(1) 4.1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான். "அல்லாஹ்வுக்காக இவ்வாறு செய்யுமாறு உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களை இணைக்கும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டுத் தப்பமுடியாது. மாறாக அவன் அவற்றை எண்ணி வைத்துள்ளான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(2) 4.2. பொறுப்பாளிகளே! உங்களிடம் இருக்கும் அநாதைகள் பருவ வயதை அடைந்து அவர்கள் புரிந்து நடந்துகொள்வோராகவும் இருந்தால் அவர்களின் செல்வங்களை முழுமையாக வழங்கிவிடுங்கள். அவர்களிடமிருந்து தரமான பொருட்களைப் பெற்று மோசமான பொருட்களை திருப்பி அளித்து அனுமதிக்கப்பட்டதற்குப் பகரமாக தடைசெய்யப்பட்டதை மாற்றி எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்துவிடாதீர்கள். நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது.
(3) 4.3. உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்து, அவர்களுக்குரிய மணக்கொடையை குறைத்துவிடுவதனாலோ அல்லது மோசமாக நடந்துகொள்ளுவதனாலோ நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் அவர்களை விட்டுவிட்டு மற்ற பெண்களில் நீங்கள் விரும்பியவர்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். அவர்களிடையே உங்களால் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒருத்தியை மட்டும் போதுமாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடிமைப் பெண்களுக்கு மனைவிகளுக்குரிய உரிமைகள் அவசியமற்றது. அநாதைகளுடைய விடயமாகவும் ஒரு திருமணம் முடித்துக் கொள்வது அல்லது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களைஅனுபவிப்பது சம்பந்தமாகவும் வசனங்களில் இடம்பெற்ற இந்த விடயங்களே நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிக நெருக்கமானதாகும்.
(4) 4.4. பெண்களுக்கு மணக்கொடைகளை அவசியம் அளித்துவிடுங்கள். நீங்கள் அளித்த மணக்கொடையில் அவர்கள் எதையேனும் உங்களுக்கு வற்புறுத்தலின்றி மனமுவந்து விட்டுக்கொடுத்தால் அதனை தாராளமாக உண்ணுங்கள். அதில் எந்தக் குற்றமும் இல்லை.
(5) 4.5. பொறுப்பாளர்களே! உங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிக்கும் செல்வங்களை அதனைச் சரியாக பராமரிக்கத் தெரியாதவர்களிடம் வழங்காதீர்கள். இந்த செல்வங்களை அல்லாஹ் அடியார்களின் நன்மைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இப்படிப்பட்டவர்கள் சொத்துக்களைப் பாதுகாக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவற்றிலிருந்து அவர்களுக்கு செலவுசெய்யுங்கள், ஆடை வழங்குங்கள். அவர்களிடம் நல்ல வார்த்தையைக் கூறுங்கள். “நீங்கள் பக்குவ வயதை, பராமரிக்கும் தகுதியை அடைந்துவிட்டால் நாங்கள் உங்களிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்பது போன்ற அழகிய வாக்குறுதிகளைக் கூறுங்கள்.
(6) 4.6. பொறுப்பாளர்களே! அவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களின் செல்வங்களிலிருந்து சிறிது வழங்கி அவர்களை சோதித்துப் பாருங்கள். அவர்கள் அதனை நல்லமுறையில் கையாண்டால், நீங்கள் அவர்களிடம் பக்குவத்தைக் கண்டால் அவர்களின் செல்வங்களை முழுமையாக அவர்களிடம் வழங்கிவிடுங்கள். உங்களுக்கு தேவை ஏற்பட்டால் அல்லாஹ் எடுத்துக்கொள்ள அனுமதித்த அளவை மீறி அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுவிடாதீர்கள். அவர்கள் பருவ வயதை அடைந்து சொத்துக்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் அவசர அவசரமாக விழுங்கிவிடாதீர்கள்.போதுமான அளவு செல்வத்தைப் பெற்றிருப்பவர் அவர்களின் செல்வங்களை எடுக்காது தவிர்ந்துகொள்ளட்டும். உங்களில் ஏழ்மைநிலையில் இருப்பவர் தேவைக்கேற்ப அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுகொள்ளட்டும். அவர்கள் பருவ வயதை அடைந்து பக்குவத்தையும் பெற்ற பின் அவர்களின் செல்வத்தை அவர்களின் வசம் ஒப்படைக்கும்போது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே இதற்கு சாட்சியாளனாக இருப்பதற்கும் அடியார்களின் செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதற்கும் போதுமானவன்.
(7) 4.7. தாய்தந்தையர், சகோதரர்கள் மற்றும் தந்தையின் சகோதரர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் இறந்த பின் விட்டுச் சென்ற சொத்து குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும், அவற்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு உண்டு. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்காலத்தில் பெண்களும் குழந்தைகளும் வாரிசு சொத்துகளை விட்டுத் தடுக்கப்பட்டது போன்றில்லாமல் மேற்கூறிய உறவினர்கள் விட்டுச்சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இந்த பங்கு அல்லாஹ்வால் தெளிவுபடுத்தப்பட்டு அளவு நிர்ணயிக்கப்பட்ட உரிமையாகும்.
(8) 4.8. சொத்து பங்கிடப்படும்போது அநந்தரம் பெறாத உறவினர்கள், ஏழைகள், அநாதைகள் அங்கு வந்தால், அதனைப் பங்கிட முன் மனமுவந்து அவர்களுக்கும் உபரியாக அதிலிருந்து அளியுங்கள். ஏனெனில் அவர்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். இந்தச் சொத்தும் உங்களுக்கு சிரமமின்றி கிடைத்துள்ளது. அவர்களிடம் அசிங்கமற்ற நல்லவார்த்தைகளைக் கூறுங்கள்.
(9) 4.9. தாங்கள் இறந்துவிட்டால் தங்களின் பலவீனமான குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று அஞ்சுபவர்களைப்போல உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைக் குழந்தைகளின் விஷயத்திலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதி இழைத்துவிடாதீர்கள். அப்பொழுதுதான் அல்லாஹ் அவர்கள் எவ்வாறு நல்லமுறையில் நடந்து கொண்டனரோ அவ்வாறே அவர்களது பிள்ளைகளுடனும் நல்ல முறையில் நடந்துகோள்வோரை ஏற்படுத்துவான். உயில் எழுதுபவரது பிள்ளைகளின் விடயத்திலும் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். எனவே உயில் எழுதுபவர்களிடம் தமக்குப் பின்னுள்ள அநந்தரக்காரர்களுக்கு தமது உயிலில் அநீதி இழைக்காதிருக்கும் படியும் உயில் எழுதாமல் தம்மை நன்மையிலிருந்து தடுத்துக்கொள்ளாதிருக்கும் படியும் நேர்த்தியான வார்த்தைகளைக் கூறுங்கள்.
(10) 4.10. அநாதைகளின் செல்வங்களைப் பெற்று அவற்றை அநியாயமான முறையில் செலவுசெய்பவர்கள் தங்கள் வயிறுகளில் எரியும் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் நரக நெருப்பு அவர்களைப் பொசுக்கிவிடும்.
(11) 4.11. உங்கள் பிள்ளைகளின் அநந்தர விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அவர்களிடையே சொத்து பங்கிடப்படும்போது மகனுக்கு இரண்டு மகள்களின் பங்குகள் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளைகள் அல்லாமல் இரண்டிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரண்டுபங்கு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அவருக்கு ஒரு பெண்பிள்ளை மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்றவற்றில் பாதி அவளுக்குத் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ இருந்தால் தாய், தந்தையர் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். இறந்தவருக்குக் குழந்தைகள் இல்லாமல் தாய், தந்தையர் மட்டுமே வாரிசுகளாக இருந்தால் அவரது தாய்க்கு மூன்றில் ஒருபங்கும் மீதமுள்ளதை தந்தைக்கும் அளித்துவிட வேண்டும். இறந்தவருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் தாய்க்கு ஆறில் ஒருபங்கை அளித்துவிட்டு மீதமுள்ளதை தந்தைக்கு அளித்துவிட வேண்டும். சகோதரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பங்கீடு இறந்தவர் செய்த மரண சாசனத்தையும் அவரது கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் இருக்க வேண்டும். அவர் செய்த மரண சாசனம் அவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தாண்டிவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்குப் பங்கீட்டை இவ்வாறு அமைத்துள்ளான். உங்களின் பிள்ளைகள், தந்தையர் ஆகியோரில் யார் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அதிகப் பயன்களை அளிக்கக்கூடியவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் உங்கள் வாரிசுகளில் சிலரின்மீது நல்லெண்ணம் வைத்து சொத்துகள் அனைத்தையும் அவருக்கு எழுதிவிடலாம். சிலர்மீது தவறான எண்ணத்தால் அவர்களுக்கு எதுவும் தராமல் போகலாம். ஆனால் நிலமை தலைகீழாக இருக்கலாம். இவை அனைத்தையும் சரியாக அறிந்தவன் அல்லாஹ்வே. எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே தான் மேற்சொன்னவாறு அநந்தரத்தைப் பங்குவைத்துள்ளான். இவ்வாறு செய்வதை அவன் தன் அடியார்கள்மீது கடமையாக்கியுள்ளான். அவன் அனைத்தையும் அறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தான் வழங்கும் சட்டங்களில், நிர்வகிப்பதில் அவன் ஞானம்மிக்கவன்.
(12) 4.12. கணவன்மார்களே! உங்கள் மனைவியருக்கு உங்கள் மூலமோ முன்னைய கணவர் மூலமோ குழந்தைகள் இல்லையென்றால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் நான்கில் ஒருபங்குதான் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனத்தையும் அவர்களின் கடனையும் நிறைவேற்றிய பிறகே உங்களுக்கான பங்கீடு கிடைக்கும். கணவன்மார்களே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்கள் மனைவியருக்கு நான்கில் ஒரு பங்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் அவர்களுக்கு எட்டில் ஒருபங்குதான் உண்டு. நீங்கள் செய்த மரண சாசனத்தையும் உங்கள் மீதுள்ள கடனையும் நிறைவேற்றிய பிறகே சொத்து பங்கீடு செய்யப்படும். இறந்தவர் ஆணோ பெண்ணோ அவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லையெனில் ஒரு தாய்வழிச் சகோதரனோ அல்லது சகோதரியோ மட்டும் இருந்தால் அவருக்கோ அவளுக்கோ ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தாய்வழிச் சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் மூன்றில் ஒருபங்கை அவர்களுக்குச் சமமாக பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். இதில் ஆண், பெண் இருவருக்கும் சமஅளவு பங்குதான் கிடைக்கும். இறந்தவரின் மரண சாசனத்தையும் அவர்மீதுள்ள கடனையும் நிறைவேற்றியபிறகே இந்தப் பங்கீடு செய்யப்படும். இறந்தவரின் மரண சாசனம் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருந்து வாரிசுதாரர்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இருந்துவிடக்கூடாது. இவ்வசனம் உள்ளடக்கியுள்ள இச்சட்டம் அல்லாஹ் உங்கள்மீது விதித்த கடமையாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை அவன் நன்கறிந்தவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவன். குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
(13) 4.13. அநாதைகள், ஏனையவர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்கள் எடுத்து நடப்பதற்காக அவர்கள் மீது விதித்த சட்டங்களாகும். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி இருக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச்செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களை அழிவு நெருங்கவும்மாட்டாது. இறைவன் அளித்த இந்தக் கூலிதான் மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வெற்றி எதுவும் இல்லை.
(14) 4.14. அல்லாஹ் வழங்கிய சட்டங்களை வீணாக்கி அதன் அடிப்படையில் செயல்படாமல் அவற்றில் சந்தேகம் கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டவர்கள், அவன் விதித்த வரம்புகளை மீறியவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
(15) 4.15. உங்கள் பெண்களில் திருமணம் முடித்த முடிக்காத யாரேனும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு எதிராக நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய முஸ்லிமான நான்கு ஆண் சாட்சிகளைத் தேடுங்கள். அவர்கள் ‘அந்தப் பெண்கள் விபச்சாரம் புரிந்தார்கள்’ என்று சாட்சிகூறினால் அந்தப் பெண்களுக்குத் தண்டனையாக அவர்கள் மரணிக்கும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு வேறொரு வழியை ஏற்படுத்தும்வரை அவர்களை வீடுகளில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். (பின்னர் அல்லாஹ் அவர்களுக்கான வழியைத் தெளிவுபடுத்தினான், அவர்கள் திருமணமாகதவர்களாக இருந்தால் அவர்கள்மீது நூறு கசையடிகள் அடிக்கப்பட்டு ஒரு வருடம் நாடுகடத்தப்பட வேண்டும். அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்).
(16) 4.16. திருமணம் முடித்த முடிக்காத ஆண்களில் விபச்சாரம் புரிபவர்களையும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் நாவால், கரங்களால் தண்டியுங்கள். அவர்கள் திருந்தி தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். ஏனெனில் பாவமன்னிப்புக் கோரியவர் பாவம் செய்யாதவரைப் போலாவார். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.இது விபச்சாரம் புரிந்தவர்கள் விஷயத்தில் ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் இதனை ரத்துசெய்து திருமணமாகாதவனுக்கு கசையடியும் நாடுகடத்தலும் திருமணமானவனுக்கு கல்லெறிவதும் விதிக்கப்பட்டது.
(17) 4.17. பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமல் பாவங்களில் ஈடுபட்டு - மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான் - பின்னர் தங்கள் இறைவனிடம் மரணவேளை வருவதற்கு முன்னரே திரும்பிவிடுபவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இவர்களின் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். அல்லாஹ் தன் படைப்பினங்களின் நிலைகளைக் குறித்து நன்கறிந்தவன். தனது நிர்ணயத்தில், சட்டங்களில் ஞானம்மிக்கவன்.
(18) 4.18. பாவமன்னிப்புக் கோராமல் மரணவேளை நெருங்கும்வரை பாவங்களில் நிலைத்திருந்து இறுதியில், “நான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நிராகரிப்பில் நிலைத்திருந்து இறந்துவிடுபவரின் பாவமன்னிப்புக் கோரிக்கையையும் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். மரணம்வரும்வரை பாவங்களில் நிலைத்திருப்பவர்கள், நிராகரித்த நிலையில் மரணிப்பவர்கள் ஆகியோருக்காக நாம் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளோம்.
(19) 4.19. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.
(20) 4.20. நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணக்க விரும்புவது உங்கள்மீது குற்றமாகாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையாக பெருஞ்செல்வத்தைக் கொடுத்திருந்தாலும் எதையும் அவர்களிடமிருந்து திரும்பப் பெறக்கூடாது. நீங்கள் கொடுத்ததை வாங்குவது பகிரங்கமான இட்டுக்கட்டாகவும் தெளிவான பாவமாகவும் கருதப்படுகிறது.
(21) 4.21. நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து இன்பம் அனுபவித்து ஒருவர் மற்றவரின் இரகசியங்களை அறிந்தபிறகு எவ்வாறு உங்களால் அளித்த மணக்கொடையை திரும்பப் பெற முடியும்? இதன்பிறகும் நீங்கள் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விரும்புவது பாவமான, அவலட்சனமான காரியமாகும். உங்களிடம் அவர்கள் மிக உறுதியான ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளார்கள். அது அல்லாஹ்வுடைய மார்க்கத்தின்படி அவர்களை ஆகுமாக்கிக் கொள்வதாகும்.
(22) 4.22. உங்களின் தந்தையர் மணமுடித்துக்கொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளாதீர்கள். அது தடுக்கப்பட்டதாகும். ஆயினும் அறியாமைக் காலத்தில் நடந்துமுடிந்தவற்றைத்தவிர. அதற்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு மணமுடித்துக் கொள்வது மானக்கேடான காரியமாகவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கக்கூடியதாகவும் தீய வழியாகவும் இருக்கின்றது.
(23) 4.23. உங்களின் தாய், அதற்கு மேலுள்ள தாயின்தாய், அவளது தந்தைவழி அல்லது தாய்வழிப் பாட்டி, உங்களின் மகள்கள், அதற்குக் கீழுள்ள பேத்திகள், மகனின் பெண்பிள்ளைகள் அதற்குக் கீழுள்ளவர்கள், கூடப்பிறந்த அல்லது தாய் அல்லது தந்தைவழிச் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தந்தைவழிச் சகோதரிகள், தாயின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தாய்வழிச் சகோதரிகள், சகோதர சகோதரிகளின் பெண்பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகள், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய்மார்கள், உங்களின் பால்குடிச் சகோதரிகள், நீங்கள் உறவுகொண்ட அல்லது உறவுகொள்ளாத உங்கள் மனைவியரின் தாய்மார்கள், உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்து பெரும்பாலும் உங்களுடன் வீட்டில் வளரும் பிள்ளைகள், உங்கள் மகன்களின் மனைவியர் ஆகியோரை மணமுடித்துக் கொள்வது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்த மகள்கள் உங்கள் வீட்டில் வளரவில்லையென்றாலும் இதுதான் சட்டமாகும். ஆனால் நீங்கள் அவர்களின் தாயான உங்கள் மனைவியோடு இன்னும் உடலுறவு கொள்ளவில்லையெனில் அந்தப் பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம். உங்கள் சொந்த மகன்களின் மனைவிமார்களை அவர்கள் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும் திருமணம் செய்வது உங்களுக்குத் தடையாகும். உங்களது பால்குடி மகன்களுக்கும் இதே சட்டமாகும். இரண்டு சகோதரிகளை சேர்த்து மணமுடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. பால்குடி சகோதரிகளுக்கும் இதே சட்டம்தான். அறியாமைக் காலத்தில் நடந்து முடிந்த இது போன்றவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அதேபோல் ஒரு பெண்ணையும் அவளது பெற்றோரின் சகோதரிகளில் ஒருவரையும் ஏககாலத்தில் மனைவியாக வைத்திருப்பது நபிவழியின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது,
(24) 4.24. திருமண உறவில் இருக்கும் பெண்களையும் மணமுடித்துக் கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆனால் போரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு நீங்கள் உரிமையாக்கிக் கொண்ட அடிமைப்பெண்கள் இதிலிருந்து விதிவிலக்காவார்கள். அவர்கள் கருத்தரிக்கவில்லை என்பதை ஒரு மாதவிடாயின் மூலம் உறுதிசெய்த பின் நீங்கள் அவர்களுடன் உறவுவைத்துக் கொள்ளலாம். மேற்கூறப்பட்டவை அனைத்தும் அல்லாஹ் உங்கள்மீது விதித்த சட்டங்களாகும். மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்ற பெண்களை நீங்கள் உங்கள் செல்வங்களின் மூலம் விபச்சாரத்தைத் தவிர்ந்து உங்களது கற்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். நீங்கள் மணமுடித்து அனுபவித்த பெண்களுக்கு அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கிய மணக்கொடையை அளித்துவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பேசி மணக்கொடையை கூட்டிக்கொள்வதிலோ குறைத்துக் கொள்வதிலோ உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் படைத்தவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களைக் குறித்து எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தனது நிர்வகித்தல் மற்றும் சட்டமியற்றுதல் போன்றவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
(25) 4.25. ஆண்களே! உங்களில் போதுமான செல்வத்தைப் பெறாததால் சுதந்திரமான பெண்களை மணமுடிக்க சக்திபெறாதவர் மற்றவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களில் இறைநம்பிக்கையுடையோராக நீங்கள் கருதுவோரை மணமுடித்துக் கொள்ளலாம். உங்களின் ஈமானின் உண்மை நிலையையும் உங்கள் நிலமைகளின் உள்ரங்கங்களையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன். நீங்களும் அவர்களும் மார்க்க அடிப்படையிலும் மனிதர்கள் என்ற அடிப்படையிலும் சமமானவர்களே. எனவே அவர்களைத் திருமணம் செய்வதை வெறுப்பாகக் கருத வேண்டியதில்லை. அவர்களுடைய உரிமையாளர்களின் அனுமதியோடு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையை குறைவின்றியும் தாமதப்படுத்தாமலும் அளித்து மணந்துகொள்ளுங்கள். அந்த அடிமைப் பெண்கள் வெளிப்படையாக விபச்சாரத்தில் ஈடுபடாத, மறைமுகமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கள்ளக்காதலர்களை ஏற்படுத்தாத கற்பொழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் திருமணமானபிறகு விபச்சாரத்தில் ஈடுபட்டால் சுதந்திரமான பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதியான ஐம்பது கசையடிகள் அடிக்கப்பட வேண்டும். அவர்கள் திருமணம் செய்த சுதந்திரமான பெண்களைப் போன்று கல்லெறிந்து கொல்லப்பட மாட்டார்கள். நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண்களை மணந்துகொள்ளலாம் என்ற அனுமதி தாம் விபச்சாரத்தில் விழுந்துவிடுவோம் என்ற அச்சத்துடன் சுதந்திரப் பெண்களைத் திருமணம் செய்வதற்கு வசதியற்றவர்களுக்கு மாத்திரமே. அடிமைப்பெண்களை மணமுடித்து அடிமைக் குழந்தைகளைப் பெறாதிருக்கும் பொருட்டு அவர்களை மணமுடிக்காமல் பொறுமையாக இருப்பதே உங்களுக்குச் சிறந்ததாகும். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களில் சுதந்திரமான பெண்களை மணக்க இயலாதவர்களுக்கு அடிமைப்பெண்களை மணக்க அனுமதித்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
(26) 4.26. அல்லாஹ் இந்த சட்டங்களை விதிப்பதன் மூலம் அவன் தன் மார்க்கத்தின் வரையறைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நலன்பயப்பவற்றையும் தெளிவுபடுத்த விரும்புகிறான்.மேலும் நீங்கள் முன்சென்ற தூதர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, அனுமதித்தல் தடைசெய்தல் என்பவற்றில் அவர்களது வழிமுறைகள், அவர்களது நற்பண்புகள், அவர்களது நன்நடத்தைகள் என்பவற்றின் பக்கம் உங்களுக்கு வழிகாட்ட விரும்புகிறான். நீங்கள் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படாமல் அவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அடியார்களுக்கு நன்மைதரும் விஷயங்களை அவன் நன்கறிந்தவன். அதற்கேற்பவே அவன் சட்டங்களை வழங்குகிறான். சட்டமியற்றுவதிலும் அடியார்களின் விவகாரங்களை நிர்வகிப்பதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
(27) 4.27. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். உங்கள் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட விரும்புகிறான். தங்களின் மனஇச்சைகளைப் பின்பற்றுபவர்கள், நீங்கள் நேர்த்தியான பாதையை விட்டும் மிகத்துரமாகிச் செல்வதையே விரும்புகிறார்கள்.
(28) 4.28. அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டங்களில் இலகுவை ஏற்படுத்த விரும்புகிறான். உங்களால் செய்யமுடியாதவற்றை அவன் உங்கள்மீது சுமத்தவில்லை. ஏனெனில் மனிதன் தனது தோற்றத்திலும் பண்புகளிலும் பலவீனமானவன் என்பதை அவன்அறிவான்.
(29) 4.29.அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளை அபகரித்தல், திருடுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற தவறான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆயினும் நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் அளிக்கும் வியாபாரப் பொருள்களைத்தவிர. அவற்றை உண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மற்றவரைக் கொலை செய்யாதீர்கள். தம்மைத் தாமே கொலை செய்து உங்களை அழிவில் போட்டுக்கொள்ளாதீர். அல்லாஹ் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களின் உயிர்களையும் செல்வங்களையும் மானங்களையும் கண்ணியப்படுத்தியதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
(30) 4.30. பிறரது செல்வத்தை உண்ணுதல், கொலை அல்லது அதுபோன்றவற்றின் மூலம் பிறர் மீது அத்துமீறுதல் ஆகிய நான் தடுத்தவற்றை தெரியாத்தனமாகவோ,மறதியாகவோயன்றி அறிந்துகொண்டும் வேண்டுமென்றும் யார் செய்கிறாரோ மறுமைநாளில் நான் அவனை நரகத்தில் புகுத்துவேன். அதன் வெப்பத்தையும் வேதனையையும் அவன் அனுபவிப்பான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. அவன் எல்லாவற்றின்மீதும் சக்தியுடையவன்.
(31) 4.31. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குதல், பெற்றோருக்கு மாறுசெய்தல், கொலை செய்தல், வட்டி வாங்குதல் போன்ற பெரும் பாவங்களை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொண்டால் நாம் உங்களின் சிறிய பாவங்களை பரிகாரம் வழங்கிஅழித்துவிடுவதன் மூலம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்க இடமான சுவனத்தில் நாம் உங்களை பிரவேசிக்கச் செய்வோம்.
(32) 4.32. நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலரை சிலரை விட அல்லாஹ் மேன்மையாக்கியுள்ள விஷயங்களில் ஆசைகொள்ளாதீர்கள். அது கோபத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தும். அல்லாஹ் ஆண்களுக்கு பிரத்யேகமாக வழங்கியுள்ள சிறப்புகளில் ஆசைகொள்வது பெண்களுக்கு உகந்ததல்ல. ஒவ்வொரு சாராருக்கும் கூலியில் அவரவருக்குப் பொருத்தமான பங்குண்டு. தனது அருட்கொடையிலிருந்து அதிகரித்து வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.எனவேதான் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதை அவன் வழங்கியுள்ளான்.
(33) 4.33. உங்களில் ஒவ்வொருவருக்கும் தாய்தந்தையர், உறவினர் விட்டுச்சென்ற சொத்தில் பங்குகளைப் பெறும் அனந்தரக்காரர்களை ஆக்கியுள்ளோம். யாருடன் நீங்கள் உறுதிமிக்க சத்தியங்கள் ஊடாக உதவி மற்றும் கூட்டிணைப்பு என்பவற்றுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களின் அனந்தரப் பங்கினையும் அவர்களுக்கு அளித்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களது இந்த சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் அவன் கவனித்துக்கொண்டே இருக்கிறான். கூட்டினையப்பின் காரணமாக அனந்தரச் சொத்து பெறுவது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் அது ரத்துச்செய்யப்பட்டுவிட்டது.
(34) 4.34. அல்லாஹ் ஆண்களுக்கு வழங்கியுள்ள பிரத்யேக சிறப்புகள் காரணமாகவும், பெண்களுக்கு செலவளித்து அவர்களது காரியங்களைக் கவனிப்பது அவர்கள் மீதே கடமை என்பதனாலும் ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்களாவர். நல்ல பெண்கள் தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவார்கள். தங்களின் கணவனின் சொல்படியும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அல்லாஹ்வின் உதவியினால் தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள். கணவர்களே! சொல்லிலோ செயலிலோ தமது கணவனுக்குக் கட்டுப்படமாட்டாள் என்று நீங்கள் அஞ்சும் பெண்களுக்கு முதலில் உபதேசம் செய்து அல்லாஹ்வைக் கொண்டு அச்சமூட்டுங்கள். அவர்கள் அதற்குப் பதிலளிக்கவில்லையெனில் படுக்கையில் அவர்களை ஒதுக்கி நடந்துகொள்ளுங்கள். அவளுடன் உடலுறவில் ஈடுபடாது திரும்பிப் படுத்துக்கொள்ளவும். அவர்கள் அதற்கும் பதிலளிக்கவில்லையெனில் அவர்களை காயமேற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் அநீதியாகவோ கண்டிப்பதன் மூலமோ அவர்கள் மீது வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் விட மிக உயர்ந்தவன், தனது உள்ளமையிலும் பண்புகளிலும் மிகப் பெரியவன். எனவே அவனையே அஞ்சுங்கள்.
(35) 4.35. தம்பதியினரின் பொறுப்பாளர்களே! கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு பகைமைக்கு இட்டுச்செல்லும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் மனைவியின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் நடுவர்களாக நியமனம் செய்யுங்கள். இருவரும் சேர்ந்துவாழ்வது சிறந்ததா அல்லது பிரிந்துவிடுவதா? என அந்த நடுவர்கள் முடிவுசெய்யட்டும். சேர்ந்து வாழ்வதே விருப்பத்திற்குரியதும் சிறந்ததுமாகும். நடுவர்கள், அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதை விரும்பி அதற்குரிய சிறந்த வழிமுறையையும் கடைபிடித்தால் அல்லாஹ் அந்த கணவன் மனைவிக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்திவிடுவான். அவ்விருவருக்கும் மத்தியிலுள்ள கருத்து வேறுபாடு நீங்கிவிடும். தன் அடியார்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நுணுக்கமானவற்றையும் அவன் நன்கறிந்தவன்.
(36) 4.36. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். தாய்தந்தையரை கௌரவித்து, பணிவிடை செய்து நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். உறவினர்கள், ஏழைகள், அநாதைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் தோழர், பிரயாணத்தின் இடைநடுவில் அநாதரவாகிவிட்ட வழிப்போக்கன், உங்களின் அடிமைகள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். தற்பெருமை மிக்கவனையும், தனது அடியார்களுடன் அகங்காரத்துடன் நடந்துகொள்பவனையும், மக்களிடம் பெருமையடிப்பதற்காக தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(37) 4.37. அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றில் அவன் கடமையாக்கியதைச் செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர்கள், தமது சொல்லாலும் செயலாலும் பிற மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டுபவர்கள், அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தையும், அறிவையும் இன்னபிற விஷயங்களையும் மறைப்பவர்கள், மக்களிடம் சத்தியத்தை வெளிப்படுத்தாமல் அதனை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்துவோர் ஆகியோரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. இவைகள் நிராகரிப்பின் தன்மைகளாகும். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நாம் இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
(38) 4.38. அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் மக்களுக்குக் காட்ட வேண்டும், அவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்களுக்கு நாம் இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம். ஷைத்தானை அவர்கள் பின்பற்றியதனால்தான் வழிதவறினார்கள். ஷைத்தான் யாருக்கு உற்ற தோழனாக இருப்பானோ அவனே கெட்ட தோழமையுடையவனாவான்.
(39) 4.39. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் அவனுக்காகவே செலவழித்தால் அவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? மாறாக அதில்தான் அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் அடங்கியுள்ளன. அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களது நிலமை அவனைவிட்டு மறைவானதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரது செயலுக்கேற்ற கூலியை அவன் வழங்குவான்.
(40) 4.40. அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவன். தன் அடியார்களில் யார்மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அவர்களின் நன்மைகளில் அணுவளவுகூட குறைத்துவிடவோ தீமைகளில் எதையும் அதிகரித்துவிடவோ மாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் தனது அருளினால் அதனை பன்மடங்காக்கித் தருவான். அத்துடன் தன் புறத்திலிருந்து பெரும் கூலியையும் வழங்கிடுவான்.
(41) 4.41. மறுமைநாளில் நாம் ஒவ்வொரு தூதரையும் அவரவர் சமூகம் செய்தவற்றுக்குச் சாட்சியாகவும் உம்மை உமது சமூகத்துக்கு சாட்சியாளராகவும்கொண்டுவரும் போது நிலைமை என்னவாகும்?
(42) 4.42. அந்த மகத்தான நாளில் அல்லாஹ்வை நிராகரித்து தூதருக்கு மாறுசெய்தவர்கள் தாங்கள் மண்ணோடு மண்ணாக பூமியோடு சங்கமமாகி விடக்கூடாதா என்று ஏங்குவார்கள். அவர்கள் செய்த எதனையும் அல்லாஹ்வைவிட்டும் அவர்களால் மறைக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ் அவர்களின் நாவுகளுக்கு முத்திரையிட்டுவிடுவான். எனவே அவற்றால் பேச முடியாது. உறுப்புகளுக்கு பேசவதற்கு அனுமதியளிப்பான். எனவே அவை அவர்களுக்கெதிராக அவர்களது செயல்களைப் பற்றி சாட்சிகூறும்.
(43) 4.43. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது போதைதெளியும்வரை, நீங்கள் கூறுவதை அறிந்துகொள்ளும்வரை தொழாதீர்கள். இது மது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் உள்ள நிலை. நீங்கள் குளிப்பு அவசியமான நிலையில் இருக்கும்போது குளிக்கும் வரை தொழவோ, தரிக்காமல் கடந்துசெல்வதற்காகவே தவிர பள்ளிவாயில்களில் நுழையவோ வேண்டாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லையெனில் அல்லது நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் மலஜலம் கழித்துவிட்டுவந்தால் அல்லது உங்கள் மனைவியுன் உடலுறவு கொண்டால் அப்போது நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையெனில் தூய்மையான மண்ணை எடுத்து, அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள். நிச்சயாக அல்லாஹ் உங்களின் குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
(44) 4.44. தூதரே! அல்லாஹ் தவ்ராத்திலிருந்து கொஞ்சம் அறிவைக் கொடுத்த யூதர்களைப் பற்றி உமக்குத் தெரியாதா? அவர்கள் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள். நம்பிக்கையாளர்களே! அவர்களின் கோணல்மிக்க வழியில் நீங்களும் செல்ல வேண்டும் என்பதற்காக, தூதர் கொண்டுவந்த நேரான பாதையைவிட்டும் உங்களை வழிகெடுக்க ஆசை கொண்டுள்ளார்கள்.
(45) 4.45. நம்பிக்கையாளர்களே! உங்கள் எதிரிகளை உங்களைவிட அல்லாஹ் நன்கறிவான். அதனால்தான் அவன் அவர்களைக் குறித்து உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். அவர்களின் பகைமையை வெளிப்படுத்திவிட்டான். அவர்களின் தாக்குதலிலிருந்து உங்களைக் காக்கும் பாதுகாவலனாக இருப்பதற்கும் அவர்களின் சூழ்ச்சியையும் நோவினையையும் உங்களைவிட்டும் தடுத்து அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவிசெய்வதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.
(46) 4.46. அல்லாஹ் இறக்கிய அவனது வார்த்தையை மாற்றுபவர்களும் யூதர்களில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் இறக்கியதற்கு மாறாக விளக்கமளிக்கிறார்கள். தூதர் ஏதேனும் விஷயத்தைக் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிட்டால், “உமது பேச்சை கேட்டுக் கொண்டோம். ஆனால் உமக்குக் கீழ்ப்படிய மாட்டோம். நாங்கள் சொல்வதைக் கேட்பீராக. உமது பேச்சு கேட்கப்படாது“ என்று கூறி பரிகாசம் செய்கிறார்கள். அவர்கள் எங்களது பேச்சை செவிமடுப்பீராக என்ற கருத்தையுடைய ‘ராயினா’ என்ற வார்த்தையைக் கூறுவது போன்று பாசாங்குசெய்து அதன் மூலம் தூதருக்கு சாபமிட நாடுகிறார்கள். மார்க்கத்தில் குறைகாண நாடுகிறார்கள். இவற்றுக்குப் பதிலாக அவர்கள், “நாங்கள் உமது பேச்சை செவியுற்றோம். நீர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டோம், நீர் கேட்பீராக” என்றும் ‘ராயினா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இன்தளிர்னா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்காக காத்திருங்கள்’ என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கும்.ஏனெனில் அதுவே நபியவர்களுடன் அவர்களது தகுதிக்குப் பொருத்தமான அழகிய நடத்தையாகும். ஆயினும் அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். அவர்களின் நிராகரிப்பினால் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
(47) 4.47. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! நாம் உங்கள் முகங்களில் உள்ள புலன்களை நீக்கி அவற்றை உங்கள் பின்புறத்தில் வைப்பதற்கு முன்னர் அல்லது தடுக்கப்பட்ட சனிக்கிழமையில் தடையையும் மீறி மீன்பிடித்தவர்களைக் குரங்குகளாக உருமாற்றி என் அருளிலிருந்து தூரமாக்கியது போன்று உங்களையும் என் அருளிலிருந்து தூரமாக்குவதற்கு முன்னர் நாம் முஹம்மது மீது இறக்கியவற்றின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ள தவ்ராத்தையும் இன்ஜீலையும் உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளையும் விதியும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.
(48) 4.48. நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளில் எந்த ஒன்றும் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இணைவைப்பு நிராகரிப்பு ஆகியவற்றைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடுகிறான் அல்லது தனது நீதிக்கு ஏற்ப தான் நாடியவர்களை - அவர்கள் செய்த பாவங்களின் அளவு - தண்டித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவர்கள் பெரும் பாவத்தையே கற்பனை செய்துள்ளனர். அதே நிலையிலேயே மரணித்துவிடுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
(49) 4.49. தூதரே! தங்களையும் தங்களின் செயல்களையும் பரிசுத்தப்படுத்தும் விதத்தில் புகழ்ந்து கொள்கிறார்களே அவர்களை உமக்குத் தெரியுமா? மாறாக அல்லாஹ் மட்டுமே தன் அடியார்களில் தான் நாடியவர்களைப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துபவன். ஏனெனில் அவன்தான் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்தவன். அவர்கள் செய்த நன்மை பேரீச்சம் விதையில் இருக்கும் நூலளவு இருந்தாலும் அதுவும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது.
(50) 4.50. தூதரே! அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து எவ்வாறு அல்லாஹ்வின்மீது அபாண்டமாகப் பொய் கூறுகிறார்கள் என்பதைப் பாரும். இதுவே அவர்களது வழிகேட்டைத் தௌிவுபடுத்தும் பாவத்துக்குப் போதுமானதாகும்.
(51) 4.51. தூதரே! அல்லாஹ்வால் கொஞ்சம் அறிவுவழங்கப்பட்ட யூதர்களைக் குறித்து உமக்குத் தெரியாதா? அவர்களின் நிலை உமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லையா? அவர்கள் அல்லாஹ்வைத் தவிர அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நம்புகிறார்கள். இன்னும் அவர்கள் இணைவைப்பாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, “முஹம்மதின் தோழர்களைவிட நீங்கள்தாம் நேரான வழியில் உள்ளீர்கள்.” எனவும் கூறுகிறார்கள்.
(52) 4.52. இது போன்ற கெட்ட கொள்கையுடையவர்களையே அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கியுள்ளான். யாரை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுவானோ அவருக்கு உதவிசெய்யக்கூடிய எந்தவொரு உதவியாளரையும் பெற்றுக்கொள்ள முடியாது.
(53) 4.53. அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து எதையும் அவர்கள் மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அது பேரீச்சங்கொட்டையின் மேற்புறம் இருக்கும் ஒரு புள்ளியின் அளவாக இருந்தாலும் சரியே.
(54) 4.54. மாறாக அவர்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் அல்லாஹ் வழங்கிய தூதுத்துவம், ஈமான், ஆட்சியதிகாரம் ஆகியவற்றின்மீது பொறாமைகொள்கிறார்கள். அவர்கள் ஏன் பொறாமை கொள்கிறார்கள்? நாம் முன்னரே இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் வேதம் அல்லாத வேறு செய்திகளையும் வழங்கியுள்ளோம்! நாம் அவர்களுக்கு மக்களின்மீது விசாலமான ஆட்சியையும் வழங்கியுள்ளோம்!
(55) 4.55. இப்ராஹீமின் மீதும் அவருடைய வழித்தோன்றல்களில் வந்த தூதர்களின் மீதும் அல்லாஹ் இறக்கியருளியவைகளை நம்பிக்கைகொள்பவர்களும் வேதக்காரர்களில் இருக்கிறார்கள். அதனை நம்பிக்கைகொள்ளாது புறக்கணிப்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கைகொள்வதிலிருந்தும் மக்களைத் தடுத்துவிடுகிறார்கள். இதுதான் முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டவை குறித்தும் அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அவர்களில் நிராகரிப்பவர்களுக்கு நரகமே தக்க தண்டனையாகும்.
(56) 4.56. நம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்களை மறுமைநாளில் நாம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நரகத்தில் நுழைவித்துவிடுவோம். அது அவர்களின் தோல்களை எரித்துவிடும்போதெல்லாம் அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக நாம் வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் திட்டமிடுவதிலும் தீர்ப்பு செய்பவற்றிலும், ஞானம்மிக்கவன்.
(57) 4.57. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் பின்பற்றி நற்செயல்கள் புரிந்தவர்களை மறுமைநாளில் நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்த சுவனங்களில் அவர்களுக்கு எல்லாவித அசுத்தங்களிலிருந்தும் தூய்மையான மனைவியரும் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற அடர்த்தியான நீண்ட நிழல்களில் நாம் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
(58) 4.58. நம்பிக்கையாளர்களே! உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். நீங்கள் மக்களிடையே அவர்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கினால் அநீதி இழைக்காது மார்க்கம் தெளிவுபடுத்திய முறையில் நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஞாபகமூட்டுவதும் அனைத்து நிலமைகளிலும் உங்களுக்கு வழிகாட்டுவதும் சிறந்தவையே. அவன் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவன்.
(59) 4.59. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் - அவர்கள் பாவமான விஷயங்களை ஏவாதவரை - கட்டுப்படுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் அவனுடைய தூதரின் வழிமுறையின் பக்கமும் திரும்புங்கள். நீங்கள் கருத்து வேறுபாட்டில் தொடர்ந்திருப்பது, சொந்தக் கருத்தைக் கூறுவது ஆகியவற்றை விட குர்ஆனின் பக்கமும் சுன்னாவின் பக்கமும் திரும்புவதே சிறந்ததாகும். அதுவே உங்களுக்கு சிறந்த முடிவையும் தரக்கூடியதாகும்.
(60) 4.60. தூதரே! “உம்மீது இறக்கப்பட்டதன் மீதும் உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம்” என்று பொய்யாக வாதிடும் யூதர்களிலுள்ள நயவஞ்சகர்களது முரண்பாட்டை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வு தேடுகிறார்கள். அவற்றை நிராகரிக்கும்படியே அவர்கள் ஏவப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்தியத்தை அடையமுடியாத அளவு ஷைத்தான் அவர்களை அதனை விட்டும் வெகுதூரமாக்க விரும்புகிறான்.
(61) 4.61. தூதரே! இந்த நயவஞ்சகர்களிடம், “உங்களிடையேயுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்திலுள்ள தீர்ப்பின் பக்கமும், உங்களது பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதற்காக தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால் உம்மைப் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தீர்வுதேடி மற்றவர்களிடம் செல்வதை நீர் காண்பீர்.
(62) 4.62. தூதரே! அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டு, “நாங்கள் உங்களைவிட்டுவிட்டு மற்றவர்களிடம் சென்றது எங்களிடையே நன்மையும் இணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” எனஅல்லாஹ்வின் பெயரைக்கொண்டு சத்தியம் செய்து சாக்குப்போக்குக் கூறியவர்களாக உம்மிடம் வரும்போழுது அந்த நயவஞ்சகர்களின் நிலை எவ்வாறிருக்கும்?! அவர்கள் அந்த வாதத்தில் பொய்யர்களே. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதில்தான் நன்மை அடங்கியுள்ளது.
(63) 4.63. இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் நயவஞ்சகத்தையும் கெட்ட எண்ணத்தையும் அல்லாஹ் நன்கறிவான். தூதரே! அவர்களைப் புறக்கணித்து விட்டு விடுவீராக. அவர்களுக்கு ஆர்வமூட்டியவாறும் எச்சரிக்கை செய்தவாறும் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெளிவுபடுத்துவீராக. அவர்களின் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்து உணர்வூட்டும் வார்த்தையைக் கூறுவீராக.
(64) 4.64. நாம் தூதர்களை அனுப்பியதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனின் ஏற்பாட்டையும் கொண்டு அவர் கட்டளையிடும் விஷயங்களில் மக்கள் அவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்த சமயத்தில் - நீர் உயிரோடு இருக்கும்போது - உம்மிடம் வந்து தாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு கைசேதப்பட்டு திருந்தியவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால், நீரும் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினால் அவர்கள் அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் கண்டிருப்பார்கள்.
(65) 4.65. ஆனால் உண்மையில் விடயம் நயவஞ்சகர்கள் கூறுவது போலல்ல. பின்னர் அல்லாஹ் தன்மீதே சத்தியமிட்டுக் கூறுகிறான், “அவர்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூதர் உயிரோடு இருக்கும்போது அவரிடமும் அவர் இறந்தபிறகு மார்க்க சட்டங்களிடமும் தீர்வு தேடி, அந்த தீர்வில் சந்தேகம்கொள்ளாமல் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படும்வரை உண்மையான நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.”
(66) 4.66,67,68. “நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
(67) 4.66,67,68.“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
(68) 4.66,67,68.“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
(69) 4.69. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டவர், இறைதூதர்கள், தூதர்கள் கொண்டுவந்ததை முழுமையாக உண்மைப்படுத்தி, அதன்படி செயல்பட்ட உண்மையாளர்கள், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகள், வெளிரங்கமும் அந்தரங்கமும் சீர்பெற்று நல்லமல்களுடைய நல்லவர்கள் ஆகிய அல்லாஹ்வின் அருளைப்பெற்றோருடன் சுவனத்தில் இருப்பார். சுவனத்தில் உள்ள இந்தத் தோழர்கள் எத்துணை சிறப்பானவர்கள்!.
(70) 4.70. மேற்கூறப்பட்ட இந்த நன்மைகள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கும் கிருபையாகும். அவர்களின் நிலைமைகளை அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
(71) 4.71. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் போரிடுவதற்கு ஒரு படையின் பின் ஒரு படையாகவோ அனைவரும் ஒன்றுசேர்ந்தோ புறப்படுங்கள். இவையனைத்தும் உங்களின் நலன்களின் அடிப்படையிலும், எதிரிகளுக்கு சேதமும் தோல்வியும் ஏற்படும் விதத்திலும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டியதாகும்.
(72) 4.72. முஸ்லிம்களே! உங்களில் தமது கோழைத்தனத்தால் எதிரிகளுடன் போரிடச் செல்லாமல் பின்தங்கக்கூடியவர்களும் ஏனையோரை பின்வாங்கச் செய்வோரும் இருக்கின்றார்கள். அவர்கள் நயவஞ்சகர்களும் பலவீனமான ஈமானுடையவர்களும் ஆவர். உங்களுக்கு உயிரிழப்போ தோல்வியோ ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் தான் தப்பியதை நினைத்து மகிழ்வடைந்து, “அல்லாஹ் என் மீது அருள்புரிந்ததனால் அவர்களுடன் சேர்ந்து போருக்கு நான் புறப்படவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட்டிருக்கும்” என்று கூறுகின்றார்.
(73) 4.73. முஸ்லிம்களே! வெற்றி, போர்ச் செல்வம் போன்ற அல்லாஹ்வின் உதவி உங்களுக்குக் கிடைத்தால் போரைவிட்டுப் பின்தங்கியவன் உங்களுக்கும் அவனுக்கும் எந்த நட்போ தோழமையோ இல்லாததுபோல, “நான் அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்திருக்கக்கூடாதா! அவர்களைப்போன்று பெரும் வெற்றியைப் பெற்றிருப்பேனே!” என்று கூறுவான்.
(74) 4.74. மறுமைக்குப் பகரமாக இவ்வுலக வாழ்க்கையை விற்ற உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போர் புரியட்டும். அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போரிட்டு கொல்லப்படுபவர் அல்லது எதிரியை வீழ்த்தி வெற்றி பெறுபவருக்கு அல்லாஹ் பெரும் நன்மையை வழங்குவான். அது சுவனமும் அவனது திருப்தியுமாகும்.
(75) 4.75. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகவும் அவனுடைய பாதையில் போர் புரிவதை விட்டும் உங்களை தடுப்பது யாது? அந்தப் பலவீனமானவர்கள், “மக்காவிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. அங்கு வசிக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அவனுடைய அடியார்களின்மீது வரம்பு மீறும் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். எங்களைப் பராமரித்துப் பாதுகாக்கக்கூடியவரையும், எங்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளரையும் உன் புறத்திலிருந்து ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
(76) 4.76. உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் தமது தெய்வங்களின் பாதையில் போரிடுவார்கள். நீங்கள் ஷைத்தானின் உதவியாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள். அவ்வாறு அவர்களுடன் நீங்கள் போரிட்டால் வெற்றி பெறுவீர்கள். ஏனெனில் ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானது. அது அல்லாஹ்வையோ சார்ந்திருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
(77) 4.77. தூதரே! உம்மிடம், “எங்கள்மீது போர் கடமையாக்கப்படக்கூடாதா” என்று கேட்ட உமது சில தோழர்களைக் குறித்து உமக்குத் தெரியுமா? அவர்களிடம் கூறப்பட்டது: “போர் புரியாமல் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஸகாத்தை வழங்கி வாருங்கள்.” இது போர் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ள நிலமையாகும். அதன் பின் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்து இஸ்லாத்திற்கு பலம் கிடைத்தவுடன், போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலருக்கு அது சிரமமாகத் தோன்றியது. அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதுபோன்று அல்லது அதைவிட அதிகமாக மக்களுக்கு அஞ்சுவோராக மாறிவிட்டனர். அவர்கள் கூறினார்கள், எங்கள் இறைவா! எங்கள்மீது ஏன் போரைக் கடமையாக்கினாய்? நாங்கள் இவ்வுலகில் அனுபவிக்கும்வரை இன்னும் சிறிதுகாலம் அதனைத் தாமதப்படுத்தியிருக்கக்கூடாதா?” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: எவ்வளவுதான் இவ்வுலக இன்பங்கள் இருந்தாலும் அவைகள் அழியக்கூடிய அற்ப இன்பங்களேயாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நிலையான இன்பங்களே சிறந்ததாகும். உங்களின் நன்மைகளில் எதுவும் குறைக்கப்படாது. அது பேரீச்சங்கொட்டையின் நூலளவாக இருந்தாலும் சரியே.”
(78) 4.78. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கான தவணை வந்துவிட்டால் மரணம் உங்களை அடைந்தே தீரும், நீங்கள் போர்க்களத்தைவிட்டு வெகுதூரமாக பாதுகாப்பான கோட்டையில் இருந்தாலும் சரியே. இந்த நயவஞ்சகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகமான வாழ்வாதாரமும் குழந்தைகளும் வழங்கப்பட்டால், “இவை அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் குழந்தைகளிலோ வாழ்வாதாரத்திலோ துன்பம் ஏற்பட்டுவிட்டால், நபியவர்களினால்தான் இந்த துரதிஷ்டம் ஏற்பட்டது எனக்கருதி “இந்த தீமைகள் உம்மால் ஏற்பட்டதுதான்” என்று கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “இன்பங்களும் துன்பங்களும் அல்லாஹ் ஏற்படுத்திய விதிகள்தாம். அனைத்தும் அவனிடமிருந்தே ஏற்பட்டது.” இவ்வாறு பேசும் இந்த மக்களுக்கு ஏன் நீர் கூறும் எதுவும் புரிவதாகத் தெரியவில்லை?.
(79) 4.79. ஆதமுடைய மகனே! உனக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள், குழந்தைகள் போன்ற இன்பங்கள் அல்லாஹ்விடமிருந்தே உனக்குக் கிடைப்பவையாகும். அது அல்லாஹ் உன்மீது பொழியும் அருளாகும். அவற்றில் உனக்கு வரக்கூடிய துன்பங்கள் நீ செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவேயாகும். தூதரே! மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியை எடுத்துரைக்கும் தூதராக நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அல்லாஹ்விடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நீர் உண்மையாளரே என்பதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன். அவன் உமக்கு அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் வழங்கியுள்ளான்.
(80) 4.80. யார் தூதர் கூறியவற்றைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவராவார். தூதரே! யார் உமக்குக் கட்டுப்பட மறுக்கிறாரோ அவருக்காக நீர் கவலைப்படவேண்டாம். ஏனெனில் அவரது செயல்களைப் பாதுகாக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. மாறாக நாம்தாம் அவரது செயலை எண்ணுகிறோம், கணக்கிடுகிறாம்.
(81) 4.81. இந்த நயவஞ்சகர்கள் தங்களின் நாவால், “நாங்கள் உமது கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம், அதனைச் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் உம்மைவிட்டுச் சென்றவுடன் அவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கூறியதற்கு மாறாக மறைவில் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதை அல்லாஹ் அறிகிறான். அவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு அவன் தண்டனை வழங்குவான். அவர்களின் பக்கம் கவனம் செலுத்தாதீர். அவர்கள் உமக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது. உமது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பீராக. அவனையே நம்பி இருப்பீராக. நீர் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(82) 4.82. இவர்கள் ஏன் அல்குர்ஆனை சிந்திக்காமலும் படிக்காமலும் இருக்கின்றனர்? அவ்வாறு சிந்தித்திருந்தால் அல்குர்ஆனில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது அவர்களுக்கு நிரூபனமாவதோடு, நீர் கொண்டுவந்தவை உண்மையே என்பதையும் புரிந்திருப்பர். இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதன் சட்டங்களில் தடுமாற்றத்தையும் கருத்துக்களில் ஏராளமான முரண்பாடுகளையும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
(83) 4.83. முஸ்லிம்களின் அமைதி, மகிழ்ச்சி அல்லது அச்சம், கவலை சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தி இந்த நயவஞ்சகர்களிடம் வந்தால் அதனைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்லது முஸ்லிம்களின் விவகாரங்களை நிர்ணயிக்கும் பொறுப்புதாரர்கள், அறிவுடையவர்கள், விசுவாசமானவர்களிடம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தால் ஆராய்ந்தறிவோர் அச்செய்தியை இரகசியமாக வைப்பதா வெளியிடுவதா என்பதை முடிவுசெய்திருப்பார்கள். இறைநம்பிக்கையாளர்களே! இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளும் அல்குர்ஆனின் மூலம் அவனது கருணையும் உங்களுக்குக் கிடைத்து இந்த நயவஞ்சகர்களை சோதித்ததை விட்டும் அவன் உங்களைப் பாதுகாத்திருக்காவிட்டால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களைப் பின்பற்றியிருப்பீர்கள்.
(84) 4.84. தூதரே! அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போர் புரிவீராக. மற்றவர்களைக் குறித்து நீர் விசாரிக்கப்பட மாட்டீர். அது உங்களுக்கு அவசியமுமற்றது. ஏனெனில் உம்மை மட்டுமே நீர் போரில் ஈடுபடுத்த முடியும். நம்பிக்கையாளர்களுக்கு போர் புரிய ஆர்வமூட்டுவீராக. அல்லாஹ் உங்களின் போராட்டத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் பலத்தை தடுத்துவிடலாம். அவன்தான் அதிக வல்லமைமிக்கவனாகவும் கடுந்தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
(85) 4.85. பிறருக்கு நன்மை ஏற்படுவதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அதன் நன்மையில் பங்கு உண்டு. பிறருக்கு தீங்கு செய்வதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டு. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நன்மை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. தீமை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
(86) 86- உங்களுக்கு யாராவது ஸலாம் கூறினால் அவர் கூறியதை விட சிறந்த முறையில் அவருக்குப் பதிலளியுங்கள். அல்லது அவர் கூறியது போன்றாவது பதிலளியுங்கள். அதனை விடச் சிறந்த முறையில் பதிலளிப்பதே ஏற்றமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பாதுகாப்பவனாகவே இருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
(87) 4.87. உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் உங்களில் முதலாமவர், இறுதியானவர் என அனைவரையும் நீங்கள் செய்த செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக எவ்வித சந்தேகமுமற்ற மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவன் வேறுயாரும் இல்லை.
(88) 4.88. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரு பிரிவினராகி விட்டீர்களே? உங்களில் ஒரு பிரிவினர் அந்த நயவஞ்சகர்கள் நிராகரித்துவிட்டதால் அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் அவர்கள் ஈமான் கொண்டுள்ளதால் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் விவகாரங்களில் கருத்துவேறுபாடு கொள்வது உங்களுக்கு உகந்ததல்ல. அவர்களின் செயல்களினால் அல்லாஹ் அவர்களை நிராகரிப்பின் பக்கமும் வழிகேட்டின் பக்கமும் திருப்பிவிட்டான். அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நேர்வழிகாட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழிகாட்ட முடியாது.
(89) 4.89. நயவஞ்சகர்கள் நிராகரித்ததுபோல நீங்கள் உங்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்து நீங்களும் அவர்களும் நிராகரிப்பில் சமமாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் இணைவைப்பு நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு புலம்பெயரும்வரை அவர்களை அவர்களின் விரோதத்தினால் நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் இதனைப் புறக்கணித்து தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நீடித்தால் அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர்களாகவோ உங்களின் எதிரிகளுக்கு எதிராக உதவும் உதவியாளர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள்.
(90) 4.90. ஆயினும் நீங்கள் யாருடன் போர் நிறுத்தத்திற்கான உறுதியான ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களைத்தவிர. அல்லது மனநெருக்கடியால் உங்களுடனோ தங்கள் கூட்டத்துடனோ போரிட விரும்பாமல் உங்களிடம் வந்தவர்களைதவிர. அல்லாஹ் நாடினால் அவர்களை உங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வைத்திருப்பான். அவர்கள் உங்களுடன் போரிட்டிருப்பார்கள். அல்லாஹ் வழங்கிய ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களைக் கொலைசெய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ வேண்டாம். அவர்கள் உங்களைவிட்டும் ஒதுங்கி உங்களுக்கு எதிராகப் போரிடாமல், சமாதானம் கோரியோராக உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களைக் கொலை செய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ அல்லாஹ் உங்களுக்கு எந்த வழியையும் ஏற்படுத்தவில்லை.
(91) 4.91. நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக உங்களிடம் ஈமானை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் சமூகத்தவரிடம் தப்பித்துக்கொள்வதற்காக அவர்களிடம் செல்லும்போது நிராகரிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும், அவனுக்கு இணைகற்பிப்பதன் பக்கமும் அழைக்கப்பட்டால் உடனே பதிலளித்துவிடுகிறார்கள். இவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடாமல் விலகவில்லை; சமாதானம் கோரி உங்களிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லை; உங்களை விட்டும் தங்கள் கைகளைத் தடுத்துக்கொள்ளவில்லை. எனவே இவர்களைக் கண்ட இடத்தில் பிடித்துக் கொலை செய்யுங்கள். இப்படிப்பட்ட பண்புடையவர்களை அவர்களின் துரோகம், சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக நீங்கள் பிடித்துக் கொலை செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை நாம் வழங்கிவிட்டோம்.
(92) 4.92. தவறுதலாகவேயன்றி ஒரு நம்பிக்கையாளனைக் கொல்வது நம்பிக்கையாளனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் ஒருவர் தவறுதலாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்துவிட்டால் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்யட்டும். கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையையும் கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். ஆயினும் கொல்லப்பட்டவரின் வாரிசுகள் இழப்பீட்டுத் தொகையைத் தள்ளுபடி செய்துவிட்டாலே தவிர. கொல்லப்பட்டவர் உங்களுடன் போர் புரியும் சமூகத்தைச் சார்ந்த நம்பிக்கையாளராக இருந்தால் கொன்றவர் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு அடிமையை விடுதலை செய்யட்டும். இழப்பீட்டுத் தொகை அவர்மீது கடமையில்லை. கொல்லப்பட்டவர் நம்பிக்கையாளராக அல்லாமல் உங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையை கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். கொலை செய்தவர் தனது செயலுக்கு பிராயசித்தமாக நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையையும் விடுதலை செய்துவிட வேண்டும். அவருக்கு உரிமைவிடத்தக்க அடிமை கிடைக்காவிடின் அல்லது அதற்கான பெறுமதியை வழங்குவதற்கு சக்தியில்லையெனில் அவர் செய்த காரியத்தை அல்லாஹ் மன்னிக்கும்பொருட்டு இரண்டு மாதங்கள் இடைவிடாமல் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவன் சட்டமியற்றுவதிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன்.
(93) 4.93. வேண்டுமென்றே அநியாயமாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்பவர் அதனை அனுமதியாகக் கருதினால் அல்லது அச்செயலுக்கு பாவமன்னிப்புக் கோராவிட்டால் அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். அல்லாஹ் அவர் மீது கோபம்கொள்வான். தன் அருளிலிருந்து அவரைத் தூரமாக்குவான். அவர் பெரும் பாவத்தை சம்பாதித்ததன் காரணமாக அவருக்கு அவன் கடுமையான வேதனையைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
(94) 4.94. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்காகப் புறப்பட்டால் நீங்கள் எதிர்த்துப் போரிடுவோர் விடயத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவரைப் பார்த்து, “நீ நம்பிக்கையாளன் அல்ல. உயிர், பொருளின் மீதுள்ள பயத்தினால்தான் இஸ்லாத்தை வெளிப்படுத்துகிறாய்” என்று கூறி, இவ்வுலகின் அற்ப ஆதாயமான போர்ச் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொலை செய்துவிடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன. அவை இவற்றைவிடச் சிறந்ததாகும். இதற்கு முன்னர் நீங்களும் தனது கூட்டத்தை விட்டும் தனது ஈமானை மறைக்கும் இவரைப் போன்றுதான் இருந்தீர்கள். அல்லாஹ் இஸ்லாத்தை வழங்கி உங்கள்மீது கிருபை செய்து உங்களது உயிர்களைப் பாதுகாத்தான். எனவே நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் எவ்வளவு சிறிய செயலும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(95) 4.95. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யாமல் பின்தங்கிய நம்பிக்கையாளர்களும் - நோய், பார்வையின்மை போன்ற காரணங்களால் பின்தங்கியவர்களைத்தவிர - அவனுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாதுசெய்தவர்களும் சமமாக மாட்டார்கள். போரைவிட்டு பின்தங்கியிருப்பவர்களைவிட தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்பவர்களை அந்தஸ்தில் அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முஜாஹிதுகள்,தகுந்த காரணத்தினால் பின்தங்குபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் அவர்களுக்குத் தகுந்த கூலியை வைத்துள்ளான்.பின்தங்குபவர்களை விட முஜாஹிதுகளுக்கு அல்லாஹ் பெரும் நன்மைகளை வழங்கி சிறப்பித்துள்ளான்.
(96) 4.96. இந்த நன்மை, அல்லாஹ்வின் பாவமன்னிப்பு, கருணை என்பற்றுடன் கூடிய ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த அந்தஸ்துக்களாகும். அல்லாஹ் தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(97) 4.97.முஸ்லிமல்லாத அந்நிய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயராமல் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களிடம் கேட்பார்கள், “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்; இணைவைப்பாளர்களை விட்டும் எவ்விதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?” அதற்கு அவர்கள், “நாங்கள் பலவீனர்களாக இருந்தோம். எங்களிடம் எம்மை் பாதுகாத்துக்கொள்ளுமளவு எந்தப் பலமும் இருக்கவில்லை ” என்று சாட்டுப்போக்குக் கூறுவார்கள். வானவர்கள் அவர்களைப் பழித்துக் கூறுவார்கள், “அல்லாஹ்வின் பூமி விசாலமாக இருக்கவில்லையா? நீங்கள் புலம்பெயர்ந்து அங்குசென்று உங்களின் மார்க்கத்தையும் இழிவிலிருந்தும் அடக்குமுறையலிருந்தும் உங்களையும் பாதுகாத்திருக்கலாம் அல்லவா?”. புலம்பெயராத இவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.
(98) 4.98,99. இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்கு அவர்களிடம் எந்தப்பலமும் இல்லை. அவற்றிலிருந்து தப்பிச்செல்வதற்கான எந்த வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
(99) 4.98,99. இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்குரிய எந்தப் பலமும் அவர்களிடம் இல்லை. அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
(100) 4.100. யார் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக இஸ்லாமிய நாட்டினை நோக்கிப் புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டாரோ அவர் புலம்பெயரும் பூமியில் அவர்விட்டுவந்த இடத்தை விட மாற்றமான இடத்தை கண்டுகொள்வார். அங்கு கண்ணியத்தையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் பெறுவார். யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டு பின்னர் அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அவருக்கு மரணம் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் அவருக்கு கூலி உறுதியாகிவிட்டது. அவர் புலம்பெயர நாடிய இடத்தை அடையாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(101) 4.101. நீங்கள் பூமியில் பயணம் செய்தால், நிராகரிப்பாளர்களால் ஏதேனும் தீங்கு உங்களுக்கு நேரலாம் என்று நீங்கள் அஞ்சினால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கிக் கொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்களின் உங்கள் மீதான எதிர்ப்பு பகிரங்கமானதாகும். யுத்தமற்ற பாதுகாப்பான நிலையிலும், பிராயணத்தில் கருக்ககுவதும் அனுமதிக்கப்பட்டதே என்ற சட்டம் ஆதாரபூர்வமான நபிவழியில் இடம்பெற்றுள்ளது.
(102) 4.102. தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான்.
(103) 4.103. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம்.
(104) 4.104. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
(105) 4.105. தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர்.
(106) 4.106. அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருவீராக. தன்னிடம் மன்னிப்புக்கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(107) 4.107. தனது மோசடியை மறைப்பதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் எந்த ஒருவருக்காகவும் நீர் வாதிடவேண்டாம். பாவிகளான பெரும் மோசடிக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
(108) 4.108. அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடும்போது மக்களுக்குப் பயந்து, வெட்கத்தால் மறைந்துகொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வை விட்டும் மறைந்துகொள்வதில்லை. அவன் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ளான். தவறிழைத்தவனைக் காப்பாற்றி நிரபாராதியை சந்தேகிப்பது போன்ற அவனுக்கு விருப்பமில்லாததை அவர்கள் மறைவாகத் திட்டமிட்டுச் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்தறிந்தவனாகவே இருக்கிறான். எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(109) 109. பாவங்களில் ஈடுபடுவோரான இவர்களது விடயத்தில் கரிசனை செலுத்துவோரே! இவர்களைக் குற்றமற்றவர்கள் என்று உலகவாழ்க்கையில் நிரூபித்து தண்டனையிலிருந்து காப்பதற்காக நீங்கள் வாதாடுகிறீர்கள். மறுமைநாளில் இவர்களின் உண்மைநிலை வெளிப்பட்டுவிடும்போது இவர்களுக்காக யார் வாதாடுவார்கள்? அந்த நாளில் இவர்களுக்குப் பொறுப்பாளன் யார்? சந்தேகமின்றி எவரும் இதற்குச் சக்திபெற மாட்டார்கள்.
(110) 4.110. யார் தீய செயல் செய்கிறாரோ அல்லது பாவங்களைச் சம்பாதித்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறாரோ பின்னர் அவர் அல்லாஹ்விடம் தம் பாவங்களை ஒத்துக்கொண்டு அதற்காக கைசேதப்பட்டு, அவற்றை அடியோடு விட்டுவிட்டு அவனிடம் மன்னிப்புக் கோரினால் அவர் எப்பொழுதுமே அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் அவரது விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் காண்பார்.
(111) 4.111. சிறு பாவத்திலோ பெரும் பாவத்திலோ ஈடுபடுபவர் மட்டுமே அதற்குரிய தண்டனையைப் பெறுவார். அது மற்றவர்களைப் பாதிக்காது. அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும், அவன் ஞானம்மிக்கவன்.
(112) 4.112. கவனக்குறைவினால் ஒரு தவறையோ வேண்டுமென்று ஒரு பாவத்தையோ செய்துவிட்டு அதன் பழியை குற்றமற்ற அப்பாவியின்மீது சுமத்திவிடுபவர் தனது இந்த செயலால் பெரும் பொய்யையும் தெளிவான பாவத்தையுமே சுமந்துகொண்டார்.
(113) 4.113. தூதரே! அல்லாஹ் உம்மைப் பாதுகாத்து அருள் புரியவில்லையென்றால் தமக்குத் தாமே துரோகமிழைக்கும் இவர்களில் ஒரு கூட்டத்தினர் சரியான தீர்ப்பை விட்டும் உம்மை வழிகெடுக்க முடிவுசெய்து, நீரும் நியாயமின்றி தீர்ப்பளித்திருப்பீர். உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே வழிகெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் செயல்களின் விளைவு அவர்களின் பக்கமே திரும்பும். உமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பிருப்பதால் அவர்களால் உமக்கு எந்தத்தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உம்மீது குர்ஆனையும், சுன்னாவையும் இறக்கியுள்ளான். இதற்கு முன்னர் நீர் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத் தந்துள்ளான். நபித்துவம் மற்றும் தவறிலிருந்து பாதுகாப்பு என்பவற்றின் மூலம் அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடை மகத்தானது.
(114) 4.114. அவர்கள் இரகசியமாகப் பேசும் பெரும்பாலான விஷயங்களில் எந்த நன்மையும் பயனும் இல்லை. ஆயினும் அவர்களின் பேச்சுகள் தர்மம் செய்யத் தூண்டுதல் அல்லது மார்க்கமும் அறிவும் கூறும் நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்டுதல் அல்லது முரண்பட்டவர்களிடையே சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தல் ஆகியவற்றிற்காக இருந்தாலே தவிர. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்பவர்களுக்கு விரைவில் நாம் பெரும் நன்மைகளை வழங்கிடுவோம்.
(115) 4.115. யார் தூதருடன் முரண்பட்டு, அவர் கொண்டு வந்தது சத்தியம்தான் என்பதைத் தெளிவாக அறிந்தபின்னரும் அதற்கு மாறாகச் செயல்படுவாரோ, நம்பிக்கைகொண்டவர்களின் பாதையை விடுத்து வேறு பாதையைப் பின்பற்றிச் செல்வாரோ - அவர் தமக்காக தேர்ந்தெடுத்தவற்றிலேயே அவரை நாம் விட்டுவிடுவோம். வேண்டுமென்றே அவர் சத்தியத்தை மறுத்ததனால் நாம் அவருக்கு வழிகாட்ட மாட்டோம். அவரை நரகத்தில் பிரவேசிக்கச் செய்வோம். அதன் வெப்பத்தை அவர் அனுபவிப்பார். நரகவாதிகளுக்கு அது மோசமான திரும்புமிடமாகும்.
(116) 4.116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக மற்றவர்கள் ஆக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். மாறாக இணைவைப்பவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார். இந்த இணைவைப்பைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு தன் அருளால் அவன் மன்னித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு ஒருவரை ஆக்கிக்கொண்டவர் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார். ஏனெனில் அவர் படைப்பாளனையும் படைப்புகளையும் சரிசமமாக்கிவிட்டார்.
(117) 4.117. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுடன் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட - லாத், உஸ்ஸா - போன்ற பெண்களின் பெயர்களைத் தாங்கிய சிலைகளையே வணங்குகிறார்கள். அவற்றால் அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ பலனளிக்கவோ முடியாது. உண்மையில் அவர்கள் தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட விரட்டப்பட்ட எவ்வித நலவுமற்ற ஷைத்தானையே வணங்குகிறார்கள். ஏனெனில் அவன்தான் சிலைகளை வணங்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
(118) 4.118. எனவேதான் அல்லாஹ் தன் அருளைவிட்டும் அவனைத் துரத்திவிட்டான். இந்த ஷைத்தான் தன் இறைவனிடம் சத்தியம் செய்தவனாகக் கூறினான், “உன் அடியார்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை நான் சத்தியத்தைவிட்டு பிறழச்செய்தே தீருவேன்.
(119) 4.119. உன் நேரான வழியைவிட்டும் அவர்களைத் தடுத்திடுவேன். அவர்களின் வழிகேடுகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் பொய்யான வாக்குறுதிகளின் மூலம் அவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவேன். அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்காக அவர்களுடைய கால்நடைகளின் காதுகளை அறுக்குமாறு கட்டளையிடுவேன். அல்லாஹ்வின் படைப்பையும் அதன் இயல்பையும் மாற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” விரட்டப்பட்ட ஷைத்தானை தான் கட்டுப்படும் நேசிக்கும் தோழனாக ஆக்கிக்கொண்டவர் தெளிவான இழப்பிற்கு உள்ளாகிவிட்டார்.
(120) 4.120. ஷைத்தான் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறான். தவறான ஆசைகளை ஊட்டுகிறான். உண்மையில் ஷைத்தான் அடிப்படையற்ற தவறான வாக்குறுதிகளையே அளிக்கிறான்.
(121) 4.121. ஷைத்தானின் எட்டுக்களையும் அவன் கூறுபவற்றையும் பின்பற்றுவோரின் தங்குமிடம் நரக நெருப்பேயாகும். அவர்கள்விரண்டோடுவதற்கான எந்த இடத்தையும் பெற மாட்டார்கள்.
(122) 4.122. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தரும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அவனுடைய வாக்குறுதி உண்மையாகும். அவன் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. அல்லாஹ்வைவிட சொல்லில் உண்மையானவன் யாரும் இல்லை.
(123) 4.123. முஸ்லிம்களே! பாதுகாப்பும் வெற்றியும் நீங்கள் விரும்புவது போன்றோ வேதக்காரர்கள் விரும்புவது போன்றோ அல்ல. அது செயல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். உங்களில் தீய செயல் புரிந்தவர் மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார். அல்லாஹ்வைத் தவிர பயனளிக்கும் வேறு பொறுப்பாளனையோ அவரை விட்டு துன்பத்தை அகற்றும் உதவியாளனையோ அவர்கள் பெற மாட்டார்கள்.
(124) 4.124. ஆணாயினும் பெண்ணாயினும் உண்மையாகவே அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தால் அவர்கள்தான் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த நன்மைகளில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. அது பேரீச்சங்கொட்டையின் மேற்புறத்தில் இருக்கும் புள்ளியின் அளவாக இருந்தாலும் சரியே.
(125) 4.125. வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ் விதித்தவற்றைப் பின்பற்றி, தூய்மையான எண்ணம் வைத்து, நற்செயல் புரிந்து இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு முற்றிலும் நீங்கி, முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் மூலமான இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுபவரை விட சிறந்த மார்க்கத்தையுடையவர் வேறு யாரும் இல்லை. தனது பூரண அன்புக்குரியவராக இப்ராஹீம் (அலை) அவர்களை தனது படைப்பினங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
(126) 4.126. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அல்லாஹ் அறிவிலும் ஆற்றலிலும் நிர்வகிப்பதிலும் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளான்.
(127) 4.127. தூதரே! அவர்கள் பெண்களைக் குறித்தும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “நீங்கள் கேட்டதை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். உங்களின் பொறுப்புகளிலுள்ள அநாதைப் பெண்களைக்குறித்தும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மணக்கொடையையோ அனந்தரச்சொத்தையோ அளிக்காமல் அவர்களை மணமுடிப்பதை நீங்கள் விரும்பாதததோடு அவர்களின் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவர்களை மணமுடிப்பதையும் தடுத்துவைத்துக் கொள்வதைக் குறித்து அல்லாஹ்வின் வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுபவற்றையும் தெளிவுபடுத்துகிறான். பலவீனமான சிறுவர்களுக்கு அளிக்க வேண்டிய வாரிசுரிமைக் குறித்தும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பிடுங்கி அவர்களின்மீது அநீதி இழைத்துவிடக்கூடாது என்பது குறித்தும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அநாதைகளின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். நீங்கள் அநாதைகளுக்கோ மற்றவர்களுக்கோ செய்யும் நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(128) 4.128. ஒரு பெண் தன் கணவன் தன்மீது விருப்பமின்றி தன்னைப் புறக்கணித்துவிடுவான் என்று அஞ்சினால் - செலவுசெய்தல், இரவுதங்குதல் போன்ற - கடமையாக்கப்பட்ட தனது சில உரிமைகளை மனைவி விட்டுக்கொடுத்து இருவரும் சமாதானம் செய்துகொள்வதில் இருவர்மீதும் எந்தக்குற்றமும் இல்லை. விவாகரத்து செய்வதைவிட சமாதானம் செய்வதே சிறந்ததாகும். உள்ளங்கள் பேராசை, கஞ்சத்தனம் கொண்டதாகவே படைக்கப்பட்டுள்ளன. எனவேதான் அந்த உள்ளம் தன் உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்பாது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், நன்மை செய்தல் ஆகிய பண்புகளுக்கு தங்களின் மனதைப் பண்படுத்தி இத்தீயகுணத்தை மாற்றிகொள்ள வேண்டும். உங்களின் எல்லா விவகாரங்களிலும் நீங்கள் நல்லமுறையில் நடந்துகொண்டால், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(129) 4.129. கணவர்களே! நீங்கள் என்னதான் விரும்பினாலும் உள்ளத்தில் ஏற்படும் அன்பில் உங்கள் மனைவியரிடையே உங்களால் முழுமையாக நீதிசெலுத்த முடியாது. சில சமயங்களில் அது உங்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் நேசிக்காத பெண்ணை முழுமையாகப் புறக்கணித்து- கணவனின் உரிமையைப் பெறாதவளாகவும் வேறு திருமணமும் செய்ய முடியாதவளாகவும் - விட்டுவிடாதீர்கள். உங்கள் மனம் விரும்பாத மனைவியரின் உரிமையை அளிப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி உங்களிடையே சமாதானம் செய்துகொண்டு, அந்த மனைவியின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(130) விவாகரத்து அல்லது குல்உ மூலம் தம்பதியினர் பிரிந்துவிட்டால் அவர்களின் இருவரின் தேவையையும் அல்லாஹ் தன் விசாலமான அருளிலிருந்து பூர்த்திசெய்வான். அல்லாஹ் விசாலமான அருளும் கருணையும் உடையவன். தனது திட்டமிடலிலும் நிர்ணயித்திலும் ஞானமுள்ளவன்.
(131) 4.131. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை, அவையிரண்டிற்கு இடையிலுள்ளவையின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உங்களிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள் என்று. நீங்கள் இந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டால் உங்களுக்கு நீங்களேதான் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். உங்களின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் படைப்புகள் அனைவரையும்விட்டு தேவையற்றவன். தன் அனைத்துப் பண்புகளுக்காகவும் செயல்களுக்காகவும் புகப்படுபவன்.
(132) 4.132. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் வழிபடுவதற்குத் தகுதியானவன். படைப்புகளின் விவகாரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(133) 4.133. மனிதர்களே! அவன் நாடினால் உங்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அவனுக்குக் கட்டுப்படுகின்ற, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படாத நீங்கள் அல்லாத வேறொரு மக்களைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு சக்தியுடையவனாகவே இருக்கிறான்.
(134) 4.134. மனிதர்களே! உங்களில் தம் செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை மட்டும் விரும்புவர், அல்லாஹ்விடம்தான் இவ்வுலக நன்மையும் மறுவுலக நன்மையும் உள்ளது என்பதை அறிந்துகொள்ளட்டும். எனவே அவனிடமே ஈருலக நன்மைகளும் வேண்டப்பட வேண்டும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவனாகவும் உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(135) 4.135. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! எல்லா சூழ்நிலைகளிலும் நீதியை நிலைநாட்டி,அனைவருக்கும் உண்மையான சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ உங்களின் தாய்தந்தையருக்கோ உறவினருக்கோ எதிராக உண்மையை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரியே. ஒருவரின் ஏழ்மையோ செல்வமோ சாட்சியளிக்கவோ அதனை விட்டுவிடவோ உங்களைத் தூண்டிவிட வேண்டாம். உங்களை விட அல்லாஹ்வே ஏழைக்கும் செல்வந்தனுக்கும் நெருக்கமானவன். அவர்கள் இருவரின் நலன்களையும் அவனே நன்கறிந்தவன். சாட்சி கூறும்போது உங்களின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியத்தைவிட்டும் பிறழ்ந்துவிடுவீர். நீங்கள் உரிய முறைப்படி சாட்சிகூறாது அதனைத் திரிபுபடுத்தினால் அல்லது சாட்சிகூறாமல் நீங்கள் புறக்கணித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன்.
(136) 4.136. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் தன் தூதரின்மீது அவன் இறக்கிய குர்ஆனின்மீதும் முந்தைய தூதர்களின்மீது அவன் இறக்கிய வேதங்களின்மீதும் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருங்கள். அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் வேதங்களையும் தூதர்களையும் மறுமைநாளையும் நிராகரிப்பவர் நேரான பாதையைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்.
(137) 4.137. திரும்பத் திரும்ப இஸ்லாத்தை ஏற்ற பின் அதனை நிராகரித்தவர்கள்- இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து பின்னர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து-அந்நிராகரிப்பிலேயே நிலைத்திருந்து மரணித்தும் விட்டவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அவர்களுக்கு தன்பக்கம் வரக்கூடிய நேரான வழியையும் காட்ட மாட்டான்.
(138) 4.138. தூதரே! ஈமானை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் நயவஞ்சகர்களுக்கு மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறிவிடுவீராக.
(139) 4.139. இந்த வேதனை ஏனெனில், அவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பாளர்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அந்த நிராகரிப்பாளர்களை தமது உதவியாளர்களாக ஆக்கிக்கொள்வதற்கு இவர்களைத் தூண்டிய காரணம்தான் ஆச்சரியமானது. தாம் உயர்வதற்காக அவர்களிடமே பலத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறார்கள்? உதவியும் பாதுகாப்பும் முழுமையாக அல்லாஹ்விடமல்லவா உள்ளது.
(140) 4.140. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குப் பின்வரும் விஷயத்தை இறக்கியுள்ளான்: நீங்கள் ஒரு அவையில் இருக்கும்போது அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் செவியுற்றால் அந்த அவையைவிட்டு வெளியேறிவிடுங்கள். அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும்வரை அங்கு அமர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அதனைச் செவியுற்ற பிறகும் நீங்கள் அங்கு அமர்ந்திருந்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்தாம். ஏனெனில் அவர்கள் தமது நிராகரிப்பின் மூலம் மாறுசெய்ததைப்போன்று அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததின் மூலம் நீங்கள் மாற்றம்செய்துவிடுகிறீர்கள். இஸ்லாத்தை வெளிப்படுத்தி நயவஞ்சகத்தை மறைத்திருக்கும் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பாளர்களையும் மறுமைநாளில் நரக நெருப்பில் ஒன்றுசேர்த்திடுவான்.
(141) 4.141. (அந்த நயவஞ்சகர்கள்) உங்களுக்கு ஏற்படும் நன்மையையும் தீமையையும் எதிர்பார்ப்பவர்கள்; அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு உதவி கிடைத்து போர்ச் செல்வங்கள் கிடைத்துவிட்டால் அதனைப் பெறுவதற்காக, “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? நீங்கள் கலந்துகொண்டதில் நாங்களும் கலந்து கொள்ளவில்லையா?” என்று கூறுகிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் பங்கு கிடைத்துவிட்டால், “நாங்கள் உங்களது காரியங்களைப் பொறுப்பேற்று பராமரித்து உதவிசெய்துகொண்டு உங்களுடன் இருக்கவில்லையா, உங்களுக்கு உதவி புரிந்து நம்பிக்கையாளர்களை கைவிட்டு உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வே மறுமைநாளில் உங்களிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்களுக்கு கூலியாக அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். நயவஞ்சகர்களுக்குத் தண்டனையாக அவர்களை நரகத்தின் அடித்தளத்தில் சேர்த்துவிடுவான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின்மீது நிராகரிப்பாளர்களுக்கு ஒருபோதும் ஆதிக்கம் வழங்கிவிட மாட்டான். மாறாக நம்பிக்கையாளர்கள் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தி நம்பிக்கையில் உண்மையாளர்களாக இருக்கும் வரை இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாகவே ஆக்குவான்.
(142) 4.142. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வை ஏமாற்ற முனைகிறார்கள். அவன் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறான். ஏனெனில் அவர்களது நிராகரிப்பைப் பற்றி அறிந்திருந்தும் அவன் இவ்வுலகில் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்துள்ளான். ஆனால் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான். அவர்கள் தொழுகைக்காக வந்தால் சோம்பேறிகளாகவும், வெறுப்போடும் மக்கள் காண வேண்டும் மதிக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறார்கள். நம்பிக்கையார்களைக் காணும்போது மாத்திரம் சிறிது அல்லாஹ்வை நினைவுகூர்கிறார்கள்.
(143) 4.143. இந்த நயவஞ்சகர்கள் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் நம்பிக்கையாளர்களுடனும் இல்லை, நிராகரிப்பாளர்களுடனும் இல்லை. மாறாக வெளித்தோற்றத்தில் நம்பிக்கையாளர்களுடனும் அந்தரங்கத்தில் நிராகரிப்பாளர்களுடனும் இருக்கிறார்கள். தூதரே! அல்லாஹ் யாரை வழிதவறச் செய்துவிடுவானோ, அவர் வழிகேட்டை விட்டும் நேர்வழியை அடைவதற்கான எந்தவொரு வழியையும் உம்மால் பெற்றுக்கொள்ள முடியாது.
(144) 4.144. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து அல்லாஹ்வை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இந்த செயலின்மூலம் நீங்கள் தண்டனைக்குரியோர் தகுந்த ஆதாரம் அல்லாஹ்வுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
(145) 4.145. மறுமைநாளில் அல்லாஹ் நயவஞ்சகர்களை நரகத்தின் அடித்தளத்தில் போட்டுவிடுவான். வேதனையை விட்டும் அவர்களைக் காக்கக்கூடிய உதவியாளர்கள் யாரையும் நீர் காணமாட்டீர்.
(146) 4.146. ஆயினும் தமது நயவஞ்சகத்திலிருந்து பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தங்கள் உள்ளத்தை சீர்படுத்தி, அவனிடம் செய்த வாக்குறுதியைப் பேணி தங்களின் செயல்களை முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களைத் தவிர. இந்த பண்புகளை உடையவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் பெரும் கூலியை வழங்கிடுவான்.
(147) 4.147. நீங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு நன்றி செலுத்தினால் அவனுக்கு உங்களை வேதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவன் நன்மைகளை வழங்குபவன், மிகுந்த கருணையாளன். உங்களின் பாவங்களின் காரணமாகத்தான் அவன் உங்களைத் தண்டிக்கிறான். நீங்கள் உங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால், அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தினால், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அவன்மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டான். அவனுடைய அருட்கொடைகளை ஒத்துக் கொள்வேருக்கு நன்றியுடையவன். எனவேதான், அதற்காக அவர்களுக்கு நன்மையை அள்ளிவழங்குகிறான். தனது படைப்பினங்களின் ஈமானை நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
(148) 4.148. தீய வார்த்தையை வெளிப்படையாக கூறுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மாறாக அதனை அல்லாஹ் வெறுப்பதோடு அதனை எச்சரித்துமுள்ளான். ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனைப் பற்றி முறைப்பாடாகவோ சாபமாகவோ அதைப் போன்ற வார்த்தையினால் பதிலளிப்பதாகவோ வெளிப்படையாகக் கூற அனுமதி உண்டு. ஆயினும் அநீதி இழைக்கப்பட்டவன் தீய வார்த்தையை வெளிப்படையாகக் கூறாமல் பொறுமையாக இருப்பதே சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவனாகவும் உங்களின் எண்ணங்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே தீயதைக் கூறுவதிலிருந்தும் நாடுவதிலிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள்.
(149) 4.149. நீங்கள் நன்மையான சொல்லையோ செயலையோ வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும் அல்லது உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் வல்லமையுடையவனாகவும் இருக்கின்றான். எனவே மன்னிப்பதை உங்களின் பண்பாக ஆக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் உங்களை மன்னிக்கலாம்.
(150) 4.150. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவனுடைய தூதர்களை நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்த நினைப்பவர்கள், தூதர்கள் சிலரின்மீது நம்பிக்கை கொள்வோம், சிலரை நிராகரித்துவிடுவோம் என்று கூறுபவர்கள், தம்மைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் ஈமானுக்கும் நிராகரிப்பிற்குமிடையே ஒரு பாதையை உருவாக்க நினைக்கின்றார்கள்.
(151) 4.151. இவ்வழியை மேற்கொள்ளும் அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள். இது ஏனெனில், தூதர்கள் அனைவரையும் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களாவர். மறுமைநாளில் நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம் கொண்டதற்குத் தண்டனையாக அமையும் பொருட்டு.
(152) 4.152. அல்லாஹ்வை ஈமான்கொண்டு அவனை ஒருமைப்படுத்தி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் - நிராகரிப்பாளர்கள் செய்வதுபோன்று அவர்களிடையே பாகுபாடு காட்டாமல் - உண்மைப்படுத்தியவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் அதனூடாக வெளிப்பட்ட நற்செயல்களுக்குக் கூலியாகப் பெரும் நன்மையை அல்லாஹ் வழங்கிடுவான். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(153) 4.153. தூதரே! யூதர்கள் உம்மிடம், “நீர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு நிகழ்ந்தது போல் வானத்திலிருந்து ஒரேயடியாக ஒரு வேதத்தை அவர்களுக்கு இறக்கிக்காட்டுமாறு வேண்டுகின்றனர். இவ்வாறான அவர்களது வேண்டுதலை நீர் பெரிதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இவர்களின் முன்னோர்கள் மூஸாவிடம், அல்லாஹ்வைக் கண்ணெதிரில் காட்டுங்கள் என இவர்கள் கேட்டதை விட பெரிய விஷயத்தைக் கேட்டனர். அவர்கள் செய்த இக்காரியத்துக்குத் தண்டனையாக மயக்கமுற்று வீழ்ந்தனர். பின்னர் அல்லாஹ் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனே படைத்துப் பராமரிக்கக்கூடியவன் என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்னரும் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கினர். அதன் பின்னரும் நாம் அவர்களை மன்னித்தோம். தன் சமூகத்தினருக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நாம் மூஸாவுக்கு வழங்கினோம்.
(154) 4.154. அவர்களிடம் செய்யப்பட்டிருந்த உறுதியான உடன்படிக்கைப் பிரகாரம் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் பொருட்டு மலையை அவர்கள் மீது உயர்த்திவிட்டு, நாம் அவர்களிடம் கூறினோம், “பைத்துல் முகத்தஸின் வாயிலில் தலைகுனிந்து பணிந்தவர்களாக நுழையுங்கள்.” ஆனால் அவர்கள் தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். “சனிக்கிழமையில் வரம்புமீறி வேட்டையாடாதீர்கள்.” என்றும் நாம் அவர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் வரம்புமீறி வேட்டையாடினார்கள். அது சம்பந்தமாக நாம் அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை செய்திருந்தும், அவர்கள் அதனை மீறினார்கள்.
(155) 4.155. அவர்கள் உறுதியான உடன்படிக்கையை முறித்ததனாலும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததனாலும் இறைத்தூதர்களை துணிந்து கொலை செய்ததனாலும் முஹம்மதிடம், ‘எங்களின் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே நீர் கூறும் எதுவும் அதனை அடையப்போவதில்லை’ என்று கூறியதனாலும் நாம் அவர்களை நம் கருணையிலிருந்து தூரமாக்கிவிட்டோம். விஷயம் அவர்கள் கூறுவது போலல்ல. மாறாக அல்லாஹ் அவர்கள் நிராகரித்தனால் அவர்களது உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே எந்த நன்மையும் அவற்றை அடைந்துவிட முடியாது. அவர்களுக்குப் பயனளிக்காத அளவு குறைவாகவே அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள்.
(156) 4.156. அவர்கள் நிராகரித்ததனாலும் மர்யமின் மீது அபாண்டமாக விபச்சாரக் குற்றச்சாட்டை சுமத்தியதனாலும் நாம் நம் கருணையிலிருந்து அவர்களைத் தூரமாக்கினோம்.
(157) 4.157. நாங்கள்தாம் அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் ஈஸாவைக் கொலைசெய்தோம் என்று பெருமையாகக் கூறியதனாலும் நாம் அவர்களைச் சபித்துவிட்டோம். அவர்கள் கூறுவதுபோல, அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. ஈஸாவின் தோற்றத்தை அல்லாஹ் வழங்கிய வேறொரு மனிதரையே அவர்கள் கொன்று சிலுவையில் அறைந்தார்கள். ஈஸாதான் கொல்லப்பட்டவர் என்று எண்ணிக்கொண்டார்கள். அவரை நாங்கள்தாம் கொன்றோம் என்று கூறிய யூதர்களும் ஈஸாவை அவர்களிடம் ஒப்படைத்த கிருஸ்தவர்களும் ஈஸாவின் விஷயத்தில் கடுமையான சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து எந்த அறிவும் இல்லை. அவர்கள் வெற்று யூகங்களையே பின்பற்றுகிறார்கள். சத்திய விஷயத்தில் யூகம் எந்தப் பயனையும் அளிக்காது. உறுதியாக அவர்கள் ஈஸாவைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை.
(158) 4.158. மாறாக அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவரது உடலோடும் உயிரோடும் அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் நிர்வகித்தல், விதிகள், சட்டங்கள் என்பவற்றில் அவன் ஞானமிக்கவன்.
(159) 4.159. ஈஸா மீண்டும் பூமிக்கு வருகை தந்த பிறகு வேதக்காரர்களிலுள்ள அனைவரும் அவரது மரணத்திற்கு முன்பே அவர் மீது நம்பிக்கைகொண்டு விடுவார்கள். மறுமைநாளில் அவர்களின் செயல்களில் எது மார்க்கத்திற்கு உட்பட்டது எது மார்க்கத்திற்கு முரணானது என்பதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார்.
(160) 4.160. யூதர்களின் அக்கிரமத்தினால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில தூய்மையான உணவுகளையும் நாம் அவர்கள்மீது தடைசெய்தோம். நகங்களுடைய அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பைத் தவிர்ந்த ஆடு, மாடு ஆகியவற்றின் ஏனைய கொழுப்புகளையும் நாம் அவர்கள் மீது தடைசெய்தோம். ஏனெனில் நல்ல விஷயங்களை விட்டுத் தடுப்பதே தமது இயல்பான குணமாகிவிடும் அளவிற்கு தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் பாதையைவிட்டு அவர்கள் தடுத்ததனர்.
(161) 4.161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தும் அவர்கள் அதனை வாங்கியதாலும் மக்களின் செல்வங்களை உரிமையின்றி பெற்றதனாலும் நாம் அவ்வாறு செய்தோம். அவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
(162) 4.162. ஆனால் யூதர்களில் நன்கு கற்றோரும் நம்பிக்கையாளர்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனையும் உமக்கு முன்னால் ஏனைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத், இன்ஜீல் போன்ற வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்பதையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்துகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்களுக்கு நாம் பெரும் நன்மைகளை வழங்குவோம்.
(163) 4.163. தூதரே! உமக்கு முந்தைய தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் வஹி அறிவித்தோம். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த தூதர்களுக்கும் வஹி அறிவித்தோம். இப்ராஹீமுக்கும் அவரது மகன்களான இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்கும், இஸ்ஹாக்கின் மகன் யஅகூபிற்கும், அஸ்பாத் (இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் தூதர்களாக அனுப்பப்பட்ட யஅகூபின் மகன்கள்) ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்தோம். மேலும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் வஹீ அறிவித்தோம். தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.
(164) 4.164. நாம் அனுப்பிய சில தூதர்களைக் குறித்து குர்ஆனில் உமக்கு எடுத்துரைத்துள்ளோம். சில தூதர்களைக் குறித்து நாம் உமக்கு எடுத்துரைக்கவில்லை. நாம் எடுத்துரைக்காமல் விட்டுவிட்டதிலும் ஒரு நோக்கம் இருக்கிறது. மூஸாவை கௌரவப்படுத்துவதற்காக அல்லாஹ் அவருடன் நேரடியாக பேசியும் இருக்கின்றான்.
(165) 4.165. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு நன்மை உண்டு என்று நற்செய்தி கூறுவோராகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு என்று எச்சரிக்கை செய்வோராகவுமே நாம் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் அனுப்பப்பட்டபிறகு மக்கள் சாக்குப்போக்குக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அனுப்பினோம். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது தீர்ப்பில் ஞானமிக்கவன்.
(166) 4.166. தூதரே! யூதர்கள் உம்மை நிராகரித்தால் உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அதில் அவன் அடியார்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தனது விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கிய கல்வியை அதிலே இறக்கியுள்ளான். நீர் கொண்டுவந்தது உண்மையே என அல்லாஹ்வின் சாட்சியோடு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனுடைய சாட்சியம் மற்ற அனைவரின் சாட்சியத்தைக் காட்டிலும் போதுமானது.
(167) 4.167. உமது தூதை நிராகரித்து மக்களை இஸ்லாத்தைவிட்டும் தடுத்தவர்கள் சத்தியத்தைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்கள்.
(168) 4.168. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அதே நிராகரிப்பில் நிலைத்திருந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; அவனுடைய வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய எந்தவொரு வழியையும் அவர்களுக்குக் காட்டவும் மாட்டான்.
(169) 4.169. நரகத்தின்பால் கொண்டு சேர்க்கும் வழியைத் தவிர. அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. எதுவும் அவனைத் தடுக்க முடியாது.
(170) 4.170. மனிதர்களே! தூதர் முஹம்மது உங்களிடம் அல்லாஹ்விடமிருந்து நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டுவந்ததின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நலவாக அமையும். நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், உங்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிடாது. அவன் உங்களின் ஈமானைவிட்டும் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கிடையிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. நேர்வழிக்குத் தகுதியானவர்களை அவன் அறிந்து அதனை அவர்களுக்கு இலகுபடுத்துபனாகவும். அதற்குத் தகுதியற்றவர்களை அறிந்து அதனை விட்டும் அவர்களைத் திருப்பிவிடுபவனாகவும் இருக்கிறான். சொல்லிலும் செயலிலும் தான் அமைத்த சட்டங்களிலும் நிர்ணயத்திலும் அவன் ஞானமிக்கவன்.
(171) 4.171. தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களிடம் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈசாவைக் குறித்து உண்மையைத் தவிர எதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈசா மஸீஹ் உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம் அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். குன் - ஆகிவிடு என்பதுதான் அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம் அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ளுங்கள். ‘கடவுள்கள் மூவர்’ என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்கு மனைவியோ மகனோ யாரும் இல்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கு இடையிலுள்ளவையும் அவனுக்கே உரியன. வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.
(172) 4.172. மர்யமின் மகன் ஈசா அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார். அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கி உயர்ந்த பதவிகளை வழங்கிய வானவர்களும் அவனுக்கு அடிமைகளாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார்கள். mஅவ்வாறிருக்க ஈசாவை நீங்கள் எவ்வாறு இறைவனாக்கிக் கொண்டீர்கள்? இணைவைப்பாளர்கள் எவ்வாறு வானவர்களை கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அல்லாஹ்வை வணங்குவதைவிட்டும் எவர் தவிர்ந்துகொள்கிறாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான்.
(173) 4.173. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வுக்காக தூய்மையான எண்ணத்துடன் அவன் காட்டிய முறையில் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்தும் உபகாரத்திலிருந்தும் இன்னும் அதிகமாகவும் வழங்குவான். பெருமை மற்றும் கர்வம் காரணமாக அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்குக் கட்டுப்படுவதையும் விட்டு தவிர்ந்து கொண்டவர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை அளித்திடுவான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பயனளிக்கும் பாதுகாவலனையோ அவர்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளனையோ அவர்கள் பெறமாட்டார்கள்.
(174) 4.174. மனிதர்களே! சாக்குப்போக்குகளை இல்லாமல் ஆக்கக்கூடிய சந்தேகங்களைப் போக்கக்கூடிய தெளிவான சான்று உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அது தான் முஹம்மது (ஸல்) அவர்களாவார்கள். நாம் உங்கள்மீது குர்ஆன் என்னும் தெளிவான ஒளியையும் இறக்கியுள்ளோம்.
(175) 4.175. யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு தங்கள் தூதரின் மீது இறக்கப்பட்ட குர்ஆனைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்களோ அல்லாஹ் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் மீது கருணை புரிவான். அதிகமான நன்மைகளையும் உயர்ந்த அந்தஸ்தையும் அவர்களுக்கு வழங்குவான். கோணலற்ற நேரான வழியின்பால் அவர்களுக்கு வழிகாட்டுவான். அது நிலையான சுவனத்தின்பால் செல்லும் வழியாகும்.
(176) 4.176. தூதரே! அவர்கள் கலாலாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கலாலா என்பது தந்தையும் பிள்ளைகளும் இன்றி மரணமடைந்தவரின் சொத்தாகும். நீர் கூறுவீராக, அல்லாஹ் அதனைக் குறித்து தெளிவுபடுத்துகிறான்: “இறந்தவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லாமல் உடன்பிறந்த சகோதரியோ அல்லது தந்தைவழிச் சகோதரியோ மட்டும் இருந்தால் அவர் விட்டுச் சென்றவற்றில் அவளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதி அளவு சொத்து உண்டு. அவருக்கு உடன்பிறந்த சகோதரனோ அல்லது தந்தைவழிச் சகோதரனோ மட்டும் இருந்து சொத்து பெறக்கூடிய வேறு யாரும் இல்லையெனில் அவர் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார். சொத்து பெறக்கூடிய வேறு யாரேனும் இருந்தால் அவரது பங்குபோக மீதமுள்ள அனைத்தையும் இவர் பெறுவார். இறந்தவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த சகோதரிகளோ அல்லது தந்தைவழிச் சகோதரிகளோ இருந்தால் மூன்றில் நிர்ணயிக்கப்பட்ட இரு பங்கை அவர்கள் பெறுவார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த அல்லது தந்தைவழிச் சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தால் அவர்கள் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார்கள். இதில் பெண்களைப் போன்று ஆண்களுக்கு இரு பங்கு தரப்பட்ட வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு கலாலா குறித்த சட்டங்களையும் பிற சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.