31 - ஸூரா லுக்மான் ()

|

(1) 30.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 31.2. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் ஞானத்தை கூறக்கூடிய வேதத்தின் வசனங்களாகும்.

(3) 31.3. அது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.

(4) 31.4. அவர்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். மறுமை நாளில் நடைபெறும் மீண்டும் எழுப்புதல், விசாரணை, நன்மை, தீமை என்பவற்றின் மீது உறுதியாக நம்பிக்கைகொள்கிறார்கள்.

(5) 31.5. இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து நேரான வழியைப் பெற்றவர்களாவர். இவர்கள்தாம்வேண்டுவதை பெற்று அஞ்சுவதை விட்டும் தூரமாகி வெற்றி பெறக்கூடியவர்கள்.

(6) 31.6. -நள்ர் இப்னு ஹாரிசைப் போன்ற- சில மனிதர்கள் வேடிக்கையான பேச்சுக்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு அதன் பக்கம் மக்களை அறிவில்லாமல் திருப்புவதற்காகவும் அவனுடைய வசனங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இழிவுமிக்க வேதனையுண்டு.

(7) 31.7. நம்முடைய வசனங்கள் அவனிடம் எடுத்துரைக்கப்பட்டால் அதனை செவியேற்காமல் அவற்றை செவியேற்காதவனைப் போன்று, அவனுடைய செவிகளில் சத்தத்தை செவியேற்க முடியாமல் அடைப்பு உள்ளதைப் போன்று கர்வம் கொண்டவனாக புறக்கணித்து விடுகிறான். -தூதரே!- அவனுக்கு வேதனை மிக்க தண்டனை காத்திருக்கின்றது என்னும் நற்செய்தியைக் கூறிவிடுவீராக.

(8) 31.8. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் உண்டு. அவற்றில் அல்லாஹ் அவர்களுக்குத் தயார்படுத்தியுள்ள இன்பங்களில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.

(9) 31.9. அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சந்தேகம் இல்லாத உறுதியான வாக்குறுதியாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.

(10) 31.10. அல்லாஹ் வானங்களை உயரமானவையாக, தூண்களின்றி படைத்துள்ளான். பூமி உங்களைக்கொண்டு ஆட்டம் கண்டுவிடாமல் இருக்க அதில் உறுதியான மலைகளை ஊன்றியுள்ளான். அதன் மேற்பரப்பில் பலவகையான உயிரினங்களை பரவச் செய்துள்ளான். நாம் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி, மனிதர்களும் உயிரனங்களும் பயன்பெறும் அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் பூமியில் முளைக்கச் செய்துள்ளோம்.

(11) 31.11. இவ்வாறு கூறப்பட்டவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். -இணைவைப்பாளர்களே!- அவனைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எதைப் படைத்தன? மாறாக தாமே படைக்கப்பட்ட நிலையில் எதையும் படைக்காதவற்றை அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அநியாயக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

(12) 31.12. நாம் லுக்மானுக்கு மார்க்கத்தில் புரிதலையும் விஷயங்களில் ஞானத்தையும் வழங்கினோம். நாம் அவரிடம் கூறினோம்: “லுக்மானே! தன்னை வழிபடுவதற்கு உமக்கு அருள்புரிந்த உம் இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக. நிச்சயமாக தம் இறைவனுக்கு நன்றி செலுத்துபவரின் நன்றியின் பயன் அவரையே சென்றடையும். ஏனெனில் அவருடைய நன்றியைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்து அவனை நிராகரித்தால் அவரது நிராகரிப்பின் தீங்கு அவரையே சென்றடையும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனெனில் அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவன்.

(13) 31.13. -தூதரே!- லுக்மான் தம் மகனிடம் அவரை நன்மையின்பால் ஆர்வமூட்டியவராக, தீமையிலிருந்து எச்சரித்தவராக கூறியதை நினைவுகூர்வீராக: “என் மகனே! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்கி விடாதே. நிச்சயமாக அவனுடன் வேறு கடவுளை வணங்குவது தனக்குச் செய்யும் மிகப் பெரும் அநியாயமாக இருக்கின்றது. ஏனெனில் அது நிரந்தர நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் பெரும் பாவத்தில் ஈடுபடுவதாகும்.

(14) 31.14. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யாத விதத்தில் தாய், தந்தையருக்குக் கீழ்ப்படியுமாறும் உபகாரம் செய்யுமாறும் நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனது தாய் சிரமத்துக்கு மேல் சிரமத்தை அனுபவித்து அவனை தன் வயிற்றில் சுமந்தாள். அவனை பால்குடி மறக்கச் செய்ய இரு ஆண்டுகள் ஆகின்றன. நாம் அவனிடம் கூறினோம்: “அல்லாஹ் உன்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்து. உன் தாய், தந்தையர் உன்னை வளர்த்துப் பராமரித்ததற்காக அவர்களுக்கும் நன்றிசெலுத்து. திரும்புவது என் பக்கம் மட்டுமே உள்ளது. அப்போது நான் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவேன்.

(15) 31.15. உன் தாய், தந்தையர் உன்னை அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும்படி கடும் பாடுபட்டு நிர்ப்பந்தம் செய்தால் நீ அவர்களுக்கு அந்த விஷயத்தில் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாக படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. உலகில் அவர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்து சேர்ந்து நடந்துகொள். ஏகத்துவம் வழிப்பாடு என்பவற்றின் மூலம் என் பக்கம் திரும்பியவர்களின் வழியைப் பின்பற்று. பின்னர் மறுமை நாளில் நீங்கள் அனைவரும் என் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அப்போது நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப நான் உங்களுக்குக் கூலி வழங்குவேன்.

(16) 31.16. என் மகனே! நிச்சயமாக நன்மையோ, தீமையோ அது கடுகளவு போன்று சிறியதாக இருந்து, அது யாரும் பார்க்க முடியாதவாறு பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களிலோ பூமியிலோ எந்த இடத்தில் இருந்தாலும் திட்டமாக மறுமை நாளில் அல்லாஹ் அதனைக் கொண்டுவருவான். அதற்கேற்ப அடியானுக்கு கூலி வழங்குவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவாளனாக உள்ளான். எந்தவொரு நுணுக்கமானவையும் அவனை விட்டும் மறையமுடியாது. அவற்றின் யதார்த்தங்கள், இடங்கள் என்பவற்றை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

(17) 31.17. என் மகனே! தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றி அதனை நிலைநாட்டு!. நன்மையை ஏவி, தீமையைத் தடு. அதில் உனக்கு ஏற்படும் துன்பங்களில் பொறுமையாக இரு. நிச்சயமாக நான் உனக்குக் கட்டளையிடுபவை அனைத்தும் நீ செய்ய வேண்டுமென அல்லாஹ் உறுதிகொண்ட விஷயங்களாகும். இதில் உனக்கு எந்தத் தெரிவுக்கும் இடமில்லை.

(18) 31.18. பெருமை கொண்டு மக்களைவிட்டும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. பூமியில் கர்வம் கொண்டு தற்பெருமையுடன் நடந்து திரியாதே. தன் நடையில் கர்வம் கொண்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மக்களிடம் பெருமையடித்து, அவற்றுக்கு நன்றி செலுத்தாத எவரையும் நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை.

(19) 31.19. வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் உன் நடையில் சாதாரணமான கண்ணியம் வெளிப்படும் நடுநிலை நடையை கடைப்பிடி. உனது குரலை தாழ்த்திக் கொள். தொல்லை தரும் விதத்தில் அதனை உயர்த்தாதே. நிச்சயமாக குரல்களில் மோசமானது உயர்ந்த சப்தமுடைய கழுதையின் குரலேயாகும்.

(20) 31.20. -மனிதர்களே!- வானங்களிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றையும் பூமியிலுள்ள உயிரினங்கள், செடிகொடிகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அல்லாஹ் உங்களின் பயன்பாட்டிற்காக இலகுவாக்கித் தந்துள்ளான் என்பதையும் உங்களின் மீது கண்ணுக்கு தெரியும் வெளிப்படையான அழகிய தோற்றம் அமைப்பு போன்ற தன் அருட்கொடைகளையும் அந்தரங்கமான பகுத்தறிவு, கல்வி போன்ற தன் அருட்கொடைகளையும் முழுமைப்படுத்தியுள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இந்த அருட்கொடைகளுக்குப் பின்னரும் மக்களில் அல்லாஹ்விடமிருந்து வஹி சார்ந்த அறிவோ, அல்லது சிறந்த புத்தியோ, அல்லது அவனிடமிருந்து இறங்கிய தெளிவான வேதமோ இன்றி அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் செய்கிறார்கள்.

(21) 31.21. அல்லாஹ்வின் ஏகத்துவம் சம்பந்தமாக தர்க்கம் செய்யும் இவர்களிடம், “அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதைப் பின்பற்றுங்கள்” என்று கூறப்பட்டால், “நாங்கள் அதனைப் பின்பற்ற மாட்டோம். மாறாக எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் பெற்றுக்கொண்ட சிலை வணக்கத்தையே பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். -சிலை வணக்கத்தினால் அவர்களை வழிகெடுப்பதன் மூலம்- அவர்களை மறுமை நாளின் நரக வேதனையின் பால் ஷைத்தான் அழைத்தாலும் அவர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவார்களா?

(22) 31.22. யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாட்டை உரித்தாக்கி அமல்களை நல்ல முறையில் செய்து அவன்பால் முன்னோக்கினாரோ அவர், தப்ப விரும்பும் ஒருவர் பற்றிப்பிடிக்கும் உறுதியான கயிற்றை பலமாகப் பற்றிக்கொண்டார். ஏனெனில் அது அறுபட்டு விடுமோ என அஞ்சவேண்டியதில்லை எனும் அளவுக்கு உறுதியானதாகும். விவகாரங்கள் அனைத்தின் முடிவும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. எனவே அவன் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான்.

(23) 31.23. -தூதரே!- அல்லாஹ்வை நிராகரிப்பவரின் நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவர்கள் உலகில் செய்த தீய செயல்களைக்குறித்து நாம் அவர்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப அவர்களுக்குத் கூலி வழங்குவோம். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளதை நன்கறியக்கூடியவன். அவற்றில் உள்ள எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(24) 31.24. நாம் அவர்களுக்கு இவ்வுலகில் அளிக்கும் இன்பங்களைக் கொண்டு சிறிதுகாலம் வரை அவர்களை அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையான நெருப்பு வேதனையில் அவர்களைத் தள்ளிவிடுவோம்.

(25) 31.25. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால் “அல்லாஹ்தான்” என்று அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவர்களில் பெரும்பாலானோர் அறியாமையினால் புகழுக்குரியவனை அறியாமல் இருக்கிறார்கள்.

(26) 31.26. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து அதிகாரம் செலுத்தி திட்டமிடும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. நிச்சயமாக அவன் தன் படைப்புகள் அனைத்தையும் விட்டுத் தேவையற்றவனாகவும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்பட்டவனாகவும் இருக்கின்றான்.

(27) 31.27. நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு எழுதுகோல்களாக ஆக்கப்பட்டு கடலும் அதனோடு இன்னும் ஏழு கடல்களும் மையாக மாறினாலும் கூட அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. ஏனெனில் அவற்றுக்கு முடிவு இல்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்மிடலில் அவன் ஞானம் மிக்கவன்.

(28) 31.28. -மனிதர்களே!- உங்களைப் படைப்பதும் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதும் ஒரு உயிரை படைப்பதும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது போன்ற இலகுவானதுதான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். ஒரு சப்தத்தை செவியுறுவதற்கு மற்றொரு சப்தம் அவனுக்கு இடையூறாக இருக்காது. அவன் பார்க்கக்கூடியவன். ஒன்றைப் பார்க்கும் போது மற்றொன்று அவனுக்கு இடையூறாக இருக்காது. இவ்வாறே ஒருவரைப் படைப்பதும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் மற்றவரைப் படைப்பதற்கும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் இடையூறாக அமையாது.

(29) 31.29. நிச்சயமாக அல்லாஹ் பகலை அதிகரிப்பதற்காக இரவைக் குறைக்கின்றான் என்பதையும் இரவை நீட்டுவதற்காக பகலைக் குறைக்கின்றான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? அவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் செல்லும் பாதையை நிர்ணயித்துள்ளான். ஒவ்வொன்றும் தன் பாதையில் குறிப்பிட்ட தவணைவரை ஓடிக் கொண்டிருக்கும். நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(30) 31.30. இந்த திட்டமும் விதியும் அல்லாஹ் ஒருவனே உண்மையானவன், தன் உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் அவன் உண்மையானவன் என்பதற்கும் நிச்சயமாக இணைவைப்பாளர்கள் அவனை விடுத்து வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியம் என்பதற்கும் சாட்சி கூறுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்கி ஆள்வதிலும் கண்ணியத்திலும் படைப்புகள் அனைத்தையும்விட மிக உயர்ந்தவன்; அவனை விட உயர்ந்தது எதுவும் கிடையாது, அனைத்தையும் விட மிகப் பெரியவன் அவனே. (என்று சாட்சி கூறுகின்றன)

(31) 31.31. அவனது நுண்ணறிவினாலும் வசப்படுத்துதலாலும் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் பார்க்கவில்லையா? -மனிதர்களே!- இது அவன் தன் வல்லமையையும் நுண்ணறிவையும் அறிவிக்கும் சான்றுகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக இதில் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்ளக்கூடிய, பெற்றுக்கொள்ளும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.

(32) 31.32. மலைகளைப் போன்ற, மேகங்களைப் போன்ற அலைகள் நாலா புறமும் அவர்களைச் சூழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே மனத்தூய்மையோடு வணங்கி பிரார்த்திக்கிறார்கள். அவன் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றி மூழ்காமல் கரை சேர்த்துவிட்டால் அவர்களில் சிலர் தன் மீது கடமையான நன்றி செலுத்தலை பரிபூரணமாகச் செய்யாமல் ஓரளவுக்கு நடுநிலையாக நடந்துகொள்கிறார்கள்; சிலர் அவனுடைய அருட்கொடைகளை மறுத்து நடந்துகொள்கிறார்கள். - இவ்வாறு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினால் அவனுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அதற்கு மாறு செய்பவரைப் போன்ற- துரோகிகளும், இறைவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதனமாக நடந்துகொள்ளக்கூடியவர்களுமே நம்முடைய சான்றுகளை மறுக்கிறார்கள்.

(33) 31.33. மனிதர்களே! உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். அந்த நாளின் வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் தந்தை தன் மகனுக்கோ மகன் தன் தந்தைக்கோ எந்தப் பயனையும் அளிக்க முடியாது. மறுமை நாளில் கூலி அளிக்கப்படும் என்ற அவனுடைய வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். உலக வாழ்வின் ஆசைகளும் வீண் விளையாட்டுகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் உங்களுடன் பொறுமையாக நடந்துகொள்வதை வைத்தும் உங்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதை வைத்தும் ஷைத்தான் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

(34) 31.34. நிச்சயமாக மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அது எப்போது நிகழும் என்பதை அவனே அறிவான். விரும்பிய சமயத்தில் அவன் மழை பொழிவிக்கிறான். கருவறையில் உள்ளதை அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா, பாக்கியசாலியா, அல்லது துர்பாக்கிசாலியா என்பதை அவனே நன்கறிவான். ஒருவர் நாளை என்ன சம்பாதிப்பார், நன்மையையா? அல்லது தீமையையா? என்பதை அல்லாஹ்வே அறிவான். எந்த ஆன்மாவும் தான் எந்த இடத்தில் மரணிக்கும் என்பதை அறியாது. மாறாக இவையனைத்தையும் அல்லாஹ்வே நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.