76 - ஸுரா அல்இன்ஸான் ()

|

(1) 76.1. குறிப்பிட முடியாத இல்லாமையாக இருந்த ஒரு நீண்ட காலகட்டம் மனிதனின் மீது கடந்துவிட்டது.

(2) 76.2. நிச்சயமாக நாம் மனிதனை ஆண் மற்றும் பெண்ணின் கலப்பு விந்திலிருந்து படைத்தோம். நாம் அவன் மீது கடமையாக்கிய பொறுப்புகளைக் கொண்டு அவனைச் சோதிக்கின்றோம். அவன் மார்க்கத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு அவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

(3) 76.3. நிச்சயமாக நாம் தூதர்களின் மூலம் நேரான வழியைத் தெளிவுபடுத்திவிட்டோம். அதன் மூலம் தவறான வழியும் அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அவன் அதற்குப் பிறகு நேரான வழியை அடைந்து நம்பிக்கைகொண்ட, அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும் அடியானாக ஆகலாம். அல்லது வழிகெட்டு நிராகரித்த, அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்த அடியானாக ஆகலாம்.

(4) 76.4. நிச்சயமாக நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு நரகில் அவர்களை இழுத்துவரப் பயன்படும் சங்கிலிகளையும் அதில் அவர்கள் கட்டப்படும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

(5) 76.5. நிச்சயமாக நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்கள் மறுமை நாளில் நல்ல வாசனையுடைய கற்பூரம் கலந்து நிரப்பப்பட்ட மதுக் கிண்ணத்திலிருந்து அருந்துவார்கள்.

(6) 76.6. கட்டுப்படக்கூடியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த பானம் இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியுமான, தீர்ந்துவிடாதளவு ஏராளமான நீருடைய ஊற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் அடியார்கள் அதிலிருந்து அருந்துவார்கள். அவர்கள் விரும்புகின்ற இடத்தில் அதனை ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

(7) 76.7. அந்த ஊற்றிலிருந்து பருகக்கூடிய அடியார்களின் பண்புகள், அவர்கள் தங்கள்மீது கடமையாக்கிக் கொண்ட நன்மையான விஷயங்களை நிறைவேற்றுவதும் தீங்கு பரவியிருக்கும் மறுமை நாளைக் குறித்து அஞ்சுவதுமாகும்.

(8) 76.8. அவர்களுக்கு உணவின் மீது தேவையும் விருப்பமும் உள்ள நிலையிலும் அதனை ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள்.

(9) 76.9. அல்லாஹ்வின் திருப்தியை நாடியே அவர்களுக்கு உணவளிப்பதாக அவர்கள் தங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்வார்கள். அவர்களிடம் உணவளித்ததற்கு கூலியையோ, புகழையோ அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.

(10) 76.10. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமிருந்து கொடூரம் மற்றும் கடுமையினால் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் கடுகடுத்துவிடும் அந்த நாளைக் குறித்து அஞ்சுகிறோம்.

(11) 76.11. அல்லாஹ் தன் அருளால் அந்த மாபெரும் நாளின் தீங்கினை விட்டும் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தி, அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் முகங்களில் பொலிவையும் பிரகாசத்தையும் வழங்கினான்.

(12) 76.12. -அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பாவங்களை விட்டுத் தவிர்ந்திருப்பதிலும் அவனது விதியை ஏற்றுக்கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்ததனால்- அவன் அவர்களுக்கு இன்பமிக்க சுவனத்தையும் அணிவதற்கு பட்டாடைகளையும் வழங்கி கூலி கொடுப்பான்.

(13) 76.13. அங்கு அவர்கள் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்குத் நோவினையளிக்கும் கதிர்களுடைய சூரியனையோ, கடும் குளிரையோ அவர்கள் காண மாட்டார்கள். மாறாக அவர்கள் வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற நிரந்தரமான நிழலில் இருப்பார்கள்.

(14) 76.14. அதன் நிழல் அவர்களுக்கு அருகிலிருக்கும். அதன் பழங்கள் பறிப்பவர்களுக்கு வசப்பட்டவையாக இருக்கும். சாய்ந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் எழுந்திருப்பவரும் அவற்றை இலகுவாகப் பறிக்க முடியும்.

(15) 76.15. வெள்ளிப் பாத்திரங்களுடனும் அவர்கள் பருக விரும்பும் போது தூய்மையான நிறமுடைய கிண்ணங்களுடனும் பணியாளர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்.

(16) 76.16. அந்தக் கிண்ணங்கள் வெள்ளியாக இருந்தபோதும் அவற்றின் நிறம் கண்ணாடியைப்போன்று தூய்மையானதாக இருக்கும். அவை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும். அதில் எவ்வித கூடுதலும் குறைவும் இருக்காது.

(17) 76.17. இவ்வாறு கண்ணியப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இஞ்சி கலந்த மதுபான கிண்ணம் புகட்டப்படும்.

(18) 76.18. அவர்கள் சுவனத்தில் ‘ஸல்ஸபீல்’ என்று சொல்லப்படக்கூடிய ஊற்றிலிருந்து அருந்துவார்கள்.

(19) 76.19. சுவனத்தில் என்றும் இளமையாக இருக்கக்கூடிய சிறுவர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் அவர்கள் முகப்பொலிவுடனும் அழகிய நிறத்துடனும் ஏராளமான எண்ணிக்கையில் பிரிந்துகிடப்பதால் சிதறிய முத்துக்கள் என்று நீர் எண்ணி விடுவீர்.

(20) 76.20. நீர் சுவனத்தில் பார்த்தால் அங்கு வர்ணிக்க முடியாத அருட்கொடைகளையும் ஈடிணையற்ற மாபெரும் அரசாட்சியையும் நீர் காண்பீர்.

(21) 76.21. அவர்கள் பகட்டான மெல்லிய பச்சை நிற பட்டாடைகளையும் கனமான பச்சை நிற பட்டாடைகளையும் தங்கள் உடலில் அணிந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அல்லாஹ் எவ்வித கலப்படமுமற்ற தூய்மையான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான்.

(22) 76.22. அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அருட்கொடை நீங்கள் செய்த நற்செயல்களுக்கு வழங்கப்படும் கூலியாகும். உங்களின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.”

(23) 76.23. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியுள்ளோம். நாம் அதனை உம்மீது ஒரேயடியாக இறக்கவில்லை.

(24) 76.24. அல்லாஹ் நிர்ணயித்த விதியையும் விதித்த சட்டதிட்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. பாவத்தின்பால் அழைக்கும் பாவிக்கும் நிராகரிப்பின்பால் அழைக்கும் நிராகரிப்பாளனுக்கும் கட்டுப்படாதீர்.

(25) 76.25. பகலின் ஆரம்பத்தில் ஃபஜ்ர் தொழுகையின் மூலமும் அதன் முடிவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகையின் மூலம் உம் இறைவனை நினைவுகூர்வீராக.

(26) 76.26. இரவு நேரத் தொழுகைகளான மஃரிப், இஷா தொழுகைகளின் மூலம் அவனை நினைவுகூர்வீராக. அது இரண்டிற்கும் பிறகு இரவில் எழுந்து தொழுவீராக.

(27) 76.27. நிச்சயமாக இந்த இணைவைப்பாளர்கள் உலக வாழ்க்கையின் மீது மோகம் கொண்டு தங்களுக்குப் பின்னால் வரக்கூடிய மறுமை நாளை விட்டுவிடுகிறார்கள். துன்பங்களும் சோதனைகளும் அடங்கியுள்ளதனால் அது கனமான நாளாகும்.

(28) 76.28. நாமே அவர்களைப் படைத்து அவர்களின் மூட்டுகளையும் உறுப்புகளையும் இன்ன பிறவற்றையும் பலப்படுத்தி அவர்களின் எடம்பைப் பலப்படுத்தினோம். நாம் அவர்களை அழித்து அவர்களுக்குப் பதிலாக அவர்களைப் போன்றவர்களை ஏற்படுத்த நாடினால் அவ்வாறு அழித்து அவர்களை மாற்றியிருப்போம்.

(29) 76.29. நிச்சயமாக இந்த அத்தியாயம் அறிவுரையும் நினைவூட்டலுமாகும். யார் தன் இறைவனின் திருப்தியின்பால் இட்டுச் செல்லும் வழியை தெரிவு செய்ய நாடுகிறாரோ அவர் அதனை எடுத்துக்கொள்வார்.

(30) 76.30. ஆயினும் உங்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வேறு யாராலும் அந்த வழியை தெரிவு செய்ய இயலாது. ஏனெனில் அனைத்து விவகாரங்களும் அவனிடமே உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு பயன்தரக்கூடியதையும் அவர்களுக்கு பயன்தராதவற்றையும் நன்கறிந்தவன். தன் படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டங்களிலும் அவன் ஞானம் மிக்கவன்.

(31) 76.31. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை தன் அருளில் பிரவேசிக்கச் செய்து அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கும் நற்செயல் புரிவதற்கும் அருள்புரிகிறான். நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களுக்காக அவன் மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது நரக நெருப்பாகும்.