84 - ஸூரா அல்இன்ஷிகாக் ()

|

(1) 84.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,

(2) 84.2. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்குப் பொருத்தமானதாகும்.

(3) 84.3. தோலை விரிப்பது போல் பூமியை அல்லாஹ் விரியச் செய்யும் போது

(4) 84.4. அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும்.

(5) 84.5. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்கு விதிக்கப்பட்டதாகும்.

(6) 84.6. மனிதனே! நிச்சயமாக நீ நற்செயலோ, தீயசெயலோ செய்யக்கூடியவன். அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்குவதற்காக அதனை நீ மறுமை நாளில் காண்பாய்.

(7) 84.7. யாருடைய செயல்பதிவேடு அவரது வலக்கரத்தில் கொடுக்கப்படுமோ.

(8) 84.8. அவரது செயல்களை குற்றம்பிடிக்காமல் அவருக்கு எடுத்துக்காட்டி அல்லாஹ் அவரை இலகுவான முறையில் விசாரணை செய்வான்.

(9) 84.9. அவர் தம் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக திரும்புவார்.

(10) 84.10. யாருடைய செயல்பதிவேடு அவரது முதுகுக்குப் பின்னால் இடக்கரத்தில் கொடுக்கப்படுமோ.

(11) 84.11. அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார்.

(12) 84.12. அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.

(13) 84.13. நிச்சயமாக அவர் உலகில் தன் நிராகரிப்பு மற்றும் பாவங்கள் என்பவற்றில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்தார்.

(14) 84.14. நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார்.

(15) 84.15. ஏனில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவரை முதன்முறையாகப் படைத்ததுபோன்றே மீண்டும் அவரை வாழ்வின் பக்கம் திருப்புவான். நிச்சயமாக அவரது இறைவன் அவரது நிலையைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. விரைவில் அவரது செயலுக்கேற்ப அவன் அவருக்குக் கூலி வழங்குவான்.

(16) 84.16. சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் தோன்றும் செந்நிறத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

(17) 84.17. இரவின் மீதும் அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(18) 84.18. சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.

(19) 84.19. -மனிதர்களே!- விந்திலிருந்து இரத்தக்கட்டியாக, இரத்தக்கட்டியிலிருந்து சதைத்துண்டாக, வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நோக்கி நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கி நிச்சயம் ஏறிச்செல்வீர்கள்.

(20) 84.20. இந்த நிராகரிப்பாளர்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்வதில்லையே!

(21) 84.21. அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் தங்கள் இறைவனுக்காக சிரம்பணிவதுமில்லையே!

(22) 84.22. மாறாக நிராகரிப்பாளர்கள் தூதர் தங்களிடம் கொண்டுவந்ததை பொய்யாக்குகிறார்கள்.

(23) 84.23. அவர்களின் உள்ளங்கள் சேர்த்து வைத்திருப்பதை அவன் அறிவான். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(24) 84.24. -தூதரே!- அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்று அறிவித்துவிடுவீராக.

(25) 84.25. ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு சுவனம் என்னும் முடிவுறா நன்மை உண்டு.