(1) 91.1. அல்லாஹ் சூரியனைக் கொண்டும் கிழக்கிலிருந்து அது உதயமாகி உயர்ந்து செல்லும் நேரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
(2) 91.2. அது மறைந்தபிறகு அதனைப் பின்தொடர்ந்து வரும் சந்திரனைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(3) 91.3. தன் ஒளியின் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் பகலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(4) 91.4. பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து அது இருளாகிவிடும் இரவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(5) 91.5. வானத்தைக் கொண்டும் அதன் உறுதியான கட்டமைப்பைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(6) 91.6. பூமியைக் கொண்டும் அதனை மனிதன் வசிப்பதற்கேற்ப விரித்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(7) 91.7. ஒவ்வொரு ஆன்மாவைக் கொண்டும் அதனை அவன் செம்மையாக படைத்ததைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
(8) 91.8. தவிர்ந்திருப்பதற்கு தீமையையும், செய்வதற்கு நன்மையையும் கற்காமல் உள்ளுதிப்பின் மூலம் அதற்கு அவன் உணர்த்தியுள்ளான்.
(9) 91.9. தன் ஆன்மாவை தீயவற்றிலிருந்து நீக்கி நற்பண்புகளால் அலங்கரித்து தூய்மைப்படுத்திக் கொண்டவர் வேண்டியதை பெற்று வெற்றியடைந்து விட்டார்.
(10) 91.10. அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.
(11) 91.11. ஸமூத் சமூகத்தினர் வரம்புமீறி பாவங்களில் ஈடுபட்டதன் காரணமாக தம் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்தார்கள்.
(12) 91.12. அவர்களில் துர்பாக்கியவான் தன் சமூகம் அவனை அழைத்த பிறகு எழுந்து நின்றபோது.
(13) 91.13. அல்லாஹ்வின் தூதர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் ஒட்டகத்தை விட்டுவிடுங்கள். அது ஒருநாள் தண்ணீர் அருந்தட்டும். அதற்கு எவ்வித தீங்கும் இழைக்காதீர்கள்.”
(14) 91.14. அவர்கள் ஒட்டகம் விஷயத்தில் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களில் துர்பாக்கியவான் அவர்களின் சம்மதத்துடன் அந்த ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான். எனவே அவர்களும் பாவத்தில் பங்காளிகளாக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ் அவர்கள் மீது தன் வேதனையைச் சாட்டினான். அவர்களின் பாவங்களின் காரணமாக பெரும் சப்தத்தால் அவர்களை அழித்துவிட்டான். அவன் அழித்த தண்டனையில் அவர்களை சமமானவர்களாக்கிவிட்டான்.
(15) 91.15. அவர்களை அழித்து தண்டனை செய்த அல்லாஹ் அதன் விளைவைக் குறித்து அஞ்சவில்லை.