78 - ஸூரா அந்நபஃ ()

|

(1) 78.1. அல்லாஹ் தன் தூதரை இந்த இணைவைப்பாளர்களிடம் அனுப்பிய பிறகு இவர்கள் எதைக்குறித்து ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள்?

(2) 78.2. அவர்கள் ஒருவருக்கொருவர் மகத்தான செய்தியைக் குறித்துக் கேட்டுக் கொள்கிறார்கள். அதுதான் மீண்டும் எழுப்பப்படும் செய்தியை உள்ளடக்கியுள்ள அவர்களின் தூதர் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனாகும்.

(3) 78.3. இந்தக் குர்ஆனைக் குறித்து அது சூனியமா அல்லது கவிதையா அல்லது ஜோதிடமா அல்லது முன்னோர்களின் கட்டுக் கதைகளா என எவ்வாறு அதனை வர்ணிப்பது என அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

(4) 78.4. அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். குர்ஆனை மறுக்கும் இவர்கள் தமது நிராகரிப்பின் தீய விளைவை விரைவில் அறிந்துகொள்வார்கள்.

(5) 78.5. பின்னர் அவர்களுக்கு அது உறுதியாகிவிடும்.

(6) 78.6. நாம் பூமியை அவர்கள் வாழ்வதற்கேற்ப வசதியாக விரிக்கப்பட்டதாக ஆக்கவில்லையா?

(7) 78.7. அது ஆட்டம் காணாமல் தடுப்பதற்கு அதில் மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம்.

(8) 78.8. -மனிதர்களே!- உங்களை உங்களில் ஆண், பெண் இணைகளாகப் படைத்துள்ளோம்.

(9) 78.9. நீங்கள் பணியிலிருந்து ஓய்வெடுக்கும் பொருட்டு தூக்கத்தை அமைத்துள்ளோம்.

(10) 78.10. உங்களின் மறைவிடங்களை நீங்கள் மறைத்துக்கொள்ளும் ஆடையைப் போன்று தன் இருளினால் உங்களை மறைக்கக் கூடியதாக இரவை ஆக்கியுள்ளோம்.

(11) 78.11. பகலை வாழ்வாதாரத்தைத் தேடி சம்பாதிப்பதற்கான களமாக ஆக்கியுள்ளோம்.

(12) 78.12. உங்களுக்கு மேலே சிறந்த முறையில் உருவாக்கபட்டுள்ள உறுதியான ஏழு வானங்களை அமைத்துள்ளோம்.

(13) 78.13. சூரியனை கடுமையாக எரியும் ஒளிரும் விளக்காக அமைத்துள்ளோம்.

(14) 78.14. மழைபொழிய தயாராக இருக்கும் மேகங்களிலிருந்து நாம் ஏராளமான நீரை இறக்குகின்றோம்.

(15) 78.15. அதன் மூலம் நாம் பலவகையான தானியங்களையும் தாவரங்களையும் வெளியாக்குவதற்காக.

(16) 78.16. ஒரு மரத்தின் கிளைகள் அடுத்த மரத்தோடு பின்னிப்பிணைந்த அடர்ந்த கிளைகளுடைய தோட்டங்களையும் வெளிப்படுத்துவதற்காகத்தான்.

(17) 78.17. நிச்சயமாக படைப்புகளிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாள் மாற்றமடையாத நேரம் குறிப்பிடப்பட்டதாகும்.

(18) 78.18. வானவர் இரண்டாது முறை சூர் ஊதும்போது - மனிதர்களே! - நீங்கள் கூட்டம்கூட்டமாக வருவீர்கள்.

(19) 78.19. வானம் திறக்கப்பட்டுவிடும். திறக்கப்பட்ட வாயில்களைப் போன்று அதில் திறந்த இடைவெளிகளும் வெடிப்புகளும் ஏற்பட்டுவிடும்.

(20) 78.20. மலைகள் இடம்பெயர்ந்து செல்லும். எந்த அளவுக்கெனில் அவை பரப்பப்பட்ட புழுதியாகி கானலைப் போன்றாகிவிடும்.

(21) 78.21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

(22) 78.22. அது அநியாயக்காரர்கள் திரும்புமிடமாகும்.

(23) 78.23. அவர்கள் அதில் நீடூழி காலம் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.

(24) 78.24. அங்கு அவர்கள் நரகின் வெப்பதைத் தணிக்கும் குளிர்மையான காற்றையோ, சுவையான பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.

(25) 78.25. கொதிக்கும் நீரையும் நரகவாசிகளிடமிருந்து வழியும் சீழையும் தவிர அவர்கள் வேறெதையும் சுவைக்க மாட்டார்கள்.

(26) 78.26. இது அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் வழிகேட்டிற்குத் தகுந்த கூலியாகும்.

(27) 78.27. ஏனெனில் உலகில் நிச்சயமாக அவர்கள், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாமல் இருந்ததனால், மறுமையில் கணக்குக் கேட்கப்படுவதை அஞ்சாதோராக இருந்தனர். அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பியிருந்தால் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

(28) 78.28. நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்களை அவர்கள் கடுமையாக மறுத்தார்கள்.

(29) 78.29. நாம் அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் எண்ணி கணக்கிட்டு வைத்துள்ளோம். அவை அவர்களின் செயல்பதிவேடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(30) 78.30. -வரம்புமீறியவர்களே!- நிரந்தரமான இந்த வேதனையைச் சுவையுங்கள். நாம் உங்களுக்கு மென்மேலும் வேதனை மேல் வேதனையைத்தான் அதிகரிப்போம்.

(31) 78.31. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு சுவனம் என்னும் வெற்றிக்கான அவர்கள் வேண்டிய இடம் இருக்கின்றது.

(32) 78.32. தோட்டங்களும் திராட்சைகளும்.

(33) 78.33. சம வயதுடைய கன்னிகளும்.

(34) 78.34. நிரப்பமான மதுக் கிண்ணங்களும் உண்டு.

(35) 78.35. அவர்கள் சுவனத்தில் வீணான விஷயத்தையோ, பொய்யானதையோ செவியுறமாட்டார்கள். ஒருவருக்கொருவர் பொய்யுரைக்கவுமாட்டார்கள்.

(36) 78.36. இவையனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய போதுமான வெகுமதியாகும்.

(37) 78.37. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவன். இம்மையிலும் மறுமையிலும் அளவிலாக் கருணையாளன். அவன் அனுமதியளித்தால் தவிர பூமியிலோ வானத்திலோ உள்ள எவரும் அவனிடம் உரையாட சக்திபெற மாட்டார்கள்.

(38) 78.38. ஜிப்ரீலும் வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில் அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்து சிபாரிசு கூறுபவரைத் தவிர வேறு யாரும் பரிந்துரை செய்ய முடியாது. ஏகத்துவ வார்த்தையை போன்று நேர்மையானதை கூறுவார்.

(39) 78.39. உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட அந்த உண்மையான நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. யார் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் தம் இறைவனை திருப்திபடுத்தும் நற்செயல்களுக்கான வழியை அமைத்துக் கொள்ளட்டும்.

(40) 78.40. -மனிதர்களே!- நெருங்கி வரக்கூடிய வேதனையைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்துவிட்டோம். அந்த நாளில் மனிதன் உலகில் தான் செய்த செயல்களைக் காண்பான். நீங்கள் மண்ணாக ஆகிவிடுங்கள் என்று மிருகங்களை நோக்கி மறுமை நாளில் கூறப்படுவது போன்று, நிராகரிப்பாளனும் வேதனையிலிருந்து விடுதலையடைய ஆசைப்பட்டவனாக, “அந்தோ! நான் மண்ணாக ஆகியிருக்கக்கூடாதா!” எனக் கூறுவான்.