(1) 63.1. -தூதரே!- உம்முடைய அவைக்கு நிராகரிப்பை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் நயவஞ்சகர்கள் வந்தால் “நிச்சயமாக நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நீர் அவனின் தூதர்தான் என்பதை அறிவான். நிச்சயமாக இந்த நயவஞ்சர்கள் தமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீர் அவனின் தூதர் என ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறும் வாதத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(2) 63.2. தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர்கள் வாதிட்டு செய்யும் சத்தியங்களை, கொலை மற்றும் கைதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஆக்கிக் கொண்டார்கள். மக்களிடையே சந்தேகங்களையும் புரளிகளையும் பரப்பி அவர்களை நம்பிக்கைகொள்ளவிடாமல் தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்களின் நயவஞ்சகத்தினால் செய்யும் செயல்கள் மற்றும் பொய்ச் சத்தியங்கள் தீயவையாகும்.
(3) 63.3. இதற்கான காரணம், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உட்புகாமல் நயவஞ்சமாக நம்பிக்கைகொண்டு பின்னர் இரகசியமாக அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான். அவர்களின் நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களின் உள்ளங்களின்மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவற்றில் ஈமான் நுழையமாட்டாது. இந்த முத்திரையின் காரணமாக அவர்களால் தங்களுக்கு நன்மைதரக்கூடியவற்றைப் புரிந்துகொள்ள முடியாது.
(4) 63.4. நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் பிரகாசம் மற்றும் மென்மையின் காரணத்தினால் அவர்களின் தோற்றமும் அமைப்பும் உம்மைக் கவர்ந்துவிடும். அவர்களின் சொல்வன்மையினால் அவர்கள் பேசினால் அதனை நீர் செவியுறுவீர். -தூதரே!- அவர்கள் உமது அவையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்களாவர். அவர்களால் எதையும் புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் கோழைத்தனத்தினால் ஒவ்வொரு சப்தத்தையும் தமக்கு எதிராக எண்ணுகிறார்கள். அவர்கள்தாம் உண்மையான எதிரிகளாவர். -தூதரே!- அவர்களோடு எச்சரிக்கையாக இருப்பீராக. அவர்கள் உம் இரகசியத்தை வெளிப்படுத்தி விடலாம் அல்லது உமக்கெதிராக சதித்திட்டம் தீட்டலாம். அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். தெளிவான ஆதாரங்களைப் பெற்றிருந்தும் எவ்வாறு அவர்கள் ஈமானைவிட்டும் திருப்பப்படுகிறார்கள்?!
(5) 63.5. இந்த நயவஞ்சகர்களிடம் “அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நீங்கள் செய்த செயல்களுக்கு வருத்தம் தெரிவியுங்கள், அவர் அல்லாஹ்விடம் உங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்” என்று கூறப்பட்டால் பரிகாசமாக தங்களின் தலைகளைத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல், கட்டுப்படாமல் கர்வம் கொண்டவர்களாக தமக்கு இடப்பட்ட கட்டளையைப் புறக்கணிப்பதை நீர் காண்பீர்.
(6) 63.6. -தூதரே!- நீர் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவதும் கோராமலிருப்பதும் ஒன்றுதான். அல்லாஹ் அவர்களின் பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் பாவத்தில் நிலைத்திருப்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான்.
(7) 63.7. அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரிடம் இருக்கும் ஏழைகளும் மதீனாவைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளும் நபியவர்களை விட்டும் பிரிந்து செல்லவேண்டுமென்றால் உங்களின் செல்வங்களை அவர்களுக்காக செலவு செய்யாதீர்கள்.” வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அவற்றை வழங்குகிறான். ஆனால் நயவஞ்சகர்கள் நிச்சயமாக வாழ்வாதாரத்தின் கருவூலம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது என்பதை அறியமாட்டார்கள்.
(8) 63.8. அவர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை கூறுகிறான்: “நாங்கள் மதீனாவிற்கு திரும்பிச் சென்றால் கண்ணியமானவர்களாகிய -நானும் என் சமூகத்தினரும்- இழிவானவர்களான முஹம்மதையும் அவரது தோழர்களையும் வெளியேற்றிவிடுவோம்.” கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியது. அப்துல்லாஹ் இப்னு உபை, அவனது சகாக்களக்குரியதல்ல. ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதே என்பதை நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்.
(9) 63.9. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் செல்வங்களோ, பிள்ளைகளோ தொழுகையை விட்டும் இன்னபிற இஸ்லாமியக் கடமைகளை விட்டும் உங்களைத் திருப்பிவிட வேண்டாம். யாருடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை, இன்னபிறவற்றிலிருந்து அவரைத் திருப்பி விடுகிறதோ அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர்.
(10) 63.10. உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து “என் இறைவன் எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா? நான் அல்லாஹ்வின் பாதையில் என் செல்வங்களைச் செலவு செய்து நல்லமல்கள் சாலிஹான அவனுடைய நல்லடியார்களில் ஒருவனாக ஆகியிருப்பேனே!” எனக் கூறும் சமயம் வருமுன் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து செலவுசெய்துகொள்ளுங்கள்.
(11) 63.11. ஒருவரின் தவணை வந்து அவரது வாழ்நாள் நிறைவடைந்து விட்டால் அல்லாஹ் அவருக்கு ஒருபோதும் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்யக்கூடியதை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.