73 - ஸூரா அல்முஸ்ஸம்மில் ()

|

(1) 73.1. தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! (இதில் நாடப்பட்டவர் நபி (ஸல்) அவர்களாவர்).

(2) 73.2. இரவில் சிறிது நேரம் தவிர எழுந்து தொழுவீராக.

(3) 73.3. நீர் விரும்பினால் பாதி இரவு தொழுவீராக. அல்லது அரைவாசியைவிட குறைவாக மூன்றில் ஒரு பகுதிவரை தொழுவீராக.

(4) 73.4. அல்லது அதைவிட அதிகமாக மூன்றில் இரு பகுதி (தொழுவீராக). குர்ஆனை ஓதினால் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதுவீராக.

(5) 73.5. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது குர்ஆனை இறக்கப் போகின்றோம். அது கடமைகள், சட்டங்கள், வரையறைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கனமான வார்த்தையாகும்.

(6) 73.6. நிச்சயமாக இராப் பொழுதே ஒதலுடன் உள்ளம் ஒன்றிச்செல்வதற்கும் சரியான வார்த்தைக்கும் மிகப் பொருத்தமானதாகும்.

(7) 73.7. நிச்சயமாக பகலில் உமக்கு வேறு பணிகள் இருக்கின்றன. அவை குர்ஆன் ஓதுவதைவிட்டும் உம்மை திருப்பிவிடுகின்றன. எனவே இரவில் தொழுவீராக.

(8) 73.8. அல்லாஹ்வை பலமுறைகளில் நினைவுகூர்வீராக. அவனை மாத்திரமே வணங்கி அவன்பால் உம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீராக.

(9) 73.9. அவன் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதி. அவனைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக.

(10) 73.10. பொய்ப்பிப்பாளர்களின் பரிகாசத்தையும் ஏச்சுக்களையும் பொறுமையாக சகித்துக் கொள்வீராக. எவ்வித பாதிப்பும் அற்ற விதத்தில் அவர்களைப் புறக்கணிப்பீராக.

(11) 73.11. உலக ஆடம்பரத்தில் திளைத்திருக்கும் பொய்ப்பிப்பாளர்களின் விடயத்தில் கவனம் செலுத்தாதீர். என்னையும் அவர்களையும் விட்டுவிடுவீராக. அவர்களின் தவணை வரும்வரை சிறிது காலம் அவர்களை எதிர்பார்த்திருப்பீராக.

(12) 73.12. நிச்சயமாக மறுமையில் நம்மிடத்தில் கனமான விலங்குகளும் கொழுந்து விட்டெரியும் நெருப்பும் இருக்கின்றன.

(13) 73.13. கடுமையான கசப்பின் காரணத்தால் தொண்டையில் விழுங்க முடியாத உணவும் இன்னும் முன்னைவிட அதிகப்படியாக நோவினைமிக்க வேதனையும் இருக்கின்றன.

(14) 73.14. பூமியும் மலைகளும் ஆட்டம் காணும் நாளில் இந்த வேதனை பொய்ப்பிப்பாளர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். அப்போது அதன் பயங்கரத்தின் கடுமையினால் மலைகள் சிதறிய மணல்குவியலாகிவிடும்.

(15) 73.15. நாம் ஃபிர்அவ்னை நோக்கி மூஸா என்ற ஒரு தூதரை அனுப்பியது போன்று நாம் உங்களின் பக்கமும் மறுமை நாளில் உங்களின் செயல்களுக்கு சாட்சிகூறும் ஒரு தூதரை நிச்சயமாக அனுப்பியுள்ளோம்.

(16) 73.16. ஃபிர்அவ்ன் தன்னிடம் தனது இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான். நாம் உலகில் அவனை மூழ்கடித்து கடுமையான முறையில் தண்டித்தோம். மறுமையில் நரக வேதனையால் நாம் அவனைத் தண்டிப்போம். நீங்கள் உங்கள் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்பட்டால் அவனுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களுக்கும் நேரும்.

(17) 73.17. -நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தால்- கடுமையான நீளமான நாளிலிருந்து உங்களை எவ்வாறு தடுத்துக்கொள்வீர்கள், காத்துக் கொள்வீர்கள். அந்நாளின் பயங்கரத்தால், நீளத்தால் சிறிய பிள்ளைகளின் தலை முடியும் நரைத்து விடும்.

(18) 73.18. அதன் பயங்கரத்தால் வானம் பிளந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்.

(19) 73.19. நிச்சயமாக, மறுமை நாளில் நிகழக்கூடிய பயங்கரங்களை தெளிவாக உள்ளடக்கிய இந்த அறிவுரை நினைவூட்டலாகும். நம்பிக்கையாளர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். எனவே தம் இறைவனின் பால் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழி வேண்டுமென நினைப்பவர் அதனை ஏற்றுக்கொள்வார்.

(20) 73.20. -தூதரே! -நீர் சில சமயங்களில் இரவில் மூன்றில் ஒரு பகுதிக்குக் குறைவாக தொழுகின்றீர் என்பதையும் சில சமயங்களில் பாதி இரவு வரையும் சில சமயங்களில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரையிலும் தொழுகின்றீர் என்பதையும் உம்முடன் நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரும் தொழுகிறார்கள் என்பதையும் உம் இறைவன் நன்கு அறிவான். அல்லாஹ்வே இரவையும் பகலையும் நிர்ணயிக்கிறான். அவ்விரண்டின் நேரங்களையும் அவனே வரையறை செய்கிறான். நீங்கள் அதன் நேரங்களைக் கணக்கிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்பதை அவன் அறிவான். அதில் வேண்டப்பட்டதை தேடி அதிக நேரம் நின்று வணங்குவது உங்களுக்குச் சிரமமானது. எனவே அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். அதனால் இரவில் உங்களால் இயன்ற அளவு தொழுதுகொள்ளுங்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நோயால் கஷ்டப்படக்கூடிய நோயாளிகளும் வாழ்வாதாரம் தேடி அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக அவனது பாதையில் போரிடக்கூடியவர்களும் உள்ளார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். இவர்கள் இரவில் நின்று வணங்குவது சிரமமானதாகும். எனவே உங்களால் இயன்ற அளவு இரவில் தொழுது கொள்ளுங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குங்கள். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களைச் செலவு செய்யுங்கள். நீங்கள் உங்களுக்காக சேர்த்துவைத்த எந்த நன்மையானாலும் அதைவிட சிறந்த கூலியைப் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.