7 - ஸூரா அல்அஃராப் ()

|

(1) 7.1. பார்க்க அல்பகரா என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனம்.

(2) 7.2. தூதரே! கண்ணியமிக்க குர்ஆன் அல்லாஹ் உம்மீது இறக்கிய வேதமாகும். எனவே உமது நெஞ்சில் அது குறித்து இறுக்கமோ சந்தேகமோ ஏற்பட்டு விட வேண்டாம். நீர் மக்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் ஆதாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் இதனை அல்லாஹ் உம்மீது இறக்கியுள்ளான். ஏனெனில் நம்பிக்கையாளர்கள்தாம் நினைவூட்டலைக் கொண்டு பயனடைவார்கள்.

(3) 7.3. மனிதர்களே! உங்கள் இறைவன் உங்கள் மீது இறக்கிய வேதத்தையும் தூதரின் வழிமுறையையும் பின்பற்றுங்கள். ஷைத்தான்கள் அல்லது தீய பாதிரிகள் ஆகியோரில் நீங்கள் நண்பர்களாகக் கருதுவோரின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவர்களது மன இச்சைகள் கூறுவதற்காக அல்லாஹ் இறக்கியதை விட்டு விட்டு அவர்களை நேசம் கொள்கிறீர்கள். நீங்கள் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் சத்தியத்தை விட்டு விட்டு மற்றவற்றிற்கு முன்னுரிமை அளித்திருக்க மாட்டீர்கள்; உங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டிருப்பீர்கள்; அதனைத் தவிர மற்றவற்றை விட்டிருப்பீர்கள்.

(4) 7.4. நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உறுதியாக நிலைத்திருந்த எவ்வளவோ ஊர்களை நம் வேதனையால் அழித்திருக்கின்றோம். அவர்கள் இரவிலோ பகலிலோ அலட்சியத்தில் ஆழ்ந்திருந்த போது கடுமையான நம்முடைய வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களால் வேதனையை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளவும் முடியவில்லை; அவர்களின் பொய்யான தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை.

(5) 7.5. வேதனை இறங்கிய பிறகு அல்லாஹ்வை நிராகரித்த தங்களின் அக்கிரமத்தை ஒத்துக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

(6) 7.6. மறுமை நாளில், எந்தெந்த சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோமோ அவர்களிடம், ‘தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?’ என்று நிச்சயம் விசாரிப்போம். தூதர்கள் தங்களின் தூதை நிறைவேற்றினார்களா? அவர்களது சமூகங்கள் அவர்களுக்கு என்ன பதிலளித்தன என்று தூதர்களிடமும் விசாரித்தே தீருவோம்.

(7) 7.7. படைப்புகள் அனைவரும், நமது அறிவுடனே இவ்வுலகில் செய்த செயல்கள் குறித்து நாம் அவர்களிடம் எடுத்துரைப்போம். அவர்களின் செயல்கள் அனைத்தையும் நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை. எந்த நேரத்திலும் நாம் அவர்களை விட்டு மறைந்தும் இருக்கவில்லை.

(8) 7.8. மறுமை நாளில் செயல்கள் அனைத்தும் எவ்வித அநீதியுமின்றி நீதியுடன் எடைபோடப்படும். எவர்களது நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகி விடுமோ அவர்கள்தாம் விரும்பியதைப் பெற்று பயத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாவர்.

(9) 7.9. எவர்களது தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டைவிட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தன் காரணமாக மறுமை நாளில் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தி இழப்படைபவார்கள்.

(10) 7.10. ஆதமின் மக்களே! நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் நீங்கள் வாழ்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது உங்கள் மீது கடமையாயிருந்தது. ஆனாலும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்தினீர்கள்.

(11) 7.11. மனிதர்களே! நாம் உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். பின்னர் அவருக்கு அழகிய தோற்றமும் வடிவமும் கொடுத்தோம். பின்னர் அவரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அவருக்கு சிரம்பணியுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர. அவன் கர்வம் மற்றும் பிடிவாதம் காரணமாக சிரம்பணிய மறுத்தான்.

(12) 7.12. அல்லாஹ் இப்லீஸைக் கண்டித்தவாறு கேட்டான்: “என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிவதிலிருந்து எது உன்னைத் தடுத்தது?” இப்லீஸ் தன் இறைவனிடம் பின்வருமாறு பதில் கூறினான்: “நான் அவரைவிடச் சிறந்தவன் என்பதே என்னைத் தடுத்தது. நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். அவரையோ மண்ணிலிருந்துதான் படைத்தாய். நெருப்பு மண்ணைவிடச் சிறந்தது.”

(13) 7.13. அல்லாஹ் அவனிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து இறங்கிவிடு. இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமையில்லை. ஏனெனில் இது தூய்மையானவர்கள் வசிக்கும் இடமாகும். இங்கு வசிப்பதற்கு உனக்கு அனுமதியில்லை. இப்லீஸே! நீ ஆதமை விடச் சிறந்தவன் என்று உன்னை நினைத்தாலும் நிச்சயமாக நீ இழிவுற்ற அற்பர்களில் ஆகிவிட்டாய்.”

(14) 7.14. இப்லீஸ் கேட்டான்: “மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு. நான் மனிதர்களில் என்னால் வழிகெடுக்க முடிந்தவர்களை வழிகெடுத்துவிடுவேன்.“

(15) 7.15. அதற்கு அல்லாஹ் கூறினான்: “இப்லீஸே, முதல் சூர் ஊதப்படும் தினம் மரணம் விதிக்கப்பட்டுள்ள அவகாசம் வழங்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன். அப்போது படைப்புகள் அனைத்தும் மரணித்து அல்லாஹ் மாத்திரமே எஞ்சியருப்பான்.”

(16) 7.16. இப்லீஸ் கூறினான்: “உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நான் ஆதமுக்கு சிரம்பணிய மறுத்ததனால் நீ என்னை வழிகெடுத்துவிட்ட காரணத்தால் ஆதமுடைய மக்களை வழிகெடுப்பதற்காக உன்னுடைய நேரான வழியின் மீது அமர்ந்து கொள்வேன். அவர்களது தந்தை ஆதமுக்கு சிரம்பணியாமல் நான் வழிகெட்டது போன்று அவர்களையும் நேரான பாதையை விட்டும் திசைதிருப்பி வழிகெடுத்தே தீருவேன்.”

(17) 7.17. “எல்லா புறங்களிலிருந்தும் அவர்களிடம் நான் வருவேன். அவர்களை மறுமையின் மீது பற்றற்றவர்களாக்கி உலகத்தின் மீது மோகம் கொள்ள வைப்பேன். அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டுபண்ணுவேன். அவர்களின் மனஇச்சைகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுவேன். நன்றி மறக்குமாறு நான் அவர்களுக்குக் கூறுவதனால் அவர்களில் பெரும்பாலோரை உனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக நீ காணமாட்டாய்.”

(18) 7.18. அல்லாஹ் அவனிடம் கூறினான்: “என் அருளிலிருந்து விரட்டப்பட்டவனாக, இழிவடைந்தவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேறி விடு. மறுமையில் உன்னையும் உன்னைப் பின்பற்றி உனக்கு வழிப்பட்டு தனது இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்வோரையும் கொண்டு நரகத்தை நான் நிரப்புவேன்.”

(19) 7.19. அல்லாஹ் ஆதமிடம் கூறினான்: “ஆதமே! நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கு தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியவற்றை உண்ணுங்கள். இந்த மரத்திலிருந்து (அவர்களுக்கு ஒரு மரத்தை அல்லாஹ் குறிப்பிட்டான்.) மட்டும் உண்டுவிடாதீர்கள். நான் தடுத்ததற்குப் பிறகும் நீங்கள் அதிலிருந்து உண்டு விட்டால் என் வரம்புகளை மீறியவர்களாகி விடுவீர்கள்.

(20) 7.20. அவர்களிருவரை விட்டும் மறைக்கப்பட்டுள்ள அவர்களின் வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக இப்லீஸ் அவர்கள் இருவருக்கும் ஊசலாட்ட வார்த்தையை உண்டாக்கினான். அவர்கள் இருவரிடமும் கூறினான்: “நீங்கள் இருவரும் வானவர்களாவதையும் சுவனத்தில் நிரந்தரமாக இருப்பவர்களாக ஆகிவிடுவிடுவதையும் விரும்பாததனால்தான் இந்த மரத்திலிருந்து உண்பதை விட்டும் உங்களை அல்லாஹ் தடுத்துள்ளான்.”

(21) 7.21. அவன் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினான்: “நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் வழங்கிய ஆலோசனையில் விசுவாசம் மிக்கவனாவேன்.”

(22) 7.22. ஏமாற்றி அவர்களின் உயர்ந்த இடத்திலிருந்து அவர்களை இறக்கினான். தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து அவர்கள் உண்டபோது அவர்கள் இருவருடைய வெட்கத்தலங்களும் வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைக்க முயற்சித்தார்கள். அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இந்த மரத்திலிருந்து உண்ணக் கூடாது என்று நான் உங்களைத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். எனவே அவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?

(23) 7.23. ஆதமும் ஹவ்வாவும் பிரார்த்தித்தார்கள்: “எமது இறைவா! குறிப்பிட்ட மரத்திலிருந்து உண்ண வேண்டாம் என நீ தடுத்ததைச் செய்து, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது கருணை காட்டவில்லையெனில் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உள்ள எமது பங்கைத் தவறவிட்டு நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்.”

(24) 7.24. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் இப்லீசுக்கும் அல்லாஹ் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடம் உண்டு. குறிப்பிட்ட தவணைவரை அதிலுள்ளவற்றை அனுபவிக்கவும் முடியும்.”

(25) 7.25. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அல்லாஹ் கூறினான்: “இப்பூமியிலே அல்லாஹ் நிர்ணயித்த தவணை வரை நீங்கள் வாழ்வீர்கள். இங்குதான் மரணிப்பீர்கள், அடக்கம் செய்யப்படுவீர்கள். உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்தே நீங்கள் மீண்டும் எழுப்பபடுவீர்கள்.

(26) 7.26. ஆதமுடைய மக்களே! உங்களின் வெட்கத்தலங்களை மறைப்பதற்கு அத்தியவசியமான ஆடைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களிடத்தில் உங்களை அழகுபடுத்தும் பரிபூரணமான ஆடைகளையும் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நீங்கள் கடைப்பிடிக்கும் தக்வா என்னும் ஆடையே வெளிரங்கமான இந்த ஆடையை விட மிகச் சிறந்ததாகும். மேற்குறிப்பிட்ட இந்த ஆடை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். இது, அவன் உங்கள் மீது புரிந்த அருட்கொடைகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

(27) 7.27. ஆதமுடைய மக்களே! பாவங்களை அலங்கரித்துக் காட்டி வெட்கத்தலங்களை மறைக்கும் வெளிரங்கமான ஆடையையோ தக்வா எனும் ஆடையையோ விட்டுவிடுமாறு ஷைத்தான் பாவத்தை உங்களுக்கு அலங்கரித்து ஏமாற்றிவிட வேண்டாம். தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்பதை அலங்கரித்துக் காட்டி உங்களின் தந்தையையும் தாயையும் அவன் ஏமாற்றி அதன் விளைவாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. ஷைத்தானும் அவனுடைய சந்ததிகளும் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களால் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவனிடமிருந்தும் அவனுடைய சந்ததிகளிடமிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தானை நேசர்களாக ஆக்கியுள்ளோம். நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்த முடியாது.

(28) 7.28. இணைவைப்பாளர்கள் இணைவைப்பு, நிர்வாணமாக கஃபாவை வலம் வருதல் போன்ற ஏதேனும் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, தங்கள் முன்னோர்களும் இவ்வாறே செய்து கொண்டிருந்ததாகவும், அல்லாஹ்தான் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான் என்றும் காரணம் கூறுகின்றனர். முஹம்மதே! நீர் அவர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “அல்லாஹ் பாவங்கள் புரியும்படி ஏவமாட்டான். மாறாக பாவங்கள் புரிவதைத் தடுக்கிறான். அவ்வாறிருக்கும் போது அவன்தான் பாவங்களை ஏவினான் என எவ்வாறு கூறலாம்? இணைவைப்பாளர்களே! நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?”

(29) 7.29. முஹம்மதே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீதியாக நடக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். மானக்கேடானவற்றையும் தீயவற்றையும் அவன் கட்டளையிடுவதில்லை. பொதுவாகவும் குறிப்பாக பள்ளிவாயில்களிலும் அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை உரித்தாக்க வேண்டும், அவனிடம் மட்டுமே கீழ்ப்படிந்து பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஆரம்பத்தில் இல்லாததிலிருந்து உங்களைப் படைத்தது போன்று மீண்டும் உயிரோடு உங்களைக் கொண்டுவருவான். உங்களை ஆரம்பத்தில் படைத்தவன் உங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஆற்றலுடையவன்.

(30) 7.30. அல்லாஹ் மனிதர்களை இரு பிரிவினராக ஆக்கியுள்ளான். அவர்களில் ஒரு பிரிவினருக்கு நேர்வழிகாட்டி நேர்வழிக்கான வழிகளையும் அவர்களுக்கு இலகுபடுத்தி தடைகளையும் அகற்றியுள்ளான். மற்றொரு பிரிவினர் மீது நேர்வழியை விட்டும் வழிகேடு உறுதியாகிவிட்டது. அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமையினால் அந்த ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டார்கள். தாங்கள் நேர்வழியில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

(31) 7.31. ஆதமுடைய மக்களே! உங்களின் மறைவிடங்களை மறைத்து, உங்களை அழகுபடுத்தும் தூய்மையான ஆடையை தொழுகையின்போதும் தவாபின் போதும் அணிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனுமதித்த தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள். அவற்றில் நடுநிலையை மீறாதீர்கள். அனுமதிக்கப்பட்டதை மீறி தடைசெய்யப்பட்டதற்கு சென்றுவிடாதீர்கள். நிச்சயமாக நடுநிலையைப் பேணாமல் வரம்புமீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை.

(32) 7.32. தூதரே! அல்லாஹ் அனுமதித்த ஆடையையும் தூய்மையான உணவுகளையும் தடைசெய்யும் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “உங்களை அழகுபடுத்தக்கூடிய ஆடையை உங்களுக்குத் தடைசெய்தது யார்? அவன் வழங்கிய தூய்மையான உணவுகளையும் பானங்களையும் பிற பொருள்களையும் உங்களுக்குத் தடைசெய்தது யார்? தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூய்மையான இந்த பொருள்கள் இவ்வுலகில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியவையாகும். இவ்வுலகில் நம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் அதில் பங்கு பெற்றாலும் மறுமை நாளில் இவை நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உரியவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு அவற்றில் எந்தப் பங்கும் கிடைக்காது. ஏனெனில் சுவனம் நிராகரிப்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்கத்தின் மூலம் நாம் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றோம். அவர்கள்தாம் இவற்றைக் கொண்டு பயனடைவார்கள்.

(33) 7.33. தூதரே! அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்யும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது வெளிப்படையான மறைமுகமான மானக்கேடானவற்றைத் தடைசெய்துள்ளான். அவை அருவருப்பான பாவங்களாகும். அனைத்துப் பாவங்களையும் மக்களின் உயிர்களிலும் செல்வங்களிலும் மானங்களிலும் வரம்புமீறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குவதையும் அவன் தடைசெய்துள்ளான். அதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவனுடைய பெயர்களில், பண்புகளில், செயல்களில் மார்க்கத்தில் அறிவின்றி அவன் மீது அவதூறு கூறுவதையும் அவன் தடைசெய்துள்ளான்.

(34) 7.34. ஒவ்வொரு தலைமுறையின் காலக்கெடுவும் காலம் குறிப்பிடப்பட்டதாகும். நிர்ணயிக்கப்பட்ட அவர்களின் தவணை வந்துவிட்டால் அதளை விட்டும் சிறிதளவேனும் பிந்தவோ முந்தவோ மாட்டார்கள்.

(35) 7.35. ஆதமுடைய மக்களே! உங்களின் சமூகங்களிலிருந்து என் தூதர்கள் உங்களிடம் வந்து நான் அவர்களுக்கு இறக்கிய எனது வேதத்தை உங்களுக்கு ஓதிக் காட்டினால் நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் அச்சம்கொள்ள மாட்டார்கள். தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்

(36) 7.36. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரிப்பவர்கள், கர்வத்தினால் தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததன்படி செயல்பட மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.

(37) 7.37. அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அல்லது குறை கூறி அல்லது அவன் கூறாததைக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது நேரான வழியைக் காட்டும் அவனுடைய வசனங்களை மறுப்பவனைவிட அக்கிரமக்காரன் வேறு யாருமில்லை. இந்த பண்புகளை உடையவர்கள், இவ்வுலக இன்பங்களில் லவ்ஹுல் மஃபூல் என்னும் ஏட்டில் தமக்கு எழுதப்பட்ட பங்கான நன்மை தீமையைப் பெறுவார்கள். இறுதியில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் அவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வரும் போது அவர்களைக் கண்டித்தவாறு அவர்களிடம் கேட்பார்கள், “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே? உங்களுக்குப் பயனளிப்பதற்காக அவற்றை அழையுங்கள்.” இணைவைப்பாளர்கள் வானவர்களிடம் கூறுவார்கள், “நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்களைவிட்டும் காணாமல் போய்விட்டன. அவை எங்கே இருக்கின்றன? என்று எங்களுக்குத் தெரியாது. தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் ஏற்றுக் கொள்வது அவருக்கு எதிரான ஆதாரமாகவே அமையும். அது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

(38) 7.38. வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “இணைவைப்பாளர்களே! உங்களுக்கு முன் வழிகெட்ட, நிராகரித்த மனித, ஜின் இனத்தாருடன் சேர்ந்து நரகத்தில் நுழைந்துவிடுங்கள்.” அந்த சமூகங்களில் ஏதேனும் ஒரு சமூகம் நுழையும் போதெல்லாம் தமக்கு முன் நரகத்தில் இருக்கும் தம் சகோதர சமூகத்தை சபிக்கும். அவையனைத்தும் ஒன்று சேர்ந்தவுடன் இறுதியாக நுழைந்த சமூகமான கீழ்மட்டத்தினர்களும் பின்பற்றியோரும், முதலாவதாக நுழைந்த சமூகமான பெரியவர்களையும் தலைவர்களையும் பார்த்துக் கூறும்: “எங்கள் இறைவா! இந்த தலைவர்கள் தாம் எங்களை நேர்வழியை விட்டும் வழிகெடுத்துவிட்டார்கள். அவர்கள் எங்களுக்கு வழிகேட்டை அலங்கரித்துக் காட்டியதற்காக அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக.” அதற்கு அல்லாஹ் மறுத்து கூறுவான்: “உங்களில் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் வேதனையில் இரு மடங்கு பங்கு உண்டு. ஆயினும் நீங்கள் அவற்றை அறிந்து கொள்ளாமலும் புரியாமலும் உள்ளீர்கள்.”

(39) 7.39. பின்பற்றப்பட்ட தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறுவார்கள்: “வேதனை குறைக்கப்படும் அளவுக்கு எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. நீங்கள் செய்த செயல்களே கவனத்தில் கொள்ளப்படும். அசத்தியத்தைப் பின்பற்றியதில் நீங்கள் எந்தச் சாக்குப் போக்கும் கூறமுடியாது. நாம் அனுபவிப்பதைப் போலவே, நீங்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் வேதனையை அனுபவியுங்கள்.”

(40) 7.40. நம்முடைய தெளிவான வசனங்களைப் பொய்யெனக் கூறி அவற்றுக்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்கள் எல்லா நன்மைகளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிராகரிப்பினால், அவர்களது செயல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. பெரும் மிருகங்களில் ஒன்றாகிய ஒட்டகம் மிகவும் சிறிய பொருட்களில் ஒன்றாகிய ஊசியின் துவாரத்தின் வழியே நுழையும் வரை அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். இது எவ்வாறு சாத்தியமற்றதோ அது போல் அவர்கள் சுவனம் நுழைவதும் சாத்தியமற்றதே. இவ்வாறே பெரும் பாவிகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.

(41) 7.41. கர்வம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் படுக்கை விரிப்புகள் உண்டு. அவர்களுக்கு மேலே நெருப்பிலான போர்வைகள் போர்த்தப்பட்டிருக்கும். அல்லாஹ்வை நிராகரித்து புறக்கணித்து அவனது வரம்புகளை மீறியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகிறோம்.

(42) 7.42. தங்களின் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தங்களால் இயன்ற அளவு - அல்லாஹ் ஒருவர் மீது செய்ய முடிந்த அளவுக்கே பொறுப்பு சாட்டுகிறான் - நற்செயல் புரிந்தவர்கள்தாம் சொர்க்க வாசிகளாவர். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

(43) 7.43. சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பரிபூரணமான அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருக்கும் பகைமையையும் குரோதத்தையும் நீக்கிவிடுவதும், அவர்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்வதுமாகும். அல்லாஹ் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை ஒத்துக் கொண்டவர்களாக அவர்கள் கூறுவார்கள்: “இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்த நற்செயலைப் புரிவதற்கு பாக்கியம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களுக்குப் பாக்கியம் அளிக்கவில்லையென்றால் நாங்களாகவே இதனைப் பெற்றிருக்க முடியாது. எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தையும் வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் உண்மையையே எங்களிடம் கொண்டு வந்தார்கள்.” அப்பொழுது ஒரு அழைப்பாளர் அவர்களை நோக்கி கூறுவார்: “இதுதான் உலகில் எனது தூதர்கள் உங்களுக்குக் கூறிய சுவர்க்கமாகும். தனது திருப்பொருத்தத்தை நாடி நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக உங்களுக்கு அவன் அதனை வழங்கியுள்ளான்”.

(44) 7.44. சுவனவாசிகள், நரகவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் நுழைந்த பிறகு சுவனவாசிகள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த சுவனத்தை நாங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டோம். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நிராகரிப்பாளர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த நரகத்தை நீங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டீர்களா?” அதற்கு நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நரகத்தை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம்.” அப்பொழுது ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்: “அல்லாஹ் அநியாயக்காரர்களை தன் அருளை விட்டும் தூரமாக்குவானாக. உலக வாழ்வில் அல்லாஹ் தன் அருள் வாயில்களை அவர்களுக்காகத் திறந்து வைத்திருந்தான். ஆயினும் அவர்களை அவற்றை விட்டும் முகந்திருப்பிக் கொண்டார்கள்.

(45) 7.45. இந்த அநியாயக்காரர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தியப் பாதை யாரும் செல்ல முடியாதவாறு கோணலாகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் மறுமை நாளை நிராகரித்தோர், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாதோர்.

(46) 7.46. சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற இந்த இரு பிரிவினருக்குமிடையே அஃராஃப் என்று அழைக்கப்படும் உயரமான ஒரு தடுப்பு உண்டு. அதன் மீது நற்செயல்களும் தீயசெயல்களும் சமமான சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சுவனவாசிகளை அவர்களின் பொலிவான முக அடையாளங்களைக் கொண்டும், நரகவாசிகளை அவர்களின் கருமையான முக அடையாளங்களைக் கொண்டும் அறிந்துகெள்வார்கள். இவர்கள் சுவனவாசிகளை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் அஃராபில் உள்ள அவர்கள் இன்னும் சுவனத்தில் நுழையவேயில்லை. அல்லாஹ்வின் அருளினால் அதில் நுழைவதை எதிர்பார்த்த வண்ணமே இருப்பார்கள்.

(47) 7.47. அஃராப்வாசிகளின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனையைப் பார்த்து, “எங்கள் இறைவா! நிராகரித்து, இணைவைத்த இந்த அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தனை செய்வார்கள்.

(48) 7.48. அஃராப்வாசிகள் நரகவாசிகளான சில நிராகரிப்பாளர்களை இருள் படிந்த அவர்களின் முக அடையாளங்களைக் கொண்டும் நீலம் பூத்த அவர்களின் கண்களைக் கொண்டும் அறிந்து கூறுவார்கள்: “நீங்கள் சேகரித்து வைத்த அதிகமான சொத்துக்களும் ஆட்களும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை. கர்வம் கொண்டு சத்தியத்தை நீங்கள் புறக்கணித்ததும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை.”

(49) 7.49. நிராகரிப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவான்: “இவர்களைக் குறித்துதானே ‘அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியவே மாட்டான்’ என்று சத்தியம் செய்து கூறினீர்கள்.” நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடுங்கள். எதிர்காலத்தை எண்ணி உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் நிரந்தமான இன்பத்தினால் உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலையடையவும் மாட்டீர்கள்.”

(50) 7.50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் கோரிக்கை வைத்தவர்களாகக் கூறுவார்கள்: “சொர்க்கவாசிகளே! எங்கள் மீது நீரை அள்ளி ஊற்றுங்கள். அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து எங்களுக்கும் வழங்குங்கள்.” சொர்க்கவாசிகள் கூறுவார்கள்: “நிராகரிப்பாளர்கள் நிராகரித்த காரணத்தால் அவையிரண்டையும் அவர்கள் மீது அல்லாஹ் தடைசெய்துள்ளான். அவன் உங்கள் மீது தடைசெய்தவற்றின் மூலம் நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவமாட்டோம்.

(51) 7.51. இந்த நிராகரிப்பாளர்கள்தாம் தங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் ஆக்கினார்கள். உலக வாழ்வின் அலங்காரங்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் மறுமை நாளின் சந்திப்பை மறந்து அதற்காக செயல்படாமலும் தயாராகாமலும் இருந்ததைப் போலவும், அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் உண்மையென அறிந்துகொண்டே அவற்றை நிராகரித்ததைப் போலவும் அல்லாஹ்வும் மறுமை நாளில் அவர்களை மறந்து, வேதனையில் சூழலுமாறு அவர்களை விட்டுவிடுவான்.

(52) 7.52. முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனை நாம் அவர்களிடம் கொண்டுவந்தோம். நம் புறத்திலுள்ள அறிவைக் கொண்டு நாம் அதனைத் தெளிவுபடுத்திவிட்டோம். இது நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியைக் காட்டக்கூடியதாகும். மேலும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளுக்கான வழிகாட்டல் இதில் உள்ளடங்கியுள்ளதால் முஃமின்களுக்கு அது அருளும் ஆகும்.

(53) 7.53. இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வேதனை மிக்க தண்டனை கிடைப்பதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வேதனையும் நம்பிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டிருந்த நற்கூலியும் வரும் நாளில் இவ்வுலகில் குர்ஆனை மறந்து அதன்படி செயல்படாதவர்கள் கூறுவார்கள்: “எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு எங்களிடம் வந்தார்கள். அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தோ! வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்துரை செய்பவர்கள் இருக்க வேண்டுமே! அந்தோ! நாம் மீண்டும் உலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு நாம் செய்த தீய செயல்களுக்குப் பகரமாக தப்பிக்கொள்வதற்கான நற்செயல்களில் ஈடுபட வேண்டுமே!.” இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பினால் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக் கொண்டார்கள். அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். அவை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

(54) 7.54. மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். நம்மால் அது எவ்வாறு என்பதை உணர்ந்து கொள்ள முடியாது அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாக தாமதமின்றி பின்தொடர்கிறது. இது சென்றுவிட்டால் அது நுழைந்து விடும். அவன் சூரியனையும் சந்திரனையும் படைத்துள்ளான். வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கிறானா? அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. அவன் நலவும் உபகாரமும் மகத்தானதும் அதிகமானதுமாகும். கண்ணியம், பரிபூரணம் ஆகிய பண்புகளை உடைய அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.

(55) 7.55. நம்பிக்கையாளர்களே! உங்கள் இறைவனை பூரண பணிவோடும், இரகசியமாகவும் முகஸ்துதி இல்லாமலும் பிரார்த்தனையில் மற்றவர்களை அவனுக்கு இணையாக்காமலும் உளத்தூய்மையோடு அழையுங்கள். நிச்சயமாக, பிரார்த்தனையில் தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை. இணைவைப்பாளர்களைப் போல், அல்லாஹ்வுடன் மற்றவர்களிடமும் பிரார்த்தனை செய்வது பாரதூரமான வரம்பு மீறல்களிலுள்ளதாகும்.

(56) 7.56. தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்தி அவனை மாத்திரம் வழிபடுவதன் மூலம் செழிப்பாக்கிய பிறகு பாவங்கள் புரிந்து அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சியவர்களாக, அவனுடைய நன்மையில் ஆசைகொண்டவர்களாக அவனையே அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே இருக்கின்றது. எனவே நன்மை செய்பவர்களில் ஆகிவிடுங்கள்.

(57) 7.57. அல்லாஹ்தான் காற்றை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவையாக அனுப்புகிறான். காற்று, நீர் நிரம்பிய கனமான மேகங்களைச் சுமந்தால் நாம் அந்த மேகத்தை பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஊருக்குக் கொண்டு சென்று அங்கு மழையைப் பொழியச் செய்கின்றோம். அந்த மழையின் மூலம் எல்லா வகையான விளைச்சல்களையும் வெளிப்படுத்துகின்றோம். விளைச்சலை வெளிப்படுத்துவது போன்றே நாம் இறந்தவர்களை அடக்கஸ்த்தலத்திலிருந்து உயிரோடு வெளிப்படுத்துகின்றோம். மனிதர்களே! அல்லாஹ்வின் ஆற்றலையும் வியக்கத்தக்க செயலையும், அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டே நாம் இவ்வாறு செய்தோம்.

(58) 7.58. நல்ல நிலம் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்ல, முழுமையான விளைச்சலை வெளிப்படுத்தும். இவ்வாறே நம்பிக்கையாளன் அறிவுரையைச் செவியேற்கிறான். அதனைக் கொண்டு பயனடைகிறான், நற்செயல்கள் புரிகிறான். உவர்ப்புத் தன்மையுடைய சதுப்பு நிலம் மோசமானவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாது. அதில் எவ்வித நலவுமில்லை. இவ்வாறே நிராகரிப்பாளன் அறிவுரைகளைக் கொண்டு பயனடைவதில்லை. அவை அவனுக்குப் பயனளிக்கும் நற்செயல்களையும் அவனிடத்தில் உருவாக்கமாட்டா. இங்கு அற்புதமான பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டது போன்று, உண்மையை நிரூபிப்பதற்காக அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் பல்வேறு விதங்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்காமல் நன்றி செலுத்தி தமது இறைவனுக்குக் கட்டுப்படும் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.

(59) 7.59. நாம் நூஹை அவருடைய சமூகத்தின்பால் அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பதன் பக்கம் அவர்களை அழைத்தார். அவர் கூறினார்: “என் சமூகமே அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நான் அஞ்சுகிறேன்.”

(60) 7.60. அவரது சமூகத்தின் தலைவர்களும் பெரியவர்களும் அவரிடம் கூறினார்கள்: “நூஹே! நாங்கள் உம்மை சத்தியத்தை விட்டும் தெளிவான தூரத்திலே காண்கிறோம்.”

(61) 7.61. அவர் தம் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவதுபோல நான் வழிகெட்டவன் அல்ல. நான் என் இறைவன் காட்டிய நேரான வழியில் இருக்கின்றேன். என் இறைவனும் உங்கள் இறைவனும் அகிலுத்திலுள்ள அனைத்திற்கும் இறைவனுமான அல்லாஹ்விடமிருந்து உங்களின்பால் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

(62) 7.62. அல்லாஹ் எனக்குக் கொடுத்து அனுப்பிய இறைச்செய்தியை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்கும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளிலும் உங்களுக்கு ஆர்வமூட்டுவதன் மூலமும், அவன் தடுத்துள்ளவற்றில் ஈடுபடுவதையும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளைக் கொண்டு அச்சமூட்டுவதன் மூலமும் உங்களுக்கு நலவையே நான் நாடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாததை அவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் நான் அறிவேன்.

(63) 7.63. உங்களுக்கு அறிமுகமான உங்களிலுள்ள ஒரு மனிதர் வாயிலாக உங்கள் இறைவனிடமிருந்து வஹியும் அறிவுரையும் வந்துள்ளன என்பதற்காகவா ஆச்சரியப்படுகிறீர்கள்? அவர் உங்களிடையே வளர்ந்தவர்தாம். பொய்யரோ வழிகெட்டவரோ வேறொரு இனத்தைச் சேர்ந்தவரோ அல்ல. நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையைக் கொண்டு உங்களை அச்சமூட்டவும் நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டால் உங்கள் மீது கருணை காட்டப்படலாம் என்பதற்காகவும் அவர் உங்களிடம் வந்துள்ளார்.

(64) 7.64. அவரது சமூகத்தினர் அவர் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவரை நிராகரித்தனர். மாறாக தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்களை அழித்து விடும்படி அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். நாம் அவரையும் அவருடன் கப்பலில் ஏறிய நம்பிக்கையாளர்களையும் மூழ்காது காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்து அதில் நிலைத்திருந்தவர்களை, தண்டிப்பதற்காக இறக்கப்பட்ட வெள்ளத்தினால் மூழ்கடித்து அழித்து விட்டோம். நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தை விட்டும் குருடாகவே இருந்தன.

(65) 7.65. ஆத் சமூகத்தாரிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினோம். அவர் ஹுத் (அலை) ஆவார். அவர் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சமாட்டீர்களா?

(66) 7.66. அவரது சமூகத்தில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி சிலைகளை விட்டு விட வேண்டும் என்று நீர் எங்களை அழைத்த போது நீர் புத்திக் கோளாறு, மடமையிலுமே இருக்கின்றீர் என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொண்டோம். நீர் தூதர் என்ற வாதத்தில் நீர் பொய்யர் என்பதாகவே நாம் கருதுகின்றோம்.”

(67) 7.67. ஹூத் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்: “என் சமூகமே! எனக்கு புத்தி கோளாறோ, மடமையோ இல்லை. மாறாக நிச்சயமாக அகிலமனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.”

(68) 7.68. அல்லாஹ் எனக்கு உங்களிடம் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்ட ஏகத்துவத்தையும் சட்டதிட்டங்களையுமே நான் எடுத்துரைக்கிறேன். நான் உங்கள் எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றில் உங்களுக்கு விசுவாசம்மிக்கவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

(69) 7.69. வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள்.

(70) 7.70. அவருடைய சமூகத்தார் அவரிம் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டுவிட வேண்டும் என்று கூறுவதற்காகவா எங்களிடம் வந்துள்ளீர்? உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நேரும் என நீர் எச்சரிக்கும் வேதனையைக் கொண்டுவாரும்.”

(71) 7.71. ஹூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் வேதனையையும் கோபத்தையும் நீங்கள் உங்கள் மீது கடமையாக்கிக் கொண்டீர்கள். அது சந்தேகமில்லாமல் நிச்சயம் உங்களை அடைந்தே தீரும். எவ்வித யதார்த்தமும் இன்றி நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக பெயர்சூட்டிக்கொண்ட சிலைகளுக்காகவா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவைகளுக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதற்கு ஆதாரம் கூறும் வகையில் அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் அவசரப்படும் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது நிகழ்ந்தே தீரும்.

(72) 7.72. ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்தவர்களை அடியோடு அழித்துவிட்டோம். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. மாறாக நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். வேதனைக்குத் தகுதியாகிவிட்டார்கள்.

(73) 7.73. நாம் ஸமூத் சமூகத்திற்கு அவர்களது சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதன்பால் அவர்களை அழைத்தார். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரமும் உங்களிடம் வந்துள்ளது. அது பாறையிலிருந்து வெளியான பெண் ஒட்டகமாகும். அது நீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. உங்களுக்கும் குடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உண்டு. அதனை அல்லாஹ்வின் பூமியில் மேய விடுங்கள். அதனைப் பராமரிப்பதில் உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள். தீங்கிழைத்தால் அதன் காரணமாக வேதனை மிக்க தண்டனை உங்களை அடையும்.

(74) 7.74. ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.

(75) 7.75. அவரது சமூகத்தில் கர்வம் கொண்ட தலைவர்களும் பெரியவர்களும் தாங்கள் பலவீனர்களாகக் கருதிய நம்பிக்கையாளர்களிடம் கேட்டார்கள்: “நம்பிக்கையாளர்களே! ஸாலிஹ் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்களா?” பலவீனமாக கருதப்பட்ட நம்பிக்கையாளர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் எதைக் கொண்டு எங்களிடம் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள்உண்மைப்படுத்துகிறோம், ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் அடிபணிகிறோம். அதன் சட்டங்களின்படி செயல்படுவோம்.”

(76) 7.76. அவரது சமூகத்தில் கர்வம் கொண்டவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏற்றுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒருபோதும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவோ அதன்படி செயல்படவோ மாட்டோம்.”

(77) 7.77. எந்த ஒட்டகத்துக்கு அவர்கள் எத்தீங்கும் இழைத்துவிடக் கூடாது என அவர் அவர்களைத் தடைசெய்தாரோ அதனை, அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் கர்வம் கொண்டு அறுத்து விட்டார்கள். பரிகாசமாகவும் ஸாலிஹ் எச்சரிக்கும் விஷயம் சாத்தியமற்றது என்று கருதியும் அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் எச்சரித்த வேதனை மிக்க தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்.”

(78) 7.78. நிராகரிப்பாளர்கள் அவசரமாக விரும்பிய வேதனை அவர்களிடம் வந்தது. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. பூமியில் முகங்குப்புற வீழ்ந்து கிடப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களில் எவரும் அதிலிருந்து தப்ப முடியவில்லை.

(79) 7.79. தனது சமூகம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கையிழந்த பிறகு ஸாலிஹ் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டதை நான் எடுத்துரைத்துவிட்டேன். உங்களுக்கு அச்சமூட்டி, ஆர்வமூட்டி அறிவுரை கூறிவிட்டேன். ஆயினும் நன்மையின்பால் ஆர்வமூட்டி தீமையை விட்டுத் தடுப்பதில் ஆர்வமுள்ள நலம் விரும்பிகளை நீங்கள் விரும்புவதில்லை.”

(80) 7.80. லூத் தனது சமூகத்தைக் கண்டித்தவராகக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக: “ஓரினச் சேர்க்கை என்னும் அருவருப்பான காரியத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? நீங்கள் புதிதாகஉருவாக்கியுள்ள இந்தக் காரியத்தில் உங்களுக்கு முன் எவரும் ஈடுபடவில்லை.

(81) 7.81. உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக உங்களுக்காக படைக்கப்பட்ட பெண்களை விடுத்து ஆண்களிடம் செல்கிறீர்கள். அறிவுக்கும் இயல்புக்கும் மார்க்கத்திற்கும் மாற்றமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களது இச்செயலில் பகுத்தறிவு, கேட்டறிவு, மனித இயல்பு ஆகிய எதனையும் பின்பற்றவில்லை. மனித வரம்பை மீறி ஆரோக்கியமான சிந்தனை, நல் இயல்பை விட்டும் நெறிபிறழ்ந்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிவிட்டீர்கள்.

(82) 7.82. அருவருப்பான இந்த காரியத்தை விட்டும் அவர் தம் சமூகத்தினரைத் தடுத்த போது சத்தியத்தைப் புறக்கணித்தவர்களாகக் கூறினார்கள்: “லூத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நம்முடைய இந்த செயலை விட்டும் அவர்கள் பரிசுத்தமானவர்களாம். எனவே நம்மிடையே தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.”

(83) 7.83. இரவு நேரத்தில் வேதனை நிகழும் ஊரிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டு அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம். ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. அவளும் தனது சமூகத்துடன் எஞ்சியிருந்தாள். வேதனை அவளையும் சூழ்ந்துகொண்டது. எனவே அவர்களைத் தாக்கிய வேதனை இவளையும் தாக்கியது.

(84) 7.84. நாம் அவர்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்தோம். களி மண்ணாலான கற்களைக் கொண்டு அவர்களை எறிந்தோம். அந்த ஊரை தலைகீழாக்கிவிட்டோம். தூதரே! குற்றவாளிகளான லூத்தின் சமூகத்தினரின் முடிவு என்னவாயிற்று? என்பதை சிந்தித்துப் பாரும். அழிவும் நிரந்தர இழிவுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.

(85) 7.85. மத்யன் சமூகத்தாரிடம் அவர்களது சகோதரர் ஸுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் தெளிவான ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அளவையும் நிறுவையையும் நிறைவாக்கி மக்களின் உரிமைகளை முழுமையாக அவர்களுக்கு வழங்கிவிடுங்கள். குறையுடைய பொருட்களை மக்களுக்கு வழங்கி அதில் குறைத்து அல்லது அவர்களை ஏமாற்றி குறை செய்து விடாதீர்கள். தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்திய பிறகு நிராகரிப்பைக் கொண்டும் பாவங்களைக் கொண்டும் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் உங்களுக்குச் சிறந்ததும் பயனளிக்கக்கூடியதுமாகும். ஏனெனில் அல்லாஹ் தடுத்துள்ளான் என்பதற்காக விலகி பாவங்களை விட்டு விடுவதும், ஏவப்பட்டதைச் செய்து அல்லாஹ்வை நெருங்குவதும் அதில் உள்ளது.

(86) 7.86. மக்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோணலை ஏற்படுத்த நாடியவர்களாக நேர்வழியை விரும்புபவர்களை மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காகவும் அவர்களைப் பயமுறுத்தியவாறு, வழிகளில் அமராதீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்தீர்கள். அவனே உங்களை அதிகப்படுத்தினான். உங்களுக்கு முன்னர் பூமியில் குழப்பம் செய்தோரின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அழிவும் நாசமுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.

(87) 7.87. உங்களில் ஒரு கூட்டத்தினர் என் இறைவனிடமிருந்து நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியும் மற்றொரு கூட்டத்தினர் அதனை உண்மைப்படுத்தவில்லையென்றால். நிராகரிப்பாளர்களே! இரு பிரிவினருக்கும் அல்லாஹ் என்ன தீர்ப்பை அளிக்கப் போகின்றான் என்பதை எதிர்பாருங்கள். அவனே தீர்ப்புக் கூறுவதில் சிறந்தவனும் மிகவும் நீதமானவனுமாவான்.

(88) 7.88. ஷு ஐபின் சமூகத்தில் கர்வம் கொண்ட பெரியவர்களும் தலைவர்களும் கூறினார்கள்: “ ஷு ஐபே! உம்மையும், உம்மை உண்மைப்படுத்தியவர்களையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றிவிடுவோம் அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்.” ஷு ஐப் சிந்தித்து ஆச்சரியப்பட்டவராகக் கூறினார்: “நீங்கள் பின்பற்றும் மார்க்கம் அசத்தியமானது என்பதை அறிந்து அதனை நாங்கள் வெறுத்த போதிலும் உங்களின் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதா?.”

(89) 7.89. நீங்கள் இருக்கும் இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு அல்லாஹ் தன் அருளால் எங்களைக் காப்பாற்றிய பிறகு நாம் அவற்றை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனான அல்லாஹ் நாடினாலே தவிர உங்களுடைய மார்க்கத்தின்பால் திரும்புவது எங்களுக்கு உகந்ததல்ல. அனைத்தும் அவனுடைய நாட்டத்துக்கு உட்பட்டதாகும். எங்கள் இறைவன் தன் அறிவால் அனைத்தையும் சூழ்ந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறையாது. நேரான வழியில் அவன் எங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காகவும் நரகத்தின் வழிகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பதற்காகவும் அவனையே நாங்கள் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கும் சத்தியத்தை நிராகரித்த எங்கள் சமூகத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. அநியாயக்காரர்களுக்கு எதிராக சத்தியத்தைப் பின்பற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவாயாக. எங்கள் இறைவா! நீயே மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கக்கூடியவன்.

(90) 7.90. அவரது சமூகத்தில் ஏகத்துவ அழைப்பை மறுத்து நிராகரிக்கும் தலைவர்களும் பெரியவர்களும் ஸுஐபையும் அவரது மார்க்கத்தையும் விட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்களாகக் கூறினார்கள்: “எங்கள் சமூகமே! நீங்கள் உங்களினதும் உங்கள் முன்னோர்களினதும் மார்க்கத்தை விட்டுவிட்டு ஸுஐபின் மார்க்கத்தைப் பின்பற்றினால் நிச்சயம் அழிவுக்குள்ளானவர்களே.”

(91) 7.91. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்கள் வீடுகளில் முகங்குப்புற வீழ்ந்தவர்களாகவும் அசைவற்ற சடங்களாகவும் செத்து மடிந்தார்கள்.

(92) 7.92. ஸுஐபை நிராகரித்தவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்காதவர்களைப் போல, எதையும் அனுபவிக்காதவர்களைப் போல ஆகிவிட்டார்கள். ஸுஐபை நிராகரித்தவர்களே நஷ்டவாளிகளாகினர். ஏனெனில் அவர்கள் தங்களையும் தங்களுக்குச் சொந்தமானதையும் இழந்துவிட்டார்கள்.பொய்கூறும் இந்த நிராகரிப்பாளர்கள் கூறுவது போல் அவரது சமூகத்தின் நம்பிக்கையாளர்கள் நஷ்டவாளிகளாகி விடவில்லை.

(93) 7.93. அவர்கள் அழிந்த போது அவர்களின் தூதர் ஸுஐப் அவர்களை விட்டுச் சென்றவராகக் கூறினார்: “என் சமூகமே! என் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு எனக்குக் கட்டளையிட்டதை நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். நான் உங்களுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் நீங்கள் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. என் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்படவில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அந்த நிராகரிப்பில் நிலைத்திருக்கும் ஒரு சமூகத்தின் மீது நான் எவ்வாறு கவலை கொள்வேன்?”

(94) 7.94. நாம் எந்த ஊருக்கு தூதர்களை அனுப்பினாலும் அங்குள்ளவர்கள் நிராகரித்தால் அவர்கள் நிராகரிப்பையும் கர்வத்தையும் விட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியும் பொருட்டு வறுமையாலும், நோயாலும், கஷ்டத்தாலும் அவர்களைப் பிடிப்போம். மறுக்கும் சமூகங்களின் விடயத்தில் அல்லாஹ்வின் நியதியைக் குறிப்பிடுவதன் மூலம் குறைஷிகளுக்கும் நிராகரிக்கும்,பொய்ப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இதுவாகும்.

(95) 7.95. பின்னர் கஷ்டம் நோய் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தண்டித்த பிறகு அவர்களுக்கு நன்மையையும், விசாலத்தையையும், அமைதியையும் வழங்குகிறோம். எந்த அளவுக்கெனில் அவர்களும் பல்கிப் பெருகி அவர்களது சொத்துக்களும் அதிகரித்துவிடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இன்பங்களும் துன்பங்களும் நமது முன்னோர்களுக்கு இதற்கு முன் நிகழ்ந்த ஒரு வழமையான நிகழ்வுதான்.” தங்களுக்குக் கிடைத்த தண்டனையின் மூலம் படிப்பினையே நாடப்பட்டது என்பதையும் வழங்கப்பட்ட அருட்கொடையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பிடிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் வேதனையை உணராமலும் அதனை எதிர்பார்க்காமலும் இருந்த சமயத்தில் திடீரென வேதனையால் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.

(96) 7.96. நாம் எந்த ஊர்வாசிகளிடம் நம் தூதர்களை அனுப்பினோமோ அவர்கள் தங்களின் தூதர்கள் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியிருந்தால், அல்லாஹ்வை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனை அஞ்சியிருந்தால் நன்மையின் வாயில்களையும் நாலாபுறத்தாலும் அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவுமில்லை; தக்வாவைக் கடைப்பிடிக்கவுமில்லை. மாறாக தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்களின் காரணமாக திடீரென்று அவர்களை வேதனையால் பிடித்துக் கொண்டோம்.

(97) 7.97. நிராகரித்த ஊர்வாசிகள் இரவில், நிம்மதியாக அவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

(98) 7.98. அல்லது பகலில், நண்பகல் வேளையில் தங்களின் உலக காரியங்களில் மெய் மறந்து இருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

(99) 7.99. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அவகாசத்தையும் பலம், தாராளமான வசதிகள் என அருட்கொடைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் பிடித்ததையும் சிந்தித்துப் பாருங்கள். நிராகரித்த அந்த ஊர்வாசிகள் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் மறைமுகமான திட்டத்தை விட்டும் அச்சமற்றுள்ளனரா என்ன? அழியக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் அச்சமற்று இருப்பார்கள். நேர்வழிபெற்றவர்களோ அவனுடைய சூழ்ச்சியைக் குறித்து அஞ்சுவார்கள். தங்களுக்குக் கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். தங்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

(100) 7.100. தங்களின் பாவங்களின் காரணமாக அழிக்கப்பட்ட முந்தைய சமூகத்தினருக்குப் பிறகு பூமியில் வழித்தோன்றல்களாக வந்து அவர்களுக்கு நிகழ்ந்ததைக் கொண்டு படிப்பினை பெறாமல் அவர்கள் செய்தவற்றையே செய்யும் இவர்களுக்கு, அல்லாஹ் தன் வழிமுறைப்படி தான் நாடினால் அவர்களின் பாவங்களினால் அவர்களை அழித்தது போன்று இவர்களின் பாவங்களினால் இவர்களையும் அழித்துவிடுவோம் என்பது புரியவில்லையா?, அறிவுரையிலிருந்து பயனடையவோ ஞாபகமூட்டல் பலனிளக்கவோ முடியாதவாறு அவர்களின் உள்ளங்களின் மீது அவன் முத்திரையிட்டுவிடுவான்.

(101) 7.101. தூதரே! மேலே குறிப்பிடப்பட்ட நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத், ஸுஐப் ஆகியோரின் சமூகங்கள் வசித்த ஊர்களைக் குறித்தும் அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அழிவைக் குறித்தும் நாம் உமக்கு எடுத்துரைப்பது, படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருப்பதற்காகவும்தான். இந்த ஊர்வாசிகளிடம் அவர்களின் தூதர்கள் தாம் உண்மையாளர்கள் என்பதற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவரை நிராகரிப்பார்கள் என அவன் முன்பே அறிந்து வைத்திருந்ததனால் தூதர்கள் வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. தங்களின் தூதர்களை நிராகரித்த இந்த ஊர்வாசிகளின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டது போன்றே முஹம்மதை நிராகரித்தவர்களின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுவான். எனவே அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(102) 7.102. அல்லாஹ் வழங்கிய அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, தூதர்கள் அனுப்பப்பட்ட பெரும்பாலான சமூகங்களை நாம் காணவில்லை. அவர்களிடத்தில் அல்லாஹ்வின் ஏவல்களுக்கு அடிபணிதலையும் நாம் காணவில்லை. அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுப்பவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோரைக் கண்டோம்.

(103) 7.103. அந்த தூதர்களுக்குப் பிறகு நாம் மூஸாவை அவரை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளுடன் பிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்திடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சான்றுகளை மறுத்து நிராகரித்தார்கள். -தூதரே-! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை மூழ்கடித்து அழித்து விட்டான். இவ்வுலகிலும் மறுவுலகிலும் சாபம் அவர்களைப் பின்தொடருமாறு செய்தான்.

(104) 7.104. மூஸாவை அல்லாஹ் பிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவர் அவனிடம் வந்து கூறினார்: “பிர்அவ்னே! படைப்புகள் அனைத்தையும் படைத்து அவர்களின் உரிமையாளனும் அவர்களின் விவகாரங்களை நிர்வகிப்பவனின் புறத்திலிருந்து நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”

(105) 7.105. மூஸா கூறினார்: “நான் அவனது தூதராக இருப்பதால் அவன் மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பதற்கு உகந்தவனாவேன். நான் உண்மையாளன், அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களின்பால் அனுப்பப்பட்டுள்ள தூதர் என்பதற்கான தெளிவான ஆதாரத்துடன் நான் உங்களிடம் வந்துள்ளேன். இஸ்ராயீலின் மக்களை சிறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுவித்து என்னுடன் அனுப்பிவிடுங்கள்.”

(106) 7.106. பிர்அவ்ன் மூஸாவிடம் கூறினான்: “நீர் கூறுவது போல் அத்தாட்சியைக் கொண்டுவந்திருந்தால் உமது வாதத்திலும் உண்மையாளராக இருந்தால் நீர் கூறியவாறு சான்றினைக் கொண்டு வாரும்.”

(107) 7.107. மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பார்க்கக்கூடியவர்களுக்கு தெளிவான மிகப் பெரிய பாம்பாக மாறியது.

(108) 7.108. தம் நெஞ்சுப் பகுதியிலுள்ள சட்டையின் உள்ளிருந்து அல்லது தம் அக்குளுக்குக் கீழிலிருந்து கையை வெளியே எடுத்ததும் அது வெண்குஷ்டமற்ற வெண்மையாகக் காணப்பட்டது. அதன் அதீத வெண்மையினால் பார்ப்பவர்களுக்கு அது மின்னியது.

(109) 7.109. மூஸாவின் கைத்தடி பாம்பாக மாறியதையும் அவரது கையிலிருந்து வெண்குஷ்டமற்ற வெண்மை வெளிப்பட்டதையும் கண்ட தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “மூசா திறமையான சூனியக்காரரே அன்றி வேறில்லை.”

(110) 7.110. தம்முடைய இச்செயலின் மூலம் உங்களை உங்கள் பூமியான இந்த எகிப்திலிருந்து வெளியேற்ற நாடுகிறார். பின்னர் பிர்அவ்ன் மூஸாவின் விஷயத்தைக் குறித்து அவர்களிடம், நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? என்று ஆலோசனை கேட்டான்.

(111) 7.111. அவர்கள் பிர்அவ்னிடம் கூறினார்கள்: “மூசாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் அவகாசம் அளியுங்கள். எகிப்திலுள்ள நகரங்களுக்கு அங்குள்ள சூனியக்காரர்களை ஒன்று திரட்டக்கூடியவர்களை அனுப்புங்கள்.

(112) 7.112. சூனியக்காரர்களை ஒன்று திரட்டுவதற்காக நீங்கள் அனுப்பியவர்கள் நகரங்களிலுள்ள திறமையாக சூனியம் செய்யும் சூனியக்காரர்கள் அனைவரையும் கொண்டுவருவார்கள்.

(113) 7.113. பிர்அவ்ன் சூனியக்காரர்களை ஒன்றுதிரட்டக்கூடியவர்களை அனுப்பினான். சூனியக்காரர்கள் வந்த போது அவர்கள் பிர்அவ்னிடம் கேட்டார்கள், “நாங்கள் மூஸாவை மிகைத்து அவரை வென்று விட்டால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டுமா?”

(114) 7.114. பிர்அவ்ன் அவர்களிடம் கூறினான்: “ஆம். நிச்சயமாக உங்களுக்கு வெகுமதியும் கூலியும் உண்டு. நீங்கள் பதவிகளின் மூலம் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”

(115) 7.115. தாங்கள் மூஸாவை மிகைத்து விடுவோம் என்று உறுதியான நம்பிக்கையில் சூனியக்காரர்கள் கர்வத்துடன் அவரிடம் கூறினார்கள்: “மூஸாவே! போட விரும்புவதை நீர் முதலில் போடுவதா அல்லது நாம் முதலில் போடுவதா என்பதை நீரே முடிவு செய்வீராக.”

(116) 7.116. மூஸா அவர்களைப் பொருட்படுத்தாதவராக, தம் இறைவன் தமக்கு உதவி புரிவான் என்ற உறுதியான நம்பிக்கையுடையவராக அவர்களிடம் கூறினார்: “உங்களின் கயிறுகளையும் கைத்தடிகளையும் எறியுங்கள்.” அவர்கள் போட்ட போது மக்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து திருப்பி மயக்கினார்கள். அவர்களைப் பயமுறுத்தினார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு பலம்மிக்க சூனியத்தை அவர்கள் கொண்டுவந்தார்கள்.

(117) 7.117. அல்லாஹ் தன் நபி மூஸாவுக்கு வஹி அறிவித்தான்: “மூஸாவே! உம் கைத்தடியை எறியும்.” அவர் எறிந்த போது, யதார்த்தத்தை மாற்றி ஓடுகின்ற பாம்பைப் போல் சித்தரிப்பதற்கு பயன்படுத்திய கயிறுகளையும் கைத்தடிகளையும் விழுங்கும் பாம்பாக அது மாறிவிட்டது.

(118) 7.118. சத்தியம் வெளிப்பட்டது. மூஸா கொண்டு வந்ததே சத்தியம் என்பதும் சூனியக்காரர்கள் கொண்டுவந்த சூனியம் அசத்தியம் என்பதும் தெளிவானது.

(119) 7.119. அவர்கள் தோல்வியடைந்தார்கள். இந்தக் களத்தில் மூஸா அவர்களை வென்றார். தோல்வியடைந்து, இழிவடைந்தவர்களாக அவர்கள் திரும்பினார்கள்.

(120) 7.120. சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் பெரும் வல்லமையையும், தெளிவான சான்றுகளையும் கண்ட போது அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.

(121) 7.121. சூனியக்காரர்கள் கூறினார்கள்: “அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம்.

(122) 7.122. அவன்தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவன். போலியான தெய்வங்கள் அல்லாமல் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.”

(123) 7.123. அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொண்ட பிறகு பிர்அவ்ன் அவர்களை மிரட்டியவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? மூஸா கொண்டுவந்ததன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கை மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று வேலைதான். இந்த நகர மக்களை வெளியேற்றுவதற்காக நீங்களும் மூஸாவும் போட்ட இரகசிய திட்டமே இது. சூனியக்காரர்களே! உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

(124) 7.124. உங்களில் ஒவ்வொருவரின் வலது கையையும் அவரின் இடது காலையும், அல்லது அவரின் இடது கையையும் அவரின் வலது காலையும் வெட்டிவிடுவேன். பின்னர் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் தண்டனையாக அமையும் பொருட்டும் இந்நிலைமையில் உங்களைப் பார்ப்பவர்களுக்கு பயமுறுத்தும் விதமாகவும் உங்கள் அனைவரையும் பேரீச்சை மரத்தின் தண்டுகளில் தொங்கவிடுவேன்.

(125) 7.125. சூனியக்காரர்கள் பிர்அவ்னின் மிரட்டலுக்குப் பதிலளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவனின் பக்கமே நாங்கள் திரும்பக் கூடியவர்கள். உம்முடைய மிரட்டலை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.

(126) 7.126. பிர்அவ்னே! அல்லாஹ்வின் சான்றுகள் மூஸாவின் மூலமாக எங்களிடம் வந்த போது நாங்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொண்ட எமது செயலைத்தான் நீ எங்களிடம் தவறாகக் காண்கிறாய். அது பழிக்கப்படும் குற்றமாக இருந்தால் அது நாங்கள் செய்த குற்றம்தான். பின்னர் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா “எங்களை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்துவதற்காக எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, உன் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக, உன் தூதரைப் பின்பற்றியவர்களாக எங்களை மரணிக்கச் செய்வாயாக.”

(127) 7.127. பிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பெரியவர்களும் பிர்அவ்னை மூஸாவுக்கும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களுக்கும் எதிராகத் தூண்டியவர்களாகக் கூறினார்கள்: பிர்அவ்னே! மூஸாவையும் அவரது சமூகத்தையும் பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும் உம்மையும் உம்தெய்வங்களையும் விட்டுவிடுவதற்கும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைப்பதற்கும் விட்டுவிடுகிறீரா?” பிர்அவ்ன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம். அவர்களின் பெண்களை பணிவிடை செய்வதற்காக விட்டுவைப்போம். நிச்சயமாக நாம் அடக்குமுறையினாலும் அதிகாரத்தினாலும் அவர்களை மிகைத்தவர்களாவோம்.”

(128) 7.128. மூஸா தம் சமூகத்தாருக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “என் சமூகமே! உங்களை விட்டு தீங்கை அகற்றி நன்மையைக் கொண்டுவர அல்லாஹ்விடமே உதவிதேடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையில் பொறுமையாக இருங்கள். பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பிர்அவ்ன் தான் நினைத்தவாறு அதில் இயங்க அதுவொன்றும் அனுக்கோ ஏனையோருக்கோ சொந்தமானதல்ல. அல்லாஹ் மக்களிடையே தன் நாட்டப்படி மாறிமாறி வழங்குகிறான். ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பூமியில் நல்ல முடிவு காத்திருக்கின்றது. அவர்கள் சோதனைகளாலும் கஷ்டங்களாலும் பாதிக்கப்பட்டாலும் பூமி அவர்களுக்குச் சொந்தமானதே.”

(129) 7.129. மூஸாவின் சமூகத்தவரான இஸ்ரவேலர்கள் அவரிடம் கூறினார்கள்: “மூசாவே! நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும் பின்பும் எங்களின் ஆண்மக்கள் கொல்லப்பட்டு பெண்மக்கள் உயிருடன் விடப்பட்டு பிர்அவ்னால் நாங்கள் சோதிக்கப்பட்டோம்.” மூஸா அவர்களுக்கு அறிவுரை வழங்கியவராக, விடுதலையைக் கொண்டு நற்செய்தி வழங்கியவராகக் கூறினார்: “உங்களின் இறைவன் உங்களின் எதிரியான பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் அழித்துவிடலாம். அதன்பிறகு பூமியில் உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி, அதன் பின் நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறீர்களா என்பதைப் பார்ப்பான்.

(130) 7.130. பிர்அவ்னைச் சார்ந்தவர்களை பஞ்சத்தாலும் வரட்சியாலும் தண்டித்தோம். விளைச்சல்களில் குறைவை ஏற்படுத்தி அவர்களைச் சோதித்தோம். இது, தங்களுக்குக் கிடைத்த இந்த தண்டனை தங்கள் நிராகரிப்பினால்தான் ஏற்பட்டது என்பதை உணர்ந்து அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதற்காகத்தான்.

(131) 7.131. செழிப்பு, விளைச்சல், விலை குறைவு ஆகிய நன்மைகள் பிர்அவ்னின் கூட்டத்தாருக்கு ஏற்பட்ட போது, “இவையனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதென்றால் நாங்கள் அவற்றிற்குத் தகுதியானவர்கள் மற்றும் அவை எங்களுக்குரியது என்பதனால்தான்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வறுமையோ பஞ்சமோ நோய்களோ வேறு சோதனைகளோ ஏற்பட்டால் மூஸாவினாலும் அவருடன் உள்ள இஸ்ரவேலர்களாலும் ஏற்பட்ட துர்ச்சகுனமாகக் கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ் விதிப்படியே ஏற்படுகிறது. மூஸா அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை புரிந்ததைத் தவிர மூஸாவுக்கும் அவர்களின் விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவேதான் அல்லாஹ் அல்லாதவர்களின்பால் அதனைத் தொடர்புபடுத்துகிறார்கள்.

(132) 7.132. பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் சத்தியத்தை விட்டு பிடிவாதமாகக் கூறினார்கள்: “நீர் எங்களிடம் எத்தகைய சான்றுகளையம், ஆதாரங்களையும் கொண்டுவந்தாலும், எங்களிடமுள்ளவற்றை விட்டும் எம்மைத் திருப்புவதற்கு அவை அசத்தியம், நீர் கொண்டுவந்ததே உண்மை என்பதை நிரூபிக்க எத்தகைய ஆதாரங்களை நீர் கொண்டுவந்தாலும் நாங்கள் ஒருபோதும் உம்மை உண்மைப்படுத்த மாட்டோம்.

(133) 7.133. அவர்களின் நிராகரிப்பு மற்றும் பிடிவாதத்தின் காரணமாக அவர்கள் மீது பெருமழையைத் தண்டனையாக அனுப்பினோம். அது அவர்களின் வயல்களையும் விளைச்சல்களையும் மூழ்கடித்தது. அவர்களின் மீது வெட்டுக்கிளிகளை அனுப்பினோம். அவை அவர்களின் விளைச்சல்களை தின்றுவிட்டன. அவர்களது பயிர்களைத் தாக்கும் அல்லது அவர்களது முடியில் தொந்தரவு கொடுக்கும் பேன்களை அனுப்பினோம். இன்னும் தவளைகளையும் அவர்களின் மீது அனுப்பினோம். அவை அவர்களின் பாத்திரங்களில் நிரம்பி, உணவுப் பொருள்களை நாசமாக்கி விட்டன. தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. அவர்களின் மீது இரத்தத்தை அனுப்பி கிணறுகளையும் ஆறுகளையும் இரத்தமாக மாற்றினோம். அனைத்தையும் தனித் தனியான தெளிவான சான்றுகளாக,ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பினோம். இத்தனை தண்டனைகளைக் கண்ட பின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மூஸா கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் கர்வம் கொண்டார்கள். பாவங்கள் புரியும், அசத்தியத்தை விட்டும் விலகாத, நேர்வழிபெறாத மக்களாக அவர்கள் இருந்தார்கள்.

(134) 7.134. இந்த வேதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்ட போது மூஸாவிடம் வந்து, “மூஸாவே! உமக்கு இறைவன் வழங்கிய தூதுத்துவத்தைக் கொண்டு, தவ்பாவின் மூலம் வேதனையை நீக்குவதாக உமக்கு அவன் வழங்கிய வாக்குறுதியைக் கொண்டு எங்களை விட்டும் வேதனையை அகற்றும்படி எங்களுக்காக பிரார்த்தனை புரிவீராக. எங்களை விட்டும் வேதனையை நீர் அகற்றினால் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொள்வோம்; இஸ்ராயீலின் மக்களுக்கும் விடுதலையளித்து உம்முடன் அனுப்புவோம்.

(135) 7.135. அவர்களை மூழ்கடித்து அழிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட காலகட்டம் வரை அவர்களை விட்டும் வேதனையை அகற்றியபோது, ஏற்றுக் கொள்வதாகவும் இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதாகவும் அளித்த தமது வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டார்கள். அவர்கள் தமது நிராகரிப்பில் நிலைத்திருந்து, இஸ்ராயீலின் மக்களை மூஸாவுடன் அனுப்பாமல் தடுத்துக் கொண்டார்கள்.

(136) 7.136. அவர்களை அழிப்பதற்கான குறிப்பிட்ட தவணை நெருங்கிய போது, சந்தேகமற்ற சத்தியத்தை புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்ததனாலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்து நம்முடைய வேதனையை அவர்கள் மீது இறக்கினோம்.

(137) 7.137. பிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அடிமைப்படுத்தி வைத்திருந்த இஸ்ராயீலின் மக்களை பூமியின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உரிமையாளர்களாக்கினோம். இங்கு பூமி என்பது ஷாம் தேசத்தைக் குறிக்கும். அங்கு பயிர்களையும் பழங்களையும் முழுமையாக விளையச் செய்து அல்லாஹ் அருள் செய்திருந்தான். தூதரே! (“பூமியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நாம் கிருபை செய்து அவர்களை வழிகாட்டிகளாக்கவும், வாரிசுகளாக்கவும் நாடுகிறோம்”) (28:5) என்ற உம் இறைவனின் அழகிய வார்த்தை நிறைவேறிவிட்டது. பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையாக எதிர்கொண்டதனால் அவர்களுக்கு அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். பிர்அவ்ன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பயிர் நிலங்களையும் வசிப்பிடங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிந்த மாளிகைகளையும் நாம் அழித்துவிட்டோம்.

(138) 7.138. மூஸா தம் கைத்தடியால் கடலை அடித்து அது பிளந்த போது இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்து சென்ற போது மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! இவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கும் சிலைகள் இருப்பதைப் போல எங்களுக்கும் ஒரு வணங்கும் சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வுக்குரிய மகத்துவத்தையும் ஏகத்துவத்தையும் அவனுக்குப் பொருந்தாத இணைவைப்பையும், மற்றவர்களை வணங்குtதையும் அறியாத கூட்டமாக உள்ளீர்கள்.”

(139) 7.139. சிலை வணக்கத்தில் ஈடுபடும் இவர்களிள் வழிபாடு அழிவுக்குள்ளாகிவிடும். அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணக்கத்தில் இணையாக்கியதால் அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்து நல்ல விடயங்களும் அழிந்துவிடும்.

(140) 7.140. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வின் மிகப் பெரிய சான்றுகளைப் பார்த்து விட்டீர்கள். உங்களின் எதிரிகளை அழித்து, பூமியில் உங்களுக்கு அதிகாரம் வழங்கி, இக்காலத்திலுள்ள உலகமக்களை விடவும் உங்களைச் சிறப்பித்துள்ளான். இவ்வாறிருக்கும் போது, என் சமூகமே! நீங்கள் வணங்குவதற்கு அல்லாஹ் அல்லாத ஒரு இறைவனை நான் எவ்வாறு தேடுவேன்?

(141) 7.141. இஸ்ராயீலின் மக்களே! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரின் அடிமைத்தனத்திலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களின் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்து பெண் பிள்ளைகளை தங்களின் பணிவிடைக்காக உயிருடன் விட்டுவைத்து உங்களுக்கு விதவிதமான இழிவுகளை அளித்துக் கொண்டிருந்தார்கள். பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றியதில் உங்கள் இறைவனிடமிருந்து மிகப் பெரும் நன்றியை வேண்டி நிற்கும் சோதனை இருக்கின்றது.

(142) 7.142. அல்லாஹ் தன் தூதர் மூஸாவுடன் இரகசியமாக உரையாட அவருக்கு முப்பது இரவுகளை வாக்களித்திருந்தான். பின்னர் பத்து இரவுகளை அதிகப்படுத்தி நாற்பது இரவுகளாக அதனை முழுமைப்படுத்தினான். மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற போது தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “ஹாரூனே! என் சமூகத்தில் என் பிரதிநிதியாக இருப்பீராக. அவர்களது விவகாரங்களை சிறந்த நிர்வாகம் மூலமும் மிருதுவான தன்மை மூலமும் சீர்படுத்துவீராக. பாவங்கள் புரிந்து குழப்பவாதிகளின் பாதையில் சென்றுவிடாதீர். பாவிகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்.”

(143) 7.143. மூஸா குறிப்பிட்ட நேரத்தில் தம் இறைவனுடன் உரையாட வந்து, அது முழுமையான நாற்பது இரவுகளாகும் அவருடைய இறைவன் ஏவல்கள், விலக்கல்கள் மற்றும் ஏனைய விடயங்களை அவருடன் பேசிய போது, அவரது உள்ளம் தனது இறைவனைக் காண ஆவல் கொண்டது. எனவே அவனைப் பார்க்கவேண்டுமெனக் கோரினார். அதற்கு அல்லாஹ் பின்வருமாறு விடையளித்தான், “இவ்வுலக வாழ்வில் நீர் அதற்குச் சக்தி பெறாததால் என்னை ஒருபோதும் காண முடியாது. ஆயினும் அந்த மலையைப் பாரும். அதில் என் பேரொளி வெளிப்பட்டும் அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காணலாம். அது பூமியோடு தரைமட்டமாகிவிட்டால் என்னைக் காணமுடியாது” என்றான். அல்லாஹ் அந்த மலையில் தன் பேரொளியை வெளிப்படுத்தியபோது அது தூள் தூளாகிவிட்டது. மூஸா மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த போது அவர் கூறினார்: “என் இறைவா, உனக்குப் பொருத்தமற்ற எல்லாவற்றையும் விட்டு நான் உன்னைத் தூய்மைப்படுத்துகிறேன். இவ்வுலகில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டதற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். என் சமூகத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் நானே முதலாமவனாவேன்.”

(144) 7.144. அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: மூஸாவே “நாம் உம்மை அவர்களின்பால் அனுப்பிய போது மக்கள் அனைவரையும்விட உம்மை சிறப்பித்து எனது தூதுப் பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளேன். நேரடியாக உம்மிடம் பேசியும் உம்மை சிறப்பித்துள்ளேன். நாம் உமக்கு அளிக்கும் இந்த சங்கையான கண்ணியத்தை எடுத்துக் கொள்வீராக. இந்த மகத்தான அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக.

(145) 7.145. இஸ்ராயீலின் மக்களுக்குத் தேவையான உலக மற்றும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் மூசாவுக்கு மரம் அல்லது வேறொன்றிலான ஏடுகளில் நாம் எழுதி வழங்கினோம். அவர்களில் அறிவுரைபெற விரும்புபவர் அறிவுரை பெரும் பொருட்டும் அவர்களுக்கு விளக்கம் தேவையான சட்டங்களுக்கு விளக்கமாக அமையும் பொருட்டும் அதனை வழங்கினோம். -மூசாவே!- இந்த தௌராத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக. கட்டளையிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையான விதத்தில் நடைமுறைப்படுத்தல், பொறுமை, மன்னிப்பு போன்ற தவ்ராத்திலுள்ள அதிக கூலியைப் பெற்றுத் தரும் நல்லவற்றை பற்றிக் கொள்ளுமாறு உம்முடைய சமூகமான இஸ்ராயீலின் மக்களுக்கு ஏவுவீராக. எனக்கு அடிபணியாமல் என் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களுக்கு நேர்ந்த கதியையும் அவர்களுக்கு நிகழும் அழிவையும் விரைவில் நான் உங்களுக்குக் காட்டுவேன்.

(146) 7.146. அல்லாஹ்வின் அடியார்களுக்கு எதிராகவும் சத்தியத்திற்கு எதிராகவும் அநியாயமாக கர்வம் கொள்பவர்களை பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளும் இருக்கும் என் சான்றுகளிலிருந்து படிப்பினை பெறுவதிலிருந்தும் என் வேத வசனங்களைப் புரிந்து கொள்வதிலிருந்தும் நான் திருப்பிவிடுவேன். சான்றுகள் அனைத்தையும் கண்டுவிட்டாலும் அவற்றைப் மறுப்பதனாலும் புறக்கணிப்பதனாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பதாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் சத்தியப் பாதையை அவர்கள் கண்டால் அதில் செல்லவோ செல்வதற்கு ஆர்வம் கொள்ளவோ மாட்டார்கள். அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் வழிகேட்டின் பாதையைக் கண்டால் அதில் அவர்கள் செல்கிறார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை உண்மையெனக்காட்டும் மகத்தான அல்லாஹ்வின் சான்றுகளை அவர்கள் மறுத்ததனாலும் அவற்றைக் குறித்து அலட்சியமாக இருந்ததனாலும் அவர்களுக்கு இந்நிலமை ஏற்பட்டது.

(147) 7.147. நம்முடைய தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய நம் சான்றுகளையும் மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பையும் மறுத்தவர்களின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. அவை ஏற்கப்படுவதற்கான நிபந்தனையை இழந்ததனால் அவர்களுக்கு எந்தக் கூலியும் வழங்கப்படாது. அவர்கள் செய்துவந்த நிராகரிப்பான இணைவைப்பான செயல்களுக்கே மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார்கள். அதற்கான கூலி நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பதாகும்.

(148) 7.148. மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற பிறகு அவரது சமூகத்தார் தங்கள் ஆபரணங்களால் உயிரற்ற, சப்தமிடும் ஒரு காளைக் கன்று உருவமொன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த காளைக் கன்று அவர்களிடம் பேசவில்லை, பௌதீக, மானசீக எந்த நல்வழியையும் அவர்களுக்கு அது காட்டவில்லை, அவர்களுக்குப் பலனளிக்கவோ அவர்களை விட்டு தீங்கினை அகற்றவோ செய்யவில்லை என்பதை அவர்கள் அறியவில்லையா? அதனை வணங்கப்படும் தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தார்கள்.

(149) 7.149. அவர்கள் கைசேதப்பட்டு தடுமாற்றமுற்று காளைக் கன்றை அல்லாஹ்வுடன் வணங்கப்படும் தெய்வமாக ஆக்கியதனால் தாங்கள் வழிகெட்டுவிட்டோம் என்பதை அறிந்து கொண்ட போது அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் அவனை வழிபடுவதற்கு எங்களுக்கு உதவி புரிந்து கருணை காட்டவில்லையெனில், நாம் காளைக் கன்றை வணங்குவதற்கு முன்வந்ததை அவன் மன்னிக்கவில்லையெனில் நிச்சயம் நாங்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் இழந்துவிட்டவர்களாக ஆகிவிடுவோம்.”

(150) 7.150. மூஸா தம் இறைவனிடம் தனிமையில் உரையாடிய பின், தன் சமூகத்தார் காளைக் கன்றை வணங்கியதனால் கோபத்தாலும் கவலையாலும் கொந்தளித்தவராக அவர்களிடம் திரும்பிய போது கூறினார்: “என் சமூகமே! நான் உங்களை விட்டு சென்ற பிறகு உங்களுக்கு ஏற்பட்ட நிலமை மோசமானதாகும். ஏனெனில் அது அழிவுக்கும் துர்பாக்கியத்திற்கும் வழிவகுக்கும். என்னைக் காத்திருந்து சடைவடைந்ததனால், காளைக் கன்றை வணங்க ஆரம்பித்து விட்டீர்களா?” அவருக்கேற்பட்ட கடுமையான கவலையினாலும் கோபத்தினாலும் அவர் பலகைகளை எறிந்தார். அவர்களுடன் கூட இருந்தும், அவர்கள் காளைக் கன்றை வணங்கியதைத் தடுக்காமலிருந்த காரணத்தினால் தம் சகோதரர் ஹாரூனின் தலையையும் தாடியையும் பிடித்து இழுத்தார். அவர் மூஸாவிடம் மன்னிப்புக்கேட்டவராகவும் மன்றாடியவராகவும் கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக சமூகத்தினர் என்னை பலவீனமானவனாகக் கருதி, என்னை இழிவாக எண்ணி விட்டனர். அவர்கள் என்னைக் கொல்ல எத்தனித்தனர். எனவே எனது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் தண்டனையை எனக்கு அளித்துவிடாதீர். என் மீது கோபப்பட்டு காரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அநியாயக்கார சமூகத்துடன் என்னை சேர்த்துவிடாதீர்.

(151) 7.151. மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! என்னையும் என் சகோதரன் ஹாரூனையும் மன்னித்துவிடுவாயாக. உன் கருணையில் எங்களைப் பிரவேசிக்கச் செய்வாயாக. உன் கருணையால் எங்களை சூழ்ந்துகொள்வாயாக. எங்கள் இறைவா! அனைவரையும் விட நீயே கருணை காட்டக்கூடியவன்.

(152) 7.152. காளைக் கன்றை வணங்கப்படும் கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் தமது இறைவனை கோபமூட்டி அவமதித்ததால் அவனது கடுமையான கோபத்திற்கு ஆளாவதோடு இவ்வுலக வாழ்வில் இழிவுக்கும் உள்ளாவார்கள். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டக்கூடியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்.

(153) 7.153. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, பாவங்கள் புரிந்து தீய செயல்கள் செய்தவர்கள் அதன் பின்னர் அல்லாஹ்வின்பால் மீண்டு நம்பிக்கை கொண்டு தாங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களை விட்டும் அவர்கள் விலகிக்கொண்டால், இணைவைப்பு மற்றும் பாவங்களை விட்டும் நீங்கி நம்பிக்கை கொண்டு வணக்கம் புரியும் போது -தூதரே!- உம் இறைவன் அவர்களின் பாவங்களை கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுபவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(154) 7.154. மூஸாவை விட்டு கோபம் தணிந்த போது கோபத்தினால் தாம் எறிந்த பலகைகளை எடுத்துக் கொண்டார். அது வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் சத்தியத்தையும் தங்களின் இறைவனை அஞ்சி அவனது தண்டனையைப் பயப்படுவோருக்கு கருணையையும் உள்ளடக்கியதாக இருந்தது.

(155) 7.155. தம் சமூகத்தின் மூடர்கள் காளைக் கன்றை வணங்கியதற்கு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மூஸா அவர்களிலிருந்து சிறந்த எழுபது நபர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தையும் நிர்ணயம் செய்தான். அவர்கள் வந்த போது அல்லாஹ்விடமே துணிந்து அல்லாஹ்வைக் கண்முன்னால் காட்டுமாறு மூஸாவிடம் வேண்டினார்கள். அதன் காரணமாக பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதன் பயங்கரத்தால் மயங்கி விழுந்தார்கள். செத்துமடிந்தார்கள். மூஸா தம் இறைவனிடம் மன்றாடினார்: “என் இறைவா, அவர்களையும் அவர்களுடன் என்னையும் நீ அழிக்க நாடியிருந்தால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்த காரியத்திற்காகவா எங்களை அழித்தாய். என் சமூகம் காளைக் கன்றை வணங்கியது ஒரு சோதனையே. அதன் மூலம் நீ நாடியவர்களை வழிதவறச் செய்கிறாய். நீ நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்றாய். எங்களின் விவகாரங்களுக்கு நீயே பொறுப்பாளன். எனவே எங்களின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக. விசாலமான உனது கருணையின் மூலம் எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே பாவத்தை மன்னப்போரில் மிகச் சிறந்தவன்.”

(156) 7.156. நீ இந்த உலக வாழ்வில் அருட்கொடையையும் ஆரோக்கியத்தையும் வழங்கி, நற்செயல்கள் புரிவதற்கு பாக்கியம் அளித்து கண்ணியப்படுத்தியவர்களில் எங்களையும் ஆக்குவாயாக. மறுமையில் நீ சொர்க்கத்தை தயார்படுத்தி வைத்துள்ள நல்லடியார்களுடனும் எங்களை ஆக்குவாயாக. நாங்கள் எங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டு உன்பக்கம் திரும்பி விட்டோம். அதற்கு அல்லாஹ் கூறினான்: “துன்பத்துக்குரிய காரணிகளைச் செய்தவர்களில் நான் நாடியோரை என்னுடைய வேதனையினால் பிடிப்பேன். என் அருளோ இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் விட விசாலமானது. அல்லாஹ்வின் அருளும் கருணையும் உபகாரமும் படைப்புகள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு மறுமையில் என் அருளை எழுதி விடுவேன். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குகிறார்கள். நம் வசனங்களின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.

(157) 7.157. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அவர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீ நபியாவார். அவரது இறைவன் அவருக்கு வஹி அறிவிக்கிறான். அவர்கள் அவருடைய பெயர், பண்புகள், அவருக்கு இறக்கப்பட்ட வேதம் ஆகியவற்றைப் பற்றி, மூஸாவுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்திலும், ஈஸாவுக்கு இறக்கப்பட்ட இன்ஜீலிலும் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறார்கள். நல்லவற்றை அவர்களுக்கு ஏவுவதோடு, இயல்புக்கு முரணான, ஆரோக்கியமான அறிவுக்கு எதிரான தீய விஷயங்களை விட்டும் தடுக்கின்றார். தீங்குகளற்ற சுவையான உணவுப் பொருட்கள், குடிபானங்கள், திருமணஉறவுகள் ஆகியவற்றை அவர்களுக்கு அனுமதிக்கின்றார். அவற்றில் அசுத்தமானவற்றை அவர்கள் மீது தடைசெய்கிறார். வேண்டுமென்றோ தவறாகவோ கொலை செய்தவனையும் அவசியம் கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத கடமைகளை அவர்களை விட்டும் அகற்றுகின்றார். இஸ்ராயீலின் மக்களிலும் மற்றவர்களிலும் அவரை உண்மைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, அவரை எதிர்க்கும் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவருக்கு உதவி புரிந்து அவர் மீது இறக்கப்பட்ட, நேர்வழி காட்டும் ஒளியான குர்ஆனைப் பின்பற்றுபவர்கள்தாம் வெற்றியாளர்கள். எதிர்பார்த்ததை அடைந்து அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்தவர்கள்.

(158) 7.158. தூதரே! நீர் கூறுவீராக: “மனிதர்களே! நான் அரபுக்கள் அரபி அல்லாதவர்கள் என உங்கள் அனைவரின்பாலும் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். எனவே -மனிதர்களே-, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் எழுதவோ படிக்கவோ தெரியாத அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். தனது இறைவன் அறிவிக்கும் செய்தியையே அவர் எடுத்து வந்துள்ளார். அவர் அல்லாஹ்வின் மீதும் தமக்கு இறக்கப்பட்டதன் மீதும் தமக்கு முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீது பாகுபாடின்றி நம்பிக்கைகொண்டுள்ளார். இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நன்மைகள் அடங்கியுள்ள நேரான வழியை நீங்கள் அடையும் பொருட்டு அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள்.

(159) 7.159. இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் சரியான மார்க்கத்தில் நிலைத்து நிற்பதுடன் மக்களுக்கும் அதன் பக்கம் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் அநீதியிழைக்காது நீதியாக தீர்ப்பளிக்கின்றனர்.

(160) 7.160. நாம் இஸ்ராயீலின் மக்களை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமூகத்தினர் அவரிடம் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தியுங்கள் எனக் கேட்டுக் கொண்ட பொழுது, “மூஸாவே! உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக.” என நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். மூஸா தடியை அடித்தார். பன்னிரண்டு குலங்களுக்கேற்ப அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி வழிந்தன. ஒவ்வொரு குலத்தாரும் தாம் அருந்தும் பகுதியை அறிந்து கொண்டனர். ஒரு குலத்தார் அருந்தவேண்டிய பகுதியில் மற்றொரு குலத்தார் அருந்தவில்லை. நாம் அவர்களுக்கு மேகங்களைக் கொண்டு நிழலிடச் செய்தோம். அவை அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றன. அவர்கள் நிற்கும் இடத்தில் நின்றன. அவர்கள் மீது எங்களுடைய அருட்கொடையான தேன் போன்ற இனிப்புப் பானத்தையும், காடை போன்ற சுவையான மாமிசத்தையுடைய சிறு பறவையையும் இறக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள்.” அநியாயம், அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளுதல், அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்காமலிருத்தல் போன்ற அவர்கள் மூலம் நிகழ்ந்தவற்றினால் நமக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாகச் செயல்பட்டு அவனது அருட்கொடைகளுக்கு நன்றி கெட்ட முறையில் நடந்து அழிவின் காரணங்களைத் தேடிய போது தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

(161) 7.161. தூதரே! அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “நீங்கள் பைத்துல் முகத்தஸில் நுழையுங்கள். அந்த ஊரின் விளைச்சல்களில் எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் விரும்பினாலும் உண்ணுங்கள். “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக” என்று கூறுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நாம் உங்கள் பாவங்களை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு இவ்வுலக மறுவுலக நன்மைகளை அதிகரித்து வழங்குவோம்.

(162) 7.162. அவர்களில் அநியாயக்காரர்கள் தங்களுக்கு ஏவப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். மன்னிப்பு வேண்டுவதற்குப் பதிலாக பரிகாசமாக ‘தானியத்திற்குள் விதை’ என்றார்கள். கட்டளையிடப்பட்ட செயலையும் மாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக தலை குனிந்தவாறு நுழைவதற்குப் பதிலாக தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

(163) 7.163. தூதரே! சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பின் மீன் பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய தமது முன்னோர்களை அல்லாஹ் தண்டித்ததை நினைவுபடுத்தும் விதமாக யூதர்களிடம் கேட்பீராக: மீன் பிடிப்பதற்கு தடுக்கப்பட்ட தினமான சனிக் கிழமையில் மீன்கள் கடலுக்கு மேல் மட்டத்தில் வரும் அதே வேளை ஏனைய நாட்களில் வராமலிருக்கச் செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிந்ததனால்தான் அவன் அவர்களை இவ்வாறு சோதித்தான். தந்திரமாக அவர்கள் சனிக் கிழமைக்கு முன்னரே வலையை வீசி கிடங்குகளைத் தோண்டி வைத்தார்கள். சனிக்கிழமை மீன்கள் அதில் மாட்டிக் கொண்டன. ஞாயிற்றுக்கிழமை அவற்றை எடுத்து உண்டார்கள்.

(164) 7.164. தூதரே! அவர்களில் ஒரு கூட்டம் இத்தீமையை விட்டும் அவர்களைத் தடுத்து அவர்களை எச்சரித்த சந்தர்ப்பத்தை நினைவு கூறுவீராக! அப்போது அவர்களைப் பார்த்து வேறோரு குழுவினர் கூறினார்கள்: “இவர்களுக்கு ஏன் அறிவுரை வழங்குகிறீர்கள்? இவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான் அல்லது மறுமை நாளில் இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பான்.” அறிவுரை கூறுபவர்கள் கூறினார்கள்: “எங்களின் இந்த அறிவுரையின் நோக்கம், எமக்கு ஏவப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தை விட்டதற்காக அல்லாஹ் தண்டித்துவிடாமல் இருக்க, அதனைச் செய்து அல்லாஹ்விடம் காரணம் கூற வேண்டும் என்பதற்காகவும் அறிவுரையினால் அவர்கள் பயனடைந்து பாவங்களை விட்டொழிப்பதற்காகவும்தான்.”

(165) 7.165. பாவிகள் தமக்கு அறிவுரை கூறுவோர் ஞாபகமூட்டியதைப் புறக்கணித்து, தவிர்ந்து கொள்ளாத போது தீமையைத் தடுத்த கூட்டத்தினரை வேதனையிலிருந்து நாம் காப்பாற்றி சனிக்கிழமையில் மீன்பிடித்து வரம்புமீறிக் கொண்டிருந்தவர்களை, அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் பாவங்களில் நிலைத்திருந்ததனால் கடுமையான வேதனையால் தண்டித்தோம்.

(166) 7.166. அவர்கள் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு வரம்புமீறி, அறிவுரை பெறாத போது "பாவிகளே நீங்கள் இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்." என நாம் கூறினோம். நாம் நாடியவாறு அவர்கள் மாறிவிட்டனர். ” நாம் ஏதேனும் ஒன்றை செய்ய நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுவோம். அது ஆகிவிடும்.

(167) 7.167. தூதரே! மறுமை நாள் வரை இந்த உலக வாழ்வில் யூதர்களை இழிவுபடுத்துவோரை அவர்கள் மீது சாட்டிக்கொண்டே இருப்போம் என்ற சந்தேகமற்ற தெளிவான அல்லாஹ்வின் பிரகடனத்தை நினைவுகூர்வீராக. தூதரே! உம் இறைவன் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை கடுமையாக தண்டிக்கக்கூடியவன். சில வேளை இவ்வுலகிலேயே அவர்களுக்குத் தண்டனை அளித்துவிடுகிறான். ஆயினும் அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(168) 7.168. அவர்கள் ஒற்றுமையாக இருந்தபின்னர் நாம் அவர்களை பூமியில் பல பிரிவினராகப் பிரித்து சிறு சிறு கூட்டமாகச் சிதறடித்துவிட்டோம். அவர்களில் அல்லாஹ்வின் கடமைகளையும் அடியார்களின் கடமைகளையும் நிறைவேற்றும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட வரம்புமீறியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு இலகுவைக் கொண்டும் கஷ்டத்தைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.

(169) 7.169. இவர்களுக்குப் பின்னர் தீயவர்கள் இவர்களின் வாரிசுகளானார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து தவ்ராத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதனைப் படித்தார்கள். ஆனால் அதன்படி செயல்படவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திரிப்பதற்காகவும் அல்லாஹ் இறக்காததன்படி தீர்ப்பளிக்கவும், அற்ப ஆதாயத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு செய்து விட்டு அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னித்துவிடுவான் என்று ஆசைகொண்டார்கள். அவர்கள் உலகின் அற்ப ஆதாயம் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். வேதத்தை திரிக்காமல், மாற்றாமல் அல்லாஹ்வின் மீது உண்மை கூற வேண்டும் என்று அல்லாஹ் இவர்களிடம் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெறவில்லையா? அவர்கள் அறியாமையினால் வேத்ததின்படி செயல்படாமல் இருக்கவில்லை. மாறாக அறிந்துகொண்டே அவ்வாறு செய்தார்கள். வேதத்திலுள்ளதை அவர்கள் கற்றார்கள், அறிந்து கொண்டார்கள். எனவே அவர்களது பாவம் மிகக் கடுமையானது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களைவிட நிலையான மறுமையும் அதன் நிரந்தர இன்பங்களுமே சிறந்தவையாகும். அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தயார்படுத்தியுள்ளவை மிகச்சிறந்ததும் நிலையானதும் ஆகும் என்பதைச் சிந்திக்க மாட்டார்களா?

(170) 7.170. வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன்படி செயல்பட்டு தொழுகையை அதற்குரிய நேரங்கள், நிபந்தனைகள், வாஜிபுகள் மற்றும் சுன்னத்துகளுடன் முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான். நற்செயல் புரிபவர்களின் கூலியை அவன் வீணாக்க மாட்டான்.

(171) 7.171. தூதரே! இஸ்ராயீலின் மக்கள் தவ்ராத்தில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த போது நாம் அவர்கள் மீது மலையை உயர்த்தியதை நினைவுகூர்வீராக. அது அவர்களின் தலைக்கு மேலிருக்கும் மேகம் போல ஆகிவிட்டது. அது தங்களின் மீது விழுந்து விடும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அப்போது அவர்களிடம் கூறப்பட்டது: “நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு அதில் அவன் கூறிய சட்டங்களை நினைவுகூர்ந்து செயல்படுத்துங்கள். அவனை மறந்து விடாதீர்கள்.”

(172) 7.172. தூதரே! ஆதமின் மக்களின் முதுகந்தண்டுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை உம் இறைவன் வெளியாக்கியதை நினைவுகூர்வீராக. தானே படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை அவர்களின் இயல்பில் அவன் வைத்ததன் மூலம் தனது தெய்வீகத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்யுமுகமாக அவர்களிடம், “நான் உங்கள் இறைவன் இல்லையா?” என்று கேட்டான். அவர்கள் அனைவரும், ”ஆம். நிச்சயமாக நீதான் எங்களின் இறைவன்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்களுக்கெதிரான அல்லாஹ்வின் ஆதாரத்தை நீங்கள் மறுத்து, மறுமை நாளில் ‘இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக நாம் உங்களை சோதித்து உங்களிடம் வாக்குறுதி வாங்கிவிட்டோம்.”

(173) 7.173. அல்லது உங்களின் முன்னோர்களே வாக்குறுதியை மீறி அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள். நீங்கள் வெறுமனே இணைவைப்பில் உங்கள் முன்னோர்களைப் பின்பற்றக்கூடியவர்களாகவே இருந்தீர்கள் என நீங்கள் வாதிட்டு, எங்கள் இறைவா! தங்களின் இணைவைப்பின் மூலம் தங்களின் செயல்களை வீணாக்கிய எமது முன்னோர்களின் செயலுக்காக எங்களை குற்றம்பிடித்து தண்டிக்கலாமா? எங்கள் அறியாமை, நமது முன்னோர்களைப் பின்பற்றியதனால் நம் மீது எக்குற்றமும் இல்லை, என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவும்தான்.

(174) 7.174. முன்னர் நிராகரித்த சமூகங்களின் இருப்பிடம் தொடர்பாக வசனங்களைத் தெளிவுபடுத்தியது போன்று இவர்கள் இணைவைப்பிலிருந்து நீங்கி அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக இவர்களுக்கும் அவற்றைத் தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறுதான் தாமாகவே அவர்கள் அல்லாஹ்வுக்கு வழங்கிய உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளது.

(175) 7.175. தூதரே! இஸ்ராயீலின் மக்களுக்கு அவர்களில் ஒரு மனிதனின் செய்தியை எடுத்துரைப்பீராக. நாம் அவனுக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். அவன் அவற்றை அறிந்து அது குறிப்பிடும் சத்தியத்தை அறிந்து கொண்டான். ஆனால் அதன்படி செயல்படாமல் அதிலிருந்து வெளியேறிவிட்டான். ஷைத்தான் அவனுடன் சேர்ந்து அவனுடைய தோழனாகிவிட்டான். நேர்வழிபெற்ற பிறகு அவன் அழியக்கூடிய வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

(176) 7.176. இந்த வசனங்களின் மூலம் நாம் அவனுக்குப் பயனளிக்க நாடியிருந்தால் அவனுக்கு நற்செயல் புரியும் வாய்ப்பை வழங்கி இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய அந்தஸ்தை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் தனது மறுமையை விட இம்மைக்கு முன்னுரிமை வழங்கி தன் மனம் விரும்பும் அசத்தியத்தைப் பின்பற்றி இவ்வுலக இன்பங்களின்பால் சாய்ந்து தனது தோல்விக்கு வழிவகுப்பவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். உலக இன்பங்களின் மீது அவன் கொண்ட பேராசைக்கு உதாரணம் நாயைப் போன்றது. அது எல்லா நிலைகளிலும் மூச்சிறைத்துக் கொண்டே இருக்கும். அமர்ந்து இருந்தாலும் மூச்சிறைக்கும். விரட்டப்பட்டாலும் மூச்சிறைக்கும். மேற்கூறப்பட்ட உதாரணம் நம் சான்றுகளை நிராகரிக்கும் வழிகெட்ட மக்களுக்குரிய உதாரணமாகும் . தூதரே! அவர்கள் சிந்தித்து நிராகரிப்பிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் விலகுவதற்காக அவர்களுக்கு சம்பவங்களை எடுத்துரைப்பீராக.

(177) 7.177. நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் நம்பாமல் நிராகரித்தவர்களைவிட தீய மக்கள் வேறு யாரும் இல்லை. அதன் மூலம் அவர்கள் தம்மை அழிவில் போட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.

(178) 7.178. அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழிபெற்றவராவார். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டாமல் கைவிட்டுவிடுகிறானோ, உறுதியாக அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாவர். அறிந்துகொள்ளுங்கள், இதுதான் தெளிவான நஷ்டமாகும்.

(179) 7.179. நாம் மனிதர்களிலும் ஜின்களிலும் பெரும்பாலோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்கள் நரகவாதிகளுக்குரிய செயல்களைச் செய்வார்கள் என்பதை நாம் அறிந்திருந்ததனால்தான் அவ்வாறு செய்தோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு தங்களுக்குப் பயனளிக்கும், தீங்கிழைக்கும் விஷயங்களை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் இருக்கும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கண்டு படிப்பினை பெற மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் சான்றுகளைச் செவிமடுத்து அதிலுள்ளவற்றைச் சிந்திக்கமாட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் பகுத்தறிவின்மையில் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக கால்நடைகளை விடவும் வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.

(180) 7.180. அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பரிபூரணத்தையும் அறிவிக்கும் அழகிய பெயர்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவற்றைக் கொண்டு நீங்கள் விரும்பும் விஷயத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள். அவற்றின் மூலம் அவனைப் புகழுங்கள். இந்தப் பெயர்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்குதல் அல்லது இவற்றை மறுத்தல் அல்லது இவற்றின் பொருளைத் திரித்தல் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை அவற்றுக்கு உவமையாக்குதல் ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை விட்டுப் நெறிபிறழ்ந்து செல்வோரை விட்டுவிடுங்கள். அவற்றைச் சத்தியத்தை விட்டும் திருப்பும் இவர்களுக்கு, அவர்கள் செய்துகொண்டிந்த செயல்களினால் வேதனைமிக்க தண்டனையை நாம் கூலியாக வழங்குவோம்.

(181) 7.181. நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு தாமும் நேர்வழியடைந்து, மற்றவர்களையும் இதன் பக்கம் அழைத்து அவர்களும் நேர்வழி பெற வழிவகுக்கும் ஒரு சமூகத்தினரும் இருக்கின்றார்கள். அவர்கள் நீதியுடன் தீர்ப்பு வழங்குகிறார்கள். அநியாயம் இழைக்கமாட்டார்கள்.

(182) 7.182. நம்முடைய சான்றுகளை நம்பாமல், அவற்றைப் பொய்பித்து மறுத்தவர்களுக்கு நாம் வாழ்வாதாரத்தின் வாசல்களை திறந்துவைப்போம், அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அல்ல. மாறாக அவர்கள் தம் வழிகேட்டில் மென்மேலும் தொடருவதற்காக அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக. எதிர்பாராத சமயத்தில் திடீரென நம் வேதனை அவர்களைத் தாக்கி விடும்.

(183) 7.183. அவர்கள் தண்டிக்கப்படுவோரல்ல என்று அவர்கள் கருதுமளவுக்கு நாம் அவர்களுக்குத் தண்டனையை தாமதப்படுத்துகிறோம். எனவே அவர்கள் தங்களின் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் வேதனை பன்மடங்காகும் வரை நிலைத்து நிற்கிறார்கள். என் சூழ்ச்சி பலமானது. எனவேதான் அவர்களைக் கைவிட்டு விடும் நோக்கில் வெளிரங்கத்தில் அவர்களுக்கு நன்மைசெய்கிறேன்.

(184) 7.184. அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனுடைய தூதரையும் நிராகரிக்கும் இவர்கள் சிந்திக்கமாட்டார்களா? முஹம்மது பைத்தியக்காரர் அல்ல, அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அவனால் அனுப்பப்பட்டுள்ள தூதரே என்பதைப் புரிந்துகொள்ள, அவர்களது அறிவைச் செயற்படுத்தக் கூடாதா?

(185) 7.185. வானங்களிலும் பூமியிலும் காணப்படும் அல்லாஹ்வின் ஆட்சியை படிப்பினை பெறும் நோக்கோடு அவர்கள் சிந்திக்கவில்லையா? அவற்றில் அல்லாஹ் படைத்த உயிரினங்கள், தாவரங்கள், ஏனையவற்றை அவர்கள் பார்க்கவில்லையா? தங்களின் தவணைகள் நெருங்கிவிட்டன. அதற்குள் அல்லாஹ்வின்பால் மீண்டுவிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லையா? இந்த குர்ஆனின் மீதும் அதிலுள்ள வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் வேறு எந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?

(186) 7.186. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை. அவர்கள் நேர்வழி பெறாதவாறு தங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலும் தடுமாறித் திரியுமாறு அல்லாஹ் அவர்களை விட்டுவிடுகிறான்.

(187) 7.187. இந்த பிடிவாதம் மிக்க நிராகரிப்பாளர்கள் மறுமை நாளைக் குறித்து அது எப்போது நிகழும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். முஹம்மதே! நீர் கூறுவீராக: “என்னிடமோ மற்றவர்களிடமோ அது குறித்த அறிவு இல்லை. அல்லாஹ் மட்டுமே அதனைக் குறித்து அறிவான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அல்லாஹ்வே அதனை வெளிப்படுத்துவான். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அது தோன்றுவதை அறியமாட்டார்கள். அது திடீரென்றே உங்களிடம் வரும். நீர் மறுமையைக் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருப்பது போல அதனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். உம் இறைவனைப் பற்றி நீர் நன்கறிந்துள்ளதால் நீர் அதனைப் பற்றி அவனிடம் கேட்க மாட்டீர் என்பதை அவர்கள் அறியவில்லை. முஹம்மதே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாள் குறித்த அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.”

(188) 7.188. முஹம்மதே! நீர் கூறுவீராக: “எனக்கு நான் பலனளிக்கவோ என்னை விட்டும் தீங்கினை அகற்றவோ நான் சக்தி பெறமாட்டேன். ஆயினும் அல்லாஹ் நாடியவற்றைத் தவிர. அவனுக்கே அந்த ஆற்றல் உண்டு. அல்லாஹ் கற்றுத் தந்ததைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. நான் மறைவானவற்றை அறியமாட்டேன். அதனை நான் அறிந்திருந்தால் எனக்கு நன்மைகளைக் கொண்டு வரும், என்னை விட்டும் தீங்குகளை அகற்றும் விஷயங்களைச் செய்திருப்பேன். ஏனெனில் ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு முன்னும் அதன் முடிவு பற்றியும் நான் அறிந்ததனால் அவ்வாறு செய்திருப்பேன். நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதரே தவிர வேறில்லை. அவனுடைய வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டு நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் மக்களுக்கு சங்கையான நன்மை உண்டென நற்செய்தி கூறுகிறேன்.

(189) 7.189. -ஆண்கள் பெண்களே!- அவன்தான் உங்களை ஆதம் என்ற ஒரு உயிரிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து அவருடைய விலா எலும்பிலிருந்து அவருடைய மனைவி ஹவ்வாவை நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். கணவன் மனைவியுடன் கூடிய போது அவள் இலேசாக கர்ப்பமுற்றாள். அது ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அவளால் அதை உணர முடியவில்லை. இந்த கர்ப்பத்துடன் அவள் தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே சென்றாள். எவ்வித சுமையையும் அவள் உணரவில்லை. அவளுடைய வயிற்றில் அது பெரிதானபோது அவள் கனத்தை உணர்ந்த போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனிடம் பின்வருமாறு இறைஞ்சினார்கள்: -“எங்கள் இறைவா!- எங்களுக்கு நீ பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையை அளித்தால் நாங்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம்.”

(190) 7.190. அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்கள் பிரார்த்தனை செய்தது போல் நல்ல குழந்தையை வழங்கிய போது அவன் தங்களுக்கு கொடையாக வழங்கியவற்றில் இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமது குழந்தையை அல்லாஹ் அல்லாதவருக்கு அடிமையாக்கி அதற்கு அப்துல் ஹாரிஸ் (விவசாயியின் அடிமை) எனப் பெயரிட்டனர். எல்லா இணைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன்; வணக்கத்திற்குத் தகுதியானவன்.

(191) 7.191. வணக்கத்திலே இந்த சிலைகளையும் மற்றவற்றையும் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குகிறார்களா? இந்த சிலைகள் வணங்கப்படும் தகுதியைப் பெற, நிச்சயமாக அவை எதையும் படைக்கவில்லை. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம், என்பதை அவர்கள் அறிந்தேயுள்ளார்கள். பின்னர் எவ்வாறு இவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.

(192) 7.192. வணங்கப்படும் இவைகள் தங்களை வணங்கியவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெறாது. ஏன் அவற்றால் தமக்குத் தாமே கூட உதவி செய்துகொள்ள முடியாது. எனவே எவ்வாறு அதனை அவர்கள் வணங்குகின்றனர்!?

(193) 7.193. இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வை விடுத்து நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட சிலைகளை நேர்வழியின் பக்கம் அழைத்தால் அவற்றால் உங்களுக்குப் பதிலளிக்கவோ உங்களைப் பின்பற்றவோ முடியாது. நீங்கள் அவற்றை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் அவை புரிந்துகொள்ளவோ செவியேற்கவோ பேசவோ முடியாத வெறும் திண்மப் பொருள்கள்தாம்.

(194) 7.194. இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடியவை அல்லாஹ்வின் படைப்புகள்தாம்; அவனுக்குக் கட்டுப்பட்டவைதாம். இந்த விஷயத்தில் அவர்கள் உங்களைப் போன்றவர்கள். அவர்களை விட நீங்கள் சிறந்தவர்கள். ஏனெனில் நீங்கள் உயிருள்ளவர்கள். பேசுகிறீர்கள், நடக்கிறீர்கள், கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள். உங்களின் சிலைகளோ இவ்வாறுகூட இல்லை. அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக நீங்கள் கூறும் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.

(195) 7.195. நீங்கள் தெய்வங்களாக ஆக்கிக் கொண்ட இந்த சிலைகளுக்கு உங்களுடைய தேவைகளுக்காக நடந்து செல்லத்தக்க கால்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களை விட்டும் தீங்கைத் வலிமையிடன் தடுக்கும் கைகள் இருக்கின்றனவா? அல்லது உங்களால் பார்க்க முடியாதவற்றைப் பார்த்து உங்களுக்கு அறிவிக்கத்தக்க கண்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களுக்கு மறைவானவற்றைக் கேட்டு அதனை உங்களுக்கு எத்திவைக்கத்தக்க காதுகள் இருக்கின்றனவா? இவற்றில் எதையும் அவை பெறவில்லையெனில், எவ்வாறு அவற்றை நன்மையளித்து தீமையை அகற்றுவதற்காக வணங்குகிறீர்கள்? தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்கியவற்றை அழையுங்கள். பின்னர் நீங்களும் அவர்களும் சேர்ந்து எனக்குக் கேடு விளைவிக்க திட்டம் தீட்டுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்.

(196) 7.196. நிச்சயமாக எனது உதவியாளன் என்னைப் பாதுகாக்கும் அல்லாஹ்வே. அவனைத் தவிர வேறு யாரையும் ஆதரவு வைக்க மாட்டேன். உங்களின் சிலைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன். அவனே மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக என்மீது குர்ஆனை இறக்கினான். அவனே தன் நல்லடியார்களைப் பொறுப்பெடுத்து பாதுகாத்து, உதவி செய்கிறான்.

(197) 7.197. -இணைவைப்பாளர்களே!- நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் உங்களுக்கு உதவி புரியவோ தமக்குத்தாமே உதவி புரியவோ சக்திபெற மாட்டா. அவை எதற்கும் இயலாதவையாகும். அல்லாஹ்வை விடுத்து எவ்வாறு நீங்கள் அவற்றை வணங்குகிறீர்கள்?

(198) 7.198. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளை நீங்கள் நேர்வழியின் பக்கம் அழைத்தாலும் உங்களின் அழைப்பை அவை செவியுற மாட்டா. அவை உங்களைப் பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவை பார்க்கமுடியாத திண்மப் பொருளாகும். அவர்கள் மனித தோற்றத்தில் அல்லது பிற விலங்குகளின் தோற்றத்தில் சிலைகளைச் செய்பவர்களாக இருந்தனர். அவற்றிற்கு கைகள், கால்கள், கண்கள் இருந்தன. ஆனால் அவை உயிரோ அசைவோ அற்ற திண்மப்பொருளாக இருந்தன.

(199) 7.199. -தூதரே!- மக்களிடமிருந்து அவர்கள் மனமுவந்து செய்பவற்றையும் அவர்களுக்கு இயலுமான பண்புகளையும் செயல்களையும் பொருந்திக்கொள்வீராக! அவர்களின் இயல்புக்கு முரணானவற்றை அவர்கள் மீது திணித்துவிடாதீர். அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும். அழகிய சொல்லையும் செயலையும் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிடுவீராக. மூடர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் மூடத்தனத்தால் அவர்களை எதிர்கொண்டு விடாதீர். உமக்குத் தீங்கிழைத்தவருக்கு நீரும் தீங்கிழைக்க வேண்டாம். உமக்குத் வழங்காதவருக்கு நீரும் வழங்காமல் இருக்க வேண்டாம்.

(200) 7.200. -தூதரே!- ஷைத்தான் உமக்கு ஏதேனும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டதாக நீர் உணர்ந்தால் அல்லது நன்மையான செயலை விட்டும் உம்மைத் தடுத்தால் அல்லாஹ்வின்பால் அடைக்கலம் பெற்றுக் கொள்வீராக. அவனைப் பற்றிக் கொள்வீராக. ஏனெனில் நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவன் பக்கம் நீர் அடைக்கலம் தேடுவதை அவன் நன்கறிந்தவன். அவன் ஷைத்தானிடமிருந்து உம்மைப் பாதுகாப்பான்.

(201) 7.201. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டத்தால் பாதிக்கப்பட்டு பாவங்கள் புரிந்தால் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பாவிகளுக்கு அவன் வழங்கும் தண்டனையையும் கீழ்ப்படிந்தவர்களுக்கு அவன் வழங்கும் நற்கூலியையும் நினைவுகூர்வார்கள். தங்களின் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பி விடுவார்கள். எனவே அவர்கள் சத்தியத்தில் நிலைத்து, தாம் செய்தவற்றிலிருந்து விழிப்படைந்து தவிர்ந்து கொள்வார்கள்.

(202) 7.202. ஷைத்தான்களின் சகோதரர்களான பாவிகள் மற்றும் நிராகரிப்பாளர்களை, ஷைத்தான்கள் ஒவ்வொரு பாவம் பாவமாக செய்ய வைத்து மென்மேலும் வழிகெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஷைத்தானும் வழிகெடுப்பதை விட்டு விடுவதில்லை. மனிதர்களில் உள்ள பாவிகளும் ஷைதான்களுக்கு வழிப்பட்டு தீங்கிழைப்பதை விட்டு விடுவதில்லை.

(203) 7.203. -தூதரே!- நீர் ஏதேனும் சான்றினைக் கொண்டு வந்தால் உம்மை பொய்யர் என்று கூறி அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். நீர் சான்றினைக் கொண்டு வரவில்லையெனில், “உம் புறத்திலிருந்து ஏதேனும் ஒரு சான்றினை புனைந்து கொண்டுவர வேண்டாமா” என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் புறத்திலிருந்து சுயமாக என்னால் சான்றினைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்தக் குர்ஆன் உங்களைப் படைத்து உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அல்லாஹ்விடமிருந்து சான்றுகளையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. நம்பிக்கை கொள்ளாதவர்களோ வழிகேடர்களாகவும் துர்பாக்கியசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.

(204) 7.204. குர்ஆன் படித்துக் காட்டப்பட்டால் படிப்பதை செவிசாய்த்துக் கேளுங்கள். அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு படிக்கப்படும் பொழுது பேசவோ வேறு பணிகளில் ஈடுபடவோ செய்யாதீர்கள்.

(205) 7.205. -தூதரே!- உம் இறைவனான அல்லாஹ்வை பணிவுடனும் பயத்துடனும் நினைவுகூர்வீராக. உமது பிரார்த்தனையில் உயர்ந்த சப்தமின்றியும் தாழ்ந்த சப்தமின்றியும் நடுநிலையைக் கடைப்பிடிப்பீராக. சிறப்பான இரு நேரங்களான பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரார்த்தனை புரிவீராக. அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருப்பவர்களில் ஒருவராகிவிடாதீர்.

(206) 7.206. -தூதரே!- உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை. மாறாக சளைக்காமல் அவனுக்கே அடிபணிகிறார்கள். அவர்கள் இரவும் பகலும் அவனுக்குப் பொருத்தமற்ற விஷயங்களை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகிறார்கள். அவனுக்கு மட்டுமே அவர்கள் சிரம்பணிகிறார்கள்.