(1) 50.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் அடங்கியுள்ள ஏராளமான கருத்துக்கள், நன்மைகள் மற்றும் பரக்கத்துகளின் காரணத்தால் அல்லாஹ் அதனைக் கொண்டு சத்தியம் செய்துள்ளான். விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்பட்டே தீருவீர்கள் என்று.
(2) 50.2. நீர் பொய் உரைக்கலாம் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு அவர்களின் மறுப்புக்கான காரணமல்ல. அவர்கள் உம் வாய்மையைக் குறித்து அறிவார்கள். மாறாக வானவர்கள் இனத்திலிருந்து அல்லாமல் அவர்களின் இனத்திலிருந்தே எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அவர்களிடம் வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆச்சரியத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு மனிதர் நமக்குத் தூதராக அனுப்பப்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.”
(3) 50.3. நாம் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா? உக்கிப் போன நம் உடல்களுக்கு மீண்டும் உயிர் திரும்பி மீண்டும் எழுப்பப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும். அவ்வாறு நிகழ முடியாது.”
(4) 50.4. அவர்கள் இறந்து அழிந்த பிறகு அவர்களின் உடல்களை பூமி எந்த அளவு தின்கிறது என்பதை நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. நம்மிடத்தில் ஒரு புத்தகம் இருக்கின்றது. அது அவர்களின் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்குப் பின்னும் அல்லாஹ் அவர்களுக்கு விதித்ததைப் பாதுகாக்கிறது.
(5) 50.5. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் தூதர் அவர்களிடம் கொண்டுவந்த குர்ஆனைப் பொய்யெனக் கூறினார்கள். அவர்கள் இது குறித்து தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அதனைக்குறித்து எந்த நிலையான நிலைப்பாட்டிலும் அவர்கள் இல்லை.
(6) 50.6. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களின் மறுப்பைக் குறிப்பிட்ட பின், அது நிகழ்வதற்கான ஆதாரங்களை அவர்களுக்கு அவன் நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதையும், அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லை என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லையா?! இந்த வானத்தைப் படைத்தவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து உயிருள்ளவர்களாக எழுப்புவதற்கு இயலாதவனல்ல.
(7) 50.7. நாம் பூமியை வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்துள்ளோம். அது ஆட்டம் காணாமல் இருக்கும்பொருட்டு அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அதில் அழகிய தோற்றமுடைய ஒவ்வொரு வகையான தாவரங்களையும் மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
(8) 50.8. இவையனைத்தையும் நாம் படைத்தது கீழ்ப்படிவதன்மூலம் தன் இறைவனின் பக்கம் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கும்பொருட்டேயாகும்.
(9) 50.9. நாம் வானத்திலிருந்து ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய நீரை இறக்குகின்றோம். அந்த நீரைக் கொண்டு தோட்டங்களையும் நீங்கள் அறுவடை செய்யும் கோதுமை தானியங்கள் மற்றும் ஏனையவற்றையும் முளைக்கச்செய்தோம்.
(10) 50.10. அதன் மூலம் அடுக்கடுக்கான குலைகள் கொண்ட உயர்ந்த நீண்ட பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
(11) 50.11. அவற்றை நாம் முளைக்கச் செய்து அடியார்கள் உண்பதற்கான வாழ்வாதாரமாக அவற்றை ஆக்கினோம். அந்த நீரைக் கொண்டு நாம் செடிகொடிகளற்ற வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்கின்றோம். அந்த நீரைக் கொண்டு நாம் வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்வதைப்போன்றே இறந்தவர்களை உயிர்ப்பிப்போம். எனவே அவர்கள் உயிர்பெற்று வெளிப்படுவார்கள்.
(12) 50.12. தூதரே! உம்மை பொய்ப்பித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னரே எத்தனையோ சமூகங்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்துள்ளன. நூஹின் சமூகம், கிணறுவாசிகள், ஸமூதின் சமூகம் ஆகியன பொய்ப்பித்தன.
(13) 50.13. ஆத், ஃபிர்அவ்ன் மற்றும் லூத்தின் சமூகம் பொய்ப்பித்துள்ளன.
(14) ஷுஐபின் கூட்டமும், யமன் மன்னன் துப்பஇன் கூட்டமும் நிராகரித்தனர். இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய துதர்களை மறுத்தனர். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்த வேதனை ஏற்பட்டது.
(15) 50.15. உங்களை முதன்முறையாகப் படைப்பதற்கு நாம் இயலாமல் இருந்தோமா மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாமல் ஆவதற்கு? மாறாக அவர்கள் முதன்முறையாகப் படைக்கப்பட்ட பிறகு மீண்டும் புதிதாக படைக்கப்படுவது குறித்து சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.
(16) 50.16. திட்டமாக நாம் மனிதனைப் படைத்துள்ளோம். அவன் மனதில் தோன்றும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் அறிவோம். நாம் அவனுக்கு பிடரி நரம்பைவிட நெருக்கமாக இருக்கின்றோம்.
(17) 50.17. இரண்டு வானவர்கள் அவனுடைய செயல்களைப் பதிவு செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் வலப்பக்கம் அமர்ந்துள்ளார். மற்றொருவர் இடப்பக்கம் அமர்ந்துள்ளார்.
(18) 50.18. அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் போதும் கண்காணிக்கக்கூடிய வானவர் அவனிடம் இருந்தே அல்லாமல் அவன் எதையும் கூறுவது இல்லை.
(19) 50.19. மரண வேதனை உண்மையாகவே வந்தது. அதிலிருந்து தப்ப முடியாது. -அலட்சியமான மனிதனே!- இதைக்கண்டுதான் நீ பின்வாங்கி விரண்டோடிக்கொண்டிருந்தாய்.
(20) 50.20. இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் சூர் ஊதுவார். அது மறுமை நாளாகும். நிராகரிப்பாளர்களும் பாவிகளும் வேதனையைக் கொண்டு எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
(21) 50.21. ஒவ்வொரு மனிதனுடனும் ஒரு வானவர் வருவார். அவர் அவனை இழுத்துக் கொண்டு வருவார். இன்னொரு வானவர் அவன் செய்த செயல்களுக்கு சாட்சி கூறக்கூடியவராக இருப்பார்.
(22) 50.22. இழுக்கப்பட்டு வந்த அந்த மனிதனிடம் கூறப்படும்: “நீ உலகில் உன் இச்சைகள் மற்றும் இன்பங்களினால் மயங்கியதனால் இந்த நாளைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய். நீ கண்கூடாகக் காணும் வேதனையையும் துன்பத்தையும் கொண்டு உன் அலட்சியத்தை நாம் நீக்கிவிட்டோம். இன்று உன் பார்வை கூர்மையானதாக இருக்கும். அதனால் எது குறித்து அலட்சியமாக இருந்தாயோ அதனை நீ கண்டுகொள்வாய்.”
(23) 50.23. அவனுடன் ஒட்டியிருப்பதற்கு நியமிக்கப்பட்ட வானவர் கூறுவார்: “இதுவே என்னிடமுள்ள கூடுதல், குறைவின்றி அவன் செய்த செயல்களாகும்.”
(24) 50.24. இழுத்துவந்த மற்றும் சாட்சி கூறக்கூடிய அந்த இரு வானவர்களிடமும் அல்லாஹ் கூறுவான்: “சத்தியத்தை மறுத்த, அதில் பிடிவாதமாக நிலைத்திருந்த ஒவ்வொருவனையும் நரகத்தில் போடுங்கள்.”
(25) 50.25. அவன் அல்லாஹ் கடமையாக்கியவற்றை அதிகம் தடுப்பவனாகவும் அவனுடைய வரம்புகளை மீறக்கூடியவனாகவும் அவனுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் சந்தேகம் கொள்பவனாக இருந்தான்.
(26) 50.26. அவன் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தி வணக்க வழிபாட்டில் அதனைக் கூட்டாக்கினான். ஆகவே அவனைக் கடுமையான வேதனையில் போடுங்கள்.
(27) 50.27. அவனுடன் ஒட்டியிருந்த ஷைத்தான் அவனைவிட்டும் நீங்கியவனாகக் கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை வழிகெடுக்கவில்லை. ஆனால் அவனே சத்தியத்தைவிட்டும் தூரமாக வழிகேட்டில்தான் இருந்தான்.”
(28) 50.28. அல்லாஹ் கூறுவான்: “என்னிடத்தில் சண்டையிடாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்கு உலகில் என் தூதர்களை அனுப்பி என்னை நிராகரிப்பவர்களுக்கு, மாறுசெய்பவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்.”
(29) 50.29. என்னிடத்தில் வார்த்தை மாற்றப்படாது. என் வாக்குறுதி மாறாது. நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ நான் அடியார்களின்மீது அநீதி இழைக்கமாட்டேன். மாறாக அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவேன்.
(30) 50.30. நாம் நரகத்திடம் “நான் உன்னில் போட்டுள்ள நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளைக் கொண்டு நீ நிறைந்துவிட்டாயா” என்று கேட்கும் நாளில் அது அதிகமாக வேண்டியவாறு, தன் இறைவனுக்காக கோபம் கொண்டவாறு “இன்னும் ஏதேனும் இருக்கின்றதா? என்று அது விடையளிக்கும்.
(31) 50.31. அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் கடுமையான வேதனையைக் குறிப்பிட்ட பிறகு நம்பிக்கையாளர்களான அடியார்களுக்கு தயார்படுத்திவைத்துள்ளவற்றைக்குறித்து கூறுகிறான்: தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும். அவர்கள் அதிலுள்ள அருட்கொடைகளை நெருக்கமாகக் காண்பார்கள்.
(32) 50.32. அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தது. பாவமன்னிப்புக் கோரி தம் இறைவனின் பக்கம் மீளக்கூடிய, அவன் கடமையாக்கியவற்றை பாதுகாக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உரியது.”
(33) 50.33. யார் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாத இரகசியத்திலும் அவனை அஞ்சி, அவன் பக்கம் அதிகம் திரும்பக்கூடிய, அல்லாஹ்வின்பால் முன்னோக்கியவராக தூய உள்ளத்துடன் அவனை சந்தித்தாரோ
(34) 50.34. அத்தகையவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து சாந்தி பெற்றவர்களாக சுவனத்தில் நுழையுங்கள். இதுதான் நிலையான நாளாகும். இதற்குப் பிறகு அழிவு இல்லை.
(35) 50.35. அவர்கள் விரும்பக்கூடிய முடிவற்ற அருட்கொடைகள் அவர்களுக்குக் கிடைக்கும். நம்மிடத்தில் இன்னும் ஏராளமான அருட்கொடைகளும் உண்டு. அவை எந்தக் கண்ணும் பார்த்திராதவை, எந்தக் காதும் கேட்டிராதவை, எந்த மனித உள்ளமும் நினைத்திராதவை. அவற்றில் அல்லாஹ்வைப் பார்ப்பதும் அடங்கும்.
(36) 50.36. மக்காவின் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களுக்கு முன்னர் நாம் அவர்களை விட வலிமைமிக்க எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம். அவர்கள் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஏதாவது வழியுள்ளதா என பல நாடுகளில் சுற்றித் திரிந்தார்கள். ஆயினும் அவர்களால் தப்பிப்பதற்கான இடத்தை பெற முடியவில்லை.
(37) 50.37. நிச்சயமாக நாம் மேற்கூறிய முந்தைய சமூகங்களை அழித்ததிலே விளங்கிக் கொள்ளும் உள்ளத்திற்கு அல்லது கவனயீனமின்றி உளப்பூர்வமாக காதுதாழ்த்தி செவியேற்போருக்கு நினைவூட்டலும் அறிவுரையும் இருக்கின்றது.
(38) 50.38. நாம் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். நாம் அவற்றை ஒரு விநாடியில் படைப்பதற்கும் சக்தி பெற்றவர்களாவோம். யூதர்கள் கூறுவதுபோல நமக்கு அதனால் எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
(39) 50.39. -தூதரே!- யூதர்களும் ஏனையோரும் கூறுவதை சகித்துக் கொள்வீராக. உம் இறைவனைப் புகழ்ந்தவாறு சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலைத் தொழுகையையும் அது மறைவதற்கு முன்னர்அஸர் தொழுகையையும் தொழுவீராக.
(40) 50.40. இரவு நேரங்களிலும் அவனுக்காகத் தொழுவீராக. தொழுகைகளுக்குப்பிறகு அவனை துதி பாடுவீராக.
(41) 50.41. -தூதரே!- இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் நெருங்கிய இடத்திலிருந்து அழைக்கும் நாளை காதுகொடுத்துக் கேட்பீராக.
(42) 50.42. அந்த நாளில்தான் படைப்பினங்கள் மீண்டும் எழுப்புவதற்கான ஓசையை சந்தேகமின்றி உண்மையாகவே செவிமடுக்கும். அதனைச் செவியுறும் அந்த நாள்தான் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் இறந்தவர்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்படும் நாளாகும்.
(43) 50.43. நிச்சயமாக நாமே உயிர்ப்பிக்கின்றோம், மரணமடையச் செய்கின்றோம். நம்மைத்தவிர வேறு யாரும் உயிர்ப்பிக்கச் செய்யவோ மரணமடையச் செய்யவோ முடியாது. மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அடியார்கள் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.
(44) 50.44. பூமி பிளந்துவிடும் நாளில் அவர்கள் விரைவாக வெளிப்படுவார்கள். இவ்வாறு ஒன்றுதிரட்டுவது நமக்கு எளிதானது.
(45) 50.45. இந்த பொய்ப்பிப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். -தூதரே!- நம்பிக்கைகொள்ளும்படி நீர் அவர்களை நிர்ப்பந்திப்பவர் அல்ல. நீர் அல்லாஹ் உமக்கு இட்ட கட்டளைகளைகளை எடுத்துரைப்பவர் மட்டுமே. என் எச்சரிக்கையை அஞ்சக்கூடியவர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. ஏனெனில் நிச்சயமாக அஞ்சக்கூடியவர்தாம் ஞாபகமூட்டப்பட்டால் அறிவுரை பெறுவார்.