அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.

(3) 26.3. -தூதரே!- அவர்கள் நேர்வழியடைவதில் உள்ள உமது ஆர்வத்தின் காரணமாக கவலையினால் உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்.

(4) 26.4. நாம் அவர்களின் மீது வானத்திலிருந்து ஏதேனும் சான்றினை இறக்க நாடினால் இறக்கியிருப்போம். அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். ஆயினும் அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கைகொள்கிறார்களா? என்பதை நாம் சோதிக்கும்பொருட்டு அவ்வாறு நாம் நாடவில்லை.

(5) 26.5. அளவிலாக் கருணையாளனிடமிருந்து அவன் ஒருவனே என்பதையும் தூதரின் நம்பகத்தன்மையையும் அறிவிக்கக்கூடிய ஆதாரங்களுடன் எந்தவொரு புதிய அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் கேட்காமலும் நம்பாமலும் புறக்கணிக்கவே செய்கிறார்கள்.

(6) 26.6. தங்களின் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்துவிட்டார்கள். எனவே அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவற்றின் தகவல்களின் உண்மைநிலை அவர்களிடம் வந்துவிடும். அவர்களின் மீது வேதனை இறங்கும்.

(7) 26.7. இவர்கள் தமது நிராகரிப்பில் இன்னும் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்களா? இவர்கள் பூமியில் எத்தனை விதமான, அழகான, பயன்தரக்கூடிய தாவரங்களின் வகைகளில் ஒவ்வொரு வகையையும் நாம் முளைக்கச் செய்துள்ளோம் என்பதைப் பார்க்கவில்லையா?

(8) 26.8. நிச்சயமாக பூமியில் பல்வேறு விதமான தாவரங்களை முளைக்கச் செய்துள்ளமை, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவனிடம் உண்டு என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.

(9) 26.9. -தூதரே!- உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் தன் அடியார்களின் மீது மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

(10) 26.10. -தூதரே!- உம் இறைவன் மூஸாவை அழைத்ததை நினைவுகூர்வீராக. அவன் அவரிடம் “அல்லாஹ்வை நிராகரித்து உம் சமூகத்தை அடிமையாக்கி அநியாயம் இழைத்த மூஸாவின் சமூகத்திடம் செல்வீராக. என்று ஏவினான்.

(11) 26.11. அவர்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தவர்களாவர். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுமாறு அவர்களிடம் மென்மையாகக் ஏவுவீராக.

(12) 26.12. மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் அவர்களுக்கு உன்னை பற்றி எடுத்துரைக்கும் விடயத்தை அவர்கள் பொய்ப்பிப்பார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.

(13) 26.13. அவர்கள் என்னை பொய்ப்பித்தால் என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும். என் நாவு பேசாமல் நின்றுவிடும். எனவே என் சகோதரர் ஹாரூன் எனக்கு உதவியாக இருக்கும் பொருட்டு அவரிடம் ஜிப்ரீலை அனுப்புவீராக.

(14) 26.14. நான் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொன்றதால் எனக்கெதிரான ஒரு குற்றச்சாட்டும் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.

(15) 26.15. அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: “ஒருபோதும் இல்லை. அவர்கள் உம்மைக் கொல்ல மாட்டார்கள். நீரும் உம் சகோதரர் ஹாரூனும் உங்களின் நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய நம் சான்றுகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக உங்கள் இருவருக்கும் உதவிசெய்து உறுதிப்படுத்துவதன் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். நீங்கள் கூறுவதையும் உங்களிடம் கூறப்படுவதையும் செவியேற்றுக் கொண்டிருப்பேன். அவற்றில் எதுவும் நம்மைவிட்டுத் தப்பிவிட முடியாது.

(16) 26.16. இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, அவனிடம், “நிச்சயமாக நாங்கள் படைப்புகள் அனைத்தையும் படைத்த இறைவனிடமிருந்து உம் பக்கம் அனுப்பப்பட்டுள்ள தூதர்களாவோம்.” என்று கூறுங்கள்.

(17) 26.17. இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடும்.

(18) 26.18. ஃபிர்அவ்ன் மூஸாவிடம் கூறினான்: “நீ சிறுவனாக இருந்தபோது நாங்கள் உன்னை வளர்க்கவில்லையா? உன் வாழ்நாளில் பல வருடங்களை நீ எங்களிடையே கழித்துள்ளாய். எது உன்னைத் தூதர் என்று வாதாடத் தூண்டியது?

(19) 26.19. உன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு உதவிசெய்யும்பொருட்டு கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவனைக்கொன்று பெரும் ஒரு விபரீதத்தை செய்தாய். நான் உனக்குச் செய்த உபகாரங்களுக்கு நன்றிகெட்டவனாக உள்ளாய்.

(20) 26.20. மூஸா ஃபிர்அவ்னிடம் ஒத்துக்கொண்டவராக கூறினார்: “எனக்கு வஹி வருதற்கு முன்னால், அறியாதவனாக இருந்தபோது நான் அந்த மனிதனைக் கொன்றுவிட்டேன்.

(21) 26.21. நான் அவரை கொன்றதன் பின், நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள் என்று நான் அஞ்சியதனால் உங்களிடமிருந்து தப்பி மத்யன் என்ற ஊரின் பக்கம் ஒடிவிட்டேன். என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி மக்களிடம் அவன் அனுப்பும் தூதர்களில் ஒருவராக என்னையும் ஆக்கினான்.

(22) 26.22. நீ இஸ்ராயீலின் மக்களை அடிமையாக்கிவிட்டு என்னை அடிமையாக்காமல் நீ வளர்த்தது உண்மையிலேயே நீ எனக்குச் செய்த அருள்தான். ஆனாலும் உனக்கு பிரச்சாரம் செய்வதற்கு அது எனக்குத் தடையல்ல.

(23) 26.23. ஃபிர்அவ்ன் மூஸாவிடம் கேட்டான்: “ நிச்சயமாக உம்மைத் தூதராக அனுப்பியதாக நீர் எண்ணும், படைப்புகள் அனைத்திற்குமான அந்த இறைவன் யார்?”

(24) 26.24. மூஸா பிர்அவ்னுக்கு பதிலாகக் கூறினார்: “வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் படைத்து, அனைத்து படைப்புகளையும் படைத்த இறைவனாவான். நிச்சயமாக அவன்தான் அவற்றின் இறைவன் என நீங்கள் உறுதியாக நம்பிக்கைகொள்பவர்களாக இருந்தால் அவனையே வணங்குங்கள்.”

(25) 26.25. ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்த தன் சமூகத்துத் தலைவர்களிடம் கூறினான்: “நீங்கள் மூஸாவின் பதிலையும் அதிலுள்ள பொய்யான வாதத்தையும் கேட்கமாட்டீர்களா?”

(26) 26.26. மூஸா அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்தான் உங்களின் இறைவனும் முன்சென்ற உங்கள் முன்னோர்களின் இறைவனும் ஆவான்.”

(27) 26.27. ஃபிர்அவ்ன் கூறினான்: “நிச்சயமாக தன்னை உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்று எண்ணிக் கொள்ளும் இவர் எப்படி பதிலளிப்பது என்று தெரியாத, புரியாததைக் கூறும் பைத்தியக்காரர் ஆவார்.”

(28) 26.28. மூஸா கூறினார்: “நீங்கள் புரிந்துகொள்வோராக இருந்தால் நான் உங்களை எந்த இறைவனின்பால் அழைக்கின்றேனோ அவன் கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவனாவான்.”

(29) 26.29. ஃபிர்அவ்னால் வாதம் செய்ய முடியாமல் போனபோது அவன் மூஸாவிடம் கூறினான்: “என்னைத் தவிர வேறு இறைவனை நீ வணங்கினால் உன்னை சிறையிலடைத்து விடுவேன்.”

(30) 26.30. மூஸா பிர்அவ்னிடம் கூறினார்: “அல்லாஹ்விடமிருந்து உன்னிடம் கொண்டுவந்தவற்றில் நான் உண்மையாளனே என்பதை தெளிவாக்கக்கூடிய ஆதாரத்தை உன்னிடம் கொண்டுவந்தாலும் நீ என்னை சிறையில் அடைப்பாயா?”

(31) 26.31. அவன் கூறினான்: “உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் உமது நம்பகத் தன்மைக்குரிய ஆதாரம் என நீர் கூறுவதைக் கொண்டு வாரும்.”

(32) 26.32. மூஸா தம் கைத்தடியை தரையில் எறிந்தார். அது பார்ப்பவர்களுக்குத் தெளிவான பாம்பாகிவிட்டது.

(33) 26.33. தம் கையை சட்டைப்பையில் நுழைத்தார். அதனை வெளியே எடுத்தபோது அது பார்ப்பவர்களுக்கு பிரகாசிக்கும் வெண்குஷ்டமற்ற வெண்மையாக வெளிப்பட்டது.

(34) 26.34. ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்த தன் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இந்த மனிதர் கைதேர்ந்த சூனியக்காரராக இருக்கின்றார்.

(35) 26.35. தன் சூனியத்தின் மூலம் உங்களை உங்களின் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார். நாம் அவரை என்ன செய்யலாம்? இது குறித்து உங்களில் ஆலோசனை என்ன?

(36) 26.36. அவனிடம் கூறினார்கள்: “அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளியுங்கள். அவர்கள் இருவரையும் அவசரப்பட்டு தண்டித்து விடாதீர்கள். எகிப்தின் நகரங்களில் சூனியக்காரர்களை ஒன்றுதிரட்டக்கூடியவர்களை அனுப்புங்கள்.

(37) 26.37. அவர்கள் உங்களிடம் கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் கொண்டுவருவார்கள்.

(38) 26.38. ஃபிர்அவ்ன் மூஸாவுடன் போட்டியிடுவதற்காக சூனியக்காரர்களை குறித்த நேரத்தில், இடத்தில் ஒன்றுதிரட்டினான்.

(39) 26.39. மக்களிடம் கூறப்பட்டது: “மூஸா வெல்லப்போகிறாரா? அல்லது சூனியக்காரர்கள் வெல்வார்களா? என்பதைப் பார்க்க நீங்கள் ஒன்றுகூடுவீர்களா?

(40) 26.40. சூனியக்காரர்கள் மூஸாவை வென்றுவிட்டால் நாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றலாம்.

(41) 26.41. மூஸாவுடன் போட்டிபோட சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தபோது அவனிடம் கேட்டார்கள்: “நாங்கள் மூஸாவை வென்றுவிட்டால் எங்களுக்கு பொருளோ, பதவியோ கூலியாகக் கிடைக்குமா?”

(42) 26.42. ஃபிர்அவ்ன் கூறினான்: “ஆம். உங்களுக்குக் கூலி உண்டு. நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறும் சமயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்று எனக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிடுவீர்கள்.”

(43) 26.43. மூஸா அல்லாஹ்வின் வெற்றியின் மீது உறுதியான நம்பிக்கைகொண்டவராக, நிச்சயமாக தன்னிடம் உள்ளது சூனியம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியவராக அவர்களிடம் கூறினார்: “நீங்கள் போடக்கூடிய கயிறுகளையும் கைத்தடிகளையும் போடுங்கள்.”

(44) 26.44. அவர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டார்கள். போடும்போது, “ஃபிர்அவ்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக, நாங்கள்தாம் வெற்றிபெறுவோம். மூஸா தோற்பவரே” எனக் கூறினார்கள்.

(45) 26.45. மூஸா தம் கைத்தடியைப் போட்டார். அது பாம்பாக மாறி அவர்கள் சூனியத்தினால் மக்களை மயக்குவதற்கு உருவாக்கியிருந்தவற்றை விழுங்கிவிட்டது.

(46) 26.46. மூஸாவின் கைத்தடி அவர்கள் தமது சூனியத்தின் மூலம் உருவாக்கிய அனைத்தையும் விழுங்கியதைக் கண்ட சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.

(47) 26.47. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம்.

(48) 26.48. அவன் தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாவான்.”

(49) 26.49. ஃபிர்அவ்ன் சூனியக்காரர்கள் நம்பிக்கை கொண்டதை மறுத்தவனாக கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை ஏற்றுக் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த குரு. நீங்கள் அனைவரும் எகிப்தியர்களை வெளியேற்றுவதற்காக இரகசியமாகத் திட்டம் தீட்டியுள்ளீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரின் மாறுகை, மாறுகாலை (இடது கையுடன் வலது காலையும் அல்லது வலது கையுடன் இடது காலையும்) வெட்டிவிடுவேன். பேரீச்சந்தண்டுகளில் உங்கள் அனைவரையும் கட்டிவிடுவேன். உங்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.

(50) 26.50. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “உலகிலே வெட்டித் தொங்கவிடுவேன் என்ற உம்முடைய மிரட்டலால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. உமது தண்டனை நீங்கிவிடும். நாங்கள் எங்கள் இறைவனின்பால் செல்லக்கூடியவர்கள். அவன் விரைவில் எங்களை நிலையான தன் அருளில் பிரவேசிக்கச் செய்திடுவான்.

(51) 26.51. நிச்சயமாக நாங்கள் மூஸாவின் மீது முதலில் நம்பிக்கைகொண்டவர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் செய்த முந்தைய பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுவான் என்றே நாங்கள் ஆதரவு வைக்கிறோம்.

(52) 26.52. இஸ்ராயீலின் மக்களை இரவோடு இரவாக அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். ஏனெனில் நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனைச் சார்ந்தவர்களும் அவர்களைத் தடுக்க பின்தொடர்ந்து வருவார்கள்.

(53) 26.53. இஸ்ராயீலின் மக்கள் எகிப்தைவிட்டுச் செல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் அவர்களை தடுக்க ஃபிர்அவ்ன் தன் படையினரில் சிலரை படையை திரட்டுமாறு நகரங்களில் அனுப்பிவைத்தான் .

(54) 26.54. இஸ்ராயீலின் மக்களை குறைத்து மதிப்பிட்டவனாக ஃபிர்அவ்ன் கூறினான்: “நிச்சயமாக இவர்கள் சிறிய கூட்டம்தான்.

(55) 26.55. நிச்சயமாக அவர்கள் மீது நம்மைக் கோபம் கொள்ள வைத்து விட்டார்கள்.

(56) 26.56. நிச்சயமாக நாங்கள் அவர்களுக்காக தயார்நிலையிலும் விழித்துக்கொண்டும் இருக்கின்றோம்.

(57) 26.57. எகிப்திலிருந்து ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் வெளியேற்றினோம். அந்த நாடு செழிப்பான தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் கொண்டிருந்தது.

(58) 26.58. பண கருவூலங்களையும் அழகிய வசிப்பிடங்களையும் பெற்றிருந்தது.

(59) 26.59. ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் இந்த அருள்களிலிருந்து வெளியேற்றியது போன்றே அவர்களுக்குப் பின் இந்த வகையான அருட்கொடைகளை இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் ஷாம் தேசத்தில் நாம் வழங்கினோம்.

(60) 26.60. ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் இஸ்ராயீலின் மக்களை சூரியன் உதிக்கும் சமயத்தில் பின்தொடர்ந்து சென்றார்கள்.

(61) 26.61. இரு கூட்டத்தாரும் - ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவும் அவரது கூட்டத்தாரும் - நேருக்குநேர் எதிர்கொண்டபோது மூஸாவின் தோழர்கள் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் நம்மைப் பிடித்துவிடுவார்கள். நமக்கு அவர்களுடன் மோதும் பலம் இல்லை.”

(62) 26.62. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக ஆதரவளித்து உதவி செய்ய என் இறைவன் என்னுடன் இருக்கின்றான். அவன் எனக்கு தப்புவதற்கான பாதையைக் காட்டுவான்.”

(63) 26.63. தம் கைத்தடியால் கடலை அடிக்குமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். அவர் அவ்வாறு அடித்தார். கடல் பிளந்து இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு குலங்களுக்கேற்ப பன்னிரண்டு பாதைகளாக மாறியது. கடலில் இருந்து பிளந்த ஒவ்வொரு பிளவும் தண்ணீர் புகாதவாறு உறுதியான பிரமாண்டமான பெரும் மலைகளை போன்று இருந்தது.

(64) 26.64. ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் நாம் நெருக்கமாகக் கொண்டுவந்தோம். செல்லமுடியுமான பாதை என்ற எண்ணத்தில் அவர்கள் கடலில் புகுந்தனர்.

(65) 26.65. மூஸாவையும் அவருடன் இருந்த இஸ்ராயீலின் மக்களையும் நாம் காப்பாற்றினோம். அவர்களில் யாரும் அழியவில்லை.

(66) 26.66. பின்னர் ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் கடலில் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.

(67) 26.67. நிச்சயமாக மூஸாவுக்காக கடல் பிளந்து அவர் தப்பியதிலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அழிக்கப்பட்டதிலும் மூஸாவின் நம்பகத்தன்மைக்கான சான்று இருக்கின்றது. ஆயினும் ஃபிர்அவ்னுடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாய் இருக்கவில்லை.

(68) 26.68. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(69) 26.69. -தூதரே!- அவர்களுக்கு இப்ராஹீமின் சம்பவத்தை எடுத்துரைப்பீராக.

(70) 26.70. அவர் தம் தந்தை ஆசரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?”

(71) 26.71. அவரது சமூகத்தார் அவருக்கு கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்.”

(72) 26.72. இப்ராஹீம் அவர்களிடம் கேட்டார்: “நீங்கள் உங்கள் சிலைகளை அழைக்கும்போது உங்களின் அழைப்பை அவை செவியேற்கின்றனவா?

(73) 26.73. அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா? அல்லது மாறுசெய்தால் தீங்கிழைக்கின்றனவா?

(74) 26.74. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவற்றை அழைத்தால் அவை எங்களின் அழைப்பை செவியுறாது. அவற்றிற்குக் கட்டுப்பட்டால் எங்களுக்குப் பலனளிக்காது; மாறுசெய்தால் தீங்கிழைக்காது. மாறாக எங்களின் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.”

(75) 26.76. இப்ராஹீம் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?

(76) 76. உங்கள் முன்னோர்களான உங்களின் தந்தைகள் வணங்கியவற்றையும் (குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா?)

(77) 26.77. நிச்சயமாக அவையனைத்தும் எனக்கு எதிரிகள். ஏனெனில் நிச்சயமாக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவை.

(78) 26.78. அவனே என்னைப் படைத்தான். இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மையின்பால் அவனே எனக்கு வழிகாட்டுவான்.

(79) 26.79. எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான்.

(80) 26.80. நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத் தவிர என்னைக் குணப்படுத்தும் எவரும் இல்லை.

(81) 26.81. என் தவணை நிறைவடைந்தால் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். நான் மரணித்த பிறகு அவனே எனக்கு உயிரளிப்பான்.

(82) 26.82. கூலிகொடுக்கப்படும் நாளில் அவனே என் பாவங்களை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்.

(83) 26.83. இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! எனக்கு மார்க்கத்தில் ஞானத்தை வழங்குவாயாக. என்னை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து எனக்கு முன் சென்ற நல்லவர்களான நபிமார்களுடன் சேர்த்தருள்வாயாக.”

(84) 26.84. எனக்குப் பிறகு வரும் தலைமுறைகளிடம் எனக்கு நற்பெயரை, அழகிய புகழை ஏற்படுத்துவாயாக.

(85) 26.85. நம்பிக்கை மிக்க உன் அடியார்கள் இன்பம் பெறும் சுவனத்தின் அந்தஸ்த்தை பெறக்கூடியவர்களில் என்னையும் ஆக்குவாயாக. அங்கு என்னை வசிக்கச் செய்வாயாக.

(86) 26.86. என் தந்தையை மன்னித்துவிடுவாயாக. நிச்சயமாக அவர் இணைவைத்து சத்தியத்தைவிட்டும் வழிகெட்டவர்களில் ஒருவராக இருக்கின்றார். இந்தப் பிரார்த்தனை இப்ராஹிம் தம் தந்தை நரகவாசிகளில் ஒருவர் என்பதை அறிவதற்கு முன்னர் செய்ததாகும். தம் தந்தை நரகவாசி என்பதை அறிந்த பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் நீங்கிவிட்டார், அவருக்காக பிரார்த்தனை செய்யவில்லை.

(87) 26.87. மக்கள் விசாரணைக்காக எழுப்படும் மறுமை நாளில் என்னை வேதனையால் இழிவுபடுத்திவிடாதே.

(88) 26.88. உலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவியாக இருந்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது.

(89) 26.89. ஆயினும் இணைவைப்பு, நயவஞ்சகம், முகஸ்துதி, தற்பெருமை ஆகியவை இன்றி தூய்மையான உள்ளத்துடன் அவனிடம் வந்தவர்களைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்த செல்வங்களைக் கொண்டு அவனுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளைக் கொண்டு பயனடைவான்.

(90) 26.90. தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும்.

(91) 26.91. மஹ்ஷர் பெருவெளியில் சத்திய மார்க்கத்தை விட்டும் தடம்புரண்ட வழிகேடர்களுக்காக நரகம் வெளிப்படுத்தப்படும்.

(92) 26.92,93. அவர்களைக் கண்டிக்கும் விதமாக கேட்கப்படும்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக்கொண்டிருந்த சிலைகளெல்லாம் எங்கே?

(93) அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்குபவை அல்லாஹ்வின் வேதனையைவிட்டும் உங்களைத் தடுத்து உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது அவை தங்களுக்காவது உதவி செய்யுமா?”

(94) 26.94,95. அவர்களும் அவர்களை வழிகெடுத்தவர்களும் சிலருக்கு மேல் சிலர் நரகத்தில் எறியப்படுவார்கள்.

(95) இப்லீஸின் உதவியாளர்களான ஷைத்தான்கள் என அவர்கள் அனைவரும் (எரியப்படுவார்கள்). அவர்களில் எவருக்கும் விதிவிலக்கில்லை.

(96) 26.96. அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை வணங்கி, அவர்களை இணைகளாக ஏற்படுத்திய இணைவைப்பாளர்கள் தம்மால் வணங்கப்பட்டவர்களுடன் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:

(97) 26.97. அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் சத்தியத்தை விட்டு தெளிவான வழிகேட்டில் இருந்தோம்.

(98) அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகளைப் போல் உங்களை ஆக்கி அவனை வணங்குவது போன்று உங்களை வணங்கிவிட்டோம்.

(99) 26.99. அல்லாஹ்வை விடுத்து தங்களை வணங்கும்படி அழைத்த குற்றவாளிகள்தாம் எங்களை சத்தியப் பாதையை விட்டும் வழிதவறச் செய்தார்கள்.

(100) 26.100. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக அவனிடம் பரிந்து பேசுபவர்கள் யாரும் இல்லை.

(101) 26.101. எங்களைப் பாதுகாத்து எமக்காக பரிந்துரை செய்யக்கூடிய தூய அன்புள்ள எந்த நண்பனும் எங்களுக்கு இல்லை.

(102) 26.102. நிச்சயமாக நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களாக ஆகிவிடுவோம்.

(103) 26.103. நிச்சயமாக மேற்கூறப்பட்ட இப்ராஹீமின் சம்பவத்திலும் பொய்ப்பித்தவர்களின் முடிவிலும் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை.

(104) 26.104. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(105) 26.105. நூஹின் சமூகத்தினர் அவரை நிராகரித்தபோது தூதர்களையும் நிராகரித்தார்கள்.

(106) 26.142. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?

(107) 26.107. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியின் மூலம் அறிவிப்பதை கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

(108) 26.108. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(109) 26.109. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு எவரிடமும் இல்லை.

(110) 26.110. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(111) 26.111. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: -“நூஹே!- தலைவர்களோ மரியாதைக்குரியவர்களோ உம்மைப் பின்பற்றாமல் தாழ்ந்த மக்களே உம்மைத் தொடர்வோராக இருக்கும் நிலையில் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொண்டு நீர் கொண்டுவந்ததைப் பின்பற்றி செயல்படுவதா?

(112) 26.112. நூஹ் அவர்களிடம் கூறினார்: “இந்த நம்பிக்கையாளர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர்களின் செயல்களைக் கணக்கிடும் கண்காணிப்பாளன் அல்ல.

(113) 26.113. அவர்கள் இரகசியமாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் அறிந்த அல்லாஹ்விடமே அவர்களின் கேள்விகணக்கு உள்ளது. என்னிடமல்ல. நீங்கள் கூறியதை நீங்கள் உணர்ந்திருந்தால் கூறியிருக்கமாட்டீர்கள்.

(114) 26.114. நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்க நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பதற்காக நம்பிக்கையாளர்களை என் சபையைவிட்டும் விரட்டமாட்டேன்.

(115) 26.115. நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.

(116) 26.116. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நீர் எங்களை அழைக்கும் விடயத்தை விட்டும் நிறுத்திக்கொள்ளவில்லையென்றால் நீர் ஏசப்படுவதோடு கல்லெறிந்து கொல்லப்படுபவராக இருப்பீர்.”

(117) 26.117. நூஹ் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! நிச்சயமாக என் சமூகம் என்னை பொய்ப்பித்து உன்னிடமிருந்து நான் கொண்டுவந்ததில் என்னை உண்மைப்படுத்தவில்லை.

(118) 26.118. எனவே அசத்தியத்தில் பிடிவாதமாக இருப்பதனால் அவர்களை அழித்து எனக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. என்னையும் என்னுடன் நம்பிக்கைகொண்டவர்களையும் நீ நிராகரிப்பாளர்களுக்கு அளிக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.

(119) 26.119. நாம் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து அவரையும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களையும் மனிதர்களாலும் உயிரினங்களாலும் நிரப்பப்பட்ட கப்பலில் ஏற்றி காப்பாற்றினோம்.

(120) 26.120. பின்னர் அவர்களுக்குப் பிறகு மற்றவர்களை மூழ்கடித்துவிட்டோம். அவர்கள்தான் நூஹின் கூட்டத்தினர்.

(121) 26.121. நிச்சயமாக மேற்கூறப்பட்ட நூஹ் மற்றும் அவரது சமூகத்தின் சம்பவத்திலும் நாம் அவரையும் அவருடன் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றி அவரின் சமூகத்தில் காணப்பட்ட நிராகரிப்பாளர்களை அழித்ததிலும் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.

(122) 26.122. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(123) 26.123. ஆத் சமூகம் தங்களின் தூதர் ஹூதை பொய்ப்பித்து போது (ஏனைய) தூதர்களையும் பொய்ப்பித்தனர்.

(124) 26.142. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹூத் அவர்களிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூறுங்கள்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?

(125) 26.125. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எடுத்துரைக்குமாறு எனக்கு கட்டளையிட்டதை கூட்டவோ, குறைக்கவோ மாட்டேன்.

(126) 26.126. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(127) 26.127. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத ஏனையவர்களிடத்தில் அல்ல.

(128) 26.128. உயரமான இடங்களில் எல்லாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பயன்தராத பெரும் கட்டங்களை வீணாக எழுப்புகிறீர்களா?

(129) 26.129. நீங்கள் இவ்வுலகை விட்டுச்செல்லாமல் நிரந்தரமாக வாழ்பவர்களைப் போல கோட்டைகளையும் மாளிகைகளையும் நிர்மாணிக்கிறீர்களா?

(130) 26.130. நீங்கள் யாரையேனும் கொலை செய்தால் அல்லது தாக்கினால் இரக்கமின்றி கொடுங்கோலர்களாக தாக்குகிறீர்கள்?

(131) 26.131. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(132) 26.132. நீங்கள் அறிந்துள்ள தனது அருள்களை உங்களுக்கு வழங்கிய அல்லாஹ்வின் கோபத்திற்கு அஞ்சுங்கள்.

(133) 26.133. அவன் உங்களுக்கு கால்நடைகளையும் பிள்ளைகளையும் வழங்கியுள்ளான்.

(134) 26.134. தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் வழங்கியுள்ளான்.

(135) 26.135. -என் சமூகமே!- நிச்சயமாக நான் உங்களின் மீது மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.

(136) 26.136. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “எங்களுக்கு நீர் அறிவுரை கூறுவதும் கூறாமல் இருப்பதும் ஒன்றுதான். நாங்கள் உம்மீது நம்பிக்கைகொள்ள மாட்டோம். நாங்கள் இப்போது இருப்பதை விட்டு ஒருபோதும் திரும்பிவிட மாட்டோம்.

(137) 26.137. இவை முன்னோர்களின் மார்க்கமும் வழமைகளும் குணங்களுமாகும்.

(138) 26.138. நாங்கள் தண்டிக்கப்படுபவர்களல்ல.

(139) 26.139. அவர்கள் தங்களின் தூதர் ஹூதை தொடர்ந்து பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை நாசகரமான காற்றால் அழித்தோம். நிச்சயமாக இவ்வாறு அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.

(140) 26.140. -தூதரே!- தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(141) 26.141. ஸமூத் சமூகமும் தங்களின் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்து தூதர்களை பொய்ப்பித்தனர்.

(142) 26.142. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?

(143) 26.143. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

(144) 26.144. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(145) 26.145. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத ஏனையவர்களிடமல்ல.

(146) 26.146. நீங்கள் இருக்கும் நன்மைகளிலும், அருட்கொடைகளிலும் உண்டு பயப்படாமல் அமைதியாக விடப்படுவதை எதிர்பார்க்கின்றீர்களா?

(147) 26.147. தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும்

(148) 26.148. விளைநிலங்களிலும் மிருதுவான நல்ல பழங்களைக்கொண்ட பேரீச்சந்தோப்புகளிலும் (அச்சமின்றி அமைதியாக வாழ விட்டுவிடப்படுவீர்களா?)

(149) 26.149. நீங்கள் மலைகளை குடைந்து நீங்கள் வசிப்பதற்கான வீடுகளை அமைக்கிறீர்கள். நீங்கள் அவற்றைக் குடையும் திறமையுடையவர்களாக இருக்கிறீர்கள்.

(150) 26.150. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(151) 26.151. பாவங்கள் புரிந்து தங்கள் மீதே வரம்புமீறிக்கொண்டவர்களுக்குக் கட்டுப்படாதீர்கள்.

(152) 26.152. அவர்கள் பாவங்களைப் பரப்புவதன் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வதில்லை.

(153) 26.153. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டவர்களில் ஒருவராக இருந்ததால், அது மிகைத்து உமது அறிவைப் போக்கிவிட்டது.

(154) 26.154. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீர் தூதராக இருப்பதற்கு எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. நிச்சயமாக தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று கூறும் விஷயத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் உமது நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரத்தைக் கொண்டு வாரும்.

(155) 26.155. அவர்களுக்கு ஸாலிஹ் கூறினார்: -ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் ஒரு அடையாளத்தை வழங்கினான். அவன் பாறையிலிருந்து வெளிப்படுத்திய பெண் ஒட்டகமே அதுவாகும்.- “இது தொட்டு பார்க்கக்கூடிய பெண் ஒட்டகமாகும். நீரில் இதற்கும் பங்குண்டு. உங்களுக்கும் குறித்த அளவு பங்கு உண்டு. உங்களுக்குரிய நாளில் இந்த ஒட்டகம் நீர் அருந்தாது. இது நீர் அருந்தும் நாளில் நீங்கள் அருந்த முடியாது.”

(156) 26.156. அதற்கு அடித்தோ, அதனை அறுத்தோ எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் மாபெரும் நாளில் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் வேதனை உங்களைத் தாக்கி அழித்து விடும்.

(157) 26.157. அவர்கள் அதனைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள். அவர்களில் மிகவும் துஷ்டன் அதனைக் கொன்றுவிட்டான். நிச்சயமாக வேதனை தங்கள் மீது சந்தேகம் இல்லாமல் உறுதியாக இறங்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் தாங்கள் செய்த செயலுக்காக வருத்தப்பட்டு நின்றார்கள். ஆனால் வேதனையைக் கண்ணால் காணும் போது வருத்தப்படுவது எந்தப் பயனையும் தராது.

(158) 26.158. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையான பூகம்பமும் சத்தமும் அவர்களைத் தாக்கியது. நிச்சயமாக மேற்கூறப்பட்ட ஸாலிஹ் மற்றும் அவரது சமூகத்தின் சம்பவத்தில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.

(159) 26.159. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் (யாவற்றையும்) மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(160) 26.160. லூத்தின் சமூகம் அவரை பொய்ப்பித்ததன் மூலம் தூதர்களை பொய்ப்பித்தனர்.

(161) 26.161. அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?

(162) 26.162. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

(163) 26.163. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(164) 26.164. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத எனையவர்களிடமல்ல.

(165) 26.165. நீங்கள் ஆண்களின் பின்புறத்தில் அவர்களுடன் உறவுகொள்கிறீர்களா?

(166) 26.166. உங்களின் இச்சையைத் தணித்துக்கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவியரை விட்டுவிடுகிறீர்களா? மாறாக யாரும் செய்யாத மோசமான இந்த செயலின் மூலம் நீங்கள் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறிவிட்டீர்கள்.

(167) 26.167. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் செய்யும் செயலைத் தடுப்பதிலிருந்து, மறுப்பதிலிருந்து நீர் விலகிக்கொள்ளாவிட்டால் எங்களின் ஊரிலிருந்து நிச்சயம் நீரும் உம்முடன் உள்ளோரும் வெறியேற்றப்பட்டுவிடுவீர்.”

(168) 26.168. லூத் அவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் செய்யும் உங்களின் இந்தச் செயலை நிச்சயமாக நான் மிகவும் கோபப்பட்டு வெறுக்கிறேன்.”

(169) 26.169. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்யும் தீய செயலால் ஏற்படும் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.”

(170) 26.170. நாம் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றினோம்.

(171) 26.171. நிராகரித்தவளாக இருந்த அவருடைய மனைவியைத் தவிர. அவளும் அழிந்து போகும் ஒருத்தியாகிவிட்டாள்.

(172) 26.172. லூத்தும் அவரது குடும்பத்தாரும் (சதூம்) என்ற ஊரிலிருந்து வெளியேறியவுடன் மற்றவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.

(173) 26.173. நாம் அவர்கள் மீது வானிலிருந்து மழையை பொழியச் செய்வது போல் கல்மழையைப் பொழியச் செய்தோம். தாம் செய்யும் கெட்ட செயலில் தொடர்ந்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என லூத் எச்சரித்த இவர்கள் மீது பொழிந்த (கல்) மாரி மிகவும் மோசமானதாகும்.

(174) 26.174. நிச்சயமாக மோசமான செயல் செய்த காரணத்தினால் மேலேகூறப்பட்ட லூத்துடைய சமூகத்தின் மீது இறங்கிய வேதனையில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.

(175) 26.175. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவருடன் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(176) 26.176. சுருண்ட மரத்தையுடைய ஊர்வாசிகள் தங்களின் தூதர் ஷுஐபை பொய்ப்பித்ததோடு,(ஏனைய) தூதர்களையும் பொய்ப்பித்தார்கள்.

(177) 26.177. அவர்களின் நபியான ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?

(178) 26.178. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

(179) 26.179. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.

(180) 26.180. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இல்லை.

(181) 26.181. நீங்கள் மக்களுக்கு விற்பனை செய்யும் போது நிறைவாக அளந்துகொடுங்கள்.அளவை நிறுவையில் குறை செய்ய வேண்டாம்.

(182) 26.182. நீங்கள் மற்றவர்களுக்கு எடைபோட்டால் சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள்.

(183) 26.183. மக்களின் உரிமைகளில் குறை செய்யாதீர்கள். பாவங்கள் செய்து பூமியில் குழப்பத்தை அதிகப்படுத்தி விடாதீர்கள்.

(184) 184. உங்களையும் உங்களுக்கு முந்தைய சமூகங்களையும் படைத்த அல்லாஹ் உங்களின் மீது வேதனையை இறக்குவதை அஞ்சுங்கள்.

(185) 26.185. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக சூனியத்தால் உமது புத்தி பேதலித்து, மங்கி விடுமளவு நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராக இருக்கிறீர்.

(186) 26.186. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. ஆகவே நீர் எவ்வாறு தூதராக முடியும்? நிச்சயமாக தன்னைத் தூதர் என்று நீர் வாதிடும் விஷயத்தில் உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

(187) 26.187. நீர் வாதிடும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து ஒரு துண்டை விழச் செய்யும்.

(188) 26.188. ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் என் இறைவன் நன்கறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.”

(189) 26.189. தொடர்ந்தும் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். அதனால் பெரும் வேதனை அவர்களைத் தாக்கியது. கடும் வெயிலுக்குப் பிறகு மேகங்கள் அவர்களுக்கு நிழலளித்தன. அவை அவர்களின் மீது நெருப்பை பொழிந்து அவர்களை எரித்துவிட்டன. நிச்சயமாக அவர்கள் அழிக்கப்பட்ட நாள் பெரும் பயங்கரமான நாளாக இருந்தது.

(190) 26.190. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட அந்த ஷுஐபின் சமூகம் அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.

(191) 26.191. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(192) 26.192. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

(193) 26.193. நம்பிக்கைக்குரிய ஜிப்ரீல் இதனைக்கொண்டு இறங்கினார்.

(194) 26.194. -தூதரே!- அவர் உமது உள்ளத்தில் இறக்கினார். அது நீர் மக்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அச்சுறுத்தி, எச்சரிக்கும் தூதர்களில் ஒருவராக வேண்டும் என்பதற்காகத்தான்.

(195) 26.195. தெளிவான அரபி மொழியில் இதனை அவர் இறக்கியுள்ளார்.

(196) 26.196. நிச்சயமாக இந்த குர்ஆனைக் குறித்து முன்சென்றவர்களின் வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. முந்தயை வானுலக வேதங்கள் இதனைக் கொண்டு நற்செய்தி கூறியுள்ளன.

(197) 26.197. உமக்கு இறக்கப்பட்டுள்ளதைக்குறித்து இஸ்ராயீலின் மக்களிலுள்ள அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்ற அறிஞர்கள் உண்மையாக அறிந்திருப்பது, உம்மை மறுக்கும் இவர்களுக்கு, உனது நம்பகத்தன்மைக்கான ஒரு சான்றாக இல்லையா?

(198) 26.198. நாம் அரபி மொழி பேசாத வேறு சிலரின் மீது இந்தக் குர்ஆனை இறக்கியிருந்து

(199) 26.199. அதனை அவர் அவர்களிடம் படித்துக்காட்டினால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். “நிச்சயமாக எங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறுவார்கள். எனவே அவர்களின் மொழியில் இறக்கப்பட்டதற்காக அவர்கள் அல்லாஹ்வை புகழட்டும்.

(200) 26.200. இவ்வாறு நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் நிராகரிப்பை, நிராகரிப்பை நுழைத்து விடுகின்றோம்.

(201) 26.201. அவர்கள் வேதனைமிக்க தண்டனையைக் காணும்வரை தம்மிடம் இருக்கும் நிராகரிப்பை மாற்றிக் கொள்ளவோ நம்பிக்கைகொள்ளவோ மாட்டார்கள்.

(202) 26.202. அது திடீரென அவர்களை வந்தடைந்துவிடும். அவர்களிடம் அது திடீரென்று வரும் வரை அதன் வருகையை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(203) 26.203. திடீரென வேதனை அவர்கள் மீது இறங்கும்போது மிகவும் வருத்தப்பட்டவர்களாகக் கூறுவார்கள்: “நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோர எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?”

(204) 26.204. நம்முடைய வேதனையையா இந்த நிராகரிப்பாளர்கள் அவசரமாக வேண்டினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீர் எண்ணுவதுபோல வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்யும்வரை நாங்கள் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்.”

(205) 26.205. -தூதரே!- நீர் எனக்குக் கூறுவீராக, நீர் கொண்டுவந்ததன் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணிக்கும் இந்த நிராகரிப்பாளர்களை நாம் அருட்கொடைகளை சிறிது காலம்வரை அனுபவிக்கச் செய்து

(206) 26.206. அந்த அருட்கொடைகளைப் பெற்று வாழ்ந்த காலத்துக்குப் பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களிடம் வந்துவிட்டால்

(207) 26.207. அவர்கள் உலகில் அனுபவித்துக் கொண்டிருந்த இன்பங்களில் எது அவர்களுக்குப் பயனளிக்கும். அவையனைத்தும் முடிந்துவிட்டன. எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

(208) 26.208. தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்காமல் நாம் எந்த சமூகத்தையும் அழித்ததில்லை.

(209) 26.209. உபதேசம், ஞாபகமூட்டலாக இருக்கும்பொருட்டு அவ்வாறு செய்தோம். நாம் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கிய பின்னர் அவர்களைத் தண்டிப்பதனால் நாம் அநீதி இழைப்போரல்ல.

(210) 26.210. ஷைத்தான்கள் இந்த குர்ஆனைக் கொண்டு தூதரின் உள்ளத்தில் இறங்குவதில்லை.

(211) 26.211. தூதரின் உள்ளத்தில் அல்குர்ஆனை எடுத்துக்கொண்டு இறங்குவது ஷைத்தான்களுக்குத் தகுமானதன்று. அவர்கள் அதற்கு சக்திபெறவும் மாட்டார்கள்.

(212) 26.212. அவர்களால் அது முடியாது. ஏனெனில் அவர்கள் வானத்தில் குறித்த இடத்தை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். பிறகு எவ்வாறு அவர்களால் வானத்தை அடைய முடியும்? அங்கிருந்து வஹியைக் கொண்டு இறங்க முடியும்?

(213) 26.213. அல்லாஹ்வுடன் அவனுக்கு இணையாக வேறு கடவுளை வணங்காதே. அதனால் நீ வேதனை செய்யப்பட்டவர்களில் ஒருவராகிவிடுவாய்.

(214) 26.214. -தூதரே!- உம் சமூகத்தில் உம் நெருங்கிய உறவினர்கள் இணைவைப்பில் நிலைத்திருந்து, அல்லாஹ்வின் வேதனை அவர்களைத் தாக்காதிருப்பதற்காக ஒவ்வொருவராக அவர்களை எச்சரிக்கை செய்வீராக.

(215) 26.215. சொல்லால், செயலால் உம்மைப் பின்பற்றும் உமக்கு அருகில் உள்ள நம்பிக்கையாளர்களிடம் நீர் மென்மையாகவும், அன்போடும் நடந்துகொள்ளும்.

(216) 26.216. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துமாறும் வழிப்படுமாறும் நீர் அவர்களுக்கு இட்ட கட்டளைக்கு அவர்கள் பதிலளிக்காமல் உமக்கு மாறு செய்தால் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களைவிட்டும் பாவங்களைவிட்டும் நான் நீங்கிவிட்டேன்.”

(217) 26.217. உம்முடைய எல்லா விவகாரங்களிலும் தன் எதிரிகளைத் தண்டிக்கும் யாவற்றையும் மிகைத்தவனை சார்ந்திருப்பீராக. அவன் அவர்களில் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களின் மீது மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

(218) 26.218. நீர் தொழுகைக்காக எழும்போது அவன் உம்மைப் பார்க்கிறான்.

(219) 26.219. தொழுபவர்களுடன் நீர் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்வதையும் அவன் பார்க்கிறான். நீர் செய்யும் செயல்களோ மற்றவர்கள் செய்யும் செயல்களோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(220) 26.220. நிச்சயமாக நீர் உம் தொழுகையில் ஓதக்கூடிய குர்ஆனையும் திக்ருகளையும் அவன் செவியேற்கக்கூடியவன். உம் எண்ணங்களையும் அவன் நன்கறிந்தவன்.

(221) 26.221. நீங்கள் இந்த குர்ஆனை எடுத்துக்கொண்டு இறங்குவதாக எண்ணும் ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

(222) 26.222. அதிகம் பொய் சொல்லக்கூடிய, அதிகமாக பாவங்கள் புரியக்கூடிய ஒவ்வொரு சோதிடர்களின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள்.

(223) 26.223. ஷைதான்கள் வானுலகில் திருட்டுத்தனமாக செய்திகளைச் செவியேற்கின்றார்கள். அவற்றை தன் தோழர்களான சோதிடர்களில் காதுகளில் போட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான சோதிடர்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விடயத்தில் உண்மை கூறினாலும் அதனோடு நூறு பொய்களை சொல்லிவிடுகிறார்கள்.

(224) 26.224. முஹம்மது கவிஞர்களில் உள்ளவர்தான் என நீங்கள் கூறும் கவிஞர்களை நேரான பாதையை விட்டும் வழிதவறியவர்களே பின்பற்றுகிறார்கள். அவர்கள் கவிஞர்கள் கூறும் கவிதைகளை அறிவிக்கிறார்கள்.

(225) 26.225. -தூதரே!- நிச்சயமாக அவர்களின் வழிகேட்டின் வெளிப்பாடுதான் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அவர்கள் தடுமாறித் திரிவதாகும் என்பதை நீர் பார்க்கவில்லையா? சில சமயத்தில் புகழ்கிறார்கள், சில சமயத்தில் இகழ்கிறார்கள். சில சமயங்களில் இவையிரண்டையும் தவிர மற்ற விஷயங்களையும் கூறுகிறார்கள்.

(226) 26.226. மேலும் அவர்கள் செய்யாததை இவ்வாறு செய்தோம் என பொய் கூறுகிறார்கள்.

(227) 26.227. ஆயினும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அநீதி இழைக்கப்பட்டபிறகு அல்லாஹ்வின் எதிரிகளுக்கு பதில் கொடுத்த கவிஞர்களைத்தவிர. ஹஸ்ஸான் இப்னு சாபித் போன்றவர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அநியாயம் இழைக்கப்பட்டு அவனுடைய அடியார்களின் மீது வரம்புமீறியவர்கள் தாம் எங்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் கடுமையான நிலைப்பாடு, துல்லியமான விசாரணையின் பக்கமே திரும்பவேண்டும்.