(1) 9.1. முஸ்லிம்களே! அரேபிய தீபகற்பத்திலே இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து இதோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக்கொள்கின்றனர். அவை முடிவுற்றதாக அறிவிக்கப்படுகிறது.
(2) 9.2. எனவே இணைவைப்பாளர்களே! இப்பூமியில் நான்கு மாதங்கள் நீங்கள் பாதுகாப்பாக நடமாடலாம். அதற்குப் பின்னர் உங்களுக்கு எந்த ஒப்பந்தமும் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்களால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இவ்வுலகில் கொலை, கைது ஆகியவற்றின் மூலமும் மறுமை நாளில் நரகத்தில் நுழைவிப்பதன் மூலமும் இழிவுபடுத்தியே தீருவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இதில் ஒப்பந்தங்களை முறித்தவர்களும், காலம் நிர்ணயிக்காமல் பொதுவாக ஒப்பந்தம் செய்தவர்களும் அடங்குவர். காலம் நிர்ணயித்து ஒப்பந்தம் செய்தவர்களின் ஒப்பந்த காலம் நான்கு மாதத்திற்கு அதிகமாக இருப்பின் அந்த காலம் முடியும் வரை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
(3) 9.3. இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டார்கள் என்று அறுக்கப்படும் ஹஜ்ஜுடைய நாளில் மக்கள் அனைவருக்கும் செய்யப்படும் அறிவிப்பாகும். -இணைவைப்பாளர்களே!- நீங்கள் உங்கள் இணைவைப்பிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் பாவமன்னிப்புக் கோராமல் புறக்கணித்தால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தண்டனையிலிருந்தும் உங்களால் ஒருபோதும் தப்பிவிட முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். தூதரே! அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது எனவும் அறிவித்து விடுவீராக.
(4) 9.4. ஆயினும் உங்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றிய அதில் எந்தக் குறையும் வைக்காத இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அவர்கள் முந்தைய கட்டளையிலிருந்து விதிவிலக்கானவர்கள். ஒப்பந்த காலம் முடியும் வரை அவர்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நேசிக்கிறான். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது அவனது கட்டளையைச் செயல்படுத்துவதில் உள்ளதாகும். துரோகமிழைப்பது அவனது தடுத்தவைகளில் உள்ளதாகும்.
(5) 9.5. நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு பாதுகாப்பு அளித்த புனிதமான மாதங்கள் கடந்து விட்டால் இணைவைப்பாளர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள். அவர்களை அவர்களது கோட்டைகளுக்குள்ளே முற்றுகையிடுங்கள். அவர்களது பாதைகளில் அவர்களைக் குறிவைத்து காத்திருங்கள். அவர்கள் ஷிர்க்கிலிருந்து நீங்கி தொழுகையைக் கடைப்பிடித்து, தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்கி விட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாகி விட்டார்கள். எனவே அவர்களுடன் போர் புரிவதை விட்டுவிடுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(6) 9.6. தூதரே! உயிரும் உடமையும் ஆகுமாக்கப்பட்ட இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் வந்து பாதுகாவல் கோரினால் அவர்கள் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பீராக. பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக. ஏனெனில் நிராகரிப்பாளர்கள் இந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறியாத மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை செவியேற்பதன் மூலம் இதன் உண்மை நிலையை அறிந்து கொண்டால் சில வேளை நேர்வழியடையலாம்.
(7) 9.7. அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு ஒப்பந்தமோ பாதுகாப்போ இருக்க முடியாது. ஆயினும் மஸ்ஜிதுல் ஹராம் எல்லையில் வைத்து - முஸ்லிம்களே! - உங்களுடன் ஹுதைபிய்யா ஒப்பந்தம் செய்து கொண்டவர்களைத் தவிர. உங்களுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் அவர்கள் நேர்மையாக இருக்கும் வரை நீங்களும் நேர்மையாக இருங்கள். அதனை மீறி விடாதீர்கள். தன் அடியார்களில் தன் கட்டளைகளைச் செயல்படுத்தி தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(8) 9.8. உங்களின் எதிரிகளான அவர்களுக்கு எவ்வாறு ஒப்பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியும்? அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வையோ ஒப்பந்தத்தையோ உறவையோ பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்திவிடுவார்கள். அவர்களின் நாவுகள் உச்சரிக்கும் அழகிய வார்த்தைகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ நாவுகள் கூறுவதற்கு இணங்கவில்லை. அவர்கள் கூறுவதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத்தை முறித்ததனால் அல்லாஹ்வுக்கு அடிபணியாதவர்களே.
(9) 9.9. அல்லாஹ்வின் வசனங்களைப் பின்பற்றுவதற்குப் பகரமாக, அவற்றில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் உள்ளடங்கும், தங்களின் மனஇச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டு தம்மையும் தடுத்து அதனைப் புறக்கணித்து மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.
(10) 9.10. அவர்கள் தம்மிடமுள்ள பகைமையால் எந்த நம்பிக்கையாளனின் விஷயத்திலும் அல்லாஹ்வையோ உறவுமுறையையோ ஒப்பந்தத்தையோ பொருட்படுத்தப்போவதில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களாவர். ஏனெனில் அவர்கள் அநியாயம், வரம்பு மீறல் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளார்கள்.
(11) 9.11. அவர்கள் நிராகரிப்பிலிருந்து பாவமன்னிப்புக்கோரி, ‘இரு சாட்சியங்களையும் மொழிந்து, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தும் வழங்கினால் அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டனர். அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாவர். உங்களுக்குரிய உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதனால் அவர்களின் உயிர்களும், உடமைகளும், மானங்களும் பாதுகாப்புப் பெற்றவையாகிவிட்டன. அறிந்துகொள்ளும் மக்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம். அவர்கள்தாம் அவற்றைக் கொண்டு பயனடைவார்கள். மற்றவர்களுக்கும் பயனளிப்பார்கள்.
(12) 9.12. நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறி, உங்களின் மார்க்கத்தைக் குறைகூறினால் நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள்தாம் நிராகரிப்பின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தங்களின் நிராகரிப்பிலிருந்தும் ஒப்பந்தங்களை மீறுவதிலிருந்தும் மார்க்கத்தைக் குறை கூறுவதிலிருந்தும் அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் போரிடுங்கள்.
(13) 9.13. -நம்பிக்கையாளர்களே!- தங்களின் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் மீறியோருடன் நீங்கள் ஏன் போரிடக் கூடாது? அவர்கள் ‘தாருன் நத்வா’ என்னும் சபையிலே ஒன்றுகூடி தூதரை மக்காவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார்கள். அவர்கள்தாம் தூதரின் அணியில் இருக்கின்ற குசாஆ குலத்தாருக்கு எதிராக குறைஷிகளின் அணியில் இருக்கின்ற பக்ர் குலத்தாருக்கு உதவி செய்து போரைத் தொடங்கினார்கள். நீங்கள் அவர்களுக்குப் பயந்து அவர்களுடன் போரிடவில்லையா? நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்குத் தகுதியானவன்.
(14) 9.14. -நம்பிக்கையாளர்களே!- இந்த இணைவைப்பாளர்களுடன் போரிடுங்கள். நீங்கள் அவர்களுடன் போரிட்டால் உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். நீங்கள் அவர்களைக் கொல்வதன் மூலம் அது நிகழும். அவர்களைத் தோல்வியுறச் செய்து கைதிகளாக்கி இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வெற்றியை அளிப்பான். இதன் மூலம் யுத்தத்தில் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களை வெற்றிபெற வைத்து, எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களை சிறைபிடித்து போரில் கலந்து கொள்ளாத நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் உள்ள நோயை குணப்படுத்துவான்.
(15) 9.15. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களுக்கு வெற்றியை அளித்து அவர்களின் உள்ளங்களிலுள்ள கோபத்தை நீக்குவான். இந்த பிடிவாதக்காரர்கள் மக்கா வெற்றியின் போது சில மக்காவாசிகள் செய்தது போல் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். உண்மையாகவே மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் நன்கறிவான். தன் படைப்பில், தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவனாக இருக்கின்றான்.
(16) 9.16. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களை சோதிக்காமல் விட்டுவிடுவான் என்று எண்ணிக் கொண்டீர்களா? சோதிப்பது அவனுடைய நியதியாகும். உங்களில் உளத் தூய்மையுடன் ஜிஹாது செய்யக்கூடியவர்களையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கையாளர்களையும் விடுத்து நிராகரிப்பாளர்களை நெருக்கமானவர்களாகவும் உற்ற நண்பர்களாகவும் ஆக்கிக்கொள்ளாதவர்களையும் அவன் வெளிப்படையாக அறியும் வரை நிச்சயம் உங்களை சோதிப்பான். நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(17) 9.17. நிராகரிப்பை வெளிரங்கமாகச் செய்வதன் மூலம் தாம் நிராகரிப்பாளர்களே என ஏற்றுக்கொண்டுள்ள இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆலயங்களை பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளைக் கொண்டு பராமரிக்க முடியாது. செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமான் இன்மையினால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகி விட்டன. மறுமை நாளில், அவர்களில் மரணிக்கும் முன்னரே பாவமன்னிப்புக் கோரியவர்களைத் தவிர மற்றவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
(18) 9.18. அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் ஆக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள்தாம் அவனுடைய ஆலயங்களைப் பராமரிக்கத் தகுதியானவர்கள். ஏனெனில் இவர்கள்தாம் நேரான வழியில் இருக்கக்கூடியவர்கள். இணைவைப்பாளர்களோ நேர்வழியை விட்டும் வெகுதூரமானவர்கள்.
(19) 9.19. -இணைவைப்பாளர்களே!- ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டி, மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பவர்களை, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வார்த்தையை தாழ்த்துவதற்காக ஜிஹாது செய்யக்கூடியவர்களுக்கு சமமாக்கி விட்டீர்களா? அல்லாஹ்விடம் சிறப்பைப் பெறுவதில் அவர்களனைவரையும் சமமாக்கிவிட்டீர்களா? அவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். ஷிர்க்கின் மூலம் அநீதியிழைக்கும் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். அவர்கள் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்தாலும் சரியே.
(20) 9.20. நம்பிக்கை கொண்டு நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்து, செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது போன்றவற்றை ஒருசேர செய்பவர்கள் மற்றவர்களைவிட அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனத்தைப் பெறுபவர்கள்.
(21) 9.21. அவர்களின் இறைவன் தன் கருணையைக் கொண்டும், திருப்தியைக் கொண்டும் அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். இனி அவர்கள் விஷயத்தில் அவன் கோபம் கொள்ள மாட்டான். என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் அடங்கிய சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள் எனவும் நற்செய்தி கூறுகிறான்.
(22) 9.22. அந்த சுவனங்களில் அவர்கள் முடிவில்லாமல் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மார்க்கத்தை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குபவர்களுக்கு நிச்சயமாக அவனிடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது.
(23) 9.23. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுபவர்களே! உங்களின் தந்தையரும் உடன் பிறந்த சகோதரர்களும் ஏனைய உறவினர்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்தால் அவர்களிடம் முஸ்லிம்களின் இரகசியத்தை வெளிப்படுத்தி அவர்களுடன் ஆலோசனை செய்து, அவர்களை நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தும் யாரேனும் அவர்களிடம் நட்பு கொண்டு அன்பை வெளிப்படுத்தினால் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு விட்டார். பாவத்தின் காரணமாக தன்னை அழிவில் போட்டு தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொண்டார்.
(24) 9.24. தூதரே! நீர் கூறுவீராக: -“நம்பிக்கையாளர்களே!- உங்களின் தந்தையரும் ஆண்மக்களும், சகோதரர்களும், மனைவியரும், உறவினரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நீங்கள் இலாபத்தை விரும்பி நஷ்டத்தை அஞ்சும் உங்களின் வியாபாரமும், நீங்கள் தங்கியிருக்க விரும்பும் உங்களின் வீடுகளும் அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வதை விடவும் உங்களுக்குப் பிரியமானவையாக இருந்தால் அல்லாஹ் உங்கள் மீது இறக்கும் வேதனையை எதிர்பாருங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அவனுக்குப் பொருத்தமான நற்செயல் செய்யும் வாய்ப்பினை வழங்க மாட்டான்.”
(25) 9.25. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆள் பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் குறைவாக இருந்த போதும் நீங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருந்து வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடித்து, உங்களது அதிக எண்ணிக்கையின் மூலம் பெருமை கொள்ளாதிருந்த போது உங்களின் எதிரிகளான இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு பல போர்களில் உதவி புரிந்துள்ளான். மாறாக அதிக எண்ணிக்கை வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை. ஆனால் ஹுனைன் போரில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களைக் கவர்ந்துவிட்டது. “நாம் அதிகமாக இருப்பதனால் இன்று நாம் தோல்வியுறமாட்டோம் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனாலும் உங்களைக் கவர்ந்த அதிக எண்ணிக்கை உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதனால் உங்களின் எதிரிகள் உங்களை மிகைத்தார்கள். பூமி விசாலமாக இருந்த போதும் அது உங்களுக்கு நெருக்கடி மிகுந்ததாகத் தோன்றியது. பின்னர் நீங்கள் தோல்வியடைந்து எதிரிகளுக்கு புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.
(26) 9.26. நீங்கள் உங்கள் எதிரியை விட்டு ஓடிய பிறகு அல்லாஹ் தன் தூதரின் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் நிம்மதியை இறக்கினான். அவர்கள் போரில் உறுதியாக நின்றார்கள். நீங்கள் காணாத வானவர்களையும் அவன் இறக்கினான். கொன்றும், சொத்துக்களை எடுத்தும், ஆண்களையும் பெண்களையும் கைது செய்தும் அவன் நிராகரிப்பாளர்களைத் தண்டித்தான். இவர்களுக்கு வழங்கப்பட்ட இத்தண்டனை, நிராகரித்து தங்களின் தூதரைப் பொய்யாக்கி அவர் கொண்டுவந்ததைப் புறக்கணித்தவர்களுக்குரிய தண்டனையாகும்.
(27) 9.27. அத்தண்டனைக்குப் பின்னர் நிராகரிப்பு, வழிகேட்டிலிருந்து மீள்வோரை அல்லாஹ் மன்னிப்பான். அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்ட பிறகும் அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.
(28) 9.28. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! இணைவைப்பாளர்களிடம் நிராகரிப்பு, அநியாயம், தீய குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுவதால் அவர்கள் அசுத்தமானவர்களாவர். எனவே -மஸ்ஜிதுல் ஹராமை உள்ளடக்கிய- மக்காவின் புனித எல்லைக்குள் அவர்கள் ஹஜ் செய்யக்கூடியவர்களாக, உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் இந்த வருடமான ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டுக்குப் பிறகு நுழையக் கூடாது. -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் எடுத்து வந்துகொண்டிருந்த உணவுகள் பல்வேறு வியாபாரங்கள் தடைபடுவதால் நீங்கள் வறுமையை அஞ்சினால், நிச்சயமாக அல்லாஹ் நாடினால் தன் அருளை உங்களுக்கு வழங்கப் போதுமானவன். உங்களின் நிலைகளைப் பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களுக்காக திட்டமிடக் கூடியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
(29) 9.29. -நம்பிக்கையாளர்களே!- யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் அல்லாஹ்வை இணையற்ற இறைவனாக ஏற்றுக் கொள்ளாத, மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாத, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவைகளான இறந்தவை, பன்றி இறைச்சி, மதுபானம், வட்டி ஆகியவற்றைத் தவிர்ந்து கொள்ளாத, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அடிபணியாத நிராகரிப்போருடன், அவர்கள் அடிபணிந்து தங்கள் கைகளால் ஜிஸ்யா வரி தரும் வரை போரிடுங்கள்.
(30) 9.30. அனைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களே. யூதர்கள் உசைரை அல்லாஹ்வின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். கிருஸ்தவர்கள் மஸீஹ் ஈசாவை அல்லாஹ்வின் மகன் என்றுகூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். அவர்களது இந்த அவதூறு எவ்வித ஆதாரமுமின்றி அவர்களின் வாயினால் கூறிய ஒரு கூற்றே. அவர்கள் தமது இந்தக் கூற்றில் “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்களாவர் என்று” கூறிய அவர்களுக்கு முன்னிருந்த இணைவைப்பாளர்களின் கூற்றுக்கே ஒப்பாகின்றனர். இதனை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். இவ்வளவு தெளிவான சத்தியத்தை விட்டு அசத்தியத்தை நோக்கி எவ்வாறுதான் அவர்கள் திசைதிருப்பப்படுகிறார்களோ?!
(31) 9.31. யூதர்கள் தங்களின் அறிஞர்களையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சந்நியாசிகளையும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்ததை அவர்கள் மீது தடைசெய்கிறார்கள். கிருஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா மஸீஹை அல்லாஹ்வுடன் இறைவனாக்கிக் கொண்டார்கள். யூத அறிஞர்களுக்கும் கிருஸ்தவ துறவிகளுக்கும் உசைருக்கும் மர்யமின் மகன் ஈஸாவுக்கும் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குமாறு அவன் கட்டளையிட்டான். அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன். இணைவைப்பாளர்கள் கூறுவது போல அவனுக்கு இணைகள் இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.
(32) 9.32. இந்த நிராகரிப்பாளர்களும் அந்நிய மதத்தினர்களும் தமது இட்டுக்கட்டல்கள் மூலமும் முஹம்மது கொண்டு வந்ததை நிராகரிப்பதன் மூலமும் இஸ்லாத்தையும் அதிலுள்ள ‘அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனுடைய தூதர் கொண்டுவந்தது உண்மை’ என்பதற்கான தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அழித்துவிட நாடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் மற்ற மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்தே தீருவான். நிச்சயமாக அல்லாஹ் அதனை பூர்த்தி செய்து, வெளிப்படுத்தி, மேலோங்கச் செய்வான். அல்லாஹ் ஏதேனும் ஒன்றை நாடிவிட்டால் மற்றவர்களின் நாட்டம் நடைபெறாது.
(33) 9.33. அல்லாஹ்தான் தன் தூதர் முஹம்மதை மக்களுக்கு, வழிகாட்டும் குர்ஆன் என்னும் நேர்வழியைக் கொண்டும் இஸ்லாம் என்னும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அதிலுள்ள ஆதாரங்கள் மற்றும் சட்டங்களைக் கொண்டு எல்லா மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அனுப்பினான். அதனை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே.
(34) 9.34. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! யூத அறிஞர்கள் மற்றும் கிறிஸ்தவ துறவிகளில் பெரும்பாலோர் மக்களின் செல்வங்களை இலஞ்சமாகவும் இன்னபிற வழிகளின் மூலமாகவும் உரிமையின்றிப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள். -தூதரே!- தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைத்து, அதில் தம் மீது கடமையான ஸகாத்தை வழங்காதோருக்கு மறுமை நாளில் அவர்களைக் கவலையூட்டும் வேதனைமிக்க தண்டனை உண்டு என்று கூறுவீராக.
(35) 9.35. வழங்க வேண்டிய உரிமையை வழங்காமல் அவர்கள் சேர்த்து வைத்தவை மறுமை நாளில் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்படும். அது நன்கு கொதித்தவுடன் அதைக் கொண்டு அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு இடப்படும். கண்டிக்கும் விதத்தில் அவர்களிடம் “இதுதான் கடமையான உரிமைகளை வழங்காமல் நீங்கள் சேகரித்து வைத்த செல்வங்கள். உரிய கடமைகளைச் செய்யாமல் நீங்கள் சேகரித்து வைத்தவற்றின் விளைவை அனுபவியுங்கள்.” என்று கூறப்படும்.
(36) 9.36. அல்லாஹ்வின் தீர்ப்பிலும் ஏற்பாட்டிலும் வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த போதே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் அவ்வாறே அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான். அதில் நான்கு மாதங்களில் போர்புரிவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். (அவை, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய தொடராக வரும் மூன்று மாதங்களும் தனியாக இடம்பெறும் ரஜப் மாதமும் ஆகும்). வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்று மேற்கூறப்பட்ட விடயமே நேரான மார்க்கமாகும். எனவே தடைசெய்யப்பட்ட மாதங்களில் போர் செய்து, அதன் புனிதத்தை சீர்குழைத்து அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துவிடாதீர்கள். இணைவைப்பாளர்கள் உங்கள் அனைவருடனும் போரிடுவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போரிடுங்கள். தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்தவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோருக்கு உதவிசெய்தல், அவர்களை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ அவரை யாராலும் வெல்ல முடியாது.
(37) 9.37. அரபிகள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தது போன்று புனிதப்படுத்தப்பட்ட மாதத்தின் புனிதத்தை, புனிதப்படுத்தப்படாத ஒரு மாதத்திற்கு மாற்றி, அதனைப் புனித மாதத்தின் இடத்தில் வைத்து அதன் புனிதத்தைப் பிற்படுத்துவது இறைநிராகரிப்பை விட மேலதிகமான நிராகரிப்பாகும். புனித மாதங்களின் விடயத்தில் அவனது சட்டத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர். ஷைத்தான் தவறான இந்த வழிகாட்டலை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வை நிராகரித்தவர்களை வழிகெடுக்கிறான். ஒரு வருடம் அதன் புனிதத்தை மீறுகின்றனர். மற்றொரு வருடம் அதன் புனிதத்தைப் பேணுகின்றனர். உரிய மாதத்துக்கு முரண்பட்டாலும் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் எண்ணிக்கையுடன் உடன்படுவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். எனவேதான் ஒரு மாதத்தின் புனிதத்தை மீறினால் அதற்குப் பகரமாக இன்னுமொரு மாதத்தைப் புனிதப்படுத்துகின்றனர். அதன் மூலம் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் புனிதத்தை அவர்கள் மீறுகின்றனர். அதற்குரிய சட்டங்களுக்கு மாறுசெய்கின்றனர். அவர்களின் இந்த தீய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டியுள்ளான். எனவே அதன்படி செயல்படுகிறார்கள். அவற்றில் ஒன்றே புனித மாதத்தைப் பிற்போடுவதாகும். நிராகரிப்பில் நிலைத்திருக்கும் நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
(38) 9.38. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போரிடுவதற்காக அழைக்கப்பட்டால் சோம்பலுற்று, உங்களின் வீடுகளில் தங்கி விடுகிறீர்களே? அல்லாஹ் தன் பாதையில் போரிடுபவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள நிலையான மறுமை இன்பங்களுக்குப் பகரமாக அழியக்கூடிய, நிரந்தரமற்ற இவ்வுலக இன்பங்களை விரும்புகிறீர்களா? மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலக இன்பங்கள் அற்ப இன்பங்களேயாகும். நிரந்தரமானதை விட்டு விட்டு அழியக்கூடியதையும் மகத்தானதை விட்டுவிட்டு அற்பமானதையும் ஓர் அறிவாளி எவ்வாறு தேர்ந்தெடுப்பான்?
(39) 9.39. -நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போர்புரிவதற்குப் புறப்படவில்லையெனில் உங்களை அடக்குதல், இழிவுபடுத்தல் போன்றவற்றின் மூலம் அவன் உங்களைத் தண்டிப்பான். உங்களை விடுத்து வேறோரு சமூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படக்கூடியவர்களாக, போருக்காக அழைப்புவிடுக்கப்பட்டால் புறப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. அவன் உங்களை விட்டும் தேவையற்றவன். நீங்கள்தாம் அவன்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிட முடியாது. நீங்கள் இல்லாவிட்டாலும் தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவி செய்வதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(40) 9.40. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யவில்லையெனில், அவருடைய அழைப்பை ஏற்று அவனுடைய பாதையில் போர் செய்வதற்கான அவரது அழைப்புக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையெனில், நீங்கள் இல்லாதிருந்த சமயத்திலும் அவன் அவருக்கு உதவிசெய்துள்ளான். அதுதான் இணைவைப்பாளர்கள் அவரையும் அபூபக்கர் (ரழி) அவர்களையும் வெளியேற்றிய சமயமாகும். அவர்கள் இருவரும் ஸவ்ர் என்னும் குகையில் வேறு யாருமின்றி தம்மைத் தேடிக்கொண்டிருந்த நிராகரிப்பாளர்களை விட்டும் மறைந்திருந்தனர். இணைவைப்பாளர்கள் தம்மைக் கண்டுபிடித்து விடுவார்களோ என அபூபக்ர் (ரழி) பயந்த போது தூதர் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் நம்முடனிருந்து பலப்படுத்திக் கொண்டும் உதவி செய்து கொண்டும் இருக்கின்றான்.” அல்லாஹ் தன் தூதரின் உள்ளத்தில் நிம்மதியை இறக்கினான். அவருக்கு உதவி செய்வதற்காக உங்களால் பார்க்க முடியாத அவரைப் பலப்படுத்தும் வானவர் படையை அனுப்பினான். இஸ்லாத்தை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்தினான். அல்லாஹ்வின் வாக்கை உயர்ந்ததாக மாற்றினான். அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்குவதிலும் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது திட்டமிடலில் தான் அமைத்த விதிகளில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
(41) 9.41. -நம்பிக்கையாளர்களே!- சிரமத்திலும் இலகுவிலும், இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகப் புறப்படுங்கள். உங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள். ஏனெனில் அவ்வாறு புறப்பட்டு, செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்வது, ஜிஹாது செய்யாமல் இருந்து கொண்டு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதை விட இவ்வுலகிவும் மறுவுலகிலும் அதிகப் பயனைத் தரக்கூடியதாகும். நீங்கள் அதனை அறிந்தவர்களாக இருந்தால் இதற்காக ஆர்வம் கொள்ளுங்கள்.
(42) 9.42. -தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதி கோரிய நயவஞ்சகர்களை, எளிதாக அடைந்துகொள்ளும் போர்ச் செல்வத்துக்கும் சிரமமற்ற பயணத்துக்கும் நீர் அழைத்திருந்தால் அவர்கள் உம்முடன் வந்திருப்பார்கள். ஆயினும் எதிரியை நோக்கிய பயணத் தூரம் நீண்டதாக அவர்களுக்குத் தென்பட்டதால் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதிகோரும் இந்த நயவஞ்சகர்கள் நீர் திரும்பிவரும் போது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுவார்கள்: “உங்களுடன் ஜிஹாதிற்காக புறப்பட முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டிருப்போம்.” போரை விட்டு பின்தங்கியதனாலும் பொய்ச் சத்தியங்களினாலும் தம்மை அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கி தமக்குத் தாமே அழித்துக் கொண்டார்கள். அவர்கள் தமது கூற்றிலும் சத்தியங்களிலும் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
(43) 9.43. -தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க அவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு நீர் எடுத்த முடிவுக்காக அல்லாஹ் உம்மை மன்னித்துவிட்டான். உண்மையாகவே காரணம் உடையவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பது தெளிவாகும் முன்னரே அவர்களுக்கு நீர் ஏன் அனுமதியளித்தீர்? அவ்வாறு தெளிவாகும் வரை காத்திருந்திருந்தால் பொய்யர்களின்றி உண்மையாளர்களுக்கு மாத்திரம் நீர் அனுமதி வழங்கியிருக்கலாம்.
(44) 9.44. தூதரே! அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் போர் புரியாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருவது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களது பண்பல்ல. மாறாக அவர்களைப் புறப்படுமாறு எப்பொழுது நீர் அழைத்தாலும் புறப்பட்டு தமது பொருட்களாலும் உடலாலும் போர்புரிவதே அவர்களது பண்பாகும். தன் அடியார்களில் தன்னை அஞ்சக்கூடியவர்களை அவன் அறிவான். உம்முடன் புறப்படுவதைத் தடுக்கும் தகுந்த காரணங்களின்றி உம்மிடம் அவர்கள் அனுமதிகோர மாட்டார்கள்.
(45) 9.45. -தூதரே!- அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதிற்குப் புறப்படாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதிகோருபவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத நயவஞ்சகர்களாவர். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளார்கள். சத்தியத்தை அடைய முடியாமல் தங்கள் சந்தேகங்களில் அவர்கள் தடுமாறித் திரிகிறார்கள்.
(46) 9.46. ‘நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக உம்முடன் புறப்பட விரும்புகிறோம்’ என்ற அவர்களது கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தயாராகியிருப்பார்கள். ஆனால் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. எனவேதான் தமது வீடுகளில் அமர்ந்திருப்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு புறப்படுவது அவர்களுக்குச் சிரமமாகி விட்டது.
(47) 9.47. இந்த நயவஞ்சகர்கள் உங்களுடன் புறப்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அவர்கள் உங்களுடன் புறப்பட்டால், போரிடச் செய்யாமல் இருப்பதற்கான முயற்சி, சந்தேகங்களைத் தோற்றுவித்தல் போன்றவற்றின் ஊடாக குழப்பத்தையே ஏற்படுத்துவார்கள். உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கோல் மூட்டுவதில் விரைவாக ஈடுபடுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் பரப்பும் பொய்யைக் கேட்டு அதனை ஏற்றுப் பரப்புவர்களும் உங்களிடையே உள்ளனர். இதனால் உங்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி விடும். நம்பிக்கையாளர்களிடையே சூழ்ச்சிகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(48) 9.48. தபூக் போருக்கு முன்னாலிருந்தே இந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குழைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். -தூதரே!- பலவகையான சூழ்ச்சிகளால் போர் செய்யும் உமது எண்ணத்தை மாற்ற நினைத்தனர். ஆனால் அல்லாஹ்வின் உதவியும் பலப்படுத்தலும் உமக்குக் கிடைத்தன. தன் மார்க்கத்தைக் கண்ணியப்படுத்தி, தன் எதிரிகளை அடக்கினான். அசத்தியம் சத்தியத்தை மிகைக்க வேண்டும் என அவர்கள் விரும்புபவர்களாக இருந்ததால் சத்தியம் வெற்றி பெறுவதை அவர்கள் வெறுப்பவர்களாக உள்ளனர்.
(49) 9.49. “அல்லாஹ்வின் தூதரே! போரை விட்டு பின்தங்குவதற்கு எனக்கு அனுமதியளியுங்கள். என்னை உங்களுடன் புறப்படுமாறு கட்டாயப்படுத்தி எதிரிகளின் - ரோமானியரின் - பெண்களால் நான் பாதிக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிட காரணமாகிவிடாதீர்கள்” என்று நயவஞ்சகர்களில் சிலர் உம்மிடம் போலியான சாக்குப்போக்குகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதைவிட பெரும் சோதனைகளான நயவஞ்சகம், போருக்குப் புறப்படாமல் பின்தங்குதல் ஆகியவற்றில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். மறுமை நாளில் நரகம் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கும். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. தப்புவதற்கான எந்த வழியையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
(50) 9.50. -அல்லாஹ்வின் தூதரே!- அல்லாஹ்வின் அருளான உமக்கு மகிழ்ச்சியளிக்கும் வெற்றியோ போர்ச் செல்வங்களோ கிடைத்தால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். அதற்காக கவலைப்படுகிறார்கள். உமக்கு துன்பமோ தோல்வியோ கிடைத்து விட்டால் இந்த நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நம்மை நாம் காத்துக் கொண்டோம் உறுதியான முடிவெடுத்து நம்பிக்கையாளர்கள் போருக்குச் சென்றது போல் நாம் போருக்குச் செல்லவில்லை. அவர்கள் சென்றதனால் கொலையுண்டு கைதுக்கும் ஆளானார்கள். ”பின்னர் இந்த நயவஞ்சகர்கள் தப்பிய மகிழ்ச்சியுடன் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்கிறார்கள்.
(51) 9.51. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் தலைவனாகவும் நாங்கள் அடைக்கலம் தேடும் பாதுகாவலனாகவும் இருக்கின்றான். நாங்கள் எங்கள் விவகாரங்களில் அவனையே சார்ந்துள்ளோம். அவன் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே அவர்களுக்குப் போதுமானவன்; மிகச் சிறந்த பொறுப்பாளன்.
(52) 9.52. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “வெற்றி அல்லது வீரமரணம் நிகழுவதைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? ஆனால் நாமோ உங்களை அழித்து விடும் ஒரு வேதனையை அல்லாஹ் உங்கள் மீது இறக்குவதை அல்லது உங்களுடன் போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் போது எங்களின் கைகளால் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் உங்களை அவன் தண்டிப்பதையுமே எதிரப்பார்க்கிறோம். எனவே எங்களுக்கு நேர்வதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்களுக்கு நேர்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
(53) 9.53. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களின் செல்வங்களை விரும்பியோ விரும்பாமலோ செலவு செய்யுங்கள். அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் அவனுக்கு அடிபணியாததனாலும் நீங்கள் செலவு செய்யும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(54) 9.54. அவர்கள் செய்யும் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படாததற்கான மூன்று காரணங்கள்: (ஒன்று) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். (இரண்டு) அவர்கள் தொழுதாலும் சோம்பேறிகளாகவே தொழுகிறார்கள். (மூன்று) அவர்கள் தங்களின் செல்வங்களை விரும்பி செலவு செய்வதில்லை. வெறுத்தவாறே செலவு செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் தொழுகைகள் மற்றும் தர்மங்களின் மூலம் நற்கூலியை விரும்புவதில்லை.
(55) 9.55. -தூதரே!- நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மைக் கவர்ந்துவிட வேண்டாம். அவர்களின் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளால் ஏற்படும் விளைவு தீயவையாகும். அதனை அடைவதற்கு சிரமப்படுதல் அவைகளில் ஏற்படும் சோதனைகள் என்பவற்றினால் அல்லாஹ் அவர்களுக்கு அவற்றை வேதனையாக ஆக்கியுள்ளான். அதே நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிந்தவுடன் அவர்கள் நரகத்தின் அடித்தளத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார்கள்.
(56) 9.56. -நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று தங்களை வெளிப்படுத்தினாலும் அவர்களது உள்ரங்கத்தில் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனாலும் இணைவைப்பாளர்கள் கொலை செய்யப்பட்டும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டது போன்று தாங்களும் தண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் தப்புவதற்காக வெளிரங்கத்தில் முஸ்லிம்களாக உள்ளனர்.
(57) 9.57. இந்த நயவஞ்சகர்கள் தம்மைப் பாதுகாக்கும் ஏதேனும் கோட்டையையோ மறைந்து கொள்வதற்கு மலைகளில் குகைகளையோ ஒளிந்துகொள்வதற்கு பதுங்குமிடத்தையோ பெற்றால் அதில் அடைக்கலம் புகுந்துவிடுவார்கள். மேலும் அதில் விரைந்து நுழைந்தும் விடுவார்கள்.
(58) 9.58. -தூதரே!-நயவஞ்சகர்களில் சிலர் தர்மப் பொருள்களில் தாங்கள் நாடியதைப் பெறாததனால் உம்மைக் குறைகூறுகிறார்கள். நீர் அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் உம்மைக் கொண்டு திருப்தியடைகிறார்கள். அவர்கள் கேட்பதை நீர் வழங்காவிட்டால் வெறுப்பை வெளியிடுகின்றனர்.
(59) 9.59. தூதரே! தர்மப் பொருள்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறும் இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு விதித்ததை ஏற்றுக் கொண்டு, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்கு வழங்குவான். அல்லாஹ் வழங்கியதிலிருந்து தூதரும் எங்களுக்கு வழங்குவார். நாங்கள் அல்லாஹ்விடமே - அவன் எங்களுக்கு வழங்குவான் என்று - ஆர்வம் கொண்டுள்ளோம்” என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அது அவர்கள் குறைகூறுவதைவிடச் சிறந்ததாக அமைந்திருக்கும்.
(60) 9.60. நிச்சயமாக கடமையான தர்மங்கள், தொழில் அல்லது உத்தியோகம் இருந்தும் போதுமான வருமானமின்றி கவனிப்பாரற்றுள்ள ஏழைகளுக்கும், எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளாத அவர்களது நிலமை அல்லது பேச்சின் மூலம் தெளிவாக வசதியற்றவர்கள் என மக்களால் அறியப்பட்ட வறியவர்களுக்கும், ஆட்சியாளர் ஸகாத்தை சேகரிப்பதற்காக நியமித்தவர்களுக்கும், ஸகாத்தை வழங்குவதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது ஈமான் உறுதியாவதற்காக பலவீனமான நம்பிக்கையாளர்களுக்கும் அல்லது ஸகாத்தை பெறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கிழைப்பதை தவிர்ந்து கொள்வோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வீண்விரயத்திற்காகவோ பாவம் செய்வதற்கோ அல்லாமல் கடன் பெற்ற ஆனால் கடனை அடைக்க முடியாத கடனாளிக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை தயார்படுத்துவதற்காகவும் பிரயாணச் செலவின்றி தவிக்கும் பிரயாணிக்கும் உரியனவாகும். ஸகாத்தை இவர்களுக்கு மாத்திரம் செலவிடுவதே இறைகட்டளையாகும். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கறிந்தவனும் அவனது திட்டமிடலிலும் சட்டதிட்டங்களிலும் ஞானமுடையவனுமாவான்.
(61) 9.61. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருக்கு வார்த்தைகளினால் தொல்லை கொடுக்கிறார்கள். அவரது சகிப்புத் தன்மையை காணும் போது, “இவர் யார் என்ன கூறினாலும் அதனை நம்பிவிடுகிறார். உண்மை எது பொய் எது எனப் பிரித்தறிய முடியாதவர்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூதர் நன்மையான விஷயங்களைத்தான் கேட்கிறார். அல்லாஹ்வையும் உண்மையாளர்களான நம்பிக்கையாளர்கள் கூறுவதையும் உண்மைப்படுத்துகிறார். அவர்களுடன் கருணையுடன் நடந்துகொள்கிறார். அல்லாஹ்வின் தூதருக்குத் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை கொடுப்பவருக்கும் வேதனைமிக்க கடும் தண்டனை உண்டு.
(62) 9.62. -நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் நீங்கள் அவர்களைக் கொண்டு திருப்தியுறுவதற்காக தாங்கள் நபியவர்களைத் துன்புறுத்தும் எதையும் கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றார்கள். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் ஈமான் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகத் தகுதியானவர்களாவர்.
(63) 9.63. இந்த நயவஞ்சகர்கள் தங்களின் இச்செயல்களின் மூலம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையும், அவ்வாறு அவ்விருவரையும் எதிர்ப்போர் மறுமை நாளில் நரக நெருப்பில் நுழைந்து அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?! அதுவே அவமானமும் பெரும் இழிவுமாகும்.
(64) 9.64. தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்துள்ள நிராகரிப்பை நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்தும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தனது தூதரின் மீது இறக்கிவிடுவானோ என நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே-, நீங்கள் மார்க்கத்தை பரிகாசம் செய்வதையும், குறைகூறுவதையும் தொடருங்கள். நீங்கள் அஞ்சும் விஷயத்தை ஏதேனும் அத்தியாயத்தை இறக்குவதன் மூலமோ அல்லது தன் தூதருக்கு அறிவித்தோ அல்லாஹ் வெளிப்படுத்திவிடுவான்.
(65) 9.65. -தூதரே!- நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை குறைகூறி திட்டிக் கொண்டிருந்தது குறித்து அல்லாஹ் உமக்கு அறிவித்த பிறகு, அவர்களிடம் நீர் அது பற்றி நீர் கேட்டால், “நாங்கள் விளையாட்டாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். உண்மையாகவல்ல” என்று கூறுகிறார்கள். -தூதரே! நீர் கேட்பீராக-: “அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய வசனங்களைக் குறித்தும் அவனுடைய தூதரைக் குறித்துமா நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள்?!
(66) 9.66. இதுபோன்ற பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை பரிகாசத்தின் மூலம் வெளிப்படுத்தி விட்டீர்கள். உங்களில் ஒரு பிரிவினர் தங்களின் நயவஞ்சகத்தனத்தை விட்டு விட்டு உளத் தூய்மையுடன் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் அவர்களை மன்னித்தாலும் பாவமன்னிப்புக் கோராமல் நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் பிரிவினரை நாம் தண்டிப்போம்.
(67) 9.67. நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றுபட்டவர்களே. அவர்கள் தீமை செய்யத் தூண்டுகிறார்கள். நன்மையை விட்டும் தடுக்கிறார்கள். தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு வழிபடுதை விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டான். நிச்சயமாக இந்த நயவஞ்சகர்களே அல்லாஹ்வுக்குக் அடிபணியாதவர்கள். சத்தியப் பாதையிலிருந்து பாவம் மற்றும் வழிகேட்டை நோக்கி வெளியேறியவர்கள்.
(68) 9.68. பாவமன்னிப்புக் கோராத நயவஞ்சகர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் நரக நெருப்பில் நுழைவிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இதுவே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். மேலும் அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். அவர்களுக்கு தொடரான வேதனையுண்டு.
(69) 9.69. நயவஞ்சகர்களே! நிராகரிப்பிலும் பரிகாசம் செய்வதிலும் நீங்கள் உங்களுக்கு முன்னர் நிராகரித்த சமூகங்களைப் போன்றவர்கள்தாம். அவர்கள் உங்களைவிட அதிக பலமும் பணமும் பிள்ளைகளும் உடையவர்களாக இருந்தார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட உலக இன்பங்களையும் ஆசாபாசங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள். -நயவஞ்சகர்களே!- நிராகரித்த உங்களுக்கு முந்தைய சமூகங்கள் தமது பங்கை அனுபவித்ததைப் போலவே நீங்களும் உங்களுக்கு விதிக்கப்பட்ட பங்கை அனுபவியுங்கள். அவர்கள் சத்தியத்தை நிராகரித்து தங்களின் தூதர்களைக் குறை கூறியதைப் போலவே நீங்களும் சத்தியத்தை நிராகரித்து தூதரைக் குறை கூறியுள்ளீர்கள். இழிவான இந்த பண்புகளை உடையவர்களின் செயல்கள் நிராகரிப்பினால் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிட்டதனால் அவைகள் பயனற்றுவிட்டன. இவர்கள் தாம் தங்களை அழிவில் ஆழ்த்தி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்ட நஷ்டவாளிகளாவர்.
(70) 9.70. நிராகரித்த சமூகங்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம் ஆகியோரின் சமுதாயங்களும் மத்யன்வாசிகளும், லூத்தின் சமூகமும் செய்தவை, அவர்களுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய தகவல் இந்த நயவஞ்சகர்களை அடையவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. அவனது தூதர்கள் அவர்களை எச்சரித்திருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வையும் அவன் அனுப்பிய தூதர்களையும் நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தனர்.
(71) 9.71. நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களை ஒன்றிணைக்கும் நம்பிக்கையின் காரணமாக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு விருப்பமான ஏகத்துவம் தொழுகை போன்ற பல்வேறு நற்காரியங்களையும் செய்யத் தூண்டுகிறார்கள்; நிராகரிப்பு, வட்டி போன்ற அல்லாஹ் வெறுக்கும் அனைத்துவிதமான தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறார்கள். சிறப்பிற்குரிய இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் தன் அருளில் பிரவேசிக்கச் செய்வான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்டமிடலில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
(72) 9.72. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் மறுமை நாளில் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அவர்களது இன்பங்கள் முடிவடையாது. நிலையான சுவனங்களில் உள்ள அழகிய வசிப்பிடங்களில் அவன் அவர்களை பிரவேசிக்கச் செய்வதாக வாக்களித்துவிட்டான். அவைகள் அனைத்தையும் விட சிறந்தது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இறைதிருப்தியாகும். மேற்கூறப்பட்ட இந்த வெகுமதிதான் மகத்தான வெற்றியாகும். வேறு எந்த வெற்றியும் இதனை நெருங்க முடியாது.
(73) 9.73. தூதரே! நிராகரிப்பாளர்களுடன் ஆயுதங்களைக் கொண்டும் நயவஞ்சகர்களுடன் நாவைக் கொண்டும் ஆதாரங்களைக் கொண்டும் ஜிஹாது செய்வீராக. இரு பிரிவினரிடமும் கடுமையாக நடந்து கொள்வீராக. ஏனெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள். மறுமை நாளில் அவர்களிடம் இருப்பிடம் நரகமாகும். அது அவர்களின் இருப்பிடங்களில் மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
(74) 9.74. நாம் உம்மைத் திட்டி, உமது மார்க்கத்தைக் குறை கூறியதாக உமக்குக் கிடைத்த தகவல் தவறானது அவ்வாறு தாம் எதுவும் கூறவில்லை என்று நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிராகரிப்புக்குரிய அவற்றைக் கூறியே உள்ளனர். அவர்கள் ஈமானை வெளிப்படுத்திய பிறகு நிராகரிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டார்கள். நபியவர்களை படுகொலை செய்வதற்குக் கூட முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. யாரும் மறுக்காத ஒன்றை அவர்கள் மறுத்துள்ளனர். அதுதான் தன் தூதருக்கு அளித்த போர்ச் செல்வங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியதாகும். தங்களின் நயவஞ்சகத்தனத்திலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டால் அதிலே தொடர்ந்திருப்பதை விட அது அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ்விடம் மீளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டால் இவ்வுலகில் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் மறுமையில் நெருப்பினால் வேதனை செய்தும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ அதனைத் தடுக்கும் உதவியாளர்களோ அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
(75) 9.75. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்விடம் பின்வருமாறு வாக்குறுதியளித்தார்கள்: “அல்லாஹ் எங்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கினால் நாங்கள் தேவையுடையவர்களுக்குத் தர்மம் செய்து நற்செயல்களைச் செய்யும் நல்லவர்களாக ஆகிவிடுவோம்.”
(76) 9.76. அல்லாஹ் அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கிய போது, அவர்கள் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தர்மம் செய்யாமல் தமது சொத்துக்களை தடுத்துக் கொண்டனர். ஈமான் கொள்வதை விட்டும் புறக்கணித்தவர்களாக திரும்பிச் சென்றனர்.
(77) 9.77. அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டு பொய்யுரைத்ததனால் அவர்களின் உள்ளங்களில் மறுமை நாள் வரை நிலையான நயவஞ்சகத்தை அவர்களுக்குரிய தண்டனையாக ஆக்கிவிட்டான்.
(78) 9.78. இந்த நயவஞ்சகர்கள் தமது அவைகளில் இரகசியமாகத் தீட்டும் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும் அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? அவர்கள் செய்யக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(79) 9.79. சாதாரணமான தர்மப் பொருள்களை தன்னார்வமாக வழங்கும் சிறிது பொருள்களேயுடைய நம்பிக்கையாளர்களை அவர்கள் குறை கூறுகிறார்கள். அதுவே அவர்களது ஆற்றலுக்குட்பட்டது. “இவர்களின் தர்மங்களால் என்ன பயன்?” என்று அவர்களைக் கேலி செய்கிறார்கள். நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்யும் இவர்களை அல்லாஹ் பரிகாசம் செய்கிறான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
(80) 9.80. -தூதரே!- அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேளுங்கள். அல்லது கேட்காதீர்கள். நீர் எழுபது தடவைகள் கேட்டாலும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பதற்கு அது வழிவகுக்காது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள். அறிந்து கொண்டே அவனுடைய சட்டத்திற்கு அடிபணிய மறுத்தவர்களுக்கு அல்லாஹ் உண்மையின் பக்கம் வழிகாட்டமாட்டான்.
(81) 9.81. அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு தபூக் போரை விட்டும் பின்வாங்கிய நயவஞ்சகர்கள் தாம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். நம்பிக்கையாளர்கள் போர் புரிவதைப் போல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை வெறுத்தார்கள். தங்களின் சகோதரர்களான நயவஞ்சகர்களை மனம்தளரச் செய்து அவர்களிடம், “வெப்ப காலத்தில் புறப்படாதீர்கள்” என்று கூறினார்கள். தபூக் போர் வெப்ப காலத்தில் நடைபெற்றது -தூதரே!- அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் அறிவார்களானால் நயவஞ்சகர்களுக்காக காத்திருக்கும் நரக நெருப்பு இவர்கள் விரண்டோடும் இந்த வெப்பத்தைவிட அதிக வெப்பமானது.”
(82) 9.82. போரை விட்டு பின்தங்கிய இந்த நயவஞ்சகர்கள், தாம் இவ்வுலகில் சம்பாதித்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றினால், அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் குறைவாக சிரிக்கட்டும், இவ்வுலகில் சம்பாதித்த நிராகரிப்பு, பாவங்கள் குற்றங்கள் ஆகியவற்றினால் நிலையான மறுமை வாழ்க்கையில் அதிகமாக அழட்டும்.
(83) 9.83. -நபியே!- நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் இந்த நயவஞ்சகர்களிடம் அல்லாஹ் உம்மை திரும்ப வரச் செய்து, வேறு போரில் உம்முடன் புறப்படுவதற்காக அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே!- உங்களுக்குத் தண்டனையாக அமையும் பொருட்டும், நீங்கள் என்னுடன் இருந்தால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்குமுகமாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக நீங்கள் என்னுடன் ஒருபோதும் புறப்பட வேண்டாம். நீங்கள் தபூக் போரை விட்டும் பின்தங்குவதை விரும்பினீர்கள். எனவே பின்தங்கிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகளுடன் நீங்களும் தங்கிவிடுங்கள்.
(84) 9.84. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களில் யார் இறந்தாலும் அவர்களுக்காக நீர் தொழுகை நடத்தாதீர். அவரது அடக்கத்தலத்தில் அவருக்காக பிரார்த்தித்தவாறு நிற்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, அவனுக்கு அடிபணியாத நிலையில் மரணித்தும் விட்டார்கள். இவ்வாறானவர்களுக்கு தொழுகை நடத்தவோ பிரார்த்தனை செய்யவோ கூடாது.
(85) 9.85. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்வில் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறான். அது அவற்றை அடைவதில் அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களும் அவற்றில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுமாகும். மேலும் அவர்கள் நிராகரித்த நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிய வேண்டும் எனவும் அல்லாஹ் விரும்புகிறான்.
(86) 9.86. அல்லாஹ் தன் தூதர் முஹம்மது மீது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்யும்படி கட்டளையிட்டு ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் அவர்களில் வசதியானவர்கள் உம்மை விட்டும் பின்தங்குவதற்கு அனுமதி கோருகிறார்கள். “எங்களை விட்டு விடுங்கள். நோய், பலவீனம் போன்ற காரணங்களால் பின்தங்குவோருடன் எம்மையும் தங்குவதற்க விட்டு விடுங்கள்” என அவர்கள் கூறுகிறார்கள்.
(87) 9.87. பின்தங்குவதற்கு தக்க காரணமுடையோருடன் இந்த நயவஞ்சகர்களும் பின்தங்கிவிடுவதை விரும்பியதனால் தங்களுக்கான இழிவையும் அவமானத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் நிராகரிப்பினாலும் நயவஞ்சத்தினாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். எனவே தங்களுக்கு எதில் நன்மையுள்ளது என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியாது.
(88) 9.88. ஆனால் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் இவர்களைப் போன்று அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட்டும் பின்தங்கவில்லை. தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கான கூலி, வெற்றி, போர்ச் செல்வங்கள் போன்ற இவ்வுலகப் பயன்கள் கிடைப்பதும், சுவனத்தில் நுழைந்து தேவையானதைப் பெற்று அஞ்சியவற்றிலிருந்து தப்புவது போன்ற மறுவுலகப் பயன்கள் கிடைப்பதுமாகும்.
(89) 9.89. அல்லாஹ் அவர்களுக்கு சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிருப்பார்கள். அழிவு அவர்களை அண்டாது. இந்த வெகுமதியே ஈடிணையற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.
(90) 9.90. மதீனாவிலும் அதைச் சுற்றிலும் இருக்கின்ற நாட்டுப்புற அரபிகள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதற்காக சாக்குப்போக்குகள் கூறி அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதிகோர வந்தார்கள். மற்றொரு கூட்டத்தினரோ அல்லாஹ் அளித்த வாக்குறுதியின் மீது நம்பிக்கையின்மையினாலும் தூதரை உண்மைப்படுத்தாததனாலும் சாக்குப்போக்குகள்கூட கூறாமல் பின்தங்கிவிட்டார்கள். இவர்களின் இந்த நிராகரிப்பினால் வேதனைமிக்க தண்டனை இவர்களை அடையும்.
(91) 9.91. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர், குருடர்கள், செலவழிப்பதற்கு எதையும் பெறாத ஏழைகள் ஆகியோர் போரை விட்டுப் பின்தங்கியதனால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் அவர்கள் தக்க காரணங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமிக்கவர்களாகவும், அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லமுறையில் செயல்படும் உரிய காரணமுடையவர்களான நல்லோர்கள் தண்டனைக்கு உரியோர்களல்ல. நன்மை செய்வோரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(92) 9.92. -தூதரே!- தம்மை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வேண்டியவர்களாக உம்மிடம் வந்த போது, நீர், “உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் எந்த வாகனமும் இல்லையே!” என்று கூறியதனால் போரை விட்டுப் பின்தங்கியவர்கள் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு உம்மிடமும் தங்களிடமும் எதுவும் இல்லையே என்ற கவலையில் அழுதவர்களாக அவர்கள் உம்மை விட்டு திரும்பிச் சென்றார்கள்.
(93) 9.93. தகுந்த காரணமுடையோரைத் தண்டிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு தண்டனைக்குரியோர் யார் என்பதைக் குறிப்பிடுகிறான். -தூதரே!- போர் புரிவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றிருந்தும் போரை விட்டும் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். பின்தங்கி வீடுகளில் இருப்போருடன் தங்கியிருப்பதன் மூலம் இழிவையும் அவமானத்தையும் தமக்கு அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவைகள் அறிவுரையால் பயனடையமாட்டா. இவ்வாறு முத்திரையிடப்பட்டதனால் அவர்களால் தங்களுக்கு நன்மையானதை அறிந்து அதனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது; தீமையானதை அறிந்து அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது.
(94) 9.94. முஸ்லிம்கள் போர் முடிந்து திரும்பிய பிறகு பின்தங்கிய நயவஞ்சகர்கள் நொண்டிச் சாக்குப்போக்குகளை முன்வைக்கின்றனர். அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்வருமாறு மறுப்புக் கூறுமாறு வழிகாட்டுகிறான்: “பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் கூறும் காரணங்களில் உங்களை நாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம். உங்களின் உள்ளங்களில் உள்ள சிலதை அல்லாஹ் நமக்கு அறிவித்துவிட்டான். உங்களை மன்னிப்பதற்கு நீங்கள் பாவமன்னிப்புக் கோருகிறீர்களா அல்லது உங்களின் நயவஞ்சகத்தனத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கவனிப்பார்கள். பின்னர் எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். எனவே பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம், நற்செயல்களின் பக்கம் விரையுங்கள்.
(95) 9.95. நம்பிக்கையாளர்களே! நீங்கள் போர் முடிந்து திரும்பி வந்தால் பின்தங்கிய இவர்கள் நீங்கள் அவர்களை பழிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்காக தமது பொய்யான சாக்குப்போக்குகளை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். வெறுத்தவர்களாக அவர்களை விட்டு விடுங்கள். அவர்களைப் புறக்கணியுங்கள். அவர்கள் அசுத்தமானவர்கள் அந்தரங்கம் கெட்டவர்கள். அவர்களின் நயவஞ்சகம் மற்றும் பாவங்களுக்குத் தண்டனையாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
(96) 9.96. -நம்பிக்கையாளர்களே!- பின்தங்கிய இவர்களை நீங்கள் பொருந்திக் கொண்டு அவர்களது சாக்குப் போக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சத்தியம் செய்கின்றனர். அவர்களை நீங்கள் பொருந்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொண்டால் உங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்து விடுவீர்கள். நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தனத்தாலும் தனக்கு அடிபணியாத சமூகத்தைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைய மாட்டான். -முஸ்லிம்களே!- அல்லாஹ் யாரைக் குறித்து திருப்தியடையவில்லையோ அவர்களின் விஷயத்தில் நீங்களும் திருப்தியடைவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
(97) 9.97. நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் அவர்களது நிராகரிப்பும் நயவஞ்சகமும் நகரவாசிகளை விட கடுமையாக இருக்கும். வெறுப்பு, கடின மனம் மற்றும் குறைவான தொடர்பு, ஆகிய பண்புகள் அவர்களிடம் உள்ளதால் மார்க்கத்தையும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய சட்டங்களையும் கடமைகளையும் உபரியானவற்றையும் அவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
(98) 9.98. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த செல்வம் நஷ்டமும் அபராதமுமாகும் எனக் கருதுவோரும் நாட்டுப் புறத்தைச் சேர்ந்த நயவஞ்சகர்களில் உள்ளனர். ஏனெனில் செலவளித்தால் கூலி வழங்கப்படாது தடுத்துக் கொண்டால் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் முகஸ்துதிக்காகவும் தப்பிப்பதற்காகவும் செலவு செய்கிறார்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அதன் மூலம் உங்களிடமிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு நிகழ வேண்டும் என விரும்பும் தீங்கு, மோசமான விளைவுகள் ஆகியவற்றை நம்பிக்கையாளர்களுக்கு நிகழாமல் அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான். அவர்கள் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக் கூடியவன்; மறைத்து வைத்திருப்பதை அவன் நன்கறிந்தவன்.
(99) 9.99. நாட்டுப்புற வாசிகளில் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதை அவன் நெருக்கத்தைப் பெறும் வழியாகவும் தூதரின் பிரார்த்தனையையும் பாவமன்னிப்பையும் பெறுவதற்கான சாதனமாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் செலவு செய்வதும் தூதரின் பிரார்த்தனையும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தருவதாகும். இதற்கான கூலியை அவர்கள் அல்லாஹ்விடம் பெறுவார்கள். அவன் மன்னிப்பையும் சுவனத்தையும் உள்ளடக்கிய தன் விசாலமான அருளில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(100) 9.100. தங்களின் நாட்டையும் வீடுகளையும் விட்டு விட்டு அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்தவர்களிலும் தூதருக்கு உதவி செய்த அன்சாரிகளிலும் நம்பிக்கைகொள்வதில் முந்திக்கொண்டவர்கள், மற்றும் முஹாஜிரீன்கள், அன்சாரிகள் என இரு சாராரையும் கொள்கையிலும் சொல்லிலும் செயலிலும் அழகிய முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரின் விஷயத்தில் அல்லாஹ் திருப்தியடைந்துவிட்டான். அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு அவன் வழங்கிய மகத்தான வெகுமதியின் காரணமாக அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்காக அவன் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அதன் மாளிகைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இந்த வெகுமதியே மகத்தான வெற்றியாகும்.
(101) 9.101. மதீனாவைச் சுற்றி வசிக்கும் நாட்டுப்புறவாசிகளிலும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். மதீனாவாசிகளிலும் நயவஞ்சகத்தில் ஊறியிருக்கும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். -தூதரே!- அவர்களை நீர் அறியமாட்டீர். அல்லாஹ்வே அவர்களை அறிவான். அவன் அவர்களுக்கு இருமுறை தண்டனையளிப்பான். இவ்வுலகில் அவர்களின் நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தியும் அவர்களைக் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் அவர்களைத் தண்டிப்பான். பின்னர் மண்ணறையின் வேதனை மற்றும் மறுமை நாளில் நரகத்தில் அடித்தளத்தில் கடும் வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.
(102) 9.102. மதீனாவில் காரணமின்றி போரை விட்டுப் பின்தங்கிய வேறு மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாமல் தங்களிடம் போரை விட்டுப் பின்தங்கியதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது சட்டதிட்டங்களைப் பற்றிப்பிடித்து அவனது பாதையில் போரிட்ட தங்களின் முந்தைய நற்செயல்களோடு தீய செயலையும் கலந்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(103) 9.103. -தூதரே!- அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தைப் பெற்று அதன் மூலம் பாவங்கள் என்னும் அழுக்குகளிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தி அவர்களின் நன்மைகளை அதிகரிப்பீராக. அவர்களிடமிருந்து வாங்கிய பிறகு அவர்களுக்காக பிரார்த்தனை புரிவீராக. நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு அருளாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது. அல்லாஹ் உம் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களையும் எண்ணங்களையும் நன்கறிந்தவன்.
(104) 9.104. போரை விட்டுப் பின்தங்கி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும் இவர்கள், அவன் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களை மன்னித்துவிடுகிறான் என்பதையும் அவன் தர்மங்களை விட்டுத் தேவையற்றவனாக இருந்த போதும் அவற்றை ஏற்றுக் கொள்கிறான், தர்மம் செய்ததற்காக அவர்களுக்கு அவன் கூலி வழங்குகிறான் என்பதையும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
(105) 9.105. -தூதரே!- போரை விட்டுப் பின்தங்கிய தமது தவறிலிருந்து மீண்ட இவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்குத் தவறிச் சென்றவற்றினால் ஏற்பட்ட இழப்புக்களை சீர் செய்துவிடுங்கள். உங்களின் செயல்களை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்ளுங்கள். அவனை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்களின் செயல்களைக் கவனிப்பார்கள். மறுமை நாளில் எல்லாவற்றையும் அறிந்த உங்களின் இறைவனின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் இரகசியமாகச் செய்ததையும் வெளிப்படையாகச் செய்ததையும் அவன் அறிவான். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(106) 9.106. எவ்வித காரணமும் இன்றி தபூக் போரை விட்டுப் பின்தங்கிய வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் தீர்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தான் நாடியவாறு அவன் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். அவர்கள் மன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் அவர்களைத் தண்டிக்கலாம். அவர்கள் மன்னிப்புக் கோரினால் அவன் அவர்களை மன்னிக்கலாம். தன் தண்டனைக்கும் மன்னிப்பிற்கும் தகுதியானவர்களை அவன் நன்கறிவான். தான் வழங்கும் சட்டங்களில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன். அவர்கள் முராரா இப்னு ரபீஃ, கஅப் இப்னு மாலிக், ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோராவர்.
(107) 9.107. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வை வழிபடுவதற்கின்றி முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கவும் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும் தங்களை வலுப்படுத்தி நிராகரிப்பை வளர்க்கவும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்களை எதிர்பார்த்தும் ஒரு பள்ளிவாயிலை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் சத்தியமிட்டுக் கூறுவார்கள், நாங்கள் முஸ்லிம்களின் வசதியையே கவனத்தில் கொண்டோம்.” என்று. அவர்களது இக்கூற்றில் அவர்கள் பொய்யர்களே என்பதற்கு அல்லாஹ் சாட்சியாக உள்ளான்.
(108) 9.108. -நபியே!- இப்படிப்பட்ட பள்ளிவாயிலில் தொழுகைக்காக நயவஞ்சகர்கள் உங்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்காதீர். முதன் முதலில் இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ‘குபா’ பள்ளிவாயிலே நிராகரிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த பள்ளிவாயிலை விட நீர் நின்று தொழுவதற்குத் தகுதியான பள்ளிவாயிலாகும். அங்கு அழுக்குகளிலிருந்து தண்ணீரின் மூலமும் பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலமும் தூய்மையாவதை விரும்பக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அழுக்குகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையாக இருக்கக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
(109) 9.109. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியும் அதிகமான நன்மையான செயல்களின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியுடனும் தம் கட்டடத்தை நிறுவியவர்கள், முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்கவும் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும் நிராகரிப்பை வலுப்படுத்தவும் ஒரு பள்ளிவாயிலை கட்டியவர்களுக்கு சமமாவார்களா என்ன? இருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். முதல் கட்டடம் உறுதியானது. இடிந்து வீழ்ந்து விடும் என அஞ்ச வேண்டியதில்லை. இரண்டாவது கட்டடத்திற்கு உதாரணம் குழியின் ஓரத்தில் ஒரு கட்டடத்தை கட்டியவனுக்கு ஒத்ததாகும். அதனால் அது இடிந்து வீழ்ந்து விட்டது. அவனுடன் சேர்ந்து அவனது கட்டிடமும் நரகப் படுகுழியில் சரிந்து விழுந்து விட்டது. நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தினாலும் அநியாயம் செய்யும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான்.
(110) 9.110. மரணத்தின் மூலமோ கொல்லப்படுவதன் மூலமோ அவர்களின் உள்ளங்கள் சிதையும் வரை தீங்கிழைப்பதற்காக அவர்கள் கட்டிய அப்பள்ளிவாயில் அவர்களின் உள்ளங்களில் சந்தேகமாகவும் நயவஞ்சகமாகவும் இருந்து கொண்டேயிருக்கும். தன் அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவன் நலவு அல்லது தீமைக்கு அவன் முடிவு செய்யும் கூலியில் ஞானம்மிக்கவன்.
(111) 9.111. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்ட அடியார்களின் உயிர்களை -அவன்தான் அவற்றிற்கு உரிமையாளன் என்ற போதிலும்- மிக உயர்ந்த விலையான சுவனத்துக்குப் பகரமாக அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்கள் அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக நிராகரிப்பாளர்களுடன் போரிடுகிறார்கள். அதில் நிராகரிப்பாளர்களைக் கொல்கிறார்கள்; நிராகரிப்பாளர்களால் கொல்லப்படுகிறார்கள். அல்லாஹ் மூஸாவுக்கு அளித்த தவ்ராத்திலும் ஈஸாவுக்கு அளித்த இன்ஜீலிலும் முஹம்மதுக்கு அளித்த குர்ஆனிலும் இவ்வாறு உண்மையான வாக்குறுதியை வழங்கியுள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர் யாருமில்லை. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வியாபாரத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். நீங்கள் மிகப் பெரும் இலாபத்தை சம்பாதித்துவிட்டீர்கள். இந்த வியாபாரம்தான் மகத்தான வெற்றியாகும்.
(112) 9.112. இந்தக் கூலியைப் பெறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ் வெறுப்பவற்றிலிருந்து அவன் விரும்புபவற்றின் பக்கம் மீண்டவர்கள்; பணிவு இறை அச்சம் என்பவற்றின் காரணமாக உயர்ந்த பட்ச பணிவை வெளிப்படுத்தி அவனது வழிபாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்கள்; எல்லா நிலைகளிலும் தங்கள் இறைவனைப் புகழக்கூடியவர்கள், நோன்பு நோற்கக்கூடியவர்கள்; தொழக்கூடியவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்டதைக் கொண்டு கட்டளையிடுபவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை தடுப்பவர்கள்; பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணக்கூடியவர்கள். தவிர்ந்து கொள்வதன் மூலம் அவனது விலக்கல்களைப் பேணக்கூடியவர்கள். -தூதரே!- இந்த பண்புகளைப் பெற்ற நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சியளிப்பவற்றைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
(113) 9.113. இணைவைத்த நிலையிலேயே மரணித்த இணைவைப்பாளர்களுக்காக அவர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவது தூதருக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ உகந்ததல்ல. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.
(114) 9.114. இப்ராஹீம் தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது அவர் தம் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவருக்காக பாவமன்னிப்பைக் கோருவேன் என அவருக்கு அளித்த வாக்குறுதியினாலாகும். ஆனால் தம் தந்தைக்கு அறிவுரை பலனளிக்கவில்லை என்பதனால் அல்லது அவர் நிராகரிப்பாளராகவே மரணிப்பார் என்ற இறை செய்தியை அவர் அறிந்ததன் காரணத்தால் அவர் அல்லாஹ்வின் எதிரி என்று இப்ராஹீமுக்கு தெளிவான பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் விலகிக் கொண்டார். இப்ராஹீம் தனது தந்தைக்குச் செய்த பாவமன்னிப்பு அவரது ஒரு முடிவே தவிர அல்லாஹ் அவருக்கு வழங்கிய தீர்ப்புக்கு மாறாக தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரவில்லை. இப்ராஹீம் அல்லாஹ்விடம் அதிகம் மன்றாடக் கூடியவராக, அநியாயக்கார தம் சமூகத்தை சகித்துக் கொள்பவராக, அவர்களை மன்னிக்கக்கூடியவராக இருந்தார்.
(115) 9.115. அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு நேர்வழிகாட்டிய பின் தடைசெய்யப்பட்டவற்றை அவர்களுக்குத் தெளிவாக்கும் வரை அவர்களை வழிகேடர்கள் என தீர்ப்பு வழங்கமாட்டான். தடைசெய்யப்பட்டதை விளக்கிய பின்னர் அவர்கள் தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்களை வழிகேடர்கள் எனத் தீர்ப்பளித்துவிடுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் அறியாமலிருந்தவற்றை அவன் உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளான்.
(116) 9.116. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவற்றில் அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. அவையிரண்டிலும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் வாழ்வளிக்க நாடியவர்களுக்கு அவன் வாழ்வளிக்கிறான்; தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளன், தீங்கிலிருந்து உங்களைக் காத்து உதவிபுரிபவன் உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
(117) 9.117. நயவஞ்சகர்களுக்கு தபூக் போரை விட்டுப் பின்தங்க அனுமதியளித்த தூதர் முஹம்மதை அல்லாஹ் மன்னித்து விட்டான். பின்தங்காத முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்கள் தூதரை விட்டுப் பின்தங்காமல் கடுமையான வெப்ப காலத்திலும், குறைந்த வசதியுடனும் எதிரிகள் பலமாக இருந்த போதும், அவர்களில் ஒரு பிரிவினர் போரை விட்டுவிட நாடிய பின்னரும் தபூக் போரில் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பின்னர் உறுதியாக நிலைத்து நிற்பதற்கும் போருக்குப் புறப்படுவதற்கும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிந்தான். மேலும் அவன் அவர்களை மன்னித்து விட்டான். அவர்களின் விஷயத்தில் அவன் பரிவுடையவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்ததும் அதனை ஏற்றுக்கொண்டதும் அவனது அருளின் வெளிப்பாடாகும்.
(118) 9.118. தபூக் போருக்கு தூதருடன் புறப்படாமல் பின்தங்கியதனால் பாவமன்னிப்பு ஏற்கப்படுவது பிற்போடப்பட்ட மூவர்களான கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீஃ, ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தூதர் அந்த மூவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மக்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். எந்த அளவுக்கெனில் பூமி விசாலமாக இருந்த போதும் அது அவர்களை நெருக்கடியாகி விட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட தனிமையினால் அவர்களது உள்ளங்கள நெருக்கடிக்குள்ளாகின. அல்லாஹ்வைத் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்து அவர்கள் மீது கருணை காட்டினான். பின்னர் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். தனது அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(119) 9.119. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஈமானிலும் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்களுடன் இணைந்திடுங்கள். உங்களுக்கு உண்மையில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
(120) 9.120. மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புறவாசிகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் போருக்காகப் புறப்பட்டால் அவரை விட்டுப் பின்தங்குவதோ அவரின் உயிரைவிட தங்களின் உயிரை பெரிதாக எண்ணுவதோ உகந்ததல்ல. மாறாக அவர்கள் தூதருக்காக தம் உயிரை அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி மற்றும் நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டுவதற்காக அவர்களின் ஊர்களில் அவர்கள் எடுத்துவைக்கும் காலடிகள், எதிரிகளைக் கொல்லுதல், கைதிகளாகப் பிடித்தல், போர்ச் செல்வங்களையோ தோல்வியையோ பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கிவிடுவதில்லை. மாறாக அவன் அவர்களுக்கு அதனை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிவிடுகிறான்.
(121) 9.121. அவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் எந்த பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கும் பொருட்டு அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் பயணத்திற்கும் தகுந்த கூலியை அல்லாஹ் அவர்களுக்கு எழுதிவிடுகிறான். மறுமை நாளில் அவர்கள் செய்துகொண்டிருந்த சிறந்த செயல்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.
(122) 9.122. நம்பிக்கையாளர்கள் அனைவரும் போருக்குப் புறப்படுவது உகந்ததல்ல. ஏனெனில் எதிரிகளின் ஆதிக்கத்தால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களில் ஒரு பிரிவினர் போருக்குப் புறப்பட்டு, ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து செவிமடுக்கும் குர்ஆன் மார்க்க சட்ட திட்டங்கள் மூலம் மார்க்கத்தில் தெளிவு பெற்று தங்களின் சமூகத்தார் திரும்பி வரும்போது தாம் கற்றவற்றைக் கொண்டு அவர்களை எச்சரிப்பதற்கு நபியவர்களுடன் தங்கிவிடக்கூடாதா? அல்லாஹ்வின் வேதனையை விட்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் அது வழிவகுக்கலாம். இது நபியவர்கள் அனுப்பிய சிறுசிறு படைகள் தொடர்பாக இறக்கப்பட்ட கட்டளையாகும். அவர்கள் தனது தோழர்களில் ஒரு பிரிவினரை தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார்கள்.
(123) 9.123. அருகில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவர்களுடன் போரிடும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதேபோன்று அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் பலத்தை அவர்களிடம் வெளிப்படுத்தும்படியும் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உதவி செய்வதன் மூலம், அவர்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தன்னை அஞ்சக்கூடிய நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.
(124) 9.124. அல்லாஹ் தன் தூதர் மீது ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் நயவஞ்சகர்களில் சிலர் சிலரிடம், “உங்களில் இந்த அத்தியாயம் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களுக்கு இறக்கப்பட்ட அத்தியாயம் அவர்களின் நம்பிக்கையோடு இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் இறக்கப்பட்ட வஹியால் அதில் அடங்கியுள்ள உலக மற்றும் மறுமை ரீதியான பயன்களால் மகிழ்ச்சியடைகிறார்கள்.
(125) 9.125. ஆனால் நயவஞ்சகர்களுக்கோ குர்ஆன் இறங்குவது - அவர்களின் நிராகரிப்பினால் - அவர்களின் நோயையும் உளரீதியான அழுக்குகளையுமே அதிகப்படுத்துகிறது. இறக்கப்பட்ட குர்ஆனின்மூலம் அவர்களின் உள்ளங்களில் இருந்த நோய் இன்னும் அதிமாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் குர்ஆனிலிருந்து எந்தவொன்று இறங்கினாலும் அதில் சந்தேகம் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.
(126) 9.126. ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ அல்லாஹ் அவர்களின் நிலமையை அம்பலப்படுத்தி நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அவர்களை சோதனைக்குள்ளாக்குவதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அல்லாஹ்தான் இவ்வாறு செய்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்களின் நிராகரிப்பிலிருந்து மீளாமலும் நயவஞ்சத்திலிருந்து விடுபடாமலும் உள்ளனர்! அவர்களுக்கு இறங்கிய சோதனையையும், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பதும் இல்லை!
(127) 9.127. நயவஞ்சகர்களைக் குறித்து கூறப்படும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கினால் நயவஞ்சகர்கள், “உங்களை யாராவது பார்க்கிறார்களா?” என்று கூறியவர்களாக அவர்களில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். யாரும் அவர்களைப் பார்க்கவில்லையெனில் அவையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை நேர்வழி மற்றும் நலவை விட்டும் திருப்பி விட்டான், அவர்களைக் கைவிட்டு விட்டான். ஏனெனில் அவர்கள் விளங்கிக் கொள்ளாத மக்களாக இருக்கிறார்கள்.
(128) 9.128. அரபுக்களே! உங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் போன்ற அரபியாவார். உங்களுக்கு சிரமம் ஏற்படுவது அவருக்கு சிரமமாக இருக்கின்றது. உங்களுக்கு வழிகாட்டுவதிலும் உங்களின் மீது அக்கறை காட்டுவதிலும் அவர் மிகவும் ஆசையுடையவர். குறிப்பாக நம்பிக்கையாளர்களின் மீது பரிவுடையவராகவும் கருணையாளராகவும் அவர் இருக்கின்றார்.
(129) 9.129. -தூதரே!- அவர்கள் உம்மைப் புறக்கணித்து நீர் கொண்டு வந்துள்ளதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லையெனில் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் மகத்தான அரியணையின் அதிபதியாவான்.