54 - ஸூரா அல்கமர் ()

|

(1) 54.1. மறுமையின் வருகை நெருங்கிவிட்டது. (நபியவர்களின் காலத்தில்) சந்திரன் பிளந்துவிட்டது. அது பிளக்கப்பட்டது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட பார்த்து உணரக்கூடிய அற்புதமாக இருந்தது.

(2) 54.2. நபியவர்களின் வாய்மையை அறிவிக்கும் எந்த ஆதாரத்தை இணைவைப்பாளர்கள் கண்டாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கவே செய்கிறார்கள். நாங்கள் கண்ட ஆதாரங்களும் சான்றுகளும் பொய்யான சூனியமாகும் என்றும் கூறுகிறார்கள்.

(3) 54.3. தங்களிடம் வந்துள்ள சத்தியத்தை அவர்கள் பொய்ப்பித்து விட்டார்கள். பொய்ப்பிப்பிலே தங்களின் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். அனைத்து விடயங்களும் அது நன்மையாக இருந்தாலும் அல்லது தீமையாக இருந்தாலும் மறுமை நாளில் அதற்கு உரியவர்களுக்கு கிடைத்தே தீரும்.

(4) 54.4. நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் நாம் அழித்த சமூகங்களைக் குறித்த செய்திகள் அவர்களிடம் வந்தேயுள்ளன. அவர்களின் நிராகரிப்பு மற்றும் அநியாயம் ஆகியவற்றிலிருந்து அவர்களைத் தடுப்பதற்கு அவை போதுமானதாக இருந்தன.

(5) 54.5. அவர்களுக்கு எதிரான ஆதாரம் நிலைபெற வேண்டுமென்பதற்காக பூரண ஞானம் நிறைந்தவைகளே அவர்களிடம் வந்தன. அதனால்தான் ஆயினும் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின்மீதும் நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு எச்சரிக்கைகள் பயனளிக்கமாட்டாது.

(6) 54.6. -தூதரே!- அவர்கள் நேர்வழி பெறவில்லையென்றால் அவர்களை விட்டுவிடுவீராக. படைப்புகள் இதற்கு முன்னர் அறியாத கடுமையான விஷயத்தின்பால் சூர் ஊதுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர் அழைக்கும் நாளை எதிர்பார்த்தவாறு அவர்களைப் புறக்கணிப்பீராக.

(7) 54.7. அப்போது அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்கள் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டவர்களாக விசாரணை செய்யப்படும் இடத்தை நோக்கி பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளிகளைப்போன்று விரைந்து வருவார்கள்.

(8) 54.8. அந்த இடத்தின்பால் அழைக்கும் அழைப்பாளரை நோக்கி விரைந்து வருவார்கள். அந்நாளில் உள்ள கடினம் மற்றும் பயங்கரங்களின் காரணமாக நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இன்றைய நாள் கடினமான நாளாயிற்றே!”

(9) 54.9. -தூதரே!- உம் அழைப்பை பொய்ப்பிக்கும் இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினரும் பொய்ப்பித்தனர். நம்முடைய அடியார் நூஹை நாம் அவர்களிடம் அனுப்பியபோது அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். அவரைப் பைத்தியக்காரர் என்று கூறி பலவாறு ஏசி விரட்டி அவர்களுக்கு அழைப்புப் பிரச்சாரம் செய்வதை விட்டுவிடுமாறு அச்சுறுத்தலும் விடுத்தனர்.

(10) 54.10. நூஹ் தம் இறைவனிடம் பின்வருமாறு கூறி பிரார்த்தித்தார்: ” நிச்சயமாக என் சமூகம் என்னை மிகைத்துவிட்டது. அவர்கள் என் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. எனவே அவர்கள்மீது தண்டனையை இறக்கி எனக்கு உதவி புரிவாயாக.

(11) 54.11. நாம் இடைவிடாமல் கொட்டும் மழை நீரால் வானத்தின் கதவுகளைத் திறந்துவிட்டோம்.

(12) 54.12. பூமியைப் பொங்கச் செய்தோம். அதிலிருந்து நீருற்றுகள் வெளிப்பட்டன. வானத்திலிருந்து பொழிந்த நீரும் பூமியிலிருந்து பொங்கிய நீரும் அல்லாஹ் முதலிலேயே விதித்த விஷயத்திற்காக ஒன்றுசேர்ந்து கொண்டது. அல்லாஹ் காப்பாற்றியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டார்கள்.

(13) 54.13. பலகைகளாலும் ஆணிகளாலும் செய்யப்பட்ட கப்பலில் நாம் நூஹை ஏற்றிச் சென்றோம். அவரையும் அவருடன் உள்ளவர்களையும் மூழ்காமல் காப்பாற்றினோம்.

(14) 54.14. அந்தக் கப்பல் நம் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் அலைகள் மோதிக்கொள்ளக்கூடிய தண்ணீரில் சென்றது. நூஹை பொய்ப்பித்து அவர் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்ததை பொய்ப்பித்த மக்களைத் தண்டித்து நூஹுக்கு உதவி செய்தான்.

(15) 54.15. நாம் அவர்களைத் தண்டித்த இந்த தண்டனையை படிப்பினைக்காகவும் அறிவுரை பெறும் பொருட்டும் விட்டு வைத்துள்ளோம். அதைக்கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(16) 54.16. பொய்ப்பிப்பாளர்களுக்கு நான் அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களை அழிப்பதற்கு நான் அளித்த எச்சரிக்கை எவ்வாறு இருந்தது?

(17) 54.17. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(18) 54.18. ஆத் சமூகத்தினர் தங்களின் நபி ஹூதை நிராகரித்தார்கள். -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? ஏனையவர்களை தண்டிப்பதற்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

(19) 54.19. நிச்சயமாக நாம் அவர்களின்மீது மோசமான அவர்கள் நரகில் நுழையும் வரைக்கும் அவர்களுடனிருக்கும் கெடுதி, துர்பாக்கியம் மிக்க நாளில் கடும் குளிர்காற்றை அனுப்பினோம்.

(20) 54.20. அது வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரங்களைப்போல மக்களை பூமியிலிருந்து தலைகுப்புற அடியோடு தூக்கி வீசியது.

(21) 54.21. -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஏனையோருக்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

(22) 54.22. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(23) 54.23. ஸமூத் சமூகத்தினர் தங்கள் தூதர் ஸாலிஹின் எச்சரிக்கையை பொய்ப்பித்தார்கள்.

(24) 54.24. அவர்கள் மறுத்தவர்களாக கூறினார்கள்: “நம்மைப்போன்று ஒரு மனிதனை நாம் பின்பற்றுவதா? நாம் இந்த நிலையில் நிச்சயமாக அவரைப் பின்பற்றினால் சரியானதை விட்டும் தடம்புரண்டு தூரமாகவும் சிரமத்திலும் இருப்பவர்களாகி விடுவோம்

(25) 54.25. நம் அல்லாத அனைவரையும் தவிர்த்து அவர்மீது மட்டும்தான் வஹி இறக்கப்படுகிறதா? இல்லை, மாறாக அவர் பொய்யராகவும் ஆணவம் கொண்டவராகவும் இருக்கின்றார்.

(26) 54.26. மறுமை நாளில் யார் பொய்யர், ஆணவம் கொண்டவர் ஸாலிஹா அவர்களா? என்பதை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

(27) 54.27. நிச்சயமாக நாம் அவர்களைச் சோதிக்கும்பொருட்டு பாறையிலிருந்து ஒரு பெண் ஒட்டகத்தை வெளிப்படுத்துவோம். -ஸாலிஹே!- அவர்கள் அதனுடன் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்பீராக. அவர்கள் அளிக்கும் தொல்லைகளை பொறுத்துக் கொள்வீராக.

(28) 54.28. அவர்களுக்கு அறிவிப்பீராக, அவர்களின் கிணற்று நீர் அவர்களுக்கிடையிலும் அந்த பெண் ஒட்டகத்திற்கிடையிலும் பங்கிடப்பட்டுள்ளது. ஒரு நாள் அதற்கும் ஒரு நாள் அவர்களுக்கும் உரியது. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய நாளில் அவர் மாத்திரமே வரமுடியும்.

(29) 54.29. தம்மில் ஒருவரை அந்த ஒட்டகத்தைக் கொலை செய்வதற்காக அழைத்தார்கள். அவனும் தன் சமூகத்தின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு வாளை எடுத்து அதனைக் கொன்றுவிட்டான்.

(30) 54.30. -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஏனையோருக்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

(31) 54.31. நிச்சயமாக நாம் அவர்களின்மீது ஒரு பேரொலியை அனுப்பினோம். அது அவர்களை அழித்துவிட்டது. ஆட்டுமந்தைக்குத் தொழுவம் அமைப்பவர் பயன்படுத்தும் காய்ந்த மரக்குற்றிகளைப் போன்று ஆகிவிட்டனர்.

(32) 54.32. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(33) 54.33. லூத்தின் சமூகத்தினர் தங்களின் தூதர் எதைக் கொண்டு எச்சரிக்கை செய்தாரோ அதனை பொய்ப்பித்தனர்.

(34) 54.34. நிச்சயமாக நாம் லூத்தின் குடும்பத்தாரை தவிர்ந்த ஏனையோரின் மீது கற்களை வீசும் காற்றை அனுப்பினோம். லூதின் குடும்பத்தை வேதனை பீடிக்கவில்லை. அதிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம். அவர்கள் வேதனை இறங்குவதற்கு முன்னரே பின்னிரவில் வெளியேறி விட்டார்கள்.

(35) 54.35. நாம் அவர்கள்மீது அருள்புரியும்பொருட்டு அவர்களை வேதனையிலிருந்து காப்பாற்றினோம். நாம் லூத்திற்கு அளித்த கூலியைப்போன்றே அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கின்றோம்.

(36) 54.36. லூத் அவர்களை நம் வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார். அவர்கள் அவருடைய எச்சரிக்கையைக் குறித்து தர்க்கம் செய்து, அதனை பொய்ப்பித்தார்கள்.

(37) 54.37. லூத்தின் சமூகத்தினர் வானவர்களான அவருடைய விருந்தாளிகளுடன் மானக்கேடான செயலில் ஈடுபடும் நோக்கில் அவர்களை விட்டும் தங்களைத் தடுக்கக்கூடாது என்று அவரை இணங்க வைக்க முயற்சித்தார்கள். நாம் அவர்கள் பார்க்க முடியாதவாறு அவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நான் உங்களுக்கு அளித்த எச்சரிக்கையின் விளைவாக என் வேதனையை அனுபவியுங்கள்.”

(38) 54.38. மறுமை வந்து அதன் வேதனையை அவர்கள் அனுபவிக்கும் வரை அவர்களுடன் தொடர்ந்திருக்கும் வேதனை அதிகாலையில் அவர்களைத் தாக்கியது.

(39) 54.39. அவர்களிடம் கூறப்பட்டது: “லூத் உங்களை எச்சரித்ததன் விளைவாக நான் உங்கள்மீது இறக்கிய என் வேதனையை அனுபவியுங்கள்.”

(40) 54.40. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(41) 54.41. ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களிடத்தில் மூஸா மற்றும் ஹாரூனின் மூலம் நம் எச்சரிக்கை வந்தது.

(42) 54.42. அவர்கள் நம்மிடமிருந்து வந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் பொய்ப்பித்தார்கள். அவர்கள் அவ்வாறு பொய்ப்பித்ததால் நாம் அவர்களை யாவற்றையும் மிகைத்த, வல்லமைமிக்கவனின் தண்டனையால் தண்டித்தோம். எதுவும் அவனுக்கு முடியாததல்ல.

(43) 54.43. -மக்காவாசிகளே!- உங்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா? அல்லது நூஹின் சமூகம், ஆத், ஸமூத், லூதின் சமூகம் மற்றும் பிர்அவ்ன் அவனது சமூகம் ஆகிய மேற்கூறப்பட்ட சமூகங்களிலுள்ள நிராகரிப்பாளர்களா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்கள் என்று வானுலக வேதங்களில் உண்டா?

(44) 54.44. அல்லது மக்காவாசிகளிலுள்ள இந்த நிராகரிப்பாளர்கள், “எங்களுக்குத் தீங்கழைக்க நாடுவோரையும் எங்களின் அணியில் பிளவு ஏற்படுத்த நாடுவோரையும் நாங்கள் வென்றே தீருவோம்” என்று கூறுகிறார்களா?

(45) 54.45. இந்த நிராகரிப்பாளர்களின் கூட்டம் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். இது பத்ருப்போர் அன்று நிகழ்ந்தது.

(46) 54.46. மாறாக அவர்கள் பொய்ப்பிக்கும் மறுமை நாள் அவர்கள் வேதனை செய்யப்படும் என்று வாக்களிக்கப்பட்ட நாளாகும். மறுமை நாளின் வேதனை அவர்கள் உலகில் அனுபவித்த பத்ர் தின வேதனையைவிடக் கடுமையானதாகும்.

(47) 54.47. நிச்சயமாக நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் குற்றமிழைத்தவர்கள் சத்தியத்தை விட்டும் வழிகேட்டிலும் வேதனையிலும் சிரமத்திலுமே உள்ளனர்.

(48) 54.48. அவர்கள் முகங்குப்புற நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் இழிவுபடுத்தும் விதமாக கூறப்படும்: “நீங்கள் நரக வேதனையை அனுபவியுங்கள்.”

(49) 54.49. நிச்சயமாக நாம் உலகில் உள்ள அனைத்தையும் முன்னரே நாம் அமைத்த விதியின்படியும் நம் அறிவு மற்றும் நாட்டத்தின் படியும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் எழுதியுள்ளபடியும் படைத்துள்ளோம்.

(50) 54.50. நாம் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதற்கு ‘ஆகு’ என்ற ஒரு வார்த்தையைத்தான் கூறுவோம். கண்சிமிட்டுவது போன்று விரைவாக நாம் விரும்பியது ஆகிவிடும்.

(51) 54.51. நாம் உங்களைப்போன்று நிராகரித்த முந்தைய சமூகங்களை அழித்துள்ளோம். அதனைக் கொண்டு படிப்பினை பெற்று தனது நிராகரிப்பிலிருந்து தவிர்ந்துகொள்ளக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

(52) 54.52. அடியார்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கும் வானவர்களின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் இல்லை. அவர்களிடமிருந்து எதுவும் தப்ப முடியாது.

(53) 54.53. சிறிய, பெரிய ஒவ்வொரு செயலும் வார்த்தையும் செயல்பதிவேடுகளிலும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலும் பதிவுசெய்யப்படுகிறது. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும்.

(54) 54.54. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இன்பம் பெறக்கூடிய சுவனங்களிலும் ஓடக்கூடிய ஆறுகளிலும் இருப்பார்கள்.

(55) 54.55. வீணான பேச்சோ, பாவமான காரியமோ அற்ற உண்மையான அவையில் வல்லமையுடைய அனைத்தையும் ஆளக்கூடிய அரசனுக்கு அருகில் இருப்பார்கள். அவனுக்கு எதுவும் முடியாததல்ல. அவர்கள் அங்கு பெறப்போகும் நிலையான அருட்கொடைகள் குறித்துக் கேட்காதீர்.