98 - ஸூரா அல்பையினாஹ் ()

|

(1) 98.1. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோரிலுள்ள நிராகரிப்பாளர்கள் பிரிவுபட்டவர்களாக தாங்கள் ஒன்றுபட்டுள்ள நிராகரிப்பை தெளிவான ஆதாரம் தங்களிடம் வரும்வரை விட்டுவிடக்கூடியவர்கள் அல்ல.

(2) 98.2. இந்த தெளிவான ஆதாரம் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையானவர்கள் மட்டுமே தொடக்கூடிய பரிசுத்தமான வேதங்களை ஓதுபவராக அவரை அனுப்பினான்.

(3) 98.3. அந்த வேதங்களில் உண்மையான செய்திகளும் நீதிமிக்க சட்டங்களும் இருக்கின்றன. அவை மக்களுக்கு நேர்வழி, நன்மையின் பக்கம் வழிகாட்டுகின்றன.

(4) 98.4. தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அல்லாஹ் தங்களிடம் நபியை அனுப்பிய பின்னரே கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் நபி உண்மையானவர் என்பதை அறிந்துகொண்டே நிராகரிப்பில் நிலைத்திருந்தார்கள்.

(5) 98.5. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பிடிவாதம் பின்வரும் விஷயத்தில் வெளிப்படுகிறது. அவர்கள் தங்களின் வேதங்களில் ஏவப்பட்டுள்ளவாறே - அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு இணையாக்குவதை விட்டும் தவிர்ந்து இருக்க வேண்டும், தொழுகை நிலைநாட்ட வேண்டும், ஸகாத்தை வழங்க வேண்டும் என்றுதான் இந்த குர்ஆனிலும் ஏவப்பட்டுள்ளார்கள். அவர்கள் எதைக் கொண்டு ஏவப்பட்டுள்ளார்களோ அதுதான் எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும்.

(6) 98.6. நிச்சயமாக -யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் முஷ்ரிக்குகளிலும்- எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் மறுமை நாளில் நரகில் நுழைவார்கள். அதில் என்றென்றும் இருப்பார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்ததனால் படைப்பினங்களில் மிகவும் மோசமானவர்களாவர்.

(7) 98.7. நிச்சயமாக அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்கள்தாம் படைப்பினங்களில் சிறந்தவர்களாவர்.

(8) 98.8. அவர்களின் இறைவனிடத்தில் அவர்கள் பெறும் கூலி சுவனங்களாகும். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டு கட்டுப்பட்டதனால் அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைந்தான். தாங்கள் பெற்ற அவனது அருளைக் கொண்டு அவர்களும் திருப்தியடைந்தார்கள். இந்த அருட்கொடையை தன் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவரே பெறமுடியும்.