(1) 59.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன, கண்ணியப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்பில், சட்டமியற்றலில், நிர்ணயத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
(2) 59.2. அவனே தன்னை நிராகரித்து தன் தூதரை பொய்ப்பித்த தவ்ராத் வேதத்தையுடைய யூதர்களான பனூ நளீர் குலத்தார் உடன்படிக்கையை முறித்து இணைவைப்பாளர்களுடன் ஒத்துழைத்தபோது அவர்களை மதீனாவிலுள்ள அவர்களின் வீடுகளிலிருந்து ஷாமுக்கு முதன் முதலாக வெளியேற்றினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களிடம் காணப்படும் பலம் மற்றும் பாதுகாப்பினால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கவில்லை. தாங்கள் உறுதியாகக் கட்டிய கோட்டைகள் தங்களை அல்லாஹ்வின் தண்டனை, பிடியிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்களும் நினைத்தனர். தூதர் அவர்களுடன் போரிடும்படி, அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும்படி கட்டளையிட்ட போது அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அல்லாஹ்வின் தண்டனை அவர்களிடம் வந்தது. அவன் அவர்களின் உள்ளங்களில் கடும் பீதியை ஏற்படுத்திவிட்டான். தமது வீடுகள் முஸ்லிம்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக அவர்கள் உட்புறமிருந்து தங்களின் கைகளாலேயே அவற்றைத் தகர்த்தார்கள். வெளிப்புறமிருந்து முஸ்லிம்கள் அவற்றை அழித்தார்கள். அகப்பார்வையுடையோரே! அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது இறங்கிய வேதனையைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது இறங்கிய அதே வேதனை, கூலி உங்கள் மீதும் இறங்கும்.
(3) 59.3. அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுவதை அல்லாஹ் அவர்கள்மீது விதித்திருக்காவிட்டால், இவ்வுலகில் கொலை மற்றும் கைதின் மூலம் அவர்களைத் தண்டித்திருப்பான். அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கின்றது. அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
(4) 59.4. அவர்களுக்கு இவ்வாறு நேர்ந்ததற்கான காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து ஒப்பந்தங்களை முறித்து அவர்களுடன் பகைமை பாராட்டியதே. யார் அல்லாஹ்வைப் பகைப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். எனவே அவனது கடுமையான தண்டனை அவனுக்கு ஏற்படும்.
(5) 59.5. -நம்பிக்கையாளர்களே!- பனூ நளீர் குலத்தாருடன் போரிடும்போது அல்லாஹ்வின் எதிரிகளை கோபமூட்டுவதற்காக நீங்கள் வெட்டிய பேரீச்சை மரங்களும் அல்லது அதனைக்கொண்டு பயனடைவதற்காக அவற்றின் வேர்களில் நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் கட்டளையினால்தான். அவர்கள் எண்ணுவது போல இது பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகாது. இதன் மூலம் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் ஒப்பந்தங்களை முறித்து அதனை நிறைவேற்றும் வழிகளை விட்டுவிட்டு துரோகமிழைக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட யூதர்களை இழிவுபடுத்துகிறான்.
(6) 59.6. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களிலிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு திருப்பியளித்த செல்வங்களைத் தேடி நீங்கள் குதிரையிலோ, ஒட்டகத்திலோ பயணம் செய்யவில்லை. அதில் உங்களுக்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஆயினும் அல்லாஹ் தன் தூதர்களை தான் நாடியோர்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்கிறான். அவன் தன் தூதரை பனூ நளீர் குலத்தாரின்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். அவர் அவர்களின் நகரங்களை போரின்றி வெற்றி கொண்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
(7) 59.7. போர் புரியாமல் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்த ஊர்வாசிகளின் செல்வங்கள் யாவும் அல்லாஹ்வுக்காகும். அவன் அவற்றை தான் நாடியவாறு பங்கிடுவான். தூதருக்கும் அவருடைய குடும்பத்தாரான பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தாருக்கும் உரியவையாகும். ஏனெனில் இது அவர்களுக்கு தர்மம் பெறுவது தடைசெய்யப்பட்டதற்கான பகரமாகும். மேலும் அவை அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழித்துணை சாதனங்களை இழந்துவிட்ட வழிப்போக்கர்களுக்கும் உரியவை. இது ஏழைகள் அல்லாமல் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகும். -நம்பிக்கையாளர்களே!- போரின்றி கைப்பற்றப்பட்ட செல்வங்களில் தூதர் உங்களுக்கு அளித்தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் தண்டிப்பதில் கடுமையானவன். ஆகவே அவனது தண்டனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
(8) 59.8. இந்த செல்வங்களில் ஒரு பகுதி தங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் விட்டுவிட வற்புறுத்தப்பட்ட அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சிறப்பிக்க வேண்டும் என்றும் மறுமையில் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கிறார்கள். இந்தப் பண்புகளைப் பெற்றவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையில் உறுதியானவர்களாவர்.
(9) 59.9. முஹாஜிர்கள் - புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு முன்னரே மதீனாவில் வசித்த அன்சாரிகள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மக்காவிலிருந்து தங்களின்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். அவர்கள் போரின்றி கிடைத்த செல்வங்களிலிருந்து தங்களுக்கு வழங்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டால் தங்களின் உள்ளங்களில் அவர்களைக் குறித்து குரோதமோ, பொறாமையோ கொள்வதில்லை. அவர்கள் உலக விஷயங்களில் தங்களைவிட புலம்பெயர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். அவர்கள் ஏழைகளாக, தேவையுடையோராக இருந்தாலும் சரியே. யாருடைய உள்ளங்களையெல்லாம் அல்லாஹ் செல்வத்தின்மீதுள்ள மோகத்திலிருந்து பாதுகாத்து அவர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்கள்தாம் அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
(10) 59.10. அவர்களுக்குப் பின்வந்து அவர்களை மறுமை நாள்வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. எங்களின் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களில் யாரைக் குறித்தும் குரோதத்தையோ, பொறாமையையோ ஏற்படுத்திவிடாதே. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ உன் அடியார்களோடு மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்.”
(11) 59.11. தூதரே! நிராகரிப்பை மறைத்து நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவர்களை நீர் பார்க்கவில்லையா? நிராகரிப்பில் தங்களின் சகோதரர்களான திரிக்கப்பட்ட தவ்ராத்தைப் பின்பற்றும் யூதர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்: “உங்களின் வீடுகளில் உறுதியாக இருங்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். முஸ்லிம்கள் உங்களை வெளியேற்றினால் உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாங்களும் வெளியேறுவோம். உங்களுடன் வெளியேறுவதை விட்டும் எங்களைத் தடுக்க நினைக்கும் யாருக்கும் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம். அவர்கள் உங்களுடன் போரிட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு உதவி புரிவோம்.” நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் யூதர்கள் வெளியேற்றப்பட்டால் நாமும் வெளியேறுவோம் அவர்கள் உங்களுடன் போரிட்டால் நாங்களும் அவர்களோடு போரிடுவோம் என்று தாங்கள் கூறும் விஷயத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(12) 59.12. முஸ்லிம்கள் அவர்களை வெளியேற்றினால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுடன் போரிட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களைக் கண்டு வெருண்டோடி விடுவார்கள். அதன் பின்னர் நயவஞ்சகர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்தியே தீருவான்.
(13) 59.13. -நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய அச்சமே உள்ளது. அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சி அல்லாஹ்வை அஞ்சுவதில் பலஹீனர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் புரியாத மக்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் புரிந்திருந்தால் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன் என்பதை அறிந்திருப்பார்கள். ஏனெனில் அவனே அவர்கள் மீது உங்களை ஆதிக்கம் கொள்ளச் செய்தான்.
(14) 59.14. -நம்பிக்கையாளர்களே!- கோட்டைகளில் இருந்துகொண்டோ அல்லது சுவருக்குப் பின்னாலிருந்தோ தவிர யூதர்கள் ஒன்றுசேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்களின் கோழைத்தனத்தினால் அவர்களால் உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் பகையோ மிகக் கடுமையானது. நிச்சயமாக அவர்கள் ஒரே கருத்தில் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் நீர் எண்ணுவீர். உண்மையில் அவர்களின் உள்ளங்களோ பிளவுபட்டுக் கிடக்கின்றன. அவர்களிடையே காணப்படும் இந்த பகைமைக்கான காரணம், அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் விளங்கியிருந்தால் சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றியிருப்பார்கள். அதிலே முரண்பட்டிருக்க மாட்டார்கள்.
(15) 59.15. இந்த யூதர்கள் தங்களின் நிராகரிப்பிலும் அவர்கள் மீது இறங்கிய வேதனையிலும் அண்மையில் வாழ்ந்த மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களாவர். அவர்கள் நிராகரிப்பின் தீய விளைவை அனுபவித்தார்கள். பத்ருப்போரில் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள், சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை உண்டு.
(16) 59.16. அவர்கள் நயவஞ்சகர்களிடம் காதுகொடுத்துக் கேட்பதற்கு உதாரணம் ஷைத்தான் மனிதனுக்கு நிராகரிப்பதை அலங்கரித்துக் காட்டி நிராகரித்து விடு என்று கூறியதைப் போன்றதாகும். ஷைத்தானின் அலங்கரிப்பில் மயங்கி மனிதன் நிராகரித்தபோது ஷைத்தான் அவனிடம் கூறினான்: “நான் உன் நிராகரிப்பைவிட்டும் விலகிவிட்டேன். நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”
(17) 59.17. ஷைத்தானினதும் அவனுக்குக் கட்டுப்பட்டவனினதும் முடிவு (பின்பற்றப்படக்கூடிய ஷைத்தானும் பின்பற்றிய மனிதனும்) மறுமை நாளில் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பதாகும். இந்தக் கூலிதான் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்காக காத்திருக்கும் கூலியாகும்.
(18) 59.18. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தாம் மறுமை நாளுக்காக சேர்த்து வைத்துள்ள நற்செயல்கள் குறித்து சிந்தித்துப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(19) 59.19. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருக்காமல் அவனை மறந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் தங்களையே மறக்கும்படிச் செய்துவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ்வின் கோபம் மற்றும் தண்டனையிலிருந்து பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. -அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்காத- அவனை மறந்தவர்கள்தாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாவர்.
(20) 59.20. நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். மாறாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களுக்கேற்ப வெவ்வேறான கூலிகளைப் பெறுவார்கள். சுவனவாசிகள்தாம் தாங்கள் விரும்பியதைப் பெற்று வெறுக்கும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
(21) 59.21. -தூதரே!- நாம் இந்த குர்ஆனை ஒரு மலையின்மீது இறக்கினால் அதிலுள்ள எச்சரிக்கும் உபதேசங்கள், கடுமையான எச்சரிக்கைகள் ஆகியவற்றினால் அல்லாஹ்வின் மீது ஏற்படும் கடும் அச்சத்தினால் உறுதியான அந்த மலை கீழ்படிந்து பிளந்துவிடும். மக்கள் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி அல்குர்ஆன் உள்ளடக்கியிருக்கும் உபதேசங்கள், படிப்பினைகள் என்பவற்றின் மூலம் அறிவுரை பெறும் பொருட்டு இந்த உதாரணங்களை நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
(22) 59.22,23. அவனே அல்லாஹ். அவனைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை அகிலத்தார் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.
(23) 59.22,23. அவனே அல்லாஹ். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை படைப்புகள் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.
(24) 59.24. அல்லாஹ்வே எல்லா படைப்புகளையும் படைத்தவன்; அனைத்தையும் உருவாக்கியவன்; தன் படைப்புகளுக்கு தான் விரும்பிய வடிவம் அளிப்பவன்; உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் குறைகள் அனைத்தையும்விட்டு அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும் சட்டத்திலும் நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.