(1) 34.1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. படைத்தல், அதிகாரம், திட்டமிடல் ஆகியவற்றில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. மறுமையிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. தான் படைத்த படைப்புகளில், தன் திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(2) 34.2. பூமியில் உட்செல்லும் நீர், தாவரம் அதிலிருந்து வெளிப்படும் தாவரம், அது போன்றவற்றையும், வானத்திலிருந்து இறங்கும் மழை, வானவர்கள், வாழ்வாதாரம் போன்றவற்றையும் வானத்தின் நோக்கி ஏறுகின்ற வானவர்கள் அடியார்களின் செயல்கள், அவர்களின் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அல்லாஹ் அறிகிறான். அவன் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு மிகுந்த கருணையாளனாகவும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
(3) 34.3. “மறுமை நாள் ஒரு போதும் ஏற்படாது” என்று அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் பொய்யெனக் கூறும் மறுமை ஏற்பட்டே தீரும். ஆயினும் அது ஏற்படும் சமயத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். அவன் மறைவாக உள்ள மறுமையையும் இன்னபிறவற்றையும் அறியக்கூடியவன். வானங்களிலோ, பூமியிலோ சிறு எறும்பின் அளவோ அல்லது மேலே கூறியதைவிட சிறியதோ, பெரியதோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மறுமை வரை நிகழும் அனைத்தும் அதில் பதியப்பட்டுள்ளது.
(4) 34.4. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்குக் கூலி வழங்குவதற்காக அல்லாஹ் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளவைகளைப் பதிந்து வைத்துள்ளான். இந்த பண்புகளை உடையவர்களின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பு உண்டு. அவற்றின் காரணமாக அவர்களைத் தண்டிக்க மாட்டான். மறுமை நாளில் சுவனம் என்னும் கண்ணியமான பரிசும் அவர்களுக்கு உண்டு.
(5) 34.5. நாம் இறக்கிய வசனங்களைக் குறித்து “அவை சூனியம்” என்று கூறி அவற்றை அசத்தியமாக்க முயற்சி செய்பவர்களுக்கும், நம் தூதரைக் குறித்து “ஜோதிடர், சூனியக்காரர், கவிஞர்” என்று கூறும் இந்த பண்புகள் உடையவர்களுக்கு மறுமை நாளில் கடுமையான வேதனை உண்டு.
(6) 34.6. நபித்தோழர்களைச் சார்ந்த அறிஞர்களும் வேதக்கார அறிஞர்களில் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ் உம்மீது இறக்கியது சந்தேகமற்ற சத்தியம் என்பதற்கும் அது யாவற்றையும் மிகைத்த, இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழுக்குரியவனின் பாதைக்கு வழிகாட்டுகிறது என்பதற்கும் சாட்சி கூறுகிறார்கள்.
(7) 34.7. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களில் சிலர் தூதர் கொண்டு வந்ததைக் குறித்து பரிகாசமாக அவர்களில் சிலரிடம் கூறுகிறார்கள்: ”நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள் என்று கூறும் ஒரு மனிதரைக் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”
(8) 34.8. அவர்கள் கூறினார்கள்: “இந்த மனிதர் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறி நாம் மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவோம் என்று எண்ணுகிறாரா? அல்லது அர்த்தமற்ற விஷயங்களை உளறும் பைத்தியக்காரரா?” அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். உண்மையில் முடிவு யாதெனில் மறுமையை நம்பாதவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனையிலும் இவ்வுலகில் சத்தியத்தைவிட்டு தூரமான வழிகேட்டிலும் இருப்பார்கள்.
(9) 34.9. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள் தங்களுக்கு முன்னாலுள்ள பூமியையும் பின்னாலுள்ள வானத்தையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் பூமியில் அவர்களுடைய கால்களுக்கு கீழால் அவர்களை புதையச் செய்திடுவோம். வானத்திலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மீது விழச் செய்ய நாடினால் அவ்வாறு விழச் செய்திடுவோம். நிச்சயமாக இதில் கடுமையாக தன் இறைவனின்பால் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய உறுதியான சான்று இருக்கின்றது. இதற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்தபிறகு, உங்கள் உடல்கள் மண்ணோடு மண்ணான பிறகு உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றலுடையவன்.
(10) 34.10. நாம் தாவூதுக்கு தூதுத்துவத்தையும் அரசாட்சியையும் வழங்கினோம். நாம் மலைகளிடம் கூறினோம்: “மலைகளே! தாவூதுடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிபாடுங்கள்.” இவ்வாறே பறவைகளுக்கும் கூறினோம். அவர் இரும்பிலிருந்து தான் விரும்பும் கருவிகளைச் செய்வதற்காக நாம் அதனை அவருக்கு மிருதுவாக்கிக் கொடுத்தோம்.
(11) 34.11. தாவூதே! எதிரிகளிடமிருந்து உமது போராளிகளைக் காக்கும் விசாலமான போர்க்கவசங்களைச் செய்வீராக. அதன் ஆணிகளை வளையங்களுக்குப் பொருத்தமாகச் செய்வீராக. எவ்வாறெனில் நன்கு உறுதியாக இருக்க முடியாதவாறு மெல்லியதாகவும் இன்றி அது நுழைய முடியாதவாறு கனமானதாகவும் இன்றி செய்வீராக. நற்செயல் புரிவீராக. நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை நான் பார்ப்பவனாக இருக்கின்றேன். உங்களின் செயல்களில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப நான் உங்களுக்குக் கூலி வழங்குவேன்.
(12) 34.12. தாவூதின் மகன் சுலைமானுக்கு நாம் காற்றை வசப்படுத்தித் கொடுத்தோம். அதனுடைய காலைப் பயணம் ஒரு மாதமாகவும் மாலைப் பயணம் ஒருமாதமாகவும் இருந்தது. அவர் செம்பிலிருந்து தாம் விரும்பியவற்றை செய்துகொள்வதற்காக அவருக்காக செம்பை ஊற்று போல் உருகி ஓடச் செய்தோம். தன் இறைவனின் கட்டளைப்படி அவரிடத்தில் வேலை செய்யக்கூடிய ஜின்களை நாம் அவருக்கு வசப்படுத்தித் கொடுத்தோம். நம் கட்டளையை நிறைவேற்றாத ஜின்களை நாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பால் வேதனை செய்வோம்.
(13) 34.13. இந்த ஜின்கள் சுலைமானுக்காக வேலை செய்தன. அவர் விரும்பிய பள்ளிவாயில்கள், கோட்டைகள், சிற்பங்கள், பெரிய நீர்த் தடாகங்களைப் போன்ற பாத்திரங்கள், அசைக்க முடியாதளவு பெரும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றைச் அவை செய்தன. நாம் அவர்களிடம் கூறினோம்: “-தாவூதின் குடும்பமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு செயல்படுங்கள். என் அடியார்களில் குறைவானவர்களே நான் அளித்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துபவர்களாக உள்ளனர்.
(14) 34.14. நாம் அவருக்கு மரணத்தை விதித்தபோது அவர் சாய்ந்திருந்த கைத்தடியை அரித்துக்கொண்டிருந்த கரையானே அவர் இறந்துவிட்டார் என்பதை ஜின்களுக்கு அறிவித்தன. அவர் கீழே விழுந்த போது தாங்கள் மறைவானவற்றை அறியக்கூடியவர்கள் அல்ல என்பது ஜின்களுக்குத் தெளிவானது. ஏனெனில் அவை மறைவானதை அறிந்திருந்தால் சிரமமான வேதனையில் நீடித்திருக்க மாட்டார்கள். சுலைமான் உயிரோடு கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அவருக்காக அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடினமான பணிகளே அந்த வேதனையாகும்.
(15) 34.15. அல்லாஹ் தாவூதுக்கும் அவரது மகன் சுலைமானுக்கும் புரிந்த அருட்கொடைகளைக் குறிப்பிட்ட பிறகு ஸபாவாசிகள் மீது பொழிந்த அருட்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். தாவூதும் சுலைமானும் தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். ஸபஃ வாசிகளோ நன்றிகெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். அவன் கூறுகிறான்: ஸபஃ குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் அல்லாஹ்வின் வல்லமை மற்றும் அவர்கள் மீது அவனது அருள் ஆகியவற்றுக்கான தெளிவான சான்று இருந்தது. அது வலது புறமும் இடது புறமும் அமைந்த இரு தோட்டங்களாகும். நாம் அவர்களிடம் கூறினோம்: “உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள். அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். இது செழிப்பான ஊராகும். இந்த அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்.
(16) 34.16. அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் அவனுடைய தூதர்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். எனவே நாம் அருட்கொடைகளுக்குப் பகரமாக அவர்களுக்கு சோதனைகளைத் தண்டனையாக வழங்கினோம். அவர்கள் மீது அணையை உடைத்து வயல்களை மூழ்கடிக்கக்கூடிய பெருவெள்ளத்தை அனுப்பினோம். அவர்களின் இரு தோட்டங்களையும் கசப்பான பழங்களைத் தரக்கூடிய தோட்டங்களாக ஆக்கினோம். அவற்றில் பழம்தராத சவுக்கு மரங்களும் சிறிதளவு இலந்தை மரங்களும் இருந்தன.
(17) 34.17. அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அருட்கொடைகளுக்கு நிகழ்ந்த இந்த மாற்றம் அவர்களின் நிராகரிப்பினாலும் நன்றி செலுத்தாமல் புறக்கணித்ததன் காரணத்தினாலும் ஏற்பட்ட விளைவாகும். நம் அருட்கொடைகளை மறுத்து அவனை நிராகரிப்போருக்கே இவ்வாறு கடுமையான வேதனைகளை வழங்குகின்றோம்.
(18) 34.18. யமனில் ஸபஃ வாசிகளுக்கும் நாம் அருள்செய்த ஷாம் தேசத்து ஊர்களுக்கும் மத்தியில் அருகருகே பல ஊர்களை ஏற்படுத்தினோம். அவர்கள் ஷாம் தேசத்தை அடையும் வரை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி செல்லும் வகையில் நாம் அவற்றுக்கிடையிலான பயண தூரத்தையும் நிர்ணயித்தோம். . நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் விரும்பியவாறு இரவிலோ அல்லது பகலிலோ எதிரிகளிடமிருந்தும் பசி மற்றும் தாகத்திலிருந்தும் அச்சமற்றவர்களாக செல்லுங்கள்.
(19) 34.19. தூரம் குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் பயணக் களைப்பை அனுபவிப்பதற்காக இந்த ஊர்களையெல்லாம் நீக்கி எங்கள் பயணங்களுக்கிடையே தூரத்தை ஏற்படுத்துவாயாக. (அதனால்) எங்களின் பயணக் கூட்டத்தின் சிறப்பும் வெளிப்படும். ” அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் கர்வம்கொண்டு, அவர்களிலுள்ள ஏழைகளின் மீது பொறாமைகொண்டு தங்களுக்குத் தாங்களே அவர்கள் அநீதி இழைத்துக் கொண்டார்கள். நாம் அவர்களை அவர்களுக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் பேசக்கூடிய படிப்பினைகளாக ஆக்கி விட்டோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அவர்களை பல ஊர்களாக பிரித்துவிட்டோம். நிச்சயமாக மேலேகூறப்பட்ட இந்த -ஸபஃவாசிகளுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளிலும் பின்பு அவர்களின் நிராகரிப்புக்கும் கர்வத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையிலும்-, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிதல், பாவத்தைத் தவிர்த்தல், சோதனை என்பவற்றில் பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் படிப்பினை இருக்கின்றது.
(20) 34.20. நிச்சயமாக அவர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கலாம் என இப்லீஸ் எண்ணியதை அவர்களில் நிரூபித்துக் காட்டினான். எனவே நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் அவனைப் பின்பற்றினார்கள். திட்டமாக அவர்கள் அவனைப் பின்பற்றாது அவனது எதிர்பார்ப்பைக் குலைத்துவிட்டனர்.
(21) 34.21. அவர்களை வழிகேட்டில் நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இப்லீஸ் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக அவனால் முடிந்ததெல்லாம் அலங்கரித்துக் காட்டுவதும் வழிகெடுப்பதும்தான். அவர்களை வழிகெடுக்க அவனுக்கு நாம் அனுமதியளித்தாலே தவிர. மறுமை மற்றும் அதில் கூலி வழங்கல் என்பவற்றை உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் யார்? அதில் சந்தேகிப்பவர்கள் யார்? என்ற விடயம் வெளிவருவதற்காக இவ்வாறு நாம் அனுமதிக்கின்றோம். -தூதரே!- உம் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். அவன் அடியார்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குகிறான்.
(22) 34.22. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நிச்சயமாக உங்களின் தெய்வங்களாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவற்றை உங்களுக்கு பலன்களை கொண்டு வரவோ உங்களை விட்டும் தீங்கினை அகற்றவோ அழையுங்கள். அவை வானங்களிலும் பூமியிலும் கடுகளவுக்குக் கூட உரிமையாளர்களல்ல. அதில் அந்த தெய்வங்களுக்கு அல்லாஹ்வுடன் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்வுக்கு உதவி செய்யும் எந்த உதவியாளரும் இல்லை. பங்காளிகள் மற்றும் உதவியாளர்களை விட்டும் அவன் தேவையற்றவன்.
(23) 34.23. அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர மற்றவர்களின் பரிந்துரைகள் அவனிடம் எந்தப் பயனையும் அளிக்காது. தனது மகத்துவத்தின் காரணமாக அவன் யாரைக் குறித்து திருப்தியடைந்தானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய அனுமதியளிப்பான். அவனது மகத்துவத்தின் காரணத்தினால் நிச்சயமாக அவன் வானத்தில் பேசினால் வானவர்கள் அவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்கள் இறக்கைகளை அடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் உள்ளங்களிலிருந்து பதற்றம் நீங்கிய பிறகு “உங்களின் இறைவன் என்ன கூறினான்?” என்று வானவர்கள் ஜிப்ரீலிடம் கேட்கிறார்கள். அதற்கு ஜிப்ரீல் “அவன் உண்மையையே கூறினான். உள்ளமையிலும் அடக்கியாள்வதிலும் அவன் மிக உயர்ந்தவனாகவும் மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான். ஏனைய அனைத்தும் அவனை விடச் சிறியன. என்று கூறுவார்.
(24) 34.24. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “வானத்திலிருந்து மழையை இறக்கியும் பூமியிலிருந்து தாவரங்களையும் பழங்களையும் விளையச் செய்தல் போன்ற இன்னோரன்னவற்றின் மூலம் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களுக்கு அவற்றிலிருந்து வாழ்வாதாரம் அளிக்கிறான். -இணைவைப்பாளர்களே!- நீங்களோ, நாங்களோ சந்தேகம் இல்லாமல் நம்மில் ஒருவர்தான் நேர்வழியிலோ அல்லது (சத்திய) பாதையை விட்டும் தெளிவான வழிகேட்டிலோ இருக்கின்றோம். நிச்சயமாக நம்பிக்கையாளர்கள்தாம் நேரான வழியில் இருக்கின்றார்கள். இணைவைப்பாளர்கள்தாம் வழிகேட்டில் இருக்கின்றார்கள்.
(25) 34.25. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமைநாளில் நாங்கள் செய்த பாவங்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களைக் குறித்து நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்.”
(26) 34.26. நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாளில் அல்லாஹ் உங்களையும் எங்களையும் ஒன்றுதிரட்டுவான். பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அசத்தியவாதிகளில் யார் சத்தியவாதிகள்? என்பதை அவன் தெளிவுபடுத்துவான். அவன் நியாயமாகத் தீர்ப்பளிக்கக்கூடியவன்; தான் அளிக்கும் தீர்ப்பைக்குறித்து நன்கறிந்தவன்.”
(27) 34.27. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிய இணைத்தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள். ஒருபோதும் இல்லை. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். என்றாலும் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.
(28) 34.28. -தூதரே!- நாம் உம்மை மனிதர்கள் அனைவருக்கும் தூதராகவும் இறையச்சமுடையவர்களுக்கு சுவனம் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தைக் கொண்டு எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அவர்கள் அதனை அறிந்திருந்தால் உம்மை பொய்ப்பித்திருக்க மாட்டார்கள்.
(29) 34.29. எச்சரிக்கப்படும் வேதனையை விரைவாக வேண்டியவர்களாக இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள்: “நிச்சயமாக நீர் உண்மையாக நிகழும் என அழைக்கும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் வாக்களித்த வேதனை எப்போது வரும்?”
(30) 30. -தூதரே!- தண்டனையை விரைவாக வேண்டும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு குறிப்பிட்ட நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நாளை விட்டு நீங்கள் ஒரு கணப்பொழுதுகூட முந்தவோ, பிந்தவோ மாட்டீர்கள். அந்த நாள் மறுமை நாளாகும்.
(31) 34.31. அல்லாஹ்வை நிராகரித்தோர் கூறுவார்கள்: தன் மீது இறக்கப்பட்டதாக முஹம்மது எண்ணும் இந்த குர்ஆனின் மீதோ முந்தைய வான வேதங்களின் மீதோ நாங்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டோம்.” -தூதரே!- மறுமை நாளில் அநியாயக்காரர்கள் விசாரணைக்காக தங்கள் இறைவனிடம் தடுத்துவைக்கப்படுவதை நீர் பார்க்க வேண்டுமே! அப்போது பொறுப்பையும் பழியையும் அடுத்தவர்கள் மீது சுமத்தி தமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் மறுப்பு வழங்கிக்கொள்வார்கள். தம்மை உலகில் பலவீனர்களாக்கிய தங்கள் தலைவர்களிடம் அவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் கூறுவார்கள்: “நீங்கள் மட்டும் எங்களை வழிகெடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டிருப்போம்.”
(32) 34.32. சத்தியத்தை விட்டும் கர்வம்கொண்ட பின்பற்றப்பட்ட தலைவர்கள் தம்மைப் பின்பற்றிய பலவீனமான தொண்டர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “முஹம்மது உங்களிடம் கொண்டுவந்த நேர்வழியைவிட்டும் நாங்களா உங்களைத் தடுத்தோம்? மாறாக நீங்கள் அநியாயக்காரர்களாகவும் குழப்பம் செய்தும், குழப்பவாதிகளாகவும் இருந்தீர்கள்.”
(33) 34.33. பலவீனமாகக் கருதப்பட்ட தொண்டர்கள் தாங்கள் பின்பற்றிய சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “மாறாக இரவும் பகலும் சூழ்ச்சி செய்து நீங்கள்தாம் நேர்வழியைவிட்டும் எங்களைத் தடுத்தீர்கள். அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் படைப்புகளை வணங்குமாறும் எங்களை ஏவிக் கொண்டிருந்தீர்கள். “உலகத்தில் அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பின் காரணமாக வேதனையைக் காணும்போது வருத்தத்தை மறைத்துக் கொள்வார்கள். நிச்சயமாக தாங்கள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். நாம் நிராகரிப்பாளர்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிவிடுவோம். அவர்கள் உலகில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி மற்றும் பாவங்கள் செய்துகொண்டிருந்ததனால் இவ்வாறு கூலி கொடுக்கப்படுகிறார்கள்.
(34) 34.34. முஹம்மது நபியை அவரது சமூகம் பொய்ப்பித்தபோது அல்லாஹ் அவருக்கு ஆறுதலாக, “பொய்ப்பிப்பது முன்னைய சமூகங்களின் வழக்கம்தான்” என்பதை நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: நாம் தூதர்களை எந்த ஊருக்கு அல்லாஹ்வின் வேதனையை எச்சரிக்கை செய்யுமாறு அனுப்பினாலும் அங்கு அந்தஸ்த்து, அதிகாரம் ஆகியவற்றைப் பெற்று உல்லாசமாக வாழக்கூடியவர்கள், “தூதர்களே! நீங்கள் கொண்டுவந்த தூதுச் செய்தியை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றுதான் கூறினார்கள்.
(35) 34.35. அந்தஸ்த்துடைய இவர்கள் கர்வத்துடனும் பெருமையுடனும் கூறினார்கள்: “நாங்கள் உங்களைவிட அதிக செல்வமும் பிள்ளைகளும் உடையவர்கள். நிச்சயமாக நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவோம் என்று நீங்கள் எண்ணுவது பொய்யாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படமாட்டோம்.”
(36) 34.36. -தூதரே!- தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்த இவர்களிடம் நீர் கூறுவீராக: “அடியார்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிக்கும்பொருட்டு என் இறைவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது கோபம் கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும் பொருட்டுதான் நாடியவர்களுக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர், அல்லாஹ் ஞானம் மிக்கவன், அவன் உயர்ந்த ஒரு நோக்கம் இன்றி ஒரு விடயத்தை நிர்ணயிக்க மாட்டான் என்பதை அறியமாட்டார்கள். அந்நோக்கம் புரிபவர்களுக்குப் புரியும். புரியாதவர்களுக்குப் புரியாது.
(37) 34.37. நீங்கள் பெருமை பாராட்டுவதற்குக் காரணமான செல்வங்களோ, பிள்ளைகளோ உங்களுக்கு இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தராது. ஆயினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள் பன்மடங்கு கூலியைப் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் செல்வங்களும் அவர்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்கும். பிள்ளைகள் தமது பிரார்த்தனை மூலம் அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தருவார்கள். நற்செயல்புரியும் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்குப் பலமடங்கு கூலியைப் பெறுவார்கள். அவர்கள் சுவனத்தின் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். வேதனை, மரணம், இன்ப முடிவு ஆகிய எல்லா வகையான அச்சங்களிலிருந்தும் அமைதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
(38) 34.38. நம்முடைய வசனங்களைவிட்டும் மக்களைத் திருப்புவதற்காக கடும் முயற்சி மேற்கொள்ளும் நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
(39) 34.39. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அதனை விடச் சிறந்ததையும் மறுமையில் நிறைவாக கூலியையும் அதற்குப் பகரமாக அல்லாஹ் வழங்குவான். அவன் வாழ்வாதாரம் அளிப்போரில் மிகச் சிறந்தவன். எனவே வாழ்வாதாரம் தேடுபவர் அவனிடமே செல்லட்டும்.
(40) 34.40. -தூதரே!- அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. பின்பு அந்நாளில் இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக வானவர்களிடம் கூறுவான்: “இவர்கள்தாம் உலக வாழ்வில் அல்லாஹ்வைவிடுத்து உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”
(41) 34.41. வானவர்கள் கூறுவார்கள்: “நீ பரிசுத்தமானவன். அவர்கள் அல்லாமல் நீயே எங்களின் பாதுகாவலன். எங்களுக்கும் அவர்களுக்குமிடையே எந்த உறவும் இல்லை. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து நிச்சயமாக வானவர்களாகத் தோற்றமெடுத்த ஷைத்தான்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஷைத்தான்களைத்தான் நம்பிக்கைகொண்டிருந்தார்கள்.
(42) 34.42. கேள்வி கேட்கப்படும், ஒன்றுதிரட்டப்படும் நாளில் வணங்கப்பட்ட தெய்வங்கள் உலகில் தங்களை வணங்கியவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து பலனிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டா. நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களிடம் நாம் கூறுவோம்: “நீங்கள் உலகில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை அனுபவியுங்கள்.”
(43) 34.43. பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நாம் தூதர் மீது இறக்கிய சந்தேகமற்ற தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், இதனைக் கொண்டுவந்த இந்த மனிதர் உங்களின் முன்னோர்கள் இருந்த கொள்கையை விட்டும் உங்களைத் திருப்ப நாடுகின்றார் என்றும் இது அல்லாஹ்வின் பெயரால் புனைந்து கூறப்பட்ட பொய்யான குர்ஆனாகும் என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனிடமிருந்து அவர்களிடம் வந்த குர்ஆனைக் குறித்து கூறினார்கள்: “இது கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலும் தந்தைக்கும் மகனுக்கும் மத்தியிலும் பிரிவினை ஏற்படுத்துவதனால் இது தெளிவான சூனியமாகும்.”
(44) 34.44. நாம் அவர்களுக்கு, நிச்சயமாக இந்த குர்ஆன் பொய்யானதாகும், இதனை முஹம்மது புனைந்துள்ளார் என்று கூறி அதன்பால் வழிகாட்டி படிக்கக்கூடிய எந்த வேதத்தையும் வழங்கவில்லை. -தூதரே!- உமக்கு முன்னால் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கும் எந்த தூதரையும் அவர்களிடம் அனுப்பவில்லை.
(45) 34.45. ஆத், ஸமூத், லூதுடைய சமூகம் போன்ற முந்தைய சமூகங்களும் பொய்ப்பித்தன. உம் சமூகத்திலுள்ள இணைவைப்பாளர்கள் முந்தைய சமூகங்கள் பெற்றிருந்த, செல்வம், அருட்கொடை, பலம், எண்ணிக்கை ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக்கூட பெறவில்லை. அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வமோ, பலமோ, எண்ணிக்கையோ அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. என் வேதனை அவர்களைத் தாக்கியது. -தூதரே!- நான் அவர்களுக்கு அளித்த மறுப்பும் தண்டனையும் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்பீராக.
(46) 34.46. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அது நீங்கள் மனஇச்சையை விட்டுவிட்டு இருவர் இருவராகவோ தனித்தனியாகவோ உங்கள் தோழரின் நடத்தையைக் குறித்து, அவரது அறிவு, வாய்மை, நம்பகத் தன்மை ஆகியவற்றைக்குறித்து சிந்தனை செய்யுங்கள். திட்டமாக அவர் பைத்தியக்காரர் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகிவிடும். நீங்கள் இணைவைப்பை விட்டும் திருந்தாவிட்டால் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து உங்களை எச்சரிப்பவரே அவர்.
(47) 34.47. -தூதரே!- உம்மைப் பொய்யர் எனக்கூறும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்த நேர்வழிக்காக உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை. அது உங்களுக்குரியதே. எனது கூலி அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன் என்பதற்கும் நீங்கள் செய்யும் செயல்களுக்கும் அவனே சாட்சியாக இருக்கின்றான். அவற்றிற்கான கூலியை அவன் உங்களுக்கு நிறைவாக வழங்கிடுவான்.
(48) 34.48. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் சத்தியத்தை அசத்தியத்தின் மீது சாட்டுகிறான். அது அதனை அழித்துவிடுகிறது. அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன். வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அடியார்களின் செயற்பாடுகள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(49) 34.49. தூதரே! உம்மைப் பொய்யர் என்று கூறும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இஸ்லாம் என்னும் சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது. அதற்கு வெளியில் தெரியக்கூடிய எந்த பலமும் அடையாளமும் இல்லை. அது மீண்டும் அதிகாரத்திற்கு வராது.”
(50) 34.50. -தூதரே!- உம்மைப் பொய்யர் என்று கூறும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களுக்கு எத்திவைப்பவற்றில் சத்தியத்தை விட்டு வழிதவறியிருந்தால் அதனால் எனக்கு ஏற்படும் தீங்கு என்னையே சாரும். அதனால் உங்களுக்கு ஒன்றும் நேரப்போவதில்லை. நான் நேர்வழி பெற்றிருந்தால் அது என் இறைவன் எனக்கு அறிவித்த வஹியினால் ஆகும். நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்.நான் கூறுவதைக் கேற்பது அவனுக்கு சிரமமில்லாதளவுக்கு அவன் நெருக்கமானவன்.
(51) 34.51. இந்த நிராகரிப்பாளர்கள் மறுமை நாளில் வேதனையைக் காணும்போது பதற்றமடைவதை நீர் கண்டால் அவர்களால் எங்கும் வெருண்டோட முடியாது. யாரிடமும் அடைக்கலம் தேட முடியாது. நெருக்கமான இடங்களிலிருந்து முதன் முறையிலேயே அவர்கள் பிடிக்கப்பட்டு விடுவார்கள். அவர்கள் பிடிக்கப்படுவது மிகவும் இலகுவானதாக இருக்கும். அதனை நீர் பார்த்தால் ஆச்சரியமான விடயத்தை பார்த்தவராவீர்.
(52) 34.52. தங்களின் இருப்பிடத்தைக் கண்டவுடன் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் மறுமை நாளின் மீது நம்பிக்கைகொண்டோம் என்று.” எவ்வாறு அவர்களால் நம்பிக்கைகொள்ள முடியும்? அவர்கள் செயல்படும் களமான உலகத்தைவிட்டும் வெளியேறி, தூரமாகி கூலி வழங்கப்படும் களமான மறுமையை அடைந்துவிட்டார்கள்!
(53) 34.53. அவர்களின் நம்பிக்கை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்? அவர்கள் அதனை உலக வாழ்க்கையில் நிராகரித்துவிட்டார்கள். தூதரைக் குறித்து “சூனியக்காரர், ஜோதிடர், கவிஞர்” என சத்தியத்தை விட்டும் மிகத் தூரமான ஊகங்களைக் கூறிக்கொண்டிருந்தனர்.
(54) 34.54. அவர்கள் விரும்பும் வாழ்வின் இன்பங்கள், நிராகரிப்பிலிருந்து மீளுதல், நரகிலிருந்து தப்பித்தல், மீண்டும் உலகத்தின்பால் திரும்புதல் ஆகியவற்றிலிருந்து இந்த பொய்யர்கள் தடுக்கப்படுவார்கள், இவர்களுக்கு முன்னர் பொய்ப்பித்த சமூகங்களுக்கும் இவ்வாறே நிகழ்ந்தது. நிச்சயமாக அவர்கள் தூதர்கள் கொண்டுவந்த ஓரிறைக் கொள்கை மற்றும் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதலின் மீது நம்பிக்கை கொள்தல் ஆகிய விஷயங்களில் நிராகரிப்பின்பால் இட்டுச் செல்லும் சந்தேகத்தில் வீழ்ந்துகிடந்தார்கள்.