(1) 66.1. தூதரே! அல்லாஹ் உமக்கு அனுமதித்த அடிமைப் பெண் மாரியாவை அனுபவிப்பதை ஏன் தடைசெய்து கொள்கிறீர்? இதன்மூலம் ரோஷம் கொண்ட உம் மனைவியரைத் திருப்திப்படுத்த விரும்புகிறீரா? அல்லாஹ் உம்மை மன்னிக்கக்கூடியவனாகவும் உம்மீது மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(2) 66.2. அல்லாஹ் உங்களுக்காக, நீங்கள் சத்தியத்தை முறித்துக்கொள்ள விரும்பினால் அதற்கான பரிகாரத்தை விதித்துள்ளான். அல்லாஹ்வே உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன். அவன் அடியார்களுக்கு நன்மைதரக்கூடியதை நன்கறிந்தவனாகவும் தான் அமைத்த சட்டங்களில், விதிகளில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான்.
(3) 66.3. அல்லாஹ்வின் தூதர் ஹப்ஸாவிடம் பிரத்தியேகமாக, நிச்சயமாக தன் அடிமைப் பெண் மாரியாவை இனி நெருங்கப்போவதில்லை என்று கூறியதை நினைவு கூர்வீராக! ஹப்ஸா அத்தகவலை ஆயிஷாவிடம் தெரிவித்தார். அல்லாஹ் தன் தூதருக்கு அவரது இரகசியம் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிவித்த போது அவர் ஹப்ஸாவைக் கண்டித்து அவர் கூறியவற்றில் சிலதைக் கூறிக்காட்டினார். இன்னும் சிலதைக் கூறவில்லை. அதற்கு ஹப்ஸா அவரிடம், “உங்களுக்கு யார் இதனை அறிவித்தது” என்று கேட்டார். அதற்கு தூதர், “அனைத்தையும் நன்கறிந்தவனும் மறைவான அனைத்தையும் அறிந்தவனுமான அல்லாஹ்தான் அறிவித்தான்” என்று கூறினார்.
(4) 66.4. உங்கள் இருவர் மீதும் பாவமன்னிப்புக் கோருவது கடமையாகும். ஏனெனில், தன் அடிமைப் பெண்ணைப் பிரிந்து அவளை தன் மீது தடைசெய்துகொள்ளும் அல்லாஹ்வின் தூதர் வெறுக்கும் விடயத்தை உங்கள் இருவரின் உள்ளங்களும் விரும்பின. நீங்கள் இருவரும் மீண்டும் அவரைத் தூண்டிவிடுவதைத் தொடர்ந்தால் நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரின் நேசனும் உதவியாளனுமாவான். ஜிப்ரீலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர்களும் அவரின் உதவியாளர்களாகவும் நேசர்களாகவும் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாகவும் அவரை நோவினை செய்வோருக்கெதிராக உதவுவோராகவும் உள்ளனர்.
(5) 66.5. அவரது இறைவன் தன் தூதர் உங்களை விவாகரத்து செய்துவிட்டால் உங்களை விட சிறந்த மனைவியரை தன் தூதருக்கு வழங்கலாம். அந்த மனைவியர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாகவும், அவனுக்கு வழிப்படுபவர்களாகவும் தம் பாவங்களிலிருந்து மன்னிப்புக்கோரக்கூடியவர்களாகவும், இறைவனை வணங்கக்கூடியவர்களாவும், நோன்பு நோற்கக்கூடியவர்களாவும், விதவைகளாகவும், யாருமே தீண்டாத கன்னியர்களாகவும் இருப்பார்கள். ஆயினும் தூதர் அவர்களை விவாகரத்து செய்யவில்லை.
(6) 66.6. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடுமையான (நரக) நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். அது மனிதர்களாலும் கற்களாலும் எரிக்கப்படுகிறது. அந்த நெருப்பின் மீது கடுமையான வானவர்கள் இருக்கிறார்கள். அதில் நுழைபவர்களுடன் கடுமையாக இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில்லை. எவ்வித தயக்கமுமின்றி தங்களுக்கு அவன் இடும் கட்டளைகளை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்.
(7) 66.7. மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம் கூறப்படும்: “அல்லாஹ்வை நிராகரித்தவர்களே! இன்றைய தினம் நீங்கள் செய்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களுக்காக சாக்குப்போக்குகள் கூறாதீர்கள். உங்களின் சாக்குப்போக்குகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. நிச்சயமாக இன்றைய தினம், உலகில் நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரையும் பொய்ப்பித்து செயற்பட்டதற்கே கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
(8) 66.8. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி மறுமை நாளில் உங்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்திடலாம். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அந்நாளில் அல்லாஹ் தூதரையும் அவரோடு நம்பிக்கைகொண்டவர்களையும் நரகத்தில் பிரவேசிக்கச்செய்து இழிவுபடுத்தமாட்டான். பாலத்தில் அவர்களுக்கு முன்னாலும் வலது புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழையும்பொருட்டு எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவாயாக. பாலத்தில் ஒளி அணைந்துவிட்ட நயவஞ்சகர்களைப்போன்று நாங்கள் ஆகிவிடக்கூடாது. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றாய். எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவதும் எங்களின் பாவங்களை மன்னிப்பதும் உன்னால் இயலாதது அல்ல.
(9) 66.9. தூதரே! வாளைக் கொண்டு நிராகரிப்பாளர்களுடனும் நாவின் மூலமும் ஆதாரங்களை நிலைநாட்டுவதன் மூலமும் நயவஞ்சகர்களுடனும் ஜிஹாத் செய்வீராக. அவர்கள் உம்மை அஞ்சும்பொருட்டு அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வீராக. மறுமை நாளில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது அவர்கள் திரும்பக்கூடிய மோசமான இடமாகும்.
(10) 66.10. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு நிச்சயமாக முஃமின்களுடன் உள்ள தொடர்பின் எவ்விதப் பலனும் அளிக்காது என்பதற்கு அல்லாஹ்வின் இரு நபிமார்களான நூஹ் மற்றும் லூத் ஆகிய இருவரின் மனைவிமார்களை உதாரணம் கூறுகிறான். அவர்கள் இருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தும் தங்களின் சமூகத்திலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு உதவிசெய்தும் தங்களின் கணவர்களுக்கு துரோகமிழைத்தார்கள். நம்முடைய நல்லடியார்களான இவ்விருவருக்கும் மனைவியராக இருந்தது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அவர்கள் இருவரிடமும் கூறப்பட்டது: “நரகத்தில் நுழையும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளுடன் சேர்ந்து நீங்களும் நுழையுங்கள்.”
(11) 66.11. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் சத்தியத்தின் மீது உறுதியாக நிலைத்து நின்றால் நிராகரிப்பாளர்களுடனான உறவு அவர்களுக்கு எந்த தீங்கையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு பிர்அவ்னின் மனைவியின் நிலையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் கூறினாள்: “என் இறைவா! எனக்கு உன்னிடத்தில் சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுவாயாக. ஃபிர்அவ்னின் அடக்குமுறையிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் அவனது தீய செயல்களிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக. அவனுடைய வரம்புமீறல் மற்றும் அநியாயத்தில் அவனைப் பின்தொடர்ந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக.”
(12) 66.12. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவன் இம்ரானின் மகள் மர்யமின் நிலமையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் தம் கற்பை விபச்சாரத்திலிருந்து பேணிக்கொண்டாள். அல்லாஹ் ஜிப்ரீலை மர்யமுள் ஊதுமாறு கட்டளையிட்டான். எனவே அல்லாஹ்வின் வல்லமையால் மர்யம் ஈஸாவை தந்தையின்றி கருவுற்றாள். மர்யம் அல்லாஹ்வின் ஷரீஅத்துகளையும் அவன் தன் தூதர்கள்மீது இறக்கிய வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனுக்குக் கீழ்ப்படிபவர்களில் ஒருவராக இருந்தாள்.