71 - ஸூரா நூஹ் ()

|

(1) 71.1. நிச்சயமாக நாம் நூஹை அவரது சமூகத்திடம் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதன் காரணமாக வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைவதற்கு முன்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அழைப்பதற்காக அனுப்பினோம்.

(2) 71.2. அவர் தம் சமூகத்தினரிடம் கூறினார்: “என் சமூகமே! நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின்பால் மீண்டு பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் உங்களுக்காகக் காத்திருக்கும் தண்டனையிலிருந்து உங்களை நிச்சயமாக நான் தெளிவாக எச்சரிப்பவன்தான்.

(3) 71.3. நான் உங்களுக்கு பின்வருமாற கூறுவதுதான் என் எச்சரிக்கையாகும்: “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனுக்கு இணையாக எதனையும் ஆக்கிவிடாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் விஷயத்தில் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

(4) 71.4. நிச்சயமாக நீங்கள் இவ்வாறு செய்தால் அடியார்களின் உரிமைகளோடு சம்பந்தமில்லாத உங்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை உங்கள் சமுதாயத்தின் வாழ்நாளை நீட்டுவான். அதில் அவ்வாறு நேராக இருக்கும்வரை வரை பூமியை நீங்கள் நிர்வாகம் செய்வீர்கள். நிச்சயமாக மரணம் வந்துவிட்டால் தாமதப்படுத்தப்படமாட்டாது. நீங்கள் இதனை அறிந்திருந்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வதன் பக்கம், நீங்கள் இருந்துகொண்டிருக்கும் இணைவைப்பு மற்றும் வழிகேட்டை விட்டும் பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம் நீங்கள் விரைந்திருப்பீர்கள்.

(5) 71.5. நூஹ் கூறினார்: “என் இறைவா! உன்னை மாத்திரமே வணங்க வேண்டுமென என் சமூகத்தினரை நிச்சயமாக நான் இரவும் பகலும் இடைவிடாமல் அழைத்தேன்.

(6) 71.6. அவர்களுக்கான எனது பிரச்சாரம், நான் அவர்களை அழைக்கும் விடயத்தை விட்டும் மென்மேலும் அவர்களின் தூரப்படுத்தலையும் வெரெண்டோடுதலையுமே அதிகரித்தது.

(7) 71.7. உன்னை மட்டுமே வணங்கி, உனக்கும் உனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களின் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதற்கு நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் என் அழைப்பை செவியுறாமல் தடுக்கும்பொருட்டு தங்களின் விரல்களால் காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். என்னைப் பார்க்காமல் இருக்கும்பொருட்டு தங்களின் ஆடைகளால் முகங்களை மூடிக் கொண்டார்கள். தாங்கள் இருந்துகொண்டிருக்கும் இணைவைப்பிலேயே அவர்கள் நிலைத்திருந்தார்கள். நான் அவர்களை எதனை நோக்கி அழைத்தேனோ அதனை ஏற்றுக் கட்டுப்படுவதை விட்டும் கர்வம் கொண்டார்கள்.

(8) 71.8. பின்னர் -என் இறைவா!- நிச்சயமாக நான் அவர்களை வெளிப்படையாகவும் அழைத்தேன்.

(9) 71.9. பின்னர் எனது அழைப்பின் வழிமுறையை பலவாறாக அமைத்து அவர்களை சப்தமாகவும் அழைத்தேன். தாழ்ந்த குரலில் மிக இரகசியமாகவும் அழைத்தேன்.

(10) 71.10. நான் அவர்களிடம் கூறினேன்: “என் சமூகத்தினரே! உங்கள் இறைவனிடம் திரும்புவதன் மூலம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

(11) 71.11. நிச்சயமாக நீங்கள் இவ்வாறு செய்தால் அல்லாஹ் தேவையான சமயங்களில் உங்கள்மீது தொடர்ந்து மழை பொழியச் செய்வான். எனவே பஞ்சம் உங்களைப் பீடிக்காது.

(12) 71.12. உங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் அதிகரிக்கச்செய்து தருவான். உங்களுக்காக நீங்கள் பழம் உண்ணும் தோட்டங்களை ஏற்படுத்துவான். மேலும் நீங்களும் நீரருந்தி உங்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கும் நீர் புகட்டும் ஆறுகளையும் ஏற்படுத்துவான்.

(13) 71.13. என் சமூகமே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அஞ்சுவதில்லையா? எவ்வித பொருட்டுமின்றி அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுகிறீர்களே?

(14) 71.14. அவன் உங்களை விந்தாக, இரத்தக்கட்டியாக, சதைத்துண்டாக பல கட்டங்களாகப் படைத்தான்.

(15) 71.15. அவன் ஏழு வானங்களையும் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

(16) 71.16. அவன் கீழ்வானத்தில் சந்திரனை அமைத்து அதைப் பூமியிலுள்ளவர்களுக்காக பிரகாசமாக அமைத்துள்ளான். சூரியனை பிரகாசம் அளிக்கக்கூடியதாக அமைத்துள்ளான்.

(17) 71.17. அல்லாஹ்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் பூமியிலிருந்து உங்களைப் படைத்தான். பின்னர் நீங்கள் அது உங்களுக்கு உண்டாக்கும் விளைச்சல்களிலிருந்து உண்கிறீர்கள்.

(18) 71.18. பின்னர் நீங்கள் மரணித்தபிறகு உங்களை பூமியில் திரும்பக் கொண்டு செல்வான். பின்னர் அதிலிருந்து உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான்.

(19) 71.19. அல்லாஹ் உங்களுக்காக பூமியை வாழ்வதற்கேற்ப வசதியாக விரித்து வைத்துள்ளான்.

(20) 71.20. அது நீங்கள் அதன் விசாலமான பாதைகளில் சென்று அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

(21) 71.21. நூஹ் கூறினார்: “என் இறைவா! உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்ற என் கட்டளையில் நிச்சயமாக என் சமூகத்தினர் எனக்கு மாறுசெய்துவிட்டனர். அவர்களில் தாழ்ந்தவர்கள் சொத்து மற்றும் பிள்ளைப் பாக்கியம் மூலம் நீ அருள் புரிந்த தங்களின் தலைவர்களைப் பின்பற்றினார்கள். நீ அவர்களுக்கு அளித்த அருட்கொடைகள் அவர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறெதையும் அதிகரிக்கவில்லை.

(22) 71.22. அவர்களின் தலைவர்கள் தங்களில் தாழ்ந்தவர்களை நூஹிற்கு எதிராகத் தூண்டிவிட்டு பெரும் சூழ்ச்சிகளைச் செய்தார்கள்.

(23) 71.23. அவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறினார்கள்: “உங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடாதீர்கள். வத்து, சுவாவு, யகூசு யவூக்கு, நஸ்ர் ஆகிய தெய்வங்களை வணங்குவதையும் விட்டுவிடாதீர்கள்.

(24) 71.24. இந்த சிலைகளைக்கொண்டு அவர்கள் மக்களில் ஏராளமானோரை வழிகெடுத்துவிட்டார்கள். -என் இறைவா!- நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்திருந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு சத்தியத்தை விட்டு வழிகேட்டைத்தவிர வேறெதையும் அதிகப்படுத்தி விடாதே.

(25) 71.25. தாம் செய்த பாவங்களின் காரணமாக அவர்கள் உலகில் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள். மரணித்தபிறகு நேரிடையாக நரகத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர தங்களை மூழ்குவதிலிருந்தும் நெருப்பிலிருந்தும் காப்பாற்றக்கூடிய எவரையும் அவர்கள் பெறவில்லை.

(26) 71.26. “ஏற்கனவே நம்பிக்கைகொண்டவர்களைத் தவிர இனி உம் சமூகத்தில் யாரும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்” என்று அல்லாஹ் நூஹிற்கு அறிவித்தபோது அவர் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! பூமியில் எந்த நடமாடும் நிராகரிப்பாளனையும் விட்டுவைக்காதே.

(27) 71.27. -எங்கள் இறைவா!- நிச்சயமாக நீ அவர்களுக்கு இன்னும் அவகாசம் அளித்தால் நம்பிக்கைகொண்ட உன் அடியார்களை அவர்கள் வழிகெடுப்பார்கள். உனக்குக் கட்டுப்படாத பாவிகளையும் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாத கடும் நிராகரிப்பாளர்களையும்தாம் அவர்கள் பெற்றெடுப்பார்கள்.

(28) 71.28. என் இறைவா! என் பாவங்களையும் என் பெற்றோரின் பாவங்களையும் நம்பிக்கைகொண்டவராக என்வீட்டில் நுழைந்தவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக. நம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அழிவையும் இழப்பையும் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்திவிடாதே.