52 - ஸூரா அத்தூர் ()

|

(1) 52.1. அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

(2) 52.2,3. எழுதப்பட்ட புத்தகமான குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

(3) (முன்னர்) இறக்கப்பட்ட வேதங்களைப் போன்று விரிக்கப்பட்ட காகிதத்தில்

(4) 52.4. வானத்தில் வானவர்கள் அல்லாஹ்வை வணங்குவதன்மூலம் செழிப்பாக்கும் ஆலயத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(5) 52.5. பூமிக்கு முகடாக இருக்கின்ற உயரமான வானத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(6) 52.6. நீரால் நிரம்பியுள்ள கடலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(7) 52.7. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அளிக்கும் வேதனை நிராகரிப்பாளர்களின்மீது சந்தேகம் இல்லாமல் நிகழ்ந்தே தீரும்.

(8) 52.8. அதனை அவர்களை விட்டும் தடுக்கக்கூடியவரோ, அது அவர்கள் மீது இறங்காமல் தடுப்பவரோ யாரும் இல்லை.

(9) 52.9. மறுமை நாளை அறிவிக்கும் விதமாக வானம் ஆட்டம் காணும் நாளில்

(10) 52.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து நகர்ந்து செல்லும்.

(11) 52.11. அந்த நாளில் அல்லாஹ்பொய்ப்பிப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை மறுத்தவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.

(12) 52.12. அவர்கள் வீணான விஷயங்களில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மறுமையைக் குறித்தோ மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக் குறித்தோ அவர்கள் பொருட்படுத்தவில்லை.

(13) 52.13. அவர்கள் நரக நெருப்பில் பலமாகத் தள்ளப்படும் நாளில்

(14) 52.14. அவர்களைப் பழிக்கும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் உங்களின் தூதர்கள் உங்களுக்கு அச்சமூட்டிய நரகமாகும். இதைத்தான் நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.

(15) 52.15. நீங்கள் காணும் இந்த வேதனையும் சூனியமா? அல்லது நீங்கள் அதனைப் பார்க்கவில்லையா?

(16) 52.16. இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.

(17) 52.17. நிச்சயமாக தங்கள் இறைவனின் -கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் என்றும் முடிவுறாத மகத்தான அருட்கொடையிலும் இருப்பார்கள்.

(18) 52.18. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருள்கள், பானங்கள் மற்றும் மண உறவுகளின் இன்பங்களைக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான். அவர்கள் தாங்கள் விரும்பிய இன்பங்களைப் பெற்று கலங்கம் ஏற்படுத்துபவற்றிலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றி பெறுவார்கள்.

(19) 52.19. அவர்களிடம் கூறப்படும்: “உங்கள் மனம் விரும்புவதை மகிழ்ச்சியாக உண்ணுங்கள், பருகுங்கள், உண்ணுபவற்றினாலோ, பருகுபவற்றினாலோ தீங்கோ, பாதிப்போ ஏற்பட்டு விடும் என்று பயப்படாதீர்கள். இவைகள் நீங்கள் உலகில் செய்த நற்செயல்களுக்கான கூலியாகும்.

(20) 52.20. அவர்கள் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றை ஒன்று முன்னோக்கியதாக இருக்கும் சாய்வு இருக்கைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை விசாலமான விழிகளையுடைய வெண்மையான பெண்களுக்கு மணமுடித்து வைப்போம்.

(21) 52.21. நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் சந்ததியினரையும் அவர்களின் சந்ததியினால் அவர்கள் கண்குளிர்ச்சியடையும் பொருட்டு நாம் ஒன்றுசேர்த்து வைப்போம். அந்த சந்ததியினர் தங்கள் செயல்களின் மூலம் முந்தையவர்களின் நிலையை அடையாவிட்டாலும் சரியே. நாம் அவர்களின் நற்செயல்களின் கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தீய செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். அவனைத்தவிர யாரும் அவனது செயல்களில் எந்த ஒன்றையும் சுமக்க முடியாது.

(22) 52.22. இந்த சுவனவாசிகளுக்கு பல வகையான பழங்களையும் அவர்கள் விரும்பும் அனைத்துவிதமான மாமிசத்தையும் நாம் வழங்குவோம்.

(23) 52.23. அங்கு அவர்களுக்கிடையே மதுக்கிண்ணங்கள் பரிமாறப்படும். அதனைக் குடிப்பதால் உலகில் ஏற்படுவதுபோன்று போதையின் காரணமாக வீணான பேச்சு, பாவமான காரியங்கள் எதுவும் நடைபெறாது.

(24) 52.24. அவர்களுக்குப் பணிவிடைக்காக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி சுற்றி வருவார்கள். தோல் வெண்மையிலும் தெளிவிலும் அவர்கள் சிப்பியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முத்துகளைப் போன்றிருப்பார்கள்.

(25) 52.25. சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள். ஒருவர் மற்றவரிடம் உலகில் அவர்களின் நிலையைக் குறித்துக் கேட்பார்கள்.

(26) 52.26. அவர்கள் பதிலளிப்பார்கள்: “நிச்சயமாக நாங்கள் உலகில் எங்கள் குடும்பத்தினரிடையே அல்லாஹ்வின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருந்தோம்.

(27) 52.27. அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்து எங்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டினான். வெப்பம் மிகுந்த வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றினான்.

(28) 52.28. நிச்சயமாக நாங்கள் எங்களின் உலக வாழ்வில் அவனையே வணங்கிக் கொண்டிருந்தோம். நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் தன் அடியார்களுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாகவும் உண்மையாளனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எம்மீது அவனது நலவு, கருணையினால்தான் அவன் எங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டி எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நரகத்தைவிட்டும் தூரமாக்கினான்.

(29) 52.29. -தூதரே!- குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. அல்லாஹ் உம்மீது நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அருளியிருப்பதால் நீர் ஜின்னை வைத்து சோதிடம் பார்ப்பவராகவும் இல்லை. பைத்தியகாரராகவும் இல்லை.

(30) 52.30. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் “நிச்சயமாக முஹம்மது தூதர் அல்ல. மாறாக அவர் ஒரு கவிஞர். மரணம் வந்து அவரை வாரிச் சென்றுவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் அவரிலிருந்து நாம் விடைபெற்றுவிடலாம்” என்று கூறுகிறார்களா?

(31) 52.31. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் மரணத்தை எதிர்பாருங்கள். என்னை நீங்கள் பொய்ப்பித்ததனால் நானும் உங்கள் மீது இறங்கப்போகும் வேதனையை எதிர்பார்க்கிறேன்.”

(32) 52.32. மாறாக அவர்களின் அறிவு “நிச்சயமாக அவர் ஒரு ஜோதிடர், பைத்தியக்காரர் என்று கூறத் தூண்டுகிறதா?” அவர்கள் ஒரு மனிதனிடம் சேர்ந்து இருக்க முடியாத விஷயங்களை சேர்த்துக் கூறுகிறார்கள். மாறாக அவர்கள் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே மார்க்கத்தின் பக்கமோ, பகுத்தறிவின் பக்கமோ அவர்கள் திரும்ப மாட்டார்கள்.

(33) 52.33. அல்லது நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்துள்ளார். அவருக்கு வஹி அறிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா? அவர் அதனை சுயமாகப் புனைந்து கூறவில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

(34) 52.34. நிச்சயமாக அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்ற கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் அதுபோன்ற செய்தியை புனைந்து கொண்டுவரட்டும்.

(35) 52.35. அல்லது அவர்கள் அவர்களை படைக்கும் படைப்பாளனின்றி படைக்கப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே அவர்கள் படைத்துக் கொண்டார்களா? படைப்பாளனின்றி எந்தப் படைப்பும் உருவாகிவிட முடியாது. யாரும் தம்மை தாமாகப் படைத்துவிட முடியாது. பிறகு ஏன் அவர்கள் தங்களைப் படைத்தவனை வணங்குவதில்லை?

(36) 52.36. அல்லது அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவனை உறுதியாக நம்பியிருந்தால் அவன் ஒருவனையே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தூதரின்மீது நம்பிக்கைகொண்டிருப்பார்கள்.

(37) 52.37. அல்லது அவர்களிடத்தில் உம் இறைவனின் வாழ்வாதார அருட்களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அவற்றை அவர்கள் தாம் நாடியவர்களுக்கு வழங்குகிறார்களா? மேலும் நபித்துவத்தையும் தாம் நாடியவர்களுக்கு வழங்கி தாம் நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு அவர்களிடமா நாட்டம் உள்ளது? அல்லது அவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களா?

(38) 52.38. அல்லது அவர்களிடத்தில் ஏணி இருந்து அதன்மூலம் அவர்கள் வானத்தில் ஏறி அல்லாஹ் அறிவிக்கும் வஹியைச் செவியுற்று நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொண்டார்களா? அவர்களில் அவ்வாறு வஹியைச் செவியுற்றவர் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவதற்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவரட்டும்.

(39) 52.39. அல்லது அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகளா?

(40) 52.40. -தூதரே!- உம் இறைவனிடமிருந்து நீர் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக அவர்களிடம் கூலி கேட்கின்றீரா? அதன் காரணமாக அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு பொறுப்பு சாட்டப்பட்டு விட்டார்களா?

(41) 52.41. அல்லது அவர்களிடத்தில் மறைவான ஞானம் இருந்து அவர்கள் அறியும் மறைவான விடயங்களை மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து தாங்கள் நாடியதை அவர்களுக்கு அறிவிக்கிறார்களா?

(42) 52.42. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் உமக்கு எதிராகவும் உம் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வீராக. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள்தாம் சூழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். நீர் அல்ல.

(43) 52.43. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இருக்கின்றானா? அவர்கள் இணைத்துக்கூறும் இணைகளிலிருந்து அவன் தூய்மையானவன். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நிகழவும் இல்லை. நிகழப்போவதும் சாத்தியமில்லை.

(44) 52.44. அவர்கள் வானத்திலிருந்து ஒரு துண்டு கீழே விழுவதைப் பார்த்தாலும் அதைக்குறித்து “வழக்கத்தைப்போன்று ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த மேகங்கள்தான்” என்று கூறுவார்கள். அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதுமில்லை, நம்பிக்கைகொள்வதுமில்லை.

(45) 52.45. -தூதரே!- அவர்கள் வேதனை செய்யப்படும் நாளான மறுமையைச் சந்திக்கும்வரை அவர்களின் பிடிவாதத்திலும் நிராகரிப்பிலும் அவர்களை விட்டுவிடுவீராக.

(46) 52.46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவிசெய்யப்பட மாட்டார்கள்.

(47) 52.47. நிச்சயமாக இணைவைத்தல் மற்றும் பாவங்கள் மூலம் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையின் வேதனைக்கு முன்னால் இவ்வுலகில் கொலையும் கைதும் கப்ரில் மண்ணறை வேதனையும் உள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறிய மாட்டார்கள். அதனால்தான் தமது நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்.

(48) 52.48. -தூதரே!- உம் இறைவனின் தீர்ப்பிற்காக, அவனுடைய மார்க்க சட்டத்திற்காக பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக நீர் நம்முடைய கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கின்றீர். தூக்கத்திலிருந்து எழும் போது உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.

(49) 52.49. இரவிலும் உம் இறைவனைப் புகழ்வீராக. அவனுக்காகத் தொழுவீராக. பகலின் பிரகாசத்தால் நட்சத்திரங்கள் மறையும் சமயத்தில் அதிகாலைத் தொழுகையைத் தொழுவீராக.