44 - ஸூரா அத்துகான் ()

|

(1) 43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 43.2. சத்தியத்திற்கு நேர்வழிகாட்டும் பாதையைத் தெளிவுபடுத்தும் அல்குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.

(3) 44.3. நிச்சயமாக நாம் கண்ணியமிக்க இரவிலே குர்ஆனை இறக்கியுள்ளோம். அது பெரும் நன்மைகளை உள்ளடக்கிய இரவாகும். திட்டமாக நாம் இந்த குர்ஆனைக் கொண்டு அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றோம்.

(4) 44.4. அந்த இரவில்தான் அந்த வருடத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் வாழ்வாதாரம், தவணைகள் மற்றும் இன்னபிறவற்றோடு தொடர்புடைய உறுதியான ஒவ்வொரு விடயமும் முடிவுசெய்யப்படுகின்றன.

(5) 44.5. நம்மிடமிருந்து ஒவ்வொரு உறுதியான விஷயத்தையும் நாம் தீர்மானிக்கின்றோம். நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம்.

(6) 44.6. -தூதரே!- தூதர்கள் அனுப்பப்படுவோருடன் உம் இறைவன் கொண்ட கருணையினால்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களையும் எண்ணங்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(7) 44.7. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் இறைவன். நீங்கள் இதனை உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் என் தூதரின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள்.

(8) 44.8. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், மரணமடையச் செய்கிறான். அவனைத் தவிர வேறு யாராலும் உயிர்ப்பிக்கவோ, மரணமடையச் செய்யவோ முடியாது. அவன் உங்களின் இறைவன்; முன்சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவன்.

(9) 44.9. இந்த இணைவைப்பாளர்கள் இதனை உறுதியாக நம்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் அதில் சந்தேகம்கொண்டு தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு அதனை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

(10) 44.10. -தூதரே!- வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் அந்நாளில் உமது சமூகத்துக்கு அண்மையில் ஏற்படும் வேதனையை எதிர்பார்ப்பீராக. பசியின் கடுமை காரணமாக அதனைத் தமது கண்களால் அவர்கள் காண்பார்கள்.

(11) 44.11. உமது சமூகம் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அவர்களிடம் கூறப்படும்: “உங்களைப் பீடித்த இந்த தண்டனை வேதனை மிக்க தண்டனையாகும்.”

(12) 44.12. அவர்கள் தங்கள் இறைவனிடம் மன்றாடியவர்களாகப் பிரார்த்திப்பார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மீது அனுப்பிய வேதனையை எங்களைவிட்டும் திருப்புவாயாக. நீ எங்களைவிட்டும் அதனை நீக்கினால் உன்மீதும் உன் தூதரின் மீதும் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கைகொள்வோம்.”

(13) 44.13. தெளிவான தூதுடன் அவர்களது நம்பிக்கைக்குரிய, உண்மையான தூதர் அவர்களிடம் வந்தபோது ஏற்றுக்கொள்ளாமல் தற்போது இறைவனிடம் மன்றாடி நினைவு கூறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்?

(14) 44.14. பின்பு அவர்கள் அவரை உண்மைப்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். அவரைக்குறித்து அவர்கள் கூறினார்கள்: “இவர் தூதரல்ல. மற்றவர்கள் கற்றுக் கொடுக்கும் மாணவர். இவர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”

(15) 44.15. நிச்சயமாக நாம் உங்களைவிட்டும் வேதனையை சிறிதளவு நீக்கும் போது நிச்சயமாக நீங்கள் உங்களின் நிராகரிப்பு, பொய்ப்பிப்பின் பக்கம்தான் திரும்பக் கூடியவர்களாகவே உள்ளீர்கள்.

(16) 44.16. -தூதரே!- நாம் உமது சமூகத்தின் நிராகரிப்பாளர்களை பத்ருடைய தினத்தில் கடுமையாகப் பிடிக்கும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரை பொய்ப்பித்ததனால் நிச்சயமாக நாம் அவர்களை பலிதீர்த்தே தீருவோம்.

(17) 44.17. நாம் அவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்தோம். அல்லாஹ்விடமிருந்து சங்கையான ஒரு தூதர் அவர்களிடம் வந்து அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் அவனையே வணங்குமாறும் அவர்களை அழைத்தார். அவர்தான் மூஸா.

(18) 44.18. மூஸா ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களாவர். அவர்களை அடிமைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதராவேன். அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கூறிய விஷயங்களில் நான் நம்பிக்கைக்குரியவனாவேன். அதில் எதையும் அதிகரித்துவிடவோ, குறைத்துவிடவோ மாட்டேன்.

(19) 44.19. அல்லாஹ்வை வணங்காமலும், அவனுடைய அடியார்கள் மீது உங்களை உயர்த்திக்கொண்டும் அவனிடம் கர்வம் காட்டாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவந்துள்ளேன்.

(20) 44.20. நீங்கள் என்னைக் கல்லெறிந்து கொல்வதை விட்டும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

(21) 44.21. நீங்கள் நான் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவில்லையெனில் என்னைவிட்டு விலகிவிடுங்கள். தீங்கு செய்யும் நோக்குடன் என்னை நெருங்காதீர்கள்.

(22) 44.22. மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “இந்த மக்கள் -ஃபிர்அவ்னும் அவன் சமூகத்து தலைவர்களும்- குற்றம் செய்யும் மக்களாக, விரைவாகத் தண்டிக்கப்படத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.”

(23) 44.23. அவரது சமூகத்தினரை இரவோடு இரவாக அழைத்துச் செல்லும்படி அல்லாஹ் மூஸாவுக்குக் கட்டளையிட்டான். ஃபிர்அவ்னும் அவனது சமூகத்தினரும் நிச்சயமாக அவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதையும் அவன் அறிவித்தான்.

(24) 44.24. அவரும் இஸ்ராயீலின் மக்களும் கடலைக் கடக்கும்போது அது எவ்வாறு அசையாமல் இருந்ததோ அப்படியே விட்டுவிடுமாறும் அவன் கட்டளையிட்டான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் கடலில் மூழ்கி அழிவோரே.

(25) 44.25. ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களுக்குப் பின்னால் எத்தனையோ தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் விட்டுச் சென்றார்கள்!

(26) 44.26. எத்தனையோ வயல்களையும் அழகிய அவைகளையும் அவர்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்!

(27) 44.27. அவர்கள் அனுபவித்த எத்தனையோ சுக இன்பங்களையும் அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்.

(28) 44.28. இவ்வாறு நாம் உங்களுக்கு வர்ணித்தவாறே அவர்களுக்கு நிகழ்ந்தது. அவர்களின் தோட்டங்களையும் நீருற்றுகளையும் வயல்களையும் இடங்களையும் வேறொரு சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்களுக்கு சொந்தமாக்கினோம்.

(29) 44.29. பிர்அவ்னும் அவனது சமூகமும் மூழ்கியபோது அவர்களுக்காக வானமும் அழவில்லை; பூமியும் அழவில்லை. அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்கு அவகாசமும் அளிக்கப்படவில்லை.

(30) 44.30. நாம் இஸ்ராயீலின் மக்களை இழிவுமிக்க வேதனையிலிருந்து காப்பாற்றினோம். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் அவர்களின் ஆண்மக்களை கொலைசெய்தும் பெண்மக்களை உயிருடன் விட்டுவைத்துக்கொண்டும் இருந்தார்கள்.

(31) 44.31. ஃபிர்அவ்னின் வேதனையிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவன் அல்லாஹ் மற்றும் அவனது மார்க்கத்தின் கட்டளையை மீறும் பெருமைபிடித்தவனாக இருந்தான்.

(32) 44.32. நாம் இஸ்ராயீலின் மக்களை நம்மிடமிருந்துள்ள அறிவின் பிரகாரம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அனைவரைவிடவும் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அதிகமான தூதர்கள் அவர்களில் இருந்தனர்.

(33) 44.33. மூஸாவைப் பலப்படுத்திய அத்தாட்சிகளையும் சான்றுகளையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மன்னு, ஸல்வா போன்ற அவை அவர்களுக்கு வெளிரங்கமான அருள்களாக இருந்தன.

(34) 44.34. நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்து பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்:

(35) 44.35. “ஒரு முறை மாத்திரமே நாம் மரணிப்போம். அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. அந்த மரணத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்.

(36) 44.36. -முஹம்மதே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும், ‘இறந்தவர்களை மீண்டும் விசாரணை, கூலி கொடுக்கப்படுவதற்காக அல்லாஹ் அவர்களை உயிரோடு எழுப்புவான்’ என்று கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிருடன் கொண்டுவாருங்கள்.”

(37) 44.37. -தூதரே!- உம்மை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் பலத்தில் சிறந்தவர்களா? அல்லது துப்பவு சமூகமும் அவர்களுக்கு முன்வந்த ஆத் ஸமூத் போன்றவர்கள் சிறந்தவர்களா? நாம் அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றம் புரியும் மக்களாக இருந்தார்கள்.

(38) 44.38. நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை.

(39) 44.39. நாம் வானங்களையும் பூமியையும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகவே படைத்துள்ளோம். ஆயினும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள்.

(40) 44.40. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளிக்கும் மறுமை நாள் படைப்புகள் அனைத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாகும். அந்நாளில் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டுவான்.

(41) 44.41. அந்ந நாளில் எந்த உறவினரும் தன் உறவினருக்கோ எந்த நண்பரும் தன் நண்பருக்கோ பயனளிக்க முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நிச்சயமாக அந்நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கும். அதனை வேறு எவரும் வாதிட சக்திபெறமாட்டார்கள்.

(42) 44.42. ஆயினும் மக்களில் அல்லாஹ் யார் மீது கருணை காட்டினானோ அவர்களைத் தவிர. நிச்சயமாக அவர் தாம் செய்த நற்செயல்களைக் கொண்டு பயனடைவார். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது அடியார்களில் தவ்பா செய்பவர்களின் மீது கருணை காட்டுபவன்.

(43) 44.43. அல்லாஹ் மறுமையைக் குறித்து குறிப்பிட்ட பிறகு மனிதர்கள் தங்களின் கூலிக்கேற்ப பல பிரிவினர்களாகப் பிரிந்துவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் நரகத்தின் அடித்தளத்தில் முளைப்பித்த ஸக்கூம் மரமே (அது)

(44) 44.44. நிராகரிப்பாளனான பெரும் பாவியின் உணவாகும். அதன் மோசமான கனிகளிலிருந்து அவன் உண்பான்.

(45) 44.45. அது கருப்பு எண்ணெய்யைப் போலிருக்கும். அதன் கடுமையான சூட்டினால் அவர்களின் வயிறுகளில் அது கொதிக்கும்.

(46) 44.46. அது கடும் சூடான நீர் கொதிப்பதைப் போன்றிருக்கும்.

(47) 44.47. நரகத்தின் காவலர்களிடம் கூறப்படும்: “அவனைப் பிடித்து நரகத்தின் நடுப்பகுதிக்கு பலவந்தமாக இழுத்துச் செல்லுங்கள்.

(48) 44.48. பின்னர் வேதனைக்குள்ளாகப்படும் அவன் தலை மீது கொதிக்கும் நீரைக் கொட்டுங்கள். வேதனையிலிருந்து அவன் விடுபட்டுவிடக்கூடாது.

(49) 44.49. இழிவுபடுத்தும் விதமாக அவனிடம் கூறப்படும்: “வேதனைமிக்க இந்த தண்டனையை சுவைத்துப் பார். நிச்சயமாக நீ உன்பக்கம் நெருங்க முடியாத பலமானவனாகவும் உன் சமூகத்தில் சங்கையானவனாகவும் இருக்கின்றாய்.

(50) 44.50. நிச்சயமாக இந்த வேதனையைத்தான் நீங்கள் மறுமையில் நிகழும் என்பதில் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அதனைக் காண்பதின் மூலம் இப்போது சந்தேகம் உங்களைவிட்டு முழுவதுமாக அகன்றுவிட்டது.

(51) 44.51. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் எல்லா வகையான தீங்குகளைவிட்டும் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.

(52) 44.52. தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.

(53) 44.53. சுவனத்தில் அவர்களுக்கு மெல்லிய மற்றும் கனமான பட்டாடைகள் அணிவிக்கப்படும். அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாகவே இருப்பார்கள். ஒருவர் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.

(54) 44.54. நாம் அவர்களை மேற்கூறப்பட்வற்றைக் கொண்டு கண்ணியப்படுத்தியது போன்று சுவனத்தில் விசாலமான கண்களையுடைய அதனுடைய கருப்புப் பகுதி கடும் கருப்பாகவும் அதன் வெள்ளைப் பகுதி கடும் வெள்ளையாகவும் இருக்கக்கூடிய அழகிய பெண்களை அவர்களுக்கு மணமுடித்து வைப்போம்.

(55) 44.55. தாங்கள் விரும்புகின்ற ஒவ்வொரு வகையான பழத்தையும் கொண்டுவருவதற்காக தங்களுக்குப் பணிவிடை செய்பவர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். அவை முடிந்துவிடும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.

(56) 44.56. அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உலகில் ஏற்பட்ட முதல் மரணத்தைத் தவிர வேறு மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள். அவர்களின் இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துவிட்டான்.

(57) 44.57. இது உம் இறைவன் அவர்களின் மீது அருள்புரியும் பொருட்டாகும். அவ்வாறு மேற்கூறப்பட்ட -சுவனத்தில் நுழையச்செய்து நரகை விட்டும் பாதுகாப்பதே- மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.

(58) 44.58. -தூதரே!- அவர்கள் அறிவுரை பெறும்பொருட்டு நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியான அரபியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம்.

(59) 44.59. உமக்கு வரக்கூடிய உதவியையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அழிவையும் எதிர்பார்ப்பீராக. நிச்சயமாக அவர்களும் உமக்கு அழிவு ஏற்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.