(1) 65.1. நபியே! நீரோ உம் சமூகத்தில் யாரேனுமோ தம் மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பினால் அந்த மனைவியர் உடலுறவு இடம்பெறாத தூய்மையாக இருக்கும் ஆரம்ப காலங்களில் விவாகரத்து செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப மனைவியாக மீட்டிக்கொள்ளும் பொருட்டு இத்தாவின் கால அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை அவர்கள் வசிக்கும் உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள். அவர்களும் தங்களின் காலஅளவு முடியும் வரை வெளியேறக்கூடாது. ஆனால் அவர்கள் வெளிப்படையான பாவமான விபச்சாரம் போன்றவற்றில் ஈடுப்பட்டாலே தவிர. இந்த சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறாரோ அவர் இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் அழிவிற்கான காரணங்களில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். -விவாகரத்து செய்பவரே!-உமக்குத் தெரியாது, விவாகரத்தின் பின்னரும் அல்லாஹ் நீ எதிர்பார்க்காத ஒன்றை ஏற்படுத்தி நீ அவளை மீட்டிக்கொள்ளும் வாய்ப்புண்டு.
(2) 65.2. அவர்கள் தங்களின் கால அளவை நெருங்கிவிட்டால் அவர்களுடன் நல்லமுறையில் விரும்பி வாழ்க்கை நடத்துவதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்களின் கால அளவை நிறைவு செய்து தமது உரிமையை அவர்கள் பெறும் பொருட்டு அவர்களை மீட்டாமல் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுத்து விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவோ அல்லது பிரிந்துவிடவோ நாடினால் சச்சரவைத் தீர்க்கும் பொருட்டு உங்களிலிருந்து இரு உறுதியான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். -சாட்சியாளர்களே!- அல்லாஹ்வின் திருப்தியை நாடி சாட்சி கூறுங்கள். மேற்கூறப்பட்ட இந்த சட்டங்களின் மூலம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அறிவுரையைக் கொண்டு பயனடைவார்கள். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நெருக்கடி மற்றும் சங்கடத்திலிருந்து வெளியேறக்கூடிய ஒரு வழியை ஏற்படுத்துவான்.
(3) 65.3. அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு கணக்கில்லாமல் அவன் வாழ்வாதாரம் வழங்குவான். யார் தன்னுடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் விஷயத்தை நிறைவேற்றியே தீருவான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல. எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது. அவன் ஒவ்வொரு விஷயமும் முடிவதற்கான ஒரு அளவை நிர்ணயித்துள்ளான். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் எல்லை உண்டு. இரண்டில் எதுவும் மனிதனுக்கு நிரந்தரமானது அல்ல.
(4) 65.4. வயது அதிகரிப்பின் காரணமாக மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குரிய கால அளவில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் அது மூன்று மாதங்களாகும். சிறுவயது காரணமாக மாதவிடாய் இன்னும் தொடங்காத பெண்களுக்குமான கால அளவும் மூன்று மாதங்களே. விவாகரத்து செய்யப்பட்ட அல்லது கணவன் இறந்துவிட்ட கர்ப்பமான பெண்களுக்கான கால அளவு குழந்தை பெறும் வரையிலாகும். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவரது எல்லா விவகாரங்களையும் கஷ்டங்களையும் அல்லாஹ் இலகுபடுத்தித் தருவான்.
(5) 65.5. -நம்பிக்கையாளர்களே!- மேற்கூறப்பட்ட விவாகரத்து, திரும்ப அழைத்துக்கொள்ளுதல் மற்றும் கால அளவுக்கான சட்டங்கள் நீங்கள் அவற்றின்படி செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு அளித்த கட்டளைகளாகும். யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவர்கள் செய்த பாவங்களை அவன் போக்கி விடுவான். மறுமையில் அவர்களுக்குப் பெரும் கூலியை வழங்குவான். அது, அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதும் என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகளை பெறுவதுமாகும்.
(6) 65.6. -கணவர்களே!- நீங்கள் வசிக்கும் வீட்டிலேயே உங்களின் வசதிக்கேற்றவாறு அவர்களையும் வசிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதைத்தான் விதித்துள்ளான். அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவர்களுக்குச் செய்யும் செலவீனங்களிலோ, வசிப்பிடத்திலோ தீங்கிழைத்து விடாதீர்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் கர்ப்பமாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும்வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள். அவர்கள் உங்களின் குழந்தைகளுக்குப் பாலூட்டினால் அதற்கான ஊதியத்தை வழங்கி விடுங்கள். ஊதியம் வழங்குவதில் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். மனைவி விரும்பும் ஊதியத்தை கணவன் வழங்காமல் கஞ்சத்தனம் செய்தால், தான் விரும்பும் ஊதியத்தைப் பெற்றாலன்றி பாலூட்ட முடியாது என மனைவி கஞ்சத்தனம் செய்தால் தந்தை தன் குழந்தைக்குப் பாலூட்டக்கூடிய வேறு ஒரு பெண்ணை நியமித்துக் கொள்ளலாம்.
(7) 65.7. வசதியுடையவர் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் தன் வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யார் வசதிக்குறைவினால் நெருக்கடியை உணர்கிறாரோ அவர் அல்லாஹ் தமக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஒருவருக்கு எந்த அளவு வழங்கியிருக்கின்றானோ அந்த அளவே அவர் மீது கடமையாக்குகிறான். அவரால் தாங்க முடியாததை அவர்மீது கடமையாக்கமாட்டான். அவரது நெருக்கடி மற்றும் துன்பத்துக்குப் பிறகு விரைவில் அல்லாஹ் அவருக்கு வசதியையும் செல்வத்தையும் வழங்கலாம்.
(8) 65.8. தம் இறைவன் மற்றும் அவனது தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட எத்தனையோ ஊர் மக்களை அவர்களின் தீய செயல்களுக்காக கடுமையான முறையில் கணக்கு வாங்கியுள்ளோம். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களை மோசமாக தண்டித்தோம்.
(9) 65.9. தங்கள் தீய செயல்களின் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். இறுதியில் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பையே பெற்றார்கள்.
(10) 65.10. அல்லாஹ் அவர்களுக்காக பலமான வேதனையை தயார்படுத்தி வைத்துள்ளான். - அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே!- அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்காதிருக்கும் பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களின் தீய விளைவை, நீங்கள் செய்த நன்மைகளால் ஏற்படும் பலன்களை உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு நினைவூட்டலை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.
(11) 65.11. இந்த நினைவூட்டல் அவனிடமிருந்து வந்துள்ள தூதராகும். அவர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி நற்செயல்களில் ஈடுபட்டவர்களை வழிகேடு என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி நேர்வழி என்னும் ஒளியின்பால் கொண்டுவருவதற்காக சந்தேகமற்ற அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை உங்களிடம் எடுத்துரைக்கின்றார். யார் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிகிறாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ் அவரை நிரந்தர இன்பத்தையடைய சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து அவருக்கு சிறந்த வாழ்வாதாரத்தையும் வழங்குவான்.
(12) 65.12. அல்லாஹ்வே ஏழு வானங்களையும் அவற்றைப்போன்று ஏழு பூமியையும் படைத்தான். அவற்றிற்கிடையே அல்லாஹ்வின் பிரபஞ்ச மற்றும் மார்க்கரீதியான கட்டளை இறங்கிக் கொண்டிருக்கிறது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன், அவனால் இயலாதது எதுவும் இல்லை என்பதையும் நிச்சயமாக அவன் அறிவால் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளான், வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளும்பொருட்டே இவ்வாறு செய்துள்ளான்.