68 - ஸூரா அல்கலம் ()

|

(1) 68.1. (نٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டும் தமது எழுது கோல்களின் மூலம் மக்கள் எழுதுபவற்றைக் கொண்டும் சத்தியம் செய்கிறான்.

(2) 68.2. -தூதரே!- அல்லாஹ் உமக்கு அளித்த நபித்துவம் என்னும் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்ல. மாறாக இணைவைப்பாளர்கள் உம்மீது சுமத்தும் பைத்தியத்தை விட்டும் நீர் தூய்மையானவராக இருக்கின்றீர்.

(3) 68.3. நிச்சயமாக நீர் சிரமத்துடன் சுமக்கும் இந்த தூதுப்பணிக்காக என்றும் முடிவுறாத நன்மை உண்டு. அதனை யாரும் உமக்குச் சொல்லிக்காட்ட முடியாது.

(4) 68.4. நிச்சயமாக நீர் குர்ஆன் கூறும் மகத்தான நற்பண்புடையவராக இருக்கின்றீர். அது கூறும் பண்புகளை பரிபூரணமாகப் பெற்றவராக இருக்கின்றீர்.

(5) 68.5. விரைவில் நீர் கண்டுகொள்வீர். இந்த நிராகரிபொய்ப்பிப்பாளர்களும் கண்டுகொள்வார்கள்.

(6) 68.6. சத்தியம் வெளிப்படும்போது உங்களில் யாருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்பது தெளிவாகிவிடும்.

(7) 68.7. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் தன் பாதையை விட்டு நெறிபிறழ்ந்தவர்களையும் தன் பாதையின்பால் நேர்வழிபெற்றவர்களையும் நன்கறிவான். அவர்கள் அவனது வழியைவிட்டு நெறிபிறழ்ந்துவிட்டார்கள் என்பதையும் நீர் நேர்வழியின்பால் இருக்கின்றீர் என்பதையும் அவன் அறிவான்.

(8) 68.8. -தூதரே!- நீர் கொண்டுவந்ததில் பொய்ப்பிப்பவர்களுக்குக் கட்டுப்படாதீர்.

(9) 68.9. நீர் மார்க்கத்தை விட்டுக்கொடுத்து அவர்களுக்கு வளைந்து கொடுத்தால், அவர்கள் மீது அன்புகொண்டால் தாங்களும் வளைந்து கொடுக்கலாம், அன்பு காட்டலாம் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

(10) 68.10. அசத்தியத்தைக் கொண்டு அதிகமான சத்தியம் செய்யும் இழிவான எந்த மனிதனுக்கும் நீர் கட்டுப்படாதீர்.

(11) 68.11. அவன் மக்களைக் குறித்து அதிகமாக புறம்பேசி அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்காக கோள்மூட்டி திரிபவனாகவும் இருக்கின்றான்.

(12) 68.12. அவன் நற்செயல்களைத் அதிகமாக தடுப்பவன்; மக்களின் செல்வங்களிலும் மானத்திலும் உயிரிலும் வரம்புமீறக்கூடியவன்; பாவங்களில் அதிகமாக உழலக்கூடியவன்;

(13) 68.13. கடின சித்தமும் வரண்ட பண்பும் மிக்கவன்; இத்தனைக்கும் மேல் அவன் தன் சமூகத்தில் இழிபிறவியாக இருக்கின்றான்.

(14) 68.14. அவன் செல்வமும் பிள்ளைகளும் பெற்றவனாக இருப்பதனால் அவன் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொண்டான்.

(15) 68.15. நம்முடைய வசனங்கள் அவனிடம் எடுத்துரைக்கப்பட்டால், “இது முன்னோர்கள் மூலமாக எழுதப்பட்ட கட்டுக்கதைகள்” என்று கூறுகிறான்.

(16) 68.16. நாம் அவனது மூக்கின் மீது அடையாளம் இடுவோம். அது எப்போதும் அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அவனை அசிங்கமாக்கிவிடும்.

(17) 68.17. நாம் தோட்டவாசிகளை சோதித்ததுபோன்றே இந்த இணைவைப்பாளர்களை பசியாலும் பஞ்சத்தாலும் சோதித்தோம். அந்த தோட்டவாசிகள், அதிகாலைப் பொழுதில் விரைந்து சென்று தோட்டத்தின் கனிகளைப் பறித்துவிட வேண்டும். எந்த ஏழைக்கும் எதுவும் கொடுத்து விடக்கூடாது என்று சத்தியம் செய்தபோது

(18) 68.18. தங்களின் சத்தியத்தில் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.

(19) 68.19. அல்லாஹ் அந்த (தோட்டத்தின் மீது) நெருப்பை அனுப்பினான். அவர்களால் அதனை விட்டும் நெருப்பைத் தடுக்கமுடியாத தூக்கத்தில் அவர்கள் ஆழ்ந்திருந்த சமயத்தில் அதனை பொசுக்கிவிட்டது.

(20) 68.20. இருளான இரவைப் போன்று அது கருப்பாகிவிட்டது.

(21) 68.21. அவர்கள் காலை நேரத்தில் பின்வருமாறு கூறிக்கொண்டே ஒருவரையொருவர் அழைத்தார்கள்:

(22) 68.22. “நீங்கள் தோட்டத்தின் கனிகளைப் பறிப்பதாயிருந்தால் ஏழைகள் வருவதற்கு முன்னரே அதிகாலையிலேயே உங்கள் தோட்டத்திற்குப் புறப்படுங்கள்.” என்று கூறினார்கள்.

(23) 68.23. அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டே தங்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றார்கள்.

(24) 68.24. அவர்கள் ஒருவருக்கொருவர் கூறினார்கள்: “இன்றைய தினம் எந்த ஏழையும் உங்களின் தோட்டத்திற்கு வந்துவிடவே கூடாது.”

(25) 68.25. அவர்கள் கனிகளை (பறித்து அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்காமல்) தடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டோராக அதிகாலையில் புறப்பட்டனர்.

(26) 68.26. அது எரிந்திருப்பதை அவர்கள் கண்டபோது, “நாம் தோட்டத்தின் வழி நமக்குத் தவறிவிட்டது” என ஒருவருக்கொருவர் கூறினார்கள்.

(27) 68.27. மாறாக நாம் அதன் கனிகளை ஏழைகளுக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொள்வதற்கு உறுதியாக நாம் முடிவெடுத்ததனால் அதன் கனிகளைப் பறிப்பதை விட்டும் தடுக்கப்பட்டவர்களாகிவிட்டோம்.”

(28) 68.28. அவர்களில் சிறந்தவர் கூறினார்: “நீங்கள் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவுசெய்தபோது ‘நீங்கள் அல்லாஹ்வின் துதிபாட வேண்டாமா? அவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டாமா?’ என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”

(29) 68.29. அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் பரிசுத்தமானவன். நம் தோட்டத்தின் கனிகளிலிருந்து ஏழைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று நாங்கள் முடிவுசெய்து நிச்சயமாக எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம்.”

(30) 68.30. அவர்கள் ஒருவரையொருவர் தங்கள் பேசும்போது பழிக்கலானார்கள்.

(31) 68.31. வேதனையுடன் அவர்கள் கூறினார்கள்: “எங்கள் நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் ஏழைகளின் உரிமையை தடுத்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருந்தோம்.

(32) 68.32. எங்களின் இறைவன் இந்த தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எங்களுக்கு வழங்கலாம். நிச்சயமாக நாங்கள் அவனிடம் மட்டுமே ஆதரவு வைக்கின்றோம். அவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கின்றோம். அவனிடம் நலவை வேண்டுகிறோம்.

(33) 68.33. இத்தண்டனை போன்றே வாழ்வாதாரத்தை தடுப்பதன் மூலம் நாம் நம் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை தண்டிக்கின்றோம். அவர்கள் மறுமையின் வேதனையின் கடுமையையும் நிரந்தரத்தையும் அறிந்திருந்தால் அது மிக மகத்தானதாகும்.

(34) 68.34. நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனிடம் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அதில் குதூகலமாக இருப்பார்கள். அவர்களின் இன்பம் முடிவுறாதது.

(35) 68.35. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் எண்ணுவதுபோல நாம் கூலி வழங்குவதில் முஸ்லிம்களை நிராகரிப்பாளர்களைப் போன்று ஆக்கி விடுவோமோ என்ன?

(36) 68.36. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு என்னவாயிற்று? ஏவ்வாறு அநீதியாக, கோணலாக இந்த தீர்ப்பை அளிக்கின்றீர்கள்?

(37) 68.37. அல்லது உங்களிடம் ஒரு வேதம் இருக்கின்றதா? அதில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்களும் மாறுசெய்பவர்களும் சமமானவர்கள் என்று நீங்கள் படிக்கின்றீர்களா?

(38) 68.38. அந்த வேதத்தில் மறுமையில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளதா?

(39) 68.39. அல்லது நீங்கள் விரும்புபவை உங்களுக்கு உண்டு என்ற சத்திய வாக்குறுதிகளை எம்மிடம் பெற்றுள்ளீர்களா?

(40) 68.40. -தூதரே!- இவ்வாறு கூறுபவர்களிடம் நீர் கேட்பீராக: அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளன், என்று.”

(41) 68.41. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து இணைதெய்வங்கள் இருக்கின்றவா? அவை அவர்களையும் நம்பிக்கையாளர்களையும் கூலியில் சமமாக்குகின்றனவா? அவர்களை நம்பிக்கையாளர்களோடு கூலியில் அவர்களின் இணைதெய்வங்கள் சமமாக்குவார்கள் என்ற வாதத்தில் நிச்சயமாக அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் இந்த இணைத்தெய்வங்களை அழைத்து வரட்டும்.

(42) 68.42. மறுமை நாளில் பயங்கரம் வெளிப்பட்டுவிடும். நமது இறைவன் தனது கெண்டைக்காலை திறப்பான். மக்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். நம்பிக்கையாளர்கள் சிரம்பணிவார்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் சிரம்பணிய முடியாமல் எஞ்சியிருப்பார்கள்.

(43) 68.43. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு, هகசேதம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் உலகில் இன்று போலல்லாமல் ஆரோக்கியமாக இருந்தபோது அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

(44) 68.44. -தூதரே!- என்னையும் உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைப் பொய்ப்பிப்போரையும் விட்டுவிடுவீராக. நாம் அவர்களே இது அவர்களுக்கான சூழ்ச்சி மற்றும் விட்டுப் பிடித்தல் என்பதை அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை வேதனையின்பால் இட்டுச் செல்வோம்.

(45) 68.45. அவர்கள் பாவங்களில் உழல்வதற்காக சில காலம் வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக பொய்ப்பிப்பாளர்கள், நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நான் செய்யும் சூழ்ச்சி கடுமையானது. அவர்கள் என்னிடமிருந்து தப்பவோ என் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறவோ முடியாது.

(46) 68.46. -தூதரே!- நீர் அவர்களை எதன்பால் அழைக்கின்றீரோ அதற்காக அவர்களிடம் கூலி வேண்டுகிறீரா? அதனால் அவர்கள் பெரும் சுமையை சுமக்கின்றார்களா? இதுதான் அவர்கள் உம்மைப் புறக்கணிப்பதற்கான காரணமா? உண்மை அதற்கு மாற்றமானது. நீர் அவர்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. பிறகு எந்த விஷயம் உம்மைப் பின்பற்றுவதைவிட்டும் அவர்களைத் தடுக்கிறது?.

(47) 68.47. அல்லது அவர்களிடம் மறைவானவற்றின் ஞானம் இருந்து அதிலிருந்து அவர்கள் உமக்கு எதிராக அவர்கள் விரும்பக்கூடிய ஆதாரங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்களா?

(48) 68.48. -தூதரே!- உம் இறைவன் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்களைப் படிப்படியாக தண்டிப்பதாக தீர்மானித்துள்ளதால் நீர் பொறுமையாக இருப்பீராக. தனது கூட்டத்தை வெறுப்பதில் மீனுடையவர் யூனுஸைப் போன்று அவசரப்பட்டுவிடாதீர். அவர் கடலின் இருளிலும் மீன் வயிற்றின் இருளிலும் துன்பத்திற்குள்ளானவராக தம் இறைவனை அழைத்தார்.

(49) 68.49. நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் அவரைச் சூழ்ந்திருக்காவிட்டால் மீன் அவரை வெட்ட வெளியில் வீசியிருக்கும். அவர் பழிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.

(50) 68.50. அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எனவேதான் அவரை நல்லடியார்களில் ஒருவராக ஆக்கினான்.

(51) 68.51. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பிப்பவர்கள் உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைச் செவியுறும்போது தங்களின் மிகக் கூரான பார்வைகளால் உம்மை வீழ்த்திவிடுவதைப்போன்று பார்க்கிறார்கள். -தங்களின் மனஇச்சையைப் பின்பற்றியவாறும் சத்தியத்தைப் புறக்கணித்தவாறும்- அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக இந்த குர்ஆனைக் கொண்டுவந்துள்ள தூதர் ஒரு பைத்தியக்காரர்தான்.”

(52) 68.52. உம்மீது இறக்கப்பட்ட குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு அறிவுரையாகவும் நினைவூட்டலாகவுமே இருக்கின்றது.