(1) 82.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது.
(2) 82.2. நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறும்போது.
(3) 82.3. கடல்களில் சில சிலவற்றின் மீது திறந்துவிடப்பட்டு ஒன்றோடொன்று கலந்துவிடும் போது.
(4) 82.4. இறந்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்காக அடக்கஸ்தலங்களின் மண் புரட்டப்படும்போது.
(5) 82.5. அச்சமயத்தில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களையும் செய்யாமல் விட்டுவிட்டவற்றையும் அறிந்துகொள்வார்கள்.
(6) 82.6. இறைவனை நிராகரித்த மனிதனே! உன் இறைவன் தன் கிருபையினால் உடனுக்குடன் உன்னைத் தண்டிக்காமல் அவகாசம் அளித்த போது அவனது கட்டளைக்கு மாறாகச் செயல்பட எது உன்னைத் தூண்டியது?
(7) 82.7. அவன்தான் ஒன்றுமில்லாமல் இருந்த உன்னைப் படைத்தான். நேர்த்தியான உறுப்புகளை அளித்து உன்னைச் சீராக்கினான்.
(8) 82.8. அவன் உன்னைப் படைக்க நாடிய வடிவத்தில் படைத்தான். அவன் உன்னைக் கழுதையின் வடிவத்திலோ, குரங்கின் வடிவத்திலோ, நாயின் வடிவத்திலோ, இன்னபிற விலங்குகளின் வடிவத்திலோ படைக்காமல் உன் மீது அருள்புரிந்தான்.
(9) 82.9. -ஏமாளிகளே!- விடயம் நீங்கள் எண்ணுவது போலல்ல. மாறாக நீங்கள் கூலி வழங்கப்படும் நாளை பொய்ப்பித்து, அதற்காக செயல்படுவதில்லை.
(10) 82.10. நிச்சயமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்கும் வானவர்கள் உங்களின் மீது இருக்கிறார்கள்.
(11) 82.11. அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள்.
(12) 82.12. நீங்கள் செய்யும் செயல்களை அவர்கள் அறிவார்கள். அவற்றைப் பதிவுசெய்கிறார்கள்.
(13) 82.13. நிச்சயமாக அதிகமாக வணக்க வழிபாடுகள், நற்செயல் புரிபவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள்.
(14) 82.14. நிச்சயமாக பாவிகள் அவர்கள் மீது கொழுந்து விட்டெரியும் நரகத்தில் இருப்பார்கள்.
(15) 82.15. கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.
(16) 82.16. அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
(17) 82.17. -தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(18) 82.18. பின்னரும் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(19) 82.19. அந்நாளில் ஒருவர் மற்றவருக்குப் பயனளிக்க முடியாது. அந்நாளில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமே இருக்கும். வேறு யாரிடமுமல்ல. அவன் தான் நாடியவாறு செயல்படுவான்.