6 - ஸூரா அல்அன்ஆம் ()

|

(1) 6.1. முழுமையான பரிபூரணத்தைக் கொண்டு வர்ணிப்பதும், உயர் சிறப்புக்களைக் கொண்டு அன்புடன் கலந்த புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். இரவையும் பகலையும் அடுத்தடுத்து வரக்கூடியதாக படைத்துள்ளான். இரவை இருள் மிக்கதாகவும் பகலை வெளிச்சம்மிக்தாகவும் அவன் ஆக்கியுள்ளான். அவ்வாறிருந்தும் அல்லாஹ்வை நிராகரிப்போர், மற்றவர்களை அவனுக்கு நிகராகவும் இணையாகவும் ஆக்குகிறார்கள்.

(2) 6.2. மனிதர்களே! அவன்தான் - உங்களின் தந்தை ஆதமைப் களி மண்ணிலிருந்து படைத்தபோது - உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான தவணையை நிர்ணயித்தான். மறுமைநாளில் உங்களை மீண்டும் எழுப்புவதற்காக -அவன் மாத்திரம் அறிந்த- வேறொரு தவணையையும் நிர்ணயித்துள்ளான். பின்னரும் நீங்கள், மறுமை நாளில் மீட்டி எழுப்பும் அவனது வல்லமையைக் குறித்து சந்தேகம் கொள்கிறீர்கள்.

(3) 6.3. வானங்களிலும் பூமியிலும் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் மறைத்து வைத்திருக்கும், வெளிப்படுத்தும் எண்ணங்களையும் சொல்களையும் செயல்களையும் அவன் அறிவான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(4) 6.4. இணைவைப்பாளர்களிடம் - அவர்களின் இறைவனிடமிருந்து - எந்தவொரு சான்றையும், அற்புதத்தையும் நீர் கொண்டுவந்தாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாதவர்களாக புறக்கணித்து விடுகிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அவர்களிடம் வந்தே இருக்கின்றன. இருந்தும் அவர்கள் அலட்சியமாக அதனைப் புறக்கணித்து விட்டனர்.

(5) 6.5. அவர்கள் இந்த தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் புறக்கணித்தால் - ஏன் இவற்றை விட தெளிவான ஆதாரத்தையே அவர்கள் புறக்கணித்துவிட்டார்களே! முஹம்மது கொண்டுவந்த குர்ஆனை பொய்பித்தார்கள். மறுமைநாளில் வேதனையை அவர்கள் காணும் போது அவர்கள் பரிகாசம் செய்த அவர் கொண்டுவந்ததுதான் சத்தியம் என்பதைக் கண்டுகொள்வார்கள்.

(6) 6.6. இந்த நிராகரிப்பாளர்கள் அநியாயக்கார சமூகங்களை அழிப்பதில் அல்லாஹ்வின் வழிமுறையை அறிந்துகொள்ளவில்லையா என்ன? அவர்களுக்கு முன்னர் அவன் பூமியில் எத்தனையோ சமூகங்களை அவன் அழித்துள்ளான். இந்த நிராகரிப்பாளர்களுக்கு வழங்காத பூமியில் நிலைப்பதற்கான ஆற்றல்களை அவர்களுக்கு அவன் வழங்கியிருந்தான். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழியச் செய்தான். அவர்களின் வசிப்பிடங்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்தான். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் அவர்களை அழித்துவிட்டான். அவர்களுக்குப் பின் வேறு சமூகங்களை உருவாக்கினான்.

(7) 6.7. தூதரே! காகிதங்களில் எழுதப்பட்ட புத்தகத்தை நாம் உம்மீது இறக்கி அதனை அவர்கள் கண்ணால் பார்த்து கைகளால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டாலும் கூட, பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் அவர்கள் அதனை நம்பிக்கைக் கொள்ளமாட்டார்கள். மாறாக “நீர் கொண்டுவந்தது தெளிவான சூனியமே. எனவே நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.

(8) 6.8. இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் முஹம்மதுடன் ஒரு வானவரை அனுப்பி அவர், இவர் தூதர்தான் என்று எங்களிடம் கூறினால் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்”. அவர்கள் கூறியவாறு நாம் ஒரு வானவரை அனுப்பி, அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் அவர்களை அழித்துவிடுவோம். வானவர் வந்துவிட்டால் பாவமன்னிப்புக்கான அவகாசம் தரப்படாது.

(9) 6.9. நாம் வானவரை அவர்களுக்குத் தூதராக அனுப்பியிருந்தாலும் அவரையும் மனித உருவில்தான் ஆக்கியிருப்போம். ஏனெனில் அப்பொழுதுதான் அவர் கூறுவதைச் செவிமடுத்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ் வானவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் இருக்கும் போது அதற்கு அவர்கள் சக்திபெறமாட்டார்கள். நாம் அவரை மனித உருவில் அனுப்பியிருந்தால் அவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்திருப்பார்கள்.

(10) 6.10. உம்முடன் ஒரு வானவரை இறக்குமாறு கூறி அவர்கள் உம்மை பரிகாசம் செய்தால் - உமக்கு முன்னரும் பல சமூகங்கள் தமது தூதர்களைப் பரிகசித்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கை செய்யப்படும் வேளை அவர்கள் மறுத்துப் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

(11) 6.11. தூதரே! பரிகாசம் செய்யும் இந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “பூமியில் பயணம் செய்யுங்கள். அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் பலத்தையும் பாதுகாப்பையும் பெற்றிருந்தும் அல்லாஹ்வின் வேதனையில் சிக்கிக் கொண்டார்கள்.

(12) 6.12. தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்கள், பூமி, அவையிரண்டிற்கு இடையில் உள்ளவை ஆகியவற்றின் உரிமை யாருக்குரியது? நீர் கூறுவீராக: அனைத்தின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியது. அடியார்கள் மீது அருள் புரிவதற்காக கருணையை தன்மீது விதித்துக் கொண்டான். எனவேதான் அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(13) 6.13. இரவிலும் பகலிலும் இருக்கும் எல்லாவற்றின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவர்களது பேச்சுக்களை அவன் செவியேற்கக்கூடியவன். செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(14) 6.14. தூதரே! அல்லாஹ்வுடன் சிலைகளையும் மற்றவைகளையும் வணங்கும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் அல்லாதவர்களை நேசம் பாராட்டும், உதவி பெறும் உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதை கற்பனையாவது செய்யலாமா? அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உணவளிக்கிறான். அவனது அடியார்களில் யாரும் அவனுக்கு உணவளிப்பதில்லை. அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். அடியார்கள் அவன்பால் தேவையுடையவர்கள்.” தூதரே! நீர் கூறுவீராக: “இந்த சமூகத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என்று என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவனுடன் மற்றவர்களை இணையாக்குபவர்களுடன் நான் சேர்ந்துவிடுவதை விட்டும் என்னைத் தடுத்துள்ளான்.

(15) 6.15. தூதரே! நீர் கூறுவீராக: “நான் என் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் தடைசெய்த ஷிர்க் போன்ற பாவங்களில் ஈடுபட்டால் அல்லது அவன் கட்டளையிட்ட நம்பிக்கை மற்றும் ஏனைய வணக்கவழிபாடுகளை விட்டுவிட்டால் மறுமை நாளில் அவன் என்னைக் கடுமையாக வேதனை செய்வான் என்பதை அஞ்சுகிறேன்.

(16) 6.16. மறுமை நாளில் அல்லாஹ் யாரைவிட்டும் இந்த வேதனையை அகற்றிவிடுவானோ அவனுடைய அருளால் அவர் வெற்றி பெற்றுவிட்டார். வேதனையிலிருந்து கிடைக்கும் இந்த விடுதலையே ஈடிணையற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.

(17) 6.17. ஆதமின் மகனே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவனைத் தவிர யாராலும் அதனைப் போக்க முடியாது. அவன் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

(18) 6.18. அவன் தனது அடியார்களை விட மிகைத்தவன். அனைவரையும் அடிபணிய வைப்பவன், அனைத்து வகையிலும் அவர்களை விட உயர்ந்தவன். அவனுக்கு இயலாதது எதுவுமில்லை. அவனை யாராலும் மிகைக்க முடியாது. அனைவரும் அவனுக்குக் கட்டுப்படுபவர்கள்தாம். தன் கண்ணியத்திற்கேற்ப தனது அடியார்களுக்க மேலால் இருக்கிறான். தன் படைப்பிலும் நிர்வாகத்திலும் தான் வழங்கிய சட்டங்களிலும் அவன் ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(19) 6.19. தூதரே! உம்மை நிராகரித்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு யாருடைய சாட்சி மிகப் பெரியதாக இருக்கும்?” நீர் கூறுவீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சியமே பெரியதாக இருக்கும். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாளனாக இருக்கின்றான். நான் உங்களிடம் கொண்டுவந்ததையும் நீங்கள் அதற்கு என்ன பதிலளிப்பீர்கள் என்பதையும் அவன் அறிவான். நான் உங்களை அச்சமூட்டுவதற்காக, மனிதர்கள், ஜின்கள் அனைவரையும் அச்சமூட்டுவதற்காக அல்லாஹ் எனக்கு இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்” தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் ஏற்றுக் கொண்டது அசத்தியம் என்பதனால் அதற்கு நான் சாட்சி கூறமாட்டேன். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அனைத்தையும் விட்டும் நான் விலகிவிட்டேன்.”

(20) 6.20. தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களும் தங்களின் பிள்ளைகளை மற்றவர்களின் பிள்ளையிலிருந்து பிறித்தறிவைதைப் போன்று முஹம்மது நபியை முழுமையாக அறிவார்கள். அவர்கள்தான் தங்களைத் தாங்களே நரகத்தில் நுழைத்து இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(21) 6.21. அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடன் சேர்த்து வணங்கியவரைவிட அல்லது அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரித்தவர்களைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடைய வசனங்களை மறுக்கும் அநியாயக்காரர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.

(22) 6.22. நாம் அனைவரையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. யாரையும் விட்டு விட மாட்டோம். பின்னர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் இணைத்து வணங்கியவர்களிடம் அவர்களை பரிகசிக்குமுகமாக, “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று பொய்கூறி அவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்போம்.

(23) 6.23. இப்பரீட்சையின் பின் தாம் வணங்கிவந்த தங்களின் கடவுள்களிடமிருந்து விலகிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காது. “எங்கள் இறைவா! நாங்கள் உனக்கு யாரையும் இணையாக்கவில்லை. மாறாக நாங்கள் உன்னை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கிக் கொண்டிருந்தோம்.” என அவர்கள் பொய்யுரைப்பார்கள்.

(24) 6.24. முஹம்மதே! தாம் இணைவைக்கவில்லையென்று அவர்கள் எவ்வாறு தங்கள் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்று பாரும். இவ்வுலக வாழ்வில் அவர்கள் பொய்யாக இறைவனோடு புனைந்த இணைத் தெய்வங்கள் அவர்களை விட்டும் மறைந்து அவர்களைக் கைவிட்டுவிட்டன.

(25) 6.25. தூதரே! நீர் குர்ஆன் ஓதினால் இணைவைப்பாளர்களில் சிலர் உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆயினும் அவர்கள் கேட்பவை அவர்களுக்கு பயனடைவதில்லை. அவர்களின் பிடிவாதம் மற்றும் புறக்கணிப்பினால் குர்ஆனை புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் பயனுள்ள விஷயங்களைச் செவியுற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். எந்தளவுக்கென்றால் அவர்கள் உம்மிடம் அசத்தியத்தைக்கொண்டு வாதிட வரும்போது, “முந்தைய வேதங்களிலிருந்தே நீர் இந்த விஷயங்களையெல்லாம் கொண்டுவந்தீர்” என்று அவர்கள் கூறுவார்கள்.

(26) 6.26. அவர்கள் தூதர் மீது நம்பிக்கைகொள்வதை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். தாமும் அதிலிருந்து தூரமாகிறார்கள். மக்களைப் பயனடைய விடுவதுமில்லை. அவர்கள் அதிலிருந்து பயனடைவதுமில்லை. இதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பது தம்மைத் தாமே அழிக்கும் வேலை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை.

(27) 6.27. தூதரே! மறுமை நாளில் அவர்கள் நெருப்பில் முன்னிறுத்தப்பட்டு, “அந்தோ, அல்லாஹ்வின் வசனங்களை மறுக்காமல் அவனை நம்பிக்கைகொண்டவர்களாக ஆகுவதற்கு, நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட மாட்டோமா!” என அவர்கள் கைசேதப்பட்டு கூறும் போது, அவர்களது அவலமான நிலை கண்டு நீர் ஆச்சரியப்படுவீர்.

(28) 6.28. திருப்பி அனுப்பப்பட்டால் நம்பிக்கைகொள்வோம் என அவர்கள் கூறுவது உண்மையல்ல. மாறாக தங்களின் வார்த்தையால் தாங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள். அவர்களது உடலறப்புக்கள் அவர்களுக்கெதிராக சாட்சி கூறும் போது, (நாங்கள் இணைவைப்பாளர்களாக இருக்கவில்லை) என்ற அவர்களின் கூற்றின் மூலம், அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை வெளிவந்துவிட்டன. அவர்கள் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்ட ஷிர்க்கான, நிராகரிப்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். நாங்கள் திரும்பினால் நம்பிக்கைகொள்வோம் என்ற தங்களின் வாக்குறுதியில் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே.

(29) 6.29. இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் இருக்கும் இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாங்கள் விசாரணைக்காக எழுப்பப்பட மாட்டோம்.”

(30) 6.30. தூதரே! எழுப்பப்படும் நாளை மறுக்கக்கூடியவர்கள் தங்கள் இறைவனுக்கு முன்னால் நிற்பதை நீர் கண்டால் அவர்களின் மோசமான நிலையைக் கண்டு நீர் ஆச்சரியப்படுவீர். அப்போது அல்லாஹ் அவர்களிடம் கேட்பான், “நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த இந்த நாள் உண்மையானதாகவும் சந்தேகமற்றதாகவும் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள், “எங்களைப் படைத்த எங்கள் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அது சந்தேகமற்ற உண்மையாகும். அப்போது அல்லாஹ் , “நீங்கள் உலக வாழ்வில் இந்த நாளை நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையைச் சுவையுங்கள்.” என்று அவர்களிடம் கூறுவான்.

(31) 6.31. மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து, அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை சாத்தியமற்றது எனக் கருதியவர்கள் இழப்படைந்துவிட்டார்கள். முன்னறிவித்தலின்றி திடீரென்று மறுமைநாள் அவர்களிடம் வந்துவிடும் போது பெரும் கைசேதப்பட்டுக் கூறுவார்கள், “எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, மறுமை நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாது அல்லாஹ்வின் விடயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டோமே!.” அவர்கள் தங்களின் பாவங்களை முதுகுகளில் சுமப்பார்கள். அவர்கள் சுமக்கும் பாவங்கள் எவ்வளவு மோசமானது! என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(32) 6.32. நீங்கள் ஆசைகொள்ளும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வைத் திருப்தியடைச் செய்யும் காரியங்களைச் செய்யாதவர்களுக்கு விளையாட்டும் ஏமாற்றமுமேயாகும். இறைநம்பிக்கை, வணக்கவழிபாடு ஆகிய அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, இணைவைப்பு, பாவம் ஆகிய அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் வீடுதான் சிறந்ததாகும். இணைவைப்பாளர்களே, நீங்கள் இதனைப் புரிந்துகொண்டு அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிய மாட்டீர்களா?

(33) 6.33. தூதரே! வெளிரங்கத்தில் அவர்கள் உம்மை நிராகரிப்பது உமக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். நீர் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்பதை அவர்கள் அறிந்ததனால் உள்ரங்கத்தில் அவர்கள் உம்மை நிராகரிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் உமது விடயத்தை வெளிரங்கத்தில் மறுத்து உள்ரங்கத்தில் உறுதியாக நம்பும் அநியாயக்கார சமுதாயமாகும்.

(34) 6.34. அவர்கள் நீர் கொண்டுவந்ததை மட்டும்தான் நிராகரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். உமக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் சமூகங்கள் அவர்களைத் துன்புறுத்தியிருக்கின்றன. ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை, பிரச்சாரத்திலும், அல்லாஹ்வின் பாதையில் போராடுவதன் மூலமும் பொறுமையாக இருந்து அவற்றை எதிர்கொண்டார்கள். அல்லாஹ் எழுதிவைத்த உதவியையும் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் யாராலும் மாற்ற முடியாது. தூதுரே! முந்தைய தூதர்களின் செய்திகளும் அவர்களது சமுதாயங்கள் மூலம் அவர்கள் அனுபவித்தவைகளும், அவர்களது எதிரிகளை அழித்து அவர்களுக்கு வழங்கிய வெற்றியைப் பற்றிய செய்திகளும் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.

(35) 6.35. தூதுரே! நீர் அவர்களுக்கு கொண்டுவந்த சத்தியத்தில் அவர்களின் நிராகரிப்பும் புறக்கணிப்பும் உமக்குப் பாரமாகத் தோன்றினால் உம்மால் முடிந்தால் பூமியில் ஒரு சுரங்கத்தையோ வானத்தில் ஒரு ஏணியையோ அமைத்து நாம் உமக்கு அளித்த ஆதாரங்கள், சான்றுகள் அல்லாமல் வேறு ஆதாரங்களையோ சான்றுகளையோ கொண்டு வரமுடியுமானால் கொண்டு வாரும். அவர்களுக்கு அல்லாஹ் நீர் கொண்டுவந்த நேர்வழியின் பக்கம் வழிகாட்ட நாடியிருந்தால் அவன் நேர்வழிகாட்டியிருப்பான். ஆயினும் அவன் ஒரு ஆழமான நோக்கத்திற்காக அவ்வாறு விரும்பவில்லை. எனவே அதனைப் புரியாத ஒருவராக நீர் ஆகிவிடாதீர். அதனை நீர் புரியாவிட்டால், அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையே என்ற கவலையால் உமது உயிரே போய்விடும்.

(36) 6.36. விஷயத்தைச் செவியுற்று புரிந்து கொள்பவர்கள்தாம் நீர் கொண்டு வந்ததை ஏற்றுக்கொண்டு பதிலளிப்பார்கள். நிராகரிப்பாளர்கள் இறந்தவர்களாவர். அவர்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. அவர்களின் உள்ளங்கள் இறந்துவிட்டன. மரணித்தவர்களை மறுமை நாளில் அல்லாஹ் உயிர்கொடுத்து எழுப்புவான். பின்னர் அவர்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களுக்கு அவன் கூலி வழங்குவான்.

(37) 6.37. “முஹம்மதின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஏதேனும் ஒரு ஆதாரம் அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?” என்று இணைவைப்பாளர்கள் வீம்பாகக் கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக, “அவர்கள் விரும்புவது போன்று ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு அல்லாஹ் சக்தியுடையவன்தான். ஆனால் இவ்வாறு கேட்கும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் தன் ஞானத்தின் பிரகாரமே ஆதாரங்களை இறக்குவான் அவர்களது வேண்டுதல்களுக்கேற்பவல்ல, என்பதை அறியமாட்டார்கள். அவன் இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையென்றால் அவன் அவர்களை அழித்துவிடுவான்.

(38) 6.38. ஆதமின் மக்களே! பூமியின் மேற்பரப்பில் நடமாடும் எந்த உயிரினமானாலும், வானத்தில் பறந்து திரியும் எந்த பறவையானாலும் படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள்தாம். லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதியாமல் எந்த ஒன்றையும் நாம் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் பக்கமே மறுமைநாளில் தீர்ப்பிற்காக ஒன்றுதிரட்டப்படுவர். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.

(39) 6.39. நம்முடைய வசனங்களை நிராகரித்தவர்கள் கேட்க முடியாத செவிடர்களை, பேசமுடியாத ஊமையர்களைப் போன்றவர்களாவர். அத்துடன் அவர்கள் பார்க்கமுடியாமல் இருள்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு நேர்வழி அடைய முடியும்? யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ அவரை வழிகெடுத்தே தீருவான். யாருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.

(40) 6.40. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களின் தெய்வங்கள் நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற்றவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் எனக்கு அறிவியுங்கள், அல்லாஹ்வின் வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு நிச்சயமாக வரும் என்று எச்சரிக்கப்பட்ட அந்நேரம் வந்துவிட்டால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர உள்ளவர்களையா அழைப்பீர்கள்?.”

(41) 6.41. உண்மையில் உங்களைப் படைத்த அல்லாஹ்வையே நீங்கள் அழைப்பீர்கள். அப்பொழுது அவன் நாடினால் உங்களது துன்பத்தைப் போக்கி, தீங்கினை அகற்றுவான். அவனே இதற்குப் பொறுப்பாளன், ஆற்றல்மிக்கவன். அல்லாஹ்வுடன் இணையாக்கிய உங்களின் தெய்வங்களை - அவற்றால் உங்களுக்குப் பலனோ, தீங்கோ அளிக்கமுடியாது என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் - விட்டுவிடுவீர்கள்.

(42) 6.42. தூதரே! உமக்கு முந்தைய சமூகங்களிலும் தூதர்களை அனுப்பினோம். அந்த மக்கள் தூதர்களை நிராகரித்தார்கள். அவர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணிய வேண்டும் என்பதற்காக வறுமை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் போன்ற சோதனைகளைக் கொண்டு நாம் அவர்களைச் தண்டித்தோம்.

(43) 6.43. அவர்களுக்கு நமது சோதனை வந்தபோது, அது நீங்கும் பொருட்டு, அல்லாஹ்வுக்கு அவர்கள் கட்டுப்பட்டு அடிபணிந்திருந்தால் அவர்கள் மீது நாம் கருணை காட்டியிருப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அறிவுரை பெறாதவாறு அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். அதனால் அவர்கள் தங்களின் பாவங்களில் நிலைத்திருந்தார்கள்.

(44) 6.44. கடுமையான வறுமை மற்றும் நோய் மூலம் அவர்கள் அறுவுறுத்தப்பட்டதை அவர்கள் விட்டு, அல்லாஹ்வின் கட்டளையின்படி செயல்படாமல் இருந்தபோது, கொஞ்சம்கொஞ்சமாக வசதியின் வாயில்களை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; ஏழ்மையின் பின் செல்வத்தையும் நோயின் பின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு வழங்கினோம். இதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டபோது, தமக்கு வழங்கப்பட்ட வசதிகளினால் சந்தோசம் அவர்களை ஆட்கொண்ட போது திடீரென நம்முடைய வேதனை அவர்களை அடைந்தது. அதனால் தடுமாற்றத்திலும் விரக்தியிலும் சிக்கிக்கொண்டனர்.

(45) 6.45. நிராகரிப்பாளர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் தன் தூதர்களுக்கு உதவிசெய்தான். தனது எதிரிகளை அழித்து தனது நேசர்களுக்கு உதவி புரிந்ததற்காக, நன்றியும் புகழும் அகிலங்களைப் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

(46) 6.46. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ் உங்களின் கேட்கும் திறனைப் பறித்து செவிடனாகவும், பார்வையைப் பறித்து குருடனாகவும், எதையும் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரையிட்டும் விட்டால், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் இழந்தவற்றைத் திருப்பித் தரும் இறைவன் யார்?” தூதரே! நாம் எவ்வாறு விதவிதமாக அவர்களுக்கு ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! பின்னரும் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.

(47) 6.47. தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “நீங்கள் உணராமலேயே திடீரென அல்லாஹ்வின் வேதனை உங்களை அடைந்துவிட்டால் அல்லது வெளிப்படையாக அது உங்களிடம் வந்துவிட்டால், அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரைப் பொய்யர் என்று கூறிய அநியாயக்காரக்காரர்களைத் தவிர வேறு யார்தான் அழிவார்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்.”

(48) 6.48. நாம் தூதர்களை அனுப்பவதெல்லாம் நம்பிக்கைகொண்டு கீழ்ப்படிந்தவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் நம்முடைய கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காகவும்தான். தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் நிகழக்கூடியதை எண்ணி அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இழந்த உலக பாக்கியங்களை எண்ணி கவலைகொள்ளவோ கைசேப்படவோ மாட்டார்கள்.

(49) 6.49. நம்முடைய சான்றுகளை பொய்யெனக் கூறி அவர்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படிய மறுத்ததனால் அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும்.

(50) 6.50. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?

(51) 6.51. தூதரே! மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவதை நினைத்து அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அச்சமூட்டுவீராக. அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர நன்மையளிக்கும் எந்த நண்பனோ தீமையைத் தடுக்கும் எந்த சிபாரிசு செய்பவரோ இருக்கமாட்டார். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சலாம். இவர்கள்தாம் குர்ஆனைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.

(52) 6.52. தூதரே! இணைவைப்பாளர்களின் தலைவர்களைக் கவர்வதற்காக காலையிலும் மாலையிலும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே எப்பொழுதும் வணங்கும் ஏழை முஸ்லிம்களை உம் அவையைவிட்டு விரட்டிவிடாதீர். இந்த ஏழைகளுக்கு நீங்களோ, அவர்களுக்கு நீங்களோ எவ்விதப் பொறுப்பும் இல்லை. அவர்களது பொறுப்பு அவர்களின் இறைவனிடமே உள்ளது. நீர் அவர்களை உம் அவையிலிருந்து விரட்டினால் நீர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவரே.

(53) 6.53. இவ்வாறே நாம் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம். உலக பாக்கியங்களில் அவர்களை ஏற்றத்தாழ்வுடையோராக ஆக்கினோம். செல்வம் வழங்கப்பட்ட நிராகரிப்பாளர்கள் ஏழை முஸ்லிம்களைப் பார்த்து, “நமக்கு மத்தியில் இவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழிகாட்டி அருள்புரிந்துள்ளானா?” இந்த ஈமான் சிறந்ததாக இருந்திருக்குமானால் இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள், ஏனெனில் நாமே எப்பொழுதும் முந்துபவர்கள்”. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களையும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளர்களையும் அல்லாஹ் அறிய மாட்டானா என்ன? நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். இதனால்தான் நன்றி செலுத்துவோருக்கு ஈமான் கொள்ள வாய்ப்பளித்து நிராகரிப்பாளர்களை கைவிட்டுவிடுகிறான். அவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்.

(54) 6.54. தூதரே! நீர் கொண்டுவந்ததன் நம்பகத் தன்மையை அறிவிக்கக்கூடிய நம் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு சலாம் என்னும் முகமன் கூறுவீராக. அல்லாஹ்வின் விசாலமான கருணையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. கருணை புரிவதை அல்லாஹ் தன்மீது உபரியாகக் கடமையாக்கிக் கொண்டான். யாரேனும் அறியாமல் பாவம் செய்து பின்னர் பாவமன்னிப்புக் கோரி தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கக்கூடியவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

(55) 6.55. மேற்கூறப்பட்டவற்றை நாம் உமக்குத் தெளிவுபடுத்தியது போல் நமது அத்தாட்சிகளையும், அசத்தியவாதிகளுக்கெதிரான நமது ஆதாரத்தையும் நாம் தெளிவுபடுத்துகிறோம். தவிர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு குற்றவாளிகளின் பாதையையும் வழிமுறையையும் தெளிவுபடுத்தவும் அவ்வாறு செய்கிறோம்.

(56) 6.56. தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் மற்றவற்றை வணங்குவதை அல்லாஹ் எனக்குத் தடைசெய்துள்ளான்.” தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதில் உங்களின் மனஇச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன். நான் உங்களின் மனஇச்சைகளைப் பின்பற்றினால் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்து விடுவேன்.” இதுதான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள ஆதாரம் இன்றி மனஇச்சையைப் பின்பற்றும் ஒவ்வொருவரது நிலை.

(57) 6.57. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கின்றேன். வெறும் மனஇச்சையின் மீதல்ல. நீங்கள் இந்த ஆதாரத்தை நிராகரித்துவிட்டீர்கள். நீங்கள் அவசரப்படுத்தும் வேதனையயோ, நீங்கள் கேட்கும் அற்புத சான்றுகளோ என் கைவசம் இல்லை. அவைகள் அல்லாஹ்விடமே உள்ளன. அனைத்து தீர்ப்பும்- நீங்கள் கேட்பது உட்பட- அல்லாஹ்விடமே உள்ளது. அவன் உண்மையைக் கூறுகிறான். அதைக் கொண்டு தீர்ப்பளிக்கிறான். அவனே தெளிவுபடுத்துவதிலும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்துவதிலும் மிகச்சிறந்தவன்.

(58) 6.58. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுத்தும் வேதனை என் கட்டுப்பாட்டில் இருந்தால் நான் அதனை உங்கள் மீது இறக்கியிருப்பேன். எனக்கும் உங்களுக்குமிடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்கு எவ்வளவு அவகாசம் அளிக்க வேண்டும்? எப்போது அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

(59) 6.59. மறைவானவற்றின் பொக்கிஷங்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். கடலிலும் தரையிலுமுள்ள உயிரினங்கள், தாவரங்கள், உயிரற்றவைகள் என ஒவ்வொரு படைப்பையும் அவன் அறிந்தவன். எந்த இடத்தில் ஒரு இலை விழுந்தாலும், பூமியில் மறைந்துள்ள எந்த விதையாக இருந்தாலும், காய்ந்தவை, பசுமையானவை என அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(60) 6.60. நீங்கள் தூங்கும் போது அல்லாஹ்வே உங்களின் ஆன்மாக்களை தற்காலிகமாகக் கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்போது நீங்கள் சம்பாதிப்பவற்றை அவனே அறிவான். தூக்கத்தில் உங்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றிய பிறகு பகலில் நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை எழுப்புகிறான். அல்லாஹ்விடம் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடையும் வரை இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும். பின்னர் மறுமைநாளில் அவன் பக்கமே நீங்கள் எழுப்பப்பட்டு திரும்பி வர வேண்டும். அப்போது இவ்வுலக வாழ்வில் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(61) 6.61. அல்லாஹ்தான் தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவன்; அவர்களை அடிபணிய வைப்பவன். அனைத்து விதத்திலும் எல்லாவற்றையும் மிகைத்தவன். அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. தனது மகத்துவத்திற்குத் தக்கவாறு தனது அடியார்களின் மேல் அவன் இருக்கிறான். மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது சங்கையான வானவர்களை அனுப்புகிறான். உயிரைக் கைப்பற்றும் வானவரும் அவரது உதவியாளர்களும் உங்களின் உயிரைக் கைப்பற்றி உங்களின் தவணை முடியும் வரை, அவர்கள் உங்களின் செயல்களைக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் செய்வதில்லை.

(62) 6.62. பின்னர் யாருடைய உயிரெல்லாம் கைப்பற்றப்பட்டதோ அவர்கள் தங்களின் உண்மையான இறைவனான அல்லாஹ்விடம் தங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் விஷயத்தில் செல்லுபடியாகும் நீதமான தீர்ப்பு அவனிடமே உள்ளது. உங்களையும் உங்களது செயல்களையும் கணிப்பீடு செய்வோரில் அவனே மிக விரைவானவன்.

(63) 6.63. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நீரிலும் நிலத்திலுமுள்ள இருள்களில் உங்களுக்கு நேரும் அழிவுகளிலிருந்து உங்களைக் காப்பவன் யார்? அப்போது, “எங்கள் இறைவா! இந்த அழிவிலிருந்து எங்களை நீ காப்பாற்றிவிட்டால் உன்னைத் தவிர யாரையும் வணங்காமல் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களாகி விடுவோம்” என வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பணிவுடன் அவனையே நீங்கள் அழைக்கின்றீர்கள்.

(64) 6.64. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். எல்லா துன்பங்களிலிருந்தும் அவனே உங்களைப் பாதுகாக்கிறான். இதன் பின்னரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குகிறீர்கள். நீங்கள் செய்வதை விட வேறு அநியாயம் என்ன இருக்க முடியும்?.”

(65) 6.65. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து - கல், மின்னல், வெள்ளம் போன்ற - வேதனையை அனுப்பவோ உங்களுக்குக் கீழிருந்து - பூகம்பம், பூமியில் புதையச் செய்தல் போன்ற - வேதனையை ஏற்படுத்தவோ அல்லது ஒவ்வொருவரும் தனது மனஇச்சையைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளவு உள்ளங்களிடையே பிரிவினை ஏற்படுத்தவோ அல்லாஹ் சக்தியுடையவன். தூதரே! நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்றும் தங்களிடமுள்ளதை அசத்தியம் என்றும் அவர்கள் அறிந்துகொள்வதற்காக, நாம் எவ்வாறு பல்வேறு வகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைப் பாரும்.

(66) 6.66. இந்த குர்ஆன், அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான் என்பதில் எவ்வித சந்தேகமுமற்ற, உண்மையாக இருந்த போதும் உம் சமூகம் இதனை பொய்யெனக் கூறியது. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டவன் அல்ல. நான் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்பவன் மட்டுமே.

(67) 6.67. ஒவ்வொரு செய்திக்கும் தங்கும் நேரமும் முடிவும் இருக்கின்றது. அதில் உங்களின் திரும்புமிடம், இறுதி முடிவு குறித்த செய்தியும் உள்ளது. மறுமை நாளில் நீங்கள் மீண்டும் எழுப்பப்படும் போது இதனை அறிந்துகொள்வீர்கள்.

(68) 6.68. தூதரே! அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்யும் இணைவைப்பாளர்களை நீர் கண்டால் அவர்கள் அவற்றை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருங்கள். ஷைத்தான் உம்மை மறக்கடிக்கச் செய்து நீர் அவர்களுடன் அமர்ந்துவிட்டால் பின்னர் நினைவுகூர்ந்தால் அவர்களின் அவையை விட்டு விடுவீராக. வரம்புமீறும் அவர்களுடன் நீர் அமராதீர்.

(69) 6.69. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்கள் மீது இந்த அநியாயக்காரர்களைக் குறித்து எந்த கேள்விக் கணக்கும் இல்லை. இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும்பொருட்டு இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீமைகளை விட்டும் தடுப்பதே அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதுள்ள கடமையாகும்.

(70) 6.70. தூதரே! தங்களின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்து வீண் விளையாட்டாக ஆக்கிக் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை விட்டு விடுவீராக. இவ்வுலகில் உள்ள அற்ப இன்பங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டது. தூதரே! எவரும் தாம் செய்த தீமைகளின் காரணமாக அழிந்து விடாமல் இருக்க மக்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அறிவுரை வழங்குவீராக. மறுமை நாளில் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்யும் உதவியாளனோ அவனுடைய வேதனையிலிருந்து தடுக்கக்கூடிய பரிந்துரையாளனோ யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக எதையேனும் வழங்கினால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. மறுமை நாளில், தாங்கள் செய்த பாவங்களின் காரணமாக தன்னை அழிவில் போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களது நிராகரிப்பின் காரணமாக கொதிக்கும் நீரும் வேதனைமிக்க தண்டனையும் உண்டு.

(71) 6.71. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “எங்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க இயலாத இந்த சிலைகளையா நாங்கள் வணங்க வேண்டும்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு ஈமானை நாங்கள் இழந்து, ஷைத்தான்களால் வழிகெடுக்கப்பட்டவன் போல் ஆகலாமா? ஷைத்தான் அவனை செய்வதறியாது தடுமாறித் திரியுமாறு விட்டுவிட்டான். அதே நேரத்தில் அவனை நேரான வழியின் பக்கம் அழைக்கக்கூடிய தோழர்கள் இருந்தும் அவன் அந்த தோழர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன்.”

(72) 6.72. நாங்கள் தொழுகையை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனையே அஞ்ச வேண்டும் என்றும் அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவனிடமே மறுமைநாளில் அடியார்கள் அனைவரும் - அவர்களின் செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக - ஒன்றுதிரட்டப்படுவார்கள்.

(73) 6.73. அவன்தான் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டு படைத்துள்ளான். அவன் ஏதேனும் ஒன்றைப் பார்த்து ஆகிவிடு என்று கூறும் நாளில் அது ஆகிவிடும். அவன் மறுமைநாளில், ‘எழுந்திருங்கள்’ என்று கூறுவான். அவர்கள் எழுந்திருப்பார்கள். அவனது சொல் நிச்சயமாக நிறைவேறியே தீரும் உண்மையான சொல்லாகும். இஸ்ராஃபீல் இரண்டாது சூர் ஊதும் மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் நன்கறிந்தவன். தன் படைப்பில், நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன், எந்த ஒன்றும் அவனை விட்டு மறையாது. மறைவானவையும் அவனிடத்தில் வெளிப்படையானவை போன்றவையே.

(74) 6.74. தூதரே! இப்ராஹீம் இணைவபை்பாளரான தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “என் அன்புத் தந்தையே! நீங்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளையா கடவுள்களாக ஆக்கிக் கொண்டீர்கள்? அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனால், உங்களையும், சிலைகளை வணங்கும் உங்கள் சமூகத்தையும் தெளிவான வழிகேட்டிலும், சத்தியப் பாதையை விட்டும் தடுமாற்றத்திலும் நான் காண்கிறேன். அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன். அவனைத் தவிர அனைத்தும் பொய்யாக வணங்கப்படுபவையே.

(75) 6.75. அவரது தந்தை மற்றும் சமூகத்தின் வழிகேட்டை அவருக்குக் காட்டியது போல அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய வானங்கள் மற்றும் பூமியின் விசாலமான ஆட்சியதிகாரத்தை அவருக்குக் காட்டினோம். அல்லாஹ் ஒருவனே, அவன் மாத்திரமே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிந்து, அவனுக்கு யாதொரு இணையுமில்லை, அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்பியவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவற்றையெல்லாம் அவருக்குக் காட்டினோம்.

(76) 6.76. இரவின் இருள் தோன்றி, அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்ட போது, ‘இது என் இறைவன்’ என்றார். நட்சத்திரம் மறைந்த போது, ‘நான் மறையக்கூடியதை விரும்ப மாட்டேன்.உண்மையான இறைவன் மறைய மாட்டான்’ என்றார்.

(77) 6.77. அவர் சந்திரன் உதிப்பதைக் கண்டபோது தன் சமூகத்தினரிடம் ‘இது என் இறைவன்’ என்றார். அதுவும் மறைந்த போது, ‘என் இறைவன், அவன் ஒருவன் அவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதன் பக்கம் எனக்கு வழிகாட்டவில்லையென்றால் அவனது மார்க்கத்தை விட்டும் தூரமாகியவர்களில் ஒருவனாகிவிடுவேன்’ என்றார்.

(78) 6.78. அவர் சூரியன் உதிப்பதைக் கண்ட போது, ‘இதுதான் என் இறைவன், இது நட்சத்திரத்தையும் சந்திரனையும் விட பெரியது’ என்றார். அதுவும் மறைந்த போது, “என் சமூகமே, நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியவைகளை விட்டும் நான் நீங்கியவனாவேன்” என்றார்.

(79) 6.79. இணைவைப்பை விட்டும் ஒதுங்கி தூய்மையான ஏகத்துவத்தின் பக்கம் சார்ந்தவனாக, வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கு நான் என் அடிபணிதலை உரித்தாக்கிவிட்டேன். அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இணைவைப்பாளர்களில் நான் ஒருவன் அல்ல.

(80) 6.80. இணைவைக்கும் அவருடைய சமூகத்தினர் அல்லாஹ் ஒருவனே என்ற விஷயத்தில் அவரிடம் வாதம் செய்தார்கள். தங்கள் சிலைகளைக் காட்டி பயமுறுத்தினார்கள். அவர் கூறினார், “அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற விஷயத்திலா நீங்கள் என்னிடம் வாதம் புரிகிறீர்கள்? அதன் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டிவிட்டான். நான் உங்களின் சிலைகளைக் கண்டு அஞ்சமாட்டேன். ஏனெனில் அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறமாட்டாது. ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் நாடியது நிறைவேறியே தீரும். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்துள்ளதுடன் வானத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை. என் சமூகமே, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, அவனை நிராகரிக்கும் நீங்கள் அல்லாஹ் ஒருவன் மீது மட்டுமே நம்பிக்கைகொண்டு அறிவுரை பெற மாட்டீர்களா?”

(81) 6.81. அல்லாஹ் படைத்தவற்றையே எவ்வித ஆதாரமும் இன்றி அவனுக்கு இணையாக்கி வணங்குவதையிட்டு நீங்கள் அஞ்சாதபோது, அவனைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? ஏகத்துவவாதிகள், இணைவைப்பாளர்கள் ஆகிய இரு கூட்டத்தாரில் அச்சமற்று இருக்கத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவர்களையே பின்பற்றுங்கள். எவ்வித சந்தேகமுமின்றி இறைநம்பிக்கை மிக்க ஏகத்துவவாதிகளே அதற்கு மிகத் தகுதியானோர்.

(82) 6.82. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றி தங்களின் நம்பிக்கையுடன் இணைவைப்பைக் கலக்காதவர்களுக்கு மட்டுமே அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் நேரான பாதையின்பால் வழிகாட்டியுள்ளான்.

(83) 6.83. ”இரு அணிகளில் எது அச்சமற்றிருப்பதற்குத் தகுதியானது” என்ற வாதத்தின் மூலம் இப்ராஹீம் தனது சமூகத்தை மிகைத்தது மட்டுமின்றி அவர்களது வாதம் தோற்றும்விட்டது. அவரது சமூகத்துடன் விவாதிப்பதற்காக நாமே இவ்வாதத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நம் அடியார்களில் நாம் நாடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறோம். தூதரே! உம் இறைவன் தன் படைப்பிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவன்.

(84) 6.84. நாம் இப்ராஹீமுக்கு அவருடைய மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் வழங்கினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம். அவர்களுக்கு முன்னர் நூஹிற்கு வழிகாட்டினோம். நூஹின் வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், யூசுஃப், மூஸா, அவரது சகோதரன் ஹாரூன் ஆகியோருக்கும் சத்தியப்பாதைக்கு வழிகாட்டினோம். நாம் தூதர்களுக்கு வழங்கிய இந்த கூலியைப் போலவே நன்மை செய்யும் ஏனையோருக்கும் வழங்குவோம்.

(85) 6.85. இவ்வாறே ஸகரிய்யா, யஹ்யா, மர்யமின் மகன் ஈஸா, இஸ்யாஸ் ஆகியோருக்கும் வழிகாட்டினோம். நல்லவர்களான இந்த அனைத்து நபிமார்களையும் அல்லாஹ் தூதர்களாகத் தேர்ந்தெடுத்தான்.

(86) 6.86. இவ்வாறே இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் வழிகாட்டினோம். இந்த தூதர்கள் அனைவரையும் - இவர்களில் முதன்மையானவராக முஹம்மதை - நாம் உலகிலுள்ள அனைவரையும் விட சிறப்பித்துள்ளோம்.

(87) 6.87. அவர்களின் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரில் நாம் நாடிய சிலருக்கு வழிகாட்டினோம். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். ஓரிறைக்கொள்கை மற்றும் இறைக்கட்டுப்பாடு என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டினோம்.

(88) 6.88. அவர்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம் அல்லாஹ் வழங்கியதாகும். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கினால் அவர்களின் செயல்கள் அனைத்தும் அழிந்து விடும். ஏனெனில் ஷிர்க் நற்செயல்களை அழித்து விடும்.

(89) 6.89. மேற்கூறப்பட்ட இந்த தூதர்களுக்குத்தான் நாம் வேதங்களையும் ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினோம். நாம் அவர்களுக்கு வழங்கிய இம்மூன்று விஷயங்களையும் உமது சமூகம் நிராகரித்தால் அவற்றை நிராகரிக்காத வேறு மக்களை நாம் அவற்றிற்காக தயார்படுத்தி வைத்துள்ளோம். அவர்கள் அவற்றை நம்பிக்கைகொண்டவர்களாக, உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள். அவர்கள்தாம் முஹாஜிர்களும் அன்சாரிகளும் மறுமை நாள் வரை அவர்களை சிறந்த முறையில் பின்பற்றியவர்களுமாவர்.

(90) 6.90. இந்த தூதர்களும் அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்ட அவர்களது மூதாதையர்கள், சந்ததிகள், சகோதரர்கள் ஆகியோர்தான் உண்மையில் நேர்வழி பெற்றவர்கள். எனவே அவர்களை நீர் பின்பற்றுவீராக. முன்மாதிரயாக எடுத்துக்கொள்வீராக. தூதரே! உம் சமூகத்தினரிடம் கூறுவீராக: இந்த குர்ஆனை எடுத்துரைப்பதற்கு நான் உங்களிடம் எந்த கூலியையும் வேண்டவில்லை. இது உலகிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும். இதன் மூலம் நேரான வழியை அவர்கள் அடைந்துகொள்ளலாம்.

(91) 6.91. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அதனால்தான் அவர்கள் தங்களின் தூதர் முஹம்மதிடம் கூறினார்கள்: “அல்லாஹ் மனிதன் மீது எந்த வஹியையும் இறக்கவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மூஸாவுக்கு தவ்ராத் என்னும் வேதத்தை இறக்கியவன் யார்? அது அவருடைய சமூகத்தினருக்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததே! யூதர்கள் அதனை ஏடுகளில் வைத்து அதில் தங்கள் மனஇச்சைக்கு ஒத்துப் போகக்கூடியவற்றை வெளிப்படுத்துகின்றனர். முஹம்மது நபியின் வர்ணனைகள் போன்ற தமது மனஇச்சைக்கு மாற்றமானதை மறைக்கின்றனர். அரேபியர்களே! நீங்களும் உங்கள் முன்னோர்களும் அறியாதவற்றையெல்லாம் இந்த குர்ஆனின் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டீர்கள். தூதரே! “அல்லாஹ்தான் அதனை இறக்கினான்” என்று நீர் அவர்களிடம் கூறுவீராக. பின்னர் அவர்களுக்கு மரணம் வரும்வரை அவர்களின் வழிகேட்டிலும் அறியாமையிலும் பரிகாசம்செய்தவர்களாக அவர்களை விட்டுவிடுவீராக.

(92) 6.92. தூதரே! மக்காவாசிகளையும் உலகின் கிழக்கு, மேற்கில் உள்ள அனைவரையும் - அவர்கள் நேர்வழி அடையும் பொருட்டு - நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக நாமே இந்தக் குர்ஆனை உம்மீது இறக்கினோம். இது பாக்கியம் நிறைந்த, தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தும் வேதமாகும். மறுமை நாளை உண்மைப்படுத்துபவர்கள் இந்தக் குர்ஆனை உண்மைப்படுத்துகிறார்கள்; அதன்படி செயல்படுகிறார்கள்; தொழுகையை அதற்குரிய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் சுன்னத்துகளுடன் மார்க்கம் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுகிறார்கள்.

(93) 6.93. ‘அல்லாஹ் மனிதன் மீது எந்த ஒன்றையும் இறக்கவில்லை’ அல்லது அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வஹி அறிவிக்காத நிலையில் அவன் எனக்கு வஹி அறிவித்துள்ளான் என்று கூறுவது அல்லது ‘அல்லாஹ் குர்ஆனை இறக்கியது போல நானும் இறக்குவேன்’ என்று கூறி அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுபவர்களை விட மிகப் பெரிய அக்கிரமக்காரன் யாரும் இல்லை. தூதரே! நீர் இந்த அநியாயக்காரர்களை அவர்களுக்கு மரணம் நேரும் வேளையில் காணவேண்டுமே! வானவர்கள் தங்கள் கைகளால் அவர்களை அடித்தவர்களாக, வேதனைப்படுத்தியவர்களாகக் கூறுவார்கள், “உங்களின் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றிக் கொள்வோம். நபித்துவம், இறை அறிவிப்பு, அல்லாஹ் இறக்கியது போன்று இறக்குவேன் என்று வாதிட்டு அபாண்டமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறியதனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நம்பாமல் கர்வம் கொண்டதனாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவுதரும் வேதனையை கூலியாக வழங்குவோம். அதனை நீர் இழிவான நிலைமையில் பார்ப்பீர்.

(94) 6.94. மீண்டும் எழுப்பப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் நீங்கள் நம்மிடம் தனித்தனியாக வந்துள்ளீர்கள். பணமோ பதவியோ எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் முதலில் படைக்கப்பட்டவாறு நிர்வாணமாகவும், பாதணியின்றியும், விருத்தசேதனம் செய்யப்படாமலும் வந்துள்ளீர்கள். நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்களையெல்லாம் உலகில் உங்களையும் மீறி விட்டு வந்துவிட்டீர்கள். உங்களுடைய தரகர்களாக, வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் கருதிக்கொண்டிருந்த உங்களது தெய்வங்களை நாம் உங்களுடன் காணவில்லை. உங்களிடையேயுள்ள தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன. அவர்கள் பரிந்துரை செய்பவர்கள், அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் என்ற உங்களது எண்ணமும் உங்களை விட்டும் மறைந்து சென்றுவிட்டது.

(95) 6.95. நிச்சயமாக அல்லாஹ்தான் விதையை வெடிக்கச் செய்து பயிர்களை வெளிப்படுத்துகிறான்; மேலும் வித்தை வெடிக்கச் செய்து அதிலிருந்து பேரீச்ச மரம் திராட்சை இன்னும் இன்னோரன்ன மரங்கள் உருவாகின்றன. மனிதன், ஏனைய விலங்குகள் ஆகியற்றை விந்திலிருந்து வெளிப்படுத்தி மரணித்தவைகளில் இருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகிறான். கோழியில் இருந்து முட்டையையும், மனிதனில் இருந்து விந்தையும் வெளிப்படுத்தி உயிருள்ளவைகளைகளில் இருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகிறான். இவையனைத்தையும் செய்வது உங்களைப் படைத்த அல்லாஹ்தான். இணைவைப்பாளர்களே! அவனது அற்புத படைப்புக்களைப் பார்த்துக் கொண்டே நீங்கள் சத்தியத்தை விட்டு எங்கே திசைமாறிச் செல்கிறீர்கள்?

(96) 6.96. அவன் அதிகாலையின் வெளிச்சத்தை இரவின் இருளிலிருந்து வெளிப்படுத்துகிறான். அவனே இரவை மக்கள் தொழிலுக்காக அலைந்ததன் பின் ஓய்வெடுப்பதற்காக அமைத்துள்ளான். அவனே சூரியனையும் சந்திரனையும் ஒரு கணக்கின்படி இயங்க வைத்துள்ளான். மேற்கூறப்பட்ட அற்புத ஏற்பாடு, யாவற்றையும் மிகைத்தவனின் நிர்ணயமாகும். தன் படைப்புகளைப் பற்றியும் அவர்களுக்குத் தேவையானதையும் அவன் நன்கறிந்தவன்.

(97) 6.97. ஆதமின் மக்களே! அவன்தான் வானத்தில் உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். தரையிலும் கடலிலும் நீங்கள் பயணம் செய்யும் போது வழி குழம்பிவிட்டால் அவற்றைக் கொண்டே நீங்கள் சரியான வழியை அறிந்துகொள்கிறீர்கள். நம்முடைய ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் அவற்றைச் சிந்தித்து பயன்பெறும் கூட்டத்துக்கு நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.

(98) 6.98. அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மா உங்களின் தந்தை ஆதமாகும். உங்களின் தந்தையை மண்ணைக் கொண்டு படைத்ததன் மூலம் உங்களைப் படைப்பது ஆரம்பமானது. பின்னர் அவரிலிருந்தே உங்களைப் படைத்தான். நீங்கள் தங்கக்கூடிய அன்னையரின் கருவரையையும் நீங்கள் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய தந்தையரின் முதுகந்தண்டையும் அவன் உங்களுக்காக படைத்துள்ளான். அல்லாஹ்வின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்திவிட்டோம்.

(99) 6.99. அவன்தான் வானத்திலிருந்து மழை நீரை இறக்கினான். அதைக்கொண்டு எல்லா வகையான தாவரங்களையும் முளையச் செய்கின்றோம். அந்த தாவரங்களிலிருந்து பயிர்களையும் பசுமையான மரங்களையும் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அடுக்கடுக்காக இருக்கக்கூடிய நெற்கதிர் போன்ற விதைகளை வெளிப்படுத்துகின்றோம். பேரீச்சை மரத்தின் பாளைகளிலிருந்து எழுந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் பறிக்கும் வகையில் அருகில் தொங்கக்கூடிய குலைகளையும் வெளிப்படுத்துகின்றோம். திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ், மாதுளை போன்றவற்றையும் வெளிப்படுத்துகின்றோம். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. பழங்களோ வேறுபட்டதாக இருகின்றன. மனிதர்களே! அவை ஆரம்பத்தில் வெளிப்படும் போதும் கனியும் போதும் அவற்றைப் பாருங்கள். இதில் அல்லாஹ்வை நம்பும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.அவர்களே இவ்ஆதாரங்களிலிருந்து பயனடைவார்கள்.

(100) 6.100. இணைவைப்பாளர்கள் ஜின்களால் பலனளிக்கவும் தீங்கிழைக்கவும் முடியும் என்று நம்பியதன் மூலம் அவர்களை வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கி விட்டார்கள். அந்த ஜின்களையும் அல்லாஹ்தான் படைத்தான். வேறு யாருமல்ல. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். யூதர்கள் உஸைர் அவர்களையும், கிறிஸ்தவர்கள் ஈஸாவையும் எடுத்துக்கொண்டது போன்று இந்த இணைவைப்பாளர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். மேலும் இந்த இணைவைப்பாளர்கள் மலக்குமார்களை அல்லாஹ்வுக்கு மகள்கள் எனவும் கூறுகின்றனர். இந்த அசத்தியவாதிகள் கூறும் பண்புகளிலிருந்து அல்லாஹ் பரிசுத்தமானவன்.

(101) 6.101. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது பிள்ளை எங்கிருந்து வர முடியும்? அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(102) 6.102. மனிதர்களே! இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவன். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனை தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு வேறு யாரும் கிடையாது. அவன்தான் எல்லாவற்றின் படைப்பாளன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவன் எல்லாவற்றின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

(103) 6.103. அவனைப் பார்வைகள் சூழ்ந்தறிய முடியாது. ஆனால் அவன் பார்வைகளை சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிறான். அவன் தன் நல்லடியார்களுடன் மென்மையாளனாகவும் அவர்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

(104) 6.104. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் உங்களிடம் வந்துவிட்டன. யார் அவற்றைப் புரிந்து கீழ்ப்படிந்தாரோ அதன் பயன் அவருக்கே. யார் அவற்றைக் கண்டுகொள்ளாமலும் புரியாமலும் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லையோ அதன் தீங்கு அவருக்கே. உங்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்லன். என் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன். அவனே உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

(105) 6.105. அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் விதம் விதமாக தெளிவுபடுத்தியது போன்று, வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், அறிவுரைகள் அடங்கிய வசனங்களையும் நாம் விதம் விதமாக எடுத்துரைக்கிறோம். ஆனாலும் “இது வஹியே அல்ல. உமக்கு முந்தைய வேதக்காரர்களிடமிருந்தே நீர் இதை கற்றுக் கொண்டீர்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவார்கள். நம்பிக்கைகொண்ட முஹம்மதுடைய சமூகத்தினருக்கு விதம் விதமான அத்தாட்சிகளை தெளிவுபடுத்துவதன் மூலம் நாம் மக்களுக்கு சத்தியத்தை விதம் விதமாகத் தெளிவுபடுத்துகிறோம். அவர்களே சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுகிறார்கள்.

(106) 6.106. தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படும் சத்தியத்தைப் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. நிராகரிப்பாளர்களையும் அவர்களின் பிடிவாதத்தையும் எண்ணி கவலையுறாதீர். அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே.

(107) 6.107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களில் யாரும் இணைவைத்திருக்க மாட்டார்கள். தூதரே! அவர்களின் செயல்களைக் கணக்கிடும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நீர் அவர்களைக் கவனிப்பவருமல்ல. நீர் தூதர் மாத்திரமே. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள பொறுப்பாகும்.

(108) 6.108. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அற்பமானவையாக, திட்டுவதற்கு உரியவையாக இருந்தாலும் அவற்றைத் திட்டாதீர்கள். இதனால் இணைவைப்பாளர்கள் வரம்புமீறி அறியாமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவர்களுக்கு அவர்களின் வழிகேடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களின் செயல்களை நலவோ தீமையோ நாம் அலங்கரித்தோம். நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியதையே அவர்கள் செய்வார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(109) 6.109. “முஹம்மது நாங்கள் கூறும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எங்களிடம் கொண்டு வந்தால் நாங்கள் அவரை நிச்சயம் உண்மைப்படுத்துவோம்” என்று இணைவைப்பாளர்கள் கடுமையான சத்தியம் செய்து கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “சான்றுகளை நான் இறக்குவதற்கு அவை என்னிடம் இல்லை. அவை அல்லாஹ்விடமே இருக்கின்றன. அவன் தான் நாடிய போது அவற்றை இறக்குகிறான். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கூறுவது போன்று சான்றுகள் இறக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தங்களின் நிராகரிப்பிலும் பிடிவாத்திலுமே நிலைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விரும்பவில்லை.

(110) 6.110. இதற்கு முன்னர் அவர்களின் பிடிவாதத்தினால் அவர்களுக்கும் குர்ஆனுக்குமிடையே நாம் தடுப்பை ஏற்படுத்தியது போன்று சத்தியத்தை அடைய முடியாதவாறு அவர்களின் உள்ளங்களையும் கண்களையும் நாம் திருப்பிவிடுவோம். அவர்களின் வழிகேட்டிலும் அவர்களது இறைவனுக்கு முரண்படுவதிலும் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுவோம்.

(111) 6.111. அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு பதிலளிக்குமுகமாக அவர்களிடம் வானவர்களை இறக்கி, இணைவைப்பாளர்கள் அவர்களைக் கண்ணால் கண்டாலும், இறந்தவர்கள் அவர்களுடன் பேசி, நீர் கொண்டு வந்ததுதான் உண்மை என்பதை அவர்கள் இணைவைப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினாலும், அவர்கள் விரும்பிய எல்லா சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கி கண் முன்னால் அவர்கள் அவற்றைக் கண்டாலும் அவர்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர எவரும் நீர் கொண்டு வந்ததன் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் பெரும்பாலோர் மூடர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்குவதற்கு அவர்கள் அவன் பக்கம் செல்வதில்லை.

(112) 6.112. இந்த இணைவைப்பாளர்களின் எதிர்ப்பைக் கொண்டு நாம் உம்மை சோதித்தது போலவே உமக்கு முன்னர் எல்லா தூதர்களையும் சோதித்தோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் குழப்பக்கார மனிதர்களிலிருந்தும் ஜின்களிலிருந்தும் எதிரிகளை ஏற்படுத்தினோம். அந்த எதிரிகள் ஒருவர் மற்றவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டினார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடினான். அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டும் அசத்தியத்தையும் நிராகரிப்பையும் விட்டுவிடுவீராக. அவர்களைப் பொருட்படுத்தாதீர்.

(113) 6.113. மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் ஒருவர் மற்றவரின் மீது ஏற்படுத்தும் ஊசலாட்டங்களின் பக்கம் சாய வேண்டும் என்பதற்காகவும், அவற்றை ஏற்றுக் கொண்டு திருப்தியுறுவதற்கும், பாவங்களை சம்பாதிப்பதற்கும் (நபிமாரின் எதிரிகள் தமக்கு மத்தியில் அலங்காரமான வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்).

(114) 6.114. தூதரே! அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை எனக்கும் உங்களுக்குமிடைய தீர்ப்பாளனாக ஏற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்? அவன்தான் உங்கள் மீது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி தெளிவுபடுத்தக்கூடிய குர்ஆனை இறக்கியுள்ளான். தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களின் வேதங்களில் காணப்படும் ஆதாரங்களினால் குர்ஆன் சத்தியத்தைப் பொதிந்ததாக உமக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். நாம் உமக்கு அறிவித்தவற்றில் சந்தேகம் கொள்வோரில் ஆகிவிடாதீர்.

(115) 6.115. உம் இறைவனின் வாக்கான குர்ஆன் உண்மையிலும் நீதியிலும் முழுமையடைந்துவிட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(116) 6.116. தூதரே! பூமியில் உள்ள பெரும்பான்மையினரை நீர் பின்பற்றினால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு உம்மை வழிகெடுத்து விடுவார்கள். சத்தியம் குறைவானர்களுடன்தான் இருக்கும் என்பதே அவன் அமைத்த நியதியாகும். மக்களில் பெரும்பாலோர் ஆதாரமற்ற யூகங்களையே பின்பற்றுகிறார்கள். எனவேதான் தங்களின் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் பொய்யையே கூறுகிறார்கள்.

(117) 6.117. தூதரே! மக்களில் தன் பாதையை விட்டும் வழிதவறியவர்களையும் தன் பாதையில் இருப்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(118) 6.118. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தெளிவான ஆதாரங்களை உண்மையில் நம்பக்கூடியவர்களாக இருந்தால் அறுக்கும் போது அவன் பெயர் கூறப்பட்டு அறுக்கப்பட்டதை உண்ணுங்கள்.

(119) 6.119. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்பதை விட்டும் எது உங்களைத் தடுக்கிறது. உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்கிவிட்டான். நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர அவற்றை விட்டு விடுவது உங்கள் மீது கடமையாகும். ஏனெனில் நிர்ப்பந்தம் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கும். இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர், அறியாமையினால் தங்களின் தவறான கருத்துக்களால் தம்மைப் பின்பற்றுவோரை வழிகெடுக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ் தடை செய்த இறந்தவை போன்றவற்றை அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்த பஹீரா வஸீலா ஹாமீ போன்றவற்றைத் தடைசெய்கிறார்கள். தூதரே! தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

(120) 6.120. மனிதர்களே! வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாவம்செய்வதை விட்டுவிடுங்கள். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாவங்களில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பாதித்தவற்றுக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(121) 6.121. முஸ்லிம்களே! அல்லாஹ் பெயர் கூறி அறுக்கப்படாததை உண்ணாதீர்கள். அவனல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டாலும் அல்லது யாரினுடைய பெயரும் கூறப்படாவிட்டாலும் சரியே. அதனை உண்பது அல்லாஹ்வுக்கு அடிபணியாது மாறுசெய்வதாகும். இறந்தவற்றை உண்ணும் விடயத்தில் உங்களிடம் தர்க்கம் புரியுமாறு, ஷைத்தான்கள் தங்களின் தோழர்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறார்கள். முஸ்லிம்களே! இறந்தவற்றை உண்ணுவதை அனுமதிப்பதற்காக அவர்கள் ஏற்படுத்தும் சந்தேகங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்களும் அவர்களும் ஷிர்க்கில் சமமாகி விடுவீர்கள்.

(122) 6.122. அல்லாஹ் நேர்வழிகாட்டுவதற்கு முன்னர் நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் ஆகிவற்றால் உயரற்றவர்களாக இருந்து, நம்பிக்கை, கல்வி, வழிப்படுதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதன் மூலம் நாம் உயிர்த்தெழச் செய்தவர்களும், நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் என்னும் இருள்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களும் சமமாக முடியுமா? அவர்கள் இருள் சூழ்ந்த பாதைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த இணைவைப்பாளர்களுக்கு இணைவைப்பும், செத்தவற்றை உண்ணுதலும், உங்களுடன் தவறான முறையில் தர்க்கம்புரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது போல நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்களும் பாவங்களும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைக் கூலியாக வழங்குவதற்கே அவ்வாறு அழகாக்கப்பட்டுள்ளன.

(123) 6.123. மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களின் தலைவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்ததைப் போல ஒவ்வொரு ஊரிலுள்ள தலைவர்களையும் பெரியவர்களையும் ஷைத்தானின் பாதையை நோக்கி அழைப்பதற்கும் தூதர்களையும் அவர்களைப் பின்போற்றுவோரையும் எதிர்ப்பதற்கும், தந்திரங்கள் செய்வோராகவும் சூழ்ச்சி செய்வோராகவும் நாம் ஆக்கினோம். உண்மையில் அவர்களின் சூழ்ச்சிகளும் திட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். ஆயினும் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றுவதனாலும் அறியாமையினாலும் அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடியாது.

(124) 6.124. நிராகரிப்பாளர்களின் தலைவர்களிடம் அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களில் ஏதேனும் ஒரு வசனம் வந்தால், “தூதர்களுக்கு அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தைப் போல் எங்களுக்கும் அளிக்காத வரை நாங்கள் இதனை உண்மைப்படுத்த மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதுத்துவத்திற்கும் அதன் சுமைகளைத் தாங்குவதற்கும் தகுதியானவர்களை அல்லாஹ் அறிவான். இந்த அக்கிரமக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் கர்வம் கொண்டதனால் இழிவுக்கும் சூழ்ச்சி செய்ததனால் கடுமையான வேதனைக்கும் ஆளாவார்கள்.

(125) 6.125. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட நாடுகிறானோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக அவரது நெஞ்சை விரிவாக்குகிறான். யாரை அவன் கைவிட்டு நேர்வழிகாட்ட விரும்பவில்லையோ. சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் அவரது நெஞ்சை மிகவும் இறுக்கமானதாக ஆக்கிவிடுகிறான். அவன் தானாக வானத்துக்கு ஏறுவது எப்படி முடியாதோ அது போன்றே சத்தியம் அவனது உள்ளத்தை அடைய முடியாது. இந்த வழிகெட்டவனின் நிலையை எவ்வாறு கடும் நெருக்கடியுள்ளதாக அல்லாஹ் ஆக்கினானோ அது போன்றே தன்னை நம்பிக்கைகொள்ளாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறான்.

(126) 6.126. தூதரே! நாம் உமக்கு வழங்கிய இந்த மார்க்கம்தான் கோணலற்ற நேரான வழியாகும். அல்லாஹ் கூறுவதைப் புரிந்து கொள்வோருக்கு நாம் சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

(127) 6.127. அனைத்துத் தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும் சுவன இல்லம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்தான் அவர்களுக்கு உதவியாளன்; அவர்களை வலுப்படுத்தக்கூடியவன்.

(128) 6.128. தூதரே! அல்லாஹ் மனித, ஜின் இனங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளை நினைவுகூர்வீராக. பின்னர் அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “ஜின் சமூகமே! நீங்கள் ஏராளமான மனிதர்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையைவிட்டும் அவர்களைத் தடுத்துவிட்டீர்கள்” அவர்களைப் பின்பற்றிய மனிதர்கள் தங்கள் இறைவனிடம் பதிலளித்தவாறு கூறுவார்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயனடைந்தோம் (மனிதனின் கீழ்ப்படிதலைக் கொண்டு ஜின்கள் பயனடைந்தன. தங்களின் மனஇச்சையை நிறைவேற்றியதைக் கொண்டு மனிதர்கள் பயனடைந்தனர்) நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையையும் நாங்கள் அடைந்துவிட்டோம். இது மறுமை நாளாகும்.” அல்லாஹ் கூறுவான்: “நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடிய காலத்தைத் தவிர இங்கு நீங்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பீர்கள்,” நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதிலிருந்து அளிக்கப்பட்ட விதிவிலக்கு, தமது அடக்கஸ்தலத்திலிருந்து நரகம் செல்லும் வரைக்கும் உள்ள காலமாகும். தூதரே! உம் இறைவன் தான் நிர்ணயித்த விதிகளில், தன் நிர்வாகத்தில் ஞானம்மிக்கவன். தன் அடியார்களையும் அவர்களில் யார் வேதனைக்குத் தகுதியானவர்கள் என்பதையும் அவன் நன்கறிந்தவன்.

(129) 6.129. மனிதர்களில் சிலரை வழிகெடுப்பதற்காக வரம்புமீறிய ஜின்களை நாம் அவர்கள் மீது சாட்டியது போன்று ஒவ்வொரு அநியாயக்காரனையும் அவர்கள் சம்பாதித்த பாவங்களின் காரணமாக மற்றொரு அநியாயக்காரனுடன் இணைத்துள்ளோம். அவர்கள் இவர்களை தீமைகள் செய்யத் தூண்டுகிறார்கள்; நன்மைகளை விட்டும் தூரமாக்கி அதில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

(130) 6.130. மறுமை நாளில் நாம் அவர்களிடம் கூறுவோம்: “மனித, ஜின் சமூகமே! தம் மீது அல்லாஹ் இறக்கியதை உங்களிடம் எடுத்துரைக்கும், மறுமை நாளாகிய இந்த நாளின் சந்திப்பைக் குறித்து எச்சரிக்கை செய்யும் தூதர்கள், உங்கள் இனமான மனிதர்களிலிருந்தே, உங்களிடம் வரவில்லையா? ” அதற்கு அவர்கள், “ஆம். உன் தூதர்கள் எங்களிடம் எடுத்துரைத்தார்கள் என்பதை நிச்சயமாக நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இந்நாளின் சந்திப்பையும் ஒத்துக் கொள்கிறோம். ஆயினும் உன் தூதர்களையும் இந்த நாளின் சந்திப்பையும் பொய்யெனக்கூறி நாங்கள் நிராகரித்துவிட்டோம். இவ்வுலகிலுள்ள அழியக்கூடிய அற்ப இன்பங்களும் அலங்காரங்களும் அவர்களை ஏமாற்றிவிட்டன” நாங்கள் உலகிலே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து வாழ்ந்தோம் என்று தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். நேரம் முடிவுற்று விட்டதால் அவர்களின் இந்த சாட்சியமும் நம்பிக்கையும் அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

(131) 6.131. நாம் மனித, ஜின் இனத்திற்கு தூதர்களை அனுப்பியதன் காரணம், தூதர் அனுப்பப்படாமல் அல்லது அழைப்புக் கிடைக்காமல் யாரும் தாம் செய்தவற்றுக்குத் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்குத்தான். ஏனெனில், எந்த சமூகத்தையும் அவர்களுக்கு தூதர்களை அனுப்பாமல் நாம் தண்டிப்பதில்லை.

(132) 6.132. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. குறைவான அளவில் தீமை செய்தோரும் அதிகமான அளவில் தீமை செய்தோரும் சமமாக மாட்டார்கள். மேலும் பின்பற்றியவர்களும் பின்பற்றப்பட்டவர்களும் சமமாக மாட்டார்கள். அதே போன்று நன்மை செய்வோரின் நன்மைகளும் சமமாக மாட்டா. அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் அறிந்திருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(133) 6.133. தூதரே! தன் அடியார்களை விட்டும் தேவையற்றவனே உம் இறைவன். அவர்களின் பக்கமோ அவர்களின் வணக்கத்தின் பக்கமோ அவனுக்கு எத்தேவையுமில்லை. அவர்களது நிராகரிப்பு அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை. அவன் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவனாக இருந்தும்கூட அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பாவம் புரியும் அடியார்களே! அவன் உங்களை அழிக்க நாடினால் வேதனையைக் கொண்டு உங்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டு அதன் பின் தன் மீது நம்பிக்கைகொள்ளும், தனக்குக் கட்டுப்படும் மக்களை ஏற்படுத்துவான், உங்களுக்கு முன்னர் வாழ்ந்த வேறொரு சமூகத்தின் வழித்தோன்றலிலிருந்து உங்களைப் படைத்தது போன்று.

(134) 6.134. நிராகரிப்பாளர்களே! மீண்டும் உயிர்த்தெழச் செய்தல், ஒன்று சேர்த்தல், கணக்கு தீர்த்தல், தண்டனையளித்தல் ஆகிய உங்களுக்கு எச்சரிக்கப்படுபவை சந்தேகமின்றி வந்தே தீரும். உங்கள் இறைவனை விட்டும் நீங்கள் எங்கும் ஓடித் தப்ப முடியாது. அவன் உங்கள் நெற்றி முடிகளைப் பிடித்துள்ளான். அவன் உங்களைத் தண்டிக்கக்கூடியவன்.

(135) 6.135. தூதரே! நீர் கூறுவீராக: “என் சமூகமே! உங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலுமே நீங்கள் நிலைத்திருங்கள். தெளிவாக எடுத்துரைப்பதன் மூலம் உங்களுக்கு எதிரான ஆதாரங்களைக் நான் நிலைநாட்டிவிட்டேன். இனி உங்களின் நிராகரிப்பையும் வழிகேட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. மாறாக சத்தியத்தில் நான் நிலைத்திருப்பேன். இவ்வுலகில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? இப்பூமியை ஆட்சி செய்வது யார்? யார் மறுமையின் வீட்டைப் பெறுவார்கள்? என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். இணைவைப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். இவ்வுலகில் அனுபவித்தாலும் அவர்களது இறுதி முடிவு இழப்பைச் சந்திப்பதிப்பதே.

(136) 6.136. அல்லாஹ் படைத்த பயிர்களிலும் கால்நடைகளிலும் அல்லாஹ்வுக்கு ஒரு பங்கை ஒதுக்கி, அவை அல்லாஹ்வுக்கு உரியவை என்றும் இன்னுமொரு பங்கை தங்கள் சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் உரியவை என்றும் இணைவைப்பாளர்கள் புது வழிமுறையை உருவாக்கினார்கள். தாம் இணைவைப்போருக்கு ஒதுக்கியது அல்லாஹ் செலவளிக்குமாறு கூறிய ஏழைகளுக்கோ வறியவர்களுக்கோ சென்றடையாதாம். அல்லாஹ்வுக்காக ஒதுக்கியது தங்களின் சிலைகளைச் சென்றடையுமாம். அவைகளின் நலன்களுக்கு செலவளிக்கப்படுகின்றன. அவர்களின் தீர்ப்பும் பங்கீடும் எத்துணை மோசமானது!

(137) 6.137. அநியாயமான இந்த பங்கீட்டை ஷைத்தான் இணைவைப்பாளர்களுக்கு அலங்கரித்துக் காட்டியது போன்று வறுமைக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைக் கொலை செய்வதையும் அவர்கள் இணையாகக் கருதிய ஷைத்தான் அவர்களில் அதிகமானோருக்கு அலங்கரித்துக் காட்டினான். அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை அநியாயமாகக் கொலை செய்ய வைத்து அவர்களை அழிவுக்குள்ளாக்கவும் எது அனுமதிக்கப்பட்டது? எது தடைசெய்யப்பட்டது? என்பதை அறியாதவாறு அவர்களின் மார்க்கத்தைக் குழப்பத்திற்குள்ளாக்கவுமே இவ்வாறு ஷைதான்கள் செய்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் ஒரு பெரும் நோக்கத்திற்காக இவ்வாறு நாடிவிட்டான். தூதரே! இந்த இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டியதையும் விட்டுவிடுவீராக. இதனால் உமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அவர்களின் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவீராக.

(138) 6.138. “இந்த கால்நடைகளும் பல வகையான பயிர்களும் தடுக்கப்பட்டவையாகும். சிலைகளின் சேவகர்கள் போன்ற தாம் விரும்பியவர்களைத் தவிர வேறு யாரும் இவற்றை உண்ணக்கூடாது; இந்த கால்நடைகளின் முதுகுகள் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றின் மீது பயணம் செய்யவோ சுமைகளை ஏற்றவோ கூடாது; (அல்பஹீரா: காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்,அஸ்ஸாஇபா: சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு மேய விடப்பட்ட பெண் ஒட்டகம், அல்ஹாமி: அதிகமான பெண் ஒட்டகங்களை கருவுறச் செய்த ஆண் ஒட்டகம்) இந்த கால்நடைகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறக் கூடாது. சிலைகளின் பெயர்களைத்தான் கூற வேண்டும்” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள். இவைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சட்டம் என அல்லாஹ்வின் மீது பொய் கூறியே இவற்றைச் செய்தனர். அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக விரைவில் அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

(139) 6.139. “இந்த சாயீபா, பஹீரா போன்ற கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் உயிரோடு பிறந்தால் அவை எங்கள் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும். அவற்றின் வயிற்றிலுள்ள குட்டிகள் செத்துப் பிறந்தால் அவை எங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறியதனால் தகுந்த தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். தான் வழங்கும் சட்டங்களிலும், தன் படைப்புகளைப் பராமரிப்பதிலும் அவன் ஞானம் மிக்கவன்; அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.

(140) 6.140. கீழ்த்தரமான அவர்களின் சிந்தனையினாலும், அறியாமையினாலும் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தவர்களும், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை அவன் கூறியதாக புனைந்துகூறி தடைசெய்து கொண்டவர்களும் அழிந்துவிட்டார்கள். அவர்கள் நேரான வழியை விட்டும் பிறழ்ந்துவிட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவும் இருக்கவில்லை.

(141) 6.141. அல்லாஹ்தான் தண்டுகளுடைய, தண்டுகளற்ற பரந்த தோட்டங்களை பூமியின் மேற்பரப்பில் உருவாக்கினான். அவனே பேரீச்ச மரங்களை முளைக்கச் செய்தான். வடிவத்திலும் சுவையிலும் வேறுபட்ட பழங்களையுடைய பயிர்களையும் அவன் படைத்துள்ளான். அவனே ஆலிவ், மாதுளை ஆகியவற்றை உருவாக்கினான். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. சுவையோ வேறுபட்டு இருக்கிறது. மனிதர்களே! அவை விளையும்போது அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். அவை அறுவடைசெய்யப்படும்போது அவற்றிற்கு உரிய ஸகாத்தை வழங்கிவிடுங்கள். உண்பதிலும் செலவு செய்வதிலும் மார்க்க வரம்புகளை மீறிவிடாதீர்கள். ஏனெனில் உண்ணவதிலும் செலவளிப்பதிலும் அவயைல்லாத ஏனையவற்றிலும் தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். இவையனைத்தையும் படைத்தவனே தன் அடியார்களுக்காக இதனை ஆகுமாக்கித் தந்துள்ளான். அதனைத் தடைசெய்யும் அதிகாரம் இணைவைப்பாளர்களுக்குக் கிடையாது.

(142) பெரிய ஒட்டகங்கள் போன்ற பொதி சுமப்பதற்குப் பொருத்தமான கால்நடைகளையும் சிறு ஒட்டகங்கள் ஆடுகள் போன்ற பொதி சுமப்பதற்குத் தகுதியற்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்துள்ளான். மனிதர்களே! அவன் உங்களுக்கு அனுமதித்த அல்லாஹ் அருளிய இப்பொருட்களிலிருந்து உண்ணுங்கள். இணைவைப்பாளர்கள் செய்வது போன்று அல்லாஹ் தடைசெய்தவற்றை அனுமதிப்பதிலும் அனுமதித்தவற்றைத் தடைசெய்வதிலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விடாதீர்கள். மனிதர்களே! நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். நீங்கள் அவ்வாறு செய்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

(143) 6.143. உங்களுக்காக அவன் எட்டு வகைகளை படைத்துள்ளான். அவற்றில் செம்மறியாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் வெள்ளாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் உள்ளன. தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அவன் இரண்டு ஆண் இனங்களை - அவை ஆண் என்பதால் - தடைசெய்தானா?” அவர்கள் ‘ஆம்’ என்று கூறினால், “அவ்வாறெனில் ஏன் நீங்கள் பெண்ணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் என்பதால் அவற்றைத் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், ““அவ்வாறெனில் ஏன் நீங்கள் ஆணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் இனங்களின் கருவில் உள்ளதை அவன் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், “பெண் இனங்களின் வயிற்றுள்ளதை ஆண் என்றும் பெண் என்றும் வேறுபடுத்தி அவற்றை ஏன் தடைசெய்கிறீர்கள்? இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வே இத்தடையை விதித்தான் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சரியான ஆதாரத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்பீராக.

(144) 6.144. எட்டு வகைகளில் மீதமுள்ளவை, ஒட்டக சோடிகளும், மாட்டில் இருவகைகளுமாகும். தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “ஆண் என்பதால் அல்லாஹ் அவற்றை தடைசெய்துள்ளானா? அல்லது பெண் என்பதால் தடைசெய்துள்ளானா? அல்லது கருவறையில் இருந்ததனாலா? அல்லது இணைவைப்பாளர்களே! உங்களின் வாதப்படி அல்லாஹ் இந்த கால்நடைகளைத் தடைசெய்யும்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா? நேரான பாதையைவிட்டும் மக்களை வழிகெடுப்பதற்காக ஆதாரமின்றி, அல்லாஹ் தடைசெய்யாததை அவன் தடைசெய்ததாகக் கூறி, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியதனால் அநியாயக்காரர்களுக்கு அவன் ஒருபோதும் நேர்வழிபெற உதவிபுரியமாட்டான்.

(145) 6.145. தூதரே! நீர் கூறுவீராக: “அறுக்கப்படாமல் செத்தது, வழியும் இரத்தம், பன்றியின் இறைச்சி -ஏனெனில் அது அசுத்தமாகும் - சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் இறைவன் எனக்கு வஹி அறிவித்தவற்றில் தடைசெய்யப்பட்டதாகக் காணவில்லை. யாரேனும் கடுமையான பசியினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - சுவையை நாடாமலும் அவசியமானதை விட அதிகமாகாமலும் - அவற்றை உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. தூதரே! உம் இறைவன் நிர்ப்பந்தத்தால் உண்டவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(146) 6.146. யூதர்களுக்கு ஒட்டகம், தீக்கோழி போன்ற நகங்களுடைய பிராணிகள் அனைத்தையும் ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளையும் அவற்றின் முதுகுகளிலோ குடல்களிலோ பித்தட்டு, விலா எழும்பு போன்ற எலும்புகளிலோ ஒட்டியுள்ள கொழுப்புகளைத் தவிர நாம் தடைசெய்தோம். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் நாம் இவற்றை அவர்கள் மீது தடைசெய்தோம். நாம் தெரிவிக்கும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.

(147) 6.147. தூதரே! உம் இறைவனிடமிருந்து நீர் கொண்டு வந்ததை அவர்கள் உண்மைப்படுத்தாமல் உம்மைப் பொய்யர் என்று கூறினால் ஆர்வமூட்டும் விதமாக அவர்களிடம்: “உங்களின் இறைவன் கருணை காட்டுவதில் தாராளமானவன். உங்களை அவன் உடனுக்குடன் தண்டிக்காமல் அவகாசம் அளிப்பதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான், எனவும், எச்சரிக்கும் விதமாக அவர்களிடம்: பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட்டவர்களை விட்டும் அவனுடைய தண்டனை திருப்பப்படாது.” எனவும் கூறுவீராக.

(148) 6.148. அல்லாஹ்வின் நாட்டத்தையும் விதியையும் தங்களின் இணைவைப்பு சரி என்பதற்கு ஆதாரமாக்கி இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்திருக்கமாட்டோம். நாம் எம்மீது தடைசெய்துகொண்டவற்றை நாம் தடைசெய்யக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அதனை நாம் தடைசெய்திருக்கமாட்டோம்.” இவர்களது தவறான வாதம் போன்றவற்றைக் கொண்டே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் தங்களின் தூதர்களை நிராகரித்தார்கள். “நாம் அவர்களை நிராகரிக்கக் கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை நிராகரித்திருக்க மாட்டோம்” என்று கூறினார்கள். நாம் அவர்கள் மீது இறக்கிய வேதனையைச் சுவைக்கும் வரை இந்த நிராகரிப்பில் அவர்கள் நிலைத்திருந்தார்கள். தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை விரும்புகிறான் அல்லது அவன் தடைசெய்தவற்றை அனுமதிப்பதையும், அனுமதித்ததை தடைசெய்வதையும் அவன் விரும்புகிறான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? நீங்கள் இவ்வாறு செய்வது மாத்திரம் அல்லாஹ் திருப்தியடைந்தான் என்பதற்கான ஆதாரமல்ல. நிச்சயமாக நீங்கள் யூகங்களையே பின்பற்றுகிறீர்கள். சத்தியத்திற்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. நீங்கள் பொய்தான் கூறுகிறீர்கள்.

(149) 6.149. தூதரே! இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த பலவீனமான ஆதாரங்களைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரம் இல்லையெனில் நீங்கள் கூறும் சாக்குப் போக்குகள் அனைத்தையும் இல்லாமலாக்கும், உங்களின் ஆட்சேபனைகள் அனைத்தையும் தவறு என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இணைவைப்பாளர்களே! அவன் உங்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்ட நாடியிருந்தால் நேர்வழிகாட்டியிருப்பான்.”

(150) 6.150. அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்து ‘அல்லாஹ்தான் தடைசெய்தான்’ என்று வாதிடும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் இவற்றை தடைசெய்தான் என்பதற்கான சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்.” அல்லாஹ்தான் தடைசெய்தான் என்று அறிவில்லாமல் அவர்கள் சாட்சிகூறினால் அவர்களின் சாட்சியத்தை நீர் உண்மைப்படுத்தாதீர். ஏனெனில் அது பொய்சாட்சியாகும். தங்களின் மனஇச்சையின்படி செயல்படுபவர்களின் மனஇச்சையை நீர் பின்பற்றாதீர். அல்லாஹ் அனுமதித்ததை அவர்கள் தடைசெய்த போது நம்முடைய வசனங்களை மறுத்துவிட்டனர். மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைத்து மற்றவர்களை அவனுடன் சமமாக்குகின்றனர். தங்கள் இறைவனுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்களை எவ்வாறு பின்பற்றுவது?

(151) 6.151. தூதரே! மக்களிடம் நீர் கூறுவீராக: “வாருங்கள், அல்லாஹ் தடைசெய்ததை நான் உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்: தனது படைப்புகளில் எவரையும் அவனுக்கு இணையாக ஆக்குவதையும் தாய் தந்தையருடன் முறையற்று நடந்து கொள்வதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அறியாமைக்கால மக்கள் செய்தது போன்று வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மானக்கேடான காரியங்களை நெருங்குவதையும், அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை, திருமணத்தின் பின் விபச்சாரத்தில் ஈடுபடல், இஸ்லாத்தை விட்டு மதம் மாறுதல் போன்ற உரிய காரணமின்றி கொல்வதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வின் ஏவல்களையும் விலக்கல்களையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டே அவன் மேற்கூறிய அறிவுரையை வழங்கியுள்ளான்.

(152) 6.152. அநாதைகள் - பருவமடைவதற்கு முன்பே தந்தையை இழந்தவர்கள் - பக்குவ வயதை அடையும் வரை அவர்களின் செல்வங்களை நெருங்குவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும் அவர்களுக்குப் பயனளிக்கும், அவர்களது செல்வத்தை வளர்க்கும் விதத்தில் அவர்களின் செல்வங்களை நீங்கள் நெருங்கலாம். அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்வதையும் தடைசெய்துள்ளான். கொடுக்கல் வாங்கலில், விற்றல் வாங்கலில் நீதியாக நடந்து கொள்வதே உங்கள் மீது கடமையாகும். ஒருவர் மீது அவர் தாங்கும் அளவுக்கே நாம் பொறுப்பு சாட்டுவோம். அளவு, நிறுவை மற்றும் ஏனையவைகளில் தவிர்க்க முடியாத கூடுதல் குறைவு ஏற்படுவது குற்றமில்லை. நீங்கள் ஒரு தகவல் அல்லது சாட்சி கூறினால் உண்மைக்குப் புறம்பானதைக் கூறுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான்.எந்தவொரு உறவினருக்கோ, நண்பருக்கோ பாரபட்சம் காட்டக்கூடாது. அல்லாஹ்விடம் செய்த அல்லது அவனது பெயரினால் செய்த ஒப்பந்தங்களை முறித்துவிடுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதே உங்கள் மீது கடமையாகும். உங்களது செயலின் விளைவுகளை நீங்கள் நினைவுகூர வேண்டும் என்பதற்காக மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உறுதியான கட்டளையிடுகிறான்.

(153) 6.153. வழிகேட்டின் பாதைகளைப் பின்பற்றுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக கோணலற்ற அல்லாஹ்வின் நேரான வழியையே நீங்கள் பின்பற்ற வேண்டும். வழிகேட்டின் பாதைகள் உங்களைப் பிரிவினையின் பக்கமும் சத்தியத்தை விட்டுத் தூரமாகவும் கொண்டு சென்றுவிடும். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக அவன் தன்னுடைய நேரான வழியைப் பின்பற்றும்படியே உங்களுக்கு அறிவுரை வழங்குகிறான்.

(154) 6.154. மேற்கூறப்பட்டவற்றை அறிவித்த பின்னர் நாம் மூஸாவுக்கு வழங்கிய அருட்கொடைகளை நிறைவு செய்வதற்காகவும் அவர் செய்த நற்செயல்களுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவதற்காகவும் சத்தியத்தை அறிவிப்பதற்காகவும் அருளாகவும் அவர்கள் மறுமை நாளின்மீது நம்பிக்கைகொண்டு அதற்காக நற்செயல்களில் ஈடுபடுவதற்காகவும் தவ்ராத்தை வழங்கினோம்.

(155) 6.155. இந்த குர்ஆன் அருள் வளமிக்க நாம் இறக்கிய வேதமாகும். உலக மற்றும் மார்க்க ரீதியான நன்மைகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே அதில் இறக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள். அவனுடைய கட்டளைகளுக்கு மாறாகச் செயல்படுவதிலிருந்து விலகியிருங்கள். அருளைப்பெறுவீர்கள்.

(156) 6.156. -அரபு நாட்டின் இணைவைப்பாளர்களே!- “தவ்ராத்தையும் இன்ஜீலையும் அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் இறக்கினான். எங்களுக்கு எந்த வேதத்தையும் இறக்கவில்லை. எங்களது மொழியிலன்றி அவர்களது மொழியில் இருந்ததனால் அவர்களது வேதங்களை எங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை” என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே. (இக்குர்ஆனை உங்கள் மீது இறக்கினோம்).

(157) 6.157. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டது போன்று எங்கள் மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்களும் அவர்களை விட உறுதியாக இருந்திருப்போம் என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகவும்தான். உங்களின் தூதர் முஹம்மது மீது உங்களின் மொழியிலேயே ஒரு வேதத்தை அல்லாஹ் இறக்கிவிட்டான். அது தெளிவான ஆதாரமாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இந்த சமூகத்திற்கு அருளாகவும் இருக்கின்றது. எனவே பலவீனமான சாக்குப் போக்குகளையும் தவறான காரணங்களையும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாருமில்லை. நம்முடைய வசனங்களைப் புறக்கணித்ததற்குக் கூலியாக அவர்களை நரக நெருப்பில் நுழைத்து கடுமையாகத் தண்டிப்போம்.

(158) 6.158. இவ்வுலகில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் தங்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் இந்த நிராகரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பு கூறுவதற்காக உம் இறைவனின் வருகையை எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமையை அறிவிக்கக்கூடிய உம் இறைவனின் சில அத்தாட்சிகளையா? சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது போன்ற உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வெளிப்பட்டுவிடும் நாளில் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கையோ இதுவரை நற்செயல் புரியாத நம்பிக்கையாளனுக்கு அவன் அப்போது செய்யும் செயல்களோ எந்தப் பயனையும் அளிக்காது. தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

(159) 6.159. மார்க்கத்தில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சிலவற்றை விட்டு, தங்களின் மார்க்கத்தைப் பல பிரிவுகளாக ஆக்கிக் கொண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களுடன், தூதரே! உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இருக்கும் வழிகேட்டை விட்டும் நீர் நீங்கியவராவீர். அவர்களை எச்சரிப்பதே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இவ்வுலகில் செய்துகொண்டிருந்தவற்றை மறுமை நாளில் அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(160) 6.160. மறுமைநாளில் ஒரு நன்மையோடு வரும் நம்பிக்கையாளனின் நன்மையை அல்லாஹ் பத்து மடங்காக்குவான். ஒரு தீமையோடு வருபவர் கூடுதல், குறைத்தல் என்பவற்றில் அதற்கேற்பவே தண்டிக்கப்படுவார். துிமையை விட அதிக தண்டனை வழங்கப்படமாட்டாது. மறுமை நாளில் நன்மைகளின் கூலி குறைக்கப்பட்டோ தீமைகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(161) 6.161. தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேரான வழியைக் காட்டியுள்ளான். அது இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளைக் கருத்தில் கொண்டு அமைந்த மார்க்கமாகும். அது சத்தியத்தின்பால் முழுமையாகச் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கமாகும். அவர் ஒரு போதும் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருந்ததில்லை.”

(162) 6.162. தூதரே! நீர் கூறுவீராக: “நிச்சயமாக எனது தொழுகையும், ஏனையவர்களின் பெயர் கூறாது அல்லாஹ்வின் பெயர்கூறி அவனுக்காக நான் அறுப்பவையும் எனது வாழ்வும் மரணமும் எல்லாவற்றையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியவையாகும். இவற்றில் மற்றவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.”

(163) 6.163. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. இணைவைப்பை விட்டும் தூய்மையான இந்த ஓரிறைக் கொள்கையைக் கொண்டே அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். இந்த சமூகத்தில் இதனை ஏற்றுக்கொள்பவர்களில் நானே முதலாமவனாவேன்.

(164) 6.164. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாக உள்ள நிலமையில் அவனைத் தவிர மற்றவர்களையா நான் என் இறைவனாக ஏற்றுக் கொள்வது? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் தெய்வங்களுக்கும் அவனே இறைவன். தவறிழைக்காத எவரும் மற்றவரின் பாவத்தை சுமக்க மாட்டார். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த மார்க்க விஷயங்களை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”

(165) 6.165. பூமியை நிர்வகிப்பதற்காக, அதில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக அல்லாஹ்வே ஆக்கினான். உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் உங்களில் சிலரை சிலரை விட உயர்த்தியுள்ளான், தூதரே! உம் இறைவன் தண்டனை வழங்குவதில் விரைவானவன். வரக்கூடிய ஒவ்வொன்றும் அண்மையிலேயே உள்ளன. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.