(1) 83.1. அளவில் மோசடி செய்வோருக்கு அழிவும் இழப்பும் உண்டாகட்டும்.
(2) 83.2. அவர்கள் மற்றவர்களிடம் அளந்து வாங்கினால் பரிபூரணமாக குறைவின்றி தங்களின் உரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
(3) 83.3. ஆனால் மக்களுக்கு அளந்து அல்லது நிறுத்து கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் குறைத்துவிடுகிறார்கள். நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த வேளையில் மதீனாவாசிகளின் நிலைமை இவ்வாறுதான் இருந்தது.
(4) 83.4. இந்த தீய செயலைச் செய்யும் இவர்கள் தங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளவில்லையா?
(5) 83.5. பயங்கரங்களையும் சோதனைகளையும் உள்ளடக்கிய அந்த மாபெரும் நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும்.
(6) 83.6. அந்நாளில் மக்கள் அனைவரும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் விசாரணைக்காக நிற்பார்கள்.
(7) 83.7. மரணித்தவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள், முனாபிக்குகளான பாவிகளின் பதிவேடு பூமியின் அடியில் நஷ்டமடைந்ததாக இருக்கும்.
(8) 83.8. -தூதரே!- ஸிஜ்ஜீன் என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
(9) 83.9. நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.
(10) 83.10. அந்நாளில் பொய்யாக்குபவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.
(11) 83.11. உலகில் தன் அடியார்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்கும் நாளை அவர்கள் மறுக்கிறார்கள்.
(12) 83.12. அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடிய, அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொருவருமே அந்த நாளை பொய்ப்பிக்கிறார்கள்.
(13) 83.13. அவனிடம் நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் “இவை முந்தைய சமூகங்களின் கட்டுக் கதைகள். இவை அல்லாஹ்விடமிருந்து வந்தவையல்ல” என்று கூறுகிறான்.
(14) 83.14. இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் செய்த பாவங்கள் அவர்களின் அறிவை மூடிவிட்டது, மிகைத்துவிட்டது. எனவே அவர்களால் தங்களின் உள்ளங்களைக் கொண்டு சத்தியத்தை பார்க்கமுடியவில்லை.
(15) 83.15. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட்டும் தடுக்கப்படுவார்கள்.
(16) 83.16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.
(17) 83.17. பின்னர் மறுமை நாளில் அவர்களிடம் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையைத்தான் உலகில் தூதர் உங்களிடம் கூறியபோது பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.”
(18) 83.18. கேள்வி கணக்கோ, கூலி வழங்குவதோ கிடையாது என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக கீழ்ப்படிந்தவர்களின் பதிவேடு இல்லியூனில் இருக்கும்.
(19) 83.19. -தூதரே!- இல்லியூன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(20) 83.20. நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.
(21) 83.21. ஒவ்வொரு வானத்திலுமுள்ள நெருக்கமான வானவர்கள் அந்த புத்தகத்தைக் கொண்டுவருவார்கள்.
(22) 83.22. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அதிகமாக கட்டுப்பட்டவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள்.
(23) 83.23. அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீதமர்ந்து தங்கள் இறைவனின் பக்கமும் தங்கள் மனம் விரும்புவதன், சந்தோசப்படுவதன் பக்கமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
(24) 83.24. நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் இன்பத்தின் அடையாளத்தையும் பொலிவையும் கண்டுகொள்வீர்.
(25) 83.25. அவர்களின் பணியாளர்கள் அவர்களுக்கு முத்திரையிடப்பட்ட பாத்திரங்களிலிருந்து மதுவை புகட்டுவார்கள்.
(26) 83.26. அதிலிருந்து கஸ்தூரியின் மணம் இறுதிவரை பொங்கிவரும். கண்ணியமான இந்த கூலியைப் பெறுவதற்காகவே போட்டியிடுபவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்வதன் மூலமாகவும் அவனை கோபமூட்டும் செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் போட்டியிட வேண்டும்.
(27) 83.27. முத்திரையிடப்பட்ட இந்த பானம் தஸ்னீம் என்னும் ஊற்றோடு கலந்திருக்கும்.
(28) 83.28. அது உயர்ந்த சுவனத்தில் ஓடக்கூடிய ஒரு ஊற்றாகும். அதிலிருந்து அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் எவ்வித கலப்படமுமின்றி தூய்மையாக பருகுவார்கள். ஏனைய நம்பிக்கையாளர்கள் அதனை மற்றவற்றோடு கலந்து பருகுவார்கள்.
(29) 83.29. நிச்சயமாக தமது நிராகரிப்பினால் குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து பரிகாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
(30) 83.30. அவர்கள் நம்பிக்கையாளர்களை கடந்துசென்றால் அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து பரிகாசமாக கண்ணசைப்பார்கள்.
(31) 83.31. அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றால் தமது நிராகரிப்பு மற்றும் நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்வதை நினைத்து மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புவார்கள்.
(32) 83.32. அவர்கள் முஸ்லிம்களைக் கண்டபோது கூறினார்கள்: “நிச்சயமாக இவர்கள் தங்களின் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டுவிட்டதனால் சத்தியப் பாதையைவிட்டும் தவறிவிட்டார்கள்.”
(33) 83.33. அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு அவர்களை ஒன்றும் அவர்களின் செயல்களைக் கண்காணிப்பவர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை.
(34) 83.34. உலகில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரித்தது போன்று மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
(35) 83.35. அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அமர்ந்தவாறு தங்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியுள்ள நிலையான அருட்கொடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
(36) 83.36. நிராகரிப்பாளர்கள் உலகில் தாங்கள் செய்த செயல்களுக்கு இழிவுமிக்க வேதனையால் தண்டிக்கப்பட்டுவிட்டனர்.