8 - ஸூரா அல்அன்பால் ()

|

(1) 8.1. -தூதரே!- உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள். முழுமையாக அடிபணிவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களிடையே காணப்படும் பிரவினையையும் விரோதத்தையும் அன்பால், அழகிய பண்பால், மன்னிப்பால் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களை விட்டு விலகியிருப்பதற்கும் தூண்டுகிறது. இக்கேள்வி பத்ருப் போருக்குப் பின் கேட்கப்பட்டதாகும்.

(2) 8.2. உண்மையான நம்பிக்கையாளர்கள் பின்வரும் பண்புகளையுடையோரே. அவர்களிடம் அல்லாஹ்வைக் குறித்து நினைவு கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவார்கள். அவனுடைய வசனங்கள் அவர்களிடம் படித்துக் காட்டப்பட்டால் அவற்றில் சிந்தனை செலுத்துவார்கள். அதனால் அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். நன்மைகளைப் பெறுவதற்கும் தங்களை விட்டுத் தீங்குகளை அகற்றுவதற்கும் தங்கள் இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.

(3) 8.3. அவர்கள் தொழுகையை பரிபூரணமாக அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுகிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து கடமையான முறையிலும் உபரியான முறையிலும் செலவும் செய்கிறார்கள்.

(4) 8.4. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் ஈமானின் பண்புகளையும் இஸ்லாத்தின் வெளிப்படையான பண்புகளையும் ஒருசேர பெற்றிருப்பதால் உண்மையான நம்பிக்கையாளர்களாவர். இவர்கள் தங்கள் இறைவனிடம் உயர்ந்த அந்தஸ்தையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கண்ணியமான உணவையும் கூலியாகப் பெறுவார்கள். இவை அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள அருட்கொடைகளாகும்.

(5) 8.5. நீங்கள் போர்ச் செல்வங்கள் குறித்து கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்ட பிறகு அவற்றைப் பங்கிடும் உரிமையை அல்லாஹ் உங்களிடமிருந்து பறித்து தன்னிடமும் தன் தூதரிடமும் அந்த உரிமையை வைத்துக் கொண்டதைப் போல - தூதரே! - நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினர் வெறுத்த போதிலும் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக மதீனாவிலிருந்து புறப்படும்படி உம் இறைவன் வஹியின் மூலம் உமக்குக் கட்டளையிட்டான்.

(6) 8.6. -தூதரே!- நம்பிக்கையாளர்களில் இந்த பிரிவினர் இணைவைப்பாளர்களுடன் போர் நிகழும் என்பது தெளிவான பின்னரும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைப் போல உம்முடன் விவாதம் புரிகிறார்கள். இது அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாததாலும் போருக்குப் புறப்படுவதை கடுமையாக வெறுத்ததனாலேயாகும்.

(7) 8.7. -விவாதம் புரியும் நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பாளர்களின் இரு கூட்டத்தினரில் ஒன்றை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள். அவை வியாபாரக் கூட்டமும் அது சுமந்துவரும் பொருட்களை கனீமத்தாக பெறல் அல்லது அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்களுடன் போரிட வந்த கூட்டத்துடன் போரிட்டு அவர்களை வெல்வதுமாகும். இலகுவாக போரின்றி மடக்கிவிடலாம் என்பதனால் வியாபாரக் கூட்டத்தைப் பிடிப்பதையே நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ் இஸ்லாத்தின் பலம் மேலோங்குவதற்காக இணைவைப்பாளர்களின் தலைவர்களை அழிக்கவும் அவர்களில் பெரும்பாலோரை கைதிகளாகப் பிடிக்கவும், போர் செய்யுமாறு உங்களை ஏவி, சத்தியத்தை சத்தியம் எனக் காட்ட நாடுகிறான்.

(8) 8.8. இஸ்லாம் உண்மையானது என்பதற்கான சாட்சிகளை உண்டாக்கி அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மேலோங்கச் செய்து, சத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை அது தவறு என்பதற்கான அத்தாட்சிகளை ஏற்படுத்துவன் மூலம், அசத்தியம் எனக் காட்டவும் விரும்புகிறான். இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் சத்தியத்தை மேலோங்கச் செய்தே தீருவான்.

(9) 8.9. பத்ரு உடைய நாளில் அல்லாஹ்விடம் உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் உதவி தேடியதை நினைவுகூருங்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்த ஆயிரம் வானவர்களைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவிசெய்தான்.

(10) 8.10. -நம்பிக்கையாளர்களே!- வானவர்களைக் கொண்டு உதவி புரிவதை அவன் உங்கள் எதிரிக்கு எதிராக உங்களுக்கு அவன் உதவி செய்வான் என்ற நற்செய்தியாகவே ஆக்கியுள்ளான். மேலும் வெற்றியை உறுதியாக நம்பி உங்கள் உள்ளங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வுதவியைச் செய்தான். வெற்றி ஆள் பலம் ஆயுத பலத்தைக் கொண்டல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்தே வெற்றி கிடைக்கிறது. அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் வழங்கும் சட்டங்களில், அமைத்த விதிகளில், அவன் ஞானம்மிக்கவன்.

(11) 8.11. -நம்பிக்கையாளர்களே!- அவன் உங்களுக்கு ஏற்பட்ட எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போக்க, சிறு தூக்கத்தை அளித்ததை நினைவுகூருங்கள். அழுக்குகளிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும் போரின் போது உங்கள் உடல்கள் நிலைத்து நிற்க உங்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்துவதற்காகவும் மணல் நிலத்தை ஈரப்படுத்தி உங்கள் பாதங்கள் புதைந்துவிடாதவாறு அதனை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கினான்.

(12) 8.12. -தூதரே!- பத்ரில் நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவதற்காக அனுப்பப்பட்ட வானவர்களுக்கு உம் இறைவன் அறிவிப்பு செய்தான்: -“வானவர்களே!- உதவி மற்றும் ஆதரவின் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். எதிரிகளுக்கு எதிரான போரில் நம்பிக்கையாளர்களின் உறுதிகளைப் பலப்படுத்துங்கள். நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் நான் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவேன். எனவே -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களின் கழுத்துகளை அவர்கள் இறப்பதற்காக வெட்டுங்கள். அவர்கள் போர் செய்ய முடியாதவாறு செயலிழந்து செல்வதற்காக அவர்களின் ஒவ்வொரு மூட்டுக்களையும் உறுப்புக்களையும் தாக்குங்கள்.”

(13) 8.13. நிராரிப்பாளர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மற்றும் உறுப்புக்கள் தாக்கப்படுவதற்கான காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குக் கட்டளையிடப்பதை அவர்கள் செயல்படுத்தவுமில்லை; தடுக்கப்பட்டதை விட்டு தவிர்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் யார் அல்லாஹ்வுடைய கட்டளைக்கும் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகில் அவர்களை கைதிகளாகப் பிடித்தும் கொலைசெய்தும் மறுவுலகில் நெருப்பைக்கொண்டும் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.

(14) 8.14. -அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்வோரே!- இந்த உலகில் விரைவான இந்த வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் நிராகரிப்பிலும் பிடிவாதத்திலும் நிலைத்திருந்து இறந்து விட்டால் மறுவுலகில் நெருப்பினாலான வேதனையும் உள்ளது.

(15) 8.15. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! போரில் இணைவைப்பாளர்களை அண்மையில் சந்தித்தால் பின்வாங்கி புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். மாறாக அவர்களுக்கு முன்னிலையில் உறுதியாக நில்லுங்கள். பொறுமையுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள். அல்லாஹ் தன் உதவியைக் கொண்டு உங்களுடன் இருக்கின்றான்.

(16) 8.16. ஒரு திட்டத்தின்படி பின்வாங்கி திருப்பித் தாக்குதல் அல்லது உதவி படைகளுடன் சேர்ந்து கொள்ளுதல் ஆகிய காரணங்களின்றி உங்களில் யாரெல்லாம் புறங்காட்டி ஓடிவிடுவார்களோ அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தோடு திரும்பிவிட்டார்கள். அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மறுமையில் அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அது இருப்பிடங்களில் மோசமான இருப்பிடமாகும்.

(17) 8.17. -நம்பிக்கையாளர்களே!- பத்ருப் போரில் இணைவைப்பாளர்களை உங்களுடைய பலத்தையும் ஆற்றலையும் கொண்டு நீங்கள் கொலை செய்யவில்லை. மாறாக அல்லாஹ்தான் உங்களுக்கு அதற்கு உதவி செய்தான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களை நோக்கி எறிந்த சமயத்தில் நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்தான் நீங்கள் எரிந்ததை அவர்களை அடையச் செய்து எரிந்தான். எண்ணிக்கையிலும் முன்னேற்பாட்டிலும் அவர்கள் குறைவானவர்களாக இருந்தும் அல்லாஹ் எதிரிகளுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து அருள் புரிந்து அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா என்பதை சோதிக்க விரும்புகிறான். அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைகளையும் சொற்களையும் செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களையும், எதில் உங்களுக்கு நன்மை அடங்கியுள்ளது என்பதையும் அவன் நன்கறிந்தவன்.

(18) 8.18. மேற்கூறப்பட்ட இணைவைப்பாளர்கள் தோல்வியுற்று விரண்டோடும் அளவுக்கு அவர்களைக் கொன்றது, அவர்களுக்கு எரிந்தது, அவர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களை மேலோங்கச் செய்து அவர்களுக்கு அருள் புரிந்தது ஆகிய ஆனைத்துமே அல்லாஹ்வின் மூலமே நடந்தன. இஸ்லாத்திற்கு எதிராக நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்தக் கூடியவனாவான்.

(19) 8.19. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் வரம்புமீறிய அநியாயக்காரர்கள் மீது தன் வேதனையை இறக்கட்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், நீங்கள் பிரார்த்தித்தவாறே அல்லாஹ் உங்கள்மீது வேதனையை இறக்கிவிட்டான். உங்களுக்குப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு படிப்பினையாகவும் அமையத்தக்க வேதனையை உங்கள் மீது இறக்கியுள்ளான். இவ்வாறு வேண்டுவதை விட்டும் நீங்கள் விலகிக்கொண்டால், அது உங்களுக்குத்தான் நல்லது. ஏனெனில் சிலவேளை உங்களுக்கு அவகாசம் அளித்து உடனுக்குடன் உங்களை பழிவாங்காமல் விட்டுவிடுவான். நீங்கள் மீண்டும் இவ்வாறு வேண்டினால், நம்பிக்கையாளர்களுடன் போரிட்டால் நாமும் அவர்களுக்கு மீண்டும் உதவி செய்து உங்களை வேதனைக்குட்படுத்துவோம். உங்களின் கூட்டத்தினர்களோ உதவியாளர்களோ உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க முடியாது. அவர்கள் ஆள்பலம் ஆயுத பலம் ஆகியவற்றில் அதிகமாகவும் நம்பிக்கையாளர்கள் குறைவாகவும் இருந்தாலும் சரியே. நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ அவர்களை யாராலும் மிகைக்க முடியாது.

(20) 8.20. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படுவதை செவியேற்றுக் கொண்டே அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு, அவன் தடுத்துள்ளவற்றைச் செய்து அவனைப் புறக்கணித்துவிடாதீர்கள்.

(21) 8.21. -நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்களைப் போன்று, இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், கேட்பவற்றின் மூலம் அறிவுரை பெறுவதற்காக, அவற்றைச் சிந்தித்து படிப்பினை பெறும் விதத்தில் கேட்காமல், “எங்களிடம் ஓதிக்காட்டப்படும் குர்ஆனை நமது செவிகளினால் செவியேற்றுக் கொண்டோம்” என்று கூறுகிறார்கள்.

(22) 8.22. பூமியின் மீது ஊர்ந்து செல்லும் படைப்புகளில் அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்டது சத்தியத்தை செவியேற்று ஏற்றுக்கொள்ள முடியாத செவிடர்களும் அதனை வெளிப்படுத்த முடியாத ஊமையர்களும் ஆவர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தடுத்துள்ளவற்றையும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.

(23) 8.23. இந்த நிராகரிக்கும் இணைவைப்பாளர்களிடம் ஏதேனும் நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால் பயன் பெறும் விதத்தில் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். ஆதாரங்களையும் சான்றுகளையும் விளங்கியிருப்பார்கள். ஆயினும் அவர்களிடம் நன்மை இல்லை என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டான். -ஒருவேளை- அல்லாஹ் அவர்களை செவியேற்கச் செய்திருந்தாலும் பிடிவாதத்தினால் ஈமானைப் புறக்கணித்திருப்பார்கள்.

(24) 8.24. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களின் உண்மையான வாழ்வுள்ள சத்தியத்தின் பக்கம் உங்களை அழைத்தால், அவ்விருவரும் கட்டளையிட்டுள்ளவைகளுக்குக் கட்டுப்பட்டு தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவர்களுக்குப் பதிலளியுங்கள். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்புங்கள். சத்தியத்தை மறுத்து சத்தியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் சத்தியத்திற்கு அடிபணிவதற்கும் மத்தியில் குறுக்கிடுவதற்கும் அவன் சக்தியுடையவன். எனவே அவன் பக்கம் விரைந்து செல்லுங்கள். மறுமை நாளில் உங்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டுவான், நீங்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்புங்கள்.

(25) 8.25. -நம்பிக்கையாளர்களே!- வேதனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களில் பாவிகளை மட்டும் தாக்காது. அநியாயம் மிகைத்து அது தடுக்கப்படவில்லையெனில் மற்றவர்களையும் தாக்கும். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். பாவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

(26) 8.26. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் மக்காவில் குறைவான எண்ணிக்கையினராக, மக்காவாசிகள் உங்களை பலவீனர்களாகக் கருதி அடக்குமுறைக்குட்படுத்தி உங்கள் எதிரிகள் திடீரென உங்களைத் தாக்கலாம் என நீங்கள் அஞ்சுபவர்களாக இருந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்தான். பத்ருப் போர் போன்ற போர்களில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்து உங்களைப் பலப்படுத்தினான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவற்றில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய போர்ச் செல்வங்களும் அடங்கும். அல்லாஹ் அருட்கொடைகளை உங்களுக்கு இன்னுமின்னும் அதிகரிப்பதற்காக அவைகளுக்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தி அவற்றுக்கு நன்றி கெட்டத்தனமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே மேற்கூறியவற்றை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினான். நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டால் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பறித்து உங்களை வேதனையில் ஆழ்த்திடுவான்.

(27) 8.27. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகாமல் அவனுக்கும் தூதருக்கும் துரோகமிழைத்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது மோசடி என்பதை அறிந்து கொண்டே உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட கடன்கள் மற்றும் ஏனையவற்றில் மோசடி செய்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்களும் மோசடிக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.

(28) 8.28. -நம்பிக்கையாளர்களே!- உங்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோதனையே என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவைகள் மறுமைக்காக செயல்படுவதை விட்டும் உங்களைத் தடுக்கும். மோசடி செய்வதற்கும் உங்களைத் தூண்டும். அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய செல்வங்களையும் பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக மோசடி செய்து இந்தக் கூலியை இழந்துவிடாதீர்கள்.

(29) 8.29. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்சினால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதை அவன் உங்களுக்கு வழங்குவான். எனவே எது சத்தியம் எது அசத்தியம் என உங்களுக்கு குழப்பம் ஏற்படாது. நீங்கள் செய்த தீய செயல்களை அவன் போக்கிவிடுவான். உங்களின் பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மகத்தான அருளாளனாவான். அவன் தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்காக தயார் படுத்திவைத்துள்ள சுவனங்களும் அவனுடைய அருளில் உள்ளவைதான்.

(30) 8.30. -தூதரே!- உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும் அல்லது நாடுகடத்த வேண்டும் என்பதற்காக இணைவைப்பாளர்கள் இரகசியமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்கின்றனர். அவர்களது சூழ்ச்சியை அல்லாஹ் அவர்கள் மீதே திருப்பி விட்டு அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே மிகச் சிறந்த சூழ்ச்சியாளனாவான்.

(31) 8.31. நம்முடைய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக, “நாங்கள் முன்னரே இதைப் போன்று செவியேற்றுவிட்டோம். நாங்கள் நினைத்தால் இது போன்று நாமும் கூறுவோம். நாங்கள் செவியேற்கும் இந்தக் குர்ஆன் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை. ஒருபோதும் இதை நம்பமாட்டோம்” என்று கூறுகிறார்கள்.

(32) 8.32. -தூதரே!- இணைவைப்பாளர்கள் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “அல்லாஹ்வே! முஹம்மது கொண்டு வந்தது உண்மையாக இருக்குமானால் எங்கள் மீது வானத்திலிருந்து எம்மை அழிக்க கல்மழையைப் பொழியச் செய்வாயாக. அல்லது கடுமையான வேதனை ஏற்படுத்துவாயாக.” நிராகரிப்பு,பிடிவாதம் மிகைத்தே இவ்வாறு கூறினார்கள்.

(33) 8.33. -முஹம்மதே!- நீர் அவர்களிடையே இருக்கும் வரை அல்லாஹ், உமது அழைப்பை ஏற்றுகொண்ட அல்லது ஏற்றுக்கொள்ளாத உம் சமூகத்தை அடியோடு அழித்துவிடும் தண்டனையை வழங்கமாட்டான். அவர்களிடையே உம் இருப்பு அவர்களுக்குப் பாதுகாப்பாகும். அவர்கள் தங்களின் பாவங்களுக்கு பாவமன்னிப்புக் கோருபவர்களாக இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை அழித்துவிட மாட்டான்.

(34) 8.34. மஸ்ஜிதுல் ஹராமில் தொழவிடாமல், தவாப் செய்யவிடாமல் மக்களைத் தடுத்ததன் மூலம் தண்டிக்கப்படுவதற்கானவற்றை அவர்கள் செய்திருக்கும் போது, அவர்களுக்கு வேதனை வருவதை எதுதான் தடுக்க முடியும்? இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் நேசர்களாக இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களே அவனுடைய நேசர்களாவர். அல்லாஹ்வின் நேசர்களாக இல்லாத நிலமையில் தங்களை அவனுடைய நேசர்கள் என்று கூறும் அதிகமான இணைவைப்பாளர்கள் (அதனை) அறியமாட்டார்கள்.

(35) 8.35. மஸ்ஜிதுல் ஹராமில் சீட்டியடிப்பதும் கைதட்டுவதுமே இணைவைப்பாளர்களின் தொழுகையாகும். -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நீங்கள் நிராகரித்ததனால் பத்ருடைய நாளில் கொல்லப்பட்டது, கைதிகளாகப் பிடிக்கப்பட்டது போன்ற வேதனையைச் சுவையுங்கள்.

(36) 8.36. அல்லாஹ்வை நிராகரித்தோர் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்கின்றனர். இதற்குப் பின்பும் செலவளிப்பார்கள். அவர்கள் நினைத்தது நிறைவேறப் போவதேயில்லை. பின்னர் தமது சொத்துக்களை அவர்கள் செலவு செய்ததன் விளைவு கைசேதமே. எனெனில் சொத்துக்களையும் இழந்து அவற்றைச் செலவளித்த நோக்கத்தையும் அடையமுடிவில்லை. பின்னர் அவர்களை நம்பிக்கையாளர்கள் வெற்றி கொள்வதன் மூலம் தோல்விக்குள்ளாவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அதில் நுழையும் அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.

(37) 8.37. அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக செலவு செய்த இந்த நிராகரிப்பாளர்கள் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம், மோசமான நிராகரிப்பாளர்களையும் தூய்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்துவதற்காகவும் கெட்டவற்றை தீய மனிதர்கள், செல்வங்கள் மற்றும் செயல்கள் போன்றவற்றை ஒன்றோடோன்று சேர்த்து குவியலாக்கி அவற்றை நரகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். இவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்ததனால் நஷ்டமடைந்தவர்களாவர்.

(38) 8.38. -தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த உம் சமூகத்தாரிடம் கூறுவீராக: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர்கள் நிராகரிக்காமல், நம்பிக்கைகொண்டவர்களை அவனுடைய பாதையை விட்டுத் தடுக்காமல் அவர்கள் விலகிக் கொண்டால் அல்லாஹ் அவர்கள் முன்னர் செய்த பாவங்களை மன்னித்துவிடுவான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது முந்தைய பாவங்களை அழித்துவிடக் கூடியதாகும் அவர்கள் நிராகரிப்பின் பக்கம் மீண்டும் திரும்பினால், முந்தைய சமூகங்களுக்கான அல்லாஹ்வின் வழிமுறையே செல்லுபடியாகும். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்த போது அல்லாஹ் அவர்களை துரிதமாகத் தண்டித்தான்.

(39) 8.39. -நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பும், அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு முஸ்லிம்களைத் தடுப்பதும் நீங்கி, மார்க்கமும் கட்டுப்படுதலும் யாதொரு இணையுமற்ற அல்லாஹ்வுக்கே மட்டுமே உரித்தாகும் வரை உங்களின் எதிரிகளான நிராகரிப்பாளர்களுடன் போரிடுங்கள். அவர்கள் இணைவைப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிவற்றை விட்டும் விலகிவிட்டால் நீங்களும் அவர்களை விட்டு விடுங்கள். ஏனெனில் அல்லாஹ் அவர்களது செயல்களைக் கவனித்துக்கொண்டுள்ளான். எந்த மறைவானதும் அவனுக்கு மறைவானதல்ல.

(40) 8.40. நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் புறக்கணித்துவிட்டால் - -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். தன்னைச் சார்ந்தோருக்கு அவனே மிகச் சிறந்த பொறுப்பாளன், தனக்கு உதவுவோருக்கு மிகச் சிறந்த உதவியாளன். அவன் யாரை பொறுப்பெடுத்துக் கொண்டானோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். அவன் யாருக்கு உதவி செய்தானோ அவர் உதவி பெற்றுவிட்டார்.

(41) 8.41. -நம்பிக்கையாளர்களே!- அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர்செய்து நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய செல்வங்களை ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டும். அதில் நான்கு பங்குகள் போரிட்ட வீரர்களிடையே பங்கிடப்பட வேண்டும். ஐந்தாவது பங்கு ஐந்தாகப் பங்கிடப்பட வேண்டும். ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. இது முஸ்லிம்களின் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பங்கு முஹம்மது நபியின் உறவினர்களான ஹாஷிமின் குடும்பத்தார், முத்தலிபின் குடும்பத்தார் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டும். ஒரு பங்கு அநாதைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்காக வழங்கப்பட வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டிய பத்ருடைய நாளில் நம்முடைய அடியார் முஹம்மதுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் மேற்கூறியவாறே பங்கிடுங்கள். பத்ருடைய தினத்தில் உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவன் உங்களுக்கு உதவி செய்தான். உங்களுக்கு உதவி செய்த அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

(42) 8.42. நீங்கள் மதீனாவிற்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கிலும், இணைவைப்பாளர்கள் மக்கா பகுதியிலுள்ள மதீனாவை விட்டும் தூரமான பள்ளத்தாக்கிலும், வியாபாரக் குழு செங்கடலுக்கு அருகில் நீங்கள் இருக்கும் இடத்தைவிட தாழ்வான இடத்திலும் இருந்ததை நினைவு கூறுங்கள். நீங்களும் இணைவைப்பாளர்களும் பத்ரில் சந்திப்பதற்கு நேரம் குறித்திருந்தால் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் நேரம் குறிக்காமலே அங்கு உங்களை ஒன்று சேர்த்தான். இது, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து நிராகரிப்பாளர்களைக் கைவிட்டு விடுவதற்காகவும், தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்து ஷிர்க்கை இழிவுபடுத்தி தான் விரும்பும் விஷயத்தை நிகழ்த்துவதற்காகவேயாகும். இது, நம்பிக்கையாளர்கள் ஆள் மற்றும் ஆயுத பலத்திலும் குறைவாக இருந்தும் தம்மை வென்றுவிட்டதன் மூலம் தெளிவான ஆதாரம் நிரூபனமான பின் நிராகரிப்பாளர்களில் அழிந்தோர் அழிந்துவிட வேண்டும் என்பதற்காகவும் உயிர்வாழ்பவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திய தெளிவான ஆதாரத்துடன் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே அல்லாஹ்விடம் வாதிட ஒருவருக்கும் ஆதாரம் எஞ்சியிருக்காது. அனைவரின் பேச்சையும் அல்லாஹ் செவியேற்கிறான். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(43) 8.43. -தூதரே!- அல்லாஹ் உம்மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூர்வீராக. உம்முடைய கனவிலே இணைவைப்பாளர்களை குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டினான். நீர் நம்பிக்கையாளர்களுக்கு இதனை அறிவித்தீர். அவர்கள் இதைக் கொண்டு நற்செய்தி பெற்றுக்கொண்டார்கள். இதனால் எதிரிகளைச் சந்தித்து போரிட வேண்டும் என்ற அவர்களின் எண்ணங்கள் உறுதியாகிவிட்டன. அல்லாஹ் இணைவைப்பாளர்களை உம் கனவிலே அதிக எண்ணிக்கையினராகக் காட்டியிருந்தால் உம்முடைய தோழர்கள் மனந்தளர்ந்திருப்பார்கள்; போர்புரிய அஞ்சியிருப்பார்கள். ஆனாலும் அல்லாஹ் அவர்களை இதிலிருந்து பாதுகாத்து தோல்வியிலிருந்தும் பாதுகாத்தான். தன் தூதரின் கண்களுக்கு அவர்களைக் குறைத்துக் காட்டினான். அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிந்தவன்.

(44) 8.44. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இணைவைப்பாளர்களைச் சந்தித்த போது அல்லாஹ் அவர்களை உங்களுக்குக் குறைத்துக் காட்டியதை நினைவுகூருங்கள். அது அவர்களுடன் போர் புரிய உங்களைத் தூண்டியது. அதேபோன்று இணைவைப்பாளர்களும் பின்வாங்கிச் செல்லாமல் அவர்களும் உங்களுடன் போரிட முன்வருவதற்காக அவர்களின் கண்களுக்கும் உங்களைக் குறைத்துக் காட்டினான். கொலை, கைது ஆகியவற்றின் மூலம் இணைவைப்பாளர்களைப் பழிவாங்கி, எதிரிகளுக்கெதிராக வெற்றியை அளித்து நம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்து முடிவு செய்யப்பட்ட ஒரு காரியத்தை நடாத்துவதற்காகவே இவ்வாறு செய்தான். அல்லாஹ்வின் பக்கமே விவகாரங்கள் அனைத்தும் திரும்புகின்றன. அவன் தீயவர்கள் செய்த தீய செயல்களுக்காக தண்டனை வழங்குகிறான். நல்லவர்கள் செய்த நற்செயல்களுக்காக வெகுமதி வழங்குகிறான்.

(45) 8.45. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களின் ஏதேனும் ஒரு கூட்டத்தினரை நீங்கள் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள். பயந்துவிடாதீர்கள். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவிபுரிவதற்கு ஆற்றலுடையவன் அவனே. அவன் நீங்கள் விரும்புவதை உங்களுக்கு வழங்கி நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதை விட்டும் உங்களை அப்புறப்படுத்தலாம்.

(46) 8.46. உங்களது சொல்லிலும் செயலிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். கருத்துவேறுபட்டு விடாதீர்கள். அது உங்கள் பலவீனத்திற்கும் கோழைத்தனத்துக்கும் பலத்தை இழப்பதற்கும் காரணமாகும். எதிரிகளைச் சந்திக்கும் போது பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் உதவி மற்றும் ஆதரவளித்தல் மூலம் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ எவ்வித சந்தேகமுமின்றி அவனே வெற்றியாளன்.

(47) 8.47. மக்காவிலிருந்து பெருமைக்காகவும் மக்களிடம் காட்டுவதற்காவும் புறப்பட்ட இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். அதில் நுழைவதை விட்டும் அவர்களைத் தடுக்கின்றனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் சூழ்ந்தவனாக இருக்கின்றான். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(48) 8.48. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த பின்வரும் அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: “இணைவைப்பாளர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினான். அவர்களிடம் கூறினான்: “இன்று உங்களை மிகைப்பவர்கள் யாரும் இல்லை. நான் உங்களுக்கு உதவிபுரியக் கூடியவன். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவன்.” நம்பிக்கையாளர்களுடன் உதவிபுரியும் வானவர்களும், இணைவைப்பாளர்களுடன் கைவிடும் ஷைத்தானும் சேர்ந்து கொண்டு இரு அணிகளும் சந்தித்த போது ஷைத்தான் பின்வாங்கி ஓடிவிட்டான். அவன் இணைவைப்பாளர்களிடம் கூறினான்: “உங்களைவிட்டும் நான் நீங்கி விட்டேன். நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிவதற்காக வந்த வானவர்களை நான் காண்கிறேன். அல்லாஹ் என்னை அழித்து விடுவான் என்று நான் அஞ்சுகிறேன். அவன் தண்டிப்பதில் கடுமையானவன். அவனுடைய தண்டனையை யாராலும் தாங்க முடியாது.”

(49) 8.49. நயவஞ்சகர்களும் பலவீனமான நம்பிக்கையாளர்களும் பின்வருமாறு கூறியதை நினைவுகூருங்கள்: “இந்த முஸ்லிம்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது. ஆள் மற்றும் ஆயுத பலத்தில் அவர்கள் குறைவாகவும் அவர்களது எதிரிகள் அதிகமாகவும் இருந்தாலும் பலம் குன்றிய அவர்களே வெற்றிபெறுவர் என அவர்களுக்கு வாக்களிக்கின்றது. ” அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து, அவன் வாக்களித்த வெற்றியின் மீது நம்பிக்கைகொண்டோருக்கு அல்லாஹ் உதவி செய்வான், எவ்வளவு பலவீனம் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

(50) 8.50. -தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது நீர் அவர்களைக் காண வேண்டுமே! அவர்கள் முன்னோக்கினால் அவர்களின் முகங்களில் அடித்தவாறு பின்வாங்கி ஓடினால் முதுகுகளில் அடித்தவாறு வானவர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் கூறுவார்கள்: -“நிராகரிப்பாளர்களே!- எரிக்கக்கூடிய வேதனையைச் சுவையுங்கள்.” நீர் அதனைக் கண்டால் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர்.

(51) 8.51. -நிராகரிப்பாளர்களே!- உங்களது உயிர்களைக் கைப்பற்றும் போது அளிக்கப்படும் வேதனைமிக்க இந்த தண்டனையும் மண்ணறையிலும் மறுமையிலும் அளிக்கப்படும் பொசுக்கக்கூடிய இந்த வேதனையும் இவ்வுலகில் உங்களின் கைகள் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக ஏற்படக்கூடியதாகும். அல்லாஹ் மனிதர்கள் மீது அநீதி இழைப்பதில்லை. அவன் அவர்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவனே நீதிமிக்க தீர்ப்பாளன்.

(52) 8.52. இந்நிராகரிப்பாளர்களுக்கு இறங்கிய இவ்வேதனை அவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் இருந்த நிராகரிப்பாளர்களின் மீதும் நடைமுறைப்படுத்திய வழிமுறையே இதுவாகும். பிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தபோது அவர்களையும் அது பீடித்தது. அவர்களின் பாவங்களின் காரணமாக அவன் அவர்களை கண்ணியமான ஆற்றல் உடைய ஒருவனின் பிடியாகப் பிடித்தான். அவர்கள் மீது தன் தண்டனையை இறக்கினான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன். யாராலும் அவனை அடக்கவோ மிகைக்கவோ முடியாது. தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.

(53) 8.53. கடுமையான இந்த வேதனைக்குக் காரணம் இதுதான்: இறைநம்பிக்கை, நேர்வழியில் நடத்தல், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தல் என்ற நல்ல நிலையிலிருந்து, நிராகரிப்பு, பாவங்கள் மற்றும் நன்றி மறத்தல் என்ற தீய நிலைக்கு தம்மைத் தாமே மாற்றும் வரை அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு அளித்த அருட்கொடைகளை அவர்களிடமிருந்து பிடுங்க மாட்டான். தன் அடியார்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(54) 8.54. இந்த நிராகரிப்பாளர்களின் நிலைமை இவர்களுக்கு முன்னர் நிராகரித்த பிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முந்தைய நிராகரித்த சமூகங்களை ஒத்திருக்கின்றது. அவர்கள் தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். அவர்கள் செய்த பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிர்அவ்னின் சமூகத்தை அவன் கடலில் மூழ்கடித்து அழித்தான். பிர்அவ்னின் சமூகமும் அவர்களுக்கு முந்தைய சமூகங்களும் அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களாக, அவனுக்கு மற்றவர்களை இணையாக்கக்கூடியவர்களாக இருந்ததனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அவனுடைய வேதனைக்குத் தகுதியாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் மீது தண்டனையை இறக்கினான்.

(55) 8.55. பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக் கூடியவைகளில் மிகவும் கெட்டவை அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களாவர். சான்றுகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும் நிராகரிப்பில் நிலைத்திருப்பதனால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அவர்களிடமுள்ள பகுத்தறிவு, செவிப்புலன், பார்வை ஆகிய நேர்வழிக்கான சாதனங்கள் செயலிழந்துவிட்டன.

(56) 8.56. தூதரே! -பனூ குரைழா போன்ற- நீர் அவர்களுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் அல்லாஹ்வை அஞ்சாது ஒவ்வொரு முறையும் அதனை முறித்துவிடுவோர் தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதுமில்லை. தம்மீது எடுக்கப்பட்ட உறுதிமொழிகளைக் கடைபிடிப்பதும் இல்லை.

(57) 8.57. -தூதரே!- ஒப்பந்தங்களை முறிக்கும் இவர்களை போரில் நீர் சந்தித்தால் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் பொருட்டு அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் கடும் தண்டனையை அளிப்பீராக. இதனால் அவர்கள் உம்முடன் போர் புரிவதற்கும் உமக்கெதிராக உமது எதிரிகளுக்கு உதவி புரிவதற்கும் அஞ்சுவார்கள்.

(58) 8.58. -தூதரே!- உமக்கு விளங்கும் ஏதாவது அடையாளத்தினால் நீர் ஒப்பந்தம் செய்த ஒரு சமூகம் மோசடியில் ஈடுபட்டு ஒப்பந்தத்தை முறித்துவிடும் என்று நீர் அஞ்சினால் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக. அப்போதுதான் ஒப்பந்தம் முறிந்த தகவல் இருசாராரிடமும் சமமாகச் சென்றடையும். அவர்களிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்கிவிடாதீர். ஏனெனில் அவர்களிடம் தெரிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்குவது துரோகமாகும். துரோகமிழைப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை அவன் வெறுக்கிறான். எனவே துரோகமிழைப்பதை விட்டும் நீரும் எச்சரிக்கையாக இருப்பீராக.

(59) 8.59. நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிவிட்டதாக எண்ண வேண்டாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. மாறாக அது அவர்களை அடைந்தே தீரும்.

(60) 8.60. -நம்பிக்கையாளர்களே!- ஈட்டி எறிதல் போன்ற உங்களால் ஆள் மற்றும் ஆயுத பலத்தைத் தயார் செய்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் தடுத்துவைக்கப்பட்ட குதிரைகளை தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும் நீங்கள் காலச்சக்கரத்தின் கேட்டில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிராகரிப்பாளர்களான உங்களின் எதிரிகளையும் இவர்கள் அல்லாத வேறு மக்களையும் நீங்கள் அச்சமுறச் செய்யலாம். நீங்கள் அவர்களையும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பகைமையையும் அறிய மாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களையும் அவர்கள் உள்ளத்தில் மறைத்துவைத்திருக்கும் பகைமையையும் அறிவான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அல்லாஹ் அதனை உங்களுக்கு வழங்குவான். மறுமையில் அதற்கான வெகுமதியை குறைவின்றி நிறைவாக வழங்குவான். அவனுடைய பாதையில் செலவு செய்வதன் பக்கம் விரையுங்கள்.

(61) 8.61. -தூதரே!- அவர்கள் போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால் நீரும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக. அவர்களுடன் ஒப்பந்தம் செய்வீராக. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பீராக. அவன் உம்மை ஒருபோதும் கைவிட மாட்டான். நிச்சயமாக அவன் அவர்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்.

(62) 8.62. -தூதரே!- போருக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்து அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால், அவர்களின் ஏமாற்று சூழ்ச்சியை விட்டும் பாதுகாக்க அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன்தான் தன் உதவியால் உம்மை பலப்படுத்தினான். நம்பிக்கைகொண்ட அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் உதவியாலும் உம்மை பலப்படுத்தினான்.

(63) 8.63. உமக்கு உதவி செய்த நம்பிக்கையாளர்களின் பிரிந்து கிடந்த உள்ளங்களை அவன் ஒன்றிணைத்தான். அவற்றை ஒன்றிணைப்பதற்கு நீர் பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்திருந்தாலும் உம்மால் அவற்றை ஒன்றிணைத்திருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ்வே அந்த உள்ளங்களிடையே இணைப்பை ஏற்படுத்தினான். அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், திட்டமிடுவதில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

(64) 8.64. நபியே! உம் எதிரிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் உம்மைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். எனவே அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. அவனையே சார்ந்திருப்பீராக.

(65) 8.65. நபியே! நம்பிக்கையாளர்களைப் போர் புரியத் தூண்டுவீராக. அவர்களின் எண்ணங்களை உறுதிப்படுத்தி அதன்பால் ஊக்கமளிப்பீராக. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதில் பொறுமையுள்ள இருபது பேர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை வென்று விடலாம். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் ஆயிரம் நிராகரிப்பாளர்களை வென்றுவிடலாம். இது ஏனெனில், நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் தன் எதிரிகளை அழித்து நேசர்களுக்கு உதவி புரிவான் என்ற அல்லாஹ்வின் நியதியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். போரின் நோக்கத்தை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் போர் புரிகிறார்கள்.

(66) 8.66. -நம்பிக்கையாளர்களே!- உங்களது பலவீனத்தை அல்லாஹ் அறிந்ததனால் அவன் உங்கள் மீது கருணை காட்டும் முகமாக உங்கள் மீதுள்ள சுமையைக் குறைத்துவிட்டான். உங்களில் ஒருவர் பத்து நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக இரு நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதை அவன் உங்கள் மீது கடமையாக்கிவிட்டான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை போரில் வெல்லலாம். உங்களில் ஆயிரம் பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நிராகரிப்பாளர்களை வெல்லலாம். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பொறுமையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் இருக்கின்றான்.

(67) 8.67. நிராகரிப்பாளர்களை கொன்று குவிக்கும் வரை அவர்களைக் கைதிகளாகப் பிடிப்பது தூதருக்கு உகந்ததல்ல. அப்போதுதான் அவர்களின் உள்ளங்களில் பயம் புகுந்து கொள்ளும். அவர்கள் மீண்டும் போரிட மாட்டார்கள். -நம்பிக்கையாளர்களே!- பத்ரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டர்களிடம் பிணைத் தொகை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லாஹ்வோ மார்க்கத்திற்கு உதவி செய்து கிடைக்கும் மறுமையை விரும்புகிறான். தன் உள்ளமையில் பண்புகளில் அடக்கியாள்வதில் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. தான் அமைத்த விதிகளில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.

(68) 8.68. போர்ச் செல்வங்களைப் பெறுவதும், கைதிகளுக்காக பிணைத்தொகை பெறுவதும் ஆகுமானதே என தனது விதியில் ஏற்கனவே அல்லாஹ் தீர்மானித்திருக்காவிட்டால், வஹி இறங்கி அவை அனுமதிக்கப்பட முன்னரே, போர்ச் செல்வங்களையும், கைதிகளிடம் பிணைத் தொகையும் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை உங்களை அடைந்திருக்கும்.

(69) 8.69. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய போர்ச் செல்வங்களிலிருந்து உண்ணுங்கள். அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவன்; அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(70) 8.70. நபியே! பத்ருப் போரில் உம்மிடம் அகப்பட்ட கைதிகளிடம் கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகையைவிட சிறந்த நன்மைகளை உங்களுக்கு அளிப்பான். எனவே உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகைக்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் மற்றும் ஏனையவர்கள் விஷயத்திலும் நிறைவேறியது.

(71) 8.71. -முஹம்மதே!- உம்மிடம் வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகளின் மூலம் உமக்கு துரோகமிழைக்க அவர்கள் விரும்பினால், இதற்கு முன்னால் அவர்கள் அல்லாஹ்வுக்கு துரோகமிழைத்து விட்டார்கள். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு உதவி செய்துள்ளான். அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்தால் இதையே எதிர்பார்க்கட்டும். அல்லாஹ் தன் படைப்புகளையும் அவற்றுக்கு நன்மையளிக்கக்கூடியவற்றையும் நன்கறிவான். தன் நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன்.

(72) 8.72. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டு, நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டினை நோக்கி அல்லது அல்லாஹ்வை அமைதியாக வணங்க முடியுமான இடத்தை நோக்கி புலம்பெயர்ந்து, தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக ஜிஹாது செய்தவர்களும் தங்களில் வீடுகளில் அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு உதவி புரிந்தவர்களும் உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு ஆனால் இஸ்லாமிய நாட்டினை நோக்கி புலம்பெயராதவர்கள், அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயரும் வரை அவர்களுக்கு உதவிபுரிவதோ பாதுகாப்பு அளிப்பதோ உங்கள் மீது கடமையில்லை. நிராகரிப்பாளர்கள் அவர்கள் மீது அநீதி இழைத்து அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரியுங்கள். ஆனால் உங்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்கும் அவர்கள் மீறாத ஏதேனும் ஒப்பந்தம் இருந்தாலே தவிர. நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்கள் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(73) 8.73. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களை நிராகரிப்பு ஒன்றிணைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். நம்பிக்கையாளன் அவர்களுடன் நட்பு கொள்வதில்லை. நீங்கள் நம்பிக்கையாளர்களுடன் தோழமை கொண்டு நிராகரிப்பாளர்களுடன் பகைமை பாராட்டவில்லையெனில் அது நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்து விடும். அவர்கள் தங்களுக்கு உதவி செய்யக்கூடிய மார்க்க சகோதரர்களைப் பெறமாட்டார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதன் மூலம் உலகில் பெரும் குழப்பம் நிகழும்.

(74) 8.74. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய பாதையில் புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் முஹாஜிர்களுக்கு தங்க இடமளித்து உதவி செய்தவர்களுமே உண்மையில் ஈமான் எனும் பண்பைக் கொண்டு வர்ணிக்கத்தக்கவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் கூலி அவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கம் என்னும் கண்ணியமான வெகுமதியை வழங்குவதாகும்.

(75) 8.75. முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் இஸ்லாத்துக்கு முந்தியவர்களுக்குப் பின்னால் நம்பிக்கை கொண்டவர்களும் நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்துவதற்காக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்தவர்கள்- நம்பிக்கையாளர்களே! - இவர்களும் உங்களைச் சார்ந்தவர்களே. உங்களுக்குள்ள உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உள்ளன. முன்னர் இருந்தது போன்று ஈமான் மற்றும் ஹிஜ்ரத்தின் மூலம் அனந்தரம் பெறுவதை விட அல்லாஹ்வின் சட்டத்தில் அனந்தரம் பெற மிகத் தகுதியானவர்கள் இரத்த உறவுகளே. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு நன்மையளிக்கக் கூடியதை அறிந்து, அவர்களுக்கு அவன் சட்டங்களை வழங்குகிறான்.