(1) 53.1. உதிர்ந்து விழும் நட்சத்திரத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
(2) 53.2. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நேரான பாதையைவிட்டும் தவறவுமில்லை; அவர் வழிகெட்டவராகவும் இல்லை. ஆனால் அவர் நேர்வழி பெற்றவராக இருக்கின்றார்.
(3) 53.3. தம் மன இச்சைக்கேற்ப அவர் இந்தக் குர்ஆனைக் கூறுவதில்லை.
(4) 53.4. இந்தக் குர்ஆன் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் அறிவித்த வஹியேயாகும்.
(5) 53.5. கடும் வல்லமையுடைய வானவர் ஜிப்ரீல்தான் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்.
(6) 53.6. ஜிப்ரீல் அழகிய தோற்றமுடையவர். அவர் தூதருக்கு முன்னால் அல்லாஹ் அவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் தோன்றினார்.
(7) 53.7. ஜிப்ரீல் உயர்ந்த அடிவானத்தில் இருக்கும்போது
(8) 53.8. பின்னர் ஜிப்ரீல் நபியை நெருங்கினார். பின்னர் அவரிடம் மிகவும் அதிகமாக நெருங்கினார்.
(9) 53.9. அவரின் நெருக்கம் இரு வில்லுகள் அல்லது அதைவிடவும் நெருக்கமான அளவாக இருந்தது.
(10) 53.10. ஜிப்ரீல் அல்லாஹ்வின் அடியார் முஹம்மதுக்கு வஹியாக அறிவிக்க வேண்டியதை அறிவித்தார்.
(11) 53.11. முஹம்மதின் உள்ளம் தன் பார்வை கண்டதைக்குறித்து பொய்யுரைக்கவில்லை.
(12) 53.12. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் இராப்பயணம் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவருக்குக் காட்டியதைக் குறித்து நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
(13) 53.13. முஹம்மது ஜிப்ரீலை இரவில் அழைத்துச் சென்றபோது மற்றொரு முறை அவரை அவரது தோற்றத்தில் கண்டார்,
(14) 53.14. இறுதி எல்லையிலுள்ள இலந்தை மரத்திற்கு அருகே. அது ஏழாவது வானத்தில் இருக்கின்ற மிகப் பெரும் ஒரு மரமாகும்.
(15) 53.15. அந்த மரத்திற்கு அருகில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சுவனம் இருக்கின்றது.
(16) 53.16. அல்லாஹ்வின் கட்டளையின்படி அந்த இலந்தை மரத்தை மகத்தான பொருளொன்று மூடிய போது அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.
(17) 53.17. அவரது பார்வை வலப்புறமோ, இடப்புறமோ சாயவில்லை. அதற்கு விதிக்கப்பட்டதை மீறவுமில்லை.
(18) 53.18. முஹம்மது விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் தன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய மாபெரும் சான்றுகளைக் கண்டார். அவர் சுவனத்தையும் நரகத்தையும் அவற்றைத் தவிர உள்ளவற்றையும் கண்டார்.
(19) 53.19,20. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்குகின்ற சிலைகளான லாத், உஸ்ஸா
(20) 20. மூன்றாவது மனாத் ஆகியவற்றைக் குறித்து எனக்கு அறிவியுங்கள், அவை உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தி பெறுகின்றனவா?
(21) 53.21. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகள், அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா?
(22) 53.22. உங்களின் மன இச்சைக்கேற்ப நீங்கள் செய்த இந்த பங்கீடு அநீதியான பங்கீடாயிற்றே!
(23) 53.23. இந்த சிலைகள் அர்த்தமற்ற வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவற்றிற்கு வணக்கத்திற்குத் தகுதியான எந்தப் பண்பும் இல்லை. அவை நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களேயாகும். அல்லாஹ் அதற்கு எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. இணைவைப்பாளர்கள் யூகங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக்காட்டிய அவர்களின் மன இச்சைகளையுமே பின்பற்றுகிறார்கள். தூதரின் மூலம் அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்துவிட்டது. ஆயினும் அவர்கள் அதைக் கொண்டு நேர்வழியடையவில்லை.
(24) 53.24. அல்லது மனிதனுக்கு அல்லாஹ்விடத்தில் சிலைகளின் பரிந்துரை முதலான தான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா?
(25) 53.25. இல்லை, அவனுக்கு அவன் விரும்பியதெல்லாம் இல்லை. மறுமையும் இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது. அவையிரண்டிலிருந்தும் அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு தடுத்துக் கொள்கிறான்.
(26) 53.26. வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ்வின் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவர்களில் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை செய்பவரையும் பொருந்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனக்கு இணைகளாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்ற பரிந்துரைசெய்யப்படும் எவரையும் பொருந்திக்கொள்ள மாட்டான்.
(27) 53.27. நிச்சயமாக மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாதவர்கள் வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு பெண் பெயர் சூட்டுகிறார்கள். அவர்கள் கூறும் வார்த்தையைவிட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
(28) 53.28. அவர்கள் இவ்வாறு வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டியதற்கு அவர்களிடம் ஆதாரமாக அமையத்தக்க எந்த அறிவும் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் யூகத்தையும் இட்டுக்கட்டுதலையும் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக யூகம் சத்தியத்தின் இடத்தை அடைவதற்கு முன்னால் எந்தப் பயனையும் அளிக்காது.
(29) 53.29. -தூதரே!- அல்லாஹ்வை நினைவுகூராமலும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமலும் இருப்பவனைப் புறக்கணித்து விடுவீராக. அவன் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்புவதுமில்லை, மறுமைக்காகச் செயல்படுவதுமில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை நம்பவில்லை.
(30) 53.30. இந்த இணைவைப்பாளர்கள் வானவர்களுக்குப் பெண் பெயர் கூறுவதுதான் அவர்களின் அறிவின் மட்டமாகும். ஏனெனில் அவர்கள் அறிவிலிகள். நம்பிக்கையில் உறுதியை அடையவில்லை. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் சத்தியப் பாதையைவிட்டும் தவறியவர்களையும் அவனுடைய பாதையில்பால் நேர்வழி பெறுபவர்களையும் நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(31) 53.31. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் உரிமையால், படைப்பால், நிர்ணயத்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இது அவன் உலகில் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதற்காவும் நற்செயல்கள் புரிந்த நம்பிக்கையாளர்களுக்கு சுவனத்தை கூலியாக அளிப்பதற்காகவும்தான்.
(32) 53.32. அவர்கள் சிறு பாவங்களைத்தவிர பெரும் பாவங்களைவிட்டும் மானக்கேடான பாவங்களைவிட்டும் விலகியிருக்கிறார்கள். பெரும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்து நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டால் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும், -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அடியார்கள் பாவமன்னிப்புக் கோரும்போது அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதே, உங்கள் அன்னையரின் வயிற்றில் படிப்படியாக நீங்கள் படைக்கப்பட்டபோதே உங்களின் நிலைகளையும் விவகாரங்களையும் குறித்து நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே உங்களை நீங்களே இறையச்சமுடையவர்கள் என்று புகழாதீர்கள். உங்களில் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.
(33) 53.33. இஸ்லாத்தின் அருகில் வந்த பின்னரும் அதனைப் புறக்கணித்தவனின் அவலட்சன நிலையை நீர் பார்த்தீரா?
(34) 53.34. அவன் குறைவாக அளித்து பின்னர் தடுத்துக் கொண்டான். ஏனெனில் நிச்சயமாக கஞ்சத்தனமே அவனது இயல்பாகும். இருந்தும் அவன் தன்னைத்தானே பரிசுத்தப்படுத்துகிறான்.
(35) 53.35. அவனிடம் மறைவான ஞானம் இருந்து அதை அவன் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கின்றானா?
(36) 53.36,37. அல்லது அவன் அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டுகிறானா? அல்லது அல்லாஹ்வின்மீது இவ்வாறு இட்டுக்கட்டும் இவனுக்கு அல்லாஹ் மூஸாவின்மீது இறக்கிய ஆரம்ப ஏடுகளில் அறிவிக்கப்படவில்லையா?
(37) 37. தம் இறைவன் தமக்கு இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் வேதங்களிலும் (உள்ளவை அறிவிக்கப்படவில்லையா)?
(38) 53.38. நிச்சயமாக ஒரு மனிதன் மற்ற மனிதனின் பாவத்தை சுமக்க மாட்டான்.
(39) 53.39. மனிதனுக்கு அவன் செய்த செயல்களின் நன்மைகளே அன்றி வேறில்லை.
(40) 53.40. மறுமை நாளில் தான் செய்த செயல்களை வெளிப்படையாகக் காண்பான்.
(41) 53.41. பின்னர் அவனுடைய செயலுக்கேற்ப குறைவின்றி முழுமையாக கூலி வழங்கப்படுவான்.
(42) 53.42. -தூதரே!- நிச்சயமாக அடியார்கள் மரணித்தபிறகு அவர்கள் உம் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டும்.
(43) 53.43. நிச்சயமாக அவனே தான் நாடியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை சிரிக்க வைக்கிறான். தான் நாடியவர்களை கவலையில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை அழ வைக்கிறான்.
(44) 53.44. நிச்சயமாக அவனே உலகில் உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மரணித்தவர்களை மறுமையில் மீண்டும் எழுப்பி உயிர்ப்பிக்கிறான்.
(45) 53.45. நிச்சயமாக அவன் ஆண், பெண் என்ற இரு இணைகளைப் படைத்துள்ளான்,
(46) 53.46. கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து.
(47) 53.47. நிச்சயமாக அவனே அவர்கள் இறந்தபின்னர் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி மறுமுறை படைக்கிறான்.
(48) 53.48. அவனே தன் அடியார்களில் தான் நாடியவர்களை சொத்துக்களை வழங்கி செல்வந்தர்களாக்குகிறான். மக்கள் சேகரித்து சீமானாக ஆகின்ற அளவுக்கு சொத்தை வழங்குகிறான்.
(49) அவன்தான் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வணங்கி வழிபட்டுக்கொண்டிருந்த (ஷிஃரா எனும்) நட்சத்திரத்தின் இறைவன்.
(50) 53.50. அவனே ஹுதின் சமூகத்தினரான ஆத் சமூகத்தை அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தபோது அழித்தான்.
(51) 53.51. ஸாலிஹின் மக்களான ஸமூத் சமூகத்தை அழித்தான். அவர்களில் யாரையும் விட்டுவைக்கவில்லை.
(52) 53.52. ஆத், ஸமூத் ஆகியோருக்கு முன்னர் நூஹின் சமூகத்தை அழித்தான். நிச்சயமாக நூஹின் மக்கள் ஆத் மற்றும் ஸமூத் சமூகத்தைவிட கொடுங்கோலர்களாகவும் வரம்பு மீறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஏனெனில் நூஹ் அவர்களிடையே இருந்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாக அவர்களை அல்லாஹ் ஒருவனின் பக்கம் அழைத்தார். ஆனால் அவர்கள் அவருக்குப் பதிலளிக்கவில்லை.
(53) 53.53. அவன் லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த ஊர்களை வானத்தின்பால் உயர்த்திய பின்னர் அதனை கவிழ்த்து பின்னர் பூமியில் விழச் செய்தான்.
(54) 53.54. அவற்றை வானத்தில்பால் உயர்த்தி பூமியில் விழச் செய்தபிறகு அவற்றை மூட வேண்டிய கற்கள் மூடிக் கொண்டன.
(55) 53.55. மனிதனே! உன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய சான்றுகளில் எதனைக் கொண்டு படிப்பினை பெறாமல் தர்க்கம் செய்வாய்?
(56) 53.56. உங்களின்பால் அனுப்பப்பட்ட இந்த தூதர் முந்தைய தூதர்களின் இனத்திலுள்ளவர்தாம்.
(57) 53.57. நெருங்கி வரக்கூடிய மறுமை நாள் நெருங்கிவிட்டது.
(58) 53.58. அதனை தடுப்பவர் எவரும் இல்லை. அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதனை அறிய முடியாது.
(59) 53.59. உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று நீங்கள் ஆச்சரியமடைகின்றீர்களா?
(60) 53.60. அதன் அறிவுரைகளைக் கேட்கும் போது அழாமல் அதனைப் பரிகாசம் செய்தவாறு சிரிக்கிறீர்கள்.
(61) 53.61. நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றீர்கள்.
(62) 53.62. அல்லாஹ்வுக்கு மட்டும் நீங்கள் சிரம்பணியுங்கள். வணக்க வழிபாட்டை அவனுக்கு உரித்தாக்கிக் கொள்ளுங்கள்.