(1) 33.1. தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுவதில் நிலைத்திருங்கள். அவனை மாத்திரமே அஞ்சுங்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் மனம் விரும்புபவற்றுக்கு நீர் கட்டுப்படாதீர். நிச்சயமாக நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் நன்கறிந்தவன். தன் படைப்பிலும், திட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
(2) 33.2. உம் இறைவன் உம்மீது இறக்கும் வஹியைப் பின்பற்றுவீராக. நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனிடமிருந்து தப்ப முடியாது. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(3) 33.3. உம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பீராக. தன்னையே சார்ந்திருக்கும் தன்அடியார்களைப் பாதுகாப்பதற்கு அவன் போதுமானவன்.
(4) 33.4. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு இரு இதயங்களை ஏற்படுத்தாதைப் போல மனைவியரை (திருமணம் முடிக்க) தடைசெய்யப்பட்ட அன்னையரின் இடத்தில் ஆக்கவில்லை. அவ்வாறே உங்களின் வளர்ப்பு மகன்களையும் சொந்த மகன்களாக ஆக்கவில்லை. நிச்சயமாக ழிஹார் -எனப்படும் கணவன் தன் மனைவியை தாய் மற்றும் சகோதரி போன்று தனக்கு ஹராமாக்குதலும்-, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாக்குவதும் இஸ்லாம் தடைசெய்த அறியாமைக் காலத்து வழக்கங்களாகும். அவை உங்கள் வாயினால் அடிக்கடி சொல்லப்படும் வெறும் வார்த்தைகளேயாகும். அவை ஒருபோதும் உண்மையாகிவிடாது. ஏனெனில் மனைவி தாயாகமாட்டாள். வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆகமாட்டான். அல்லாஹ் உண்மையே கூறுகிறான், தன் அடியார்கள் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக. மேலும் அவன் சத்திய பாதையின் பால் வழிகாட்டுகிறான்.
(5) 33.5. நிச்சயமாக உங்களின் மகன்களாக நீங்கள் எண்ணிக்கொண்டிருப்போரை அவர்களின் உண்மையான தந்தையரோடு இணைத்து அழையுங்கள். அவர்களுடன் இணைத்து அழைப்பதே அல்லாஹ்விடத்தில் நீதியானதாகும். நீங்கள் அவர்களின் தந்தையரை அறியவில்லையெனில் அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான உங்களின் மார்க்க சகோதரர்களாவர். அவர்களை “என் சகோதரரே! என் சிறிய தந்தையின் மகனே!” என்று அழையுங்கள். உங்களில் ஒருவர் தவறுதலாக வளர்ப்பு மகனை வளர்த்தவரின் மகன் என்று கூறுவது பாவமாகாது. ஆனால் நீங்கள் அறிந்துகொண்டே அவ்வாறு கூறினால் அது பாவமாகும். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவன் அவர்கள் தவறாகச் செய்யும் செயல்களுக்காக அவர்களைக் குற்றம் பிடிப்பதில்லை.
(6) 33.6. முஹம்மது நபி நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்த அனைத்திலும் அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர். அவர்களது மனங்கள் மற்றவர்களின் பால் சாய்ந்த போதிலும் சரியே. அவருடைய மனைவியர் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் அன்னையரைப் போன்றவர்களாவர். எனவே தூதர் இறந்தபிறகு எந்த நம்பிக்கையாளனுக்கும் அவர்களில் ஒருவரை மணமுடித்துக்கொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. இறைவனின் கட்டளைப்படி இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனந்தரம் பெற்றுக்கொண்டிருந்த நம்பிக்கையாளர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களை விட அனந்தரம் பெறவதற்கு மிகத் தகுதியானவர்கள் உறவினர்களே. பின்பு இஸ்லாத்தின் ஆரம்ப கால அனந்தரம் பெரும் முறை மாற்றப்பட்டது. நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களின் அனந்தரம் பெறாத தோழர்களுக்கு உயில் எழுதுதல், உபகாரம் செய்தல் என நன்மை செய்ய விரும்பினால் நீங்கள் செய்து கொள்ளலாம். இந்தக் கட்டளை லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவுசெய்யப்பட்டதாகும். இதன்படி செயல்படுவது கட்டாயமாகும்.
(7) 33.7. -தூதரே!- நாம் தூதர்களிடம், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது; அவர்கள் மீது இறக்கப்பட்ட வஹியை எடுத்துரைத்துவிட வேண்டும் என்று நாம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்களிலும் குறிப்பாக உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றும்படி நாம் அவர்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கினோம்.
(8) 33.8. அல்லாஹ் தூதர்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குறுதி வாங்கியதற்கான காரணம், நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்தும் விதமாக உண்மையான தூதர்களிடம் அவர்களின் உண்மையை விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் நரக நெருப்பு என்னும் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான்.
(9) 33.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். உங்களுடன் போரிடுவதற்காக நிராகரிப்பாளர்களின் படையினர் ஒன்று சேர்ந்து மதீனா வந்தபோது நயவஞ்சகர்களும் யூதர்களுக்கும் அவர்களுக்குத் துணைநின்றார்கள். நாம் அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் காணாத வானவர்கள் படையையும் அனுப்பிகோம். நிராகரிப்பாளர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(10) 33.10. நிராகரிப்பாளர்கள் பள்ளத்தாக்கின் மேற்புறமிருந்தும் அதன் கீழ்ப்புறமிருந்து கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் வழியாகவும் உங்களிடம் வந்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதிரிகளின் மீது பார்வை குவிந்து பயத்தினால் இதயங்கள் தொண்டைக்குழியை அடைந்துவிட்டன. நீங்கள் அல்லாஹ்வைக்குறித்து விதவிதமான எண்ணங்கள் கொண்டிருந்தீர்கள். சில சமயங்களில் அவன் உதவி புரிவான் என்று எண்ணினீர்கள். சில சமயங்களில் அவனிடமிருந்து நிராசையை எண்ணினீர்கள்.
(11) 33.11. அகழிப் போரின் இந்த சமயத்தில் நம்பிக்கையாளர்கள் அவர்கள் எதிர்கொண்ட எதிரிகளின் தாக்குதல்களால் சோதிக்கப்பட்டார்கள். கடும் பயத்தினால் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள். இந்த சோதனையினால் நம்பிக்கையாளனும் நயவஞ்சகர்களும் தெளிவாகிவிட்டார்கள்.
(12) 33.12. அப்போது நயவஞ்சகர்களும் உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருந்த பலவீனமான நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எதிரிகளுக்கு எதிராக உதவி செய்து பூமியில் அதிகாரம் அளிப்பேன்” என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையற்ற பொய்யேயாகும்.
(13) 33.13. -தூதரே!- நயவஞ்சகர்களில் ஒருபிரிவினர் மதீனாவாசிகளிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “யஸ்ரிப்வாசிகளே! (இஸ்லாத்திற்கு முன் மதீனாவின் பெயர்) அகழிக்கு அருகில் ஸல்உ என்ற மலையில் நீங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்.” அவர்களில் ஒரு பிரிவினர் தூதரிடம், தங்களின் வீடுகள் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்று கூறி தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதி கோரினார்கள். அவர்கள் கூறியவாறு அவர்களுடைய வீடுகள் எதிரிகளுக்காக திறந்திருக்கவில்லை. நிச்சயமாக இவ்வாறு பொய்யான சாக்குப்போக்குக் கூறி அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்ல விரும்புகிறார்கள்.
(14) 33.14. எதிரிகள் அனைத்து திசைகளிலிருந்தும் மதீனாவில் நுழைந்து அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதன் பக்கமும் திரும்பிவிடுமாறு அவர்களிடம் கூறினால் அதனைச் செய்துவிடுவார்கள். குறைவானவர்களைத் தவிர எவரும் மதம் மாறி நிராகரிப்பை நோக்கி மீண்டு செல்லாமல் இருக்கமாட்டார்கள்.
(15) 33.15. இந்த நயவஞ்சகர்கள் உஹதுப் போரில் பின்வாங்கி ஓடிய பிறகு, இனி நாங்கள் எதிரிகளுடன் போரிட்டால் உறுதியாக நின்று போர் புரிவோம். ஒருபோதும் பயந்து பின்வாங்கி ஓடிவிட மாட்டோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆயினும் அவர்கள் வாக்குறுதியை மீறினார்கள். அடியான் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி குறித்து கேட்கப்படக்கூடியவனாக இருக்கின்றான். அது குறித்து அவன் விசாரணை செய்யப்படுவான்.
(16) 33.16. -தூதரே!- நீர் இவர்களிடம் கூறுவீராக: “மரணத்திற்கு அஞ்சியோ, கொல்லப்படுவோம் என்றோ நீங்கள் போரிலிருந்து பின்வாங்கி ஓடுவது உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஏனெனில் தவணைகள் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உங்கள் நேரம் வராததனால் நீங்கள் பின்வாங்கி ஓடிவிட்டால் அதற்குப்பிறகு குறைவான காலமே அன்றி நிச்சயமாக உங்களால் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது.”
(17) 33.17. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் வெறுக்கும் மரணத்தை, கொலையை அல்லாஹ் அளிக்க நாடினால் யார்தான் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்? அல்லது நீங்கள் விரும்பும் பாதுகாப்பையும் நலனையும் அவன் உங்களுக்கு அளிக்க நாடினால் யாராலும் அதனை விட்டும் உங்களைத் தடுக்க முடியாது.” இந்த நயவஞ்சகர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர தங்களது விடயங்களை பொறுப்பெடுக்கும் பொறுப்பாளனையோ அவனுடைய வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளனையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
(18) 33.18. அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போர் புரிவதை விட்டும் மற்றவர்களைத் தடுப்பவர்களையும் தங்களின் சகோதரர்களிடம், “எங்களின்பால் வந்து விடுங்கள். அவருடன் சேர்ந்து போர்புரிந்து கொல்லப்பட்டு விடாதீர்கள். நீங்கள் கொல்லப்பட்டு விடுவீர்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் அறிவான். பின்வாங்கச் செய்யும் இவர்கள் மிக அரிதாகவே போரில் பங்கு கொள்கிறார்கள். அதுவும் தங்களுக்கு ஏற்படும் இழிவை தடுப்பதற்காக. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்வதற்காக அல்ல.
(19) 33.19. -நம்பிக்கையாளர்கள் கூட்டமே!- அவர்கள் உங்களின் விஷயத்தில் கஞ்சர்களாக இருக்கிறார்கள். தங்களின் செல்வங்களால் உங்களுக்கு உதவுவதில்லை. தமது உயிர்களில் ஆசை உள்ளவர்கள். எனவே உங்களுடன் சேர்ந்து போரிடுவதில்லை. நேசத்திலும் அவர்கள் கஞ்சர்கள். அதனால்தான் உங்களை அவர்கள் நேசிப்பதுமில்லை. -தூதரே!- எதிரிகளை சந்திக்கும் போது பயம் ஏற்பட்டால் மரண வேதனையில் சிக்குண்டு கிடப்பவன் பார்ப்பதைப்போல கோழைத்தனத்தினால் அவர்களின் விழிகள் பிதுங்குவதை நீர் காணலாம். அச்சம் நீங்கி அமைதி ஏற்பட்டுவிட்டால் போர்ச் செல்வங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூரான வார்த்தைகளை நாவினால் கூறி உங்களுக்குத் தொல்லை தருகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் உண்மையில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்கிவிட்டான். இவ்வாறு வீணாக்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
(20) 33.20. நபியவர்களுடனும் நம்பிக்கையாளர்களுடனும் போரிடத் திரண்டிருக்கும் படைகள் நிச்சயமாக நம்பிக்கையாளர்களை அடியோடு அழிக்காமல் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று இந்தக் கோழைகள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஒருவேளை மீண்டும் படைகள் வந்துவிட்டால் மதீனாவில் இருந்து வெளியேறி நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உங்கள் எதிரிகள் உங்களுடன் போர்செய்த பின் என்ன நடந்தது என உங்கள் செய்திகளை அறிய விரும்புவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் உங்களுடன் இருந்தாலும் பெரிதாகப் போரிடப் போவதில்லை. எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள்.
(21) 33.21. அல்லாஹ்வின் தூதர் சொன்ன, செய்த அனைத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர் போரில் நேரிடையாக பங்கு பெற்றுள்ளார். அதன் பின்னரும் நீங்கள் அவரது உயிரைவிட உங்களின் உயிர்களை பெரிதாக எண்ணுகிறீர்களா? அல்லாஹ் வழங்கும் கூலியிலும் அவனது அருளிலும் மறுமையின் மீதும் ஆதரவு வைத்து அதற்காக செயல்பட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்கிறார்கள். மறுமையை நம்பாமல், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூறாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
(22) 33.22. நம்பிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டு வந்த படைகளைக் கண்டபோது கூறினார்கள்: “இந்த சோதனைகளும் உதவியும்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள். அதுவே நிகழ்ந்துள்ளது. படைகளைக் கண்ணால் கண்ட அவர்களின் அல்லாஹ் மீதான நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் இன்னும் அதிகமாகியது.
(23) 33.23. நம்பிக்கையாளர்களில், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதில் உறுதியாகவும் பொறுமையாகவும் இருப்பதாக தாம் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியோரும் உண்டு. அவர்களில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இறந்து விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் அவனுடைய பாதையில் வீரமரணம் அடைவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையாளர்கள் நயவஞ்சகர்கள் தங்களின் வாக்குறுதிகளில் செய்ததை போல அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.
(24) 33.24. இது தாங்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றியமைக்கும் அல்லாஹ் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகவும் வாக்குறுதியை முறித்த நயவஞ்சகர்களுக்கு அவன் நாடினால் தவ்பா செய்ய முன் நிராகரிப்பிலே மரணிக்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பாவமன்னிப்புக்கோரும் பாக்கியத்தை அளித்து அவர்களை மன்னித்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். தன் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(25) 33.25. குரைஷிகள், கத்பான், அவர்களுடனிருந்த ஏனையவர்களை துக்கத்துடனும் கவலையுடனும் அல்லாஹ் திருப்பி அனுப்பிவிட்டான். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்குத் தவறிவிட்டது. நம்பிக்கையாளர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற தம் நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அல்லாஹ் அனுப்பிய காற்றின் மூலமும் இறக்கிய வானவர்கள் மூலமும் அவர்களுடன் நம்பிக்கையாளர்கள் போரிடுவதை அல்லாஹ் தேவையற்றதாக்கி அவனே அதற்குப் போதுமாகிவிட்டான். அவன் சக்திவாய்ந்தவனாகவும் அவனுடன் யார் மோதினாலும் அவனை மிகைப்பவனாகவும் இருக்கின்றான்.
(26) 33.26. எதிரிகளுக்கு உதவிசெய்த யூதர்களை, எதிரிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டிருந்த அவர்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறச் செய்தான். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களில் ஒரு பிரிவினரை நீங்கள் கொலை செய்தீர்கள். ஒரு பிரிவினரைக் கைது செய்தீர்கள்.
(27) 33.27. அல்லாஹ் அவர்களை அழித்த பிறகு அவர்களின் பேரீச்சமரங்கள் பயிர்களுள்ள அவர்களின் நிலத்தையும், வீடுகளையும் இன்னபிற செல்வங்களையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். நீங்கள் இதுவரை கால்வைக்காத கைபர் நிலத்தையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். ஆயினும் நீங்கள் விரைவில் கால்வைப்பீர்கள். இது நம்பிக்கையாளர்களுக்கான வாக்குறுதியும் நற்செய்தியுமாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.
(28) 33.28. தூதரே! உமது மனைவிமாருக்கு தாராளமாகச் செலவளிப்பதற்கு உம்மிடம் வசதியில்லாத போது அதிகமாக செலவீனங்கள் வேண்டும் என அவர்கள் கேட்டால் நீர் கூறுவீராக: “நீங்கள் இவ்வுலகையும் அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் என்னிடம் வாருங்கள், நான் விவகாரத்து அளிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்க வேண்டியதை உங்களுக்கு அளித்து, பாதிப்பு, நோவினை அற்ற விதத்தில் உங்களுக்கு விவகாரத்து அளித்து விடுகிறேன்.
(29) 33.29. நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் தூதரின் திருப்தியையும் மறுமையில் கிடைக்கக்கூடிய சுவனத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையை சகித்துக் கொள்ளுங்கள். உங்களில் பொறுமையாக இருந்து நல்ல முறையில் வாழ்ந்து, சிறந்த முறையில் செயல்படுபவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பெரும் கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.
(30) 33.30. தூதரின் மனைவியரே! உங்களில் யாரேனும் வெளிப்படையான பாவத்தைச் செய்தால் மறுமை நாளில் அவர்களுக்கு இருமடங்கு வேதனை உண்டு. இது அவர்களின் படித்தரம் மற்றும் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டாகும். இவ்வாறு இரு மடங்கு வேதனை வழங்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
(31) 33.31. உங்களில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொடராக கட்டுப்பட்டு அவன் விரும்பக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு நாம் மற்ற பெண்களுக்கு அளிப்பதைவிட இருமடங்கு கூலியை வழங்கிடுவோம். அவர்களுக்காக மறுமையில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியை நாம் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
(32) 33.32. தூதரின் மனைவியரே! நீங்கள் கண்ணியத்திலும் சிறப்பிலும் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சினால் மற்றவர்களால் அடைய முடியாத சிறப்பையும் அந்தஸ்தையும் அடைந்துகொள்வீர்கள். நீங்கள் அந்நிய ஆண்களுடன் உரையாடும்போது நளினமாக, குழைவாக உரையாடாதீர்கள். அதனால் உள்ளத்தில் நயவஞ்சக நோயும் தடுக்கப்பட்ட இச்சையும் உடையவன் ஆசை கொள்ளக்கூடும். தேவைக்கேற்ப சந்தேகத்தை உண்டுபண்ணாத பகடி அல்லாத தீர்க்கமான வார்த்தைகளைக் கூறுங்கள்.
(33) 33.33. உங்களின் வீடுகளில் தங்கியிருங்கள். தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள். இஸ்லாத்திய முந்தைய அறியாமைக்கால பெண்கள் ஆண்களைக் கவருவதற்காக தங்களின் அழகை வெளிப்படுத்தி செய்து கொண்டிருந்தது போன்று உங்களின் அழகை வெளிப்படுத்தாதீர்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கிவிடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதரின் மனைவியரே! தூதரின் குடும்பத்தினரே! அல்லாஹ் உங்களைவிட்டும் தொல்லைகளையும் தீங்குகளையும் போக்க விரும்புகிறான். அவன் உங்களுக்கு நற்பண்புகளை அளித்து உங்களிடமிருந்து தீய பண்புகளைப் போக்கி உங்கள் உள்ளங்களை எந்த அழுக்கும் எஞ்சியிருக்காத வகையில் பூரணமாக தூய்மைப்படுத்த விரும்புகிறான்.
(34) 33.34. உங்களின் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் தூதரின் பொன்மொழிகளையும் நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் மென்மையாளனாக இருக்கின்றான். எனவேதான் உங்கள் மீது அருள் புரிந்து உங்களைத் தூதரின் குடும்பத்தினராக ஆக்கியுள்ளான். உங்களைத் தூதருக்கு மனைவியராக, அவரது சமூகத்தின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் அன்னையராக தேர்ந்தெடுத்தபோது உங்களைக்குறித்து நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(35) 33.35. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் ஆண்களும் பெண்களும், அவன் மீது நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும், அவனுக்குக் கட்டுப்படக்கூடிய ஆண்களும் பெண்களும், தங்களின் நம்பிக்கையிலும் சொல்லிலும் வாய்மையான ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் சோதனையிலும் பொறுமையைக் கடைப்பிடித்த ஆண்களும் பெண்களும், தங்களின் செல்வங்களை கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ, உபரியான தர்மமாகவோ செலவுசெய்யும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தங்களின் வெட்கஸ்த்தலங்களை பார்க்க முடியாதவர்களுக்கு முன்னால் வெளிப்படாமல் மறைத்து பாதுகாத்துக் கொள்ளும், மானக்கேடான விபச்சாரம், அதன் ஆரம்ப செயற்பாடுகளை விட்டும் தூரமாகும் ஆண்களும் பெண்களும், உள்ளத்தாலும் நாவாலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் ஆண்களும் பெண்களும், இவர்களுக்காக அல்லாஹ் பாவங்களிலிருந்து மன்னிப்பையும் மறுமை நாளில் சுவனம் என்னும் பெரும் கூலியையும் தயார்படுத்தி வைத்துள்ளான்.
(36) 33.36. அல்லாஹ்வும் தூதரும் அவர்களின் விஷயத்தில் ஒரு தீர்ப்பளித்துவிட்டால் நம்பிக்கைகொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பதா, மறுப்பதா என சுயமுடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மாறுசெய்பவர் நேரான வழியைவிட்டும் தெளிவான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டார்.
(37) 33.37. யாருக்கு அல்லாஹ் இஸ்லாம் என்னும் அருட்கொடையைக் கொண்டு அருள்புரிந்தானோ, யாரை நீர் விடுதலை செய்து அவருக்கு அருள்புரிந்தீர்களோ -அவர் ஸைத் இப்னு ஹாரிஸா தம் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷை விவாகரத்து செய்வது குறித்து உம்மிடம் ஆலோசனை செய்தபோது- நீர் அவரிடம் கூறினீர்: “உனது மனைவியை விவாகரத்துச் செய்யாமல் வைத்துக்கொள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக்கொள்.” -தூதரே!- ஸைனபை மணந்துகொள்ளுமாறு அல்லாஹ் உமக்கு அறிவித்ததை நீர் மக்களுக்குப் பயந்து உம் மனதில் மறைத்துக்கொண்டீர். ஸைத்தின் விவாகரத்தையும் பின்பு அந்தப் பெண்ணை நீர் திருமணம் செய்வதையும் அல்லாஹ் வெளிப்படுத்துவான். இவ்விடயத்தில் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன். ஸைத் மனமுவந்து அவளை விரும்பாமல் விவாகரத்து செய்த போது நாம் அவளை உமக்கு மணமுடித்துத் தந்தோம். இது ஏனெனில் நம்பிக்கையாளர்கள் தங்களின் வளர்ப்பு மகன்களின் மனைவியரை அவர்கள் விவாகரத்து செய்து அந்த மனைவியர் தங்களின் தவணையை (இத்தா) நிறைவுசெய்துவிட்டால் மணமுடித்துக்கொள்வதில் எவ்வித சங்கடமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளை நிறைவேறியே தீரும். அதற்கு எந்த தடையும் இல்லை.
(38) 33.38. அல்லாஹ் அனுமதித்த வளர்ப்புப் பிள்ளையின் மனைவியை திருமணம் செய்வதில் தூதர் மீது எந்தக் குற்றமும், மன நெருக்கடியும் இல்லை. அவர் இந்த விஷயத்தில் முந்தைய நபிமார்களின் வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார். அவர் அதில் தூதர்களில் புதுமையானவர் அல்ல. அல்லாஹ் விதித்தது - இந்த திருணமத்தை நடத்தி வைப்பது, வளர்ப்பு மகன்களை சொந்த மகன்களாக ஆக்குவதை தடைசெய்வது இவற்றில் நபிக்கு எந்தவித ஆலோசனைக்கும், தெரிவுக்கும் இடமில்லை- நிறைவேறியே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது.
(39) 33.39. அல்லாஹ் தங்களின் மீது இறக்கிய தூதுப் பணியை தங்களின் சமூகங்களுக்கு எடுத்துரைத்து, அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாத இந்தத் தூதர்கள் அல்லாஹ் அனுமதித்தவற்றைச் செய்யும்போது மற்றவர்கள் கூறுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அடியார்களின் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவை நன்மையானதாக இருந்தால் நன்மையே கிடைக்கும். அது தீயவையாக இருந்தால் தீமையே கிடைக்கும்.
(40) 33.40. முஹம்மது உங்களுடைய ஆண்களில் யாருக்கும் தந்தை இல்லை. அவர் ஸைத்தால் விவகாரத்துசெய்யப்பட்ட பெண்ணை மணமுடித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு அவர் ஸைத்தின் தந்தை அல்ல. மாறாக அவர் மனிதர்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராகவும் தூதர்களில் இறுதியானவராகவும் இருக்கின்றார். இனி அவருக்குப் பின் எந்த நபியும் வர மாட்டார்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அடியார்களின் எந்த விஷயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(41) 33.41. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் உடல் உறுப்புக்களினாலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.
(42) 33.42. சிறந்த நேரமான காலையிலும் மாலையிலும் (சுபஹானல்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறுவதன் மூலம் அவனது தூய்மையைப் பறைசாற்றுங்கள்.
(43) 33.43. உங்களை நிராகரிப்பின் இருள்களிலிருந்து ஈமானுடைய ஒளியின்பால் கொண்டு வருவதற்காக அவன் உங்கள் மீது அன்பு காட்டுகிறான். உங்களைப் புகழ்ந்து பேசுகிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவன் நம்பிக்கையாளர்களுடன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்கள் அவனுக்கு வழிப்பட்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகினால் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான்.
(44) 33.44. நம்பிக்கையாளர்கள் தங்கள் இறைவனை சந்திக்கும்போது “சாந்தி உண்டாகட்டும், எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் கிடைக்கட்டும்” என்பதுதான் அவர்களின் முகமனாக இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதற்கும் பாவங்களிலிருந்து விலகியிருந்ததற்கும் கூலியாக அவன் அவர்களுக்கு -சுவனம் என்னும்- கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.
(45) 33.45. தூதரே! மனிதர்களை நோக்கி உம்மிடம் அனுப்பிவைக்கப்பட்ட தூதை நீர் எடுத்துரைத்தீர் என அவர்களின் மீது சாட்சி கூறுபவராகவும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.
(46) 33.46. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியன். அவனுடைய கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்பதன்பால் அழைக்கும் அழைப்பாளராகவும் நேர்வழி பெற விரும்புவோர் நேர்வழிபெறுவதற்காக ஒளிவீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.
(47) 33.47. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இவ்வுலகில் உதவியையும் மறுமையில் வெற்றிபெற்று சுவனம் நுழைதல் என்பதை உள்ளடக்கிய பெரும் அருட்கொடை உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக.
(48) 33.48. நயவஞ்சகர்களும் நிராகரிப்பாளர்களும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கும் அழைப்பில் அவர்களுக்குக் கட்டுப்படாதீர். அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக. நீர் கொண்டுவந்ததன் மீது அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கு இதுவே சிறந்த அழைப்பாக அமையலாம். உமது எதிரிகளுக்கெதிராக உதவுதல் உட்பட உம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. இம்மையிலும், மறுமையிலும் அடியார்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் சார்ந்து இருக்கும் போது அவர்களை பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
(49) 33.49. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நம்பிக்கைகொண்ட பெண்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து பின்னர் அவர்களுடன் உறவு கொள்ளாமலேயே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் அவர்கள் மாதம் அல்லது மாதவிடாய் என இத்தா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடன் உறவு கொள்ளாததால் அவர்களின் கருவறையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விவாகரத்தால் காயம்பட்ட அவர்களின் உள்ளத்திற்கு ஆறுதலாக உங்களின் வசதிக்கேற்ப செல்வங்களை அளியுங்கள். அவர்களுக்குத் தொல்லையளிக்காமல் நல்லமுறையில் அவர்களது வழியில் செல்வதற்கு விட்டுவிடுங்கள்.
(50) 33.50. தூதரே! நீர் மணக்கொடை அளித்து மணமுடித்துக்கொண்ட உம் மனைவியரை உமக்கு ஆகுமாக்கியுள்ளோம். அல்லாஹ் உமக்கு போரில் அளித்து நீ சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களையும் உமக்கு அனுமதித்துள்ளோம். உம்முடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த உம் தந்தையின் சகோதர சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதர சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம். தன்னைத் தூதருக்கு அன்பளிப்புச் செய்த நம்பிக்கைகொண்ட பெண்ணையும் தூதர் விரும்பினால் மணக்கொடையின்றி திருமணம் செய்துகொள்ளலாம். தன்னை அன்பளிப்புச் செய்த பெண்ணைத் திருமணம் செய்யும் இச்சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்கு நான்கு மனைவியரை விட கூடுதலாக மணமுடித்துக்கொள்ளமுடியாது என நாம் அவர்களின் மனைவிமார் விஷயத்தில் அவர்கள் மீது கடமையாக்கியதையும் அடிமைப்பெண்களில் எண்ணிக்கையின்றி தாம் விரும்பியவர்களை அனுபவிக்கலாம் என அவர்களின் அடிமைப் பெண்கள் விஷயத்தில் கடமையாக்கியதையும் நாம் அறிவோம். நாம் மற்றவர்களுக்கு அனுமதியளிக்காததை உமக்கு அனுமதியளித்தது உமக்கு எந்த சங்கடமும், கஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(51) 33.51. -தூதரே!- நீர் உம் மனைவியரில் யாருடன் இரவு தங்குவதை ஒத்திப் போட விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவதை ஒத்திப்போடுவீராக. அவர்களில் யாருடன் இரவு தங்க விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவீராக. நீர் விலக்கி வைக்க விரும்பியவரை சேர்த்துக்கொண்டு அவருடன் இரவு தங்கினாலும் உம்மீது எந்தக் குற்றமும் இல்லை. இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி உம் மனைவியர் கண்குளிர்ச்சி அடைவதற்கும் நீர் அவர்கள் அனைவருக்கும் வழங்கியதைக் கொண்டு அவர்கள் திருப்தியடையவதற்கும் ஏற்றதாகும். ஏனெனில் நீர் எந்தவொரு கடமையையும் விடவோ உரிமையைத் தடுத்து கஞ்சத்தனம் செய்யவோ இல்லை என்பதை அவர்கள் அறிந்தே உள்ளனர். -ஆண்களே!- உங்களின் உள்ளங்களிலுள்ளதை மனைவியரில் சிலரைவிட சிலரை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். தன் அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் சகிப்புத்தன்மை உடையவனாக இருக்கின்றான். எனவேதான் அவர்கள் அவனிடம் திரும்பலாம் என்பதனால் அவர்களை உடனுக்குடன் அவன் தண்டித்துவிடமாட்டான்.
(52) 33.52. தூதரே! இனி உமது பாதுகாப்பில் இருக்கும் உம் மனைவியரைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணமுடித்துக் கொள்வது உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்குப் பதிலாக வேறு பெண்களை மணந்துகொள்வதற்காக அவர்கள் அனைவரையுமோ அல்லது சிலரையோ விவாகரத்து செய்ய உமக்கு அனுமதியில்லை. நீர் மணமுடிக்க விரும்பும் மற்ற பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. ஆயினும் நீர் அடிமைப் பெண்களை குறித்த எண்ணிக்கை வரையறுக்காமல் வைத்துக் கொள்ளலாம். அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். இந்தக் கட்டளை நம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் சிறப்பைக் காட்டுகிறது. அதனால்தான் அவர்களை விவகாரத்து செய்யவோ அவர்களுடன் வேறு பெண்களை மணமுடித்துக் கொள்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.
(53) 33.53. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நபியின் வீட்டில் விருந்துக்காக அழைக்கப்பட்டு உள்ளே நுழைவதற்கு அனுமதித்தாலே தவிர அதில் நுழையவேண்டாம். அங்கு உணவு தயாராவதை எதிர்பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்திருக்காதீர்கள். நீங்கள் உண்பதற்கு உள்ளே அழைக்கப்பட்டால் செல்லுங்கள். உண்டு முடித்தவுடன் திரும்பி விடுங்கள். அதன்பிறகு அங்கு ஒருவருக்கொருவர் பேச்சில் ஈடுபட்டவாறு தங்கியிருக்காதீர்கள். நிச்சயமாக இவ்வாறு தங்கியிருப்பது தூதருக்குத் தொல்லை தருகிறது. அவர் உங்களிடம் எழுந்து செல்லுமாறு கூறுவதற்கு வெட்கப்படுகின்றார். உண்மையைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அதனால்தான் அவருக்குத் தொல்லையளிக்கக் கூடாது என்பதற்காக எழுந்து செல்லுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். தூதரின் மனைவியரிடம் நீங்கள் பாத்திரம் போன்ற ஏதேனும் தேவையானவற்றை வேண்டினால் திரைமறைவிற்கு அப்பால் நின்று அதனை வேண்டுங்கள். தூதருக்குள்ள மதிப்பினால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் அவர்களைக் கண்டுவிடாமலிருக்க நேருக்கு நேர் அவர்களிடம் அதனை வேண்டாதீர்கள். திரைமறைவிற்கு அப்பால் நின்று வேண்டுவதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானதாகும். அதனால் ஷைத்தான் உங்களின் உள்ளங்களிலோ அவர்களின் உள்ளங்களிலோ தவறான ஊசலாட்டத்தை ஏற்படுத்த, பாவங்களை அழகாக்கிக்காட்ட முடியாது. -நம்பிக்கையாளர்களே!- கதைப்பதற்காக தாமதித்து அல்லாஹ்வின் தூதருக்குத் தொல்லையளிப்பதும் அவரின் மரணத்தின் பின் அவரது மனைவிமாரைத் திருமணம் செய்வதும் உங்களுக்குத் தகுந்ததல்ல. ஏனெனில் அவர்கள் நம்பிக்கையாளர்களின் அன்னையர்களாவர். எவருக்கும் தம் அன்னையை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதன்று. நிச்சயமாக -அவரது மரணத்திற்குப் பிறகு நீங்கள் அவர்களில் யாரையேனும் மணமுடிப்பது போன்ற ஏதேனும் ஓர் வடிவத்தில்- அவரை நோவினை செய்வது தடைசெய்யப்பட்டதாகவும் அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாகவும் இருக்கின்றது.
(54) 33.54. நிச்சயமாக நீங்கள் உங்களின் செயல்களில் எதையேனும் வெளிப்படுத்தினால் அல்லது அதனை மறைத்தால் அது அல்லாஹ்வை விட்டும் மறைவாக இருக்காது. திட்டமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். உங்களின் செயல்களிலும் ஏனையவற்றிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீங்குக்கு தீமையும் உண்டு.
(55) 33.55. அவர்களின் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரர்களின் பிள்ளைகள், சொந்த மற்றும் பால்குடி சகோதரிகளின் பிள்ளைகள், நம்பிக்கைகொண்ட பெண்கள், அவர்களின் அடிமைகள் ஆகியோர் அவர்களைப் பார்ப்பதும் திரைமறைவின்றி பேசுவதும் அவர்கள் மீது குற்றமாகாது. -நம்பிக்கைகொண்ட பெண்களே!- அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்தள்ளவைகளை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்களிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
(56) 33.56. நிச்சயமாக அல்லாஹ் தன் வானவர்களிடத்தில் தூதர் முஹம்மதை புகழ்கின்றான். அவனுடைய வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட அடியார்களே! தூதரின் மீது ஸலவாத்தும் சலாமும் கூறுங்கள்.
(57) 33.57. தூதரைக் கண்ணியப்படுத்தும்படியும் அவர் மீது ஸலவாத் கூறும்படியும் கட்டளையிட்ட இறைவன் அவருக்குத் தொல்லை தருவதை தடைசெய்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக சொல்லாலோ, செயலாலோ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொல்லையளிப்பவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ் தன் விசாலமான அருளை விட்டும் தூரமாக்கி விட்டான். தனது தூதருக்கு அவர்கள் தொல்லையளித்ததற்குக் கூலியாக மறுமையில் அவர்களுக்காக இழிவுமிக்க வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான்.
(58) 33.58. நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் துன்புறுத்துவதற்கு தகுந்த குற்றத்தை அவர்கள் செய்யாத போதும் அதனை செய்ததாக கூறி அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துபவர்கள் வெளிப்படையான பாவத்தையும் பொய்யையும் சுமந்து கொண்டார்கள்.
(59) 33.59. தூதரே! நீர் உம் மனைவியரிடமும் மகள்களிடமும் நம்பிக்கைகொண்ட பெண்களிடமும் கூறுவீராக: “அந்நிய ஆண்களுக்கு முன்னால் தங்களின் மறைவிடங்கள் வெளிப்படாதவாறு தனது மேலாடையிலிருந்து ஒரு பகுதியை தம்மீது தொங்க விட்டுக்கொள்ளட்டும். அவர்கள் சுதந்திரமான பெண்கள் என அறியப்பட்டு அடிமைப் பெண்கள் தொல்லைக்குள்ளாகுவது போன்று தொல்லைக்குட்படாமல் இருக்க இதுவே சிறந்த வழிமுறையாகும். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(60) 33.60. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் தங்களின் நயவஞ்சகத்தை விட்டும் தவிர்ந்துகொள்ளவில்லையெனில், உள்ளங்களில் மனோஇச்சையினால் பாவங்கள் உள்ளவர்களும், நம்பிக்கையாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்காக மதீனாவில் பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்களும் விலகிக்கொள்ளவில்லையெனில் -தூதரே!- அவர்களைத் தண்டிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டு, அவர்களின் மீது உம்மைச் சாட்டிவிடுவோம். பின்னர் அவர்கள் உம்முடன் மதீனாவில் சிறிது காலமே வாழ்வார்கள். ஏனெனில் அவர்கள் பூமியில் குழப்பத்தை உண்டாக்குவதால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அல்லது அங்கிருந்து விரட்டப்படுவார்கள்.
(61) 33.61. அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். பூமியில் குழப்பத்தை பரப்புவதினாலும் நயவஞ்சகத்தினாலும் அவர்கள் எங்கு வசித்தாலும் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.
(62) 33.62. இதுதான் நயவஞ்சர்களின் விஷயத்தில் நயவஞ்சகத்தை அவர்கள் வெளிப்படுத்தும் போது நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அல்லாஹ்வின் வழிமுறை உறுதியானதாகும். அதில் ஒருபோதும் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
(63) 33.63. -தூதரே!- இணைவைப்பாளர்களும் யூதர்களும் மறுமையைக் குறித்து, அது எப்போது நிகழும் என்பதைக் குறித்து உம்மிடம் மறுத்து பொய்ப்பிக்கும் விதமாக கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமையைக் குறித்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. என்னிடம் அதைப் பற்றிய எந்த அறிவும் இல்லை.” -தூதரே!- நிச்சயமாக மறுமை நெருக்கமாக இருக்கலாம் என்பதை எது உமக்கு உணர்த்தியது?
(64) 33.64. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை தன் அருளைவிட்டும் தூரமாக்கிவிட்டான். மறுமை நாளில் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது அவர்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
(65) 33.65. அவர்களுக்காக தயார்படுத்தப்பட்ட அந்த நெருப்பில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய பொறுப்பாளனையோ, அவர்களை விட்டும் தண்டனையை அகற்றும் உதவியாளனையோ அங்கு அவர்கள் பெறமாட்டார்கள்.
(66) 33.66. நரக நெருப்பில் அவர்களின் முகங்கள் புரட்டி எடுக்கப்படும் அந்நாளில் கடும் கைசேதத்துடன் அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! எங்களுக்கு வழங்கப்பட்ட உலக வாழ்க்கையில் நாங்கள் அல்லாஹ்வை வழிப்பட்டு அவனது கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, தூதருக்கு வழிப்பட்டு, தூதர் தன் இறைவனிடம் இருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றியிருக்க வேண்டுமே!”
(67) 33.67. இவர்கள் பொய்யான ஆதாரத்தோடு வந்து கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் தலைவர்களுக்கும் எமது சமூகத்தின் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்துவிட்டார்கள்.
(68) 33.68. எங்கள் இறைவா! எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்த எங்களின் இந்த தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நம்மை வழிகெடுத்ததற்காக எங்களுக்கு வழங்கிய வேதனையில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக. உன் அருளை விட்டும் அவர்களை நன்கு தூரமாக்கி விடுவாயாக.
(69) 33.69. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் தூதரைத் துன்புறுத்தி மூஸாவைத் துன்புறுத்தியவர்களைப் போல் ஆகிவிடவேண்டாம். அவர்கள் அவரது உடம்பில் குறை கூறினார்கள். அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரைத் தூய்மையாக்கிவிட்டான். அவர்கள் கூறியவற்றில் அவர் குறையற்றவர் என்பது அவர்களுக்கும் தெளிவானது. அவர் அல்லாஹ்விடத்தில் வேண்டுதல் மறுக்கப்படாத, முயற்சி வீணாக்கப்படாத அந்தஸ்த்துடையவராவார்.
(70) 33.70. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உண்மையான, சரியான வார்த்தையையே கூறுங்கள்.
(71) 33.71. நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி, சரியான வார்த்தையைக் கூறினால் அவன் உங்களின் செயல்களைச் சீராக்குவான்; உங்களிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்வான்; உங்கள் பாவங்களைப் போக்கி, அவற்றின் காரணமாக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவர் மிகப் பெரும் வெற்றி பெற்றுவிட்டார். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை. அது அல்லாஹ்வின் திருப்தியையும் சுவனத்தில் நுழையும் வெற்றியாகும்.
(72) 33.72. நிச்சயமாக நாம் வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு முன்னால் மார்க்க பொறுப்புகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்களையும் இரகசியங்களையும் வைத்தபோது அவை அவற்றை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டன. அதன் பின்விளைவைக் குறித்து அஞ்சின. ஆனால் மனிதன் அவற்றை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாகவும் அதனைப் பொறுப்பேற்பதன் பின்விளைவைக் குறித்து அறியாதவனாகவும் இருக்கின்றான்.
(73) 33.73. அல்லாஹ் ஏற்படுத்திய விதிப்படி மனிதன் அவற்றை ஏற்றுக்கொண்டான். இது நயவஞ்சம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களின் நயவஞ்சகத்தின் காரணமாகவும் இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அல்லாஹ் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியதனால் மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.