(1) 3.1. الم இவை தனித்தனியான எழுத்துகளாகும். அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இதேபோன்று வந்துள்ளது. இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது போன்ற எழுத்துக்களைக் கொண்டே அல்குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற எழுத்துக்களைக் கொண்டுதான் அரபிகளும் தமக்கு மத்தியில் உரையாடுகின்றனர். அப்படியிருந்தும் இந்த குர்ஆனைப் போன்றதைக் கொண்டு வரமுடியாத அரபிகளின் இயலாமையைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கமாகும்.
(2) 3.2. அல்லாஹ்தான் உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியான வேறு யாரும் இல்லை. மரணமோ குறைகளோ அற்ற முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன.
(3) 3.3,4. தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை உம்மீது அவன் இறக்கியுள்ளான். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவற்றிற்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. அவன் உம்மீது குர்ஆனை இறக்குவதற்கு முன்னால் மூசாவின்மீது தவ்ராத்தையும் ஈசாவின்மீது இன்ஜீலையும் இறக்கினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களின் ஈருலக நலவுகளுக்கும் வழிகாட்டியாகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன் இறக்கினான். அல்லாஹ் உம்மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தூதர்களை நிராகரித்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் தண்டிக்கக்கூடியவன்.
(4) 3.3,4. தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை உம்மீது அவன் இறக்கியுள்ளான். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவற்றிற்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. அவன் உம்மீது குர்ஆனை இறக்குவதற்கு முன்னால் மூசாவின்மீது தவ்ராத்தையும் ஈசாவின்மீது இன்ஜீலையும் இறக்கினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களின் ஈருலக நலவுகளுக்கும் வழிகாட்டியாகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன் இறக்கினான். அல்லாஹ் உம்மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தூதர்களை நிராகரித்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் தண்டிக்கக்கூடியவன்.
(5) 3.5. வானத்திலோ பூமியிலோ அல்லாஹ்வுக்கு எதுவும் மறைவாக இல்லை. அவன் ஒவ்வொரு பொருளினதும் உள்ரங்கம் வெளிரங்கம் அனைத்தையும் முழுமையாக அறிந்துள்ளான்.
(6) 3.6. அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் தான் நாடியவாறு ஆணாகவோ பெண்ணாகவோ, அழகாகவோ அசிங்கமாகவோ, வெள்ளையாகவோ கருப்பாகவோ பல தோற்றங்களிலும் உங்களை வடிவமைக்கிறான். அவனைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. படைப்புகள் விஷயத்தில் தான் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் அவன் ஞானம்மிக்கவன்.
(7) 3.7.தூதரே! அவன்தான் குர்ஆனை உம்மீது இறக்கினான். அதில் சந்தேகமற்ற தெளிவான வசனங்களும் இருக்கின்றன. அவைதான் வேதத்தின் அடிப்படையும் பெரும்பான்மையுமாகும்; கருத்துவேறுபாட்டைத் தீர்க்கும் அளவுகோளாகும். அதில் பலபொருள்தரக்கூடிய வசனங்களும் இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றின் பொருள் மயக்கமாகக் காணப்படும். சத்தியத்தை விட்டுவிலகுபவர்கள் தெளிவான வசனங்களை விட்டுவிட்டு இவ்வகையான வசனங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் மக்களிடம் சந்தேகத்தை உண்டுபண்ணி அவர்களை வழிகெடுக்க நாடுகிறார்கள். இதன்மூலம் தங்களின் மனஇச்சைக்கேற்ப, தங்களின் வழிகெட்ட சிந்தனைப் பள்ளிக்கேற்ப விளக்கமளிக்க விரும்புகிறார்கள். இந்த வசனங்களின் உண்மையான பொருளை, விளக்கத்தை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிய மாட்டார்கள். உறுதியான கல்வியைப் பெற்றவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் குர்ஆனிலுள்ள அனைத்தின்மீதும் நம்பிக்கைகொண்டோம். ஏனெனில் அது முழுக்க முழுக்க எங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும்.” மேலும் அவர்கள் தெளிவான வசனங்களைக் கொண்டு கருத்து மயக்குமள்ள வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள். அறிவுடையோர்தாம் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.
(8) 3.8. உறுதியான கல்வியைப் பெற்ற அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு எங்கள் உள்ளங்களை சத்தியத்தை விட்டும் தடுமாறச் செய்துவிடாதே. சத்தியத்தை விட்டும் பிறழ்ந்த வழிகேடர்களுக்கு ஏற்பட்டதிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! எங்கள் உள்ளத்திற்கு நேரான வழியைக்காட்டக்கூடிய, வழிகேட்டிலிருந்து எங்களைப் பாதுகாக்கக்கூடிய உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ தாராளமாக வழங்கக்கூடியவன்.”
(9) 3.9. “எங்கள் இறைவா! நீ மக்கள் அனைவரையும் சந்தேகமற்ற ஒருநாளில் விசாரணை செய்வதற்காக ஒன்றுதிரட்டக்கூடியவனாக இருக்கின்றாய். அந்த நாள் நிச்சயமாக வரக்கூடியது. எங்கள் இறைவா! நீ ஒருபோதும் வாக்குறுதி மீறமாட்டாய்.”
(10) 3.10. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களை இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிடாது. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் மறுமைநாளில் எரிக்கப்படும் நரகத்தின் எரிபொருள்களாவர்.
(11) 3.11. இவர்கள், அல்லாஹ்வை நிராகரித்து, அவனுடைய சான்றுகளைப் பொய் எனக்கூறிய ஃபிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றவர்கள். அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. தன்னை நிராகரித்து, தன் சான்றுகளைப் பொய் எனக் கூறக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன்.
(12) 3.12. தூதரே! பலதரப்பட்ட மதங்களில் உள்ள நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள். நீங்கள் நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுவீர்கள். அல்லாஹ் நரக நெருப்பில் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். அது உங்களுக்கு மோசமான தங்குமிடமாகும்.”
(13) 3.13. பத்ருப்போரில் மோதிக்கொண்ட இரு பிரிவினரிடமும் உங்களுக்கு படிப்பினைகளும் சான்றுகளும் இருக்கின்றன. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அவனுடைய தூதரும் அவருடைய தோழர்களுமாவார். அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் நிராகரித்தோரின் வாக்கை தாழ்த்துவதற்காகவும் அவனுடைய பாதையில் போரிட்டார்கள். மற்றொரு பிரிவினர் அவனை நிராகரித்த மக்காவாசிகளாவர். கர்வத்திற்காகவும் வெளிப்பகட்டிற்காகவும் குலப்பெருமைக்காகவும் அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அவர்களை நம்பிக்கையாளர்கள் தம்மைவிட இருமடங்காகக் கண்டார்கள். அல்லாஹ் தன் நேசர்களுக்கு உதவிசெய்தான். அவன் தான் நாடியோரை தன் உதவியால் வலுப்படுத்துகிறான். அகப்பார்வையுடையவர்களுக்கு இதில் படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள்தாம் அல்லாஹ்வின் உதவியைப் பெறுவார்கள். அசத்தியவாதிகள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தோல்வியையே பெறுவார்கள். என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
(14) 3.14. மக்களை சோதிக்கும்பொருட்டு இவ்வுலக இன்பங்களை விரும்புவதை அவர்களுக்கு அழகாகக் காட்டியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். உதாரணமாக, பெண்கள், ஆண்பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய அடையாளமிடப்பட்ட குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள், விளைநிலங்கள். ஆயினும் இவையனைத்தும் சில காலம் அனுபவித்த பின் அழியக்கூடிய இவ்வுலக இன்பங்கள்தாம். இவற்றின்மீது மோகம்கொள்வது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. அல்லாஹ்விடமே சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது. அது வானங்கள் பூமியளவு விசாலமானது.
(15) 3.15. தூதரே! நீர் கூறுவீராக, “இந்த இன்பங்களைவிட சிறந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு சொர்க்கச் சோலைகள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மரணமோ அழிவோ இன்றி அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு குணத்திலும் தோற்றத்திலும் அனைத்துக் குறைகளையும் விட்டும் பரிசுத்தமான துணைவியரும் உண்டு. இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் திருப்தியடைவான். அவன் ஒருபோதும் அவர்கள்மீது கோபம்கொள்ள மாட்டான். அல்லாஹ் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.
(16) 3.16. இந்த சுவனவாசிகள் தங்கள் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் உன்மீதும் உன் தூதர்கள்மீது நீ இறக்கியவற்றின்மீதும் நம்பிக்கைகொண்டோம். உன் மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக.”
(17) 3.17. அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் தீமைகளை விடுவதிலும் துன்பங்களை எதிர்கொள்வதிலும் பொறுமையாளர்கள்; தங்களின் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்கள்; அல்லாஹ்வுக்கு முழுமையாக கீழ்ப்படிபவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்கள்; இரவின் இறுதிப் பகுதியில் பாவமன்னிப்புக் கோருபவர்கள். ஏனெனில் அந்நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிக நெருக்கமானது. மேலும் உள்ளம் அனைத்துவகையான விஷயங்களை விட்டும் காலியானதாக இருக்கும்.
(18) 3.18. உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அவனுடைய சாட்சி என்பது குர்ஆனிலும் பிரபஞ்சத்திலும் அவன் ஏற்படுத்திய சான்றுகளாகும். அதற்கு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். கல்வியாளர்களும் ஓரிறைக்கொள்கையை விளக்குவதன் மூலமும் அதன்பால் அழைப்புவிடுப்பதன் மூலமும் சாட்சி கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் ஒருவனே என்றும் அவன் தன் படைப்புகளில், சட்டங்களில் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன் என்ற மிகப் பெரும் ஒரு விடயத்திற்கு சாட்சி கூறியுள்ளார்கள். வணக்கத்திற்குத் தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் படைப்பிலும், நிர்வகிப்பதிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன்.
(19) 3.19. அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாம் என்பது முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மாத்திரம் கட்டுப்படுவதும் அடிமைத்துவத்தின் மூலம் அவனிடம் சரணடைவதும் முஹம்மது வரை அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும் ஆகும். முஹம்மதோடு அல்லாஹ் தூதுத்துவத்தை முடித்துவிட்டான். இனி அவர் கொண்டுவந்த மார்க்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களிடம் தெளிவான ஆதாரம் வந்தபின்னரே பொறாமையினாலும் உலகத்தின்மீது கொண்ட மோகத்தினாலும் தங்கள் மார்க்கத்தில் கருத்துவேறுபாடு கொண்டு பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்தனர். அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்கள் அறிந்துகொள்ளட்டும், “தன்னையும் தன் தூதர்களையும் நிராகரித்தவர்களை விசாரணை செய்வதில் அல்லாஹ் விரைவானவன்.”
(20) 3.20. தூதரே! உம்மீது இறக்கப்பட்ட சத்தியம் குறித்து அவர்கள் உம்மிடம் விவாதம் செய்தால் அவர்களிடம் கூறிவிடும், “நானும் என்னைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து விட்டோம் என்று.” தூதரே! வேதக்காரர்களிடமும் இணைவைப்பாளர்களிடமும் நீர் கூறுவீராக, “உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நான் கொண்டு வந்ததை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?” அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு உம்முடைய மார்க்கத்தைப் பின்பற்றினால் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்தால், உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத்தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தன் அடியார்களை பார்க்கக்கூடியவன்; அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கக்கூடியவன்.
(21) 3.21. அல்லாஹ் தம்மீது இறக்கியருளிய அவனுடைய வசனங்களை நிராகரிப்பவர்கள், அவனுடைய தூதர்களையும் மக்களில் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர்களையும் அநியாயமாகக் கொலைசெய்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
(22) 3.22. இந்தப் பண்புகளை உடையவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. அவர்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளாததால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவற்றைக்கொண்டு அவர்களால் பயனடைய முடியாது. மறுமைநாளின் வேதனையை விட்டும் காக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
(23) 3.23. தூதரே! தவ்ராத்தில் உமது நபித்துவத்தைக் குறித்த அறிவு வழங்கப்பட்ட யூதர்களின் நிலையை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் கருத்துவேறுபட்டுள்ளவற்றில் தீர்வு வழங்கப்படுவதற்காக அல்லாஹ்வின் வேதமான தவ்ராத்தின் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். ஆயினும் அவர்களிலுள்ள அறிஞர்களிலும் தலைவர்களிலும் ஒரு பிரிவினர் அது தங்களின் மனஇச்சையுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக அதன் தீர்ப்பைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தவ்ராத்தைப் பின்பற்றுவதாகக் கருதிக்கொள்ளும் அவர்கள், தீர்வு வழங்கப்படுவதற்காக அதன் பக்கம் அழைக்கப்பட்டால் அவர்கள் விரைந்து வரக்கூடியவர்களாகவல்லவா இருக்க வேண்டும்.
(24) 3.24. அவர்களின் இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம், மறுமைநாளில் குறைவான நாட்களே அன்றி நரக நெருப்பு தங்களைத் தீண்டாது. பின்னர் சொர்க்கத்தில் தாங்கள் நுழைந்துவிடலாம் என்று அவர்கள் எண்ணி வந்ததேயாகும். அல்லாஹ்வின்மீது பொய்யாக கூறிவந்த அவர்களின் இந்த எண்ணம்தான் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால் அல்லாஹ்வின் மீதும் அவனது மார்க்கத்தின் மீதும் துணிவுகொண்டனர்.
(25) 3.25. சந்தேகமின்றி வரக்கூடிய ஒருநாளில் விசாரணை செய்வதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும்போது அவர்களின் நிலமையும் கைசேதமும் எவ்வாறு இருக்கும்? மிக மோசமானதாகவல்லவா இருக்கும். அங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தவற்றுக்கேற்ப கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்படாது.
(26) 3.26. தூதரே! உம் இறைவனைப் புகழ்ந்தவாறும் கண்ணியப்படுத்தியவாறும் நீர் கூறுவீராக: “இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீதான் ஆட்சியதிகாரத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். உன் படைப்புகளில் நீ நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகின்றாய். அவர்களில் நீ நாடியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியவர்களை இழிவுபடுத்துகின்றாய். இவையனைத்திலும் உன்னுடைய ஞானமும் நீதியும் அடங்கியுள்ளது. உன் கைவசம்தான் நன்மைகள் அனைத்தும் உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவாய்.
(27) 3.27. உன்னுடைய ஆற்றலின் வெளிப்பாடு, நீ பகலில் இரவைப் புகுத்துகின்றாய். எனவே பகலின் நேரம் அதிகமாகிவிடுகிறது. இரவில் பகலைப் புகுத்துகின்றாய். எனவே இரவின் நேரம் அதிகமாகிவிடுகிறது. நீ இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறாய். (உதாரணமாக விதையிலிருந்து செடி வெளிப்படுகிறது, நிராகரிப்பாளன் நம்பிக்கையாளனைப் பெற்றெடுக்கிறான்) உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறாய். (உதாரணமாக நம்பிக்கையாளன் நிராகரிப்பாளனைப் பெற்றெடுக்கிறான். முட்டையிலிருந்து கோழி வருகிறது.) நீ நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகின்றாய்.
(28) 3.28. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து அவனை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவர் அல்லாஹ்விடமிருந்து நீங்கிவிட்டார். அல்லாஹ்வும் அவரைவிட்டு நீங்கிவிட்டான். ஆயினும் அவர்களின் ஆட்சியதிகாரத்தில் நீங்கள் இருந்து, அதனால் உங்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காக பகைமையை மறைத்து,மென்மையான பேச்சையும், பணிவான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே அவனுக்குப் பயந்துகொள்ளுங்கள். பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அடியார்கள் அனைவரும் தமது செயல்களுக்கேற்ப கூலியைப் பெறுவதற்காக மறுமைநாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
(29) 3.29. தூதரே! நீர் கூறுவீராக: “நிராகரிப்பாளர்களை நேசம் கொள்வது போன்ற அல்லாஹ் தடுத்தவற்றை உங்கள் உள்ளங்களில் மறைத்தாலும் அல்லது அதனை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதனை அறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனைவிட்டுத் தப்ப முடியாது.
(30) 3.31. மறுமைநாளில் ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களை எவ்வித குறைவுமின்றி தன் முன்னால் காண்பார்கள். தீய செயல்கள் புரிந்தவர்கள் அவர்களுக்கும் அந்த செயல்களுக்குமிடைய நீண்ட காலத்தொலைவு இருக்கக்கூடாதா என்று ஏங்குவார்கள். ஆனால் அது எங்கே நிறைவேறப்போகிறது! அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அல்லாஹ் தன் அடியார்கள்மீது பரிவுடையவனாக இருப்பதனால்தான் அவர்களுக்கு அவன் எச்சரிக்கை செய்கிறான்.
(31) 3.32. தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசித்தால் நான் கொண்டு வந்ததை உள்ளும் புறமும் பின்பற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவீர்கள். அவன் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(32) 3.33. தூதரே நீர் கூறுவீராக: “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் தன் கட்டளைக்கும், தன் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படும் நிராகரிப்பாளர்களை அவன் விரும்ப மாட்டான்.
(33) 3.34. அல்லாஹ் ஆதமைத் தேர்ந்தெடுத்து, வானவர்களை அவருக்குச் சிரம்பணியுமாறு செய்தான். நூஹைத் தேர்ந்தேடுத்து, பூமியில் அனுப்பப்படும் முதல் தூதராக ஆக்கினான். இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அவரது சந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான். இம்ரானின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் மேன்மக்களாக ஆக்கினான்.
(34) 3.35. மேலேகூறப்பட்ட தூதர்களும் அவர்களின் வழியைப் பின்பற்றிய அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதில், நற்செயல்கள் புரிவதில் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்கள்தாம். அவர்கள் நற்குணத்தையும் சிறப்புகளையும் ஒருவர் மற்றவரிடமிருந்து பெற்றார்கள். அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். அதனால் தான் அவர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான்.
(35) 3.36. தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுகூருங்கள்: மர்யமின் தாயாகிய இம்ரானின் மனைவி கூறினார்: “என் இறைவா, வேறு எதுவும் செய்யாது உனக்கும் உன்வீட்டிற்கும் பணிவிடைசெய்வதற்காகவே என் வயிற்றிலுள்ள சிசுவை உனக்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன். எனவே என்னிடமிருந்து எனது இந்தச் செயலை ஏற்றுக் கொள்வாயாக.” நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்கக்கூடியவன்; என் எண்ணத்தை நன்கறிந்தவன்.
(36) 3.37. கர்ப்ப காலம் நிறைவடைந்தபோது அவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள் - அவள் ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்தாள் - அப்போது அவள், “என் இறைவா! நான் பெண்குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே!” என்றாள். அவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எதிர்பார்த்த ஆண் ஆற்றலிலும் தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல. “நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன். உன் அருளை விட்டும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் இந்த குழந்தைக்கும் இந்த குழந்தையின் சந்ததிகளுக்கும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.
(37) 3.38. அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக் குழந்தையை நல்லமுறையில் வளரச் செய்தான். அவனது நல்லடியார்களின் உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச்செய்தான். மர்யமுக்கு ஸகரிய்யாவை பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மர்யமின் தொழுமிடத்திற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மையான உணவைக் காண்பார். அவளிடம் கேட்பார், “மர்யமே இந்த உணவு உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” அதற்கு மர்யம் கூறுவாள், “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உணவாகும். அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகிறான்.
(38) 3.38. வழக்கத்திற்கு மாறாக அல்லாஹ் மர்யமுக்கு உணவளித்ததைக் கண்ட ஸகரிய்யா அவன் தனக்கும் - இந்த தள்ளாத வயதிலும், மனைவி மலடியாக இருந்தபோதும் - ஒரு குழந்தையை வழங்குவான் என்று நம்பிக்கை வைத்தார். “என் இறைவனே! தூய்மையான ஒரு ஆண்மகனை எனக்குத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன்னிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நிலையை நன்கறிந்தவன்” என்று பிரார்த்தனை செய்தார்.
(39) 3.39. அவர் தமது தொழுகைமாடத்திலே நின்று வணங்கிக் கொண்டிருந்தபோது வானவர்கள் அவரை அழைத்து, “அல்லாஹ் உமக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவரது பெயர் ‘யஹ்யா’வாகும். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார். (அல்லாஹ்வின் வார்த்தையால் பிரத்யேகமான முறையில் படைக்கப்பட்ட ஈஸா அலை அவர்களையே இது குறிக்கின்றது) யஹ்யா கல்வியிலும் வணக்க வழிபாட்டிலும் தம் சமூக மக்களுக்குத் தலைவராக இருப்பார்; பெண்களை விட்டும் விலகியவராக, தம் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இறைவழிபாட்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவராக இருப்பார். நல்லோர்களில் உள்ள தூதராகவும் இருப்பார்.
(40) 3.40. வானவர்களின் நற்செய்தியைக் கேட்ட ஸகரிய்யா, “என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? நானோ தள்ளாத வயதை அடைந்துவிட்டேன். என் மனைவியே பிள்ளைபெறாத மலடியாக இருக்கிறாளே!? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அல்லாஹ் கூறினான்: உங்களது தள்ளாத வயதிலும், மலடியான மனைவிலும் யஹ்யாவை பிறக்கச்செய்வதற்கு உதாரணம் வழக்கத்திற்கு மாறாக தான் நாடியவற்றைப் படைப்பதாகும். ஏனெனில் அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். தனது ஞானத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவாறு நாடியதைச் செய்கிறான்.
(41) 3.41. “என் இறைவா! என் மனைவி என் மூலம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்கு என்னிடம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்து” என்று ஸகரிய்யா வேண்டினார். “அதற்கான அடையாளம், உமக்கு எந்த தீங்கும் நேராமலேயே உம்மால் மூன்று இரவும், பகலும் மக்களுடன் சைகை மூலமாகவே அன்றி பேசமுடியாது. பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அவனது தூய்மையைப் பறைசாற்றுவீராக” என்று அல்லாஹ் கூறினான்.
(42) 3.42. தூதரே! வானவர்கள் மர்யமிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “உம்முடைய நல்ல பண்புகளின் காரணமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்து குறைகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்தியுள்ளான். உம் காலத்தில் வாழும் உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் அல்லாஹ் உம்மைச் சிறப்பித்துள்ளான்.
(43) 3.43. மர்யமே! நீண்ட நேரம் நின்று தொழுவீராக, உம் இறைவனுக்காக சிரம்பணிவீராக, அவனைக் குனிந்து வணங்கும் நல்லடியார்களுடன் சேர்ந்து நீரும் குனிந்து வணங்குவீராக.
(44) 3.44. தூதரே! மேலே கூறப்பட்ட ஸகரிய்யா மற்றும் மர்யமைப் பற்றிய செய்திகள் மறைவான செய்திகளாகும். நாமே இவற்றை உமக்கு அறிவிக்கின்றோம். மர்யமை யார் பராமரிப்பது? என்ற விஷயத்தில் ஏற்பட்ட போட்டியால் அவர்களிலுள்ள அறிஞர்களும் நல்லவர்களும் சீட்டு குலுக்கி அவர்களது எழுதுகோல்களை போட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. சீட்டு குலுக்கிப்போடப்பட்டபோது ஸகரிய்யாவின் எழுதுகோலே வென்றது.
(45) 3.45. தூதரே! பின்வரும் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக: “வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள், “அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர் தந்தையின்றி, அல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’- ‘ஆகிவிடு’ என்பதைக்கொண்டு படைக்கப்படுவார். அவரது பெயர் ஈசா இப்னு மர்யம் ஆகும். அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருப்பார்.
(46) 3.46. பேசும் பருவத்தை அடையாத சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவர் மக்களிடம் பேசுவார். முழுமையான பலத்தையும் ஆண்மையையும் பெற்று அவர் பெரியவரான பிறகும் மக்களிடம் பேசுவார். அவர்களின் உலக மற்றும் மார்க்க விஷயங்களில் நன்மையானவற்றை அவர்களுக்குக் கூறுவார். சொல்லிலும் செயலிலும் நல்லவராகவும் இருப்பார்.
(47) 3.47. கணவனின்றி தனக்கு குழந்தை பிறப்பதை ஆச்சர்யமாகக் கருதிய மர்யம் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? என்னை எந்த ஆணும் முறையாகவோ தவறாகவோ நெருங்கியதில்லையே?” வானவர் கூறினார்: “தந்தையின்றி உங்களுக்கு குழந்தையை அவன் தந்தது போன்றே தான் ஏற்படுத்திய வழக்கத்திற்கு மாறாக தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகிவிடு’ என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். அவனை எதுவும் தடுக்க முடியாது.
(48) 3.48. அவன் அவருக்கு எழுத்தையும், சொல்லிலும் செயலிலும் நேர்த்தியையும் கற்றுக் கொடுப்பான். மூசா மீது இறக்கிய தவ்ராத்தையும், அவர்மீது இறக்கப்போகின்ற இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
(49) 3.49. அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு தூதராகவும் ஆக்குவான். அவர் அவர்களிடம் கூறுவார்: “நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். என் தூதுத்துவத்தை உண்மை என நிருபிக்கக்கூடிய சான்றுகளையும் நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். அவை, நான் களிமண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப் போல் உண்டாக்குவேன். நான் அதில் ஊதியதும் அது அல்லாஹ்வின் அனுமதியால் உயிருள்ள பறவையாகிவிடும். பிறவிக்குருடனைக் குணமாக்குவேன், அவன் பார்வைபெற்றுவிடுவான். தொழுநோயாளியையும் நான் குணப்படுத்துவேன். அவரது தோல் ஆரோக்கியம் பெற்றுவிடும். மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்வேன். இவையனைத்தும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டே நடக்கும். நீங்கள் உண்ணும் உணவையும், வீட்டில் மறைத்துவைத்த உணவுப்பொருளையும் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன். நான் குறிப்பிட்டவைகள் மனிதர்களால் செய்ய முடியாத பெரும் காரியங்களாகும். நீங்கள் ஈமானை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக இருந்தால் இவையனைத்தும் நான் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும்.
(50) 3.50. அதேபோன்று எனக்கு முன்னால் இறங்கிய தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியவனாகவும், உங்கள் சிரமத்தை நீக்குவதற்காக உங்கள் மீது இதற்கு முன் தடைசெய்யப்பட்ட சிலவற்றை ஆகுமாக்கி வைப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். நான் கூறும் விஷயத்திற்கு தெளிவான சான்றுகளைக் கொண்டு நான் உங்களிடம் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நான் உங்களை அழைக்கும் விஷயத்தில் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
(51) 3.51. இது ஏனெனில் அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவன்தான் கீழ்ப்படிவதற்கும் அஞ்சுவதற்கும் தகுதியானவன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வை வணங்குதல்,அவனை அஞ்சுதல் ஆகிய நான் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளே எவ்வித கோணலுமற்ற நேரான பாதையாகும்.
(52) 3.52. அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருப்பதை ஈசா கண்டபோது இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: அல்லாஹ்வின்பால் அழைப்பதற்கு எனக்கு உதவிசெய்பவர் யார்? அவரைப் பின்பற்றியவர்களில் தூய்மையானவர்கள் கூறினார்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவியாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு உம்மை நாங்கள் பின்பற்றினோம். எனவே ஈசாவே! நாங்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக.
(53) 3.53. அதேபோன்று அந்த ஹவாரியீன்கள், “எங்கள் இறைவா! நீ இறக்கிய இன்ஜீலின்மீது நாங்கள் நம்பிக்கைகொண்டு ஈசாவைப் பின்பற்றினோம். உன்மீதும் உன் தூதர்கள்மீதும் நம்பிக்கைகொண்டு சத்தியத்திற்கு சாட்சி கூறுவோருடன் எங்களையும் ஆக்குவாயாக.
(54) 3.54. இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள் ஈசாவைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து அவர்களைத் தம் வழிகேட்டிலேயே விட்டுவிட்டான். அவன் வேறு ஒரு மனிதனை தோற்றத்தில் ஈசாவைப்போல் ஆக்கினான். அல்லாஹ் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன். எதிரிகளுக்கு சூழ்ச்சி செய்வதில் அவனை மிகைத்த யாரும் கிடையாது.
(55) 3.55. அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் சூழ்ச்சி செய்தான். அவன் ஈசாவிடம் கூறினான்: “ஈசாவே! மரணிக்கச் செய்யாமல் உம்மை நான் கைப்பற்றுவேன். உம் உடலையும் ஆன்மாவையும் என் பக்கம் உயர்த்துவேன். உம்மை நிராகரித்தவர்களின் அழுக்குகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். அவர்களை விட்டும் உம்மை தூரமாக்குவேன். முஹம்மதின்மீது நம்பிக்கை கொள்வது உட்பட சத்திய மார்க்கத்தில் உம்மைப் பின்பற்றியவர்களை உம்மை நிராகரித்தவர்களைவிட ஆதாரத்தைக் கொண்டும் கண்ணியத்தைக் கொண்டும் மறுமை நாள்வரை மேலோங்கச் செய்வேன். பின்பு மறுமையில் நீங்கள் என்னிடத்தில்தான் வரவேண்டும். அப்போது நீங்கள் கருத்துவேறுபாடுகொண்ட விஷயங்களில் உங்களிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்.
(56) 3.56. உம்மையும் நீர் கொண்டுவந்த சத்தியத்தையும் நிராகரித்தவர்களை இவ்வுலகில் கொலை செய்யப்படுதல், கைதிகளாகப் பிடிக்கப்படுதல், இழிவுபடுத்தப்படுதல் போன்ற வேதனைகளைக் கொண்டும் மறுவுலகில் நரக வேதனையைக் கொண்டும் வேதனை செய்வேன். வேதனையிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
(57) 3.57. உம்மீதும் நீர் கொண்டுவந்த சத்தியத்தின்மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் சம்பாதித்தவற்றுக்கான முழுமையான கூலியை குறைவின்றி வழங்கிடுவான். (இது முஹம்மது நபியின் தூதுத்துவத்திற்கு முன்னால் ஈசாவைப் பின்பற்றியவர்கள் தொடர்பான செய்தியாகும். அந்த ஈசாதான் முஹம்மது நபியைக் குறித்து நற்செய்தி கூறினார்) அல்லாஹ் அநியாயக்காரர்களை விரும்ப மாட்டான். மிகப் பெரிய அநியாயம், அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது மற்றும் அவனுடைய தூதர்களை நிராகரிப்பதாகும்.
(58) 3.58. நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஈசாவைக் குறித்த செய்திகள் உம்மீது இறக்கப்பட்ட வேதம் உண்மையென நிரூபிக்கும் தெளிவான சான்றுகளாகும். அது இறையச்சமுடையோருக்கு நினைவூட்டலாகும்; அசத்தியம் அண்டமுடியாத அளவு உறுதியானதாகும்.
(59) 3.59. தாய்தந்தையின்றி மண்ணிலிருந்து அல்லாஹ் ஆதமைப் படைத்ததுபோன்றே ஈசாவையும் படைத்துள்ளான். அவன் அவரிடம், ‘நீ மனிதனாக ஆகிவிடு’ என்று கூறினான். அவன் நாடியது போல் ஆகிவிட்டார். ஆதம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டுள்ள ஆதம் மனிதரே என ஏற்றுக்கொண்டோர், தந்தையின்றி மாத்திரம் படைக்கப்பட்டதை வைத்து ‘ஈசா இறைவன்’ என்பதை எவ்வாறு வாதிட முடியும்?
(60) 3.60. ஈசாவைக்குறித்து உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதே சந்தேகமற்ற உண்மையாகும். எனவே நீர் சந்தேகம் கொள்வோரில் ஒருவராகி விடாதீர். நீர் கூறுகின்ற சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பீராக.
(61) 3.61. தூதரே! உம்மிடம் ஈசாவைக்குறித்து சரியான அறிவு வந்தபின்னரும் அவர் அல்லாஹ்வின் அடியார் இல்லை என்று உம்மிடம் வாதம் செய்யும் நஜ்ரான் பிரதேசத்தைச் சேர்ந்த கிறித்தவர்களிடம் நீர் கூறும்: “வாருங்கள், எங்களின் பிள்ளைகளையும் உங்களின் பிள்ளைகளையும், எங்களின் பெண்களையும் உங்களின் பெண்களையும், எங்களின் உயிர்களையும் உங்களின் உயிர்களையும் அழைத்து, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எங்களிலும் உங்களிலுமுள்ள பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று அவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வோம்.
(62) 3.62. ஈசாவைக்குறித்து நாம் கூறிய விஷயங்கள் தான் சந்தேகமற்ற பொய்யற்ற உண்மையாகும். அல்லாஹ்வைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; அவன் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் படைப்பில் ஞானம்மிக்கவன்.
(63) 3.63. அவர்கள் உம்மைப் பின்பற்றாமல் நீர் கொண்டு வந்ததைப் புறக்கணித்துவிட்டால் அதுதான் அவர்கள் ஏற்படுத்தும் குழப்பமாகும். பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
(64) 3.64. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடும் பொது வார்த்தையில் நாம் ஒன்றிணைவோம்: “நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுடன் வேறு யாரையும் வணங்கக் கூடாது, அவர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரியே. நம்மில் சிலர் சிலரை அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் கட்டுப்படத்தக்க கடவுள்களாக ஆக்கிவிடக்கூடாது.” என்பதே அந்த வார்த்தையாகும். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அழைக்கும் சத்தியத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டால் “நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என அவர்களிடம் நீங்கள் கூறுங்கள்.
(65) 3.65. வேதக்காரர்களே! நீங்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைக் குறித்து ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? யூதர்கள் கூறுகிறார்கள், “இப்ராஹீம் ஒரு யூதர் என்று.” கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள், “அவர் ஒரு கிருஸ்தவர் என்று.” யூத மதமும், கிருஸ்தவமும் அவர் இறந்து பல நூற்றாண்டு கழிந்த பின்னர்தான் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! உங்களின் வாதத்திலுள்ள தவறை உங்களது புத்தியினால் புரிந்துகொள்ள முடியாதா?
(66) 3.66. வேதக்காரர்களே! உங்களுக்குத் தெரிந்த உங்களது மார்க்க விடயங்கள் மற்றும் உங்களுக்கு இறக்கப்பட்டதைக்குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தர்க்கம் செய்துவிட்டீர்கள். உங்களுக்குத் தெரியாத இப்ராஹீமின் மார்க்கத்தைக் குறித்து ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அது பற்றி உங்கள் வேதங்களிலும் இடம்பெறவில்லை உங்கள் நபிமார்களும் கூறவில்லை. அல்லாஹ்தான் விஷயங்களின் உண்மைநிலையை நன்கறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(67) 3.67. இப்ராஹீம் யூதராகவோ கிருஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் அசத்திய வழிகள் அனைத்தையும் விட்டு ஒதுங்கிய, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஏகத்துவவாதியாக இருந்தார். அவரது மார்க்கத்திலே நாம் உள்ளோம் என அரபு இணைவைப்பாளர்கள் கூறுவதைப்போல அவர் என்றும் இணைவைப்பாளராக இருந்ததில்லை.
(68) 3.68. இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவர் காலத்தில் அவர் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களும் இந்த நபியும் இந்த நபியின்மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தவர்களும்தாம். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்யக்கூடியவன்; அவர்களைப் பாதுகாக்கக்கூடியவன்.
(69) 3.69. நம்பிக்கையாளர்களே! வேதக்காரர்களிலுள்ள அறிஞர்கள், அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய நேர்வழியிலிருந்து உங்களைப் பிறழச்செய்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் தங்களைத்தாங்களே வழிகேட்டில் ஆழ்த்திக்கொள்கிறார்கள். ஏனெனில் நம்பிக்கையாளர்களை வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சியால் அவர்களின் வழிகேடுதான் அதிகரிக்கும். அவர்கள் தங்களின் செயல்களால் ஏற்படும் விளைவுகளை அறிய மாட்டார்கள்.
(70) 3.70. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! அல்லாஹ் உங்கள்மீது இறக்கிய வசனங்களை ஏன் அறிந்துகொண்டே மறுக்கிறீர்கள்? அவற்றில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. உங்கள் வேதம் அறிவிக்கும் உண்மையானவர் அவர்தான் என நீங்களே சாட்சி கூறுகிறீர்களே!
(71) 3.71. வேதக்காரர்களே! உங்கள் வேதங்களில் இறக்கப்பட்ட உண்மையை நீங்கள் உருவாக்கிய பொய்யோடு ஏன் கலக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியத்தையும் நேர்வழியையும் ஏன் மறைக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியங்களில் ஒன்றே முஹம்மத் (ஸல்) அவர்களது நபித்துவம் உண்மை என்பதும். அசத்தியத்திலிருந்து சத்தியத்தையும் வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள்.
(72) 3.72. யூத அறிஞர்களில் ஒருபிரிவினர் கூறுகிறார்கள், “பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின்மீது வெளிப்படையாக நம்பிக்கைகொள்ளுங்கள். பகலின் இறுதிப்பகுதியில் அதனை நிராகரித்துவிடுங்கள். ஈமான்கொண்ட பிறகு அதனை நீங்கள் நிராகரித்து விடுவதனால் அவர்களின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம்கொண்டு, “நம்மைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர்களே திரும்பி விட்டார்களே” என்று கூறி சந்தேகம் கொண்டு அவர்களும் திரும்பிவிடக்கூடும்.”
(73) 3.73. “உங்களின் யூத மதத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பிப் பின்பற்றுங்கள்” என்றும் கூறுகிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே சத்தியத்திற்கான வழியாகும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு போன்று மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அல்லது அவர்கள் மீது இறக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே என்ற பயத்தினால் நீங்கள் கொண்டிருக்கும் நிராகரிப்பும் பிடிவாதமும் சத்தியத்திற்கான வழி அல்ல.” தூதரே நீர் கூறுவீராக: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். அவன் தன் அருளை ஒரு சமூகத்தோடு மட்டும் சுருக்கிவிட மாட்டான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; அதற்குத் தகுதியானவர்களையும் நன்கறிந்தவன்.
(74) 3.74. தன் படைப்புகளில் தான் நாடியோருக்கு தன் அருளை பிரத்யேகமாக வழங்குகிறான். அதனால் அவருக்கு நேர்வழியையும் நபித்துவத்தையும் பலவித அருள்களையும் அளித்து அருள்புரிகிறான். அல்லாஹ் மாபெரும் அருளாளன். அவனது அருளுக்கு எல்லையே கிடையாது.
(75) 3.75. வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெருங்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்திலும் அவர்களது செல்வத்தை அனுபவிப்பதிலும் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவற்றை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தவறான கூற்றும் எண்ணமும்தான். இவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டம் கூறுகிறோம் என அறிந்துகொண்டே இந்தப் பொய்யைக் கூறுகின்றனர்.
(76) 3.76. அவர்கள் கூறியது போலல்ல. மாறாக அது பாவமாகும். அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவர்கள், மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அமானிதத்தை ஒப்படைத்தவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் ஆகியவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை வழங்கிடுவான்.
(77) 3.77. தன் வேதத்தில் இறக்கியதையும், தான் அனுப்பிய தூதர்களையும் பின்பற்றுமாறு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவுரையையும் ,அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகச் செய்த சத்தியங்களையும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்திற்குப் பகரமாக மாற்றிவிடுபவர்களுக்கு மறுமையின் நன்மையில் எந்தப் பங்கும் இல்லை. மறுமை நாளில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களிடம் பேசமாட்டான். அவர்களைக் கருணையோடு பார்க்க மாட்டான். அவர்களின் பாவம் மற்றும் நிராகரிப்பு ஆகிய அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.
(78) 3.78. யூதர்களில் சிலர் தவ்ராத்தில் உள்ளதைப் படிப்பதைப் போன்று அதில் இல்லாததையும் தமது நாவுகளை வளைத்து படிக்கிறார்கள், அவர்கள் தவ்ராத்திலிருந்துதான் படிக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவை தவ்ராத்தில் இல்லை. மாறாக தாங்கள் இட்டுக்கட்டிய பொய்களைத்தான் படிக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வராததைப் படித்துவிட்டு, நாங்கள் படிப்பது அல்லாஹ் இறக்கிய வேதத்தைத்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின்மீதும் அவன் தூதர்கள்மீதும் பொய்யுரைக்கிறோம் என அறிந்துகொண்டே அவன் மீது பொய்கூறுகிறார்கள்.
(79) 3.79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும் சரியான புரிதலையும் அளித்து அவரைத் தூதராகவும் தேர்ந்தெடுத்தபின் அவர் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறமாட்டார். மாறாக அவர், “நீங்கள் மக்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பதனாலும் அதனைக் கற்பதனாலும் அதன்படி செயல்படக்கூடிய அறிஞர்களாகவும் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் ஆகிவிடுங்கள்” என்றே கூறுவார்.
(80) 3.80. அதேபோன்று “அல்லாஹ்வை விடுத்து வானவர்களையும் தூதர்களையும் வணங்கப்படும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றும் அவர் உங்களை ஏவுவது அவருக்குத் தகுந்ததல்ல. நீங்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட பிறகு அவனை நிராகரிக்கும்படி உங்களை ஏவுவது ஆகுமாகுமா?
(81) 3.81. தூதரே! தூதர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு கூறி உறுதிமொழி வாங்கியதை நினைவுகூர்வீராக: “நான் உங்களுக்கு வேதத்தை வழங்கி ஞானத்தையும் கற்றுக்கொடுத்து நீங்கள் அடைய வேண்டிய நிலையையும் அடைந்துவிட்ட பிறகு உங்களிடமுள்ள வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய தூதர்(அவர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்) என்னிடமிருந்து வந்தால் நீங்கள் அவர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றி அவருக்கு உதவிபுரிய வேண்டும். தூதர்களே! நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு அதற்கு எனக்கு உறுதிமொழியும் வழங்குகிறீர்களா?”. அதற்கு, தூதர்கள் “நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்கள் மீதும் உங்கள் சமூகங்களின்மீதும் நீங்களே சாட்சியாக இருங்கள்.உங்கள்மீதும் அவர்கள்மீதும் உங்களுடன் சேர்ந்து நானும் சாட்சியாக இருக்கிறேன்.
(82) 3.82. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் சாட்சியம் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னரும் புறக்கணிப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.
(83) 3.83. அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறிய இவர்கள் தனது அடியார்களுக்கு அவன் தெரிவு செய்த இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தையா விரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைப்போன்று விரும்பியோ நிராகரிப்பாளர்களைப்போன்று விரும்பாமலோ வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அவனுக்கே கட்டுப்பட்டுள்ளன. மறுமைநாளில் விசாரித்து, கூலி வழங்கப்படுதற்காக படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புவார்கள்.
(84) 3.84. தூதரே! நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, எங்களுக்கு ஏவப்பட்டவிடயத்தில் அவனுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். எங்கள்மீது இறக்கப்பட்ட வஹியின் மீதும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு மற்றும் யஅகூபின் பிள்ளைகளில் தூதராக அனுப்பப்பட்டவர்கள் ஆகியோருக்கு இறக்கப்பட்டவற்றின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். மூசாவுக்கும் ஈசாவுக்கும் மற்றும் தூதர்கள் அனைவருக்கும் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதங்கள், சான்றுகள் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம். அவர்களில் சிலர் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்தவர்கள்.”
(85) 3.85. யாரேனும் அல்லாஹ் ஏற்றுக்கொண்ட மார்க்கமான இஸ்லாத்தைத்தவிர வேறொரு மார்க்கத்தை விரும்பினால், அல்லாஹ் அவரிடமிருந்து அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் தம்மைத்தாமே இழப்பிற்குள்ளாக்கி நரகில் நுழைவதன் மூலம் தமக்குத்தாமே இழப்பை உண்டாக்கிக்கொண்டவர்களில் ஒருவராக அவர் இருப்பார்.
(86) 3.86. ’அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்தது உண்மையே’ என்று சாட்சிகூறிய பிறகும் நிராகரித்த கூட்டத்துக்கு தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்வதற்கு அல்லாஹ் எவ்வாறு வழிகாட்டுவான்? அவர் உண்மையான தூதர்தாம் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்தேயுள்ளன. நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் அவனை நம்பிக்கைகொள்ள வழிகாட்ட மாட்டான்.
(87) 3.87. வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கான தண்டனை, அல்லாஹ்வும் வானவர்களும் மனிதர்கள் அனைவரும் இடுகின்ற சாபமேயாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரட்டப்பட்டுவிட்டார்கள்.
(88) 3.88. அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது. அவர்களின் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. பாவமன்னிப்புக்கோரவோ, சாக்குப்போக்குக் கூறவோ அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
(89) 3.89. ஆயினும் தங்களின் நிராகரிப்பிற்கும் அக்கிரமத்திற்கும் பிறகு அல்லாஹ்வின்பால் மீண்டு தங்கள் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்களைத்தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(90) 3.90. நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்து, மரணம் வரை அந்த நிராகரிப்பிலேயே நிலைத்திருப்பவர்கள் மரணவேளையில் செய்கின்ற பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனெனில் பாவமன்னிப்பை ஏற்பதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அவர்கள்தாம் அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய நேரான பாதையை விட்டும் வழிதவறியவர்களாவர்.
(91) 3.91. அல்லாஹ்வை நிராகரித்து, அந்நிலையிலேயே மரணித்தும் விடுபவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு. மறுமைநாளில் அந்த வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
(92) 3.92. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் விரும்பும் செல்வத்தைச் செலவுசெய்யாதவரை நல்லோர்களின் கூலியையும் அவர்களது உயர்நிலையையும் உங்களால் அடையமுடியாது. குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செலவுசெய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(93) 3.93. தூய்மையான அனைத்து உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னால் யஃகூபு தமக்குத்தாமே விலக்கிக் கொண்டவற்றைத்தவிர எதுவும் அவர்கள்மீது தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. அவை தவ்ராத்தில் எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன என்று யூதர்கள் கூறுவது பொய்யாகும். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து படித்துக் காட்டுங்கள்.” அவர்கள் வாயடைத்துப்போனார்கள். அவர்களால் அதைக் கொண்டுவர முடியவில்லை. யூதர்கள் தவ்ராத்தின் பெயரால் புனைந்து கூறியதற்கும் அதன் உள்ளடக்கத்தைத் திரித்தனர் என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும்.
(94) 3.94. யஃகூபு தமக்குத்தாமே விலக்கிகொண்டார், அல்லாஹ் தடைசெய்யவில்லை என்பதற்கான ஆதாரம் தெளிவான பின்னரும் அல்லாஹ்வின்மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள்தாம் அநியாயக்காரர்கள். ஏனெனில் அவர்கள் ஆதாரம் தெளிவானபின்னரும் சத்தியத்தை விட்டுவிட்டார்கள்.
(95) 3.95. தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் யஃகூபைக் குறித்து அறிவித்ததிலும் அவன் இறக்கியவற்றிலும் சட்டமாக்கியவற்றிலும் உண்மையே கூறினான். ஆகவே இப்ராஹீமின் மார்க்கத்தையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிலகி இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக சாய்ந்தவராகவும் அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் எதனையும் இணைகற்பிக்காதவராகவும் இருந்தார்.
(96) 3.96. அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் மக்கள் அனைவருக்குமாக கட்டப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் அமைந்துள்ள புனித ஆலயமாகும். அது பாக்கியம்மிக்க, ஏராளமான உலக மறுமைப் பயன்களை உள்ளடக்கிய ஆலயமாகும். அது உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது.
(97) 3.97. இந்த ஆலயத்தில் அதன் சிறப்பினை எடுத்துரைக்கும் புனிதச் சின்னங்கள் வழிபாட்டுத் தளங்கள் போன்ற வெளிப்படையான அடையாளங்கள் இருக்கின்றன. இப்ராஹீம் கஃபாவின் சுவரை உயர்த்த நாடியபோது நின்ற கல்லும் அந்த அடையாளங்களில் உள்ளவையாகும். அவற்றுள், அங்கு நுழைந்தவர் அச்சம்கொள்ளமாட்டார், அவருக்கு எந்த நோவினையும் கொடுக்கப்படமாட்டாது என்பதும் உள்ளடங்கும். மனிதர்களில் அந்த ஆலயத்திற்குச் சென்றுவர சக்திபெற்றவர்மீது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு அங்கு செல்வது அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். ஹஜ் கடமையை மறுத்தவர் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார். இத்தகைய நிராகரிப்பாளர்களை விட்டும், உலகத்தார் அனைவரையும் விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
(98) 3.98. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, முஹம்மது நபியின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களை ஏன் மறுக்கிறீர்கள்? அவற்றில் சில ஆதாரங்கள் தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூட இடம்பெற்றுள்ளன. உங்களின் இந்த செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(99) 3.99. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, உங்கள் வேதங்களில் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையான மார்க்கம் இதுதான் என்று நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அல்லாஹ்வின் மார்க்கத்தின்மீது நம்பிக்கைகொண்ட மனிதர்களை ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கின்றீர்கள்? அவனுடைய மார்க்கம் சத்தியத்திலிருந்து அசத்தியத்தின் பக்கம் சாய்வதையும் அதனை ஏற்றுக்கொண்டோர் நேர்வழியைவிட்டும் வழிகேட்டின் பக்கம் சாய்வதையுமா நீங்கள் விரும்புகிறீர்கள்? அல்லாஹ்வை நிராகரித்தல், அவனது பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிய நீங்கள் செய்யும் காரியங்களைஅவன் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குத் தண்டனை வழங்குவான்.
(100) 3.100. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் ஒரு பிரிவினர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களின் பொறாமையினாலும் வழிகேட்டினாலும் நம்பிக்கைகொண்ட பிறகு உங்களை நிராகரிப்பின் பக்கம் திருப்பிவிடுவார்கள்.
(101) 3.101. நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கான மிகச் சிறந்த காரணியை நீங்கள் பெற்றிருந்தும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டபின் எவ்வாறு அவனை நிராகரிக்கிறீர்கள்?! அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காட்டப்படுகிறதே! அவனுடைய தூதர் முஹம்மது அவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறாரே! அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் யார் பற்றிப்பிடித்துக் கொண்டாரோ அவருக்கு கோணலற்ற நேரான பாதையின் பக்கம் அல்லாஹ் வழிகாட்டிவிட்டான்.
(102) 3.102. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் இறைவனை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். அது அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதாகும், அவ்வாறே மரணம் வரும் வரை உங்களுடைய மார்க்கத்தைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.
(103) 3.103. நம்பிக்கையாளர்களே! குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். பிரிவினையை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அற்ப காரணங்களுக்காகக்கூட ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் எதிரிகளாக இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்கள் உள்ளங்களை ஒன்றுசேர்த்தான். அவனது அருளால் நீங்கள் மார்க்க சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் நலம்நாடுபவர்களாக, அன்பானவர்களாக ஆகிவிட்டீர்கள். உங்களின் நிராகரிப்பினால் நரக விளிம்பின் ஓரத்தில் இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றினான். ஈமானின்பால் உங்களுக்கு வழிகாட்டினான். இவ்வாறு நீங்கள் நேரான வழியை அடைந்து அதில் நிலைத்திருப்பதற்காக உலகிலும் மறுமையிலும் உங்களின் நிலமைகளைச் சீர்படுத்தக்கூடியவற்றை தெளிவுபடுத்துகிறான்.
(104) 3.104. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் விரும்பும் நன்மைகளின்பால் அழைக்கக்கூடிய, மார்க்கம் கூறும் அறிவு ஏற்றுக்கொள்ளும் நன்மைகளைக் கொண்டு ஏவக்கூடிய, மார்க்கம் தடுத்த அறிவு வெறுக்கும் தீமைகளை விட்டும் தடுக்கக்கூடிய ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் முழுமையான வெற்றியைப் பெறக்கூடியவர்கள்.
(105) 3.105. நம்பிக்கையாளர்களே! முரண்பட்டுப் பல பிரிவினர்களாக பிரிந்துவிட்ட வேதக்காரர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து தெளிவான சான்றுகள் வந்தபின்னரும் அவர்கள் தங்கள் மார்க்கத்தில் முரண்பட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்விடம் கடும் வேதனை இருக்கின்றது.
(106) 3.106. மறுமைநாளில் இந்தக் கடும் வேதனையை அவர்கள் சந்திப்பார்கள். அப்போது நம்பிக்கையாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியால், நிம்மதியால் பொலிவாக இருக்கும். நிராகரிப்பாளர்களின் முகங்கள் துக்கத்தால், கவலையால் கருமையாக இருக்கும். அந்த நாளில் எவர்களது முகங்கள் கருத்துவிடுகிறதோ அவர்களிடம் கூறப்படும்: அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது என்று அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியையும் நம்பி எற்றுக்கொண்ட பிறகு நிராகரித்தீர்கள் அல்லவா? உங்களின் நிராகரிப்பின் காரணமாக அவன் உங்களுக்குத் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைச் சுவையுங்கள்.
(107) 3.107. எவர்களது முகங்கள் பொலிவாகிவிடுமோ அவர்கள் அழியாத மாறாத இன்பம் நிறைந்த சுவனங்களில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(108) 3.108. தூதரே! அல்லாஹ்வின் வாக்குறுதிகளும் எச்சரிக்கைகளும் அடங்கிய வசனங்களை உண்மையான செய்திகளாவும் நீதிமிக்க சட்டங்களாகவும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். தன் படைப்புகளில் யாருக்கும் அல்லாஹ் அநீதியை விரும்பமாட்டான்.அவரவர் செய்த பாவத்திற்காகவே தவிர எவரையும் அவன் தண்டித்துவிட மாட்டான்.
(109) 3.109. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமாகும். அவற்றை அவனே படைத்து கட்டளை பிறப்பிக்கின்றான். மறுமைநாளில் அவன் பக்கமே அனைவரும் திரும்ப வேண்டும். அவன் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(110) 3.110. முஹம்மதுடைய சமூகமே! மக்களுக்காக அல்லாஹ் தோற்றுவித்த சமூகங்களிலே ஈமான் மற்றும் செயல்களின் அடிப்படையில் நீங்கள்தாம் சிறந்த சமூகமாகவும் அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடிய சமூகமாகவும் இருக்கின்றீர்கள். மார்க்கம் காட்டிய அறிவுக்குப் பொருந்தும் நன்மையான செயல்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுகிறீர்கள்; மார்க்கம் தடுத்த அறிவு ஏற்காத தீய செயல்களைவிட்டும் அவர்களைத் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையை உங்களின் செயல்களால் உண்மைப்படுத்துகிறீர்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் முஹம்மதின்மீது நம்பிக்கைகொண்டால் அது இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும். அவர்களில் குறைவானவர்களே முஹம்மது கொண்டுவந்தவற்றை உண்மைப்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்களாவர்.
(111) 3.111. நம்பிக்கையாளர்களே! அவர்கள் உங்களை எவ்வளவுதான் வெறுத்தாலும் உங்களின் மார்க்கத்திலோ உயிர்களுக்கோ அவர்களால் சேதம் விளைவிக்க முடியாது. ஆயினும் மார்க்கத்தைக் குறைகூறுதல், உங்களைப் பரிகசித்தல் போன்ற செயல்களைச் செய்து தம் நாவுகளால் உங்களுக்குத் தொல்லையளிப்பார்கள். அவர்கள் உங்களுடன் போரிட்டால் உங்கள் எதிரில் தோல்வியுற்றோராக ஓடிவிடுவார்கள். உங்களுக்கு எதிராக அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்.
(112) 3.112. யூதர்கள் எங்கு காணப்படினும் இழிவும் சிறுமையும் அவர்களைச் சூழ்ந்தே இருக்கும். ஆயினும் அவர்கள் அல்லாஹ்விடமோ மக்களிடமோ ஏதேனும் ஒப்பந்தத்தையோ பாதுகாப்பையோ பெற்றாலே தவிர. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுத்ததனாலும் அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனாலும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் விதித்த வரம்பை மீறியதனாலும் வறுமையும் பஞ்சமும் அவர்களைச் சூழ்ந்துகொண்டன.
(113) 3.113. வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஒருகூட்டம் இருக்கின்றதனர். அவர்கள் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுகின்றனர். இரவுநேரங்களில் தொழுதவர்களாக அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர். இந்த கூட்டத்தினர் முஹம்மது நபியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களாகும். அவர்களில் நபியவர்களை அடைந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
(114) 3.114. அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் உறுதியான நம்பிக்கைகொள்கிறார்கள்; நன்மையான விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயவற்றை விட்டும் தடுக்கிறார்கள்; நன்மையான செயல்களின்பால் விரைந்து சிறப்புமிக்க காலங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சிறந்த எண்ணமும் செயல்களும் உடைய அல்லாஹ்வின் நல்லடியார்களாகும்.
(115) 3.115. இவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ செய்யும் எந்த நற்காரியத்தின் கூலியும் ஒருபோதும் வீணாகிவிடவோ குறைந்துவிடவோ மாட்டாது. தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.
(116) 3.116. அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்தவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களை சிறிதும் காப்பாற்றிவிடாது. அவனது அருளையும் வரவழைக்காது. மாறாக அவை அவர்களின் வேதனையையும் வருத்தத்தையுமே அதிகப்படுத்தும். இவர்கள்தாம் நரகவாசிகள். என்றென்றும் அங்கு வீழ்ந்துகிடப்பார்கள்.
(117) 3.117. இந்த நிராகரிப்பாளர்கள் நன்மையான விஷயங்களில் செலவு செய்து அதன் பிரதிபலனை எதிர்பார்ப்பதற்கு உதாரணம் கடுங்குளிர் அடங்கிய காற்றைப் போன்றதாகும். அது பாவங்கள் செய்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் வயல்களில் வீசி அதனை நாசப்படுத்திவிட்டது. அவர்கள் அதிலிருந்து அதிகமான நன்மைகளை எதிர்பார்த்தார்கள். அவர்கள் பயன்பெறமுடியாதவாறு அந்தக் காற்று பயிர்களை அழித்துவிட்டது போன்றே நிராகரிப்பு அவர்கள் ஆதரவு வைத்திருக்கும் செயல்களின் கூலியையும் வீணாக்கிவிடும். அல்லாஹ் அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததன் காரணமாக அவர்கள்தான் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
(118) 3.118. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து மற்றவர்களை உங்கள் இரகசியங்களையும் பிரத்யேக நிலமைகளையும் நீங்கள் தெரிவிக்கும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்குத் தீங்குவிளைவிப்பதில் சோர்ந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு சிரமம்,தீங்கு ஏற்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள்மீதான பகைமையும் வெறுப்பும் அவர்களின் நாவுகளில் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் உங்கள் மார்க்கத்தைக் குறைகூறுகிறார்கள்; உங்களிடையே சண்டை மூட்டுகிறார்கள்; உங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் வெறுப்போ மிகக் கடுமையானது. நம்பிக்கையாளர்களே! உங்கள் இரட்சகனிடத்திலிருந்து இறக்கப்பட்டதை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருந்தால் இவ்வுலக மறுவுலக நலவுகளுக்கான தெளிவான ஆதாரங்களை நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.
(119) 3.119. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அந்தக் கூட்டத்தை விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நன்மையை நாடுகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களை விரும்புவதில்லை; உங்களுக்கு நன்மையையும் நாடுவதில்லை. மாறாக உங்களை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களது வேதங்கள் உட்பட அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களின் தூதரான முஹம்மதுமீது அல்லாஹ் இறக்கியதை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் உங்களை சந்தித்தால், ‘நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் சிலருடன் தனித்துவிட்டால் உங்களின் ஒற்றுமையையும் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் அவர்களது இழிவையும் கண்டு கோபத்தாலும் கவலையாலும் தங்களின் விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கிறார்கள். உள்ளங்களிலுள்ள ஈமானையும் நிராகரிப்பையும், நன்மையையும் தீமையையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
(120) 3.120. நம்பிக்கையாளர்களே! எதிரிகளுக்கு எதிரான வெற்றி, செல்வ வளம், குழந்தைகள் என்று ஏதேனும் அருட்கொடைகளை அவர்கள் உங்களிடம் கண்டால் கவலையடைந்து விடுகிறார்கள். எதிரிகளின் ஆதிக்கம், செல்வங்களிலும் குழந்தைகளிலும் ஏற்படும் இழப்பு போன்ற துன்பங்கள் உங்களுக்கு ஏற்படுவதைக் கண்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனுடைய விதியை பொறுமையை ஏற்றுக்கொண்டு அவனுடைய கோபத்திலிருந்து தவிர்ந்திருந்தால் அவர்களின் சூழ்ச்சியும் நோவினையும் உங்களுக்கு எந்தத் தீங்கும் அளிக்காது. அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் சூழ்ந்துள்ளான். அவன் அவர்களை தோல்வியடைந்தோராக திருப்பிவிடுவான்.
(121) 3.121. தூதரே! இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக நீர் மதீனாவிலிருந்து உஹதை நோக்கி காலைப்பொழுதில் புறப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக!. போரிடுவதற்காக நம்பிக்கையாளர்களை அவர்களுக்குரிய இடத்தில் நிறுத்தி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய இடத்தை நீர் தெளிவுபடுத்தினீர். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன்.
(122) 3.122. தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுபார்ப்பீராக: “பனூசலமா, பனூ ஹாரிசா என்ற இரு கூட்டத்தினரும் பலவீனமடைந்து நயவஞ்சகர்களோடு திரும்பிச் செல்ல நாடினார்கள். போர்புரிவதற்கு அவர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் நாடியதை விட்டும் திருப்பி அல்லாஹ்வே அவர்களுக்கு உதவிசெய்தான். நம்பிக்கையாளர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கைவைக்க வேண்டும்.”
(123) 3.123. பத்ருப்போரில் எண்ணிக்கையிலும் ஆயுதங்களிலும் ஏற்பட்ட பற்றாக்குறையினால் நீங்கள் பலவீனர்களாக இருந்தபோதும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டு அவனையே அஞ்சுங்கள்.
(124) 3.124. தூதரே! பத்ருப்போரில் இணைவைப்பாளர்களுக்கு உதவிப்படைகள் வந்ததை கேள்விப்பட்ட நம்பிக்கையாளர்களை நீர் உறுதிப்படுத்தி அவர்களிடம், “போரில் உங்களை பலப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வது போதாதா?” எனக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக.
(125) 3.125. நிச்சயமாக, இது உங்களுக்குப் போதுமானதுதான். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இன்னொரு உதவியைப் பற்றிய ஒரு நற்செய்தியும் உண்டு, நீங்கள் போர்க்களத்தில் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை அஞ்சினால், உங்கள் எதிரிகளுக்கு உதவிப்படைகள் வந்து அவர்கள் உங்களை நோக்கி விரைந்து வந்தால், தமக்கும் தமது குதிரைகளுக்கும் வெளிப்படையான அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வான்.
(126) 3.126. வானவர்களைக் கொண்டு உதவும் இந்த உதவியை அல்லாஹ் உங்கள் உள்ளங்கள் அமைதியடையக் கூடிய நன்மாராயமாகவே ஆக்கியுள்ளான். இல்லாவிட்டால் உண்மையில் வெற்றி என்பது இது போன்ற வெளிப்படையான காரணிகளை மட்டும் கொண்டு கிடைக்கமாட்டாது. உண்மையான வெற்றி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
(127) 3.127. பத்ருப்போரில் உங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், நிராகரிப்பாளர்களில் ஒருபிரிவினரை அழிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி தோல்வியுறச் செய்து கோபமூட்டி தோல்வியுடனும் இழிவோடும் அவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்பதையுமே அல்லாஹ் நாடினான்.
(128) 3.128. உஹதுப்போரில் இணைவைப்பாளர்களின் தலைவர்களினால் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களை அழித்துவிடும்படி பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரிடம் கூறினான்: “உமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் உங்களிடையே தீர்ப்பளிக்கும்வரை அல்லது அவர்களுக்குப் பாவமன்னிப்புக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை அல்லது அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்து அவன் அவர்களுக்குத் தண்டனையளிக்கும்வரை பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அவர்கள் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களாவர்.
(129) 3.129. வானங்களிலும் பூமியிலும் நிர்வகிக்கும் அதிகாரமும் படைக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடிய அடியார்களின் பாவங்களை தன் கருணையால் அவன் மன்னித்துவிடுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(130) 3.130. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறியாமைக்கால மக்கள் செய்துகொண்டிருந்ததுபோல நீங்கள் அளித்த கடனுக்கு பன்மடங்காக வட்டி வாங்குவதை தவிர்ந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் விரும்பும் நன்மைகளைப் பெறலாம்.
(131) நற்காரியங்கள் புரிந்து தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து உங்களுக்கும் தன்னை நிராகரித்தோர்களுக்கு அல்லாஹ் தயாரித்து வைத்துள்ள நரகிற்கும் இடையில் தடையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
(132) கட்டளைகளைச் செயல்படுத்தி தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அருளைப் பெறலாம்.
(133) 3.133. நற்காரியங்களாற்றுவதன் பக்கமும் பலவித வணக்கங்களின் மூலம் அவனை நெருங்குவதன் பக்கமும் விரையுங்கள். அதனால் அல்லாஹ்வின் பெரும்மன்னிப்பைப் பெற்று வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தில் நுழைவீர்கள். தன்னை அஞ்சும் அடியார்களுக்காகவே அல்லாஹ் அதனைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
(134) 3.134. இறையச்சமுடையவர்களே செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள். பழிவாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்துவிடுவார்கள். இத்தகைய பண்புகளை உடைய நல்லவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
(135) 3.134. அவர்கள் பெரும் பாவம் செய்தாலோ சிறு பாவத்தில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். பாவிகளுக்கு அவன் விடுத்த எச்சரிக்கைகளையும் அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் அளித்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்ப்பார்கள். தங்கள் பாவங்களை மறைத்துவிடுமாறும் தண்டிக்காமல் விட்டுவிடுமாறும் கைசேதப்பட்டவர்களாக தங்கள் இறைவனிடம் மன்றாடுவார்கள். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அறிந்துகொண்டே தங்களின் பாவங்களில் நிலைத்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன்.
(136) 3.135. மிகச் சிறந்த இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களை அல்லாஹ் மறைத்து, மன்னித்துவிடுவான். மறுமையில் அவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களின் கூலி சிறப்பானதாகும்.
(137) 3.136. உஹதுப்போரில் ஏற்பட்ட இழப்புகளால் நம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அல்லாஹ் கூறினான்: நிராகரிப்பாளர்களை அழிப்பதிலும், நம்பிக்கையாளர்களைச் சோதித்த பிறகு இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாக ஆக்குவதிலும் இறைவனின் நியதிகள் உங்களுக்கு முன்னரும் நிகழ்ந்தே இருக்கின்றன.அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று, என்பதை பூமியில் பயணம் செய்து படிப்பினை பெறும் கண்ணோட்டத்தோடு பாருங்கள். அவர்களின் வசிப்பிடங்கள் வெற்றிடமாகி விட்டன. அவர்களின் ஆட்சி நீங்கிவிட்டது.
(138) 3.137. கண்ணியமிக்க இந்த குர்ஆன் சத்தியத்தைத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அசத்தியத்திலிருந்து மனிதர்கள் அனைவரையும் எச்சரிக்கக்கூடியதாகவும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள்தாம் இதிலுள்ள வழிகாட்டுதலைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.
(139) 3.138. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் பலவீனமடைந்து விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். அது உங்களுக்கு உகந்ததும் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தன்னை அஞ்சும் அடியார்களுக்கு அளித்த வாக்குறுதியின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் உங்களின் நம்பிக்கையினால், அல்லாஹ்வின் உதவியினால், அவனது உதவியில் கொண்டிருக்கும் ஆதரவினால் நீங்கள்தாம் உயர்ந்தவர்கள்.
(140) 3.139. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் தான் நாடியவாறு வெற்றியையும் தோல்வியையும் காலத்துக்குக் காலம் மாறிமாறி வரச் செய்கின்றான். உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துதல்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கச் செய்வதன் மூலம் கவுரவித்தல் ஆகியன அந்த நோக்கங்களில் சிலவாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(141) 3.141. நம்பிக்கையாளர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவது, அவர்களின் அணியை நயவஞ்சகர்களை விட்டும் பிரித்தெடுப்பது, நிராகரிப்பாளர்களை வேரோடு அழித்துவிடுவது ஆகியவைகளும் அந்த நோக்கங்களில் சிலவாகும்.
(142) 3.142. நம்பிக்கையாளர்களே! சோதனை, பொறுமை ஆகியவற்றை அனுபவிக்காமல் நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?அவற்றின் மூலமே அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே போர்புரிவோர், தமக்கு நேரும் சோதனையை பொறுமையுடன் எதிர்கொள்வோர் யார் என்பது தெளிவாகும்.
(143) 3.143. நம்பிக்கையாளர்களே! மரணத்தின் காரணிகளையும் அதன் கடுமையையும் நீங்கள் சந்திக்கும் முன்னரே பத்ருப்போரில் கொல்லப்பட்ட உங்கள் சகோதரர்களைப்போன்று நிராகரிப்பாளர்களை போர்க்களத்தில் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். இதோ, இந்த உஹதுப்போரிலே நீங்கள் ஆசைப்பட்டதைக் நேரடியாகவே கண்டுகொண்டீர்கள்.
(144) 3.144. இறந்துவிட்ட அல்லது கொல்லப்பட்ட முந்தைய தூதர்களைப்போல முஹம்மதுவும் ஒரு தூதர்தாம். அவர் இறந்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் ஜிஹாதை விட்டுவிட்டு உங்களின் மார்க்கத்தை விட்டு திரும்பி விடுவீர்களா என்ன? உங்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டுத் திரும்பிவிடுபவர் அல்லாஹ்விக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன், வல்லமைமிக்கவன். மதம்மாறுபவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பிற்குள்ளாகி தனக்குத் தானே தீங்கைிழைத்துக்கொள்கிறார். தன் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து, ஜிஹாது செய்து தனக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்குவான்.
(145) 3.145. அல்லாஹ் எழுதிவைத்த தவணை நிறைவடையும் முன்னர் எந்த உயிரும் மரணிக்காது. அந்தத் தவணைக் காலம் கூடவோ குறையவோமாட்டாது. எவர் தம்முடைய செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை விரும்புகிறாரோ நாம் அவருக்கு விதித்த அளவு வழங்குவோம். மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. எவர் தம்முடைய செயல்களின்மூலம் மறுமையை விரும்புவாரோ நாம் அவருக்கு அதற்குரிய கூலியை வழங்குவோம். தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு நாம் மிகப்பெரும் கூலியை வழங்கிடுவோம்.
(146) 3.146. எத்தனையோ இறைத்தூதர்களுடன் சேர்ந்து அவர்களைப் பின்பற்றிய ஏராளமானவர்கள் போரிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதத்தாலும் காயங்களாலும் அவர்கள் ஜிஹாதைக் கைவிட்டு பலவீனமடைந்துவிடவுமில்லை. எதிரிகளுக்குப் பணிந்துவிடவுமில்லை. பொறுமையாகவும் உறுதியாகவும் நின்றார்கள். தன் பாதையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
(147) 3.147. இந்தப் பொறுமையாளர்கள் துன்பங்களால் பாதிக்கப்பட்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்களின் விஷயத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்துவிடுவாயாக. எதிரிகளை சந்திக்கும்போது எங்களை உறுதிப்படுத்துவாயாக. உன்னை நிராகரித்த மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக என்ற பிரார்த்தனையைத் தவிர வேறு எதனையும் கூறவில்லை.
(148) 3.148. எனவே அல்லாஹ் அவர்களுக்கு உதவிசெய்தும் அதிகாரத்தை வழங்கியும் இவ்வுலகில் வெகுமதியை வழங்கினான். அவர்களைப் பொருந்திக் கொண்டு அருட்கொடைகள் அடங்கிய சுவனங்களில் நிரந்தரமான இன்பத்தை அளிப்பதன் மூலம் மறுமையிலும் அவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவான். வணக்க வழிபாட்டிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் சிறந்த முறையில் செயல்படுபவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
(149) 3.149. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரித்த யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களுக்கு அவர்கள் ஏவும் வழிகேடான விஷயங்களில் நீங்கள் கட்டுப்பட்டால் உங்களின் நம்பிக்கைக்குப் பிறகு உங்களை நிராகரிப்பாளர்களாக்கிவிடுவார்கள். அதனால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள்.
(150) 3.150. இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அவர்களால் ஒருபோதும் உங்களுக்கு உதவ முடியாது. மாறாக அல்லாஹ்தான் உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவக்கூடியவன். எனவே அவனுக்கே கீழ்ப்படியுங்கள். அவனே மிகச் சிறந்த உதவியாளன். அவனைத்தவிர உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
(151) 3.151. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் உங்களுடன் நிலைத்து நின்று போர்புரியாமல் இருக்கும் பொருட்டு அவர்களது உள்ளங்களில் நாம் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவோம். ஏனெனில் அவர்கள் தமது மனோஇச்சையின் படி எவ்வித ஆதாரமும் அற்ற தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். மறுமையில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடமான நரகம் கெட்ட தங்குமிடமாகும்.
(152) 3.152. அல்லாஹ் உஹதுப்போரில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவிசெய்து, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினான். அல்லாஹ்வின் அனுமதிகொண்டு அவர்களை நீங்கள் கடுமையாக வெட்டிச்சாய்த்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர் தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு உறுதியாக நில்லாமல் உங்களது இடங்களில் தொடர்ந்திருப்பதா அல்லது அதனை விட்டுவிட்டு போர்ச்செல்வங்களை திரட்டுவதா என உங்களுக்கு மத்தியில் கருத்துவேறுபட்டு எச்சந்தர்ப்பத்திலும் குறித்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்ற தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் விரும்பும் உதவியை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய பின்னரும் அது நிகழ்ந்தது. உங்களில் இவ்வுலகச் செல்வங்களை விரும்புவர்கள்தாம் தங்களின் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்கள். உங்களில் மறுமையை விரும்புபவர்கள் தூதரின் கட்டளைப்படி தங்களின் இடத்திலேயே உறுதியாக நின்றார்கள். பின்னர் அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களை விட்டும் உங்களைத் திருப்பி அவர்களை உங்கள் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். உறுதியுடன் பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாளர்கள் யார், நிலைகுலையும் பலவீனர்கள் யார் என்பது தெரிவதற்காக இவ்வாறு செய்தான். தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் மீது பேரருள் புரியக்கூடியவன். அவர்களுக்கு ஈமானின் பக்கம் வழிகாட்டியுள்ளான். அவர்களின் தவறுகளை மன்னித்தும்விட்டான். அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக அவர்களுக்குக் கூலியும் வழங்கிவிட்டான்.
(153) 3.153. நம்பிக்கையாளர்களே! உஹதுப் போரில் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் அடைந்த தோல்வியால் ஒருவரையொருவர் திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்குப் பின்னாலிருந்து, இணைவைப்பாளர்களுக்கு முன்னாலிருந்து, “அல்லாஹ்வின் அடியார்களே, என்னிடம் வாருங்கள், அல்லாஹ்வின் அடியார்களே என்னிடம் வாருங்கள்” என்று தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தார். இந்த துன்பத்திற்கும் நெருக்கடிக்கும் மேலும் அல்லாஹ் துன்பத்தையும் நெருக்கடியையும் தொடரச் செய்தான். முதலில் இறைஉதவியையும் போர்ச் செல்வங்களையும் இழந்தீர்கள். பின்னர் நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி உங்களிடையே பரவியது. இந்த துன்பம் ஏனெனில் தூதர் கொல்லப்படவில்லை என்பதை அறிந்தபிறகு இழந்த வெற்றிக்காகவும் போர்ச் செல்வங்களுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காகவும் உயிர்ச் சேதங்களுக்காகவும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். தூதர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை அறிந்தபிறகு எல்லா துன்பங்களும் உங்களுக்கு இலகுவாகிவிட்டன. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களோ செய்யும் உறுப்புக்களால் செய்யும் செயல்களோ எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(154) 3.154. இந்த வேதனைக்கும் நெருக்கடிக்கும் பிறகு அல்லாஹ் உங்கள்மீது நிம்மதியையும் நம்பிக்கையையும் இறக்கினான். அதனால் உங்களில் அவனுடைய வாக்குறுதியை உறுதியாக நம்பியவர்களை -அவர்களது உள்ளங்களில் உள்ள அமைதியினால்- சிறு தூக்கம் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கு சிறு தூக்கமோ அமைதியோ ஏற்படவில்லை. அவர்கள்தாம் தங்களின் பாதுகாப்பு பற்றி மட்டுமே கவலைகொண்ட நயவஞ்சகர்கள். அவர்கள் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள். அல்லாஹ்வை மதிப்பிட வேண்டிய முறைப்படி மதிப்பிடாத இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள்போல அவன் தன் தூதருக்கோ அடியார்களுக்கோ உதவிபுரிய மாட்டான் என்று கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறியாத இந்த நயவஞ்சகர்கள், “போருக்குப் புறப்பட்டபோது எங்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் நாங்கள் வெளியேறியிருக்க மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதரே! இவர்களிடம் நீர் கூறுவீராக, “அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவனே தான் நாடியதைக் கட்டளையிடுகிறான், தான் நாடியதை விதிக்கிறான். அவன்தான் நீங்கள் போருக்குப் புறப்பட வேண்டும் என்று விதித்தவனும்.” இந்த நயவஞ்சகர்கள் தங்கள் உள்ளங்களில் உம்மிடம் வெளிப்படுத்தாத சந்தேகத்தையும் கெட்ட எண்ணத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “போருக்குப் புறப்படும் விஷயத்தில் எங்களின் ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் நாங்கள் இந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “கொலைக்களத்தினை விட்டு தூரமாக உங்களின் வீடுகளில் நீங்கள் தங்கியிருந்தாலும் உங்களில் யாருக்கு அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டானோ அவர் தான் கொலைசெய்யப்படும் இடத்தினை நோக்கி புறப்பட்டே இருப்பார். உங்களின் உள்ளங்களிலுள்ள எண்ணங்களையும் நோக்கங்களையும் சோதிப்பதற்காகவும் அதிலுள்ள ஈமானையும் நயவஞ்சகத்தையும் பிரித்துக்காட்டுவதற்காவும் அல்லாஹ் இவ்வாறு விதித்துள்ளான். தன் அடியார்களின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(155) 3.155. முஹம்மதின் தோழர்களே! முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் மோதிக் கொண்ட உஹதுப்போரில் உங்களில் தோல்வியடைந்தவர்களை ஷைத்தான்தான் -அவர்கள் சம்பாதித்த சில பாவங்களின் காரணமாக சறுகச் செய்துவிட்டான். அல்லாஹ் தன் அருளாலும் கருணையாலும் அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவன் உடனுக்குடன் தண்டித்துவிடாத சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான்.
(156) 3.156. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களான நயவஞ்சகர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் தமது உறவினர்களிடம், வாழ்வாதாரம் தேடி அல்லது போர்செய்வதற்காக பயணம் செய்து கொல்லப்பட்ட அல்லது இறந்தவர்களைக் குறித்து, “அவர்கள் புறப்படாமல் நம்மிடத்தில் இருந்திருந்தால், போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கவோ இறந்திருக்கவோ மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களது உள்ளங்களில் கைசேதமும் கவலையும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். தனது நாட்டத்தின் பிரகாரம் வாழ்வையும் மரணத்தையும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. அவன் தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவர்கள் வீட்டில் அமர்ந்திருப்பதால் விதியைத் தடுக்கவும் முடியாது. புறப்படுவதால் விரைவாக்கவும் முடியாது. உங்களின் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(157) 3.157. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ இறந்தாலோ அவன் உங்களுக்கு பெரும் மன்னிப்பையும் தன் புறத்திலிருந்து அருளையும் வழங்குவான். அது இவ்வுலகம், இந்த உலக மக்கள் சேர்த்து வைக்கும் அனைத்தையும்விடச் சிறந்ததாகும்.
(158) 3.158. நீங்கள் எப்படி மரணித்தாலும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் அவன் பக்கமே நீங்கள் அனைவரும் திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.
(159) 3.159. தூதரே! அல்லாஹ்வின் பெரும் அருளினால்தான் உம் தோழர்களுடன் மென்மையான முறையில் நடந்துகொள்கிறீர். சொல்லிலும் செயலிலும் நீர் கடுமையானவராக, கடினமனம் கொண்டவராக இருந்திருந்தால் உம்மை விட்டு அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் உமக்குச் செய்த குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. ஆலோசனை தேவைப்படும் விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக. ஆலோசனைக்குப் பின் ஏதேனும் விஷயத்தில் நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அதனைச் செயல்படுத்துவீராக. தன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அவர்களைப் பலப்படுத்துகிறான்.
(160) 3.160. அல்லாஹ் தனது உதவியினால் உங்களைப் பலப்படுத்தினால் உலகிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் யாராலும் உங்களை மிகைக்க முடியாது. அவன் உங்களுக்கு உதவாது கைவிட்டுவிட்டால் அதற்குப் பிறகு யாராலும் உங்களுக்கு உதவிசெய்ய முடியாது. உதவி அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். வேறுயாரையும் முழுமையாக நம்பியிருக்கக் கூடாது.
(161) 3.161. போர்ச் செல்வங்களில் எதனையும் எடுத்து மோசடி செய்வது இறைத்தூதர்களில் எவருக்கும் உகந்த காரியம் அல்ல. அல்லாஹ் பிரத்யேகமாக அவருக்கென அனுமதித்ததைத் தவிர. உங்களில் போர்ச் செல்வங்களில் மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். படைப்பினங்களுக்கு முன்னால் தான் செய்த மோசடியோடு அவன் வருவான். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றுக்கான கூலி குறைவின்றி முழுமையாக வழங்கப்படும். அவர்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ நன்மைகள் குறைக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.
(162) 3.162. நம்பிக்கை கொள்ளுதல், நற்செயல் புரிதல் போன்ற அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரக்கூடிய விஷயங்களைப் பின்பற்றியவர்களும் அவனை நிராகரித்து தீய காரியங்கள் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.
(163) 3.163. அவ்விரு கூட்டத்தினரும் இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் பலவித தரத்தையுடைவர்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.
(164) 3.164. அல்லாஹ் நம்பிக்கையாளர்கள்மீது அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி அருள் புரிந்திருக்கிறான். அவர் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஷிர்க்கிலிருந்தும் தீய குணங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்துகின்றார். குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குப் போதிக்கின்றார். இந்த தூதர் வருவதற்கு முன்னால் அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.
(165) 3.165. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு தோல்வி ஏற்பட்டு உங்களில் சிலர் இறந்ததனால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் போது - பத்ருப் போரில் உங்களின் எதிரிகளில் இறந்தவர்களும் கைதிகளும் இருமடங்காகும். -: “நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தும் அல்லாஹ்வின் தூதர் எங்களிடையே இருந்தும் எங்களுக்கு எவ்வாறு துன்பம் ஏற்பட்டது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். தூதரே! நீர் கூறுவீராக: இது உங்களால் ஏற்பட்ட துன்பங்களேயாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள், தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். தான் நாடியவர்களுக்கு அவன் உதவி செய்கிறான். தான் நாடியவர்களை கைவிட்டுவிடுகிறான்.
(166) 3.166. உஹதுப்போரில் உங்களின் படைகளும் இணைவைப்பாளர்களின் படைகளும் மோதிக் கொண்டபோது நீங்கள் அடைந்த காயங்களும் உயிர்ச் சேதங்களும் தோல்வியும் அல்லாஹ்வின் அனுமதி, விதியின்படியே ஆழமான நோக்கங்களுக்காக நிகழ்ந்தவையாகும். அதன் மூலம் உண்மையான நம்பிக்கையாளர்கள் புலப்படுவார்கள்.
(167) 3.167. மேலும் நயவஞ்சகர்களும் இதன் மூலம் புலப்படுவார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள் அல்லது முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒத்துழையுங்கள்” என்று கூறப்பட்டால், “போர் நிகழும் என்பதை நாம் அறிந்திருந்தால் நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம். ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் போர்நிகழாது என்றே நாம் கருதுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அப்போது நம்பிக்கையைவிட நிராகரிப்பிற்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தம் நாவுகளால் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் நன்கறிவான். அதற்காக அவன் அவர்களைத் தண்டிப்பான்.
(168) 3.168. அவர்கள்தான் போருக்குச் செல்லாமல் பின்தங்கியவர்கள், உஹதுப்போரில் மரணித்தவர்கள் குறித்து தங்கள் உறவினர்களிடம் கூறினார்கள்: “அவர்கள் நம் பேச்சைக் கேட்டு போருக்குச் செல்லாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள், அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்லாமல் இருந்ததனால்தான் நாங்கள் மரணத்திலிருந்து தப்பி விட்டோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுக்கு மரணம் வரும்போது உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் பார்க்கலாம்.
(169) 3.169. தூதரே! அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் கண்ணியமான வீட்டில் பிரத்யேகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவகையான இன்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
(170) 3.170. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளினால் நிம்மதி அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், மகிழ்ச்சி அவர்களைத் தழுவிக் கொள்ளும். இன்னும் வந்துசேராமல் இவ்வுலகில் தங்கியிருக்கும் தங்களின் சகோதரர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் இவர்கள் பெற்ற அதே அருட்கொடைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதனால் அவ்வாறு எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் நிகழக்கூடிய மறுமையின் நிகழ்வுகளை எண்ணி அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள். இவ்வுலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.
(171) 3.171. இத்துடன்அவர்கள் அல்லாஹ்விடம் காத்திருக்கும் பெரும் கூலி, மேலதிகமான நன்மைகள் ஆகியவற்றைக் கொண்டும் மகிழ்ச்சியடைவார்கள். நம்பிக்கையாளர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான். அவன் அவர்களுக்கான கூலியை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிடுவான்.
(172) 3.172. அல்லாஹ்வுடைய பாதையில் "ஹம்ராவுல்அஸத்" என்ற போரில் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டபோது உஹதுப்போரில் காயமுற்றிருந்தும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தபோது தங்களின் காயங்களைக் காட்டி அவர்கள் பின்தங்கிவிடவில்லை. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு அவனிடம் சுவனம் என்னும் மகத்தான கூலி காத்திருக்கின்றது.
(173) 3.173. அவர்களிடம் சில இணைவைப்பாளர்கள், “போரிட்டு உங்களை அழித்தொழிப்பதற்கு குறைஷிகள் அபூசுஃப்யானின் தலைமையில் பெரும்படைகளைத் திரட்டியுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள், அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனக் கூறியபோது இணைவைப்பாளர்களின் இந்தப் பேச்சு நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய வாக்குறுதியின்மீதும் கொண்ட நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குப் பொறுப்பாளன். எங்களின் விவகாரங்களை அவனிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறியவர்களாக எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.
(174) 3.174. அவர்கள் ஹம்ராவுல்அஸதிலிருந்து அல்லாஹ்விடம் பெற்ற பெரும் நன்மையோடும் உயர்ந்த அந்தஸ்துகளோடும் திரும்பினார்கள். காயமோ உயிர்ச்சேதமோ அவர்களுக்கு ஏற்படாது எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பாக திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு மாறுசெய்யாது அவனைத் திருப்திபடுத்தும் செயல்களைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது பேரருள் புரியக்கூடியவன்.
(175) 3.175. ஷைத்தான்தான் தன் உதவியாளர்களின் மூலம் உங்களை அச்சமூட்டுகிறான். எனவே அவர்களுக்கு நீங்கள் பயப்படாதீர்கள். ஏனெனில், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ் ஒருவனுக்கே கீழ்ப்படிந்து அவனை அஞ்சுங்கள்.
(176) 3.176. தூதரே! நயவஞ்சகர்கள் மதம்மாறி நிராகரிப்பில் விரைந்துசெல்வது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்களால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுக்குக் கட்டுப்படுவதை விட்டும் தூரமாகி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர்களைக் கைவிடுவதனூடாக மறுமையின் இன்பங்களில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அங்கு நரகத்தில் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.
(177) 3.177. ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
(178) 3.178. தங்கள் இறைவனை நிராகரித்து அவனுடைய சட்டங்களுக்கு மாறாகச் செயல்படுபவர்கள், தமது இறைநிராகரிப்பில் தமக்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் நீண்ட ஆயுளையும் தமக்கு நன்மையென எண்ணிவிட வேண்டாம். அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களின் பாவச்சுமைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு.
(179) 3.179. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ், நயவஞ்சகர்களையும் உண்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்தாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அப்படியே உங்களை விட்டுவிடுவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. பொறுப்புகளையும் சோதனைகளையும் அளித்து உங்களில் நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் அவன் வேறுபடுத்துவான். நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் நீங்களே வேறுபடுத்திக்கொள்ளும் வகையில் உங்களுக்கு அவன் மறைவான விஷயங்களை அறிவிப்பதும் அவனது ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. ஆயினும் அல்லாஹ் தூதர்களில் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு மறைவான விஷயங்களில் சிலவற்றை அறிவித்தும் கொடுக்கிறான். முஹம்மது நபிக்கு நயவஞ்சகர்களைக் குறித்து அறிவித்தது போன்று. எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் உங்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது.
(180) 3.180. அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைத் தடுத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள், அதனைத் தங்களுக்கு நல்லதென எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீங்காகும். மறுமைநாளில் அவர்கள் கஞ்சத்தனம் செய்த பொருட்கள் அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு வேதனைப்படுத்தப்படுவார்கள். வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் அவன் என்றென்றும் நிலைத்திருப்பான். நீங்கள் செய்யும் நுனுக்கமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(181) 3.181. “அல்லாஹ் எங்களிடம் கடன் கேட்கும் ஏழை. எங்களிடம் சொத்துக்கள் இருப்பதனால் நாங்கள் செல்வந்தர்கள்” என்று கூறிய யூதர்களின் பேச்சை அல்லாஹ் செவியுற்றுவிட்டான். தமது இறைவன் மீது கூறிய இந்த அவதூறையும் இறைத்தூதர்களை அநியாயமாக அவர்கள் கொலைசெய்ததையும் நாம் எழுதிவைப்போம். “நரகத்தில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” என்றும் நாம் அவர்களிடம் கூறுவோம்.
(182) 3.182. யூதர்களே! இந்த வேதனை நீங்கள் சேர்த்துவைத்த பாவங்கள், இழிவான செயற்பாடுகளின் விளைவேயாகும். அல்லாஹ் தன் அடியார்களில் எவர்மீதும் அநீதி இழைப்பதில்லை என்பதும் அதற்குக் காரணமாகும்.
(183) 3.183. “அல்லாஹ் எங்கள் வேதங்களில் எங்களின் தூதர்களின்மூலம் எங்களிடம் ஒரு கட்டளையிட்டுள்ளான். அது எங்களிடம் வருகின்ற எந்த தூதரானாலும் அவர் அல்லாஹ்வுக்காக வழங்கும் தர்மத்தை வானத்திலிருந்து வரும் நெருப்பு பொசுக்காத வரை நாம் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதாகும்” என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டமாகவும் பொய்யாகவும் கூறுகிறார்கள். இக்கட்டளை அல்லாஹ் கூறியது, தூதர்களின் உண்மைக்கு ஆதாரம் நெருப்பு எரிக்கும் தர்மம் என்பவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறிய பொய்களாகும். எனவேதான் அல்லாஹ் தன் தூதர் முஹம்மதிடம் பின்வருமாறு அவர்களிடம் கேட்குமாறு கட்டளையிடுகிறான்: “எனக்கு முன்னால் வந்த பல தூதர்கள் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் நீங்கள் கூறும், வானத்திலிருந்து நெருப்பு பொசுக்கக்கூடிய ஒரு பலிப்பிராணியையும் கொண்டு வந்தார்களே! நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் பொய்ப்பித்தீர்கள்? ஏன் கொலை செய்தீர்கள்?
(184) 3.184. தூதரே! அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால் அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான். உமக்கு முன்னால் ஏராளமான தூதர்கள் இவ்வாறே பொய்யர் என்று தூற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தெளிவான ஆதாரங்களையும், அறிவுரைகளையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய வேதங்களையும் சட்ட திட்டங்களை உள்ளடக்கிய நேர்வழிகாட்டக்கூடிய வேதத்தையும் கொண்டு வந்தார்கள்.
(185) 3.185. எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்வைக்கொண்டு எவரும் ஏமாந்துவிட வேண்டாம். மறுமைநாளில்தான் குறைவின்றி முழுமையாக நீங்கள் கூலிவழங்கப்படுவீர்கள். யாரை அல்லாஹ் நரகத்திலிருந்து தூரமாக்கி சுவனத்தில் நுழைவித்தானோ அவர் தாம் விரும்பும் நன்மைகளைப் பெற்றுவிட்டார்; தாம் அஞ்சும் தீங்குகளிலிருந்து பாதுகாப்புபெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய இன்பங்கள்தாம். ஏமாறுபவனே இதன்மீது மோகம்கொள்வான்.
(186) 3.186. நம்பிக்கையாளர்களே! உங்களின் செல்வங்களில் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ அதில் ஏற்படும் ஆபத்துகளைக்கொண்டோ நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மார்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ பலவிதமான சோதனைகளைக்கொண்டோ உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் உங்களின் மார்க்கத்தைக் குறித்தோ உங்களைக் குறித்தோ நோவினைதரும் ஏராளமான விஷயங்களைச் செவியுறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலும் சோதனைகளிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க காரியமும் போட்டியிடுபவர்கள் போட்டியிடும் விடயமுமாகும்.
(187) 3.187. தூதரே! வேதம்வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவ அறிஞர்களிடம், “அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; அதிலுள்ள நேர்வழியையும் முஹம்மதின் தூதுத்துவத்தை அறிவிக்கக்கூடியதையும் மறைத்துவிடக்கூடாது” என்று அல்லாஹ் உறுதியான ஒப்பந்தம் வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்கள் அந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்தினார்கள். அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு சில வேளை கிடைக்கும் பணம், பதவி போன்ற அற்ப கிரயத்திற்காக விற்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் ஒப்பந்ததிற்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட இந்தக் கிரயம் மோசமானதாகும்.
(188) 3.188. தூதரே! அருவருப்பான காரியங்களைச் செய்துவிட்டு சந்தோஷப்பட்டு தாங்கள் செய்யாத நற்செயல்களுக்காக மக்கள் தங்களைப் புகழ வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பி விடுவார்கள் என்று நீர் எண்ண வேண்டாம். அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அங்கு அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
(189) 3.189. வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிலும் உள்ளவற்றையும் படைத்து நிர்வகிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.
(190) 3.190. வானங்களும் பூமியும் முன்மாதிரியின்றி இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டிருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், அவ்விரண்டின் நீண்ட, குறுகிய நேர ஏற்றத்தாழ்விலும் அறிவுடைய மக்களுக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. அவை, அல்லாஹ் ஒருவன்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவன். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன.
(191) 3.191. அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் என எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூருகிறார்கள். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்தி பின்வருமாறு கூறுவார்கள்: “அல்லாஹ்வே! நீ இந்தப் பெரும் படைப்புகளையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை. வீணாகப் படைப்பதை விட்டும் நீ தூய்மையானவன். நற்செயல்கள் செய்வதற்கு பாக்கியம் அளித்து தீய செயல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக”.
(192) 3.192. எங்கள் இறைவா! உன் படைப்புகளில் யாரை நீ நரகத்தில் நுழைவித்தாயோ அவரை நீ இழிவுபடுத்தி அம்பலப்படுத்திவிட்டாய். மறுமைநாளில் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
(193) 3.193. எங்கள் இறைவா! "ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள்" என்று ஈமானின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளரான முஹம்மத் (ஸல்) அவர்களது அழைப்பைச் செவியுற்று நாங்கள் அவர் அழைக்கும் விஷயத்தின்மீது நம்பிக்கைகொண்டோம். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே எங்கள் பாவங்களை மறைத்துவிடுவாயாக. எமது குறைகளை அம்பலப்படுத்திவிடாதே. எங்களின் குறைகளை கண்டும்காணாமல் விட்டுவிடுவாயாக. அதற்காக எங்களைத் தண்டித்துவிடாதே. நற்செயல்கள் செய்வதற்கும் தீமைகளை விடுவதற்கும் வாய்ப்பை வழங்கி நல்லவர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.
(194) 3.194. எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலமாக வாக்களித்த, வழிகாட்டலையும் இவ்வுலகில் உதவியையும் எங்களுக்கு வழங்குவாயாக. மறுமைநாளில் நரகத்தில் நுழைத்து எங்களை அவமானப்படுத்திவிடாதே. எங்கள் இறைவா!நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படாத கொடையாளன்.
(195) 3.195. இறைவன் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான்: ஆணாயினும் பெண்ணாயினும் உங்களின் செயல்கள் சிறியதோ பெரியதோ அவற்றின் நன்மைகளை நான் வீணாக்கிவிட மாட்டேன். மார்க்க விடயத்தில் நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமானவரே. ஆண்கள் என்பதற்காக அதிகரிக்கப்படவும்மாட்டாது. பெண்கள்என்பதற்காக குறைக்கப்படவும்மாட்டாது. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்கள், நிராகரிப்பாளர்களால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டதால் துன்பங்களை அடைந்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்கள், அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அதில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் செய்த பாவங்களை மறுமைநாளில் நான் மன்னிப்பேன். அவற்றைக் கண்டுகொள்ளமாட்டேன். அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையாகும். அவனிடமே ஈடிணையற்ற அழகிய கூலி இருக்கின்றது.
(196) 3.196. தூதரே! நிராகரிப்பாளர்கள் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து ஆதிக்கம் செய்து பரந்த வியாபாரம் மற்றும் செல்வத்தைத் திரட்டுவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம். இல்லையெனில் அவர்களது நிலமையைப் பார்த்து நீர் கவலைப்பட நேரிடும்.
(197) 3.197. இந்த உலகம் நிலையற்ற ஒரு அற்ப இன்பமாகும். அதன் பிறகு நரகமே அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய இடமாகும். அவர்களுக்குரிய விரிப்பாகிய நரகம் மோசமானதாகும்.
(198) 3.198. தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் கூலியாகும். அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு தயார்படுத்தி வைத்துள்ளவைகள் நிராகரிப்பாளர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களை விடச் சிறந்ததாகும்.
(199) 3.199. வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின்மீதும் அவன் உங்களுக்கு இறக்கிய சத்தியத்தின்மீதும் நேர்வழியின் மீதும் நம்பிக்கைகொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேதங்களில் தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடையே அவர்கள் பாகுபாடு காட்டுவதில்லை. அவனிடம் உள்ளவற்றின்மீது ஆசைகொண்டவர்களாக அவனுக்கே முற்றிலும் அடிபணிகிறார்கள். அல்லாஹ்வின் வசனங்களை அற்ப ஆதாயத்திற்காக அவர்கள் விற்றுவிடுவதில்லை. இந்த பண்புகளை உடையவர்கள் தங்கள் இறைவனிடம் மகத்தான கூலியைப் பெறுவார்கள். அல்லாஹ் அடியார்களின் செயல்களுக்கு விரைவாக கணக்குத் தீர்க்கக்கூடியவன். அவைகளுக்கு விரைவாக கூலியும் வழங்குபவன்.
(200) 3.200. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மார்க்கக் கடமைகளிலும் உங்களுக்கு உலகில் நிகழும் துன்பங்களிலும் பொறுமையாக இருங்கள். பொறுமையில் நிராகரிப்பாளர்களை மிகைத்துவிடுங்கள். அவர்கள் உங்களைவிட பொறுமைமிக்கவர்களாக ஆகிவிடக்கூடாது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தில் நுழைந்து உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.