51 - ஸூரா அத்தாரியாத் ()

|

(1) 51.1. புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

(2) 51.2. ஏராளமான நீரை சுமந்து செல்லும் மேகங்களைக் கொண்டும்

(3) 51.3. கடலில் இலகுவாகச் செல்லும் கப்பல்களைக் கொண்டும்

(4) 51.4. அல்லாஹ் பங்கிடுமாறு ஏவிய அடியார்களின் விவகாரங்களைப் பங்கிடும் வானவர்களைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(5) 51.5. நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த விசாரணையும் கூலி வழங்கப்படுவதும் சந்தேகமற்ற உண்மையாகும்.

(6) 51.6. நிச்சயமாக அடியார்களை விசாரனை செய்வது சந்தேகம் இல்லாமல் மறுமை நாளில் நிகழ்ந்தே தீரும்.

(7) 51.7. வழிகளையுடைய அழகிய படைப்பான வானத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

(8) 51.8. -மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் முரண்பட்ட தடுமாற்றம்மிக்க வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். சில சமயங்களில் “குர்ஆன் ஒரு சூனியமாகும்” என்றும் சில சமயங்களில் “அது ஒரு கவிதை” என்றும் சில சமயங்களில் “முஹம்மது ஒரு சூனியக்காரர்” என்றும் சில சமயங்களில் “அவர் ஒரு கவிஞர்” என்றும் கூறுகிறீர்கள்.

(9) 51.9. குர்ஆனின்மீதும் தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்று நிச்சயமாக அல்லாஹ் முன்னரே அறிந்தவர்கள்தான் நம்பிக்கைகொள்வதை விட்டும் திருப்பிவிடப்படுகிறான். எனவே அவன் நேர்வழிபெற வாய்ப்புக் கிடைக்காது.

(10) 51.10. குர்ஆனைக் குறித்தும் தங்களின் நபியைக் குறித்தும் இவ்வாறு கூறிய பொய்யர்கள் சபிக்கப்பட்டு விட்டார்கள்.

(11) 51.11. அவர்கள் அறியாமையில் மறுமையின் வீட்டை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள். அதனைப் பொருட்படுத்துவதில்லை.

(12) 51.12. கூலி வழங்கப்படும் நாள் எப்போது? என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக செயற்படுவதில்லை.

(13) 51.13. அல்லாஹ் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கிறான். அது அவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும் நாளாகும்.

(14) 51.14. அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் வேதனையைச் சுவையுங்கள். இதைக் குறித்துதான் எச்சரிக்கப்படும்போது பரிகாசம் செய்யும் விதத்தில் விரைவாகக் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டிருந்தீர்கள்.”

(15) 51.15. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் மறுமை நாளில் தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.

(16) 51.16. அவர்கள் அங்கு தங்கள் இறைவன் வழங்கிய கண்ணியமான கூலியைப் பெற்றவர்களாக இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் கண்ணியமான இந்த கூலி வழங்கப்படுவதற்கு முன்னர் உலகில் நன்மை செய்வோராக இருந்தார்கள்.

(17) 51.17. அவர்கள் இரவில் தொழக்கூடியவர்களாவும் குறைவான நேரமே தூங்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

(18) 51.18. (ஸஹர்) பின்னிரவு நேரங்களில் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்தார்கள்.

(19) 51.19. அவர்களின் செல்வங்களில் யாசிக்கக்கூடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணத்தினால் வாழ்வாதாரமில்லாவிட்டாலும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காதவர்களுக்கும் உரிமை இருந்தது.

(20) 51.20. பூமியிலும் அல்லாஹ் அதில் ஏற்படுத்தியுள்ள மலைகள், கடல்கள், ஆறுகள், மரங்கள், செடிகொடிகள், விலங்குகள் ஆகிவற்றில் நிச்சயமாக அல்லாஹ்வே படைத்து வடிவம் கொடுப்பவன் என்பதை உறுதியாக நம்பக்கூடிய மக்களுக்கு அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.

(21) 51.21. -மனிதர்களே!- உங்களுக்குள்ளும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் படிப்பினை பெறும்பொருட்டு பார்க்கமாட்டீர்களா?

(22) 51.22. வானத்தில்தான் உங்களின் உலக, மத வாழ்வாதாரம் இருக்கின்றது. உங்களுக்கு வாக்களிக்கப்படும் நன்மையும் தீமையும் அங்குதான் இருக்கின்றன.

(23) 51.23. வானம் மற்றும் பூமியின் இறைவனின்மீது ஆணையாக, நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழ்ந்தே தீரும். நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சில் எவ்வாறு சந்தேகம் இல்லையோ அது போன்றே அதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை.

(24) 51.24. -தூதரே!- இப்ராஹீம் கௌரவப்படுத்திய வானவர்களான அவரின் விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?

(25) 51.25. அவர்கள் அவரிடம் வந்தபோது (சலாம்) சாந்தி உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு இப்ராஹீமும் “சாந்தி உண்டாகட்டும்” என்று பதில் கூறினார். “இவர்கள் நாம் அறியாத மக்களாக இருக்கிறார்களே” என்று அவர் தம் மனதிற்குள் கூறிக் கொண்டார்.

(26) 51.26. அவர் தம் குடும்பத்தாரிடம் இரகசியமாகச் சென்று வந்துள்ளவர்களை மனிதர்கள் என்று நினைத்து ஒரு கொழுத்த முழுமையான காளைக்கன்றைக் கொண்டு வந்தார்.

(27) 51.27. அதனை அவர்களுக்கு அருகில் வைத்து “உங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்ணமாட்டீர்களா” என்று மென்மையாக உரையாடினார்.

(28) 51.28. அவர்கள் உண்ணாததால் அவர் மனதில் அவர்களால் ஏற்பட்ட அச்சத்தை மறைத்துக்கொண்டார். அதனை உணர்ந்துகொண்ட அவர்கள் அவரை அமைதிப்படுத்தியவர்களாகக் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களாவோம்.” அவருக்கு அதிக கல்வியறிவு கொண்ட ஒரு மகன் பிறப்பான் என்று நற்செய்தி கூறினார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களே அவ்வாறு நற்செய்தி கூறப்பட்டவர்.

(29) 51.29. அவருடைய மனைவி இந்த நற்செய்தியை செவியுற்றவுடன் மகிழ்ச்சியால் சப்தமிட்டாள். தம் முகத்தில் அடித்துக் கொண்டாள். வியப்புடன் கூறினாள்: “அடிப்படையில் மலடியான ஒரு கிழவி குழந்தை பெறுவாளா?!”

(30) 51.30. வானவர்கள் அவளிடம் கூறினார்கள்: “உம் இறைவன் கூறியதைத்தான் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். அவன் கூறியதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக அவன் தன் படைப்பிலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன். தன் படைப்புகளைக் குறித்தும் அவர்களுக்கு அவசியமானது குறித்தும் நன்கறிந்தவன்.”

(31) 51.31. இப்ராஹீம் வானவர்களிடம் கேட்டார்: “உங்களின் விஷயம் என்ன? நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?”

(32) 51.32. வானவர்கள் அவரிடம் பதிலாக கூறினார்கள்: “மானக்கேடான பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அநியாயக்கார சமூகத்தின்பால் நிச்சயமாக அல்லாஹ் எங்களை அனுப்பியுள்ளான்,

(33) 51.33. சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது பொழிவதற்காக.

(34) 51.34. -இப்ராஹீமே!- அவை உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும். நிராகரிப்பிலும் பாவங்கள் புரிவதிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி செயல்படக்கூடியவர்களின் மீது அவை பொழியப்படும்.

(35) 51.35. குற்றவாளிகளுக்கு ஏற்படும் தண்டனை லூதின் சமூகத்தினர் வாழும் அந்த ஊரிலிருந்த நம்பிக்கையாளர்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியேற்றி விட்டோம்.

(36) 51.36. நாம் அவர்களின் இந்த ஊரிலே லூத்தின் குடும்பத்தினரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம்களின் வீட்டையும் காணவில்லை.

(37) 51.37. லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த அந்த ஊரில் அவர்களுக்கு வேதனை ஏற்பட்டதற்கான அடையாளங்களை விட்டுவைத்தோம். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைமிக்க தண்டனையை அஞ்சுபவன் படிப்பினை பெற்று, அதிலிருந்து தப்புவதற்காக அவர்களின் செயலைப்போன்றதை அவன் செய்யக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தோம்.

(38) 51.38. நாம் ஃபிர்அவ்னை நோக்கி தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் அனுப்பிய மூஸாவிலும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்குச் சான்று இருக்கின்றது, .

(39) 51.39. ஃபிர்அவ்ன் தனது பலத்தையும் படையையும் நம்பி சத்தியத்தைப் புறக்கணித்தான். மூஸாவைக்குறித்து அவன் கூறினான்: “அவர் மக்களுக்கு சூனியம் செய்யும் சூனியக்காரர் அல்லது புரியாத விஷயங்களைப் பேசும் பைத்தியக்காரர்.”

(40) 51.40. நாம் அவனையும் அவனது படையினர் அனைவரையும் பிடித்து கடலில் வீசியெறிந்து விட்டோம். அவர்கள் மூழ்கி அழிந்தார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பு, நிச்சயமாக தானே இறைவன் என்று வாதாடி பழிப்பிற்குரியவற்றை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தான்.

(41) 51.41. ஹுத் உடைய சமூகமான ’ஆதி’டமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. நாம் அவர்களின்மீது மழையைச் சுமக்காத, மரங்களை சூல் கொள்ளச் செய்யாத, எவ்வித நன்மைகளுமற்ற காற்றை அனுப்பினோம்.

(42) 51.42. அது கடந்து சென்ற உயிர்கள், செல்வங்கள் மற்றும் இன்னபிற அனைத்தையும் அடியோடு அழித்தது. அனைத்தையும் தூள்தூளாக்கிவிட்டது.

(43) 51.43. ஸாலிஹின் சமூகமான ஸமூதிடமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. அவர்களிடம் கூறப்பட்டது: “உங்களுக்கான தவணை நிறைவடைவதற்கு முன்னரே உங்களின் வாழ்வை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”

(44) 51.44. அவர்கள் தம் இறைவனின் கட்டளையை விட்டும் பெருமைகொண்டு, நம்பிக்கைகொள்ளுதல், வழிப்படுதல் ஆகியவற்றுக்கெதிராக கர்வம் கொண்டார்கள். எனவே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேரிடி அவர்களைத் தாக்கியது. ஏனெனில் அவர்கள் வேதனை இறங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்கள்.

(45) 51.45. தங்கள் மீது இறங்கிய வேதனையை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவர்களிடம் அதனைத் தடுத்துக்கொள்வதற்கான எந்த பலமும் இல்லை.

(46) 51.46. நாம் மேற்கூறப்பட்டவர்களுக்கு முன்னால் நூஹின் சமூகத்தாரை மூழ்கடித்து அழித்துள்ளோம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாக இருந்தார்கள். எனவே அவனது தண்டனைக்கு உரியவர்களாகி விட்டார்கள்.

(47) 51.47. நாம் வானத்தை அமைத்துள்ளோம். அதன் அமைப்பை வல்லமையால் செம்மையாக்கினோம். நிச்சயமாக நாம் அதன் ஓரங்களை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றோம்.

(48) 51.48. நாம் பூமியை வசிக்கக்கூடியவர்களுக்கு ஏற்றவாறு விரிப்பைப் போன்று அமைத்துள்ளோம். அவர்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்து அமைப்பதில் நாமே மிகச்சிறந்தவர்களாவோம்.

(49) 51.49. நீங்கள் ஒவ்வொன்றையும் இணைஇணையாக படைத்த அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் உணர்ந்துகொள்ளும்பொருட்டு ஒவ்வொன்றையும் நாம் இணைஇணையாகப் படைத்துள்ளோம். உதாரணமாக, ஆண்- பெண், வானம்- பூமி, நீர்- நிலம்.

(50) 51.50. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு மாறுசெய்யாமல் இருப்பதன் மூலம் அவனின் தண்டனையிலிருந்து அவனுடைய நன்மையின் பக்கமும் விரையுங்கள். -மக்களே!- நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்தான்.

(51) 51.51. அல்லாஹ்வுடன் அவனை விடுத்து நீங்கள் வணங்கும் வேறு இறைவனை ஏற்படுத்தி விடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அதிலிருந்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.

(52) 51.52. இந்த மக்காவாசிகள் பொய்ப்பித்ததைப்போன்றே முந்தைய சமூக மக்களும் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர், என்று.”

(53) 51.53. நிராகரிப்பாளர்களில் முந்தையவர்களும் பிந்தையவர்களும் தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துள்ளார்களா என்ன? இல்லை. மாறாக அவர்களின் வரம்புமீறலே அவர்களை இதில் ஒன்றிணைத்தது.

(54) 51.54. -தூதரே!- இந்த பொய்ப்பிப்பாளர்களை நீர் புறக்கணித்து விடுவீராக. நீர் பழிப்பிற்குரியவர் அல்ல. நீர் அவர்களின்பால் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீரோ அதனை எடுத்துரைத்துவிட்டீர்.

(55) 51.55. அவர்களை நீர் புறக்கணிப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவதிலிருந்தும் நினைவூட்டுவதிலிருந்தும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக, நினைவூட்டுவீராக. நிச்சயமாக நினைவூட்டல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்குப் பயனளிக்கும்.

(56) 51.56. நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். எனக்கு இணைகளை ஏற்படுத்துவதற்காக நான் அவர்களைப் படைக்கவில்லை.

(57) 51.57. நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தையோ, அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.

(58) 51.58. நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அனைவரும் அவன் அளிக்கும் வாழ்வாதாரத்தின் பக்கம் தேவையுடையவர்களாவர். அவன் உறுதியான வல்லமை மிக்கவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. மனிதர்கள், ஜின்கள் அனைவரும் அவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

(59) 51.59. -தூதரே!- நிச்சயமாக உம்மை பொய்ப்பித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் அவர்களின் முந்தைய தோழர்களின் பங்கை போன்று வேதனையின் ஒரு பகுதியைப் பெறுவார்கள். அதற்கு குறிப்பிட்ட தவணை இருக்கின்றது. அது வருவதற்கு முன்னரே விரைவாக என்னிடம் அதனை அவர்கள் கோரவேண்டாம்.

(60) 51.60. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்களுக்கு மறுமை நாளில் இழப்பும் அழிவுமே ஏற்படும். அதுதான் அவர்கள்மீது வேதனை இறக்கப்படுவதற்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.