(1) 92.1. அல்லாஹ் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான், அது வானத்திற்கும் பூமிக்குமிடையே தன் இருளைக் கொண்டு மூடிவிடும்போது
(2) 92.2. பகலைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான், அது வெளிப்பட்டுவிடும்போது,
(3) 92.3. ஆண், பெண் என்ற இருவகைகளை அவன் படைத்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
(4) 92.4. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் செயல்கள் பலவாறாக இருக்கின்றன. அவற்றுள் சில சுவனத்தில் நுழைவிக்க காரணமாக இருக்கும் நற்செயல்களாக இருக்கின்றன. சில நரகத்தில் நுழைய காரணமாக இருக்கும் தீயசெயல்களாக இருக்கின்றன.
(5) 92.5. யார் தான் செலவழிக்க வேண்டிய தர்மம், பரிகாரம், ஸகாத் போன்றவற்றை கொடுத்து அல்லாஹ் தடுத்துள்ளதைவிட்டும் பயந்து தவிர்ந்திருக்கிறாரோ.
(6) 92.6. அல்லாஹ் பகரம் வழங்குவதாக வாக்களித்ததை உண்மையென ஏற்றுக்கொள்கிறாரோ.
(7) 92.7. நாம் அவருக்கு நற்செயல் புரிவதையும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்வதையும் எளிதாக்கித் தருவோம்.
(8) 92.8. யார் செலவழிக்க வேண்டிய அவசியமானவற்றில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வாரோ, அல்லாஹ்விடம் அவனின் அருளில் எதையும் கேட்காமல் தன் செல்வங்களைக் கொண்டு தேவையற்றிருப்பாரோ.
(9) 92.9. தனது செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவளித்ததற்கு அல்லாஹ் வாக்களித்திருக்கும் பகரத்தையும் கூலியையம் மறுப்பாரோ.
(10) 92.10. நாம் அவருக்குத் தீயதை இலகுபடுத்தி நலவு புரிவதை கடினமாக்கிவிடுவோம்.
(11) 92.11. அவன் அழிந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் அவன் கஞ்சத்தனம் செய்தவை அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
(12) 92.12. நிச்சயமாக அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதையை தெளிவுபடுத்துவது நம்மீதுள்ள கடமையாகும்.
(13) 92.13. நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையும் மறுவுலக வாழ்க்கையும் நமக்கே உரியதாகும். அவற்றில் நாம் விரும்பியவாறு செயல்படுகின்றோம். நம்மைத்தவிர வேறு யாருக்கும் அது உரியதல்ல.
(14) 92.14. -மக்களே!- நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறாகச் செயல்பட்டால் எரியக்கூடிய நரகத்தைவிட்டும் நான் உங்களை எச்சரித்துவிட்டேன்.
(15) 92.15. துர்பாக்கியசாலியான நிராகரிப்பாளன்தான் இந்த நரகத்தின் வெப்பத்தை அனுபவிப்பான்.
(16) 92.16. அவன் தூதர் கொண்டுவந்ததை பொய் எனக் கூறினான். அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் புறக்கணித்தான்.
(17) 92.17. அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவரான அபூபக்கர் (ரலி) அதனைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவார்.
(18) 92.18. அவர் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தம் செல்வங்களை நல்வழிகளில் செலவு செய்கிறார்.
(19) 92.19. தன்மீது அருள்புரிந்த ஒருவருக்கு பிரதியுபகாரம் செய்வதற்காக அவர் தம் செல்வத்தை செலவுசெய்யவில்லை.
(20) 92.20. தான் செலவழிக்கும் செல்வத்தின் மூலம் அவர் தனது படைப்பின் மேலே உயர்ந்துள்ள அல்லாஹ்வின் திருமுகத்தையே நாடுகின்றார்.
(21) 92.21. அல்லாஹ் அவருக்கு அளிக்கும் கண்ணியமான கூலியைக் கொண்டு அவர் விரைவில் திருப்தியடைவார்.