40 - ஸூரா ஆஃபிர் ()

|

(1) 40.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) யாராலும் மிகைக்க முடியாத தனது அடியார்களின் நலவுகளை நன்கறிந்த அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆன் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்டுள்ளது.

(3) 40.3. பாவம் புரிபவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவன்; தனது பாவங்களை விட்டு மீளாதவர்களைக் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்; பெரும் நலன் புரியக்கூடியவனும் அருளாளனுமாவான். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. மறுமை நாளில் அடியார்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் அவர்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.

(4) 40.4. அறிவு மழுங்கடிக்கப்பட்டதனால் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள்தாம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் அவனுடைய தூதர்களின் நம்பகத்தன்மையையும் அறிவிக்கும் அவனுடைய சான்றுகளில் தர்க்கம் புரிகிறார்கள். அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர். அவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்வும் இன்பங்களும் உம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களை விட்டுப்பிடிப்பதும், அவர்களுக்கு செய்யப்படும் சூழ்ச்சியுமேயாகும்.

(5) 40.5. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகமும் அவர்களுக்குப் பின் வந்த கூட்டத்தினரும் பொய்ப்பித்தார்கள். ஆத் சமூகம், ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள், ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியோரும் பொய்ப்பித்தார்கள். அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களிடம் வந்த தூதரைப் பிடித்து கொலைசெய்யவே நாடினார்கள். சத்தியத்தை அழிப்பதற்காக தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தார்கள். நான் அந்த சமூகங்கள் அனைத்தையும் தண்டித்தேன். நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அது கடுமையான தண்டனையாக இருந்தது.

(6) 40.6. -தூதரே!- பொய்ப்பித்த அந்த சமூகங்களின் மீது அல்லாஹ் அழிவை விதித்தது போன்று நிராகரிப்பாளர்கள் நரகவாசிகளாவர் என்ற உம் இறைவனின் வாக்கும் அவர்கள் விடயத்தில் உறுதியாகி விட்டது.

(7) 40.7. -தூதரே!- உம் இறைவனின் அர்ஷைச் சுமப்பவர்களும் அதனைச் சூழ உள்ளவர்களும் அவனுக்கு பொருத்தமில்லாதவற்றை விட்டுவிட்டு அவனுடைய தூய்மையைப் பறைசாற்றுகிறார்கள்; அவன்மீது நம்பிக்கைகொள்கிறார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருகிறார்கள். “எங்கள் இறைவா! உன் ஞானமும் கருணையும் அனைத்தையும் வியாபித்துள்ளது. தங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரி உனது மார்க்கத்தைப் பின்பற்றுவோரை மன்னிப்பாயாக. நரக நெருப்பு அவர்களைத் தீண்டாமல் அவர்களைக் காத்தருள்வாயாக. என்று தங்களது பிரார்த்தனையில் கூறுகிறார்கள்.

(8) 40.8. வானவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ நம்பிக்கையாளர்களை நுழைவிப்பதாக வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களையும் அவர்களின் தந்தையர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நற்செயல் புரிந்தவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. நீ அமைத்த விதிகளில், திட்டங்களில் ஞானம் மிக்கவன்.

(9) 40.9. அவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாயாக. அவற்றின் காரணமாக அவர்களைத் தண்டித்துவிடாதே. மறுமை நாளில் நீ யாரை அவரின் தவறுகளுக்கான தண்டனையை விட்டும் பாதுகாத்தாயோ அவர் மீது நீ கருணைபுரிந்து விட்டாய். அவ்வாறு தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டு சுவனத்தில் பிரவேசிப்பதே மகத்தான வெற்றியாகும். அதற்கு நிகரான வேறு வெற்றி இல்லை.

(10) 40.10. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்கள் நரகத்தில் நுழையும் போது அவர்கள் அழைக்கப்பட்டு தம்மைத் தாமே வெறுத்து சபித்துக்கொள்ளும் போது, “நீங்கள் உங்களை வெறுப்பதைவிட அல்லாஹ் உங்களைக் கடுமையாக வெறுக்கிறான். உலகில் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ளுமாறு நீங்கள் அழைக்கப்பட்டபோது அவனை நிராகரித்துக்கொண்டிருந்தீர்கள். அவனுடன் வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள்.

(11) 40.11. நிராகரிப்பாளர்கள் தங்களின் பாவங்களை ஒத்துக்கொண்டவர்களாக கூறுவார்கள்: அப்போது அவர்கள் ஒத்துக் கொள்வதும் திருந்துவதும் எந்தப் பயனும் இல்லை : “எங்கள் இறைவா! நீ எங்களை இருமுறை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை உருவாக்கினாய். பின்னர் உருவாக்கிய பிறகு எங்களை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை படைத்தும் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பியும் இருமுறை எங்களை உயிர்ப்பித்தாய். நாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொள்கிறோம். நரகத்திலிருந்து வெளியேறி மீண்டும் உலகிற்குச் சென்று உன்னை திருப்திப்படுத்தி எங்களின் காரியங்களை சீர்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கின்றதா?

(12) 40.12. நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, இணைகளை ஏற்படுத்தாமல் அல்லாஹ் ஒருவனின் பக்கம் நீங்கள் அழைக்கப்பட்டபோது அதனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தினீர்கள், அவனுக்கு இணையாக மற்றவர்கள் வணங்கப்பட்டபோது அதனை நீங்கள் நம்பினீர்கள் என்பதனாலாகும். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. உள்ளமையிலும் தகுதியிலும் ஆதிக்கத்திலும் அவன் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன். அனைத்தும் அவனை விட சிறியவையே.

(13) 40.13. அல்லாஹ்வே உங்களுக்கு பிரபஞ்சத்திலும் உங்களிலும் தன் வல்லமையையும் தான் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய தன் சான்றுகளைக் காட்டுகிறான். உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் தாவரங்கள், பயிர்கள் மற்றும் இன்னபிறவற்றுக்குக் காரணமான மழை நீரை அவனே வானத்திலிருந்து இறக்குகின்றான். அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு தூய மனதுடன் அவன் பக்கம் திரும்புபவர்தான் அறிவுரை பெறுவார்.

(14) 40.14. -நம்பிக்கையாளர்களே!- வழிப்படுதல், பிரார்த்தனை ஆகியவற்றை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை அழையுங்கள். அதனை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அவர்களை அது கோபப்படுத்தினாலும் சரியே.

(15) 40.15. கீழ்ப்படிதலும் பிரார்த்தனையும் உரித்தாக்கப்படுவதற்கு அவன் மட்டுமே தகுதியானவன். அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; தனது அனைத்துப் படைப்பினங்களை விட்டும் வேறுபட்டவன். மகத்தான அர்ஷின் அதிபதி. தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது வஹியை இறக்குகிறான். அது அவர்கள் தாமும் உயிர்பெற்று மற்றவர்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் சந்திக்கும் மறுமை நாளைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

(16) 40.16. அவர்கள் வெளிப்படும் நாளில் ஓரணியாக ஒன்றுதிரட்டப்படுவார்கள். அவர்களின் உள்ளமைகள், செயல்கள், கூலிகள் ஆகியவற்றில் எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இருக்காது. “இன்றைய தினம் ஆட்சியதிகாரம் யாருக்குரியது”? என்று கேட்பான். “அனைத்தையும் அடக்கியாள்பவனும் அனைத்தும் அவனுக்கே கீழ்படியக்கூடிய தனது உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்ற ஒரு பதிலைத்தவிர வேறு எந்த பதிலும் அந்நேரத்தில் கூறப்படாது.

(17) 40.17. இன்று ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். நலவிற்கு நலவும் தீங்கிற்கு தீமையும் கிடைக்கும். இன்றைய நாளில் எந்த அநீதியும் இழைக்கப்படாது. ஏனெனில் நிச்சயமாக தீர்ப்பளிப்பவன் நீதிபதியாகிய நீதியாளனான அல்லாஹ் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து சூழ்ந்தறிந்துள்ளதால் அவர்களை விசாரணை செய்வதில் விரைவானவன்.

(18) 40.18. -தூதரே!- மறுமை நாளைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த மறுமை நாள் நெருங்கிவிட்டது. அது வந்தே தீரும். வர இருக்கும் அனைத்தும் அண்மையிலேதான் உள்ளன. அந்த நாளின் பயங்கரத்தால் இதயங்கள் அவர்களின் தொண்டைக்குழியை அடைந்துவிடுமளவுக்கு மேலெழும்பும். அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர யாராலும் அந்நாளில் பேச முடியாது. இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டவர்களுக்கு நண்பரோ, உறவினரோ, பரிந்துரையாளர் அவருக்காக பரிந்து பேச ஏற்படுத்தப்பட்டாலும் பரிந்துரை பேசக்கூடியவரோ இருக்க மாட்டார்.

(19) 40.19. அல்லாஹ், பார்ப்பவர்களின் கண்களை விட்டும் மறைவாகச் செய்யும் திருட்டுத்தனங்களையும் உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(20) 40.20. அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பவன். நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ எவர் மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அல்லாஹ்வைவிடுத்து இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் எந்த தீர்ப்பும் அளிக்காது. ஏனெனில் நிச்சயமாக அவை எதற்கும் உரிமையற்றவை. நிச்சயமாக அவன் தன் அடியார்களின் வார்த்தைகளை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் பார்க்கக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(21) 40.21. இந்த இணைவைப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்மிக்கவையாகவும் பூமியில் கட்டடங்களைக்கொண்டு அடையாளங்களை விட்டுச் சென்றவையாகவும் இருந்தன. இவர்களோ எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை தடுக்கும் எவரும் இருக்கவில்லை.

(22) 40.22. அவர்களுக்கு ஏற்பட்ட அந்த தண்டனை, அல்லாஹ்விடமிருந்து தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் தங்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலாகும். அவர்கள் பலமானவர்களாக இருந்தபோதும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். நிச்சயமாக அவன் தன்னை நிராகரித்து தன் தூதர்களை பொய்ப்பிப்பவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன், வலிமை மிக்கவன்.

(23) 40.23. தனது சமூகத்தின் பொய்ப்பிப்பை நபியவர்கள் சந்தித்த போது அவரது பணியின் முடிவு வெற்றியே என்ற நற்செய்தியை அளிக்கும் பொருட்டு ஃபிர்அவ்னுடன் மூஸாவுக்கு நிகழ்ந்த சம்பவத்தை குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நாம் மூஸாவை நம்முடைய தெளிவான சான்றுகளுடனும் உறுதியான ஆதாரத்துடனும் திட்டமாக நாம் அனுப்பினோம்.

(24) 40.24. ஃபிர்அவ்ன், அவனது அமைச்சர் ஹாமான் மற்றும் காரூனின் பக்கம் (அனுப்பினோம்). அவர்கள் கூறினார்கள்: “மூஸா ஒரு சூனியக்காரர், மேலும் தான் தூதர் என்ற வாதிடுவதில் பொய் கூறுபவர் .”

(25) 40.25. தாம் உண்மையாளர் என்று அறிவிக்கக்கூடிய ஆதாரத்தோடு மூஸா அவர்களிடம் வந்தபோது ஃபிர்அவ்ன் கூறினான்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண்மக்களை கொன்றுவிடுங்கள். அவர்களை இழிவுபடுத்தும்பொருட்டு அவர்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவிடுங்கள். நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ஏவி நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சி எவ்வித அடையாளமுமின்றி அழிந்துவிடும்.

(26) 40.26. ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விட்டுவிடுங்கள், நான் மூஸாவுக்குத் தண்டனையாக அவரைக் கொன்றுவிடுகிறேன். அவர் என்னைத் தடுப்பதற்காக தன் இறைவனை அழைக்கட்டும். தனது இறைவனை அவர் அழைப்பதை நான்பொருட்படுத்தமாட்டேன். நிச்சயமாக அவர் நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது கொலை, அழித்தல் ஆகியவற்றால் பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நான் அஞ்சுகிறேன்.”

(27) 40.27. ஃபிர்அவ்னின் மிரட்டலை அறிந்த போது மூஸா அவரிடம் கூறினார்: “சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மறுமைநாளின் மீதும் அங்கு நடைபெறும் விசாரணை, தண்டனையின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் ஒவ்வொருவனை விட்டும் என் இறைவனாகவும் உங்கள் இறைவனாகவும் இருப்பவனிடம் ஒதுங்கி அவனின்பால் நான் பாதுகாவல் தேடுகிறேன்.”

(28) 40.28. ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த தன் சமூகத்தை விட்டும் நம்பிக்கைகொண்டதை மறைத்து வைத்திருந்த நம்பிக்கையாளர் ஒருவர் தன் சமூகம் மூஸாவை கொலை செய்ய உறுதிபூண்டதை நிராகரித்து கூறினார்: “எந்தக் குற்றமும் செய்யாத இந்த மனிதரை “என் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக கொல்லப்போகிறீர்களா? நிச்சயமாக அவர், தான் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட உண்மையான தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் உங்களிடம் கொண்டுவந்தும் உள்ளார். ஒருவேளை அவர் பொய்யராக இருந்தால் அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரித்த வேதனைகளில் சில விரைவாக உங்களை வந்தடையலாம். நிச்சயமாக அல்லாஹ், தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கும், அவன்மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் புனைந்துகூறுவோருக்கும் சத்தியத்தின்பால் பாக்கியமளிக்க மாட்டான்.

(29) 40.29. என் சமூகமே! இன்றைய தினம் எகிப்தில் நீங்கள் மேலோங்கியவர்களாக ஆட்சியுடன் இருக்கிறீர்கள். மூஸாவைக் கொலை செய்வதன் காரணமாக ஏற்படும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எமக்கு யார் உதவ முடியும்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் சொல்வதே சட்டம். எனது முடிவே முடிவு, குழப்பத்தையும் தீங்கையும் தடுக்கும் பொருட்டு மூஸாவைக் கொல்வதற்கு முடிவெடுத்துவிட்டேன். நான் உங்களுக்கு நேரான வழியைத்தான் காட்டுகிறேன்.”

(30) 40.30. அந்த நம்பிக்கையாளர் தம் சமூகத்தின் நலம் நாடியவராகக் கூறினார்: “நிச்சயமாக -நீங்கள் மூஸாவை அநியாயமாக, விரோதமாக கொன்றுவிட்டால்- முந்தைய தூதர்களுக்கு எதிராக அணிதிரண்ட அந்த மக்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.

(31) 40.31. நூஹின் சமூகம், ஆத், ஸமூத் சமூகங்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களில் நிராகரித்து தூதர்களை மறுத்து பொய்ப்பித்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையை போன்று. அவர்களுக்கு பின்வந்தவர்களிலும் நிராகரிப்பினாலும் தூதர்களை பொய்ப்பித்ததினாலும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அவன் அடியார்களின் மீது அநீதி இழைக்க விரும்பமாட்டான். நிச்சயமாக உரிய கூலியை வழங்கும் விதமாக அவர்கள் செய்த பாவங்களின் காரணமாகத்தான் அவன் அவர்களைத் தண்டிக்கிறான்.

(32) 40.32. என் சமூகமே! நிச்சயமாக நான் உங்கள் மீது மறுமையை அஞ்சுகிறேன். அந்த நாளில் உறவின் அடிப்படையிலோ, பதவியின் அடிப்படையிலோ மக்கள் ஒருவரையொருவர் அழைப்பார்கள், அந்த பயங்கர நிலமையில் இந்த வழிமுறை அவர்களுக்குப் பயனளிக்கும் என்ற எண்ணத்தில்.

(33) 40.33. அந்த நாளில் நீங்கள் நரகத்தைவிட்டும் பயத்தால் விரண்டோடுவீர்கள். அப்போது அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடியவர் யாரும் இருக்கமாட்டார். யாரை அல்லாஹ் கைவிட்டு நம்பிக்கை கொள்வதற்கு பாக்கியமளிக்கமாட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் நேர்வழிக்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.

(34) 40.34.மூஸாவுக்கு முன்னர் யூசுஃப் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்தவற்றைக்குறித்து நீங்கள் சந்தேகத்திலேயே, பொய்ப்பிப்பதிலேயே இருந்தீர்கள். அவர் மரணித்த பிறகு உங்களின் சந்தேகம் இன்னும் அதிகமாகிவிட்டது. “அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்தத் தூதரையும் அனுப்பமாட்டான்” என்று நீங்கள் கூறினீர்கள். சத்தியத்தை விட்டும் நீங்கள் வழிகெட்டது போன்றே அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறக்கூடிய, அவன் ஒருவனே என்பதில் சந்தேகம் கொள்ளக்கூடிய ஒவ்வொருவரையும் வழிகெடுக்கிறான்.

(35) 40.35. அவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமலேயே அல்லாஹ்வின் சான்றுகளை பொய்யாக்குவதற்காக அவற்றில் வாதம் புரிகிறார்கள். அவர்களின் வாதம் அல்லாஹ்விடத்திலும் அவனையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுப்பிற்குரியதாகும். நம் சான்றுகளைப் பொய்யாக்குவதற்காக வாதம் புரியும் இவர்களின் உள்ளங்களில் நாம் முத்திரையிட்டது போன்றே சத்தியத்தை விட்டு கர்வம், ஆணவம்கொள்ளும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுகிறோம். எனவே அவர்களால் சரி, நன்மையின்பால் நேர்வழிபெற முடியாது.

(36) 40.36. ஃபிர்அவன் தன்னுடைய அமைச்சர் ஹாமானுக்குக் கூறினான்: “ஹாமானே! நான் வானங்களுக்கான பாதைகளை அடையும்பொருட்டு எனக்காக உயரமான ஒரு கட்டடத்தை எழுப்புவீராக,

(37) 40.37. அவனின்பால் சென்றடையக்கூடிய வானத்தின் வாயில்கள் மூலம் அவனை அடைந்து வணங்குவதற்குத் தகுதியான இறைவன் என்று மூஸா கருதும் அந்த இறைவனை நான் காண்பதற்காக. நிச்சயமாக நான் மூஸா வாதிடுவதில் அவர் பொய்யர் என்றே கருதுகிறேன்.” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டது. எனவே தான் ஹாமானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டான். அவன் சத்திய வழியை விட்டும் அசத்திய வழிகளின் பக்கம் திருப்பப்பட்டான். -தன்னிடம் உள்ள அசத்தியத்தை மேலோங்கச் செய்யவும் மூஸா கொண்டுவந்த சத்தியத்தை பொய் எனக் காட்டவும்- ஃபிர்அவ்ன் செய்த சூழ்ச்சி தோல்வியடையக் கூடியதே. ஏனெனில் நிச்சயமாக அதன் முடிவு ஏமாற்றமும் தோல்வி மிக்க முயற்சியும், முடிவடையாத துர்பாக்கியமுமே.

(38) 40.38. ஃபிர்அவ்னின் கூட்டத்தைச் சேர்ந்த நம்பிக்கைகொண்ட அந்த மனிதர் தன் சமூகத்திற்கு அறிவுரை வழங்கியவராக, அவர்களுக்கு சத்தியப்பாதையைக் காட்டியவராகக் கூறினார்: “என் சமூகமே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு சரியான, சத்தியத்தின்பால் கொண்டு செல்லும் நேரான வழியைக் காட்டுகிறேன்.

(39) 40.39. என் சமூகமே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய அற்ப இன்பங்கள்தாம். அதிலுள்ள அழிந்து விடும் இன்பங்கள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். திட்டமாக மறுமையின் வீடுதான் என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களை உள்ளடக்கியுள்ள நிலையான தங்குமிடமான வீடாகும். அதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படுங்கள். மறுமைக்காகச் செயற்படுவதை விட்டுவிட்டு உங்கள் உலக வாழ்கையில் மூழ்கிவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.

(40) 40.40. யார் ஒரு தீய செயல் செய்வாரோ அவர் அந்த செயலுக்கேற்பவே தண்டிக்கப்படுவார். அதற்கு அதிகமாக அவர் தண்டிக்கப்படமாட்டார். எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நற்செயல் புரிவாரோ அவர் ஆணாயினும் பெண்ணாயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் அத்தகைய புகழுக்குரிய பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சுவனத்தில் நுழைவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் வைத்திருக்கக்கூடிய என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை கணக்கின்றி வழங்கிடுவான்.

(41) 40.41. என் சமூகமே! எனக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்காரியம் செய்து உலக மற்றும் மறுமை வாழ்வின் இழப்பிலிருந்து காத்துக்கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கின்றேன். ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நிராகரித்து அவனுக்கு மாறுசெய்வதற்கு என்னை அழைப்பதன் மூலம் நரகில் நுழைவதற்கு என்னை அழைக்கின்றீர்கள்.

(42) 40.42. நான் அல்லாஹ்வை நிராகரித்து எனக்கு சரியான அறிவில்லாத ஒன்றை அவனுடன் இணைத்து வணங்குவதற்காக நீங்கள் உங்களின் அசத்தியத்தின் பக்கம் என்னை அழைக்கின்றீர்கள். யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் உங்களை அழைக்கின்றேன். தன் அடியார்களை மிக அதிகமாக மன்னிப்பவன்.

(43) 40.43. நிச்சயமாக நீங்கள் எதன்மீது உண்மையாக நம்பிக்கைகொண்டு வழிப்பட வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உண்மையாக அழைக்கப்படுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. தன்னை அழைப்பவர்களுக்கு அது பதிலளிக்காது. திட்டமாக நாம் அனைவரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப வேண்டும். நிச்சயமாக நிராகரிப்பதிலும் பாவங்கள் புரிவதிலும் வரம்பு மீறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். மறுமை நாளில் அவர்கள் அதிலே நிரந்தரமாக நுழைவார்கள்.”

(44) 40.44. அவரது அறிவுரையை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அவர் கூறினார்: “நான் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை நீங்கள் விரைவில் நினைவு கூறுவீர்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளாததற்காக வருத்தப்படுவீர்கள். நான் எனது விவகாரங்கள் அனைத்தையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு தனது அடியார்களின் செயல்களில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை.”

(45) 40.45. அவர்கள் அவரைக் கொல்ல நாடியபோது அவர்களின் தீய சூழ்ச்சிகளைவிட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாத்தான். ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களை மூழ்கடிக்கும் வேதனை சூழ்ந்துகொண்டது. அல்லாஹ் அவனையும் அவனது படையினர் அனைவரையும் இவ்வுலகிலேயே மூழ்கடித்தான்.

(46) 40.46. அவர்கள் மரணித்த பிறகு காலையிலும் மாலையிலும் அவர்களின் மண்ணறைகளில் நெருப்பில் முன்னிறுத்தப்படுவார்கள். மறுமை நாளில் அவர்களிடம் கூறப்படும்: “ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனாலும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுத்துக் கொண்டிருந்ததனாலும் கடுமையான வேதனையில் பிரவேசிக்கச் செய்யுங்கள்.”

(47) 40.47. -தூதரே!- நரகவாசிகளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்வதை நினைவுகூர்வீராக. பின்பற்றிய பலவீனமான தொண்டர்கள் பின்பற்றப்பட்ட கர்வம்கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “நிச்சயமாக உலகில் நாங்கள் வழிகேட்டில் உங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தோம். அல்லாஹ்வின் வேதனையில் சிறிதளவையாவது எங்களுக்குப் பகரமாக நீங்கள் சுமந்து எங்களை விட்டும் விலக்கி வைப்பீர்களா?”

(48) 40.48. அதற்கு கர்வம் கொண்ட பின்பற்றப்பட்ட அந்த தலைவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் -பின்பற்றிய, பின்பற்றப்பட்டு இருந்த அனைவரும்- நரகத்தில் ஒன்றுதான். ஒருவரும் மற்றவரின் மறுமையின் வேதனையிலிருந்து எதையும் சுமக்க மாட்டார். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்துவிட்டான். ஒவ்வொருவருக்கும் தக்க தண்டனையையே அளித்துள்ளான்.

(49) 40.49. வேதனைக்குள்ளாக்கப்படும் பின்பற்றிய, பின்பற்றப்பட்ட இரு சாராரும் நரகிலிருந்து வெளியேறி பாவமன்னிப்பு கோரி மீண்டும் உலகத்தின்பால் திரும்புவதில் நிராசையடைந்து நரகத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட காவலர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் நிலையான இந்த வேதனையை ஒருநாளாவது எங்களைவிட்டுக் குறைக்கட்டும்.”

(50) 40.50. நரகத்தின் பாதுகாவலர்கள் நிராகரிப்பாளர்களுக்கு மறுப்புக் கூறுவார்கள்: “உங்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளோடும் ஆதாரங்களோடும் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “ஆம். அவர்கள் எங்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் வந்து கொண்டிருந்தார்கள்.” அவர்களைக் கண்டிக்கும்விதமாக அந்தக் காவலர்கள் கூறுவார்கள்: “நீங்களே பிரார்த்தனை செய்யுங்கள். நாங்கள் நிராகரிப்பாளர்களுக்காக பரிந்துபேச மாட்டோம். நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனைகள் வீணானவையே. ஏனெனில் அவர்களது நிராகரிப்பின் காரணமாக அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

(51) 40.51. ஃபிர்அவ்னின் சம்பவத்தையும் அவனுக்கும் அவனைப் பின்பற்றியோருக்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நேர்ந்த கதியை அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு தூதர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைத்த வெற்றியைக் குறித்து குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு இவ்வுலகில் அவர்களின் ஆதாரங்களை மேலோங்கச் செய்தும் எதிரிகளுக்கு எதிராக அவர்களை வலுப்படுத்தியும் உதவி புரிகின்றோம். மறுமை நாளில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தும் உலகில் அவர்களை எதிர்த்தோரை நரகில் நுழைவித்தும் உதவிபுரிகின்றோம். இது சத்தியவாதிகள், நபிமார்கள் மற்றும் வானவர்கள் தாங்கள் எடுத்துரைத்து விட்டதற்கும் சமூகங்கள் அதனை பொய்ப்பித்ததற்கும் சாட்சி கூறியபிறகு நிகழக்கூடியதாகும்.

(52) 40.52. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்கள் அநீதிக்கு கூறும் காரணங்கள் எந்தப் பயனையும் அளிக்காத நாளே அந்நாளாகும். அந்த நாளில் அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். அவர்கள் மறுமையில் சந்திக்கும் வேதனைமிக்க தண்டனையால் தீய இருப்பிடத்தைப் பெறுவார்கள்.

(53) 40.53. நாம் மூஸாவுக்கு இஸ்ராயீலின் மக்கள் சத்தியத்தின்பால் நேர்வழி பெறும் ஞானத்தை வழங்கினோம். இஸ்ராயீலின் மக்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றுக்கொள்ளும் வேதமாக நாம் தவ்ராத்தை ஆக்கினோம்.

(54) 40.54. சத்தியத்தின்பால் வழிகாட்டியாகவும் நல்லறிவுடையோருக்கு நினைவூட்டலாகவும் வழங்கினோம்.

(55) 40.55. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்ப்பிப்பதையும் அவர்களால் நீர் சந்திக்கும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவிசெய்வதாக, வலுப்படுத்துவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக. காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.

(56) 40.56. நிச்சயமாக அல்லாஹ்வின் சான்றுகளைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமிருந்து வந்த, எந்த ஆதாரமுமின்றி அவற்றில் தர்க்கம் செய்பவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது அவர்களிடம் காணப்படும் சத்தியத்தின் மீது கொண்ட கர்வமும், மேலாதிக்க எண்ணமுமாகும். ஆனாலும் சத்தியத்தை மிகைக்க வேண்டுமென அவர்கள் நினைப்பதை அவர்களால் அடைய முடியாது. -தூதரே!- அல்லாஹ்வை உறுதியாக பற்றிக்கொள்வீராக. நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன், அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(57) 40.57. பிரமாண்டமான, விசாலமான வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப் பெரியதாகும். பிரமாண்டமான அவையிரண்டையும் படைத்தவன் இறந்தவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக, அவர்களை விசாரிப்பதற்காக அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். அதனைக்கொண்டு படிப்பினை பெற மாட்டார்கள். தெளிவாக இருந்தும் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்குரிய ஆதாரமாகக் கொள்ளமாட்டார்கள்.

(58) 40.58. பார்வையுடையோரும் பார்வையற்றோரும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி நற்செயல்கள் புரிந்தவர்களும் தீயநம்பிக்கை மற்றும் பாவங்களினால் தீய செயல்புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிய முயற்சி செய்பவர்களாக ஆகியிருப்பீர்கள்.

(59) 40.59. நிச்சயமாக மரணித்தவர்களுக்கு விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் சந்தேகம் இல்லாமல் வந்தே தீரும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதன் வருகையை நம்புவதில்லை. எனவேதான் அதற்காகத் தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.

(60) 40.60. -மனிதர்களே!- உங்களின் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் மட்டுமே கேளுங்கள். என்னை மட்டுமே வணங்குங்கள். உங்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கிறேன். உங்களை மன்னித்து உங்களுக்குக் கருணை காட்டுகிறேன். நிச்சயமாக என்னை மாத்திரம் வணங்காமல் கர்வம் கொள்பவர்கள் மறுமை நாளில் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”

(61) 40.61. அல்லாஹ்வே நீங்கள் நிம்மதியடைந்து, ஓய்வெடுப்பதற்காக இரவை இருளாகவும் நீங்கள் வேலை செய்வதற்காக பகலை பிரகாசமானதாகவும் ஆக்கித்தந்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிபவன். அவன் அவர்களின்மீது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தன் அருட்கொடைகளை முழுமைப்படுத்தியுள்ளான். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அவற்றிலிருந்து அவன் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.

(62) 40.62. உங்களின் மீது அருட்கொடைகளைப் பொழிந்த அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனை வணங்குவதை விட்டும் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற மற்றவர்களை வணங்குவதன் பக்கம் எவ்வாறு நீங்கள் செல்லலாம்?

(63) 40.63. இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனை மாத்திரம் வணங்குவதை விட்டு திருப்பப்பட்டதைப் போன்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் சான்றுகளை மறுக்கக்கூடியவர்களை சத்தியத்தின்பால் நேர்வழி பெறாமல் திருப்பி விடுகின்றோம். நேர்வழியின்பால் பாக்கியம் அளிக்கப்பட மாட்டார்கள்.

(64) 40.64. -மனிதர்களே!- அல்லாஹ்தான் உங்களுக்காக பூமியை நீங்கள் வசிப்பதற்கேற்ற இடமாகவும் வானத்தை விழுந்துவிடாமல் இருக்கும் உறுதியான முகடாகவும் ஆக்கினான். அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் உங்களை அழகிய முறையில் வடிவமைக்கிறான். தூய்மையான உணவிலிருந்து உங்களுக்கு உணவளிக்கிறான். இவ்வாறு உங்களின் மீது அருட்கொடைகளை பொழிந்தவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் பாக்கியம்மிக்கவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

(65) 40.65. அவன் மரணிக்காத நித்திய ஜீவன். அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனுடைய திருப்தியை மட்டும் நாடியவர்களாக பிரார்த்தித்தவாறும் வணங்கியவாறும் அவனையே அழையுங்கள். அவனுடைய படைப்புகளில் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடாதீர்கள். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

(66) 40.66. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடிய பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளை நான் வணங்குவதைவிட்டும் அல்லாஹ் என்னைத் தடுத்துள்ளான். அவ்வாறு வணங்குவது தவறானது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என்னிடம் வந்துள்ளன. நான் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

(67) 40.67. அவன்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அவருக்குப் பிறகு உங்களை விந்திலிருந்தும் பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து உங்களை சிறிய குழந்தைகளாக வெளிப்படுத்துகிறான். பின்னர் நீங்கள் உங்களின் பரிபூரண பலத்தை அடைகிறீர்கள். பின்னர் நீங்கள் பெரியவர்களாகி வயது முதிர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களில் இக்கட்டங்களுக்கு முன்னரே மரணிப்போரும் இருக்கின்றனர். நீங்கள் அல்லாஹ்வின் அறிவிலுள்ள குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள். அதை விட்டும் நீங்கள் அதிகரிக்கப்படுவதுமில்லை, குறைக்கப்படுவதுமில்லை. நீங்கள் இந்த ஆதாரங்களைக்கொண்டு அவன் வல்லமையையும் அவனது ஏகத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக (அவன் இவற்றையெல்லாம் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்).

(68) 40.68. அவன் கைவசமே வாழ்வும் மரணமும் உள்ளது. அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்துவிட்டால் அந்த விடயத்துக்கு ஆகு என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும்.

(69) 40.69. -தூதரே!- அல்லாஹ்வின் சான்றுகள் தெளிவாக இருந்தும் பொய்ப்பித்தவர்களாக அவற்றில் தர்க்கம் புரிபவர்களை நீர் பார்க்கவில்லையா? தெளிவான சத்தியத்தை அவர்கள் புறக்கணிக்கும் நிலையைப் பார்த்து நீர் ஆச்சரியப்படுவீர்.

(70) 40.70. குர்ஆனையும் எமது தூதர்களுக்கு கொடுத்தனுப்பிய சத்தியத்தையும் பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களின் பொய்ப்பிப்பினால் ஏற்படும் விளைவை விரைவில் அறிந்துகொள்வார்கள். தீய முடிவையும் காண்பார்கள்.

(71) 40.71. அவர்களின் கழுத்துகளில் விலங்கிடப்பட்டு கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு வேதனை செய்யக்கூடிய வானவர்கள் அவர்களை இழுத்துச் செல்லும்போது அவர்கள் அதன் விளைவை அறிந்துகொள்வார்கள்.

(72) 40.72. கடுமையாக கொதிக்கின்ற நீரில் அவர்களை இழுத்துவருவார்கள். பின்னர் நரகத்தில் எரிக்கப்படுவார்கள்.

(73) 40.73. பின்னர் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் இறைவனாக நினைத்து வணங்கி இணைவைத்துக் கொண்டிருந்த கடவுள்கள் எங்கே?” என்று.

(74) 40.74. அல்லாஹ்வை விடுத்து பயனளிக்கவோ, தீங்கிளைக்கவோ முடியாத உங்களின் சிலைகள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் மறைந்துவிட்டன. நாங்கள் அவற்றைக் காணவில்லை. மாறாக நாங்கள் உலகில் வணக்கத்திற்குத் தகுதியான எதையும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. இவர்களை வழிகெடுத்ததைப் போன்றே அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கிறான்.

(75) 40.75. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களாக நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததனாலும் அந்தப் பெருமையில் வரம்பு மீறியதனாலாகும்.

(76) 40.76. நரகத்தின் வாயில்களில் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.

(77) 40.77. -தூதரே!- உம் சமூகத்தினர் அளிக்கும் துன்பங்களையும் அவர்களின் பொய்ப்பிப்பையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவி செய்வதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாத உண்மையானதாகும். நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனைகளில் சிலவற்றை -பத்ர் போரில் நிகழ்ந்தது போன்று- உமக்குக் காட்டுவோம் அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிடுவோம். மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்கிடுவோம். அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்திடுவோம். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்துகிடப்பார்கள்.

(78) 40.78. -தூதரே!- உமக்கு முன்னர் ஏராளமான தூதர்களை அவர்களின் சமூகங்களின்பால் நாம் அனுப்பியுள்ளோம். ஆயினும் அந்த மக்கள் தூதர்களை பொய்ப்பித்து அவர்களைத் துன்புறுத்தினார்கள். தூதர்கள் தாங்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுமையாக சகித்துக் கொண்டார்கள். அந்த தூதர்களில் சிலரின் செய்திகளை நாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்; சிலரின் செய்திகளை எடுத்துரைக்கவில்லை. எந்தவொரு தூதரும் தனது கூட்டத்திடம் தன் இறைவனின் நாட்டமின்றி எந்தவொரு சான்றையும் கொண்டுவர முடியாது. எனவே நிராகரிப்பாளர்கள் சான்றுகளைக் கொண்டுவருமாறு தமது தூதர்களிடம் வேண்டுகோள் விடுப்பது அநியாயமாகும். வெற்றியைக் கொண்டோ தூதர்களுக்கும் அந்த மக்களுக்கும் இடையே நியாயமான தீர்ப்பைக் கொண்டோ இறைவனின் கட்டளை வந்துவிட்டால் நிராகரிப்பாளர்கள் அழிக்கப்படுவார்கள், தூதர்கள் காப்பாற்றப்படுவார்கள். அப்போது அசத்தியவாதிகள் தமது நிராகரிப்பினால் தம்மை அழிவிற்கான காரணிகளில் இட்டுச்சென்று -அந்நிலைமையில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் போது- நஷ்டமடைந்துவிடுவார்கள்.

(79) 40.79. அல்லாஹ்வே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். அவற்றில் சிலவற்றில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். சிலவற்றின் இறைச்சியை உண்கிறீர்கள்.

(80) 40.80. அந்த படைப்பினங்களில் உங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் புதுப்புது பல பயன்களும் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் விரும்பும் உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். அவற்றில் பிரதானமானது தரைப் பயணமும் கடல் பயணமுமாகும்.

(81) 40.81. அவன் தான் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் தன்னுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். அவனுடைய சான்றுகள் என்று உங்களிடம் உறுதியான பின்னர் எதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்?

(82) 40.82. இந்த நிராகரிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து இதற்கு முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்து படிப்பினை பெற வேண்டாமா? அவர்கள் இவர்களை விட அதிக செல்வங்கள் பெற்றவர்களாவும் பலம்மிக்கவர்களாகவும் பூமியில் அதிக அடையாளங்களை விட்டுச்சென்றவர்களாகவும் இருந்தார்கள். அழிக்கக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் சேர்த்து வைத்த எந்த பலமும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

(83) 40.83. அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் கொண்டு வந்தபோது அவற்றை அவர்கள் மறுத்தார்கள். தூதர்கள் கொண்டுவந்ததற்கு மாறாக தங்களிடமுள்ள அறிவைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தார்கள். அவர்கள் எந்த வேதனையைக் குறித்து பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களின் மீது இறங்கியது. அந்த வேதனையைக் குறித்துதான் தூதர்கள் அவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

(84) 40.84. நம்முடைய வேதனையை அவர்கள் காணும்போது, “நாங்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கைகொண்டோம். அவனைத் தவிர நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த இணைகள், சிலைகளை நிராகரித்துவிட்டோம்” என்று ஒப்புக்கொண்டவர்களாக கூறுவார்கள். அப்போது அவர்கள் ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

(85) 40.85. அவர்கள் மீது இறங்கும் நம்முடைய வேதனையை காணும் சமயத்தில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நிச்சயமாக வேதனையைக் காணும்போது அடியார்கள் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்காது என்பதே அடியார்களின் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததன் காரணமாக, தண்டனையைக் காண முன் பாவமன்னிப்புக் கோராமல் இருந்ததன் மூலம் அழிவிற்கான காரணிகளைத் தேடி தண்டனை இறங்கும் போது நஷ்டமடைந்துவிட்டார்கள்.