(1) 47.1. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய மார்க்கத்தைவிட்டும் மக்களைத் தடுத்தவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கிவிட்டான்.
(2) 47.2. யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து, அவன் தன் தூதர் முஹம்மது மீது இறக்கிய -அவர்களின் இறைவனிடமிருந்து வந்த உண்மையான- அல்குர்ஆன் மீது நம்பிக்கைகொண்டார்களோ அல்லாஹ் அவர்களின் பாவங்களைப் போக்கிவிடுவான். அவற்றிற்காக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவர்களின் உலக மற்றும் மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களையும் அவன் சீராக்கித் தந்திடுவான்.
(3) 47.3. இந்த இரு பிரிவினருக்குமான மேற்கூறப்பட்ட கூலிக்கான காரணம், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் தமது இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இரு பிரிவினரின் செயல்களில் காணப்படும் வேறுபாட்டினால் கூலியும் வேறுபட்டுள்ளது. எனவே அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள், நிராகரித்தவர்கள் ஆகிய இரு அணிகளின் விடயத்திலும் அல்லாஹ் தீர்ப்புச்செய்து தெளிவாக்கியது போல் அல்லாஹ் மக்களுக்கு உதாரணங்களைக் கூறுகிறான். நிகரானதை நிகரானதுடன் சேர்த்துவிடுகிறான்.
(4) 47.4. -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களில் போர்புரிபவர்களை நீங்கள் போர்க்களத்தில் சந்தித்தால் உங்களின் வாள்களால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவிக்கும்வரை போரிடுங்கள். அவர்களின் பலத்தை அடியோடு அழித்துவிடுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவித்த பின் கைதிகளின் விலங்குகளைக் கட்டுங்கள். அவர்களை சிறைபிடித்தால் அப்போது நலனுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள்மீது கிருபை செய்து அவர்களிடம் எதுவும் பெறாமல் அவர்களை விடுவித்துவிடலாம் அல்லது ஈட்டுத்தொகை அல்லது வேறு எதனையோ பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்றோ அல்லது நம்பிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்தோ போர் முடிவடையும் வரை நீங்கள் போரையும் கைது செய்வதையும் தொடருங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களைக் கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதித்தல், நாட்கள் சுழன்று வருதல், சிலர் சிலரை வெற்றிகொள்தல் ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் நாடினால் போர் புரியாமலேயே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியளித்திருப்பான். ஆயினும் அவன் உங்களில் சிலரை சிலரைக்கொண்டு சோதிப்பதற்காகவே போரைக் கடமையாக்கியுள்ளான். நம்பிக்கையாளர்களில் போரிடுபவர்கள் யார்? போரிடாதவர்கள் யார்? என்பதைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளனைக்கொண்டு நிராகரிப்பாளனைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளன் கொல்லப்பட்டால் அவன் சுவனம் செல்வான். அவன் நிராகரிப்பாளனைக் கொன்றால் அந்த நிராகரிப்பாளன் நரகம் செல்வான். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிடமாட்டான்.
(5) 47.5. உலக வாழ்வில் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவான். அவர்களின் விவகாரங்களைச் சீராக்குவான்.
(6) 47.6. மறுமையில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதன் பண்புகளை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்தியுள்ளான். எனவே அவர்கள் அதனை அறிந்துள்ளனர். அவன் அவர்களுக்கு மறுமையில் அவர்களின் வசிப்பிடங்களை அறிமுகப்படுத்திவைப்பான்.
(7) 47.7. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கும் மார்க்கத்திற்கும் உதவுவதன் மூலமும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதன் மூலமும் அல்லாஹ்வுக்கு உதவிசெய்தால் அவர்களுக்கெதிராக உங்களுக்கு வெற்றியளித்து அவன் உங்களுக்கு உதவி புரிவான். போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும்போது உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான்.
(8) 47.8. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு இழப்பும் அழிவும்தான் உண்டு. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை வீணாக்கிவிடுவான்.
(9) 47.9. அவர்களுக்கு ஏற்படும் இந்த வேதனைக்கான காரணம், அவர்கள் அல்லாஹ் தன் தூதர்மீது இறக்கிய குர்ஆனை அதிலுள்ள ஏகத்துவத்தின் காரணமாக வெறுத்தார்கள் என்பதுதான். அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் வீணாக்கி விட்டான். அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
(10) 47.10. இந்த பொய்ப்பிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு வேதனைமிக்கதாகவே இருந்தது. அல்லாஹ் அவர்களின் வசிப்பிடங்களை அழித்துவிட்டான். அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் செல்வங்களையும் அழித்துவிட்டான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் உண்டு.
(11) 47.11. இரு பிரிவினருக்கும் வழங்கப்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த கூலிக்கான காரணம், அல்லாஹ் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு எந்த உதவியாளனும் இல்லை.
(12) 47.12. நிச்சயமாக அல்லாஹ் தன்மீதும் தன் தூதர்மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றி உலகில் அனுபவிக்கிறார்கள். கால்நடைகள் உண்பதைப்போல உண்கிறார்கள். அவர்களின் வயிறுகளையும் மர்ம உறுப்புகளையும் தவிர அவர்களுக்கு வேறு கவலைகள் எதுவும் இல்லை. நரகமே மறுமை நாளில் அவர்களின் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
(13) 47.13. தூதரே! உம்மை வெளியேற்றிய இந்த மக்காவாசிகளைவிட முன்னர் வாழ்ந்த எத்தனையோ ஊர்மக்கள் அதிக செல்வங்களையும் பிள்ளைகளையும் பெற்றவர்களாகவும் பலம்மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்தபோது அழித்துவிட்டோம். அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அதிலிருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே நாம் மக்காவாசிகளை அழிக்க நாடினால் அது நமக்கு இயலாததல்ல.
(14) 47.14. தம் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தைப் பெற்று அவனை தெளிவான அகப்பார்வையோடு வணங்கிக் கொண்டிருப்பவரும், ஷைத்தான் தீய செயலை அழகாக்கிக் காட்டி அதனால் சிலைவணக்கம் மற்றும் பாவங்களில் ஈடுபடல், தூதர்களை பொய்ப்பித்தல் ஆகிய தம் மன இச்சைகளின்பால் சாய்ந்து அதனை பின்பற்றி கொண்டிருப்பவரும் சமமாவார்களா என்ன?
(15) 47.15. -தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள சுவனத்தின் வர்ணனை இதுதான்: “நீண்ட நாட்கள் சென்றாலும் மாறாத மணமும் சுவையும் உடைய நீரினைக் கொண்ட ஆறுகள் இருக்கும். மாறாத சுவையுடைய பாலாறுகளும் அருந்துபவர்களுக்குச் சுவையான மது ஆறுகளும் கலப்படமற்ற தூய்மையான தேனாறுகளும் இருக்கும். அங்கு அவர்களுக்கு தாங்கள் விரும்பும் அனைத்துவகையான கனிகளும் கிடைக்கும். இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுவான். அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். இவ்வாறு கூலியைப் பெறுபவர், வெளியேற முடியாதபடி நிரந்தரமாக நரகத்தில் தங்கி, கடும் சூடான நீர் புகட்டப்பட்டு, அதன் கடுமையான சூட்டினால் வயிற்றிலுள்ள குடல்கள் துண்டுதுண்டாக்கப்படுபவருக்குச் சமமாவாரா?
(16) 47.16. -தூதரே!- நயவஞ்சகர்களில் சிலர் ஏற்றுக்கொள்ளும் நோக்கில் அல்லாமல் புறக்கணிக்கும் எண்ணத்தில் நீர் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். அவர்கள் உம்மிடமிருந்து வெளியேறிவிட்டால் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை வழங்கினானோ அவர்களிடம் எதுவும் அறியாததுபோல் புறக்கணித்தவர்களாக கேட்கிறார்கள், அவர் இப்போது என்ன கூறினார், என்று.” இவர்களின் உள்ளங்களில்தான் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். எனவே நன்மையான எதுவும் இவர்களின் உள்ளங்களை அடையாது. அவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றினார்கள். எனவே அவை அவர்களை சத்தியத்தைவிட்டும் குருடாக்கிவிட்டது.
(17) 47.17. யாரெல்லாம் சத்தியப் பாதையை அடைந்து தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றினார்களோ அவர்களின் இறைவன் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டலையும் பாக்கியத்தையும் அதிகப்படுத்துகிறான். நரகத்திலிருந்து காப்பாற்றும் செயல்களைச் செய்யும் உள்ளுதிப்பை ஏற்படுத்துகிறான்.
(18) 47.18. இந்த நிராகரிப்பாளர்கள் மறுமை நாள் தங்களிடம் திடீரென அதுபற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாமல் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வெளிப்பட்டுவிட்டன. முஹம்மது தூதராக அனுப்பப்பட்டதும் சந்திரன் பிளக்கப்பட்டதும் அவற்றில் சிலவையே. மறுமை நாள் நிகழ்ந்துவிட்டால் அவர்களால் எவ்வாறு அறிவுரை பெற்றுக்கொள்ள முடியும்?
(19) 47.19. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக அறிந்துகொள்வீராக. அல்லாஹ்விடம் உம் பாவங்களுக்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்கள் செய்த பாவங்களுக்காகவும் மன்னிப்புக் கோருவீராக. நீங்கள் பகலில் செயல்படுவதையும் இரவில் ஓய்வெடுப்பதையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(20) 47.20. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்கள் அவன் தன் தூதரின் மீது போர் புரிவதன் சட்டம் யாது என்பதை உள்ளடக்கிய ஏதேனும் அத்தியாயத்தை இறக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர்களாகக் கூறுகிறார்கள்: “அல்லாஹ் போர் புரிவது தொடர்பாக ஓர் அத்தியாயத்தை இறக்க வேண்டாமா?.” -தூதரே!- அவன் போர் புரிவது பற்றி அதன் தெளிவான சட்டங்களை உள்ளடக்கி ஏதேனும் உறுதியான அத்தியாயத்தை இறக்கிவிட்டால் யாருடைய உள்ளத்தில் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் கடுமையான பயத்தினால் மயக்கமுற்றவன் பார்ப்பதைபோல உம்மைப் பார்க்கிறார்கள். எனவே, பயத்தினால் போரை விட்டுப் பின்தங்கியதால் அவர்களின் அழிவு நெருங்கிவிட்டதாக அவர்களை அல்லாஹ் எச்சரித்தான்.
(21) 47.21. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நல்லவற்றைக் கூறுவதே அவர்களுக்கு நல்லது. போர் கடமையாக்கப்பட்டவுடன் அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் உண்மையாக இருந்து அவனுக்குக் கட்டுப்பட்டிருந்தால், நயவஞ்சகம் மற்றும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை விடவும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும்.
(22) 47.22. நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணித்தால் நீங்கள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தவாறு பெரும்பாலும் நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் பூமியில் குழப்பம் விளைவிப்பீர்கள். குடும்ப உறவுகளை துண்டித்து விடுவீர்கள்.
(23) 47.23. பூமியில் குழப்பம் விளைவித்து, உறவுகளைத் துண்டிக்கும் அவர்களைத்தான் அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சத்தியத்தை செவியேற்காதவாறு அவர்களின் காதுகளைச் செவிடாக்கி படிப்பினை பெறும்பொருட்டு பார்க்க முடியாதவாறு பார்வைகளையும் குருடாக்கிவிட்டான்.
(24) 47.24. குர்ஆனைப் புறக்கணிக்கும் இவர்கள் அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்கள் அதை சிந்தித்துப் பார்த்திருந்தால் அது அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் அறிவித்திருக்கும். எல்லாத் தீமைகளைவிட்டும் தூரமாக்கியிருக்கும். அல்லது அவர்களின் உள்ளங்களில் உபதேசம் உட்செல்லவோ அறிவுரை பயனளிக்கவோ முடியாத அளவுக்கு உறுதியாக மூடி பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா?
(25) 47.25. நிச்சயமாக தூதர் உண்மையானவர் என்பதற்கான ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பின்னரும் தங்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு நிராகரிப்பின் பக்கமும் நயவஞ்சகத்தின் பக்கமும் சென்றவர்களுக்கு ஷைத்தான்தான் அவர்களின் நிராகரிப்பையும் நயவஞ்சகத்தையும் அலங்கரித்துக் காட்டினான். அதனை அவர்களுக்கு இலகுபடுத்தினான். நீண்ட ஆசைகளைக் காட்டி ஆர்வமூட்டினான்.
(26) 47.26. அவர்கள் இந்த வழிகேட்டைப் பெற்றதற்கான காரணம் தன் தூதருக்கு இறக்கப்பட்டதை வெறுக்கும் இணைவைப்பாளர்களிடம் இரகசியமாக “யுத்தத்திற்குத் தடையேற்படுத்தல் போன்ற சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியதுதான். அவர்கள் இரகசியமாகக் கூறுவதையும் வெளிப்படையாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிகிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே அவற்றில் தான் நாடியதைத் தன் தூதருக்கு அவன் வெளிப்படுத்துகிறான்.
(27) 47.27. உயிர்களைக் கைப்பற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களைக் கைப்பற்றும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையை, அவர்களின் மோசமான நிலைமையை நீர் காண வேண்டுமே!
(28) 47.28. அவர்கள் அனுபவிக்கும் இந்த கடுமையான வேதனைக்குக் காரணம், அவர்கள், நிராகரிப்பு, நயவஞ்சகம், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தல் ஆகிய அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடிய ஒவ்வொன்றையும் பின்பற்றி, இறைவனின்பால் நெருக்கிவைக்கும், அவனது திருப்தியைப் பெற்றுத்தரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுதல், அவனுடைய தூதரைப் பின்பற்றுதல் ஆகியவற்றை வெறுத்தார்கள் என்பதுதான். ஆகவே அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்.
(29) 47.29. உள்ளத்தில் சந்தேகம் கொண்ட நயவஞ்சகர்கள் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலுள்ள குரோதங்களை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டார்களா? பொய்யர்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார்? என்பதைப் பிரித்தறியவும் நயவஞ்சகர்கள் அவமானப்படவும் அவன் சோதனைகளினால் பரீட்சித்து நிச்சயம் அவற்றை வெளிப்படுத்துவான்.
(30) 47.30. தூதரே! நாம் உமக்கு நயவஞ்சகர்களை காட்ட நாடியிருந்தால் உமக்குக் காட்டியிருப்போம். நீர் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அவர்களை அறிந்துகொள்வீர். விரைவில் அவர்கள் பேசும் முறையினைக் கொண்டும் அவர்களை அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்களின் செயல்களை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(31) 47.31. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வீரமரணம் அடைபவர்களையும் அவனது எதிரிகளுடனான போராட்டத்தில் பொறுமையாக நிலைத்திருப்பவர்களையும் நாம் அறிந்துகொள்ளும்பொருட்டு நிச்சயம் உங்களை, ஜிஹாத், எதிரிகளுடனான போர் ஆகியவற்றின் மூலம் சோதித்தே தீருவோம். நாம் உங்களை சோதித்து உங்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்துகொள்வோம்.
(32) 47.32. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டுத் தடுத்து, அவனது தூதருக்கு -அவர் உண்மையான நபிதான் என்பது தெளிவானபிறகும்- மாறுசெய்து அவருடன் பகைமை பாராட்டுபவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிடுவான்.
(33) 47.33. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வுடையவும் தூதருடையவும் ஏவல்களை எடுத்து நடந்தும் அவர்களின் விலக்கலைத் தவிர்ந்தும் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்களின் செயல்களை நிராகரிப்பு, முகஸ்துதி போன்ற ஏனையவற்றால் வீணாக்கி விடாதீர்கள்.
(34) 47.34. நிச்சயமாக யாரெல்லாம் அல்லாஹ்வை நிராகரித்து தங்களையும் மற்றவர்களையும் அவனுடைய மார்க்கத்தைவிட்டுத் திருப்பி நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமால் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களின் பாவங்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். மாறாக அவற்றிற்காக அவன் அவர்களை குற்றம்பிடிப்பான். அவர்களை நிரந்தரமாக நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
(35) 47.35. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆதிக்கத்துடனும் வெற்றியுடனும் இருக்கும் நிலையில் உங்களின் எதிரிகளை எதிர்கொள்வதில் தளர்ந்து அவர்கள் உங்களை சமாதானத்திற்கு அழைக்கும் முன்னரே நீங்கள் அதன்பால் அழைப்பு விடுக்காதீர்கள். தன் உதவியின்மூலம் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டான். மாறாக அவன் உங்களுக்கு தன்னிடமிருந்து மேலதிகமாக வழங்குவான்.
(36) 47.36. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டும்தான். எனவே எந்த அறிவாளியும் அதில் கவனம் செலுத்தி மறுமைக்காக செயல்படாமல் இருக்கமாட்டான். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சினால் அவன் உங்கள் செயல்களுக்கான கூலியை குறைவின்றி முழுமையாக வழங்கிவிடுவான். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் அவன் உங்களிடம் கோருவதில்லை. நிச்சயமாக கடமையான ஸகாத்தையே அளிக்கும்படி உங்களிடம் வேண்டுகிறான்.
(37) 47.37. அவன் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் தந்துவிடுமாறு வலியுறுத்திக் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். அவன் உங்கள் உள்ளங்களிலிருக்கும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பதிலுள்ள வெறுப்பை வெளிப்படுத்திவிடுவான். எனவேதான் உங்கள்மீது கருணைகாட்டும்பொருட்டு அவன் இவ்வாறு கேட்பதை விட்டுவிட்டான்.
(38) 47.38. இதோ நீங்கள் உங்கள் செல்வங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் சிறிது பகுதியை செலவுசெய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவுசெய்யுமாறு அவன் உங்களிடம் வேண்டவில்லை. ஆனாலும் உங்களில் சிலர் கஞ்சத்தனத்தினால் வேண்டப்படும் தர்மத்தைத் தடுத்துக்கொள்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தில் சிறிது பகுதியை செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர் உண்மையில் தனக்கு எதிராக செலவுசெய்ததன் நன்மைகளை இழப்பதன் மூலம் கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். உங்கள் தர்மத்தின்பால் அவனுக்கு தேவைகிடையாது. நீங்களே அவனிடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு நிராகரிப்பின்பால் திரும்பினால் அவன் உங்களை அழித்துவிட்டு வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். பின்னர் அவர்கள் உங்களைப்போன்று இருக்கமாட்டார்கள். மாறாக அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.